நாய்தான் பேசுகிறதென்று அவனுக்கு முதலில் நம்பமுடியவில்லை.
சுற்றிலும் பார்த்துவிட்டு கடைசியில் ஒலி வரும் திசையில் பார்த்தால், கடைசியில் அதுதான்.
அதே நாய்..
கழுத்தில் பிளாஸ்டிக் வளையத்தை மாட்டிக் கொண்டு மாம்பலம் தெருக்களில் வளைய வந்து, மாம்பலவாசிகளுக்கும், ரீல்ஸ் ரசிகர்களுக்கும் வைரல் ஆகிப் போன நாய்.
போன வாரம்தான், காலையில் வாக்கிங் போவதற்கு இறங்கி தெருமுனையில் திரும்பும் போது அவனுக்கு அந்த வினோதக் காட்சி கண்ணில் பட்டது.
இதே நாய் அப்போது பிளாஸ்டிக் தண்ணீர்க் குடத்திற்குள் தலையை நுழைத்து விட்டு, தலையை வெளியில் எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது.
ஒன்றும் புரியாமல், அங்குமிங்குமாக ஓடி கண்ட(!) இடத்தில் முட்டிக் கொண்டபடி இருந்தது. அதன் தொடர் குலைப்புச் சத்தம் குடத்திற்குள் எதிரொலியாக வள்..வள்..
தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் சிலர் அதைக் கண்டும், காணாதபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அதற்கு உதவி செய்யலாம் என்று நெருங்கி, அதன் திமிறலிலும் குலைப்பிலும் பயந்து விலகிப் போனார்கள்.
பாக்கிப் பேர் இருக்கவே இருக்கிறார்கள். அதன் திண்டாட்டத்தை வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார்கள். ஏதேனும், ஒரு கெக்கெலி சிரிப்புடன் அல்லது சினிமாப் பாட்டின் பின்ணணி இசையுடன் வலைய உலகத்தில் வளைய விடுவதுதான், அவர்கள் வீட்டிற்குப் போனதும் செய்யும் முதல் வேலையாக இருக்கும்.
என்ன செய்தால் அதற்கு விடுதலை கிடைக்கும்? – ஒரு கணம் யோசித்தான்.
குடத்தை அவ்வளவு சுலபமாக அதன் கழுத்திலிருந்து விடுவிக்க இயலுமா? நாயின் பின்னங்கால்களை ஒருத்தர் பிடித்துக் கொள்ள, அதன் தலைப்பக்கத்திலிருந்து மற்றொருவர் குடத்தைப் பற்றி இழுக்க வேண்டும். சில நிமிடங்களுக்கு உண்டாகும் வலியின் வேதனையை நாயால் தாங்க முடியவேண்டும். ஒன்றும் புரியாமல், அது செய்யப் போகும் ரகளையை நாம் சமாளிக்கவேண்டும்.
சட்டென வீட்டிற்குத் திரும்பி, ஒரு கூர்மையான கத்தியையும், கூடவே ஒரு கத்திரிக் கோலையும் எடுத்துக் கொண்டு நாயைத் தேடிப் போனான்.
“காய் நறுக்கற கத்தியை எடுத்துண்டு இவ்வளவு அவசரமாக எங்க போறே?” என்ற மனைவியின் தொடர் கத்தல் தெருமுனையில்தான் தேய்ந்து மறைந்தது.
மெயின் ரோட்டில், குடத்தின் உள்ளிருந்து, வெளியில் நிழலாய் நடமாடும் உருவங்களைப் பார்த்து நாய் உத்தேசமாய்க் குலைத்தபடி இருந்தது. அவன் நாயைப் பிடிக்க நெருங்கினான்.
அவனுடன் இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். அது எப்போதும் போல், சுழன்று சுழன்று குலைத்தபடி இருந்தது. ஓரிரு நிமிடங்களில், நாய் அடுத்து என்ன செய்யும் என்பது ஒரு லாஜிக் மாதிரி இருவருக்கும் புரிந்துவிட்டது.
முன்னால் இருக்கும் காட்சி அதற்கு எப்படியும் தெரியாத நிலையில் நாய் எங்கும் ஓடப் போவதில்லை. குடம் வேறு எக்ஸ்ட்ரா லக்கேஜ்.
அதனுடைய ஒரே ஆயுதம் அதன் குலைப்புச் சத்தம்தான். கண்ணறியா எதிரியை நோக்கி குலைப்பதுதான் அதன் ஒரே உத்தி.
இருவரும் நாயை நோக்கி முன்னேறினர்.
அடுத்த முறை சுழன்று திரும்புகையில், மற்ற நண்பர் அதன் பின்னங்கால்களைப் பிடித்துக் கொண்டார். ‘இன்னிக்கு நமக்கு ஏதோ நடக்கப் போகிறது’ என்று நாய்க்கு நன்றாகவே புரிந்து விட்டது போல. அதனால் அதன் ஊளைச் சத்தம் அதிகமாயிற்று.
அவன் நாயின் முகத்தை… இல்லையில்லை.. முகமூடிய குடத்தைப் பிடித்துக் கொண்டான்.
நாய்க்கோ அவர்களிடமிருந்து தப்பிச் செல்லவேண்டும் என்கிற வெறி அதிகமாகிக் கொண்டே போனது. அவர்களது கைகளுக்குள் உருண்டு புரண்டது. எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான்.
வெகு நேரமாக உணவு, தண்ணீர் இல்லாததாலோ என்னவோ, அது அப்படியே சோர்வடையத் தொடங்கியது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அவன் பிளாஸ்டிக் குடத்தின் கழுத்துப் பகுதியைக் கத்தியால் துளையிட்டு விட்டு, அதன் ஓட்டை வழியே கத்திரிக்கோலைச் செருக்கி வெட்டி எடுத்தான்.
குடத்தின் பருத்த பகுதி தனியாக வர, அதன் கழுத்து வளையப் பகுதி நாயின் கழுத்திலேயே தங்கி விட்டது. அடுத்து வளையத்தை வெட்ட வேண்டும்.
இப்போது, நாய் அவர்களை நன்றாகப் பார்த்தது. அவர்கள், அசுரர்களா அல்லது காப்பாற்ற வந்த தேவர்களா என்னும் புரியாத புதிரில் பதைத்தது. அதன் வெறி கொண்ட கூர்மையான பற்கள் அவர்களைப் பதம் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தன.
அதற்குள், அவனுக்கு அதன் லொள் நன்றாகப் பழகி, தைரியம் கூடியிருந்தது. மற்ற நண்பரும் அதன் கால்களைத் தைரியமாகப் பிடித்துக் கொண்டார்,
இப்போது, அதன் கழுத்தில் தங்கிப் போன வளையத்தையும் வெட்டி எடுத்துவிட்டால் போதும். நாய்க்கு முழு நிம்மதி கிடைக்கும்.
அதையும் வெட்டிவிடலாம் என்று அவன் கத்திரிக் கோலை எடுத்ததுதான் தாமதம். அவர்கள் ஏதோ கழுத்தையே வெட்டி விடப் போவது போல், ஒரு மரணத் திமிறலுடன் அவர்களது கைகளிலிருந்து உருவிக்கொண்டு பாய்ந்து ஓடியே போய்விட்டது. கழுத்தைச் சுற்றி வளையம் இருந்தால் என்ன? இந்த அளவிற்காவது சுதந்திரம் கிடைத்ததே என்று எண்ணியிருக்கும் போலிருக்கிறது.
கழுத்திலிருக்கும் வளையம் அதற்குப் பெரும் இம்சையாகத்தான் இருக்க வேண்டும். அதைக் கழட்ட வரும் யாருக்கும் பிடி கொடுக்காமல், அது இரண்டு வாரங்களாய் கழுத்தில் வளையத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் சொன்னாலும், அன்றைக்குத்தான் அவன் கண்ணில் பட்டது.
அப்போது, அது முருகன் மளிகைக் கடை முன்னால், பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகே மண்டியிட்டு அமர்ந்து அதனை மெதுவாகத் தடவி கொடுத்தான். அவன் தொடுகையில், கண்ணை விழித்த நாய் அவனை ஞாபகம் வைத்திருந்ததோ என்னவோ, குலைக்காமல், அவனைப் பார்த்தது.
அப்போதுதான் அவனைப் பார்த்துப் பேசியது.
“தினமும் இப்படிப் போகையில் எதுக்காக என் கழுத்தில் கிடப்பதைப் பார்த்தபடி நடக்கிறீர்கள்? மனித ஜென்மங்கள் நீங்கள், கழுத்திலும் காதிலும் மாட்டிக் கொண்டு நடக்கிறீர்கள். ஏதாவது சொன்னோமா? உன்னை மட்டுமல்ல. உங்கள் எல்லோரையும்தான் சொல்கிறேன்” என்றது.
முதலில், நாய் பேசுகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தான். அவரவர்கள் காலை நடைப் பயிற்சியில் வீசி வீசி நடந்து கொண்டிருந்தார்கள். யாரும் நாய் பேசியதைக் கேட்கவில்லை. ஒரு வேளை அவனுக்கு மட்டுமே கேட்கிறதோ?!
“நீயும் பேச ஆரம்பித்து விட்டாயா?”
“மற்றவர்களுக்கு அது லொள் மாதிரி கேட்கும். நான் உன்னுடைய மொழியில்தான் பேசுகிறேன்” என்றது.
“உலகத்தில் என்னவெல்லாமோ நடக்கிறது. இந்த அதிசயத்தையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அது சரி.. தேவையில்லாத ஒரு வளையத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு அதை எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறாயே.. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.” என்று பதில் பேசினான் அவன்.
“ஏன்.. எங்கள் கழுத்தில் தோல் பட்டையை நீங்கள் மாட்டிவிடுவதை விடவா? அது எங்களுக்குத் தேவை என்று நாங்கள் யாராவது சொன்னோமா?” என்றதும் அவன் அதிர்ந்தான்.
“என்னுடைய சக நண்பர்கள் இதை எப்படிப் பாராட்டுகிறார்கள் தெரியுமா? எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள்” என்று தொடர்ந்தது.
அவன் சிரித்தான்.
“துரதிர்ஷ்டவசமாக நீ கழுத்தில் மாட்டிக் கொண்டதை, உனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றெல்லாம் ஏதேதோ சொல்லி அவர்களை உசுப்பேத்தி இருக்கிறாய் என்று நினைக்கிறேன். சிறு வயதில் நான் படித்த வாலறுந்த நரிக்கதை மாதிரி இருக்கிறது. உன் கதை.. எனக்குத் தெரியாதா இதிலுள்ள சங்கடம் ?”
“என் சங்கடத்தைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்களா?”
எதிர் ப்ளாட்பாரத்தில் நடந்து போனவர் அவனைப் பார்த்துக் கை அசைத்துவிட்டுப் போனார்.
“உங்க வீட்டுக்காரர், ஒரு தெரு நாயைத் தடவி கொடுத்துக்கிட்டு இருந்தார்” என்று அவனது மனைவியைப் பார்க்கையில் போட்டுக் கொடுக்கப் போகிறார். அவளும் வாய் நிறைய திட்டிவிட்டு, கை நிறைய சானிடைசர் போட்டு கை கழுவச் சொல்லப்போகிறாள்.
அவன் நாயை நோக்கித் திரும்பினான்.
“உனக்கு என்னென்ன சங்கடங்கள் தெரியுமா இதில்? தரையில்.சுவற்றில், கார் டயர் அங்கெல்லம் உன்னால் முகர்ந்து பார்க்கமுடியாது.. பிஸ்கட்டைக் கவ்வி எடுப்பதில் கஷ்டம். தண்ணீரை நக்கியும் குடிக்க முடியாது. இப்படி தினசரி வாழ்க்கையில் எல்லாம் கஷ்டம்தானே?”
“உன்னுடைய கரிசனத்திற்கு நன்றி. அப்படியென்றால், நான் ஒரு வாரமாக ஒன்றும் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து செத்திருக்க வேண்டுமே? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?” என்று பதில் கேள்வி கேட்டது நாய்.
“அதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?” என்றான்.
“என்னுடைய சிரமங்களைப் பற்றி நீ ரொம்பவும்தான் யோசிக்கிறாய்”
ஆமாம் என்று தலை அசைத்தான்.
சற்று நேரம் பேசாமலிருந்துவிட்டு, “நான் மட்டுந்தான் இப்படி இருக்கிறேனா?” என்றது நாய்.
“இதென்ன கேள்வி?”
“நான் கேட்டது கேள்வி என்று முதலில் புரிந்து கொண்டாயா? மகிழ்ச்சி. பதிலைச் சொல்லு.. உடனே சொல்ல வேண்டாம். யோசித்து நாளைக்குள் சொல்லு.. “
நாய் அவனுக்கு யோசிக்க நேரம் கொடுக்கிறது..
“எல்லாம் நேரம்” என்றபடி எழுந்தான்.
நாய் மறுபுறமாகச் சுருண்டு படுத்துக் கொண்டது.
“நான் மட்டுந்தான் இப்படி இருக்கிறேனா என்று ஏன் கேள்வி கேட்டது?”
நாயின் கேட்ட கேள்வி அவனது உடலின் ஒவ்வொரு செல்லிலும் எதிரொலித்தபடி இருந்தது. பதில் யோசித்தபடி காலை நடையைத் தொடர்ந்தான்.
நாய் மட்டுமின்றி, மனிதர்களைச் சார்ந்து வாழும் மற்ற மிருகங்களுக்கு ஏதாவது விதிவிலக்கு இருக்கிறதா? மனிதன் அடிமைப்படுத்தி வைத்திருப்பவைகளுக்கு கேட்கவே வேண்டாம்.
நகரச் சாலைகளில், கயிற்றின் நுனியில் குட்டிக் கரணம் அடிக்கும் குரங்கு.
கிராமப்புறங்களில், கழுத்தில் மாட்டிவிட்ட உருட்டுக் கட்டையுடன் நடக்கும் ஹைபர் ஆக்டிவ் எருமை மாடுகள்.. அதைக் கட்டவில்லை என்றால், மேய்ச்சலின் போது எங்கேயாவது ஓடிப் போய்விடுமாம்.
“நான் மட்டுந்தானா?” என்று எருமையும் அதன் மொழியில் அன்று அவனிடம் கேட்டிருக்குமோ? அவனுக்குத்தான் புரியவில்லையோ?
சிறு வயதில், மதுரையில் இருந்த போது, வீட்டின் வாசல் வழியாக, முன்னங்கால்களைச் சேர்த்து கட்டிய பின்னரும், தட்டுத் தடுமாறிபடி குதித்து நடக்கும் வண்ணார் கழுதை ஞாபகம் வந்தது.
இவைகள்தான் இப்படி என்றால்.. கோவில் யானை..? கம்பீரமாய்.. கஜானுபாகுவாக, வளைந்து நீண்ட தந்தங்களும் அதன் நுனியில் முத்தாய்ப்பாக வெள்ளிப் பூண்களுமாய், கண்கவரும் நிறங்களில் போர்வையைப் போர்த்தி தரை அதிர கடவுளின் திருமேனியைச் சுமந்து செல்கிறதுதான்.. ,.
ஆனால் அதன் காலில் கிடக்கிற கனத்த சங்கிலியை கருங்கல் தரையில் உரைந்தபடி இழுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. கூடவே, பாகனின் கையில் இருக்கும் அங்குசம் வேறு.
அப்போ.. நாய் கேட்டதில் தவறென்ன?
தன்னை மட்டுமல்ல, ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டு, நகரங்களில் நகர்கிற விலங்குகளின் வாழ்க்கை. அதைத்தான் அது சொல்கிறது போல.
மிருக இனத்திற்காகப் பரிந்து பேசுகிறதா அந்த ஒற்றை நாய்.
மறு நாள் காலையில் எப்போதும் போல் தெருவில் இறங்கி நடந்தான்.
ஏற்றிவிட்ட கருப்புக் கண்ணாடிகளுடன் ஒரு கார் அவனைக் கடந்து போயிற்று. அதன் கண்ணாடிகளில் , ஒரு சில நொடிகளே அவனது முகம் அதில் பிரதிபலித்தது.
சட்டென்று நாயின் கேட்ட கேள்வியும் அவனுள் எதிரொலித்தது.
அதற்குப் பதில் தருவது போல், “எனக்கு மட்டும் ஏனிப்படி நடக்கிறது?” என்று தன்னுடைய பிரச்சனைகளைப் புலம்பிப் புலம்பி, கடைசியில் ஆபீசில் உடன் வேலை பார்த்த நீலா தற்கொலை செய்து கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.
விலங்குகளுக்கு மனிதன் இடுவது போதாதென்று, மனிதர்கள் தங்களுக்குள்ளேயே பல விலங்குகளை இட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
மனிதன் கைகளில் இட்டிருக்கும் விலங்குகளுக்கான சாவி , அவனது சட்டைப் பையில். குரங்கைப் போல், கழுத்தைச் சுற்றியிருக்கும் கயிற்றின் மறு நுனி அவனது கையில்.
அவற்றைச், புரிந்து கொள்ளாமல், சகித்துக் கொள்ள முடியாமல் விடுதலை என்கிற பெயரில் நீலாவின் முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
இருபத்தி நான்கு மணி நேரமாக அவனது மண்டையைக் குடையச் செய்த கேள்விக்கு பதில் இதுதானா?
மறு நாள், அதே இடத்தில் நாய் படுத்துக் கொண்டிருந்தது. அதன் அருகே மண்டியிட்டு, முந்தின நாள் அது கேட்ட கேள்விக்கான பதிலைச் சொல்ல ஆரம்பித்தான்.
அது ‘வள்’ளென்று குலைத்து விட்டு, கழுத்து வளையம் குலுங்க அங்கிருந்து பாய்ந்து ஓடியது.
“என்ன சொல்லிவிட்டுப் போகிறது? எனக்கு ஏன் புரியவில்லை இன்று. எனக்குத்தான் மனப் பிரமையோ” என்றெல்லாம் யோசித்தபடி இருந்தான்.
அதற்கப்புறம் அதை அவன் பார்க்கவே இல்லை.
000

(ஹெச்.என்.ஹரிஹரன்)
65 வயதாகும் ஹெச்.என்.ஹரிஹரன் அரசு வங்கியில் 33 வருடங்கள் பணிபுரிந்து, 2016ல் விருப்ப ஓய்வு பெற்றவர்.
ஹெச்.என்.ஹரிஹரன் என்கிற பெயரிலேயே, 1981 முதல் கதைகள் எழுதி வருகிறார். 1981 வருடத்தில் அவரது ஒருபக்க கதை ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்தது.
அதன் பின்னர் 1986 வரை கல்கி,ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம் ஆகிய பிரபல பத்திரிக்கைகளிலும், பூபாளம் சிற்றிதழிலும் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.
பூபாளம் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்திருக்கிறார். இப்போதும் அதன் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார்.
வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் கல்கி, குமுதம், பூபாளம், லேடீஸ் ஸ்பெஷல், அமுதசுரபி பத்திரிக்கைகளிலும், குவிகம், சொல்வனம் மின்னிதழ்களிலும் அவரது கதைகள் வெளியாகி உள்ளன.
‘எல்லாம் தெரிந்தவள்’, ‘கனவுச் சங்கிலி’, ‘அப்பாவின் சைக்கிள்’, ‘கல்லடிப் பாலம்’ எனும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், ‘நீ இன்றி அமையாது உலகு’ எனும் குறும்புதினத் தொகுப்பும் வெளியாகி உள்ளன.
‘The Moplah Rebellion, 1921’ எனும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ‘மாப்ளா கிளர்ச்சி, 1921’ எனும் தலைப்பில் , 2021ம் ஆண்டு வெளியானது.

