அந்திம காலத்து வயதின் குரல்

 ‘அந்திம காலம்’, நோயாளியில் நெடுந்துயரம் என சொல்லலாமா? அல்லது வயோதிகத்தின் பாவப்பரிகாரம் என,  பொருள் கொள்ளலாமா? என்கிற கேள்விகளோடுதான் இந்த நாவலை வாசிக்க வேண்டியிருக்கிறது.

      எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு, மலேசிய இலக்கியச் சூழலில் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர்.   மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும், பொதுமக்கள் தொடர்பு துறை பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் மலேசிய அரசாங்க வானொலியில் ஒலிபரப்பாளராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றியிருந்தார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்திருக்கின்றார். பல விருதுகளை பெற்ற எழுத்தாளர் இவர் என்றும்கூட சொல்லலாம். மிக முக்கியமாக ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மீது வணிக எழுத்தாளர் என்கிற முத்திரை ஆழமாக பதிந்திருந்தாலும் தன் வாசிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் தன் வாசிப்பில் பல ஆக்கங்களை அறிமுகம் செய்திருக்கின்றார்.

     ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து நாவல்கள், இரண்டு விமர்சன கட்டுரைகள், ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் , ‘மலேசியத் தொலைக்காட்சியின் வரலாறு’ என்னும்  ஆய்வு ஆய்வு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 1940 ஆண்டு பிறந்த ரெ.கார்த்திகேசு தனது எழுபத்தாறு வயதில் 2016-ஆம் ஆண்டு காலமானார். மலேசியாவின் இரசனை விமர்சன மரபு உருவாவதற்கான தொடக்க கட்ட பங்களிப்பினை செய்தவர்களின் இவரும் ஒருவர்.

     இவரது ‘அந்திம காலம்’ நாவலை வாசித்திருந்தேன். கதையின்  நாயகன் சுந்தரம், தன் வயோதிக காலத்தில் தனக்கு மூளைப் புற்று நோய் இருப்பதைக் தெரிந்துக் கொள்கிறார். அங்கிருந்துதான் நாவல் தொடங்குகிறது.

தொடக்க அத்தியாயம் வியப்பை எற்படுத்தும் வகையில் எழுதியிருக்கின்றார். குறிப்பாக, ‘காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது, அகலாமான கண்ணாடியெங்கும்  மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடைவிடாது அழித்துக் கொண்டிருந்தன. டடக்…..ட்டக்… டடக்… அழிக்க அழிக்க புதிதாக ஓவியங்கள்.  அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாத வைப்பர். ’ .

        நாவலின் தொடக்க அத்தியாயத்தில் வந்திருக்கும்,  இந்த வரிகள் முழு நாவலின் சாரத்தை  ஓரளவேனும் சொல்லியிருப்பதாகவே எனவே மனதில் பட்டது. அந்த வைப்பர் போலத்தான் வாழ்க்கையும். இந்த வாழ்க்கை, எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தயக்கமும்  இல்லாமல் இங்கு ஒவ்வொருவரையும் பாடாய்ப்  படுத்துகிறது. மழையால் ஓவியம் போலக் காட்சியளிக்கும் தண்ணீரெல்லாம், எந்த ஒரு பாரபட்சமுமின்றி அழிக்கப்படுவதும். பின் புதிதாக வரையப்படுவதும் இறப்பையும் பிறப்பையும் சொல்கிறதோ? பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். இறக்கிறார்கள் பிறக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையா..? என வாசகர்களை கேள்வி கேட்க வைக்கிறது.

ரொம்பவும்  தீவிரமான  விசாரணையைக் கோரவேண்டிய இடத்தை எழுத்தாளர் தவறவிட்டுவிட்டாரோ என்கிற எண்ணத்தை இந்நாவல் வாசித்து முடிந்ததும் உணர்ந்தேன்.

        பிறப்பையும் இறப்பையும் மிக சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அனுபவங்கள்தான் எத்தனை வலி நிறைந்தவை. எப்படி அந்த வலியை கணக்கெடுப்பது? வயது மட்டுமே வலியைக் குறித்த பிரக்ஞையை கொடுக்கிறது. வயதாக வயதாக நாம் குழந்தைகள் போல மாறுவது வயோதிகத்தை எதிர்க்கொள்ளத்தானோ.

       ‘அந்திம காலம்’ நாவலில் வயோதிகர் சுந்தரத்திற்கு வந்திருக்கிற அதே புற்றுநோய் அவரது பேரன் பரமாவிற்கும் வந்திருக்கிறது. மரண வாசலில் இருக்கும் இருவரையும் படிக்கும் போதே வயதின் பிரக்ஞை புரிகிறது. முதுமையோ இளமையோ மரணம் என்கிற பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதை யாராவது அல்லது எதாவது உசுப்பிவிட்டால் நம் வாழ்க்கையே சூன்யமாகி விடுகிறது.

        தலைமையாசிரியராக  இருந்து பதவி ஓய்வு பெற்ற இரண்டாம் ஆண்டில் அவர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் யாரும் எதிர்பாராதது. சுந்தரத்தின் மனைவி ஜானகி. மகள் ராதா, மருமகன் சிவமணி, மகன் வசந்தன், பேரன் பரமா.

     அவ்வபோது சுந்தரத்திற்கு அவரது  பழைய நினைவுகள் வந்த வண்ணமே இருக்கின்றன. சுந்தரம், ஜானகி இவர்கள் இருவரின்  அறிமுகமும்,  திருமணம் நடந்த கதையெல்லாம்  சுவாரஸ்யமாக நாவலில்  அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இவர்களின் அன்பான வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தாள் மகள் ராதா. ராதாவும் கணவன் சிவமணியும் காதலித்துத்தான் திருமணம் புரிந்திருந்தார்கள் என்றாலும், தன் தாய் தந்தையைப் போல இல்லாமல்,  மனமுறிவுக்கு செல்கிறார்கள்.

ராதாவால் சிவமணியின் மிருகக் குணம் பொறுக்க முடியாமல் 3 வயது பரமாவை தன் பெற்றோரான சுந்தரம் ஜானகியிடம் கொடுத்துவிட்டு மறுநாள் வெளிநாடு சென்றுவிடுகிறாள்.  தனக்கு ஒரு வெள்ளைக்காரனைப் பிடித்திருப்பதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகாவும் , விரைவில் பரமாவை அங்கே கொண்டு செல்லப்போவதையும் கடிதம் வழி சொல்லியிருந்தாள். மேற்கொண்டு முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. அவளே அடிக்கடி அழைப்பதாக எழுதியிருந்தாள்.

    சுந்தரத்துக்கு  நல்ல நண்பனாக இருக்கிறார் ராமச்சந்திரன். நல்ல நட்பிற்கு அடையாளமாக இவர்கள் இருவரையும் சொல்லும் அளவிற்கு எழுத்தாளர் இடம் கொடுத்திருக்கின்றார்.

    சுந்தரத்தின் மறுமகனான நேசமணி தனது மோசமான  மிருகக் குணத்தில் இருந்து,  தன் குழந்தை பரமாவிற்கு  எற்பட்டிருந்த நோயால் மனிதனாகின்றான். தன் கண்முன்னே தன் குழந்தை சிதைவதை; குழந்தையைக் காப்பாற்ற முடியாத தன் இயலாமை எல்லாம் ஒன்று சேர்ந்து நேசமணியின் மனிதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதனால்தான் என்னவோ நேசமணி தன் மாமனாரிடம்  மன்னிப்பு கேட்பதை வாசிக்கையில் வாசகர் மனதையும் கனக்கச்செய்கிறது.  வாசகர்கள் எதிர்பாராத விதமாக இந்நாவலில் பேரன் பரமா நோயினால்  இறந்துவிடுகிறான்.

அந்தக் குழந்தையின் மரணத்திற்குக்  காரணம் தங்களின்  ஓயாத சண்டைதான் என உணர்கிறார்கள் நேசமணியும் ராதாவும். சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு புறம் இருந்த நேரங்களுக்கு பதிலாக குழந்தையை கவனித்திருந்தால் , நோயின் அறிகுறி தொடக்கத்தில் இருந்தே கண்டு கொண்டு சிகிச்சை கொடுத்திருக்கலாம் என்கிற எண்ணமே நமக்கு வருகிறது.

    சுந்தரத்தின் குடும்பத்தில் இருக்கும் மற்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சொல்லவேண்டும். ஒருவர் சுந்தரத்தின் அக்கா அன்னபூரணி,  மற்றொருவர் சுந்தரத்தின் அத்தை.

    எல்லா சமயமும்  சூழ்நிலைக் கைதி ஆகாமல் பதட்டமில்லாமல் ஒவ்வொன்றையும் செய்துவருகின்றார் அக்காள் அன்னபூரணி.         இளம்  விதவையான சுந்தரத்தின் அத்தை,  கணவன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து பீதிக்குள்ளாகி, மனப்பாதிப்பை அடைகிறார். தன் வாழ்நாளில் கடைசி வரை, ‘தண்ணி பக்கம் போகாதே’ என இதையே சொல்லி வருகிறார். துணிகளை துவைப்பது முதல் சமைப்பது வீட்டைச் சுத்தம் செய்வது என எதைச் செய்தாலும் அதற்கான பலனை பயனும் அத்தைக்கு தேவையில்லாமல் போனது ஓர் இயந்திரம் போல ஒரு கடிகாரம் போல அந்தச் சுழலில்  சுற்றில் எந்த மாற்றமும் அவரிடம் இல்லை. அது பற்றிய கவலையும் இல்லை.   வீட்டில்  இறப்பு நடந்த சமயம் , சுந்தரத்துக்குப் புற்றுநோய் எனத் தெரிந்த பொழுதும் என எல்லா காலகட்டமும்  மந்திர உபதேசம் போல  ‘தண்ணி பக்கம் போதான்னு சொன்னே கேட்டியா’ என்பதையே கேட்கிறார்.   தனது ஒரு துயரம் தன்னை தின்றுவிட்டது போன்ற ஒரு கதாப்பாத்திரமாக வரவேண்டிய அத்தையை எழுத்தாளர் சரியாக பயன்படுத்தவில்லையோ என தோன்றுவதை மறுக்க முடியவில்லை. இந்நாவலில்  நாயகனுக்கு இருக்கும் அதே இடம் அத்தையும் கொடுத்திருந்தால் நாவலின் கதை இன்னொரு பரிணாமத்திற்கு சென்றிருக்கும்.

நோயின் பிடியில் ஒவ்வொரு  மாறுதல்களையும்  சுந்தரத்தின் மூலம் நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்நாவல் எழுதபட்ட காலகட்டத்தில் இந்நாவலை வாசிப்பவர்களுக்கு  ஓரளவேனும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பலாம். ஆனால் இன்று வாசிக்கும் போது; புற்றுநோய் குறித்த தகவல்கள் இந்நாவலில் சொல்லப்பட்டத்தைவிடவும் நமக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் புற்றுநோய் மீதான மரண பயமும் குறைந்திருக்கிறது. அதற்கான மருத்துவ வசதிகளும் இருக்கிறது.

     இந்நாவலை நோய்க்கும் மனித வாழ்க்கைக்குமான தத்துவ விசாரணையாக எழுத்தாளர் எழுதிக்கொண்டு சென்றிருந்தால் இன்றைய மீள்வாசிப்பிலும் இந்நாவல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் உலகில் இருக்கும் சொல்லி முடியாத முழுதும் புரிந்து கொள்ள முடியாத தத்துவம் என்றால் அது மரணம்தானே. வயோதிகத்தில் உயிரைக் குடிக்கும் நோய்க்கு ஆளாகும் நபர், ஆனால் அதே நோய்க்கு  தன் ஒரே பேரனை பலிகொடுக்கும் இடம் ரொம்பவும் முக்கியமாக விரிந்து எழுதப்படவேண்டியது. உயிர் வாழும் ஆசையை விட யார் வாழவேண்டும் என்கிற ஆசையே மேலோங்கும் இடம் அது.

       இந்நாவலில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம்  என ‘மதர் மேகியைச்’ சொல்லலாம். நோயாளிகளுடன் உரையாடவும் தொண்டூழியம் செய்யவும் இருக்கிறார் இவர். அவ்வப்போது நோயாளியான சுந்தரத்துக்கு இவர் சொல்லும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும்படி இருக்கிறது.

        சுந்தரம் சொல்லும் கதையில், அவ்வபோது கதை சொல்லியும் கதை சொல்கிறார். சில இடங்களில் விளைவுகளைச் சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் அதன் சம்பவங்களைச் சொல்வது ரசிக்கும்படி இருந்தது.  இடையிடையில், சுந்தரம் படிக்கும் நூல்களில் இருந்த மேற்கோள்களைப்  படிப்பது, சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் அவசியமற்றதாகவும் இருந்துவிடுகிறது.

       புற்றுநோய்  ஆராய்ச்சியாளராக வரும் மருத்துவர் ராம்லியின்  கதாபாத்திரம் தி ருப்பத்தைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டு இயல்பாகவே இறுதிவரை செல்கிறது.  சுந்தரத்தின் பழைய மாணவர்தான் இந்த ராம்லி.

     அப்போது, கட்டொழுங்கு ஆசிரியரான சுந்தரத்திற்கும் பிரச்சனை கொண்ட  மாணவனான ராம்லிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனை நேர்மைக்கும்  அதிகாரத்திற்கும் ஏற்படும் போராட்டமாகச்   சொல்லலாம். அதனை நல்ல சிறுகதையாக கணக்கெடுக்கலாம். நல்ல கதை சொல்லல், திருப்பம், சரளமான நடை.

     நிறைவாக பெரிய எதிர்ப்பார்ப்பில் இந்த நாவலை வாசிக்க எடுத்தேன். சில இடங்களில் என் எதிர்ப்பார்ப்பைச் சரிகட்டினாலும் முழுமையான திருப்தி இல்லாமலேயே இந்நாவலை வாசித்து முடித்தேன். அதிலும் எழுத்தாளர் நாவலில் இறுதி அத்தியாயத்தில் காட்டியிருக்கும் அவசரம் முழுமையாகவே என்னை ஏமாற்றியது. நிறுத்தி நிதானமாக சொல்லவேண்டிய இடம் அது. ஆனால் வணிக இலக்கியத்திற்கே உரிய அவசரத்தில் நிதானமின்றி நாவலை முடித்திருப்பார் ஆசிரியர்.

     அந்திம காலம் என்னும் இந்த நாவல் மட்டுமல்ல பல படைப்புகள் அது எழுதப்பட்ட காலகட்டத்தில் பெரிய கவன ஈர்ப்பை பெற்றாலும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு ஏமாற்றம் கொடுப்பதாக அமைந்துவிடுவதை மறுப்பதற்கில்லை. அதற்கு அந்த படைப்பின் பலவீனம் ஒரு காரணமாக இருந்தாலும் காலத்தின் மாற்றத்தையும் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

     உதாரணமாக இந்த நாவலில் வரும் ‘புற்று நோய்’ குறித்த அறிதல் அன்றைய காலகக்ட்டத்திற்கும் இன்றைய காலக்கட்டத்திற்கும் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்திருக்கிறது. எனது சின்ன வயதில் நான் வாழ்ந்த இடத்தில் இந்த நோயின் பெயரைக் கூட சொல்ல மாட்டார்கள். ‘அந்த நோய்..’ அல்லது ‘பெரிய சீக்கு’ என்றுதான் சொல்லுவார்கள். ஒரு நோயை அந்த நோயின் பொயரையே சொல்ல பயப்பட்ட மனிதர்களிடம் இருந்து இன்று எவ்வளவு தூரம் வந்திருக்கின்றோம் என யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

     துப்பறியும்  நாவலில் கொலையாளி யாரென தெரிந்த பின்; மறுவாசிப்பில் அந்த நாவலுக்கு இருக்கும் மரியாதை என்னவோ அதுதான் கமர்ஷியல் படைப்புகளிலும் எஞ்சுகிறது. ஏதோ ஒன்றிரண்டுதான் அதிலிருந்து தப்பித்து நிலைக்கிறது. அதற்கான வாசகப்பரப்பையும் அடைகின்றது. இன்றைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

     ரெ.கார்த்திகேசுவின் ‘அந்திம காலம்’ இன்று நாம் வாசிக்கும் போது நாம் அடுத்த எழுத வேண்டிய படைப்பு எப்படி அமைய வேண்டும் என்கிற சிந்தனையைக் கொடுக்கும் அதே சமயம் நம் எழுத்து அடுத்த தலைமுறைக்கு செல்லுமா என்கிற சந்தேகத்தையும் கொடுக்கும். வாசிப்பின் வழி நமக்கான பதிலை நாம் அறிந்து கொள்ளலாம்.

     இந்த ஆண்டு ஜனவரியின் தொடங்கிய ‘மாதம் ஒரு மலேசிய புத்தம்’ இந்தத் தொடரில் 12 புத்தகங்கள் குறித்து எழுதியுள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய நடுகல்.காம் இதழுக்கும் அதன் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் இந்த வேளையில் என் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

     அடுத்த ஆண்டு, மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்களின் வாசிப்பு அனுபவத்தை எழுதலாம் என்கிற விருப்பம் எனக்கு இருக்கிறது. அதே போல மலேசிய மூத்த படைப்பாளிகளின் முக்கியமான ஆக்கங்களும் இளம் தலைமுறையினரின் கவனிக்க வேண்டிய படைப்புகள் இருக்கவே செய்கின்றன.

ஓர் எழுத்தாளனாக என் படைப்புகளை உங்களுக்கு கொடுக்கும் அதேவேளையில் எங்கள் மண்ணில் உதிக்கும் கதைகளையும் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன். நாளையே உங்களிடம் யாரும் மலேசிய படைப்புகள் குறித்து கேட்டால் ஒரே பெயரை திரும்பத்திரும்பச் சொல்லாமல் குறைந்தது மூன்று நான்கு பெயர்களையும் அவர்களின் படைப்புகளையும் நீங்கள் சொல்லலாம். அவர்களின் புத்தகங்களையும் நீங்கள் வாசிக்கலாம். வாய்ப்பு இருப்பின் அடுத்த ஆண்டிலும் நாம் இந்தத் தொடரை தொடர்வோம்.

     நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *