பசி எல்லா உயிருக்கும் பொது. சரியான நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை எனில் சோர்வும் மயக்கமும் வந்துவிடும் அப்படித்தான் வெள்ளிக்கண்ணுக்கும் அன்றைக்கு இருந்தது. தன் இறக்கையை வேகமாக அசைத்து மயக்கம் வந்துவிடாமல் உடலை ஒருவாறு சரி செய்து கொண்டு எறும்புப் புற்றுக்கு அருகில் கிடந்த ஒரு தீப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தது.

“என்ன வெள்ளிக் கண்ணு?

பயங்கர மகிழ்ச்சியா இருக்க போல, என்னைக்கும் இல்லாத சுறுசுறுப்பு இன்னிக்கு வந்துருக்கு” என ஒருவாறு பழிப்பது போல ஏழு எறும்புகளில் ஒரு எறும்பு வாயில் வைத்திருந்த உணவைக் கீழே வைத்துவிட்டுக் கேள்வி எழுப்பியது.

“அடே எறும்பா உனக்கு என்னைப் பார்த்தா மகிழ்ச்சியா தெரியுதாடா? பாவி! நானே கொல பசில இருக்கேன்டா. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சி ” என்று வெள்ளிக்கண்ணு சொன்னதுதான் தெரியும் எறும்பு வானத்திற்கும் பூமிக்குமா எம்பிக்குதித்துச் சிரித்தது.

எறும்பு எம்பிக்குதிக்கும் போது ஈ அமர்ந்திருந்த தீப்பெட்டியில் முட்டிக்கொண்டது. திடிரென பூகம்பம் வந்ததைப் போலத் தீப்பெட்டி அங்கும் இங்கும் ஆடியது விர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு மேலே பறந்து எழுந்து உயர போய் மீண்டும் வந்து அதே தீப்பெட்டியின் மீது அமர்ந்தது வெள்ளிக்கண்ணு.

“ஐயோ அப்பா அம்மா நல்லா இடிச்சுக்கிட்டேனே! ஐயோ கால் வலிக்குதே… இந்த மனுசனுங்க ஏந்தான் இப்படித் தான் பயன்படுத்துற எல்லா பொருளையும் தேவை இல்லனா இப்படிக் கண்ட இடங்கள்ல போடுறாங்கனே தெரியலையே” என வாய்விட்டுத் துயரத்தை வெளிப்படுத்துச்சு அந்த எறும்பு.

“நண்பா என்ன ரொம்ப அடிபட்டுச்சா வலிக்குதா அடிப்பட்ட இடத்தைக் காட்டு” என்றதும் எறும்பு தன் காலை நீட்டி அடிப்பட்ட இடத்தைக் காட்டியது.

எறும்பின் மீது அமர்ந்து அடிப்பட்ட இடத்தில் தன் இறகால் வருடியது வெள்ளிகண்ணு.

“நண்பா வலி இப்போது குறைந்திருக்கிறது. உன் சிறகில் அப்படி என்ன மாயம் இருக்கிறதோ தெரியவில்லை. இத்தனை மாயம் நிறைந்த சிறகையா நீ அப்படியே பயன்படுத்தாமல் வைத்துக் கொண்டு சோம்பலாகவே வாழ்கிறாய்” என்று கேட்டது எறும்பு.

இங்கே நடப்பதை எல்லாம் இரவு மழையில் கரைந்த தன் புற்றைச் சரிசெய்து கொண்டிருந்த ஓர் எறும்பு பார்த்துக்கொண்டே “வெள்ளிக்கண்ணுக்கு என்ன கவலை நம்மைப்போல வீடிருக்கா என்ன? அது போய் அமரும் இடம் எல்லாம் அதனோட வீடுதான். அதனாலதான் அது எதைப்பற்றியும் கவலைபடுவதே இல்லை. நேத்து பேஞ்ச மழையிலயே நம்ம வீடு பாதி கரைஞ்சுப் போச்சு இதை சரி செய்யறதுக்குள்ள எனக்கு முதுகுவலியே வந்துடுச்சி. அப்பப்பா நேத்து இரவுப்பூரா மழை இன்னிக்குப் பகல் பூரா வும் இப்படி வெயில் வாட்டி எடுக்குது” எனக் கூறிக்கொண்டே தன் நெற்றியில் வழியும் வியர்வையை வழித்துப் புற்றுமண்ணின் மீதே ஊற்றியது. புற்று மண் எறும்பின் வியர்வையில் மேலும் ஈரமாயிற்று.

உள்ளிருந்து ஒரு எறும்பு வாயில் உணவோடு தலை நீட்டவும் பணி செய்த எறும்பு ஊற்றிய வியர்வையில் சில  துளி தெறிக்க

“அச்சோ இந்த வெயில் அடிக்குது ஆனா மழையும் பெய்யுதே” என வியர்வையை மழை என நினைத்து மீண்டும் புற்றுக்குள் ஓடி அமர்ந்து கொண்டு “மழை மழை” எனக் கத்தத் தொடங்கியது. உள்ளிருந்த எறும்புகள் உள்ளிருக்கும் உணவுகளைப் பாதுகாக்கத் தயாராகிறது. அற்குள் வெளியே இருந்த எறும்பு “அடே முட்டாள் உனக்கென்ன மழைக்கும் வியர்வைக்கும் வித்யாசம் தெரியாதா? வெளியே வாங்க !” என்று கத்தியது

“ஏழு நண்பர்களா? வெளியே வாங்கப்பா இந்த உலகம் மழையால் நனைந்து எத்தனை அதிசயத்தைச் சுமந்திருக்கிறது என்று பாருங்கப்பா. அட்டா எத்தனை பசுமை, மரமெல்லாம் மழை நீரில் குளித்து, குடித்து மீதம் உள்ள நீரைத் தன் இலை வழி முத்து முத்தாக அல்லவா சிந்துகிறது” என்று வெள்ளிக்கண்ணு குரல் எழுப்பியது.

புற்றுக்குள்ளிருந்த எறும்புகள் தன் வாயில் உணவோடு வெளியே வர வெளியே நின்ற எறும்புகளும் உள்ளே சென்று உணவை எடுத்துக். கொண்டு வெளியே வந்து வட்டமாக நின்றன.

நடுவில் வெள்ளிக்கண்ணு கொடிய பசியோடு இறகுகளை அசைத்துக் கொண்டு அமர்ந்திருக்க எல்லா எறும்புகளும் உணவினை வெள்ளிக்கண்ணின் பசி போக்க அதன் அருகில் கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்புகின்றன.

வானத்திலிருந்து சூரிய ஒளி ஏழு எறும்புகளின் மீது பட்டு ஏழு வண்ணங்களாக எதிரொளிக்க அந்த எழு வண்ணங்களும் வானவில் போலக் காட்சி தந்தது. “உழைப்பிற்கும் ஒற்றுமைக்கும் மட்டும் நாங்கள் உதாரணம் இல்ல, கொடுப்பதற்கும் நாங்கள் தான் உதாரணம்” என ஏழு எறும்புகளும் கூற வெள்ளிக்கண்ணு பலநாள் பசியைப் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு தன் இறகுகளை அசைத்து அமர்ந்திருந்தது.

மகா.இராஜராஜசோழன்

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி. பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம். வட்டம் – சீர்காழி. மாவட்டம் – மயிலாடுதுறை.

இணைய இதழ்களிலும், அச்சிதழ்களிலும் எழுதி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *