1. உங்களை நம்பி விட்டுச் செல்வேன்!
மகா அலெக்ஸாண்டரின் பிணக் கைகளைவிடவும் வெறுமையானவை
எனது உள்ளங்கைகள்
தான் வென்ற பாதி உலகையே கொண்டுசெல்ல முடியவில்லை அவனால்
இவ்வளவு காலமாகத் தோளில் தூக்கிச் சுமந்த ப்ரபஞ்சத்தை
எப்படிக் கொண்டு செல்ல முடியும் என்னால்?
இழப்புணர்வோ வருத்தமோ பிரிவாற்றாமையோ இன்றி
இங்கேயே விட்டுச் செல்வேன் அதை
உங்களை நம்பி
,
தயவுசெய்து
வாராந்திர ஓய்வு நாளின் ஏதாவது ஒரு பொழுதில்
எனக்காக ஒரு நடை அண்டார்ட்டிகாவுக்குச் சென்று
ஓஸோன் ஓட்டையை அடைத்துவிட்டும்
24.7 டிகிரிக்கு மேல் சாய்ந்திருக்கும் பூமிக்கோளத்தைப் புரட்டித் தள்ளி
23.5 டிகிரிக்கு வைத்துவிட்டும் செல்லுங்களேன்!
2. அன்றாட வாழ்வின் எளிய இன்பங்கள்
அன்றாட வாழ்வின் எளிய இன்பங்கள்
வாழ்தலை உயர் மதிப்பாக்குகின்றன
,
பிடித்தமான புத்தகத்தைப்
படுக்கையில் மல்லாந்தும், குப்புறவும், ஒருக்களித்தும் வாசித்தல்
அறிவாளிகளுடன் ஆழமான உரையாடல்
அன்பானவர்களுடன் மனம் நெகிழ்ந்து மது அருந்துதல்
சீனப் புல்லாங்குழல் இசை அல்லது
திபெத்திய ஓம் மணி பத்மே ஹம் பாடலில் மெய்மறப்பு
இனம்புரியாத உற்சாகத்தில்
கூச்சமிழந்து நடன அசைவுகள் செய்தல்
,
சூரிய ஒளி எவ்வாறு மாறுகிறது என்பதைக் கவனித்தல்
அக்கம் பக்க மனித, இயந்திர, பறவை, விலங்கின ஒலிகளில் உயிர்த்தல்
மாலை நேர நடையுலாக்காரர்-காரிகள்
நாய் மேய்ப்பர்களாக ஆகிவிடுவதைப் பார்த்துச் சிரித்தல்
பூனையுடன் விளையாட்டு
தோட்டப் பராமரிப்பு
,
சாஃப்ட்பால், மார்பகங்கள், தலையணை ஏதாவது ஒன்றின்
மென்மையில் லயித்தல்
,
பழைய நகரத்தின் குறுகிய பாதைகளுக்குச் சென்று
மக்களிடம் பேசுவது
,
பயணத்தின்போது தற்செயலாகத் தூங்கிவிடுதல்
நீண்ட கார் பயணத்தில் துரித உணவு சாப்பிடுதல்
உங்கள் அன்புக்குரியவர்
ஒரு கூட்டத்தின் வழியாக உங்களிடம் நடந்து வருதல்
நீங்கள் அணைத்துக்கொண்டு முத்தமிடும்போது
உங்கள் குழந்தை சிரிப்பது
வேறு யாருக்கும் முன்பாக ஓர் உயரமான பாறையிலிருந்து
தண்ணீரில் குதிக்கும் அளவுக்குத் தைரியத்தைக் கண்டறிதல்
,
ஆறாண்டுகளுக்கு முந்தைய முற்பகலில்
இந்த உலகத்திற்கு வெளியிலிருந்து வந்ததாகத் தோன்றும் ஒரு குருவி
சுற்றுச் சுவரிலிருந்து சீழ்க்கையடித்து எனையழைத்தது
தேநீருடன் கொறித்துக்கொண்டிருந்த வறுத்த பட்டாணிக் கடலையை
உள்ளங்கையில் வைத்து ஜன்னல் கம்பிகளிடையே நீட்டினேன்
அச்சமோ தயக்கமோ இன்றி வந்து கொத்தித் தின்றுவிட்டு
என்னையும் தூக்கிச் சென்றுவிட்டது அதன் உலகத்திற்கு
3. அச்சங்களின் கலைக்களஞ்சியம்
துர்க்கனவுகளின் தொகுப்பேடுகளாக
உலக பயங்கரங்களின் பட்டியல்கள்
,
போர்கள் நாடுகளைக் கபளீகரம் செய்கின்றன
இனப் படுகொலைகள்
மானுடவியலின் சில பக்கங்களைக் கிழித்தெறிகின்றன
வெள்ளம் பிரதேச வரைபடங்களை அழிக்கிறது
பெருந்தொற்றுகள் கூட்டப் பலிகளை வெறும் எண்களாக்குகின்றன
பசித்த பூமி விரிசல் வாய் பிளந்து
மனிதர்கள், விலங்குகள், கட்டிடங்கள் அனைத்தையும் விழுங்குகிறது
கடல்கள் தம் பங்குக்குப் புயல்களையும் சுனாமிகளையும் ஏவி
உயிர்களைச் சுருட்டிப் பிழிகின்றன
,
காடுகள் கொல்லப்படுகின்றன; மழை திருடப்படுகிறது;
கனிமப் புதையல்களைக் கொள்ளையடிப்பதற்காக
நிலத்தின் இதயம், நுரையீரல், கணையம், சிறுநீரகம் யாவும்
சூறையாடப்படுகிறது
தாய்ப்பால் நதிகள்
இப்போது விஷத் தொட்டில்களாக ஆக்கப்பட்டுவிட்டன
,
அரசியல்வாதிகளின் கைகளில்
கொடுங்கோன்மை, அராஜகம், பயங்கரவாதம்
மதவாதிகளின் கைகளில்
மதவெறி, அடிப்படைவாதம், மதத் தீவிரவாதம்
இனவாதிகள், ஜாதியவாதிகள் கைகளில் ஒடுக்குமுறை
கலவரங்களில் கொடூரமாக வெட்டுண்டு
குற்றுயிராகத் துடித்துக்கொண்டிருக்கின்றன
அறம், மனிதம் மற்றும் சர்வ மதக் கடவுள்கள்
,
குற்றங்கள் சிலருக்கு வாழ்வாதாரம்
அட்டூழியங்கள் சிலருக்குப் பொழுதுபோக்கு
வன்முறை சிலரின் மொழி; கொலை சிலரின் ப்ரார்த்தனை
பலாத்காரம் செய்யப்பட்ட ஒவ்வொரு மங்கையரின் வலியிலும்
நூறு இடி அமீன்களின் வக்கிர நிழல்கள்
குழந்தைகள் மீதான ஒவ்வொரு பாலியல் கொடூரங்களிலும்
ஆயிரம் ஹிட்லர்களின் வதை முகாம்கள்
,
எல்லையற்று விரிந்துகிடக்கும் ப்ரபஞ்சத்தில்
பூமியை மட்டும் உயிருள்ள ஒரே கிரகமாகப் படைத்து
மனிதனை மட்டும் ஆறறிவு உயிரியாக்கி
அவனது கைகளில் பூமியை ஒப்படைத்தது இயற்கை
ஆனால், மனிதர்கள் அதை எவ்வளவு சீரழித்துவிட்டனர்
தாமும் எவ்வளவு கேடுகெட்டவர்களாகிவிட்டார்கள்
மனிதன் என்ற சொல்லுக்கே அர்த்தம் இழக்கிற அளவுக்கு
,
பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகள்
நெஞ்சைப் பதற வைக்கின்றன
யூ ட்யூப் காணொளிகள் ரத்த அழுத்தம் கூட்டுகின்றன
முகநூல், ட்விட்டர், எக்ஸ் தளங்களின் வன்மங்களும்
இன்ஸ்டா, ரெட்டிட், யூ ட்யூப் சேனல்களின் ஆபாசங்களும்
நம்மையோ நம் குடும்பத்தவர்களையோ சகாக்களையோ
வக்கிர மனநோயாளிகளாக ஆக்கிவிடலாம் என்பது
எவ்வளவு கோரமான எதார்த்தம்
,
மரணம் எனக்கு பயமல்ல
மனிதர்களிடையே வாழ்வதுதான் திகிலூட்டுகிறது
*******

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

