தொட்டிபாளையம் இறங்குறவங்களாம் இறங்குங்க என கண்டக்டர் குரல் கொடுக்கவும் இறங்கினாள் மல்லிகா!
மகளின் வரவுக்காகவே காத்திருந்த பெரியசாமியும் அவசரமாக சென்று மல்லிகா கொண்டுவந்த கட்டைப்பையை வாங்கினார்.
“அப்பா எப்படி இருக்கிங்க?”
“எனக்கென்னத்தா நா நல்லாருக்கேன் தாயி, நீ எப்படி இருக்க மாப்பிள்ளை எப்படி இருக்காரும்மா” என்றபடியே தான் வாங்கிய கட்டைபையை தனது டி.வி.எஸின் முன்புறம் வைத்தார் பெரியசாமி.
” உங்க மாப்பிளை நல்லாருக்காருப்பா, அம்மா எப்படி இருக்கு ” என்றாள்.
அவளுக்கென்னத்தா நல்லாருக்காம்மா, இருவரின் பரஸ்பர நல விசாரிப்புகள் பின் தன் டிவிஎஸ் வண்டியை இயக்கினார் பெரியசாமி.
மல்லிகா பெரியசாமியின் ஓரே பெண். போன வருடம் தான் பக்கத்து டவுனில் வரன் பார்த்து மணம்முடித்து வைத்தார்.
ஒத்த புள்ளைய தூரமா குடுத்துட்டு நாளபின்ன போய் பாக்க வர சிரமமா இருக்க கூடாதுன்னு பக்கத்துலயே குடுத்தாரு.
மருமக பிள்ளையும் தங்கமான குணம் .
பெரியசாமிக்கு வயசாகிட்டே போகுறதால வயக்காட்ட பாக்க முடியல அதான் அத குடுத்துபுடலாம்னு முடிவு எடுத்தாரு.
மவளுக்கும் ஒரு பங்கு குடுக்கணும் அப்படினு மவள வர சொல்லிருக்காரு.
மல்லிகா வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே அவ ஆத்த பொன்னுத்தாயி வச்ச கருவாட்டு குழம்பு வாவா கூப்பாடு போடுச்சு பெரியசாமி வீட்டுல.
வா மா நல்லாருக்கியா என்ற படியே புடவை முந்தானையில்
கைகளை துடைத்தபடி வந்தார் பொன்னுத்தாயி.
”மல்லி நீ இரும்மா கொஞ்ச சோலி இருக்கு நா செத்த வெளிய போய்ட்டு வாரேன்” என்றபடியே வெளியேறினார் பெரியசாமி .
பொன்னுதாயி மகளை பற்றியும் அவளின் வீட்டை பற்றியும் விசாரித்து விட்டு . தன் வீட்டுக்கதையை கூறிக்கொண்டிருந்தாள். மதிய உணவு உண்ணும் நேரம் வேலை முடிந்து வந்தார் பெரியசாமி.
நெடுநாளுக்கு பின் மகளோடு அமர்ந்து உண்பதால் ஆர்வமானார் பெரியசாமி.
தும்பை பூ போல வெண்ணிற சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி அவித்த முட்டையையும் வைத்து இருவருக்கும் பரிமாறினார் பொன்னுதாயி .
முருங்கைக் சவைத்து துப்பியவாரே நாளைக்கு பத்திரம் முடிஞ்சுரும் மா நீ கூட ஒரு எட்டு வா தாயி .கையோட பணத்தையும் வாங்கிட்டு வந்துடலாம்.
சரிப்பா. .,
மாலை நேரம் தன் வீட்டுக்கு அருகில் உள்ள வாய்க்காலுக்கு வந்தாள் மல்லி. அங்கு விளையாடிய சிறுவர்களை வேடிக்கை பார்த்தபடியே அருகில் இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.
மல்லி வீட்டில் இருந்து சில அடி தூரம் தான் அந்த வாயக்கால், அந்த வாய்க்காலோட ஒரு கரையில பெரிய ஆலமரம் ஒன்னு இருக்கும். இருக்கா இல்லையானு சந்தேகபடுறமாதிரி ஒரு முழ வேஷ்டிய இடுப்புல கட்டிக்கிட்டு ஆலமரத்தடியில செவனேனு உட்காந்திருப்பாரு ஒரு பிள்ளையாரு. ஆனா அந்த ஊருக்கே முதன்மையானவர் அவர் தான் .எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் அந்த ஊர் மக்கள் இந்த பிள்ளையாரை வணங்கிய பின் தான் தொடங்குவார்கள். ஒரு நல்லநாள் பொல்லநாள் வந்த தான் அந்த பிள்ளையாருக்கே ஒரு புதுத்துணிகிடைக்கும்.
இந்த வாய்க்கால்ல குளிக்க வாரவுக குளிச்சு முடிச்சதும். இந்த பிள்ளையார மூணு தரம் சுத்திவந்து அவரு காலு பக்கத்துல நெலிஞ்சு போன கிண்ணத்துல இருக்கிற திருநீர பூசிட்டு போகனும் என்பது அங்க எழுதப்படாத விதி.
வாய்க்காலுக்கு இந்த பக்கம் ஊரு அந்த பக்கம் வயக்காடு. இந்த ஊரையும், வயக்காட்டையும் இணைக்கிறதுக்கு அனுமார் லங்கைக்கு கல்லால போட்டது மாதிரி ஒரு கல்பாலம் இருக்கும்.
நல்ல தடியான நீள் செவ்வக வடிவத்துல இருக்குற பதினொரு கல்ல வச்சு நேர்க்கோடா பாலத்த போட்டுருப்பாக. ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு பாலம் கணக்கு.அந்த கல்லுல இருந்து குதிச்சு குளிக்கிறதே ஒரு அலாதியான சுகம் தான். ஒன்னுல இருந்து அஞ்சாம் பாலக்கல் வரைக்கும் குதிக்க தான் சின்ன பசங்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் அனுமதி அதுக்கு மேல இளவட்ட பசங்களும், ஆம்பளைங்களும் தான் குதிப்பாக அங்க ஆழமும் அதிகம்,இழுவையும் கூட இருக்கும் அதனால சின்னபுள்ளைகளயோ, பெண்பிள்ளைகளையோ யாரும் குதிக்க விடமாட்டாக.
வாய்க்கால்ல துணி துவைக்க வசதியா ஆம்பளைங்களுக்கு தனியா, பொம்பளைங்களுக்கு தனியானு தனிதனி படித்துறை எதிர் எதிரா இருபுறமும் இருக்கும். ஊருல இருக்குற நண்டு சிண்டுல தொடங்கி கெழடு கட்டைங்க வரைக்கும் குளிப்பாட்டி அழகுபாத்தது இந்த வாய்க்கால் தான் .
இந்த வாய்க்காலும், பிள்ளையாரும் மல்லியோட வாழ்க்கையில இரண்டரக் கலந்தது. இந்த பிள்ளையார அவள் முதல் முதலாக சந்தித்தது அவளின் அப்பாவோடு குளிக்க வந்த சமயத்தில் தான்.
அப்போ மல்லிக்கு ஒரு ஐந்து வயசு இருக்கும் .வாய்காலுக்கு குளிக்க கிளம்புன அப்பா காலை புடிச்சுகிட்டு போகவிடாம அழுதா வேற வழியில்லாம அவரும் அவளையும் கூட்டிக்கிட்டு குளிக்க வந்தாரு.
குளிச்சு முடிச்சதும் பிள்ளையார மூணு சுத்து சுத்தி வந்து நெத்தில பட்டைய போடவும் மல்லிக்கு அப்படி ஒரு சிரிப்பு. அன்றிலிருந்து மல்லிக்கு வாய்க்காலுக்கு வருவது தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது.
மல்லிக்கு வாய்க்காலுக்கு வாரதவிட அந்த பாலத்துமேல நடக்குறதுன அம்புட்டு பிரியம். கோடை காலத்துல ஏழைவீட்டு அரிசி பாணை மாதிரி தரைதட்டி நிக்கிற தண்ணீர். மழைகாலம் வந்துட்டா போதும் புதுசா கல்யாணம் ஆன சோடி கணக்கா பாலத்த தழுவியபடி ஓடும். அப்படி ஓடும் போது பாலத்து நடக்குறதே தனி சுகம் தான். தண்ணீ பாலத்துல முட்டிமோதி சலசலனு ஓடும் போது பாலத்துல உட்காந்து தண்ணிக்குள்ள கால ஆட்டிக்கிட்டு மணிக்கணக்கா வேடிக்க பாக்கலாம் அதோட அழக. தண்ணி முட்டி போகும்போது பலத்துல உட்காரவே மல்லி வாய்க்காலுக்கு வருவா.
அவ அஞ்சாங்கிளாசு போற வரைக்கும் அப்பா,அம்மா ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் கூட தான்வருவா. அதுக்கு அப்பறம் தனியாவே வந்து போக ஆரம்பிச்சா மல்லி. நாளு சொம்பு தண்ணி பிடிக்கிற அலுமினிய வாளியில பள்ளிக்கூட யூனிபார்மை எடுத்துக்கிட்டு, 505 பார் சோப்புதூக்கிக்கிட்டு வாய்க்கால பாக்க வருவந்தா. பாலத்த கடந்து எதிர் பக்கம் இருக்குற கரைக்கு வந்து மணல்கிடக்கும் பகுதியில் ஒரு சலவைக்கல்லுல வாளிய வச்சா. ஏற்கனவே துணி தொவைக்க வந்தவுக பெரியமனசு பண்ணி கொண்டுவந்த சோப்புல மீதமான துண்டு சோப்ப அந்த கல்லுலையே வச்சு தேய்ச்சு அழுத்திவிட்டு போயிருக்க அதுலையே தன்னோட துணிகளை வச்சு தேய்க்க ஆரம்பிச்சா மல்லி.
அந்த நேரம் பொத்துனு ஒரு சத்தம் திரும்பி பாத்தா. அங்க முருகன் பத்தாம்பாலத்துல இருந்து தண்ணிக்குள்ள குதிச்சிருந்தான். அத பாத்தவ வச்சக்கண்ணு வாங்காம அங்கையே பாத்துட்டு நின்னா. எப்படியாது இந்த பாலத்துல இருந்து குதிச்சு குளிக்கனுங்கிறது அவளோட ஆசை. ஆனா இதுவரை பொம்பள பிள்ளைக யாரும் அதுல இருந்து குதிச்சது இல்ல. முக்கு வீட்டு சரஸ்வதியக்க மட்டும் ஒரு தடவ ஒம்பதாம் பாலம் வரை குதிச்சு குளிச்சிருக்காக அதுவும் அவ சமையிரவரைக்கும் தான் அதுக்கு பிறகு அவ ஆத்த பாலத்துல குதிக்கக்கூடாதுனு சொல்லவும். அவளும் பாலம் பக்கமே போறதில்ல. படித்துறையில தொவச்சு குளிச்சிட்டு போயிருவா. அவ மட்டும் இல்ல இங்க இருக்குற அத்தன பொம்பள பிள்ளைகளும் வயசுக்கு வர்ர வரைக்கும் தான் பாலத்துல இருந்து குதிக்க அனுமதி உண்டு. வயசுக்கு வந்துட்ட படித்துறையில தொவச்சி குளிச்சிட்டு போயிடனும் .இப்படி காலங்காலமா ஆம்பளைக கட்டுப்பாட்டுல இருந்தது அந்த பாலக்கல்லு.
“அடியேய் எவடி இவ வந்தமா குளிச்சமானு இல்லாம பாலத்த பாத்து வாயப்பொலந்துட்டு இருக்குறவ” என்று அருகில் இருந்த தெய்வானை பாட்டி சொல்லவும்.
“எனக்கும் அங்க இருந்து குதிக்கனும்னு ஆசையா இருக்கு ஆச்சி”.
“அது சரி இன்னைக்கோ, நாளைக்கோ வயசுக்கு வர்மாதிரி இருக்க இதுல ஆம்பள புள்ளைங்க கூட சேர்ந்து குதிக்க போறியாக்கும். பேசாம இங்கன ரெண்டு முங்கு போட்டுட்டு வீட்ட பாக்க போவியாத விட்டுட்டு பாலத்துல இருந்து குதிக்கேன்கிட்டு பினாத்துறவா”என்றபடியே தாத்தாவின் கைலியை மார்பு வரை உயர்த்தி கட்டிக்கொண்டு குளிக்கலானாள் தெய்வானை பாட்டி.
“ஆச்சி நீ வேணா பாருநானும் பத்தாம் பாலத்துல இருந்து ஒரு நாள் குதிக்கதான் போறேன்.”
“பாத்துடி ஆத்தா நீ சொன்னது மட்டும் உங்காத்த காதுல விழுந்ததுனா உங்கால ஒடச்சி உட்காரவச்சிருவா பாத்துக்கோ”.
” அட போ ஆச்சி, நா குதிக்கிறத நீ பாக்க தான் போற” என்றபடியே
குளித்து முடித்து மீண்டும் பாலத்தின் வழியே நடந்து மறுகரைக்கு வந்த மல்லி பிள்ளையார் முன் வந்து நின்றாள். பத்தாம் பாலத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கோரிக்கையை வழக்கம்போல வைத்துவிட்டு வீட்டை நோக்கி சென்றாள்.
மல்லி ஏழாப்பு படிக்கும் போது காலுல கெடந்த வெள்ளிக்கொலுசுல ஒண்ணு குளிக்கிறப்ப கழண்டு வாய்கால் விழுந்துடுச்சு. குளிச்சி முடிச்சிட்டு வீட்டுக்கு போனவ கால பொன்னுதாயி பாத்துட்டு கொலுசு எங்கனு கேக்கவும் தான் கொலுச தொலைச்சதையே பார்த்தா மல்லி . அம்புட்டு தான் அன்னைக்கு பொன்னுதாயிகிட்ட இருந்து பெரியசாமியால கூட மல்லிய காப்பாத்த முடியல அப்படி ஒரு அடி. மறுநாள் வாய்காலுக்கு வந்தவ பிள்ளையாரு கூட சண்ணடைபோட்டு ஆறேழு நாளு பேசாம கிடந்தா.
கோடை விடுமுறைவிட்டதும் வாய்க்காலே ஜேஜேனு இருக்கும் கூட்டம் அலைமோதும். ஆட்கள் வர்ரதும் போறதுமா இருப்பாங்க சுத்தி இருக்கிற எல்லாத்தெருல இருந்தும் ஆட்கள் வருவாங்க. அப்படி தான் அன்னைக்கும் ஆட்கள் நிறைஞ்சி இருந்தது வாய்க்கால்ல.வடக்குத்தெருல இருந்து குளிக்க வந்த நாலு இளவட்ட பசங்க பத்தாம் பாலத்துல இருந்து குதிச்சானுங்க . குதிச்ச நாலு பேருல மூணு பேருமட்டும் தான் தண்ணிக்கு மேல வந்தானுங்க. ஒருத்தனக்கானும்.
தண்ணிக்குள்ள மூச்சபிடிச்சிட்டு இருக்கானு ஆரம்பத்துல நினைச்சாங்க மத்தவங்க. ஆனா பத்து நிமிஷம் தாண்டியும் ஆளக்கானும்னதும் பயந்துபோயி கத்த ஆரம்பிச்சாங்க.
” மைதீனு …,டேய் மைதீனு.., ஏலேய் வாடா” னு கத்திக்கிட்டே உள்முங்கு அடிச்சு பாத்தானுங்க ஆனா ஆளக்கானும்.
வயக்காட்டு சோலிய பாத்துட்டு வாய்க்கால்க்கு வந்தங்க சிலர் பயலுக இப்படி பரிதவிக்கிறதப் பாத்துட்டு என்னனு விசாரிச்சாங்க.
கூடவந்தவன காணும்னு சொல்லவும் ஆளுக்கு ஒரு பக்கமா குதிச்சு தேட ஆரம்பிச்சாங்க ஆனா கண்டுபிடிக்க முடியல.
மூனு பயலுகளும் கரைல நின்னு தேம்பித்தேம்பி அழுதானுங்க. யாரு என்னனு விசாரிச்சதுல வடக்குத்தெரு பஷீர் வீட்டு பையனு தெரியவும் தகவல் சொல்லிவிட்டாக. தகவல் தெருமுழுக்க பரவ தெருவே வாய்க்காலுல தான் கூடி நின்னுச்சு.
பிள்ளைய பெத்தவங்க அழுதுக்கிட்டே ஓடிவந்தத பாக்கையில ஜனம் பூர வருத்தப்பட்டுச்சு.
இனி நாம தேடுன வேலைக்கு ஆகாதுனு முடிவுக்கு வந்த தெருக்காங்க. போலீஸ்க்கு போனாங்க. அவசர அவசரமா ஃபயர் சர்வீஸ் ல இருந்து ஆட்கள் வந்தாங்க. வாய்க்காலுல இறங்கி தேடத்தொடங்கினாங்க பயல எப்படியாது காப்பாத்திடனும்னு மொத்த தெருவும் பிள்ளையார்கிட்ட வேண்டிக்கிட்டு.
நேரம் போனதே தவிர பையன கண்டுபுடிச்ச மாதிரி தெரியல.பத்தாம் பாலத்துல கசமிருக்கு ,போதாக்குறைக்கு அதுல இழுப்பும் அதிகமா இருக்கும். இழுப்புல மாட்டுனா நம்மல எங்க கொண்டு போகும்னு யாராலையும் கணிக்க முடியாது. இருட்டுற வரைக்கும் பையனத்தேடினாங்க இதுக்கு மேல தேடமுடியாது. வெளிச்சம் இல்லை இனி நாளைக்கு காலைல வந்து பாக்குறோம்னு சொல்லிட்டு ஃபயர்சர்வீஸ் ஆளுங்க போயிட்டாங்க.
பிள்ளைய பெத்தவுகளுக்கோ பையன கண்டுபிடிக்காம போகமனமில்லை வாய்க்கால்லையே இருந்தாக. தெருக்காரங்க எல்லாரும் சேர்ந்து தான் ஆறுதல் சொல்லி காலைல வரச்சொல்லி அனுப்பிவச்சாங்க.
விடிஞ்சும் விடியாத காலைநேரம் ஊர் முழுக்க அந்த வாய்க்கால்ல தான் நின்னுச்சு கூடவே நிறைய போலீஸ்காரங்களும் இருந்தாங்க. மல்லியோட அப்பா அவசர அவசரமா மேல் சட்டையத்தூக்கி போட்டுக்கிட்டு வாய்க்கால பாக்க ஓடுனாரு.
” அப்பா ஏன் மா இப்படி ஓடுறாங்க” என்று கண்ணைக் கசக்கிய படியே வந்தாள் மல்லி.
“நேத்து விழுந்த பையன கண்டுபிடிச்சிட்டாங்களாம் அதான் அப்பா பாக்கபோறாரு” என்றாள் பொன்னுத்தாயி.
மல்லிக்கும் ஆர்வம் தாங்கமால் ஒடினாள் வாய்க்காலுக்கு. வாய்க்காலௌ தெரியாத படி மக்கள் கூட்டம் தான் அங்கு சூழ்ந்து இருந்தது. கூட்டத்தை விலக்கியபடி மல்லி உள்ளே நுழைந்தாள். உடல் ஊதியபடி தேகம் வெளுறிய நிலையில் சடலமாக கிடந்தான் மைதீன். பார்த்ததுமே மல்லிக்கு பயம் வந்தது வீட்டை நோக்கி ஓடிவந்தாள்.
நீரின் இழுப்பை எதிர்கொள்ள முடியாமல் அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்ட மைதீன் வாய்க்காலில் இருந்த மதகில் மாட்டடிக்கொண்டான். வயல்வெளிக்கு நீர் பாய்க்க காலையில் சென்றவர்கள். உடல் ஊதியபடி நீரில் மிதந்த மைதீனின் உடலைக்கண்டு போலீஸ்க்கும், அவனின் பெற்றோர்கும் தகவல் கொடுத்தனர்.
மைதீனின் உடலை தூக்கிக்கொண்டு சென்றனர். அந்த தெருவில் இருந்த மொத்த சனமும் தங்கள் வீட்டு துக்கமாக அனுசரித்து நின்றது. அடுத்துவந்த சால மாதங்களாக அந்த வாய்க்காலுக்கு குளிக்க போக யாருக்கும் விரும்பவில்லை. குறிப்பாக இளவட்ட பசங்களுக்கு போக அனுமதி மறுக்கப்பட்டது.
வாய்க்காலின் கவலையைப் போக்க மழைவந்தது. மழை நீர்வரத்தால் வாய்க்காலில் நீரின் அளவும் கூடியது. பாலத்தை தொட்டபடி சலசலத்து ஓடிய வாய்க்காலில் மூக்கையா தாத்தாதான் முங்கி குளித்தார். இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு தான் கட்டியிருந்த வேஷ்யை சலவைசெய்தார் , வாய்க்காலின் மேல் விழுந்த கொலைப்பழியையும் தான்.
மூக்கையாவின் வருகையால் வாய்க்கால் புத்துயிர் பெற்றது. மீண்டும் இயல்புக்கு வந்த வாய்க்காலில் மக்கள் கூட்டம் வழமைபோல் வந்தது.
மல்லியின் தோழியான மரகதத்துடன் வாய்க்காலுக்கு குளிக்க வந்தாள் மல்லி . நீண்ட நாட்களுக்கு பின் மல்லி மீண்டும் வாய்க்காலில் கால் நனைக்க அவளின் கண்களோ அந்த பத்தாம் பாலத்தையே சுற்றிசுற்றி வந்தது.
“இந்தா டி உன் நினைப்பெல்லாம் ஓரங்கட்டு. இனி நீயே நினைச்சாலும் உன்னோட ஆசை நிறைவேறாது” என்றாள் மரகதம்.
“ஏன்டி இப்படி சொல்லுற..”
“அந்த பய செத்தது மறந்துட்டோ உனக்கு” என்று சற்று ஏகத்தாளமாகவே கேட்டாள் மரகதம்.
“அவனுக்கு நேரம் சரியில்லை அதுக்காக பாலத்த ஏன்டி குறைசொல்லுற” .
“உள்ளத சொன்னதுக்கு குறைசொல்லுறேனு பழிபோடுறியே”
“இதுல இருந்து குதிச்சு உசிரோட இருக்குறவங்க பாரு அதவிட்டுட்டு ஒருத்தன் செத்துட்டான்னதும் பாலத்துமேல பழிபோடக்கூடாது.”
” நீ என்ன வேணா சொல்லு அந்த பய விழுந்து செத்து ஆறுமாசம் தான் ஆயிருக்கு அதுக்குள்ள நீ போயி அதுல இருந்து குதிச்சனு மட்டும் உங்காத்தாலுக்கு தெரிஞ்சுது உன்ன கொன்னேபுடும் பாத்துக்கோ”.
“அதெல்லாம் தெரிஞ்சா தான, நாம சொல்லாம தெரியாதுல்ல. நீயும் சொல்லாத நானும் சொல்ல மாட்டேன். சரியா” என்றபடியே பாலத்தை நோக்கி நடக்கலானாள் மல்லி.
“ஏய் எனக்கு என்னமோ பயமா இருக்குடி சொன்னா கேளு வேண்டாம் டி ஏதாச்சும் பிரச்சனையாகிடப்போகுது”.
“ஆனா எனக்கு தானடி ஆகும் நீ ஏன் பயப்புடுற”
“ஏய் ! ஒன்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க . கூடவந்த பாவத்துக்கு என்னதான் எல்லாரும் வையிவாக. ஒழுங்க நான் சொல்லுறத கேளு வாடி போகலாம்.”
”முடியாது டி நான் இன்னைக்கு இதுல இருந்து குதிக்கத்தான் போறேன்” என்றபடியே பாலத்தில் ஏறினாள்.
முதல் கல், இரண்டாம் கல்என்று ஒவ்வொரு கல்லாக கடந்து பத்தாம் கல்லில் வந்து நின்றாள் மல்லி. மரகத்திற்கு இதயம் இருமடங்காக துடித்தது.
“வேண்டாம் டி சொன்னா கேளு நா உங்க அம்மாக்கிட்ட சொல்லிட்டுவேன்” என்று பயமுறுத்தி பார்த்தாள். அப்படியாவது தன் தோழி முடிவை மாற்றிவிடுவாள் என்று எண்ணி. ஆனால் மல்லி தன் முடிவில் உறுதியாக இருந்தாள். பத்தாம் பாலத்தில் இருந்து வாய்க்குலை பார்த்தாள். காற்றின் வருடலுக்கு அலைஅலையாய் நதியின் மேல் அசைந்திட வாடைக்காற்று அவளின் உடல் எங்கும் பரவியது. வலதுபுறம் திரும்பி பிள்ளையாரை பார்த்தாள். ஒரு சின்ன சிரிப்போடு மீண்டும் திரும்பி வாய்க்காலைக்கண்டவள். குதிக்க ஆயத்யமானாள். பயத்தில் மரகதம் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பொத் என்ற சத்தம் வந்தது கண்ணைத்திறந்து பார்த்தாள் பத்தாம் பாலம் மட்டும் இருந்தது மல்லி அங்கு இல்லை.
மல்லி தண்ணிக்குள் விழுந்த அதிர்வால் நீரின் மேற்பரப்பில் அலைஅலையாக வட்டவடிவத்தில் அசைந்தது.
நீரின் உள்ளே மல்லி செல்ல செல்ல அவளின் கண்கள் பிரகாசமானது. விழுந்த வேகத்தின் வாய்க்காலின் அடிவரை சென்றாள். பாசிசெடிகளும், அதில் வாழும் மீன்களும் மல்லியின் வருகையில் சற்றே பயந்து அசைந்து கொடுத்தது. சிறிதும் பெரிதுமாக கிடந்த கூழாங்கற்களும் , மணல் திட்டுகளுமாக இருந்த ரம்மியமான சூழலில் ஓர் பறவை பறக்க தன் சிறகை விரிப்பது போல கைகளை அசைத்து நீந்த தொடங்கினாள்.
நேரம் கடந்தது மல்லி தண்ணீருக்கு மேல் வரவில்லை மரகத்திற்கு பயம் தொற்றிக்கொண்டது.
” மல்லி, மல்லி ஏய் மல்லி வந்துருடி எனக்கு பயமா இருக்கு வந்துருடி என்று கத்தியபடியே பாலத்தை நோக்கி ஓடினாள் மரகதம். பத்தாம் பாலத்திற்கு வந்தவள் மீண்டும் கத்தினாள். மல்லியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மரகதம் பயத்தின் எல்லைக்கே சென்றவள் கதறி அழத்தொடங்கினாள்.
நடக்கத்தொடங்கிய நாள் முதல் ஒன்றாக சுற்றித்திரிந்தவர்கள். இருவரையும் தனிதனியாக பார்ப்பதென்பது அபூர்வம். இணைபிரியாத தன் தோழியை இன்று இந்த பாலம் பிரித்ததை மரகதத்தால் தாங்க முடியவில்லை. பாலத்தில் மண்டியிட்டு அழுதாள் ” வந்துடு புள்ள எனக்கு பயமா இருக்கு , நா உங்கம்மைகிட்ட ஒன்னும் சொல்லமாட்டேன் டி வந்துடு “
“நெசம்மா நீ எங்கம்மைகிட்ட சொல்ல மாட்ட தான” என்ற குரல் மரகத்தின் பின்புறம் கேட்டது திரும்பி பார்த்தாள் பாலத்தின் மறுபுறம் அதன் விழிம்பை பிடித்தபடி நீருக்குள் மிதந்துகொண்டு இருந்தாள் மல்லி.
கண்களில் கண்ணீர் முட்டிய படியே ”செத்தநாயே உன்னைய என்னசெய்யிறேனு பாரு” என்றபடியே பாலத்தை பிடித்திருந்த மல்லியின் கையை எடுத்து விட்டாள் மரகதம்.
“எவடி இவ இம்புட்டு நேரம் என்ன காணும்னு அழுத இப்ப என்னடானா தண்ணிக்குள்ள தள்ளி கொல்லப்பாக்குறவ” என்றாள் மல்லி
“ஆமாடி நான் உன்ன காணும்னு அழுதுட்டு இருந்தா நீ என்ன அழவிட்டு வேடிக்கை பாக்குற . உன்ன கொன்னாக்கூட தப்பில்லை எருமை. இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் நீ வரம இருந்திருந்த நான் பயத்துலயே செத்துருப்பேன் லூசு.
00

ரா.சண்முகவள்ளி
ஊர் – செங்கோட்டை

