ஆம்! நான் ஒரு குற்றம் செய்து விட்டேன். ஒரு கொலை. கொலை என்று எல்லோரும் சொல்வார்கள் அது அபத்தம்! அது ஒரு விபத்து. மன்னிக்கவும், திட்டமிட்ட விபத்து. திட்டமிடல் கொலைக் குற்றம் இல்லையே நான் நேரடியாகச் சம்பந்தப்படாததால் அது விபத்து. இப்போது என் மனநிலை பற்றி நீங்கள் ஒரு அவசர முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பைத்தியம்! வைத்துக் கொள்ளுங்கள்.. என் சானிட்டியைப் பற்றி எனக்குத் தெரியும்.
என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் நீங்களும் இதை செய்திருப்பீர்களா என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு நான் செய்தது தவிர்க்கவியலாத குற்றம். முதல் முறை அந்த நிகழ்வைப் பற்றிச் செய்தித்தாளில் படித்த போது பதறிப் போனேன் ஒரு பேருந்து ஓட்டுநர் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் அல்லது இருந்திருக்க வேண்டும்? கைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டலாமா? அவரது கவனக் குறைவுக்குப் பலி ஒரு பள்ளி மாணவியின் உயிரா? என் அலுவலகத்தில் வேலை நேரத்திலோ அலுவலகக் கூட்டம் நடக்கும்போதோ யாராவது கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்குப் பற்றி கொண்டு வரும், ஏதோ கொலைக் குற்றம் செய்பவர்கள் போல ஆத்திரம் வரும்.
ஓட்டுநர் பேருந்து ஓட்டும் போது கைபேசியில் பேசியதை ஒருமுறை தட்டிக் கேட்டேன். ஓட்டுநர் பதில் சொன்னார் அது பதில் இல்லை கேள்வி பேருந்தில் அத்தனை பேர்கள் இருக்க உனக்கு மட்டும் எங்கே அரிக்கிறது? என்னால் சொல்ல முடியவில்லை. அடுத்த முறை ரகசியமாக அவர் கைபேசியில் பேசிக்கொண்டே பேருந்து ஓட்டியதை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பொய் பெயர் பொய் அக்கவுண்டில் இருந்து பரவ விட்டேன். அரசாங்கம் இதை கவனிக்கும் அவன் மேலதிகாரிகள் அவனைக் கூப்பிட்டு டோஸ் விடுவார்கள் அவன் வாக்குவாதம் செய்வான் கோபத்தில் அவனை வேலை நீக்கம் செய்வார்கள் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன்.. மாறாக அந்த வீடியோ வைரலானது! லைக்குகள் குவிந்தன, கமெண்ட்டுகள் பறந்தன. அதில் ஒன்று அந்த ஓட்டுநரை ‘சூப்பர் மேன்’ என்று பாராட்டியது. நான் வீழ்த்தப்பட்டேன். மொத்த சமூகமும் ஒரு புறம் இருக்க நான் ஏன் தனியாக எல்லோருக்குமாகப் போராடுகிறேன்?
என்னைச் சுற்றி கவனித்தேன் பேருந்துக்கு முன்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டி கழுத்து ஒடிந்தவன் போல தோளைக் காதுக்கு அண்டை கொடுத்துக் கொண்டு வாகனத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறான் கைபேசியில் இருந்த மின்காந்தம் அவன் தோளையும் காதையும் இறுக்கமாக ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது அவன் இடிப்பது போல் சென்று கடைசி நொடியில் விபத்தைத் தவிர்த்து கடந்து சென்ற ஒரு பெண் கைபேசியில் பேசவில்லை ஆனால் கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். தொங்க விட்டிருந்த மறு கையின் விரல்களைப் பற்றிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த சிறுமி சாலையோரக் கடையில் எதையோ பார்த்து வேண்டுமென்று கேட்கிறாள். அதை அந்தத் தாயும் கவனிக்கவில்லை.. கடைக்காரனும் கவனிக்கவில்லை. அவனும் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். சற்று பரவலாக பார்த்தேன் யாரும் யாரையும் கவனிக்கவில்லை. பேருந்துக்கு உள்ளும் சரி வெளியிலும் சரி பெரும்பாலானோர் கைகளில் கைபேசி வைத்துக் கொண்டு ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்கள் அல்லது பேசிக் கொண்டிருந்தார்கள்.
நின்று கொண்டிருந்தவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் நடந்து கொண்டிருந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் காரில் போபவர்கள் லாரி ஓட்டுநர்கள் எல்லோரும் எல்லோரும்.. அப்படியானால் கைபேசியில் பேசிக்கொண்டே இந்தப் பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஓட்டுநர் ஒரு மகா அலட்சியச் சங்கிலியின் ஒரு கண்ணிதான். அப்படியானால் இவர்கள் தனிமையில் இருக்கிறார்களா? அல்லது நான் தனிமையில் இருக்கிறேனா? சற்று குழப்பமாக இருந்தது. இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். இவர்களைத் தனிமையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆரம்ப கட்ட நிறுவனத்தில் சீனியர் ப்ரோக்ராமராக வேலை பார்க்கும் எனக்கு அந்தத் திட்டத்தைத் தீட்டுவதில் ஒரு பெரிய சிரமம் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அந்தப் பேருந்து நடத்துனர் அவர் மூலம் ஓட்டுநர் எல்லோருடைய எண்களையும் சேகரித்தேன் “உங்களை யார் காதலிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று ஒரு குறுஞ்செய்தியைப் பரப்பி விட்டேன். அதைத் தொடும் அத்தனை கைபேசிகளிலும் நான் வடிவமைத்த செயற்கை நுண்ணறிவுச் செயலி செயல்படத் தொடங்கிவிடும்.
அந்தக் கைபேசியில் சேமிக்கப்பட்டு இருக்கும் அத்தனை எண்களுக்கும் மேற்சொன்னக் குறுஞ்செய்தி பரிமாறப்படும். சில நாட்களிலேயே நூறுகளை ஆயிரங்களைத் தாண்டி லட்சக்கணக்கான கைபேசிகளை அடைந்துவிடும் எந்தெந்தக் கைபேசிகளில் எல்லாம் அந்தச் செயலி செயல்பாட்டில் இருக்கிறதோ அந்தக் கைபேசிகளில் சேமிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை அந்தச் செயலி சேகரித்து எப்போதெல்லாம் அழைப்பு வருகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தப்பட்டவரின் தாய்/ தந்தை மகள்/ பேரன்/ பேத்தி/ சகோதரன்/ மனைவி/ நெருங்கிய நண்பர்கள் புகைப்படங்களை முதலில் காட்டி “இவர்களுக்கு நீங்கள் தேவையா?” என்ற கேள்வியும் “தேவை” “தேவையில்லை” என்ற வாய்ப்புககளும் திரையில் வரும், இந்த இரண்டில் ஒரு வாய்ப்பைத் தொட்டுத்தான் ஆக வேண்டும். “தேவை” என்ற வாய்ப்பைத் தொட்டால் அழைப்பு நின்றுவிடும் மற்றும் “சில நிமிடங்கள் கழித்து அழைக்கவும்” என்றக் குறுஞ்செய்தி அழைப்பவருக்குப் போய்விடும் “தேவை இல்லை” என்ற வாய்ப்பைத் தொட்டால் அழைத்தவருக்கு “உங்கள் உறவு எனக்குத் தேவையில்லை” என்றக் குறுஞ்செய்தி போய்விடும், அழைப்பும் நின்றுவிடும்.
என் செயலியின் விந்தை என்னவென்றால் ஒரே நபர் மறுபடியும் மறுபடியும் இரண்டு முறையோ மூன்று முறையோ கூப்பிட்டால் புகைப்படம் புலப்படாது. அப்போது அவசரத்தின் தன்மையைத் தெரிந்து பேசுவதும் பேசுவதைத் தவிர்ப்பதும் உபயோகிப்பவரின் உரிமையில் விடப்படும். இந்தச் செயலியைப் பரப்ப விட்டு சில தினங்கள் அமைதியாகப் பேருந்தில் போய் வந்தேன், குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கவனித்தேன். எல்லோரும் ஒருவடன் ஒருவர் சற்று பதட்டமாக ஆனால் பேசிக் கொள்கிறார்கள்! விவாதித்துக் கொள்கிறார்கள்!
கொரோனாவிற்குப் பிறகு சமூக அளவில் ஒரு ஒற்றுமை நிலவ கண்டேன். தனிமை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போதும் கைபேசியில் பேசுகிறார்கள் பார்க்கிறார்கள் ஆனால் ஒரு பதட்டம் நிறைந்த கவனம் இருக்கிறது. அன்று பேருந்து ஓட்டுநர் பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும்போது அழைப்பு வந்தது. அவன் கைபேசியை எடுத்துப் பார்க்க அவன் மனைவி புகைப்படம் தெரிந்தது “தேவை” என்று வாய்ப்பைத் தொட நினைத்துக் கொண்டே ஒரு வேகத்தடையைக் கடந்த போது “தேவை இல்லை” என்ற வாய்ப்பைத் தொட்டியிருந்தான். அவர்கள் வீட்டில் என்ன பிரச்சனையோ அடுத்த அரை மணி நேரத்தில் முப்பது முறை அவன் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது.
மறுநாள் காலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது சாலையோர கடையில் தொங்கிக் கொண்டிருந்த செய்தித்தாளின் கடைசி பக்கத்தில் ஒரு துண்டு செய்தி தெரிந்தது “குடும்பத் தகராறு காரணமாக பேருந்து ஓட்டுநர் தற்கொலை” இப்போது நீங்களே சொல்லுங்கள் நான் செய்தது கொலையா?

சால்வாடி ஈஸ்வரன்
சால்வாடி ஈஸ்வரன் கவிராயர் – திருக்குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராஜபக் கவிராயரின் மரபுத் தொடர்ச்சியில் வந்தவர்.
நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப் பட்டமும் உயிரின அறிவியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் உளவியல் ஆலோசனை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டமும், மேலாலோமலாண்மை மேம்பாட்டுத் திட்டம் துறையில் பட்டயமும் பெற்றவர்.
அமெரிக்காவின் ஐஜிஐ க்ளோபல் பப்ளிஷிங் மற்றும் அணி சேரா இயக்கம் வாயிலாக ஆங்கிலத்திலும், பாவை மதி வெளியீடு வாயிலாக ”தளம்” (கவிதைத் தொகுப்பு) ”எட்டிய பத்து எட்டாத பத்து” (கட்டுரைத் தொகுப்பு) முகிலன் பதிப்பகம் வாயிலா ”நிறமற்ற நிஜங்கள்” (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் மெய்நிழல் பதிப்பகம் வாயிலாக “சுவர்” (சிறுகதைத் தொகுப்பு) என்று தமிழ் எழுத்துலகிலும் இயங்கி வருகிறார்.

