அலை
________
கரைக்கு நீந்தி வரும்
ஒவ்வொரு முறையும்
கடலின் ஏதோ ஒர் செய்தியை
சொல்ல வந்து சொல்லாமலே
திரும்பிச் செல்கிறது
ஆதியிலிருந்து அலை
,
அது சொல்லக் கூச்சப்படுகிறதா
மொழி தெரியாமல் தடுமாறுகின்றதா
,
அன்றி கடலின் அனுமதியின்றி
சொல்லித் தீர்த்தால்
கொந்தளிக்குமென்று தயங்கி
பின் வாங்கிச் செல்கிறதா
எதுவுமே புரியவில்லை
,
அலை கரைக்கு வந்து
வாய் உசுப்பாமல் திரும்பிச் செல்வது
இது எத்தனையாவது முறையோ
0
தொலைந்து போன
கடலின் நீலம்
________________________
நீலம் இலைக்கும் மா கடலில்
ஒரு பிடியளவு கடலை
கைக்குள் அள்ளி
திறந்து பார்க்கிறாள் சிறுமி
நீலத்தை காணவில்லை
,
துளித் துளியாக
கடல் சிந்துவது பற்றியோ
அலைகள் காணாமல்
போனது பற்றியோ
அவள் ஆர்ப்பரிக்கவில்லை
,
ஆனால் கடலின் நீலம்
எங்கு சென்றிருக்குமென்று
குளம்பிப் போகிறாள்
,
ஆதியிலிருந்து மேகத்தின் நிழல்தான்
கடலில் விழுந்து கிடந்ததென்பதை
உணரவே இல்லை சிறுமி
,
தொலைந்த நீலத்தை
தேடிக் கொண்டிருக்கும்
சிறு கணங்களிடை
சிறுமியின் கைக்குள்ளிருந்து
சிந்தித் தீர்ந்தது கடல்
❤️
கட்டுக்கதை
______________
முதன் முதலாக மலர்ந்த நேசத்தை
வகுப்புத் தோழியின்
கன்னக் குழிக்குள்
எப்படி விதைப்பதென்று அறியேன்
,
மனசின் பனுவல் முழுவதும்
அவளைத் தவிர
வேறெந்த பாடங்களுமில்லை
,
சில போது கணித பாடத்தைப்போல்
மனசை குழப்புகிறாள்
சில போது சித்திரப் பாடத்தில்
அவளது சுவற்றில்
என்னை வரைந்தும் விடுகிறாள்
,
உடன் வகுப்பறை கரும்பலகைகள்
மலசல கூடச் சுவர்கள்
நிழல் வாகை மரங்களென
எல்லா வெற்றிடங்களிலும்
எனது பெயரையும்
அவளது பெயரையும் பிணைத்து
வரைந்து விடுகிறேன்
,
இப்போது எங்கள் இருவரையும் இணைத்து கதை கட்டி
அவிழ்த்து விடுகிறது வகுப்பறை
,
பரப்புரைகள் பெரும் உறுத்தலாக
அவதூறாக இருந்த போதும்
எனது பிரியத்தை சொல்லி விட
இதை விட வேறு யுக்தி
எனக்கு தெரியவில்லை காண்
●

இயற் பெயர் அப்துல் ஜமீல்
கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட கல்முனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மருதமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஜமீல் என்ற பெயரில் 90 களிலிருந்து கவிதைகள் சிறுகதைகளென எழுதி வருகிறார்.
இதுவரை 11 கவிதைப் பிரதிகளை வெளியிட்டுள்ள இவர் கவிதைக்கான உயரிய விருதுகளான இலங்கை அரசின் சாஹித்ய மண்டல விருது கிழக்கு மாகாண சாஹித்ய விருது கொடகே சாஹித்ய மண்டல விருது அத்தோடு வைரமுத்து அறக்கட்டளையால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் கவிஞர்கள் திருநாள் விருதையும் 2017 ம் ஆண்டு பெற்றுள்ளார்
இவரது படைப்புகளை பல்களைக் கழக மாணவர்கள் தங்களது விசேட கற்கைக்காக ஆய்வுக்குட்படுத்தி பட்டப் படிப்புகளை பூர்த்தியும் செய்துள்ளார்கள் என்பதும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய விசேட அம்சமாகும்
அத்துடன் சிங்களம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிமாற்று செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

