கி.ச.திலீபன்
ரிஷிகேஷ் வந்து சேர்ந்தபோது இரவாகி விட்டது. எந்த ஊருக்குப் போனாலும் தங்கும் விடுதியைத் தேடுவதுதான் முதல் பணி. கேதார்நாத் மலையேற்றத்தின் விளைவாக கால்களில் ரத்தம் கட்டியதன் வலியும், வீக்கமும் இருந்த நிலையிலும் தெருத்தெருவாக இறங்கி அறை தேட வேண்டியிருந்தது. ரிஷிகேஷ் இந்தியாவின் மிகமுக்கிய ஆன்மிகத்தலம் மட்டுமின்றி சாகச விளையாட்டுகளுக்கான தலைநகரம் என முன்பே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அன்றைக்கு மே 27ம் தேதி. கோடை விடுமுறையைக் கொண்டாட வந்தவர்களால் ரிஷிகேஷின் விடுதிகள் நிரம்பித் ததும்பின. ரிஷிகேஷின் அந்த உச்சகட்ட சீசனில் குறைந்தபட்ச வாடகையே 1,000 ரூபாய்க்கும் மேலிருந்தது. கால் வலியைப் பொருட்படுத்தாது இரண்டு கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவு நடந்தே சுற்றினேன். இறுதியாக ஒரு விடுதியில் பேசியபோது விடுதியின் மொட்டை மாடியில் மெத்தை விரித்து, போர்வையும், தலையணையும் தருகிறோம் என்றார்கள். அந்த மொட்டை மாடிப் படுக்கைக்கு 200 ரூபாய் வாடகை என்று சொன்னதும் தயவு செய்து தாருங்கள் என உடனே சம்மதித்தேன். மொட்டை மாடியில் நான் மட்டுமின்றி இன்னும் இரண்டு பேர் படுத்திருந்தனர். அவர்களும் என்னைப் போன்றே குறைந்த வாடகைக்குத் தஞ்சமடைந்தவர்களா இல்லை அந்த விடுதியின் பணியாளர்களா எனத் தெரியவில்லை. அவர்கள் செல்போனில் லயித்திருந்ததால் அவர்களுடன் இயல்பாக உரையாடும் தருணம் உருவாகவில்லை.
அது கோடைக்காலம் என்பதால் மொட்டை மாடியில் தங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. வீசிய காற்றில் சற்றே வெக்கை கூடியிருந்தது. பயணக்களைப்பு என்னை மொத்தமாக அழுத்திக் கொண்டிருந்தது. நன்றாகத் தூங்கிக் காலை எழுந்தேன். இந்த மாடிக்கு மீண்டும் இருட்டிய பின்புதான் வர முடியும். ஆகவே விடுதியிலிருந்து கிளம்பினேன். கேதார்நாத் மலையேற்றத்துக்காக வாங்கிய தடியை ஊன்றியபடிதான் நடக்கவே முடிந்தது. ரிஷிகேஷில் உலவுவதற்கு ஏதுவான உடல்நிலை அப்போது இல்லை. பகல்பொழுதை வெளியில் எங்காவது கடத்தினால் போதும். மீண்டும் இரவு மொட்டை மாடிக்கு வந்து தூங்கி விடலாம் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.
ஒரு ஊருக்குப் பயணம் மேற்கொள்கையில் அங்கே காண வேண்டிய தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாகப் பார்த்து விட வேண்டும் என்று நான் எப்போதும் நினைக்க மாட்டேன். அதுவரை சென்றிருக்காத புதிய ஊரில் எனது இருப்பே மகிழ்வளிக்கக்கூடியதாக இருக்கும். அங்குள்ள மனிதர்கள், அதன் நிலவியல், அந்த ஊரின் அன்றாடம் ஆகியவற்றைக் காண்பதே போதுமானதாக இருக்கும். ஆகவே உடல்சோர்வின் விளைவே ரிஷிகேஷின் முக்கியத் தலங்களுக்குச் செல்ல முடியாதுபோனது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வட இந்தியப் பகுதிகளில் எலெக்ட்ரிக் ஷேர் ஆட்டோக்கள் பெருகி விட்டன. காசியிலேயே அதைக் கவனித்தேன். ரிஷிகேஷில் எலெக்ட்ரிக் ஷேர் ஆட்டோக்களில் ஏறி வெறுமனே சில தொலைவு போய் வந்தேன். ரிஷிகேஷின் நகர்ப்பகுதி மற்றும் நகரத்தினுள் அமையப்பெற்றிருக்கும் சில கோயில்களைப் பார்த்தபடி கடந்து போனேன். ரிஷிகேஷில் இருந்து சோன்ப்ரயாக் செல்லும் சாலையில் கொஞ்சம் தொலைவு கடந்ததும் ஒரு மதுபானக்கடையைப் பார்த்தேன். உடல்சோர்வுக்கு இதமாக பியர் அருந்த வேண்டுமெனத் தோன்றியது. பியர் குடித்தால் உடல்சோர்வு நீங்குமென எந்த மருத்துவ ஆய்வும் சொல்லவில்லை என்றாலும் நமது ஆசைகளுக்கு வியாக்கியானம் கற்பிப்பதுதானே உலக வழக்கம். இரண்டு பியர் பாட்டில்களை வாங்கிக் கொண்டேன். கடையை ஒட்டியே விரிந்திருந்த வறண்ட ஆற்றுப்படுகையில் உள்ள சிறு பாறை மேல் அமர்ந்தபடி மெதுவாக பியர் அருந்தினேன். இருள் சூழ்கிற வரையிலும் மெதுவாக பியர் அருந்தியபடி நண்பர்களுடன் போனில் உரையாடியபடி நேரத்தைக் கடத்தலாம் என்று நினைத்தேன். அப்படியாகக் கடத்தி மாலை 7.30 மணியைக் கடந்த பிறகும் முமுவதுமாக இருட்டவில்லை. கோடைக்காலம் என்பதோடு அதன் நிலவியல் அமைப்பு அப்படியாக இருக்கலாம் என்று நினைத்தபடி அங்கிருந்து புறப்பட்டேன். பிறகு மீண்டும் அதே விடுதியின் மாடியில் தங்கினேன். நல்ல தூக்கத்துக்குப் பிறகு அடுத்த நாள் எழுந்ததும் ரிஷிகேஷிலிருந்து டேராடூன் செல்வதென முடிவெடுத்தேன்.
ரிஷிகேஷிலிருந்து டேராடூன் 40 கிலோமீட்டர்தான் என்பதால் ஒரு மணிநேரப் பேருந்துப் பயணம்தான். இருவர் படுக்கக்கூடிய மெத்தை, இணைப்புக் கழிவறையுடனான சுத்தமான அறை ஒன்றில் தங்கினேன். வாடகையை 800 ரூபாயிலிருந்து பேரம் பேசி 500 ரூபாயாகக் குறைத்தேன். கிடப்பில் போட்டிருந்த எழுத்துப் பணிகளைச் செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு மாலை வெளியே வந்து பார்த்தால் மழை. எங்கும் வெளியே செல்ல முடியாத அளவு கனமாகப் பெய்து கொண்டிருந்தது. திரும்ப அறைக்குச் சென்று படுத்தபோது உடல் முற்றிலும் தளர்ந்து போயிருப்பதை உணரமுடிந்தது. மூச்சு விட கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. மின்விசிறியை நிறுத்திய பின்பும் குளிரால் உடல் உதறியது. காய்ச்சலுக்கு ஆளாகியிருப்பது எனக்கு சற்றுத் தாமதமாகத்தான் தெரிந்தது. கேதார்நாத் மலையேற்றத்தின் போது கடுங்குளிரில் மழையில் நனைந்தபடி சென்றது, வழியில் சிற்றோடைகளில் விழும் குளிர்ந்த நீரைப்பருகியது என காய்ச்சல் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உணவு ஒவ்வாமையின் விளைவான வயிற்று வலியும், மலையேற்றத்தின் விளைவான உடல் வலியும், காய்ச்சலும் ஒன்று சேர்ந்து என்னைப் படுக்கப் போட்டு விட்டது. ஓய்வில்லாமல் உலவிக்கொண்டே இருக்கையில் உடலே தனக்கான ஓய்வினைத் தேடிக்கொண்டது. அருகில் மருத்துவரைக் காணச் செல்லலாம் என நினைத்தால் வெளியே மழை. எழுந்து நடக்கவே திராணியற்று இருந்த என்னால் மருத்துவமனைக்குச் செல்வது இயலாத காரியமாக இருந்தது. தெரிந்த மருத்துவர் ஒருவருக்கு அழைத்து உடல்நிலை பற்றிச் சொன்னதும் அவர் ப்ரிஸ்க்ரிப்சனை வாட்ஸாப்பில் அனுப்பி வைத்தார். விடுதியை ஒட்டியே இருந்த மருந்தகத்தில் மாத்திரைகளை வாங்கிச்சாப்பிட்டேன்.
இது போன்ற ஒரு நெடும்பயணத்தில் எதுவும் செய்யாமல் ஓய்வு மட்டுமே எடுக்க சில நாள்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் புரிந்தது. அன்றைக்கு மே 29ம் தேதி. 2023ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி அன்றுதான் நடந்தது. நடப்பு சாம்பியனான குஜராத் அணிக்கும் சென்னை அணிக்கும் இடையிலான அப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. சென்னை அணியின் ரசிகனாக இருப்பதால் காய்ச்சலில் விழுந்து உடல் தவங்கிப் போயிருந்த நிலையிலும் விடுதியில் இருந்த தொலைக்காட்சியில் ஐ.பி.எல் பார்த்துக் கொண்டிருந்தேன். மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டு மீண்டும் தொடர்ந்தது. குஜராத் அணி சென்னை அணிக்கு 215 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மீண்டும் கடுமையான மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. நன்றாகத் தூங்க வேண்டும்தான், ஆனால் ஆட்டத்தின் முடிவை அறிந்து கொள்ளும் பேராவல் அதற்குத் தடையாக நின்று கொண்டிருந்தது. மழை நின்ற பின் நள்ளிரவில் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. 171 ரன்கள் என்கிற இலக்கினை நோக்கிய அந்த ஆட்டத்தின் கடைசி ஓவரை இந்திய கிரிகெட் ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஐ.பி.எல் வரலாற்றில் மிக முக்கியமான ஓவராக அது அமைந்ததற்கு முக்கியக்காரணம் ரவீந்திர ஜடேஜா. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து அவர் விளாசிய சிக்ஸ் மற்றும் ஃபோர் சென்னை அணிக்கு 5வது கோப்பையை சாத்தியப்படுத்தியது. சென்னையில் இருந்திருந்தால் நண்பர்களோடு கொண்டாடியிருக்கலாம். அதற்கான வாய்ப்பில்லாமல் போனது என்றாலும் என்னுள் எழுந்த உற்சாகத்தை எனக்குள் மட்டும் வைத்துக்கொண்டு பெருமகிழ்வுடன் தூங்கினேன்.

மே 29,30, 31 ஆகிய மூன்று நாள்களும் எங்கும் செல்லாமல் டேராடூன் விடுதியில் ஓய்வெடுத்து உடலைத் தேற்றினேன். காய்ச்சலிலிருந்தும், உடல் வலியிலிருந்தும் ஓரளவு மீண்டு வந்த பிறகு டேராடூனிலிருந்து மசூரிக்குச் சென்று வரலாம் என முடிவெடுத்தேன். ஊட்டியைப் போலவே பிரிட்டிஷாரால் கட்டி எழுப்பட்ட கோடை வாசஸ்தலம்தான் மசூரி. டேராடூனிலிருந்து மசூரிக்கு பேருந்தில் செல்ல வரிசையில் நின்று சீட்டு வாங்க வேண்டியிருந்தது. அந்த வரிசையில் இரண்டு மணிநேரம் நிற்க வேண்டியிருந்ததுதான் வெறுப்பாக இருந்தது. அப்படியாகக் காத்திருந்து சீட்டு வாங்கிக்கொண்டு மசூரிக்குப் போனேன். மசூரி பயணம் எந்தவித சுவாரஸ்யங்களுமற்ற பயணமாக எனக்கு மாறிபோனதன் காரணம் அது அப்படியே ஊட்டியை நினைவுறுத்துவதாக இருந்ததுதான். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல அம்சங்கள் மசூரியில் இருக்கிறது. குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க வருகிறவர்கள் நிச்சயம் கொண்டாடும் ஊர்தான் மசூரி. ஆனால் எனக்கு அப்படியல்ல. இரவு லைப்ரரி பஜாரில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். நெருப்பில் சுட்ட சோளக்கருது விற்பனை செய்யும் தள்ளு வண்டிகள், ஹோம் மேட் சாக்லேட் கடைகள், உணவகங்கள், குழந்தைகளை மகிழ்விக்கும் ஃப்ன் ஃபாக்ஸ் போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி மையம் என ஒரு சுற்றுலாத் தலத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது லைப்ரரி பஜார். அங்கே உலவிக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்கத்தினர். நவீன இளம்பெண்கள் மிக நவீனமாக ஆடைகளை உடுத்தி உலவிக்கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. இமயமலைப் பயணத்தில் கடுங்குளிருடன் முரண்டுபிடித்துச் சலித்துப் போன எனக்கு மிதமான குளிர்தான் தேவைப்படது. மசூரியில் நான் விரும்பிய மிதமான தட்பவெப்பம் நிலவியது ஒன்றுதான் அப்பயணத்தை மகிழ்வித்தது. அங்கிருந்த இருக்கை ஒன்றில் உட்கார்ந்தபடி ஹெட்செட்டில் ‘ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடலைக் கேட்டேன். அந்தச்சூழலுக்கு அப்பாடல் இன்னும் பொருத்தமாக அமைந்தது. 13 பாகைக் குளிரில் என்னைக் கதகதப்பாக அந்த இசை அணைத்துக் கொள்வதைப் போல இருந்தது. ஊட்டிக்குப் போகும்போதும் இதே பாடலைக் கேட்பேன். லைப்ரரி பஜாரில் எழுந்திருக்கும் ப்ரிட்டிஷாரால் கட்டப்பட்ட கட்டடங்களைப் பார்க்கையில் அப்படியே ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியை நினைவுறுத்துவது போலவே இருந்ததால் மசூரியை நான் உத்தரகண்டின் ஊட்டி என நினைவில் பதித்துக் கொண்டேன்.
மறுநாள் காலையில் மசூரியைச் சுற்றக் கிளம்பினேன். மசூரியைச் சுற்ற பைக் வாடகைக்கு எடுப்பதுதான் நல்ல தேர்வு. காலை 8 – இரவு 8 மணி என 12 மணி நேரத்துக்கு மோட்டார் பைக்குகளை வாடகைக்குத் தருகிறார்கள். ஸ்கூட்டரின் வாடகை ரூ.500, ராயல் என்ஃபீல்ட் புல்லட் வாடகை ரூ.1000, அதில் தண்டர்பேர்டு வண்டியின் வாடகை ரூ.1500 என்கிற கணக்கில் 1 லிட்டர் பெட்ரோலோடு தருகிறார்கள். புல்லட் ஓட்டும் நிலையில் எனது இடது கை இல்லை என்பதால் ஆக்சஸ் 125 ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். கெம்ப்டி அருவி, கம்பெனி பூங்கா, ஜார்ஜ் எவரெஸ்ட் உச்சி என மசூரியின் சில முக்கியத் தலங்களுக்குச் சென்றேன். 70 கிலோ மீட்டருக்கும் அதிகமாக மசூரி மலைப்பகுதியைச் சுற்றியது மட்டும்தான் நிறைவளிக்கக் கூடியதாக இருந்ததே தவிர அந்தச் சுற்றலாத் தலங்கள் மீது பெரிய அளவிலான நாட்டம் எழவில்லை. சுற்றுலாத் தலங்களில் உள்ளார்ந்திருக்கும் செயற்கைத்தன்மை அத்தலத்திலிருந்து நம்மை சற்று அந்நியப்படுத்தி விடுவதை மறுப்பதற்கில்லை. மசூரி பயணம் நீங்கா நினைவுகள் எதையும் கொடுக்கவில்லை என்றாலும் அது இயல்பானதுதான். மசூரியிலிருந்து புறப்பட்டு டேராடூன் வந்ததுமே சிம்லாவுக்குக் கிளம்பி விட்டேன். அதுவரை நான் சிம்லா சென்றதில்லை. 2016ம் ஆண்டு மணாலிக்குதான் போயிருக்கிறேன். சிம்லா சென்று அங்கிருந்து மணாலி வழியாக லடாக் போய் அங்கிருந்து காஷ்மீர் வழியாகத் திரும்புவது என ஒரு திட்டத்தை வகுத்துக் கிளம்பினேன்.

டேராடூனிலிருந்து பேருந்தில் பயணம் செய்து காலை 5 மணிக்கு சிம்லா வந்திறங்கியதும்தான் இந்தியாவின் மிகப்பழமையான ரயில் பாதைகளில் ஒன்றான சிம்லா – கல்கா ரயில் பாதையில் பயணிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. நேரே ரயில் நிலையத்துக்குச் சென்று சிம்லாவில் இருந்து கல்காவுக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கினேன். காலை 9.20 மணிக்கு சிம்லாவில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 3.30 மணிக்குதான் கல்காவைச் சென்றடைகிறது. யுனெஸ்கோ பட்டியலில் இருக்கும் பழமையான ரயில் தடங்களில் மேட்டுப்பாளையம் – ஊட்டி, செங்கோட்டை – புனலூர் ஆகிய மலை ரயில் பாதைகளில் பயணித்திருக்கிறேன். அதற்கடுத்தபடியாக சிம்லா – கல்கா மலைப்பாதையில் பயணம் செய்யவிருப்பது குறித்த பேராவலுடன் ரயில் நிலையத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். சிம்லாவிலிருந்து கல்கா வரையிலான 96 கிலோ மீட்டர் தொலைவினை இந்த ரயில் ஆறு மணி நேரம் பயணம் செய்து அடைகிறது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாகச் செல்கிறது. இது போன்ற மலைப்பாதை ரயில்களைப் பொருத்தவரையிலும் வேகம் ஒரு பொருட்டே அல்ல. இந்த ரயில்கள் இயக்கப்படுவதே சுற்றுலாப் பயணிகள் மலைப்பாதையினை ரசிப்பதற்காகத்தான் எனும்போது இந்த வேகம் போதுமானதுதான். ரயில் வந்து நின்றதும் ஏறி ஜன்னலோர இருக்கையை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பிரிட்டிஷ் இந்தியாவில் சிம்லா மிக முக்கிய நகராகத் திகழ்ந்திருக்கிறது. சிம்லாதான் பிரிட்டிஷ் அரசின் கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியிருக்கிறது. அதன் காரணமாகத்தான் கல்காவிலிருந்து சிம்லா வரையிலான இந்த மலை ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. மலை ரயில் பாதைகளைப் பொருத்தவரை அதிகம் சுரங்கப்பாதைகளுக்குள் சென்று வருகிற அனுபவமே முதன்மையாக இருக்கும். அப்படியாக இந்தப்பாதையில் மட்டும் 103 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இளவெயிலில் பைன் மரக்காடுகளினூடாக ரயில் மெல்லப் பயணித்தது. நான் கதவருகே நின்றபடி அந்தப் பயணத்தை காணொலியாகப் பதிவு செய்தேன். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்கிற உணர்வுதான் மேலெழுந்தது. அந்த அனுபவத்திலிருந்து சிம்லா ரயில் பயணம் வேறுபட்டுக் காண வேண்டுமென்றால் குளிர்காலத்தில்தான் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாதை நெடுகிலும் பனி கொட்டிக்கிடக்க பனிப்பொழிவினூடாகப் பயணம் செய்யும் அற்புத அனுபவம் அப்போதுதான் சாத்தியப்படும். ஆனாலும் அது குறையாகத் தோன்றவில்லை இதமான குளிர்காற்றுப் படர கல்கா நோக்கிய ஆறு மணிநேர ரயில் பயணம் நிறைவளிக்கக்கூடியதாகவே இருந்தது. சிம்லா நகரைக்கூட வலம் வராமல் ரயில் ஏறி கல்காவுக்கு வந்து விட்டேன். திரும்ப சிம்லா செல்வது பற்றி யோசித்தேன். சிம்லா வந்ததற்கு இந்த ரயில் பயணமே போதும் என்று தோன்றியது. ஊரே சுற்றுலாப் பயணிகளால் தழும்பியிருக்கும் இந்த விடுமுறைக் காலத்தில் சிம்லா செல்லும் செலவீனங்கள் குறித்த அச்சமும் அதனுள் மறைந்திருந்தது. சரி அடுத்து எங்கே செல்வதென யோசித்தபோது கல்காவுக்கு அருகே இருக்கும் நகரமென்றால் சண்டிகர், ஆக சண்டிகர் வழியாக ஸ்ரீநகர் செல்லலாம் என முடிவெடுத்தேன்.
2016ம் ஆண்டு மணாலியை நோக்கிய பயணத்தில் ஜம்முவுக்குப் போயிருந்த போது சுமோ ஓட்டுநர்கள் ஸ்ரீநகருக்கு வருகிறீர்களா எனக்கேட்டார்கள். அந்தப்பயணத்தின் முக்கிய நோக்கமே பனிப்பொழிவினைக் காண்பதாக இருந்தது. மணாலி சென்று ஷோலாங் பள்ளத்தாக்கில் கொட்டும் பனியில் பாராகிளைடிங் செய்ய வேண்டும் என்கிற பல கனவுகளோடு புறப்பட்டுப் போய்க்கிட்டிருந்த போது ஸ்ரீநகருக்காக வந்த அழைப்பை மறுத்தேன். இத்தனை ஆவலோடு மணாலி சென்று பார்க்கையில் கடுங்குளிர் இருந்ததே தவிர பனிபொப்பொழிவு இல்லை. ஷோலாங் வேளியில் காய்ந்த புல் தரையைத்தான் பார்க்க முடிந்தது. அங்கே நான் சந்தித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் ஸ்ரீநகரிலிருந்து வருவதாகவும் அங்கே பனிப்பொழிவு இருந்ததாகவும் கூறினார்கள். ஜம்முவில் நம்மைக் கூப்பிட்ட போதே ஒப்புக்கொண்டிருக்கலாம் என நினைத்தேன். அடுத்த முறை அவசியம் ஸ்ரீநகர் செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நிறைவேற்ற முனைந்தேன். சிம்லாவிருந்து மணாலி – லே லடாக் – ஸ்ரீநகர் என வகுத்த திட்டத்தை அப்படியே திருப்பிப் போட்டேன். சண்டிகரில் இருந்து அடுத்த நாள் அதிகாலையில் ஜம்மு வந்து இறங்கினேன். ஸ்ரீநகருக்குப் பொதுப்போக்குவரத்து சேவை பெரிய அளவில் இல்லை. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்ல சுமோ ஓட்டுநர்கள் கைபிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டார்கள். அதற்கு வாடகை 1500 ரூபாய் என்றதும் அதிர்ந்தேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த போது 300 ரூபாய்க்குக்குக் கூட்டிச்செல்வதாக அழைத்தனர். இந்த ஏழு ஆண்டு கால இடைவெளியின் கட்டணம் ஐந்து மடங்கு உயருமா என்ன? ஒன்றும் புரியாமல் நின்றேன். அப்போது ஒரு நடத்துநர் என்னை பேருந்தில் ஏறச்சொல்லிக் கூப்பிட்டார். பனிஹாலில் இறக்கி விடுவதாகவும் அங்கிருந்து ரயிலில் ஸ்ரீநகர் சென்று விடலாம் என்றும் சொன்னார். பனிஹாலுக்கு 150 ரூபாய்தான் கட்டணம். அங்கிருந்து ரயில் கட்டணம் நூறு ரூபாய்க்குள்தான் வரும் என்பதால் 250 ரூபாயில் ஸ்ரீநகரை அடைந்து விடலாம் என உடனே ஏறி விட்டேன்.

இமயமலைப் பகுதிகளைப் பொருத்தவரையில் எப்போது போக்குவரத்துத் தடைபடும் எனத்தெரியாது. ஏதேனும் ஒரு வளைவில் ஒரு வாகனம் சிக்கிக் கொண்டால் கூட போக்குவரத்து மணிக்கணக்கில் தடைபட்டு விடும் என்பதால் சரியான நேரத்தில் பனிஹாலை அடைந்து ரயிலேறி ஸ்ரீநகர் செல்வது குறித்த பதற்றம் என்னுள் இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே பகல் பதினோரு மணியளவில் போக்குவரத்துத் தடைபட்டு வாகனங்கள் வரிசைகட்டி நின்றிருந்தன. காஷ்மீரில் இது இயல்பானதுதான். வெளியே நிற்கலாம் என பேருந்திலிருந்து இறங்கினேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வறண்ட நிலம். தேநீர் அருந்தக்கூட எந்தக் கடையும் இல்லை. பேருந்தின் பின்னால் சென்று சிறுநீர் மட்டும் கழித்து விட்டு வந்தேன். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பாதை சீரானதும் பேருந்து புறப்பட்டது. இந்தத் தாமதம் பனிஹாலில் ரயிலைப் பிடிப்பதில் எந்தத் தாக்கத்தையும் விளைவிக்காது என்று நடத்துநர் சொன்னார். காஷ்மீர் என்றால் நினைவில் விரியும் காட்சிக்கு நேரெதிராக இருந்தது அதன் கோடைக்காலம். மலைப்பகுதியில் உண்டான பாலைவனைத்தைப் போல எங்கும் வெக்கையாகவும், வெறுமையாகவும் இருந்தது.
பனிஹால் ரயில் நிலையத்தில் நடத்துநர் என்னை இறக்கி விட்டதும் மிக விரைவாகச் சென்று பயணச்சீட்டு வாங்கி விட்டு நடைமேடைக்கு ஓடினேன். சில நிமிடங்களிலேயே வந்த ஸ்ரீநகர் செல்லும் ரயிலில் ஏறியதும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. காஷ்மீரின் பல ஊர்களைக் கடந்து ரயில் ஸ்ரீநகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. காஷ்மீரின் புகழ்பெற்ற தாஜி தேவாரி கட்டடக்கலை நுணுக்கத்தில் கட்டப்பட்ட வீடுகளையும், இலைகள் உதிர்ந்து குச்சிகளாய் நின்றிருந்த மரங்களையும் வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்தேன். சற்றுத் தொலைவில் பெரிய இரும்புப்பாலத்தைக் கடக்கையில் இந்திய ரயில்வே எவ்வளவு ஆற்றல்மிக்கது என்பது புரிந்தது. அடுத்ததாக ரயில் பிர் பிஞ்சால் சுரங்கத்துக்குள் நுழைந்தபோது அதனை இன்னும் அழுத்தமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பதினொரு கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட அந்தச் சுரங்கப்பாதையில் ரயிலில் பயணம் செய்த அனுபவம் முற்றிலும் புதிது. சுரங்கத்துக்குள் ரயில் போகும்போது கத்திக்கூச்சலிடும் பழக்கம் துடுக்குத்தனம் கொண்ட இளைஞர்கள் பலருக்கு இருக்கிறது. இந்தச் சுரங்கத்தில் அதனை முயற்சித்தால் தொண்டை கிழிந்து வெளியே தொங்கி விடும் என நினைத்தேன். முதல்முறையாக இத்தனை நீளமான ஒரு சுரங்கப்பாதையில் பயணம் செய்து ஸ்ரீநகரை அடைந்தேன். ஜம்மு எல்லைக்குள் நுழைந்ததில் இருந்து நெட்வொர்க் கிடைக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறு என்றுதான் முதலில் நினைத்தேன். இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், லடாக் மாநிலங்களுக்குச் செல்லும்போது நமது சிம்கார்ட் வேலை செய்யாது. அங்கே நாம் புதிய சிம்கார்ட் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது பின்னரே தெரிந்தது. பிரச்னைக்குரிய பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகள் இவை என்பதால் இருக்கலாம். ஸ்ரீநகருக்கு வந்ததும் முதல் வேலையாக புதிய சிம் கார்ட் வாங்கினேன்.

மையப்பகுதியான லால் சோக் பகுதியில் உள்ள ரிவெல் எனும் விடுதியில் 500 ரூபாய் வாடகைக்கு அறை எடுத்தேன். ஸ்ரீநகரில் உலவுவதற்கு முன்பாக எனக்கு எழுத்துப் பணிகள் சிலவற்றை முடிக்க வேண்டியிருந்தது. இடையிடையே நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்ததால் எங்கும் செல்லவில்லை. அடுத்த நாள் டால் ஏரிக்கு மட்டும் சென்று வந்தேன். சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் டால் ஏரியின் புகழ்பெற்ற ஷிகாரா படகுகள் கரையோரமாக வரிசைகட்டி நிறுத்தப்பட்டிருந்தன. சில பகுதிகளுக்கு அதற்கான சீசனில்தான் போக வேண்டும். மேகாலயாவுக்குக் கோடைக்காலத்திலோ, குளிர்காலத்திலோ செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, மழைக்காலம்தான் அதற்கானது. அதுபோல ஸ்ரீநகருக்கு ஏற்றது குளிர்காலமும், இலையுதிர்க்காலமும்தான். டால் ஏரி என்றாலே அதன் மேல் நீராவியினைப் போல எழுந்திருக்கும் பனிமூட்டத்தின் சித்திரம்தான் மனதில் நின்றிருந்தது. காஷ்மீர் என்றாலே ஆப்பிள் மரங்களில் பனிபடரத் தொங்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள்களே நினைவில் எழும். இவையிரண்டையும் நாம் கோடையில் காணவியலாது. டால் ஏரியை மட்டும் சுற்றி விட்டுத் திரும்பினேன்.
ஸ்ரீநகரைச் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு அடுத்த நாள் செல்லலாம் நினைத்திருந்தேன். மறுநாள் காலை 9.30 மணிக்கு மேல் சாப்பிடலாம் என அறையைப் பூட்டி விட்டுச் சென்று சாப்பிட்டுவிட்டு 10.30 மணிக்கு அறைக்குத் திரும்பினேன். எனது அறையின் எண்: 214. அதன் பூட்டைத் திறக்க முயற்சிக்கையில்தான் கவனித்தேன் பூட்டே மாறியிருக்கிறது. விடுதி நிர்வாகம்தான் செய்திருக்கக்கூடும் என வரவேற்பறைக்கு வந்து விடுதி நிர்வாகிகளிடம் கேட்டேன். அவர்களுக்கும் இது பற்றித் தெரியவில்லை. இரண்டு மூன்று சாவிகளைக் கொண்டு பூட்டைத் திறக்க முயற்சித்தார்கள். அவற்றில் எனது அறைக்கு எதிரே உள்ள 217ம் எண் அறையின் சாவியைக் கொண்டு அப்பூட்டைத் திறக்க முடிந்தது. திறந்து உள்ளே வந்து பார்த்தால் போட்டது போட்டபடி இருக்க லேப்டாப் மற்றும் அதன் சார்ஜர் மட்டும் களவாடப்பட்டிருந்தது. சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. சற்று நிதானத்துக்குத் திரும்பிய பிறகு விடுதி மேலாளரிடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று சொன்னேன். அதனைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் வந்து காரில் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. வெளியே இருக்கும் பெட்டியில் வைத்து விட்டுதான் உள்ளே செல்ல வேண்டியிருந்தது.
முதலில் விடுதி மேலாளர் அளிக்கும் புகாராக அது தட்டச்சு செய்யப்பட்டுக் கொடுக்கப்பட்டது. அறை எண் 217-ல் தங்கியிருந்த ஃபரூக் அஹமது என்பவர்தான் திருடியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டது. காரணம் 217-ம் அறையின் பூட்டுதான் எனது அறையில் பூட்டப்பட்டிருந்தது. நான் சாப்பிடச் சென்ற வேளையில்தான் அந்த நபர் அறையைக் காலி செய்து 217-ம் அறைக்கான சாவியைக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவரது எண்ணைத் தொடர்பு கொண்டால் அது ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இது போன்ற காரணங்கள் அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தின. இப்புகாரைப் படித்த பிறகு காவல் ஆய்வாளர் புகாரை பாதிக்கப்பட்ட என்னுடைய பெயரில் கொடுக்கும்படி சொன்னார். விடுதி மேலாளரே புகாரை ஆங்கிலத்தில் எழுதினார். நான் கையெழுத்திட்டேன். அதன் பிறகு காவலர்கள் இருவர் விடுதிக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டனர். எனது 214-ம் அறையின் பூட்டை 217-ம் அறையுடைய பூட்டின் சாவியைக் கொண்டு திறக்க முடிகிறது ஆனால் திரும்பப் பூட்ட முடிவதில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். அந்த இரு பூட்டுகளையும் அவர்கள் கொண்டு சென்று விட்டனர். சம்பவம் இதுதான். 217-ம் அறையின் சாவியைக் கொண்டு எனது 214-ம் அறைப் பூட்டைத் திறந்து லேப்டாப்பைத் திருடிய பிறகு மீண்டும் பூட்ட முடியாத காரணத்தால் 217-ம் அறையின் பூட்டைக் கொண்டு வந்து பூட்டி விட்டு சாவியை ரிசப்ஷனில் கொடுத்து விட்டு சென்றிக்கலாம். ஆகவே 217-ம் அறையில் தங்கியிருந்த ஃபரூக் அஹமதுவை சந்தேகிக்கும் நபராகக் குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகல் எனக்கு வழங்கப்பட்டது. அந்த விடுதியில் மூன்றாவது தளத்தில் எனது அறை இருந்தது. முதல் இரண்டு தளங்களில் சிசிடிவி வேலை செய்த நிலையில் மூன்றாவது தளத்தில் மட்டும் சிசிடிவி பழுதாகியிருந்தது. திருடுவதற்கு சாதகமான சூழல் அதன் மூலம் உருவாகியிருக்கிறது. முந்தைய நாள் நான் டால் ஏரியைச் சுற்றி விட்டு அறைக்குத் திரும்புகையில் எனது அறையின் பூட்டு திறந்திருந்தது. எதிரே ஃபரூக் அஹமது நின்று கொண்டு என்னைக் கண்டதும் “பூட்டு திறந்திருக்கிறது பாருங்கள்” என்று எச்சரிப்பதைப் போலச் சொன்னார். எப்படித் திறந்தது எனப்புரியாமல் அவருக்கு நன்றி சொல்லி விட்டு உள்ளே சென்றேன். பின்னர்தான் புரிந்தது அந்த நபர் முந்தைய நாளே அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்குள்ளாக நான் வந்து விட்டதால் திட்டத்தை அப்போதைக்குக் கை விட்டிருக்கிறார். அவரது அறையின் சாவியைக் கொண்டு எனது அறையின் பூட்டினைத் திறப்பதில் வெற்றி கண்டிருந்த அவர் நான் சாப்பிடப் போன இடைவெளியில் லேப்டாப்பைத் திருடி விட்டு அறையைக் காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்.
காவல் நிலையத்தில் “நிச்சயம் உங்கள் லேப்டாப்பை மீட்டுத்தர ஆவன செய்கிறோம். நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்” எனத் தெரிவித்தனர். இந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோதே சுயாதீனப் பத்திரிகையாளனாக எழுதி வருவாய் ஈட்டிக்கொண்டு ஒரு நாடோடியைப் போல் சுற்றித்திரிய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். என பயணத்துக்கான ஆதாரமே இந்த லேப்டாப்தான் என்பதால் எனக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. அதனுள் இருந்த காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் பல தரவுகளும் போனது சற்று வேதனைக்குரியதாக இருந்தது. அன்றைய நாள் முழுவதுமே காவல் நிலையத்திலேயே கழிந்தது. அன்றைக்கு வாடகை தர வேண்டாம் என விடுதி மேலாளர் சொன்னார். சிசிடிவியைப் பழுது பார்க்காததால் நிகழ்ந்த அசம்பாவிதத்துக்கான இழப்பீடு இதுதான்.
சுயாதீன பத்திரிகையாளனாகப் பணிபுரிந்து ஈட்டும் வருவாயைக் கொண்டுதான் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவோடுதான் இப்பயணத்தைத் தொடங்கினேன். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் மற்றும் யூ ட்யூப் சானல்களுக்கு காணொலிகள் எடுத்துக் கொடுத்ததன் மூலம் ஓரளவு வருவாய் ஈட்டினேன். இவை அனைத்துக்கும் அடிப்படை ஆதாரமாக இருந்த லேப்டாப் களவாடப்பட்டது எனக்குப் பெரும் இழப்பு. எனக்கான வருவாய் இல்லாமல் இந்தப் பயணத்தைத் தொடர்வது கடினம்தான். அதனால் இந்தப் பயணத்தை இன்னும் சில நாள்களில் முடித்தாக வேண்டிய கட்டாயம் உண்டானது. ஆகவே கையிருப்பு உள்ள வரையிலும் முக்கியமாகச் செல்ல வேண்டிய சில தலங்களுக்குச் சென்று விட்டு ஊர் திரும்புவது என்கிற முடிவினை எடுத்தேன். லேப்டாப்புக்காக இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்றேபட்டது. ஆகவே மறுநாளே லடாக் செல்லலாம் எனத்திட்டமிட்டேன்.
லடாக் என்றாலே என்னுள் பதிந்திருப்பது ராயல் என்ஃபீல்டில் பறக்கும் பைக்கர்களின் சித்திரம்தான். ஸ்ரீநகரில் இருந்து லே(லடாக்) 475 கி.மீ தொலைவில் இருக்கிறது. ராயல் என்ஃபீல்ட் பைக்கை வாடகைக்கு எடுத்துச் செல்வது பற்றி விசாரித்தேன். பைக்கில் செல்வதானால் முதல் நாள் இரவு கார்கிலில் தங்கிவிட்டு இரண்டாம்நாள்தான் லே-ஐ அடைய முடியும். இரண்டு நாள்களுக்கு பைக் வாடகை, பெட்ரோல் செலவு என லடாக் செல்வதற்கு மட்டும் ஆறாயிரம் ரூபாய் ஆகும். லடாக்கில் சுற்றுவது திரும்புவது எனக்கணக்கிட்டால் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டுமே ராயல் என்ஃபீல்டில் செல்வது பற்றியெல்லாம் யோசிக்கவே முடியும். பேருந்தில் செல்வதுதான் எனது பொருளாதார நிலைக்கு ஏற்றது. ஜன்னலோர இருக்கையில் வேடிக்கை பார்த்துச் செல்வதை விட மகிழ்ச்சி தரக்கூடியது வேறெதுவுமில்லை. ஸ்ரீநகரில் இருந்து 6.00 மணிக்கு லே செல்லும் பேருந்து புறப்படுகிறது என்று சொன்னார்கள். ஆகவே மறுநாள் காலை 04.30 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து பல் துலக்கி, முகம் கழுவினேன். விடுதியைக் காலி செய்து விட்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே லடாக் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பார்த்தால் பேருந்து இல்லை. வெள்ளிக்கிழமை சாலைப் பராமரிப்பு நாள் என்பதால் அன்றைக்கு லடாக்குக்கு பேருந்து செல்லாது. நாளைதான் செல்லும் என்றனர். சற்றே வெறுப்பாக இருந்தாலும் சகித்துக்கொண்டேன். ஒரு பயணியின் வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான். ஸ்ரீநகர் வந்த பிறகு டால் ஏரியை மட்டுமே சுற்ற முடிந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய டுலிப் மலர்த்தோட்டம் ஸ்ரீநகரில்தான் இருக்கிறது. இலையுதிர்க்காலத்தின் முடிவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும்தான் அம்மலர்த்தோட்டம் திறக்கப்படும் என்பதால் பேரற்புதமான காட்சி அனுபவத்தைப் பெற முடியாமல் போனது.
சிறிய தேடலுக்குப் பிறகு குல்மர்க் பள்ளத்தாக்குக்குச் சென்று வரலாம் என முடிவெடுத்தேன். ஸ்ரீநகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கிறது குல்மர்க். அங்கு சென்று திரும்ப வருவதற்கு அந்நாள் போதுமானதாக இருக்கும் என்பதால் குல்மர்க் கிளம்பினேன். ஸ்ரீநகரில் இருந்து டான்மர்க் வரையிலும் அரசுப்பேருந்தில் சென்று அங்கிருந்து ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது. அப்பள்ளத்தாக்கில் ரோப் கார், குதிரையேற்றம் என பயணிகள் படு உற்சாகத்தோடு இயங்கிக் கொண்டிருந்தனர். உலகிலேயே இரண்டாவது உயரமான ரோப் கார் பாதை குல்மர்கில்தான் இயங்குகிறது. நான் குல்மர்கின் புல் தரையில் கொஞ்சமே கொஞ்சம் குளிரில் ஒரு மணி நேரம் சுற்றித் திரிந்தேன். மணாலியை அடுத்த ஷோலாங் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது கிடைத்த அதே அனுபவம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குல்மர்கில் கிடைத்தது. இந்த இரு பள்ளத்தாக்குகளுக்குமே பொதுவான விதி ஒன்றுதான். இவை இரண்டையும் நாம் பனிப்பொழிவில்தான் காண வேண்டும். பனி அப்பரப்பை வெள்ளைக்காடாக்கியிருப்பதைக் காணும் காட்சி அனுபவம் மட்டுமல்ல பல விதமான பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட குளிர்காலமே உகந்தது. ஆக குல்மர்க் பயணமும் தோல்வியில் முடிய உள் காயத்தை உள்ளேயே வைத்துக் கொண்டு லடாக் பயணம் பற்றிய கற்பனைகளை விரித்தபடி ஸ்ரீநகருக்குத் திரும்பினேன்.
00

கி.ச.திலீபன்
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்

