அந்திப் பொழுதின் போது…
ஒரு வேலை விஷயமாக தஞ்சாவூருக்கு காலை எட்டு மணியளவில் வந்திருந்தவன், அரசு அலுவலகமென்றாலும் எதிர்பார்த்திருந்ததை விட பணி சீக்கிரம் முடிந்திடவே தனது சொந்த ஊரான அதிராம்பட்டினத்திற்கு தான் கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தில் ஓர்மையோடு விரைந்துக் கொண்டிருந்தான் முப்பத்தைந்து வயதான ஜமால். வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரமென்பதால் தொழுகைக்காக வழியில் ஒரு பள்ளிவாசலைக் கண்டவுடன், தள்ளிப்போடாது கடமையுணர்வுடன் வண்டியை அங்கேயே நிறுத்தினான்.
நான்கடி சுற்றுச் சுவரை ஒட்டி தேக்குக் கன்றுகள் அப்பள்ளிவாசல் வளாகத்தினுள் மற்றொமொரு வேலியையைப் போல் வடிவெடுத்து நின்றன. இளம் ஆலிவ் பச்சை மற்றும் வெள்ளை நிற கூட்டோடு பள்ளிவாசல் சலவைக்கற்களில் பளபளத்தது. தரையிலிருந்து ஆறடி உயரம் வரை தளம் உயர்த்தப்பட்டு, உள்ளே செல்ல மார்பில் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஊன்றி ஏற இருபுறமும் துருப்பிடிக்காத கம்பிப்பிடிகள்!
தலையில் சிறு சிறு கலை வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம் என பல வண்ணங்களில் தொப்பிகள் அணிந்தபடியும், கைக்குட்டைக் கட்டியும், நல்ல விளைச்சலோடு வெடித்த பருத்தி பெரும்வயல் பெயர்ந்து நகர்வதுப் போன்று பள்ளியினுள் அசைந்து அசைந்து நுழைந்துக் கொண்டிருந்தது ஆண்கள் கூட்டம்.
அங்கே பள்ளி மாணவர்களைத் தவிர்த்து வெகுசிலர் மட்டுமே பேன்ட் அணிந்து தொழ வந்திருந்தனர். பெரும்பாலும் வெள்ளை, அல்லது கட்டங்கள் போட்ட கலர் கைலி(லுங்கி)கள்தான்! சட்டைகளும் அவ்வாறே! மேற்படி பேன்ட் அணிந்திருந்த ஓரிரு நடுத்தர வயதுக்காரர்களில் ஒருவர் மட்டும் ஜமாலின் கண்களுக்கு தனித்துத் தெரிந்தார்! குறிப்பிட்ட நபரைக் கண்டதும் மின்சாரம் வந்த கிராமமாய் ஜமாலிற்கு அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்! பரிச்சயமான பழைய முகமொன்று அவன் கண்களில் நிழலாடிச் சென்றது!
உண்மையிலேயே அது அவனுக்கு எதிர்பாராததொரு இன்ப அதிர்ச்சிதான்! பள்ளியில் பனிக்கட்டியின் தூய்மையோடு இமாம் மார்க்க சொற்பொழிவு செய்துக் கொண்டிருக்க, இவன் முகமோ சந்தன நிற சட்டையும், கருப்பு பேன்டும், தலைக்கு வெண்ணிறத் தொப்பியையும் அணிந்து, அந்த நபர் அமர்ந்திருந்த திசையை நோக்கியே அவ்வப்போது திரும்பிக் கொண்டிருந்தது. அது அவனை உறுத்தவும் செய்தது. தொழுகை முடியும்வரை மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சித்தான்; கவனம் இங்கங்குச் சிதறா வண்ணம் பார்த்துக் கொண்டான். முழு கவனத்தோடு இமாமின் பேச்சிற்கு செவிக் கொடுக்கலானான். இருப்பினும் மனதின் ஓர் மூலையிலும் சந்தோச ஊற்றொன்று பெருகிய வண்ணமிருந்தது!
தொழுகை முடிந்து அனைவரும் மின்னல் கிளைப்பிடித்து கலைந்து செல்ல இவன் மெல்ல மெல்ல அவரருகினில் செல்ல ஆயத்தப்பட்டான். அவன் பணி புரிந்து வரும் அமீரகத்திற்கு அவ்வப்போது வருகை தரும் பிரபல இசையமைப்பாளர், பாடகர்களை சந்திக்கும் வாய்ப்பிற்கு ஒப்பானதல்லவா அது! ஆம் அவன் இப்போது கைகுலுக்கிப் பேச முனைப்போடு விரைந்துக் கொண்டிருக்கும் அந்த நபரும் ஒரு இசைக்கலைஞர்தான், அதிலும் அவர் குரல் அத்தனை தனித்துவமானது!
“அஸ்ஸலாமு அலைக்கும்…” என்றவாறு அவரது கரங்களைப் பற்றி அளவாவ தனது கைகளை மகிழ்ச்சி குறையாமல் மலர் தூவது போல நீட்டினான். பள்ளியின் பக்கவாட்டில், தொழுகைக்கு முன் அமர்ந்து முகம், கை, கால் கழுவி ‘ஒது’ செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தடாகத்தின் ஒளிச் சிதறலுக்கு ஒப்பானது அக்கணம் அவன் கன்னமேட்டில் குடிந்திருந்த ஆனந்தத்தின் பிரகாசம்!
‘வ அலைக்கும் ஸலாம்..!’ கைப்பிடித்த கன்றுக்குட்டி காளைமொழிப் பேசியது போல சற்றும் எதிர்பார்த்திராததொரு கம்பீரம் அவரது மென்குரலில்! முதன்முறை அவரது குரலைக் கேட்டு எப்படி வியந்தானோ அப்படிதான் இன்றும் அதிசயிக்கிறான்!
“காக்கா (அண்ணே…) நீங்க ‘வளர்பிறை தப்ஸ்’ குழுல பாடுற ஆளுதான?” ஜமால், நேரிடையாகவே தனது சந்தேகத்தையும், ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்திக் கொள்ள முனைந்தான். அவர் கல்யாண வீடுகளில் பட்டைப் பட்டையாய் பின்னித் தொங்கவிடப்பட்ட பனைஓலை தோரணம் போல மெலிதாய் சற்று அசைந்துச் சிரித்தார். குழந்தைகளும் தோற்றுவிடுமளவிற்கு அத்தனைப் பால்த்தூய்மை அவரது சிரிப்பினில்!
“ஆமாத்தா! பாக்க புது ஆளு மாதிரி இருக்கிய, என்ன உங்களுக்குத் தெரியுமாத்தா..?” அவரும் தன் பங்கிற்கு ஆதுரமாய் விசாரித்தபோது வெள்ளிக்குடத்தில் வைத்த தென்னம்பாளையை போல் தோகைவிரித்திருந்தது அவரது முகத்தில் குறைவற்றப் பூரிப்பு!
சுற்றி சூழ்ந்தும், கடந்தும் சென்றுக் கொண்டிருந்த கூட்டம், அவர்கள் இருவர் மீதும் தங்களின் எதார்த்த பார்வையை வீசிச் செல்லாமலில்லை! அதில் அநேகர் எந்திரப்போக்கை கடைப்பிடித்து நகர்ந்துக்கொண்டிருந்தாலும், சிலரின் கண்களில் உள்ளன்புக் கலந்த ஒளியும், இன்னும் சிலரிடம் அவர்களை சட்டை செய்ய விரும்பாத பிடிவாதமும் ஆட்கொண்டிருந்தது.
“உங்களைத் தெரியாம இருக்க முடியுமா..? நான் சின்னப்பையனா இருந்தப்ப, நம்மூர்ப்பக்கம் எங்குன கலியாணம் நடந்தாலும் உங்க தப்ஸ் குழுதான பெரும்பாலும் வரும். அதிலேயும் நீங்க முக்கியமான பாடகரமாச்சே காக்கா..!”
அடக்க மிகுதியில் அவர் சந்தோசமும், வெட்கமும் ஒன்று கூடி, கலந்து நெளிந்து சிரித்தார். அரை நொடியில் அந்த சிரிப்பு உதிர்ந்து மாயமுமானது. சடுதியில் குரும்பைகள் காய்த்து, நொடியில் கொட்டிவிட்ட தென்னையைப் போல் மரத்து நின்றார். தனது வலது கையை மார்பு வரை கொண்டுச் சென்று முதல் பொத்தானை மாட்டுவது போல், ஏற்கனவே இட்டிருந்த சட்டைப் பொத்தானை கழட்டி மாட்டினார்.
தன்னிலையுணர்ந்து சுதாரித்தவராய், “நீங்க தம்பி..? நீங்க எந்த ஊரு புள்ள..?” கம்பீரமான அந்த குரல் உண்மையிலேயே அவருடையதுதானா என்று ஒவ்வொரு முறையும் அவர் பேசும்போது ஜமாலிற்கு ஆச்சர்யத்தைத் தந்தது. பாடவோ, மக்கள் மத்தியில் நின்றுப் பேசவோ ஒலிப்பெருக்கியின் உதவியே அவசியமில்லாத குரல் என்றாலும், அதில் தோய்ந்திருந்த வாஞ்சையோ திகட்டாதப் பலாச்சுளை! வாஸ்தவம்தான்! அறியாதவன் போல் வெளித்தோலுக்கும், உள் தித்திப்பிற்கும் சம்பந்தமே இல்லையே என்று ஒரு பலாப்பழத்தைப் பார்த்தா இப்படி வியப்பது?
மேலும் அவரது குரலைக் கேட்டு அணுக்கமாய் அவன் இப்படி மகிழவும், ஒவ்வொரு முறையும் ஆழ்ந்து ஆலோசிக்கவும் காரணம்?
ஜமால் தனது ஊர் பெயரை சொன்னான்.
” ஓஹ் ஓஹ் நம்ம அதுராம் பட்ணம்தானா..? எனக்கும் கூட சொந்த ஊரு முத்துப்பேட்டைதான் தம்பி!” அப்படியா..? என்று புன்முறுவலுடன் தலையசைத்தவன்,
“காக்கா இப்பவும் தப்ஸ் குழுல இருக்கீயளா?”
அவர் கலகலவெனச் சிரித்தார்.
“தம்பி, இப்ப எனக்கு வயசு அம்பது! புள்ளைங்களாம் பெரியவங்களாயிட்டாங்க! மகே கத்தார்ல வேலப் பாக்குறான். பொம்புளப் புள்ளைங்க ரெண்டையும் கூட கட்டிக் குடுத்தாச்சி! (கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறார்) அப்புறோ நாங்கூட இப்புடி பாடிட்டு திரியிறது மகனுக்குப் புடிக்கல. அவனுக்கும் கூட கலியாணம்லாம் பண்ணி வச்சாச்சி. அவே சின்னப் புள்ளையா இருக்கும்போதே பயலுவோ கிண்டல் பண்றானுவோன்னு உம்மாக்காரிக்கிட்ட சண்ட போடுவான். அவளும் எங்கிட்ட இதையெல்லாம் விட்டுத் தொலைஞ்சாத்தான் என்னென்னு மல்லுக்கு நிப்பா… அவளுக்கும்தா நான் பாட்றது புடிக்காது. பய தோளுக்கு மேல வளந்துட்ட பொறவு அவனுக்கு பயந்து நடக்குற அளவுக்கு ஏ நெலமயு காலப்போக்குல ஆகிப் போச்சி!” நாள்பட்ட வரப்புகளை வெட்டிவிட்டது போல் பொலபொலவென அவரது வார்த்தைகள் பண்ணை இறால் குவியலாக வாய்க்காலில் கொட்டி நிறைந்தன. அந்த மிரட்சியை ஜமாலும் எதிர்பார்த்திருக்கவில்லை! ஒரே ஒரு எளியக் கேள்விக்கு இத்தனை பிரளயமான பதிலா! ஆனால் ஜமாலுக்கு அது தானாக எழுந்த கேள்வியென்றாலும் அவரது பதிலும், உணர்ச்சிப் பெருக்கும், வருத்தமும், அதில் தோய்ந்திருந்த அடியும், வலியும் சற்று ஆலோசித்துப் பார்த்தபோது வியப்பை ஏற்படுத்தவில்லைதான்!
அவருடைய பெயர் மீரான் சாஹிப். அவரை, அவருடைய இருபதுகளில் கண்ட வசீகரமிக்க இளைஞனாகத்தான் ஜமாலுக்கு அதிகம் தெரியும்! அப்போது அவனுக்கு ஒரு பத்து இருக்கும்!
ஊர்த்தலைவர் புளிசாக்கு தாஜுதீன் வீட்டு கல்யாணமது. கோட்டைப்பட்டின ராவுத்தர் அப்பா தர்ஹாவின் சந்தனக் கூடு போல ஸ்பீக்கர், மற்றும் சில பல இத்யாதிகளை ஒரு சிறிய வண்டியில் வைத்து இழுத்து முன் செல்ல தப்ஸ் வாத்தியக் குழு தனது மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்களை வாசிக்கத் தொடங்கியது. புளிச்சாக்கு வீட்டு தாஜுதீனின் மகன் அன்வர்தீன், கோட்டும் சூட்டுமாய், மாலையும் கழுத்துமாய் ஒரு கையை இடுப்பில் ஊன்றியபடியும், மறு கையால் குதிரையின் தும்பியை பிடிமானத்திற்கு பலமாய் பற்றியபடியும் புது மாப்பிள்ளைக் கோலத்தோடு ஜிங்கு ஜிங்குன்னு பூவாலும், பஞ்சுக் குஞ்சங்களாலும் அலங்கறிக்கப்பட்ட குத்தூஸ் குதிரையின் ஆட்டத்திற்கும், துள்ளலுக்கும் ஏற்றவாறு அமர்ந்த நிலையிலேயே வெள்ளைக்கார துரையைபோல் எம்பிக் கொண்டிருக்க, வளர்பிறை தப்ஸ் குழுவின் மற்றொருப் பாடகர் ‘மஹமூது நபிகள் பிரானே..!’ என்று காணீரேக் கவரும் குரலில் பாட ஆரம்பித்தார். கலைஞர்களின் கைகள் மற்றும் பஞ்சுமுனைக் கம்புகளின் தட்டல்களில் தொம் தொம் என்ற சத்தத்துடன் ஜல் ஜல் என்ற ஒலி கலந்து வரும் தப்ஸ் மேளங்கள் அதற்கு கூடுதல் கொண்டாட்ட ஜாலங்கள் சேர்த்துக் கொண்டிருந்தன. தப்ஸ் குழு உறுப்பினர்கள் கருநீல பேன்ட், சட்டை மற்றும் தொப்பிகள் அணிந்த இராணுவப் படைப் போல மெல்ல மெல்ல வீதியெங்கும் நகர்ந்துக் கொண்டிருக்க, கல்யாண வீட்டினர், உறவுகள், ஊர் மக்கள் என்று அனைவரும் அவர்களை சூழ்ந்தும், தொடர்ந்தும் மாப்பிள்ளையோடு வீதி உலாச் சென்றனர்.
அடுத்த பாடலாக அப்போது பிரபலமடைந்திருந்த ஒரு திரைப்படப்பாடல் மெட்டில் ஒரு இஸ்லாமியப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அதுவும் ஒரு பெண் குரலில்! அதை பாட ஆரம்பித்திருந்தது ஜமால் இன்று சந்தித்த மீரான் சாஹிப்தான்!
இறைவனே என்னை கண் பாராய்
இந்நாளும் உந்தன் அருளலல்லவா..!
இறைவனே உன்னை நான் தொழுதால்
எந்நாளும் கூடும் மகிழ்வல்லவா
உலகை ஆளும் எங்கள் இறைவா..!
உயர்ந்தவை தா என்றும் நிறைவா!
இறைவா..! இறைவா..!
இறைவனே..! உனை உனை
நினைப்…பேனே..!
அதிலிருந்து அன்று ஜமால் அவரையே ஊர்வலத்தில் கவனித்தபடி நடந்துச் சென்றான்.
அடுத்து அதே பாணியில் மற்றுமொரு திரையிசை மெட்டுப்பாடல்… அதையும் பாடகர்கள் இருவரும் இணைந்தேப் பாடினார்கள்…
மா நபியே பூ நபியே
பயகம்பரே தாங்கள்!
தீன் குலத்தை எமக்களித்த
பால் நிலவே நீங்கள்!
பாடல்களின் இடையிடையே நேரடி சினிமாப் பாடல்களும் வரிகள் மாற்றப்படாமல் ஒலித்தன.
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது..!
வெண்ணிலவே வெண்ணிலவே
வெட்கம் ஏனம்மா..?
சிட்டுப் பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில்
ராசாத்தி..!
என இப்படி சில…! ஆனாலும் அன்று ஜமாலை முழுவதுமாக கவனமீர்த்திருந்தது அன்று தனது இருபதுகளில் இளமைக் கொப்பளிக்க நின்றிருந்த மீரான் சாஹிப்தான்!
நடுத்தரமான உயரம், நிறமும் காப்பிக்கொட்டையும் இல்லாமல், மாம்பழக் கலருமில்லாமல் சற்று சந்தனம் கூடிய புது நிறம்! வெளியில் படும் இடங்களில் பழுக்காத சப்போட்டா தோல் போல குறும்செம்பட்டை முடி நிறைந்த சருமம். இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வாளிப்பான பேரழகியின் இடுப்பை போல் ரசிக்கும்படியான மடிப்புடன் கூடிய மென் சுருக்கங்களும், முழுவதும் நரைத்த முடியும்தான் அவருக்கு வயதாகி விட்டது என சாட்சிக்கு கூறின.
குறிப்பிட்ட கச்சேரிக்கு முன்பும் பின்பும் கூட அவர் அவனுடைய ஊருக்கு சில முறை வந்து சென்றிருக்கிறார். ஆனாலும் அவன் மனதில் ஆழமாய் பதிந்துப் போனது அவரை முதன்முறையாகக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய அந்த பத்து வயது நிகழ்வுதான். இருப்பினும் 2005க்கு பின் அவரை கண்ட ஞாபகம் அவ்வளவாக இல்லை! அவனுடைய குடும்பத்தினரும் திருச்சி, பாலக்கரைக்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். அங்கே ஜமாலின் அத்தா கட்டிடங்களுக்குப் பயன்படுத்தும் சிமெண்ட், இரும்புக் கம்பிகள் மற்றும் இதர சாமான்கள் விற்கும் தொழில் தொடங்கினார். இப்போதும் நல்லபடியாக சென்றுக்கொண்டிருக்கிறது!
ஜமாலின் மனைவி, அவனுடைய மாமி மகள்தான். அதிராம்பட்டின வழக்கத்தின்படி வீட்டோடு மாப்பிள்ளையாகவே திரும்பவும் ஊர்ப்பக்கமே வர வேண்டியச் சூழல்!
திருமணத்தையொட்டி, திரும்பவும் சொந்த ஊரிலேயே ஜாகைக் கொண்டிருந்தாலும் நாட்களளவில் அதிகம் தஞ்சம் கொள்வது திருச்சி மாநகரிலேயே! சென்ற மாதம் மத்தியில் துபாயியிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தவன், இப்போது SIR படிவம் பூர்த்தி செய்து கொடுக்கதான் ஊர்ப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறான்.
“வாங்கத்தா, நம்ம வீட்ல சாப்பிட்டுட்டு போவலாம்..!” மிகவும் வலிந்து பற்றாமல், ஒரு மரியாதைக்காக ஜமாலின் கையொன்றைத் தொட்டு இழுப்பது போல் பாவனைக் காட்டினார் மீரான் சாஹிப்.
“பரவால்ல காக்கா..! இன்னும் பத்து பதினைஞ்சி கிலோமீட்டர்தானே..! பட்டுக்கோட்டையில் பயலுவோ நிக்கிறானுவோ எனக்காக..! அங்க ஒரு விருந்து… போகணும்! இத்தன வருசம் செண்டு உங்களப் பாத்ததேப் போதும்ங்கத்தா! அவ்ளோ சந்தோசமா இருக்கு!”
ஒரு நிம்மதியுடன் தனதுப் பிடியைத் தளர்த்திக் கொண்டார் அந்த பெரியவர்.
ஆனால் அவர் கண்களில் மட்டும் விலகாமலே உறைந்திருந்தது ஒரு அழுத்தமானப் பாசம்! முகத்தில் கனிந்துப் போன அப்பட்டமான கனிவு!
அதுவே ஜமாலைப் பசியாற்றிவிட்டது! தனக்குப் பிடித்த பிரபலமான ஒருவரைக் கண்ட பூரிப்புடனும், புன்முறுவலுடனும் அங்கிருந்து மானசீகமாய் விடைபெற்றுக் கொண்டான்.
அவருக்கு ஸலாம் கொடுத்துவிட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்தபோதுதான் அவன் அடிமனதில் தங்கிப் போயிருந்த வடுவொன்றும் தலைக்காட்டத்த தொடங்கியது.
சற்று தூரத்தில் வண்டியை நிறுத்தி, குளிர் கண்ணாடியை அணிந்துக் கொண்டான்.
தான் முழங்கை வரை மடக்கி, போட்டிருந்த கருநீல முழுக் கைச் சட்டையும், கருப்பு பேன்ட்டும் காண அவனுக்கு ஒரு மந்தகாசமான ரம்மியத்தைக் கொடுத்தது. ஒளித்திரை அணைந்திருந்த ஸ்மார்ட் வாட்ச் சந்தக்கட்டைக்கு அணிவித்த கருப்பு வாராய் எடுத்து நின்றது.
கருப்பு – சிவப்பு காம்பினேஷனில் இருந்த தனது ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் பைக்கை தனது வோல்ஃப் கட்டிங் ஸ்டைல் முடி காற்றினில் பறக்க, மீண்டும் ஸ்டார்ட் செய்தான்…
மீண்டும் அவனுள் ஒரு சுமையின் தாக்கம் அழுத்திற்று! ஏதேதோ நினைவுகள் அவனை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தன!
மனம் மட்டுமே நினைத்த நேரத்திற்கு, காலத்திற்குப் பறக்க வல்லது. நினைவுகளின் தீராப் பிடிகளிலிருக்கும் எவருமே நினைத்த சடுதியில் பழைய ரெக்கைகள் முளைத்து கடந்து வந்தபாதைகளில் சற்றுத் திளைத்து வருவதுதானே இயல்பு! அன்று மீரான் சாஹிபிற்கும் கூட இவன் எடுத்துச் சொன்ன குறிப்பிட்டக் காலத்தின் நினைவலைகள் ஆடி மாதத்து ஆற்று வெள்ளமாய் பெருக்கெடுத்து நுரைத்திருக்கும்தான்!
ஜமால் அப்போது திருச்சியில் பிரபலப் பொறியியல் கல்லூரியொன்றில் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்திருந்தான். முதலாமாண்டு… குழந்தைகளுக்கு பால்பல்லை போல், குமரன் அவனுக்கு பூனை மீசை கருக்கத் தொடங்கியிருந்த சமயமது.
வைரமுத்துவின் கவிதைகளிலும், இளையராஜாவின் எண்பதுகளின் இன்னிசை இரவுகளிலும் ஒவ்வொரு நாளும் திளைத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் வைரமுத்துவின் ‘கேள்விகளால் ஒரு வேள்வி’ என்ற நூலில் ஆழ்ந்தான். புதுமைப்பெண் படத்தில் இடம்பெற்றிருந்த ‘கஸ்தூரி மானே கல்யாணத்தேனே..’ பாடல் பிறந்த கதையை ஒரு கேள்விக்கு பதிலாக வைரமுத்து அப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார். அதே புத்தகத்தில் ‘விழியில் விழுந்து… இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…’ பாடல் பின்னணியும் விவரிக்கப்பட்டிருந்தது. வரிகள் வெகுவாய் வசீகரிக்க, யூ ட்யூபில் பாடலை ஓடவிட்டுக் கேட்டான். இளையராஜா, சசிரேகா குரல்களில் முதலில் சுகமாகவும், பிறகு ஜென்சி குரலில் சோகத்துடனும் ஒலித்து அவனை அப்பாடல் முழுவதுமாக தன்வசப்படுத்துக் கொண்டது! அப்பாடலைத் திரும்பத் திரும்ப கேட்கவும், கேட்டுக் கேட்டுப் பாடவும் பிடித்திருந்தது. அது அவனுள் பதின்மத்தின் முதற்காதல் மலர ஆரம்பித்திருந்த தருணமும் கூட!
பர்வீன்… ஜமாலின் ஒன்றுவிட்ட மாமா மகள்… அஞ்சு வண்ண அழகுக்கிளி! அவளும் கூட அதே வகுப்பில்தான் சேர்ந்திருந்தாள். ஏதோ சண்டை சச்சரவில் இரு குடும்பங்களுக்கும் இடையே அவ்வளவாகப் பேச்சு வார்த்தைகள் கிடையாது என்றாலும் சிறு வயது முதல் அவள் மீது ஜமாலுக்கு ஒரு ஈர்ப்பிருந்தது. அவளை அவன் திரும்பவும் அங்கேக் கண்டத்திலிருந்து சிறு சிறு பார்வைப் பரிமாற்றங்கள் இரவானால் சந்திரன் தொடுவது போலவே இயல்பாகவே நடந்தேறியது. அது காதல்தான் என்று பருவமும், உறவுமுறையும் லா..லா..லலல்லா…என்று முதுகிற்கு முன்னும் பின்னும் கோரஸ் பாடியது. சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமரை வெடிக்காதா என்ற விதிமுறைக்கிணங்க அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்து புன்னகைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
அப்படிப்பட்ட நிலாக்காலத்தின் பொன்னான நாளொன்றில்தான் வகுப்பறையையொட்டி மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்தபடி…
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே..!
தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…!
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு!
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு!
தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே..!
தன்னை மறந்து எங்கோப் பார்த்தபடி பெண்குரலில் ஜமால் பாடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒரு நிழல் அவனை இரசித்துக் கொண்டிருந்தது. நீங்கள் நினைப்பது போல் அது பர்வீன் அல்ல! அவர்களது கணினி அறிவியல் விரிவுரையாளர் திருமாறன்!
திருமாறன் நன்றாகப் பாடக் கூடியவர். கல்லூரியின் கலை மற்றும் ஆண்டு விழா மேடைகளில், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தானும் மகிழ்ந்து, பாடி பிறரையும் மகிழ்விக்கக் கூடியவர். வயதிலும் சிறியவர்தான். அதிகபட்சமாக முப்பத்திரெண்டு இருக்கும்.
தன்னை மறந்து பெண்குரலில் பாடிக்கொண்டிருந்த ஜமாலை நம்பமுடியாமல் வியந்து அவன் பாடி முடித்ததும் கைத்தட்டி, பாராட்டி திடுக்கிட வைத்தார். அன்றவன் உண்மையிலேயே மிரண்டுதான் போனான். வெட்கம் அவனை சூழ்ந்து கொண்டது. அடுத்த மேடையில் தன்னோடுப் பாட ஒரு பெண்குரல் கிடைத்துவிட்டதென தனது மகிழ்ச்சியை அக்கணமேத் தெரிவித்தார். ஆனால் அது அவனுக்கு சிறு நடுக்கத்தை விளைவித்தது. அது எப்படி எல்லோர் முன்னிலையிலும் அதுவும் பெண்குரலில்? இருப்பினும் குறிப்பிட்ட சம்பவத்திற்கு பின் ஜமாலோடு, திருமாறன் அதிக நெருக்கம் காட்டிப் பழக ஆரம்பித்திருந்ததில் ஜமாலும் மகிழ்ச்சியாய் உணர்ந்தான்.
அதனைத் தொடர்ந்து அந்த வருட ஆண்டுவிழாவில் திருமாறனும் ஜமாலும் இணைந்து மேடையேற முடிவெடுத்திருந்தனர். இதற்கிடையில் ஜமால் மற்றும் பர்வீனுக்கிடையில் வழக்கமானப் பார்வைப் பரிமாற்றங்கள், சிறுபுன்முறுவல்கள் தொடர்ந்துக் கொண்டிருந்தாலும் ஒரு முறைக் கூட மனம் விட்டு தங்களின் விருப்பத்தை வாய்விட்டுக் கூறிக் கொண்டதில்லை!
சம்பிரதாய வாழ்த்து, கல்லூரியின் கடந்த மற்றும் நிகழ் ஆண்டு சாதனைகள், அடுத்த கல்வியாண்டிற்கானத் திட்டங்கள் என மேடையில் பணித்தவர்கள், கடமைப்பட்டவர்கள் பேசிமுடித்தப் பின் திருமாறன் அங்கே பாட ஏறினார்.
‘சங்கீத ஜாதி முல்லை காணவில்லை…’ என்று அனாயசமாக எஸ்பிபியையே விழுங்கிவிடுமளவிற்கு பாடி அனைவரின் ஏகோபித்தக் கைத்தட்டல்களை வாங்கினார். அடுத்து ‘பூங்காத்து திரும்புமா..?’ பாடலை ஜமாலும் அவருடன் இணைத்துப் பாட வேண்டும்!
அனைவரும் ஆச்சர்யம் பொங்க வாய்பிளந்து இருவரும் எப்போது பாடுவார்கள் என்று எதிர்நோக்க ஆரம்பித்தனர். திருமாறன் பாடிய முதல் வரிக்கே, பலத்த கைத்தட்டல்கள் எழத் தொடங்கியது. அடுத்து ஜமால், இசைக்குயிலின் டச்சைப் பிடித்து பெண்குரலில் தொடரத் துவங்கவும் விரிந்த கண்களும், அதிர்ந்த கரக்கோஷமும் ‘கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க!’ வில் உச்சம் தொட்டது என்றால், ‘அடி நீதானா அந்தக்குயில்!’ என்று குறும்போடு திருமாறன் ஜமால் பக்கம் பார்க்க, சிரிப்பொலிகளும், விசில் சத்தங்களும் எட்டு திக்கிலும் பேப்பர் ராக்கெட் போல் பறந்து வந்தன.
அவர்கள் பாடி முடித்ததும், விருந்தினரின் பாராட்டு மழையிலும், மாணவர்களின் குதூகளிப்பிலும் இருவரும் அங்கே நெகிழ்ந்து நிற்கவே… அப்போதுதான் உணர்ச்சியின் மிகுதியில் திருமாறன் வேறெரு இரகசியத்தையும் சொன்னார். அதாவது முதலில் ஜமாலை தனியாகத்தான் பாடக் கேட்டுக்கொண்டிருந்தாராம்! அவனும் ‘கண்ணன் வரும் வேளை… அந்தி மாலை நான் காத்திருந்தேன்…’ என்ற பாடலை பாடுவதற்கு நன்றாகப் பயிற்சி எடுத்து வைத்திருந்தானாம். ஆனால் ஜமால் கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சியில் பாடுவதிலிருந்து தான் விலகிக் கொள்வதாக தயக்கம் காட்டவே, சரி கூட நானும் பாடுகிறேன் எனச் சொல்லி அவனைத்தான்தான் வலிந்து பாட வைத்ததாக ஒரு பெருமிதமான விளக்கத்தைக் கொடுத்தார். இது போதாதா அவனை அந்தப் பாடலையும் பாடச் சொல்லி அனைவரும் வற்புறுத்தவே, வெட்கம் விலகாமல் எப்படியோ அவனும் பாடி முடித்தான்! இதை முன்னமே செய்திருந்தால் ஒரே பாடலுடன் முடிந்திருக்கும்!
அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள் அவனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.
எப்போதாவது சிலர் ‘கொஞ்சம் பாருங்க..! பெண் குயில் நானுங்க!’ ஜாடை மாடையாகப் பாடி கிண்டலடித்தபடி கடந்து செல்வார்கள். குணத்தில் ஜமால் மிகவும் மென்மையானவன் என்பதால் அவனுடைய மனதை அப்பேச்சுக்களும், சீண்டல்களும் பாதிக்கவே செய்தன. சதீஷ், கார்த்தி போன்ற நண்பர்கள்தான் அவனுக்காக குறிப்பிட்ட மாணவர்களிடம் வரிந்து கொண்டு காணும் நேரங்களிலெல்லாம் சண்டைக்கு செல்வார்கள். அதையெல்லாம் விட அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பர்வீனோ தனது பார்வையை அவனிடமிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொண்டாள்! தான் பெண்குரலில் பாடியதை அவள் விரும்பவில்லை என அவனாலும் உணர்ந்து கொள்ள முடிந்ததென்றாலும் ‘சரி, உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இனி அப்படி செய்ய மாட்டேன்!’ என்று அவளை சமாதானப்படுத்தும் பேச்சு வல்லமையும் ஜமாலிடம் அப்போது இருந்திருக்கவில்லை!
கரிப்பைக் கொடுத்த ஐஸாக முதல் சுவைப்பிலேயே அவள் இவனைத் தவிர்த்துவிட்டாள்! இவனும் தான் அத்தனை ரசமில்லையோ என கரைந்து, கரைந்து வெறுங்குச்சென மௌனமாய் ஒதுங்கிவிட்டிருக்கிறான்.
பழைய நினைவுகள் திடீரென ஆட்கொண்டு தன்னை யாரோ இறுக்குவது போல ஜமால் உணர்ந்தான். நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தான். ஆனால் அதன் பிடியிலிருந்து முழுமையாய் மீள முடியவில்லையோ… அல்லது அவனுக்கு பாட வேண்டுமெனத் தோன்றியதோ…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதின் போது…
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
அழுத விழிகளோடு…
நெடுநாளைக்குப் பிறகு பெண் குரலில் ஆத்மார்த்தமாகப் பாட ஆரம்பித்தான்… சட்டென அவன் மனதில் தன் மனைவி ஃபர்ஹானாவின் முகம் தோன்றவே, எழுந்த குரல் தடைப்பட்டது. இப்போது வாகனத்தை கவனமாக ஓட்ட ஆரம்பித்தான்.
***

இத்ரீஸ் யாக்கூப்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.

