காளியப்பன் வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் பெருவெடை இனம். இரண்டு கால்களும் வலுவானது தடித்தனம் இருக்கும். உடம்பு கொழுத்துப் போய் திமிரி கொண்டு இருக்கும். எருக்குழி அருகில் இருக்கும் குப்பையை  கிளறு கிளறினால் போதும் குப்பைகள் வீட்டு வாசல் வரை வந்து மண்டிக் கொள்ளும்.

கழுத்து பகுதி நல்ல செம்மி நிறம் பிற பாகங்களில் கருமை மற்றும் செம்மை கலந்து இருக்கும். சேவலின் வால் மயிலைப் போல கொஞ்சம் நீண்டது. கழுத்து நீண்டு இருப்பதால் நின்ற இடத்திலே நான்கு புறமும் பார்வையை சுழட்டி  பார்க்கும் வேய்க்கானம் இருந்தது.

ஒரு முறை காளியப்பனின் காளை கன்றுக்கு வாங்கி போட்டு இருந்த கழுத்துச் சலங்கையின் ஒற்றை முத்து ஓட்டோடு கழன்று விழுந்து விட்டது. காளியப்பன் அதனை பத்திரப்படுத்தி பகுமானம் செய்து செம்மியின் காலுக்கு மாட்டிவிட்டார். செம்மி எட்டு வைத்து நடப்பது கோயில் நோம்புக்கு சக்திகரகம் சிங்காரித்து கொண்டவர் நடை போன்றது மெல்ல மெல்லதான் நிலை வந்து சேருவான்.

காளியப்பன், பழனக்காள் தம்பதியற்கு மகன் ராசப்பன் மகள் லெட்சுமி என இருவர் மட்டுமே. ராசப்பன் அக்கம் பக்கம் உள்ள பண்ணையத்தில் கூலி வேலைக்கு போவான், பெரும்பாலும் வரக்காடுகள் என்பதால் வரப்புகளில் அருகு வேர் தோண்ட தான் அதிகம் போவான்.

லெட்சுமி  தான் சேவலுக்கு “செம்மி” என்று பெயரிட்டாள். லெட்சுமி நல்ல குணவதி அனைவரையும் மதித்து அன்போடு பேசும் உள்ளம் கொண்டவள். லெட்சுமியை பழனக்காளின் அப்புச்சி வழி  தம்பி முறையான தங்கவேலுக்கு தான் கட்டிகொடுத்தார்கள்.

மாப்பிள்ளையின் ஊர் இங்கிருந்து 4 கல் தொலைவு தான். மாப்பிள்ளை வீடு நல்ல சவுரியம் தான் அந்த ஊருக்குள் பெரிய பண்ணையம் அவர்கள் தான். அவரின் தாய் தந்தையர் தங்கமான குணமுடையவர்கள். மாப்பிள்ளை தான் வெடுக்கு வெடுக்கு என்று பேசிவிடும் ஆள். நாளை பின்பு அவர்களுடன் உறவு சொல்லி பேசவேண்டுமே என நினைக்காமல் மனதில் நினைத்ததை வாயில் போட்டு துப்பிவிடுவார்.

சந்தை செலவுக்கு பணம் மொடையாக இருந்த போதெல்லாம் பழனக்காள் கோழி சேவல்களை பிடித்துக் கொண்டு சென்று செலவு சாமான்களை வாங்கி வந்து விடுவாள். ஆனால் லெட்சுமியின் பொருட்டு ஒரு போதும் செம்மியை தூக்கி கொண்டுபோய் கொடுக்க மனம் ஒப்பவில்லை.

ஒரு முறை தாளப் பறந்து வந்த பொரி லகுடு ஒன்று தாய் கோழியுடன் சுற்றி திரியும் அதன் குஞ்சுகளை நோட்டம் பார்த்துக் கொண்டு இருந்தது. தாய் கோழிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து தனது உடல் பொங்குகளை துளிர்த்து ஆக்ரோசம் காட்டியது.

பொரி லகுடு தாய்கோழியை விட்டு கடைசி சுற்றில் இருக்கும் ஒற்றை கோழிக்குஞ்சை குறிவைத்து அருகில் இருந்த மஞ்சணத்தி மரத்தின் சிறிய வாது ஒன்றின் மீது வந்து அமர்ந்து கொண்டது. தாய்கோழியானது பலம் கொண்டமட்டும் தனது இறக்கைகளை விரித்து குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.

கடைசி வரிசையிலிருந்த சீக்காளி குஞ்சு ஒன்று தத்தி தத்தி உள் நுழைவதற்குள் பொரி லகுடு விசையுடன் காற்றை கிழித்து அருகில் வந்து பின்பு நெஞ்சு கூட்டுக்குள் அணைத்து வைத்திருந்த கால்களை  கீழே இறக்கி கவ்விச் செல்ல முயன்றது.

எங்கோ தட்டுக் கோம்புக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்த “செம்மி” தாய்கோழியின் கேவல் சத்தம் மற்றும் குஞ்சுகளின் இடைவிடாத கீச்சு சத்தம் கேட்டு நான்கே எட்டுகளில் லகுடை நெருங்கி தனது பலம் வாய்ந்த கால்களை கொண்டு லகுடின் முதுகு மீது ஒரு அழுத்து அழுத்ததியது. பொரி லகுடு ஒரு நொடி சுதாரித்துக் கொண்டு மேலே எழும்பி உயரத்தில் பறந்து சென்றது.

சேவல் செம்மிக்கு வயது மூன்றாண்டுகளை கடந்து சென்றுவிட்டது. சேவல் கிழடு தட்டுவதற்குள் அறுத்துவிட வேண்டும் என்று காளியப்பன் எண்ணி இருந்தார். லெட்சுமி கலியாணம் ஆன பிறகு பிறந்த வீட்டுப்பக்கம்  வருவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. சென்ற  ஐப்பசிக்கு நடப்பு சித்திரை மாதம் என்று பார்த்தால் ஆறு மாதங்கள் ஆயிற்று. பெற்ற மகளை குறித்தான ஏக்கம் இருவருக்கும் இருந்து கொண்டே இருந்தது.

சேவல் அடித்து விருந்து வைக்கும் சாக்கில் ஒரு நாளேனும் மகள் நம்மோடு இருக்கட்டும் என்று எண்ணி லெட்சுமியை கட்டிக் கொடுத்த ஊருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வந்தார்கள். மாப்பிள்ளை தான் கொஞ்சம் எடக்காக பேசினார். லெட்சுமி தான் மச்சானோடு  வந்து விடுவதாக  கோளாராக பதில் சொல்லி மனசு நோகாமல் இருவரையும்  அனுப்பி வைத்தாள்.

அந்த நாளும் வந்தது, விடியற்காலைபொழுது கிழவானில் வெள்ளி மீன் மின்ன தொடங்கியதும் “செம்மி” கூவ ஆரம்பித்து விட்டான். முந்தா நாள் ராத்திரியே மக்கிரி கூடையில் செம்மியை பிடித்து தனியாக அடைத்து வைத்து இருந்தனர். தனது கயிற்றுக்கட்டில் கிடக்கையை விட்டு எழுந்த  காளியப்பன் மூலி முறித்தார். இன்றைய காரியங்கள் பற்றி நினைவு வந்து நெஞ்சில் நினைப்பு பாரத்தை ஏற்றிக் கொண்டார். “செம்மி” அடைபட்டு இருந்த மக்கிரி கூடைக்கு மேலே ஒரு கனமான மர கவக்கோல் ஒன்றை  எடுத்து வைத்தார்.

வழக்கத்திற்கு மாறாக கூடையை நீக்காமல்  விட்டதால் “செம்மி” இறக்கைகளை அடித்து கொக்கரிக்க தொடங்கியது.

வடகோட்டில் ஆடு, மாடுகள் அடைக்கப்பட்டிருந்த  கொட்டகையின் மூங்க தட்டி படலை நெட்டி தள்ளி உள் புகுந்தார். இரவெல்லாம் ஆடு மாடுகள் அசைபோடுவதும் கழிப்பதுமாகவே இருந்திருந்தன. காளியப்பனின் அரவம் கேட்ட ஆடு, மாடுகள் ஒவ்வொன்றாய் முறை வைத்து அடி வயிற்றில் இருந்து சத்தமிட ஆரம்பித்து இருந்தது.

சேவல் அடித்து பொசிக்க தர உள்ளூர் கருப்பனுக்கு நேற்றே தகவல் சொல்லியாயிற்று. சேவல் வளர்ப்பவர்களே அதனை சாகடிக்க மிகப் பெரிய தகிரியம் வேண்டும். கண்பார்வையிலேயே ஒரு சீவனை வளர்த்தி அதன் உயிரை எடுக்க அந்த வீட்டு ஆட்களால் முடியாத காரியம். சிறிது சஞ்சலப்பட்டால் அரை உசிராக சேவல் சிக்கிக் கொள்ளும். கருப்பன் திறமைசாலி சேவல் அறுத்து உண்ண தகுந்தது போல கறி அறுத்து தர அவனால் முடியும். சிறிது ஏமாந்தாலும் சேவல் கறி கசப்பு தட்டிவிடும்.

எப்படியும் இரண்டு குண்டா போசி  அளவுக்கு கறி கொள்ளும்  என்பதால் பழனக்காளின் தம்பியையும் தம்பி ஊட்டுக்காரியையும் அழைத்து இருந்தார்கள். மேற்கொண்டு கூட மாட ஒத்தாசைக்கு ஆள் இருந்தால் தான்  கறி வேகவைக்கவும்  வறுக்கவும் சுலபத்தில் முடியும்.

ரெண்டு குண்டா கறி மூன்று குடும்பங்கள் தாராளமாக ஒரு நேரம் உட்கார்ந்து சாப்பிட தோதானது. கோழிச் சாறு நல்ல காரம் சாரமாக இருக்க சின்ன வெங்காயம், அதிகம் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும். வெங்காய உரிப்பு வேலையை பழனக்காளின் தம்பி மனைவி எடுத்துக் கொண்டார்.

வரகொத்துமல்லி சீரகம் போன்ற செலவுகள் வணக்கிய பின்பு சாந்து அரைக்க ஆட்டாங்கல்லை கழுவி சுத்தப்படுத்தினாள்.

லெட்சுமியும் அவளது வீட்டுக்காரரும் சிறிய கூட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். காளியப்பனும் பழனக்காளும் ஓடிச் சென்று லெட்சுமி இறங்க ஒத்தாசை செய்தார்கள். மாப்பிள்ளை முன்பக்கமாக இருந்து தனது கணத்த சரீரத்தை சாய்த்து ஒரே குதியில் இறங்கி விட்டார்.

“வாங்க மாப்பிள்ளை” என்று இருவரும் வாய் நிறைய கொஞ்சம் பயம் கலந்த மரியாதையுடன் அழைத்தனர்.

ஒரே ஒரு பார்வை பார்த்து ஆமோதிப்பது போல தலையாட்டினார்.

“தம்பிய கூட்டிட்டு உள்ளுக்கு போச்சாமி” என்றாள் பழனக்காள். தனது ஊட்டுக்காரருடன் சேர்ந்து வீட்டு எரவாரத்துக்குள் நுழைந்து உள்ளே சென்றார்கள்.

அந்த வீட்டு மாப்பிள்ளை தங்கவேலு தனது மச்சினன் ராசப்பனை அழைத்து அருகில் அமரச் சொன்னார். சிறிது தயக்கத்துடன் அந்த மர பலகையில் கொஞ்சம் தள்ளி பவ்யமாக ராசப்பன் அமர்ந்து கொண்டான்.

“என்ன மாப்ளே வெயிலு இன்னிக்கி இந்த போடு போடுது ஊட்டுக்குள்ற உக்கார முடியலீயே ஒரே உப்புசமா கிடக்கே” என்றார் தங்கவேலு.

“ஆமாங்க மச்சா இன்னிக்கி எச்சாத்தா இருக்குமாட்ட இருக்குதுங்க்”

“…..”

“ராசு மாப்ளே நமக்கு வெறும் கறி தின்னா வாயிக்கு அத்தன நொப்பமா இருக்கிறதில்ல….”

“…..”

“எங்கூர்ல இருந்திருந்தா நாயத்துக்கிழமையும் அதுவுமா கோச்சை கறியும் ஒரு கலய கள்ளும் இன்னேரம் உள்ளுக்கு போயிருக்கும்”

“மச்சா நீங்க வருவீங்கங்கறமுடிநேத்தைக்கே சொல்லி வெச்சுட்டங்க தெற்கே கரடு அடிவாரத்துல ஒரு எட்டு போயி குடிச்சு பார்த்து எத்தனை கலையம் வேணுமோ வாங்கிட்டு வந்துரலாங்க”

“துணைக்கு எங்க மாமனையும் கூட்டி போயிறலாங் “

“,,ம்,,,”

“அப்பிடிங்கிறியா சரி நெட போலாம்”

அந்த வேகாத வெயிலில் இரண்டு சோளக்காடுகளை தாண்டி ஒரு கரட்டு மேட்டின் அடிவாரத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட ஒற்றை குடிசையின் முன்பு வந்து நின்றார்கள். வியாபாரியிடம் ஆளுக்கொரு பனைஓலை பாட்டையை கை ஏந்தி பெற்றுக் கொண்டார்கள்.

அதில் நுரைகள் ததும்ப புளிப்பு வாசனையோடு  இருந்த கள்ளை விரும்பி குடித்தார்கள். ராசப்பனின் தாய்மாமன் காரன் சில தாமசு பழமையை ராசப்பனிடம் பகிர்ந்தார். தங்கவேலு மருந்துக்கு கூட  சிரிக்கவில்லை. இப்படியே பகல் உச்சிக்கு வர ஆரம்பித்திருந்தது.

தங்கவேலுக்கு பசி வயிறை தட்டியது. கள் உண்ட நாக்கு மறத்துப் போய் கிடந்தது. கறி கடித்தால் தான் நாக்கு உயிர் பெறும் என்ற நிலையை உணர்ந்தவராக, கறி வேண்டும் என்று கேட்டால் ஒரம்பரைகள் முன்பு தனது கவுரவம் என்ன ஆவது என்று ராசப்பனை ஏறிட்டு,

“போதுமடா  ராசு  உன்ற அக்காகாரி தேடுவா நெட போலா”

“சரிங்க மச்சா”

“இன்னேறம் கறி வெந்து உண்கறதுக்கு எல்லா தயாரா இருக்கும் பாருங்க!” என்று தள்ளாடினான் தலைச்சுமையாய் கள்ளு கலையத்தை வைத்திருந்த  ராசப்பனின் தாய்மாமன்.

இங்கு அதேநேரம் வீட்டில்…

“லெட்சுமி உங்கூட்டுலயெல்லா பரவால்லீயா சோறெல்லா நீ ஒருத்தியே ஆக்கிறியா கூட மாட ஒத்தாசைக்கு உங்க அத்தகாரி நிக்குமா?”

என்று குசலம்  கேட்டாள் லெட்சுமியின் தாய்மாமன் பொண்டாட்டி.

“அதெல்லா எங்க அத்தை ஒரு ஆளாவே நின்னு ஆக்கி போட்ரும் நாந்தே அவிகிளுக்கு துணையா அடுப்புக்குட்ட நிக்கற…”

“……..”

“எங்கூட்டுகாரரு தா எதுக்கோடுத்தாலும் கொறை சொல்லுவாரு நல்ல மனுசந்தா

எப்பயும் கடுகடுனு தா இருப்பாரு இல்லீனா அத்தாச்சோடு பண்ணையத்தை கட்டி மேய்க்க முடியுமா “

“ஆளுக்காரங்கள கண்டா கைய ஓங்கிட்டு போறாப்ல எது செரி எது தப்புனு பார்க்கறதே இல்ல”

“லெட்சுமி…? உங்க காட்டு கிணத்துல தண்ணி சேந்தி பழகீட்டியா என்ன..?

“இப்பதானுங் அக்கா தண்ணீ சேந்த கொஞ்ச வெசை வந்துருக்கனு எங்க அத்த சொன்னாங்கோ”

சூரிகத்தி ஒன்றை இடுப்பு வேட்டியில் சுற்றி மறைத்து வைத்துக் கொண்டு வேகவேகமாக வந்த கருப்பனை ஏறிட்டார் காளியப்பன்.

“இதேங்…கருப்பா கொஞ்ச முன்னமே வந்துருக்கலாமுல்ல”

“இல்லீங்க வீட்ல புழுதண்ணிய குடுச்சுப் போட்டு வர தாமசமாயிடுச்சுங்க “

“முன்னமே வந்து  இவடத்தைக்கே குடுச்சா ஆகாதுங்குதா? செரி சரி போய் சேவல புடுச்சா போ”

“கத்தி கொண்ட்டுட்டு வந்துட்டியா”

“இருக்குங்கோ”

இடுப்பு வேட்டியை உதிர்த்து கத்தியை எடுத்தான்.

“கத்திய பதம் புடுச்சுக்கோ…”

“….”

தாய்கோழி ஒன்று தனது நன்றாக நடைபயின்ற குஞ்சுகளை அழைத்துக் கொண்டு இருமாப்புடன் கருப்பனை கடந்து சென்றது. இடுப்பளவு மக்கிரி கூடையில் அடைபட்டு இருந்த செம்மியை பிடிக்க கருப்பன் கூடையின் முன்புறம் அமர்ந்து இடது கையில கத்தி வைத்துக்கொண்டே மெதுவாக தூக்கி வலதுகையை கூடை கூடைக்குள் விட்டு துழாவ “செம்மி” சடாரென சுதாகரித்து பலம் கொண்டு மட்டும் தனது கூம்பு வடிவ அலகால் ஒரு போடு போட்டது. நன்றாக விரல் எலும்புமேலேயே கொத்து விழுந்ததால் கருப்பன் விருட்டென வலதுகையை தூக்க சடாரென  பாய்ந்து செம்மி வெளியேறினான்.

காளியப்பன் தான் அதிர்ச்சி அடைந்ததை காட்டிக் கொள்ளாமல்…

“ப்பா ப்பா ப்பா” என மெல்ல கூவினார்

கருப்பன் வலது கையில் அடிபட்ட இடத்தில மெல்ல ஆராய்ந்து தடவியடி நின்று கொண்டான். பழனக்காள், காளியப்பன், கருப்பன் மூவரும் “செம்மி” வெளியே சென்று விடாதபடி அல்லை கட்டி நின்று கொண்டனர்.

இரண்டு தாவுகளில் தாழ்வாரத்தின் கைப்பிடிச் சுவர்மீது ஏறி இடுப்பளவு வளர்ந்த கம்புக் காட்டில் சென்று மறைந்து விட்டது.

“கைப்பழக்கத்திலேயே வளத்துன சேவல் எங்கியும் போகாது ஆளாளுக்கு கலாட்டா பண்ணாதீங்க” என்றார் காளியப்பன்.

செரவு கட்டிய வெள்ளாமை இங்கு இல்லவே இல்லை. மழை பெய்த இரண்டொரு நாளில் அப்படியே காட்டை ஓட்டிவிட்டு கம்பு விதைகளை மானாவாரியாக தூவிவிட்டு விடுவார்கள். கம்பங்காட்டில் இலைகள் அனைத்தும் பளுப்பு தட்டி நின்றிருந்தது.

கம்பு கருதுகள் ஒவ்வொன்றும் ஒரு சாண் அளவில்   திறட்சியில்லாமல்  இருந்தது.

“எதுல போச்சுனு தெரியிலியே”

“இந்தள்ள தானுங்க பாஞ்சுது”

“செம்மி.. வந்துருபுள்ள” என்றாள் லெட்சுமி

“கைய கொத்திவுட்டு தப்பிச்சுருச்சே தகிரியம் பாருங்க கைல சிக்குட்டு ஒரே அறுப்பு தான்”

காளியப்பன், கம்பங்காட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தவராக, மாப்பிள்ளையை விருந்துக்கு அழைத்து விட்டு இப்படி சேவலை முடுக்கி கொண்டு இருக்கமே என்ற விசனப்பட்டார்.

லெட்சுமி “செம்மி செம்மி” என்று கூவிக்கொண்டேமுன்னேறினாள். அந்த மனுச வாரதுக்குள்ள சேவலு கிடைச்சுட்டா பரவாயில்ல என்று நினைத்தாள்.

பரந்து விரிந்த கம்பங்காட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நால்திசைக்கும் முறையே காளியப்பன், பழனக்காள், லெட்சுமி, கருப்பன் என நால்வரும் காட்டுக்குள் இறங்கினார்கள். செம்மியின் கால் சலங்கை சத்தம் அந்த கம்பங்காட்டுக்குள் நால்வருக்கும் கேட்டுக் கொண்டே இருந்தது.

00

இரா.சேனா 

நான் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற பிறகு மென்பொருள் துறையில் வேலை கிடைத்து பெங்களூர் நகரத்திற்கு சென்று விட்டேன். தற்போது கரூரில் வசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.  நான் சிறுவயதில் செவி வழிகேட்ட நேரில் பார்த்த அனுபவங்களை கதைகளாக எழுதி கொண்டு இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தி கதை கவிதைகளை எழுத செய்த எனது பள்ளி ரீ யூனியன் குரூப் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *