‘கெட்ட வார்த்தைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத வேண்டும்’ என்று அவள் சொல்லிய போது விளையாட்டாக ஏதோ சொல்கிறாள் என்றே அதுவரை நினைத்திருந்தான். ஏனென்றால் அவளுடனான அறிமுகம் சமீபத்தில் தான் நிகழ்ந்திருந்தது. அவள் கூறும் பல விஷயங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இல்லையென்றாலும் அவளுடனான உரையாடலைத் தொடர்வதற்கு என்ன காரணம் இருக்குமென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். ஒன்று விளையாட்டாக சொல்லப்போனால், அவள் கூறும் சம்பவங்களில் அவன் சுற்றியலைந்து அதை ரசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். மற்றொன்று அவன் கற்றறிந்த அரைகுறைத் தத்துவத்தின் படி அவளின் உடல் மீது கொண்டுள்ள ஆர்வம். இதைத் தவிர அவளை அவன் பின்தொடர பெரிய காரணிகளெல்லாம் இருக்காது.

உடல் ரீதியாக என்றாலும் அவள் அவனை விட பதினைந்து வருட காலத்தை முழுங்கியிருக்கிறாள். அவளின் மூப்பு அவனுடன் இருக்கும் போது புலப்படாது. இருவரும் ஒரே வயதுடையவர்கள் போல என்றே பார்ப்பவர்கள் அறிவர். அதை அவன் அவளுடன் விவாதிக்கவும் செய்திருக்கிறான். அவள் சிரித்துக் கொண்டே ‘தத்துவம் படிக்கிறத கொற’  என்பாள். அன்று தான் அவள் கெட்ட வார்த்தை பற்றியான ஒரு புத்தகத்தை எழுத விருப்பம் தெரிவித்திருந்தாள். இதற்கு முன் அப்படி எழுதியவர்களின் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டு விவாதிக்கத் தொடங்கினாள். அவைகள் பெரும்பாலும் சொல்லகராதி போல உள்ளது எனவும் அவ்வார்த்தைகளில் பெண்களின் பங்கு சற்றும் இல்லை என்பதைக் கூறினாள். அவள் சொன்ன உதாரணங்கள் எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. ஏனென்றால் அவனுக்கு தெரிந்தது உலகளாவிய கெட்ட வார்த்தைகள் தான். அதில் அவள் கூறியது போல பெண்களின் பங்கே இல்லை என்பதை உணர்ந்தான். நேரம் கூடக் கூட அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவளின் உடல் மொழியினைக் கவனிக்கத் தொடங்கியிருந்தான். அவளின் நினைவுகளில் சுழலும் சம்பவங்களை ஓரளவு கேட்டவனாக அவளுடைய உடல் அதற்கு தகுந்தது போலத் தன்னை வெளிப்படுத்துவது நன்றாகத் தெரிந்தது. அவளை அறியாமல் அவள் எவ்வளவு பெரிய மன உளைச்சலில் இருக்கிறாள் என்பதை அவனால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. ஏனென்றால் அதிலிருந்து மீண்டு வந்தவனே அதை தெளிவாக கவனித்திட முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தவனை, அங்கு அவளின் உடல் மொழிகள் நினைவுபடுத்தியது. இப்படியாக மன உளைச்சலில் இருக்கும் போது சற்றும் தெரியாது நாம் அதில் உலண்டு கொண்டிருக்கிறோம் என்று அதிலிருந்து மீண்டு வந்த பிறகே நம்மால் அதை உணர முடியும் என்பதை அறிந்திருந்தவனுக்கு அவளின் சொல்லில் வெளிப்படும் காயங்களும் அதற்குப் பின்னான சம்பவங்களுமே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க, அவள் பேச்சை இடை நிறுத்திவிட்டு அவள் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அதை சற்று நேரம் கழித்து சுதாரித்துக் கொண்டவனாக ‘சொல்லு’ என்று நிகழ் கணத்தினைப் பிடித்தான். சற்று சலிப்புடன் ‘நீதான் சொல்லணும்’ என்றாள். அவன் கவனச் சிதறல்கள் அனைத்தையும் அவள் அறிவாள். அவளுடையது மட்டுமில்லை அவனுடைய பின் கதைகள் அவளுக்கும் தெரியும். தான் மனஉளைச்சலிலிருந்து மீண்டு வந்ததாக நினைத்துக்கொண்டிருந்தவன் எவ்வளவோ முயன்றும் அவனுடைய பழைய கதைகளை அவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவனின் மருத்துவர் சொல்வார் ‘ அதிகம் தன்னைப் பற்றியும், தன் கடந்த காலத்து  கதைகளை மீண்டும் மீண்டும் விவரிப்பதே மனவுளைச்சலுக்கான முதல் அறிகுறி ‘ என்பார். ஏனோ அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவரின் வார்த்தைகளுக்கு வலுசேர்ப்பது போல அவனுடைய கதைகளை அவளுக்கு சொல்லியிருந்தான். முன்பு தன்னைக் காப்பற்றிக்கொள்ள வேண்டி சொன்ன கதைகளாக அவற்றை நினைத்தவன் இப்போது மற்றவர்களைக் காப்பாற்ற என்று ஒரே வட்டத்திற்குள் மாறி மாறி சமாதானம் ஆகிக்கொண்டான். அப்படியே அவளின் கதைகளுக்கு இணையாக அவளைக் காப்பாற்ற இவனுடைய கதைகளையும் அவளுக்கு தெரியப்படுத்தியிருந்தான்.

“நீதான் சொல்லணும்…” என்று நிறுத்தியவளுக்கு, என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் முழித்தவனுக்கு அவளே எடுத்துக் கொடுத்தாள்.

“பொண்ண பத்தி இல்லாம நாலு கெட்ட வார்த்த சொல்லு“ என்றாள்.

இப்படிதான் எதையாவது ஒன்றை அவன் மீது இப்போதெல்லாம் எறியத் தொடங்கிவிட்டாள். அவள் இதை முற்போக்கு மனநிலை கொண்டு தூக்கி எறிந்திருந்தாள் என்றாள். வரலாறு, தத்துவம், அரசியல், பண்பாடு என்று அவனைக் காத்துக் கொள்ள நிறைய இருந்தது. அவளோ அதைக் கேலியாக அவனின் மீது தூக்கி எறிந்தால். அது அவனின் முற்போக்கு அடிப்படைவாதத்தைச் சீர்குலைத்தது.

அன்று முழுவதும் அவளுடைய கேள்விக்கு விடை தேடி தலைவலி வந்தது தான் அவனுக்கு மிச்சம். அன்றாட பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள் அவனுக்குள் ஓடி விளையாடத் தொடங்கியிருந்தது. அவள் கூறியது போல ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவனுக்குத் தெரிந்த அறிஞர் பெருமக்கள், வரலாற்று ஆசிரியர்கள், ஊர் அகராதி என்று நீண்டாலும் அவர்கள் கூறிய அனைத்திற்கும் பின்னால் ஆணின் மனநிலையோ அல்லது பெண்ணின் உடலோ இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் இருக்கட்டும் நமக்கு வயதாகிவிட்டது இல்லையா சமூக மாணவர்களின் பேச்சுக்கு செவி மடுத்தால் இன்றைய தலைமுறையினரிடமிருந்து கிடைக்கும் என்று எதிர் பார்த்து பெரிய ஏமாற்றமே அவனுக்கு நீடித்தது. அவர்கள் துளியும் மாறவில்லை. பிரதி எடுத்து அதைப் பேசிக்கொண்டிருந்ததாகப்பட்டது. இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் அவனுக்கு மீண்டும் மனவுளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்று தோன்றியது. அவள் அடுத்த முறை ‘சொல்’ என்று கெடுவேறு விதித்து விட்டுப்போனதால் அவளைச் சந்திக்கும் நாளை தள்ளி போட்டுக் கொண்டே போனான்.

இப்படியான ஒரு செயலை ஒருத்தி மெனக்கெட்டு செய்ய வேண்டும் என்கிற மனநிலை எங்கிருந்து வந்தது. அவன் அவள் கூறிய கதைகளுக்கு செல்ல முற்பட்டுக் கொண்டேயிருந்தான். ‘தான் தற்கொலைக்கு பல முறை முயன்றதாக’ அவள் கூறியதுண்டு. அதற்கான பல கதைகளை தன் வசம் வைத்திருந்தாள். ஒவ்வொருமுறையும் அக்கதைகள் முடியும்போது, அவள் இயல்பாய் பயன்படுத்தும் வார்த்தை ‘உடலே கிடைக்கக் கூடாத அளவு உயரம் உள்ள மலை உச்சியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்‘ என்று சிரித்துக் கொள்வாள். பெரும்பாலும் அவளுடைய கதைகள் அவளின் உடலின் எடையைக் காட்டிக்கொண்டேயிருந்தது. அவ்வுடலிலிருந்து கழண்டு விழ எத்தனிக்கும் காட்சிகளாகவே அவைகள் அவனுக்கு புலப்பட்டது.

அவளுடைய கதைகளில் தன் இளமைப் பருவத்து நினைவுகள் எப்போதும் வந்து போகும். அவன் படித்த மேதைகள் அனைவரும் தங்களின் இளமை பருவத்திலிருந்து மேலெழுந்து வந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதுவே அவர்களின் ஆதார புள்ளியாகவும் விளங்கியிருக்கிறது. அதற்கு ஏற்றார் போல எக்கதைகளிலும் அவளுடைய இளமைப் பருவம் வந்துவிடும். அவள் சிதறல்களாகச் சொன்ன இளம்பருவத்துக் கதைகளை அவன் கோர்க்கமுற்பட்டான்.

வீட்டிலிருந்து வெளியேறுவதே அவளின் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது. வெளியேறியவள் மனிதர்களின் முகங்களை விடுத்து பட்டாம்பூச்சிகளின் பின் ஓடித்திரிந்து பாதைகளை உருவாக்கியிருக்கிறாள். வீட்டிலிருந்து அவள் எடுத்து வந்தது சிதறுண்டு கிடந்த கண்ணாடிகள் மட்டுமே. ஏனோ அதில் அடிக்கடி தன்னை பார்த்துக்கொள்வதை  வழக்கமாக வைத்திருந்திருக்கிறாள். அப்படியாகச் சுற்றித் திரியும் போது பாம்பின் மீது மட்டும் எப்போதும் பயம் அவளுக்கு, அதை மட்டுமே அவள் வெளியில் சீண்டவில்லை. மற்றவைகளை அவள் தொடு உணர்விலும் உரையாடல்கள் வழியாகும் ஒன்றிணைந்தாகச் சொல்லுவாள். நாட்கள் போகப் போக சில வகையான பாம்பிற்குள்ளும் உட்புகத் தொடங்கியிருக்கிறாள். கனவில் கூட மனிதர்களின் முகங்களிலிருந்து விலகியிருந்ததாகச் சொல்லுவாள். அப்படியாக அவளை மாற்றிக்கொண்டிருந்த வீட்டிலிருந்தே முதலில் வெளியேறுவது போல நினைத்துக்கொண்டாள். அதுவே ஆதி, அதிலிருந்தே அவள்மீது  அனைத்தும் நிகழ்த்தப்பட்டது என்பாள். வசையாக அவள் மேல் அனைத்தும் விழுந்தது. நல்லதும், கெட்டதுமாக. அவைகள் குறித்தான கதைகள் வேண்டாத ஒருவனிடத்தில் வெளிறிய மஞ்சள் சரடின் மூலமாக  இணைக்கப்பட்டு படுத்தது, அதிலிருந்து வெளிப்பட்ட குழந்தையை வளர்த்தது என்று சோக காவியங்களாக நமக்குத் தோன்றினாலும் அவைகளை அவள் கேலி செய்தே கடந்து வந்திருக்கிறாள். அப்போது அவள் கூறிய வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வருகிறது ‘ நீ தொலைந்து போய், உன்னை தேடாமல் இருந்திருக்கீறார்களா? அப்படியிருந்திருந்தால் உனக்கு பயமே போயிருக்கும்‘ என்பாள். ஆம் அவள் அங்கு பயமற்று சுற்றி திரிந்தால். முடிந்தளவு மரத்தின் உச்சியேறி தனது இல்லத்தினை பார்த்து சிரித்துக்கொண்டிருந்திருக்கிறாள். அங்கிருந்து தான் எடுத்து வந்த கண்ணாடிகளில் தன்னையும், உலகத்தையும் பார்த்துக் கொள்வது வழக்கம். இப்படியாக சிரிப்பதற்கு முன் அவள் மரம் ஏறியதைப் பற்றி சொன்னது நினைவுக்கு வருகிறது. உச்சியில் தெரியும்  நொங்கினை பார்த்து வியந்தவள் அதைச் சென்றடைய மேலேறத் தொடங்கிவிட்டாள். அவள் ஏறும் போது அவளுடைய மாரில் கீச்சிய பனை நரம்புகள் எதுவும் அவளைத் தடுக்கவில்லை. அவள் நொங்கினை சென்றடைந்தாள். அங்குதான் அவள் கதையை முதன்முதலாக நிறுத்தி வாய்விட்டு சிரிக்கத்தொடங்கினாள் ‘ ஏறிய நான் ..கீழ் ஆழத்தை அப்போதே கவனித்ததாக.’ ஆனால் அவள் எப்படி கீழ் இறங்கினால் என்று அதை முடிக்கவில்லை. இப்படி அவளுடைய கதைகளை ஒன்றிணைக்கப் போராடிக்கொண்டிருந்தான்.

எப்படி ஆரம்பித்த உறவாக இது இருக்கும், இது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்கிற லெளகீக கேள்விக்குள் இப்போது அவனது மனம் சென்றது. அது அவளுடைய கதைகளைக் கோர்ப்பதை விட சிரமமாக இருந்தது. உச்சி மரமேறி பார்த்துச் சிரிக்கும் பழக்கத்தை அவள் இன்றும் கொண்டிருப்பது ஆச்சரியம். அவனது அலுவலகப் பணி நிமித்தமாக அவளைச் சந்திக்க நேர்ந்தது. சிறிய காணொளியை அவளிடமிருந்து எடுத்து வர வேண்டும் என்பதே அவனுடைய வேலை. அதுவும் மழைக்காலத்தில் மரத்தைக் கையாளும் முறைகள் பற்றியும் அதில் வசிக்கும் பறவைகள் பற்றியும் அமைந்தது. அங்கிருந்து தொடங்கிய அறிமுகம், இன்று வெவ்வேறு தளங்களுக்கு சென்று கொண்டிருப்பதை உணரமுடிந்தது. ஏதோ அறிவுப் பெண்மணி என்று அறிமுகமாகியவள் இன்று அவள் எழுதப் போகும் புத்தகத்திற்கும் அந்நிகழ்விற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி. அவனுக்கு எத்தனை தூரம் தள்ளியிருந்து மனிதர்களுடன் நாம் பயணிக்கிறோம் என்று தோன்றியது. மீண்டும் மனதிற்குள் அவளின் வரிகளே ஓடியது ‘முதுமொழியானாலும் தமிழ் இலக்கணம் உடையது‘. அதை அவள் பன்முகத்தோடு அணுகுகிறாள். அவளருகில் அனைவரும் இயல்பாய் அறிவினிலும், அவள் உலகத்தின் விலங்காக இல்லை என்பதைக் காட்டி நம்மை சிறுமைக்குள் தள்ளிவிடுவது போல தோன்றும். ஆனால் அவனுக்கோ அவனைபற்றி நன்கு அறிந்திருந்ததனால் ஒரு பிரச்ச்னையும் அவளிடமிருந்ததில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருக்குள் நட்பும் கூடவே உடல் ரீதியாக சில முன்னெடுப்புகளும் இருவராலும் எடுக்கப்பட்டிருந்தது. அதை யார்மீதும் கைகாட்ட முடியாதபடி அமைந்ததற்குக் காரணம் இருவரும் என்றே நம்பினர். 

மறுபடி சந்திப்பதற்குள் அவளுடைய புத்தகத்திற்கு ஏதோ தன்னால் முடிந்த உதவியைச் செய்திட வேண்டும் என்கிற முடிவிலிருந்தவனுக்கு, நாட்கள் செல்லச் செல்ல அவனுடைய எண்ணத்திற்கு இணங்க எதுவும் நடக்கவில்லை. அவளிடம் போய் அப்படியாக எந்த வசை சொல்லையும் நான் பயன்படுத்துவதில்லை என்பதைச் சொல்வதில் எவ்வித தயக்கமுமில்லை. ஆனால் அதை இத்தனை நாட்கள் பல்வேறு விதமாக பலர் அவனுடைய செவிக்கு கொண்டுவந்திருந்தாலும், அருகிலிருந்து யாரோ ஒருவர் இப்படியாக உரைக்கும் போதே அதன் ஆழம் பிடிபடுகிறது. அவன் அதைக் கோர்த்து கவனிக்கத் தொடங்கிவிட்டான். ஆகையால் அவளிடம் ‘இல்லை’ என்று போய் சொல்லக் கூடாது என்கிற முடிவுக்கு நகர்ந்திருந்தான். ‘அப்படி எதுவும் வசைகள் இல்லையென்றால் என்ன? நாம் உருவாக்க வேண்டியது தான்.’

ஏதோ உச்சரிப்புக்குள்ளேயே அவனிருப்பதாக உடன்  பணிபுரிபவர்கள்  முழக்கமிட்டனர். அவர்களின் முழக்கங்கள் அவனின் எண்ணங்களை வெளிபடுத்தும் போது கேலிக்கையானது. குறிப்பாக ஆண் நண்பர்கள் சிரித்தால் பரவாயில்லை பெண்களுக்கும் அவனுடைய சிந்தனையையும் அதை எற்படுத்தியவளையும் நினைத்து பார்க்க கோமாளிகளாக தெரிந்திருக்கும் போல. அவர்கள் சிரித்தே அவனைக் கடந்தாலும் உருவாக்குவதில் கவனமாக இருந்தவன் அதை விடுவதாக தெரியவில்லை. அவன் மனதிற்குள், உருவாக்கப் போகும் வசைகள் எப்படியேனும் தவறு தானே என்ற வாதமும் இருக்க, அது ஆண்களை மைய்யப்படுத்தியிருக்கும் போதும் சுலபமாக ஆண்கள் பயன்படுத்தும் வசைகள் நாளடைவில் அவர்களின் பேச்சுக்களிலேயே குறையும் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது.

வரும் வாரம் சந்திக்கலாமென்று அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.  ஏனோ அது மேலும் அவனுடைய  தூக்கத்தை கெடுத்து பதட்டமடைய வைத்தது. அவனுடன் இதைச் சேர்ந்து எதிர்கொண்ட முந்தைய சிந்தனையாளர்களும் அவனைக் கைவிடுவது போலத் தோன்ற அவன் அந்த நாளை நினைத்துப் பயப்படத் தொடங்கிவிட்டான்.  

அவளது இல்லத்தில் நிகழ்ந்தேறிய அந்த சந்திப்பில், அவள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க அவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனுடைய அமைதிக்குக் காரணம் தெரிந்திருந்தாலும் அவள் அதைக் கேட்காமல்  அவனாக பேசட்டும் என்று விட்டுவிட்டாள். எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் அவளருகில் போய் ‘நான் சில வசைகளைக் கொண்டு வந்திருப்பதாக சொன்னான்.’ அவள் அதையே அவனிடமிருந்து எதிர் பார்த்திருந்தாள். அதோடு அவன் நிறுத்திக் கொள்ளாமல் ‘அதை நான் எனது ஆண் நண்பர்களிடத்தில் முயன்று பார்த்ததாகவும் சொன்னான்.’ அவள் அவனருகில் நெருங்கி வந்து அமர்ந்து மேலும் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ள. அவனோ ‘நான் அதை வெளிப்படுத்தியதும் அவர்களால் அதை புரிந்துக் கொள்ளமுடியவில்லை..புரிந்த பின் அவர்களின் முகங்கள் சுருங்கிவிட்டது’ என்றான். ‘அதை ஏன் இப்படி முகத்தை வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்..’ என்று வெடித்துச் சிதறிவிட்டாள். அதற்கு அவனோ ‘அதை நான்தான் உருவாக்கினேன் என்பது அவர்களுக்குத் தெரியாது’ என்றதும் மேலும் சிரிப்பை அடக்க முடியாது அவனிடத்தில் அதைப் பற்றி அறிய  மீண்டும் ஆர்வமாக அருகில் வந்தாள்.

‘நான் ஒருவனை பார்த்து ‘கஞ்சியடி’ என்றேன்‘

‘மற்றொன்று ‘மண்டகாத்தான்’ என்றேன் ‘ என அவன் சொல்லிமுடித்தான்.

அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தவளுக்கு அவனோ அதைச் சொல்ல முடியாது என்று தீர்க்கமாக இருந்துவிட்டான். எவ்வளவோ முயன்றும் அவனிடமிருந்து அதற்கான அர்த்தத்தை வாங்க முடியவில்லை. ஆகையால் அவனிடம் ‘சரி..அதை யாருக்கு எதிராகப் பயன்படுத்தினாய்’  என்று மட்டும் சொல் ‘போதும்’ என்றாள். அவனோ வேகமாக ‘ஆண்களிடத்தில் தான்’ என்றான். அவளோ‘ அது தெரியும்…யாரிடத்தில்..’

அவளுடைய கேள்வியைப் புரிந்தும், புரியாமலும் விடையாய் ‘கஞ்சியடி ‘ என்பதைத் திருமணம் ஆகியவனிடத்திலும்.. ‘மண்டகாத்தான்’ என்பதைத் திருமணம் ஆகாதவனிடமும் பயன்படுத்தியதாக சொன்னதும் இருவரும் சேர்ந்து சிரித்துவிட்டனர். அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை ஆனால் அவளோ அதை விவரிக்கத் தொடங்கிவிட்டாள். ‘மண்டகாத்தான்- ரோஸ் பட் வெர்ஜின்’ , ‘கஞ்சியடி – சுயமைதுனம் – அதுவும் கல்யாணத்துக்கு அப்றோமும்‘ என்று சொல்ல. அவன் சரி என்பது போல தலையாட்டினான்.

“ஐயா, நான் சொன்னதுக்காக யோசிச்சு கண்டுபுடுச்சுருகீங்க..”

“ஆமா..எதுவும் இல்லேன உருவாக்க வேண்டியது தான்..” என்று சொல்ல அவள் சிரித்துக்கொண்டாள். கண்டிப்பாக அவன் அதை பயன்படுத்தக்கூடும் என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் சொன்னதெல்லாம் கேலிக்கு இல்லை, உண்மையாகவே அப்படியான ஒரு புத்தகத்தை தயார் செய்கிறாள். அதுகுறித்தான நிறைய கேலிகள் சமூக வலைத்தளத்தில் காணமுடிந்தது ஒரு விதத்தில் அவனுக்கு வருத்தமாக இருந்தது. இப்படியானப் புத்தகத்திற்கு பின்னால் இருக்கும் மனநிலையை அருகிலிருந்து பார்த்தவனுக்கு அதைக் கையாளுவது லாவகமே. அவளுடன் கூடிய கணங்களில் அவளின் மாரில் இருக்கும் பனையின் நரம்புகள் அவளுடையது, அவள் உச்சிக்கு செல்வதற்கான சான்று என்று தெரியும். அவன் அத்தழும்புகளில் தனது முத்தத்தை ஆழ பதிப்பான். அவள் கூறியது போலத்தான் ‘அவள் வைத்திருக்கும் கண்ணாடிகள் சிதறல்களாக இருப்பினும் அதில் அவளே தெரிவாள் சில நேரங்களில் அரக்கியாகவும், கடவுளாகவும்..’

அவளிடமிருந்து அழைப்பு வந்தது. அலுவலக பணியிலிருந்து சற்று வெளியேறி எடுத்தான். சட்டென்று அவனைத் தாண்டிச் சென்ற அலுவலகப்  பணியாளரை ஒருவன் ‘மண்டகாத்தான்’ என்றதும். அவன் அறிமுகப்படுத்திய வசைகள் அவனின் அலுவலகத்திலேயே பரவத்தொடங்கியிருப்பதை அப்போதே கவனித்தான். எதிர் முனையில் இருக்கும் அவளுக்கு அது கேட்டிருக்ககூடும், ஆனால் அது அவளை ஒருபோதும் பாதிக்காது என்பதில் ஏனோ உறுதியாக இருந்தான்.     

000

லட்சுமிஹர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கீழச்செம்பட்டியில்  பிறந்தார்.

தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.  தமிழில் புனைகதைகள் எழுதிவரும் எழுத்தாளர் . திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார். 

விருதுகள்

வாசகசாலையின் ‘சிறந்த அறிமுக எழுத்தாளர்’ விருது – 2022

சாகித்திய அகாதமி  ‘யுவபுரஸ்கார் விருது’ – 2025

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு

ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள் (2021, யாவரும்)

‘டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம் (2022, யாவரும்)

கிளாஸிக் டச் (2023, யாவரும்)

கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் (2024, யாவரும்) 

குறுநாவல் 

புலிசாரை (2025 , யாவரும்)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *