- நாங்கள் தேவதைகள் இல்லை
–ஜூல்ஃபியா அத்தே (பி 1954)
தஜிக்கிஸ்தானியப் பெண் கவிஞர்
,
நாங்கள் தேவதைகள் இல்லை
நாங்கள் எங்கள் கிராமத்துப் பெண்கள்
எங்கள் விருப்பம் அன்பின்பாற்பட்டது;
கருணை, விசுவாசத்திற்கான தாகம் அது .
,
நாங்கள் தேவதைகள் இல்லை
நாங்கள் இதயங்களைத் தூண்டுபவர்கள்
அன்பே, நீ சொல்லவில்லையா
நாங்கள் சொர்க்கத்திலிருந்து
உதிர்ந்தவர்கள் என்று!
,
நாங்கள் தேவதைகள் இல்லை
எங்கள் இதயத்தில்
மகிழ்ச்சி, ஆர்வம், சோகம்
மனிதகுலத்தின் துக்கம்
மனிதநேயம் உள்ளன
,
நாங்கள் தேவதைகள் இல்லை
நாங்கள் ஒரு காதலனின்
நேசத்தைக் கரங்களில் ஏந்தியுள்ளோம்
சில தருணங்களில்
நாங்கள் நேசத்தைத்
தாராளமாகக் வழங்கியுள்ளோம்
சில நேரங்களில்
நேசிப்பினைக் காயப்படுத்தியுள்ளோம்
,
நாங்கள் தேவதைகள் இல்லை
எங்கள் இதயங்கள் அமைதியற்றவை
கோதுமை ரொட்டியே, எங்கள் உணவு;
எங்கள் ஆன்மாவே, எங்கள் வாழ்க்கை.
நாங்கள் தேவதைகள் இல்லை.
————
2) பெண்ணின் குரல்
வாழ்க்கை என் பெயருடன் தொடங்கியது
நன்மையின் கதவுகள் திறக்கப்பட்டன
என் பெயருடன் கூடிய நட்சத்திரங்களைக்
கைகள் பற்றின.
ஒவ்வொரு தலைமுடியிலும்
அற்புதங்கள் நிறைந்திருந்தன.
என் பெயரை உச்சரித்து
மலைகளைத் தோண்டினான் ஃபர்ஹாத்;
அவனால் கோட்டையின் அரண்கள் தகர்ந்தன.
,
எனது பெயரால் கைஸ் மஜ்னுன் ஆனான்;
உலகத்திலேயே பாலைவனமே
அவனது விருப்பத்துக்குரியது
கவிஞர்கள் புகார் செய்ய அனுமதிக்காமல்,
வசந்தத்தைப் போல சிதறடிக்கும்
புன்னகையைக் கையளித்தேன்.
நான் இரக்கமற்றவள் என்கிறார்கள்.
ஆனால்,
கஸ்தூரி மணம் வீசும்
காற்றைப் போல்
கனிவானவள் நான்.

3) விழித்தெழுந்த பெண்
-மீனா(1956-1987) ஆப்கானிய பெண் கவிஞர்
என் குழந்தையின்
எரிந்த சாம்பலில் இருந்து
எழுகின்றேன்.
சகோதரனின் இரத்த
ஓடையிலிருந்து
எழுகின்றேன்.
என் தேசத்தின் கோபம்
எனததிகாரம்.
பாழடைந்த,எரிந்த கிராமங்கள், நகரங்கள்
எதிரியின் மீதான வெறுப்பால்
என்னை பூரணப்படுத்துகின்றன.
நான் விழித்தெழுந்தப் பெண்.
நான் என் பாதையைக்
கண்டடைந்துவிட்டேன்,
இனி ஒருபோதும்
திரும்பிச் செல்ல மாட்டேன்.
அறியாமையின் மூடிய
கதவுகளைத் திறந்துவிட்டேன்.
தங்க வளையல்களுக்கு
விடை கொடுத்து விட்டேன்
ஓ! தோழரே!
ஓ! சகோதரரே!,
நான் முன்பிருந்தவள் அல்ல.
நான் விழித்தெழுந்தப் பெண்.
நான் என் பாதையைக்
கண்டடைந்து விட்டேன்,
இனி ஒருபோதும்
திரும்பிச் செல்ல மாட்டேன்.
நான் வெறுங்காலுடன்
அலைந்துத் திரியும்,
வீடற்ற குழந்தைகளைப்
பார்த்திருக்கிறேன்.
துக்க உடைகளுடன்,
மருதாணி அழிந்த
மணப்பெண்களைப்
பார்த்திருக்கிறேன்.
சிறைச்சாலைகளின்
பிரமாண்டமானச் சுவர்கள்
தங்களின் பசித்த வயிற்றுக்காகச்
சுதந்திரத்தை
விழுங்குவதைக் கண்டிருக்கிறேன்.
எதிர்ப்பின், தைரியத்தின்
காவியங்களுக்கு மத்தியில்
நான் மீண்டும் பிறந்திருக்கிறேன்.
இரத்த அலைகளின் கடைசி மூச்சில்
வெற்றியின், சுதந்திரத்தின்
பாடலைக் கற்றுக்கொண்டேன்.
ஓ! தோழரே!,
ஓ! சகோதரரே!,
இனி என்னை பலவீனமானவளாகவோ,
திறமையற்றவளாகவோ கருத வேண்டாம்.
என் முழு பலத்துடன்
என் நிலத்தின் விடுதலைப் பாதையில்
நான் உங்களுடன் இருக்கிறேன்.
என் குரல், ஆயிரக்கணக்கான
விழித்தெழுந்த பெண் குரல்களுடன் கலந்துள்ளது,
என் கைமுட்டிகள் ஆயிரக்கணக்கான தோழர்களின்
கைமுட்டிகளுடன் இறுக்கப் பிணைந்துள்ளன.
துன்பங்களின், அடிமைத்தனத்தின்
அனைத்துத் தளைகளையும் உடைக்க,
உங்களுடன் சேர்ந்து
என் தேசத்தின் பாதையில்
அடியெடுத்து வைத்துள்ளேன்.
ஓ! தோழரே!,
ஓ! சகோதரரே!,
நான் இறந்த காலத்தில் இல்லை
நான் விழித்தெழுந்தப் பெண்
நான் என் பாதையைக்
கண்டடைந்து விட்டேன்,
இனி
ஒருபோதும் திரும்பிச் செல்ல மாட்டேன்.
4) நாம்இன்னும்நிற்கிறோம்
பர்வீன் எ’டெசாமி(1907-1941)
பாரசீக பெண் கவிஞர்.
,
நாம் இன்னும் நிற்கின்றோம்!
இருப்பெனும் பாதையில்
நாம் நுழைந்த தருணத்திலிருந்து,
ஒவ்வொரு இரண்டு அடிகளுக்குப் பிறகும்
நாம் நிறுத்தப்பட்டு இருக்கிறோம்…
படைப்பின் சாரம் நமக்குள் இருக்கையில்,
நாம் ஏன் அறிவெனும் நெடுஞ்சாலையில்
நடந்து கொண்டிருக்கிறோம்?
நம் கைகளில் மனித உரிமைகள் இல்லாதது ஏன்?
நாம் ஆதாமின் குழந்தைகள்;
சாத்தானால் பிறக்கவில்லை.
கடவுள் நமக்கு பகுத்தறிவை,
புத்திசாலித்தனத்தை வழங்கவில்லையா?
நாம் ஏன் தலையணைபோல் வளைந்து
பின்தங்குகிறோம்?
நம் சொந்தக் காலடியால்
நாம் நசுக்கப்படுகிறோம்.
நம் சொந்தக் கைகளாலேயே
நம் உரிமைகளை இழக்கச் செய்தோம்.
குடிகாரர்கள் மதுவால்
முட்டாள்களாக ஆனபோது,
நாம் அறியாமையில் இருக்கிறோம்.
எந்தக் கோப்பையுமின்றி,மதுவின்றி
நாம் முட்டாள்களாகிப் போனோம்.
நாம் பயனற்றவர்கள் அல்ல.
எதற்காக முகத்தில் அறையப்படுகிறோம்?
நாம் ஏழை வெட்டுக்கிளிகள் அல்ல!
நாம் ஏன் பயந்து நடுங்குகிறோம்?
நாம் கேள்வி கேட்கையில்,
அம்பின் முள் சத்தமே கேட்கிறது.
நாம் நம் இறக்கைகளைத் திறக்கும்போது,
சிக்கிக் கொள்கிறோம்.
பேச வேண்டிய தருணத்தில்
ஊமையாய் கிடக்கின்றோம்.
வாயில் அறைபட்டதனால்,
அழ வேண்டிய நேரத்தில் சிரித்தோம்.
ஒரு மெழுவர்த்தியைப் போல
எரியும் போது உருகுவதை
மறந்துவிட்டோம்.
எந்த பலவீனமான கோழிக்கும்
இரையாகிவிடுகிறோம்,
நாம் புறா,குருவி போல்
அப்பாவியாய் இருக்கையிலே…
00
ஆங்கிலம் வழி தமிழில்: அ.முனவர் கான்

அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். கவிஞர் பிரம்மராஜன் மீட்சி இதழ் துவங்கியபோது உடன் இருந்தவர். ஆரண்யம் மற்றும் காலச்சுவடு இதழ்களில் சில கட்டுரைகள் எழுதி வெளிவந்துள்ளது.

