பரிவை சே.குமார்
கண்ணகி வாசலில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க, “என்னத்தாச்சி… மானத்த அப்புடிப் பாத்துக்கிட்டு நிக்கிற..?” எனக் கேட்டபடி வந்த சாவித்திரியிடம், “நெல்லச் சுருளக் காயப்போட்டு அரச்சிப்புடலாமுன்னு பாத்தா மானங்கெட்ட மானம் நல்லாத்தே மூடிக்கிட்டு கெடக்கு. நேத்தும் நல்லாக் காயப் போடவிடாம பொணுப்பொணுன்னு தூறிட்டுப் போயிருச்சு. மழயில நனஞ்சி போயிருமேன்னு அவசர அவசரமா அள்ளிக் கொண்டேயி ஆலு வூட்டுக்குள்ள கொட்டிக் கிண்டி விட்டிருக்கேன். அப்புடியே கெடந்தா அவுச வீசிரும், இன்னக்கி சுருளக் காயப்போட்டுட்டு நாளக்கி நெனக்காச்சல்ல போட்டுட்டு அரச்சிப்புடலாம். இருக்கன் அரிசியும் இன்னம் ரெண்டு நாளக்கித்தான் வரும்”
“ஏத்தாச்சி… இன்னக்கி ஆரு நெல்லவிச்சி அரச்சிக்கிட்டு இருக்காக. நெரம்ப வூருல வெவசாயமே இல்லாமப் போச்சு. நம்மூருமாரி ஒண்ணுரெண்டு வூருலதான் வெவசாயமேயிருக்கு. அதுகூட ஒண்ணயமாரி ஒருசெல ஆளுக போக மத்தவுக அறுத்து வூட்டுக்குக் கொண்டு வராம அப்புடியே புதுவயல்லயிருந்து வர்ற மில்லுக்காரங்களுக்கிட்ட அளந்து கொடுத்துட்டு வந்துடுறோம். நீ என்னடான்னா இப்பவும் நெல்லவிக்கிறேன்… அரக்கிறேமுன்னு. இன்னக்கியிருக்க புள்ளயளுக்கு நெல்லவிக்கிற அண்டா தெரியுமா..? அத எப்புடி அவிப்போம்… எந்தப் பதத்துல அரப்போமுன்னாச்சும் தெரியுமாக்கும்.”
“நம்ம வூட்டுல வெளஞ்ச நெல்ல அவிச்சி, அரச்சிச் சாப்பிடுறதுல இருக்க சொகம் வாங்கித்திங்கிற அரிசியில இருக்குதாக்கும். ஒங்கண்ணனுக்கு வீட்டரிசி சாப்புடுறதுதான் புடிக்கும். அறுத்ததும் அவசரமா வந்து பாதிக்குப் பாதி வெல வச்சி வாங்கிட்டுப் போறானுக, நீங்களும் செலவழிச்ச காசுக்குமில்லாம… வருச வயித்துப் பாட்டுக்குமில்லாம வித்துப்புட்டு அரிசி வாங்க லோல்படுறிய. நீயே சொல்லு நமக்கிட்ட அடிமாட்டு வெலக்கி வாங்குறவன் நாம அரிசி வாங்கப் போனா ஆன வெல குதுர வெல சொல்றானா இல்லயா..? அதுக்கு நம்ம அரிசியை நாம சாப்பாட்டுக்கு வச்சிக்கிறதுதானே நல்லது. அதத்தான் நாங்க செய்யிறோம். மூத்தவன் அரிசி அரச்சா கொஞ்சம் கொடுத்து விடும்மான்னு போனவாரம் கூட கேட்டான். அவனுக்கும் அவுக அப்பனமாரி வீட்டரிசிதான் புடிக்கிம்.”
“நீ சொல்றது செரித்தாத்தாஞ்சி… ஆனா இந்தக் காலத்துக்கு இதெல்லாம் வேலயத்த வேலதான். அதுபோக ஒனக்கு டிராக்டருல தூக்கிப் போட்டு அரச்சிக்கிட்டு வந்திருவாக. நானெல்லாம் நெல்லவிச்சா நாந்தான் தலயில தூக்கிட்டுப் போவணும். இல்லேன்னா ஆட்டோ புடிச்சி அரக்கப் போவணும். அந்தக் காலம்மாரி எல்லா வயலயும் போடுறதில்ல… அப்புடியே போட்டாலும் செய்யிற செலவுக்கு வெளயிறதுமில்ல. காலம் மாறிப்போச்சுத்தாச்சி, ஒன்னயமாரி ஆளுக வேணுமின்னா மாறமா இருக்கலாம், ஆனா வெவசாயமும் இப்போ மாரிப்போச்சுத்தாச்சி…” எனச் சிரித்துக் கொண்டே சொன்னவள் சேலை முந்தானையால் திண்ணை தட்டிவிட்டு உட்கார்ந்தாள்.
“சுத்துப்பட்டு எட்ரூலயும் வெவசாயம் சுத்தமாயில்லாமப் போச்சுடி… இங்கனதான் ஏதோ கொஞ்சமிருக்கு. நீ சொல்றமாரி அதுவும் எம்புட்டு நாளக்கின்னுதான் தெரியல. கொல்லக்காடெல்லாம் வீட்டெடமாயிப் போச்சு. பத்துப்பாஞ்சி வருசத்துல வயலெல்லாம் அப்புடித்தான் ஆகப்போவுது. இப்பவே எடுத்துக்கட்டுற வயக போக மத்த வயலுக்கெல்லாம் வரப்பு இருக்கா இல்லயான்னே தெரியல. வெவசாயம் போயி எல்லா வயலும் மொத்தமா காஞ்சி போயிக் கெடக்க கொடுமயப் பாக்குறதுக்கு முன்னால போயிச் சேந்துறணுமுடி” என்றபடி சாவித்திரிக்கு எதிர்த் திண்ணையில் அமர்ந்தாள் கண்ணகி.
“ஆமா… என்னடி காலங்காத்தாலா இங்கிட்டு வந்திருக்கே. எதுவும் முக்கியமான வெசயமா..?”
“ஏ… முக்கியமான வெசயமிருந்தாத்தான் இங்கிட்டு வருவேனாக்கும். சும்மாதேன் ஒன்னயப் பாத்துட்டுப் போவோமுன்னு வந்தேன்”
“ம்… சும்மா வந்தமாரி தெரியலயே… எதயோ சொமந்துக்கிட்டு வந்திருக்கேன்னு ஒம்மொகரக்கட்ட காட்டுதே” சிரித்தாள்.
“அட வேல ஒண்ணுமில்ல அதான் இங்கிட்டு வந்தேன்… உடனே மொகர காட்டுதுன்னு… மொகரயில எழுதியா ஒட்டி வச்சிக்கிட்டு வந்திருக்கேன்” அவளும் சிரித்தாள்.
“நம்பிட்டேன்டி… நம்பிட்டேன்”
“செரி ஒனக்கொரு வெசயஞ் சொல்லுறேன். நாந்தான் சொன்னேனுன்னு ஆருக்கிட்டயும் சொல்லக்கூடாது. செரியா”
“அதானே… சொன்னதுக்கு அதெல்லாம் நொல்லயின்னு சொன்னே. ஏதோ வெசயமிருக்கவுந்தான் நீ காலயில வந்திருக்கே. இல்லேன்னா வருவியாக்கும்… முடிச்ச அவுக்கலயின்னாத்தான் நம்மவளுகளுக்குத் தூக்கம் வராதே. அதுவும் காலயில ஒம்மருமவ விட்டுட்டுத்தான் மறுவேல பாப்பா”
“அவள எதுக்கு இழுக்குறே..? நாம பேசுற கேட்டு எவளாச்சும் ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்தா, என்னய ஆஞ்சிபுடுவா. ம்… செரி சொல்றதக் கேளு… ஒங்க வூட்டுக்குப் பின்னாடி வூட்டுக்காரி… அதேன் ஊரவித்த பொண்ணுப்புள்ள இருக்காளே அவ மவளக் கூட்டியாந்துட்டாகளாம்”
“என்னடி சொல்றே… பாரதிப் புள்ளயவா… அதுவும் இங்கயா..?”
“அவுகளத்தான்… ஆனா இங்க கூட்டியாரல… இப்ப அவ தங்கச்சி வீட்டுல இருக்குதாம். எப்புடியும் ரெண்டு மூணு நாளுல இங்க கூட்டியாருவ போல தெரியுது.”
“நல்லாத்தே… அப்பனாத்தா வேணான்னு வூரு மானத்த போலீசு டேசனுல வச்சி வாங்கிட்டுப் போனவள வூருக்குள்ள விட்டா இங்கயிருக்க ஆம்பளய சீலயக் கட்டிக்கிட்டு மூலயில ஒக்காந்திருக்க வேண்டியதுதான். ஆமா உண்மயாத்தான் சொல்றியா..?”
“அட உண்மதான்… அவ அண்ணனும் அவளுந்தான் இதப் பண்ணியிருக்காக. மாரியப்ப மச்சானுக்கு கூடத் தெரியாதாம்”
“ஆமா தெரிஞ்சா அந்தண்ணன் என்னத்தக் கிழிக்கப் போவுது. அவ சொல்றதுக்கு பூம்பூம் மாடுமாரி தலயாட்டியே அது வாழ்க்கய ஓட்டிருச்சு. ஆமாடி… இம்புட்டுச் சேதி ஒனக்கு யாரு அவுத்தா..?”
“பொண்ணுப்புள்ளயோட கொழுந்தம் பொண்டாட்டிதான் சொன்னா. நீ பாட்டுக்கு அவ எனக்கிட்டச் சொன்னான்னு வேற ஆருக்கிட்டயும் சொல்லிறாத. அப்பறம் என்னயும் அவ கொழுந்தம் பொண்டாட்டியவும் சேத்து நாறடிச்சிருவா”
“ஆமாடி எனக்கு வேற வேலயில்ல பாரு. மூட்டயடத் தூக்கிட்டுப் போயி வீடுவீடா அவுத்துட்டு வர்றதுதானே என்னோட பொழப்பு” கடுப்பானாள்.
“அப்ப என்னய மட்டும் மூட்டய அவுக வந்தேன்னு சொன்னே..? நா ஒண்ணத் தவிர வேற ஆருக்கிட்டயாச்சும் எதயும் சொல்லியிருக்கேனா.”
“செரி கோவிக்காத… நீ சொன்னத எப்ப நா வெளியில சொல்லியிருக்கே சொல்லு. இங்க நாயிக்கு உஸ்சுன்னு ஒக்கார நேரமில்லயாம். இதுல இவுக சொல்றத தூக்கிட்டு ஊருவலம் போறேனாம் ஊருவலம். போடி அங்கிட்டு போக்கத்த சிறுக்கி”
“எதுக்கு இப்ப கோவப்படுறே..? பேச்சு வாக்குல ஆருக்கிட்டயாச்சும் சொன்னா அது அப்புடியே போயிருமின்னு பயத்துலதான் சொன்னேன். எனக்குத் தெரிஞ்சதும் ஒனக்கிட்ட சொல்லணுமின்னு தோணுச்சு. அதான் ஓடியாந்தேன்”
“ம்… வயிறு முட்டச் சாப்புட்டா வெளிய போயித்தானே ஆவணும். நாம சொல்லாட்டியும் வூருக்குத் தெரியாமயா போப்போவுது. இதென்ன சோத்துல முட்டய மறச்சி வக்கிற கதயா..? மாட்டயும் கன்னுக்குட்டியவும் வூருக்குத் தெரியாம ஒட்டியாந்து எம்புட்டு நாளக்கி கசாலக்கிள்ள கட்டி வக்க முடியும்”
“நல்லாச் சொன்னே போ. எப்புடிம் அதோட சத்தம் வெளியில வரத்தான் செய்யும். இதுவும் வெளியில வந்துரும். செரி நாங்கெளம்புறேன்”
“இருடி… பாலு இருக்காது, சுருக்குன்னு வரக்காப்பி போடச் சொல்லவா..?”
“வேணாம். வரும்போதுதான் குடிச்சிட்டுத்தான் வந்தேன்… வாரேந்தாச்சி”
****
இரண்டு நாட்களுக்குப் பின் பொண்ணுப்புள்ள தன்னோட மகளை வீட்டுக்கு கூட்டி வர, ‘ஓடிப்போனவள வீட்டுக்கு கூட்டியாந்திருக்காக’ என்ற செய்தி ஊருக்குள் மட்டுமின்றி பக்கத்து ஊர்களுக்கும் தீயாய் பரவியது.
“அன்னக்கி நாம எல்லாரயும் அவமானப்படுத்திட்டு அவந்தான் வேணுமின்னு போனவளத் திருப்பி எப்புடி வூருக்குள்ள கூட்டியாரலாம். அப்ப ஒம்மவ அன்னக்கி எல்லாரயும் கேவலப்படுத்துனமாரி நீ இப்ப வூரக் கேவலப்படுத்துறியா மாரியப்பா…வூரவிட ஒம்மவ பெரிசாப் பொயிட்டாளா..?” வீட்டு வாசலில் நின்ற கூட்டத்தில் இருந்து முத்துச்சாமி அம்பலம் கோபமாய் கேட்டார்.
“அப்புடியெல்லாமில்ல சித்தப்பா… அந்த நாயி பண்ணுனது தப்புத்தான். ஆச்சு வருசம் ரெண்டு… ஒரு புள்ளயும் பொறந்திருச்சு. நாங்க பெத்ததும் ஒண்ணுதானே சித்தப்பா. எங்களுக்கும் பேரம்பேத்தியக் கொஞ்சணுமின்னு ஆசயிருக்காதா… அதான் ஒங்கமவ சேத்துக்கணுமின்னு சொல்லி கூட்டியாந்துட்டா”
“அப்ப புள்ள பொறந்துட்டா… சேத்துக்கலாமுன்னு தன்னிச்சயா முடிவெடுப்பியளாக்கும். அன்னக்கி அம்புட்டுப் பேருந்தானே போலீசு டேசனுல கெடந்தோம். அப்ப ஒங்களுக்கு ஏந்துக்கின்னு பேச வூரு வேணுமுன்னு தோணுச்சு… இப்ப வூரு தேவயில்லமப் போச்சுல்ல..?” கோபத்துடன் கூட்டத்தின் முன்னே வந்தான் பாஸ்கரன்.
“இல்ல பாசு… நா அப்புடிச் சொல்லல. இன்னக்கி எல்லாரும் மொதல்ல வாழ்வுமில்ல சாவுமில்லன்னு சொல்லிட்டு அப்பறம் சேத்துக்கத்தானே செய்யிறாவ. மேலக்கம்மா செல்வராசு மவளக் கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கலயா..?”
“அவரு செஞ்சா நீயும் செய்வியா.. அப்ப வூருக்கு என்ன மருவாத இருக்குங்கிறேன்” கடுப்பாய் கேட்டார் கேசவன்.
“இல்ல மச்சான்… அப்புடியில்ல. பயலுக்கு சரியான வேலயில்லாம சிரமப்படுதுகன்னு ரெண்டொரு பேரு சொன்னாவ. நாம நல்லாயிருக்கும் போது அதுக ஏஞ் செரமப்படணுமின்னு மச்சினனும் சொன்னான். அதான் கூட்டியாந்துட்டோம்”
“அன்னக்கி முடியாதுன்னு நின்ன நாம செரமப்படுறாகன்னு கேள்விப்பட்டதும் வாத்தா… வந்து இங்க வாழுத்தான்னு கூட்டிக்கிட்டு வந்தா வூரு எதுக்கு… ஒறவு மொற எதுக்குங்கிறேன்… நாம எல்லாருங் கூடி எடுக்குற முடிவெதுக்குங்கிறேன்” கோபமானார் முத்துச்சாமி.
“இல்ல சித்தப்பா… புள்ளயோட வாழ்க்கயும் முக்கியமில்லயா..?”
“அப்ப ஒனக்கு ஒம்மவதான் முக்கியம்… வூரு முக்கியமில்ல அப்புடித்தானே. ஏத்தா பொண்ணு நீயென்ன சொல்றே. எல்லாத்துக்கும் நீதான் பேசுவே. இன்னக்கி என்ன அவனப் பேசவிட்டுட்டு பேசாம இருக்கே.” மீசையை முறுக்கியபடி கேட்டார் கேசவன்.
“அண்ணே… அன்னக்கி அவ பண்ணுனது தப்புத்தான். இப்ப அவ எங்களோட இருக்கட்டுமின்னு கூட்டியாந்திருக்கோம். இருந்துட்டுப் போறாளே. பெரிசுபடுத்தாதியண்ணே” கையெடுத்துக் கும்பிட்டாள்.
“பெருசுபடுத்தாதியன்னா… இந்தா இப்பயிருக்க புள்ளய ஓடிப்போனா ஒரு வருசத்துல கூட்டியாந்து சேத்துபாங்கன்னு நெனக்காதுகளா. ஒனக்கு ஒம்மவளும் மாப்ளயும் பெருசாப் போச்சுல்ல. மாமா வூருக்கூட்டத்தக் கூட்டி, என்ன முடிவெடுக்கணுமோ அத எடுக்கலாம். வேறென்ன செய்யிறது. அதான் பெரிச படுத்தாதியன்னு சொல்றாள்ல. அப்பறம் வூரு முடிவுதானே”
“மச்சான்… பெரிய மனசு பண்ணுங்க மச்சான்… கைப்புள்ளய வச்சிக்கிட்டு செரமப்பட்டுக்கிட்டு இருக்கு. வூருக்கட்டுப்பாட்ட மீறி அந்தப் பயல இங்க வரச் சொல்லல… வரவும் விடமாட்டேன். எம்புள்ள மட்டும் வரப்போக இருக்கட்டுமப்பா… நல்லதக் கெட்டத வாங்கிக் கொடுத்துப் பாத்துக்கிறேன்… பவளமாட்டம் பச்சப்புள்ளய வச்சிருக்கு. வூருல வேற எதுவும் முடிவெடுத்துறாதிய. ஊரப் பகச்சிக்கிட்டு நாங்க எங்க போறது” கையெடுத்துக் கும்பிட்டார் மாரியப்பன்.
“அடேங்கப்பா… இம்புட்டு யோசிக்கிறவுக இங்க அந்த நாயவும் கூட்டியாந்திருக்கக் கூடாதுல்ல மச்சான்…”
“அண்ணே… ஊரு என்ன வேணாலும் முடிவெடுத்துக்கங்க. எம்மவ வெசயத்துல நாந்தான் முடிவெடுப்பேன். என்னோட முடிவுதான் இறுதி முடிவாயிக்கும். அவளுக்கு என்ன செய்யணுமின்னு எனக்குத் தெரியும்… அத நாஞ்செஞ்சிதான் ஆவேன்” எனக் கோபமாய்ச் சொன்ன பொண்ணுபுள்ள, “விடுங்கங்க… இவுக ஒதுக்கி வச்சா வாழ முடியாதாக்கும். போயி வேலயப் பாருங்க”
“என்ன திமிரு பாத்தியளா..? இதுக்கு மேல இங்க நின்னு பேசுறதுல ஒரு காரியமும் இல்ல… இனி வூருக்கூட்டத்துல முடிவு பண்ணிக்குவோம்”
“என்ன முடிவு… வூரவிட்டு ஒதுக்கி வக்கிறதுதானே. அத இப்பவே செஞ்சிட்டா என்னங்கிறேன். இதுக்கு ஒரு கூட்டம் வேற போடணுமாக்கும்”
“பாசு… மேல வூட்டுச் செந்தி மயமூட்டுக்குப் போயிருக்கான். அப்பறம் செவத்தப்பாண்டி செட்டு வேலக்கிப் போயிருக்காப்ல. அன்னக்கி அவங்க ரெண்டு பேருந்தானே போலீசு டேசனுல முக்கியமாப் பேசுனது. அவுக ரெண்டு பேரும் வந்துறட்டும்… முடிவெடுப்போம். அதுவர எல்லாரும் பொறுமையாயிருங்க”

“ஆமா பொறுமயாயிருக்க இதென்ன அங்காளி பங்காளி பெரச்சனயா..? ஓடிப்போனவள வூட்டுக்குள்ள கூட்டியாந்து வச்சிருக்காவ. மத்த வூராய்ருந்தா நம்மளமாரிப் பொறுமயாப் பேசிக்கிட்டு, காத்துக்கிட்டு இருக்க மாட்டாய்ங்க. இந்நேரம் வெளிய இழுத்துப் போட்டு அறுத்திருப்பானுக”
“செய்யலாந்தான். பொட்டப்புள்ளய அறுத்துப் போட்டு என்னத்த சாதிச்சிப்புடப் போறோம். அவ எங்கயோ வாந்துட்டுப் போவட்டும், இங்க இருக்கக் கூடாது அம்புட்டுத்தான். நீ சொல்றமாரி அறுத்துப்புட்டா ஆச்சா… அதுக்கப்பறம் போலீசு கோர்ட்டுன்னு அலயணும். எல்லாரும் வூருக்கூட்டம் போடுற வரக்கிம் பொறுமயா இருங்க”
“வூர விட்டு ஒதுக்கி வக்கிறதென்ன இந்த வூருக்குப் புதுசா..? இல்ல எங்க வூட்டுக்குத்தான் ஒதுங்கியிருக்கது புதுசா..? எங்கலியாணம் முடிஞ்சா நாலாவது மாசம் ஒரு பெரச்சனயில வூரவிட்டு ஒதுக்கித்தானே வச்சிருந்திய… கிட்டத்தட்ட ரெண்டு வருசம் நாங்கயிங்க வாழாமயா இருந்தோம். அப்பறம் ஒவ்வொருத்தரா வந்து பேசி ஒருநா சேத்துக்கிட்டிய… இல்லயில்ல நீங்க எங்ககிட்ட சேந்துக்கிட்டிய. அன்னக்கி எங்கள நீங்க ஒதுக்கல, இந்த வூர நாங்கதான் ஒதுக்கி வச்சிருந்தோம்”
“ஏய் பொண்ணு திமிருப் பேச்ச மொதல்ல கொற”
“எம்புள்ளயக் கூட்டியாந்ததுக்கு நீங்க பேசுனா நானும் பேசத்தான் செய்வேன். நீங்க என்ன வேணுமின்னாலும் முடிவெடுங்க. என்னோட முடிவு இதுதான் எம்புள்ள வெசயத்துல நாந்தான் முடிவெடுப்பேன்” அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள் பொண்ணுப்புள்ள.
“நீ பேச்ச வளக்காத… அவுக முடிவ அவுக சொல்றாக. பேசாம இரு” என அவளை அதட்டிய மாரியப்பன், “எம்புள்ள இங்கனதானிருக்கும். வூரு என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுறோம் ” எனக் கையெடுத்துக் கும்பிட்டார்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றைப் பேசியபடி கலைந்து சென்றார்கள்.
****
“அப்புடியா சொன்னா அந்த எடுபட்ட சிறுக்கி” கேட்டது கண்ணகி.
“ஆமா… வூரெல்லாம் எம்மசுத்துக்குச் சமம்ன்னு பேசுறா…” என்று சொல்லியபடி சொம்புத் தண்ணீரைக் குடித்தார் கேசவன்.
“ஆம்பளய அவளச் சும்மா விட்டுட்டா வந்திய..?”
“வேறென்ன செய்ய… வூரு கூடி முடிவெடுக்கணும்ன்னு அம்புலாரு மாமா சொல்லிட்டாக, மேல பேச என்னயிருக்கு”
“அவள மொதல்ல வூருக்கு வெளிய கொண்டேயி வச்சிக்கங்கன்னு சொல்ல வேண்டியதுதானே. அம்புட்டுப் பேரும் வூட்டுக்குள்ளதான் மீசய முறுக்குறிய. ஒரு பொட்டச்சி இம்புட்டு அகங்காரமாப் பேசியிருக்கா. அவளத் தூக்கிப் போட்டு மிதிக்காம நாவறண்டு போயி வந்து இங்க சொம்புத் தண்ணிய மடக்கு மடக்குன்னு குடிக்கிறிய”
“பொம்பள மேல கய்ய வச்சா ஒடனே கேசு கீசுன்னு போயிருவா. செந்தியும் பாண்டியும் இல்லாததால இன்னக்கி வூரு கூடல. நாளக்கி கூடி முடிவெடுத்துருவோம்”
“எம்புட்டு திண்ணக்கம் அந்த முண்டக்கி. தயிரியமாத்தான் கூட்டியாந்து வச்சிருக்கா பாத்தியளா..? மாப்புள்ளயக் கூட்டியாரலயா விருந்துக்கு”
“அவனக் கூட்டியார மாட்டாளாம். ஆனா அவ ஒண்ணு சொன்னாடி… அதான் எனக்கு யோசனயாயிருக்கு”
“என்ன பேத்திக்கி வூரு ஒறவெல்லாம் கூடி பேரு வக்கணுமின்னு கேட்டுக்கிட்டாளா..?”
“இவ ஒருத்தி”
“பின்னே…”
“எம்மவளுக்கு என்ன செய்யணுமின்னு எனக்குத் தெரியும்ன்னு சொன்னா…”
“இதுல என்ன ஒங்களுக்கு யோசன… இங்க வச்சிக்கப் போறா அம்புட்டுத்தான்”
“அவ ஏதோ இக்கு வச்சிப் பேசுற மாரியிருக்கு… பார்ப்போம்”
****
மறுநாள் இரவு…
ஊர் ஆண்களெல்லாம் கோவில் அன்னதான மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.
ஆரம்பத்தில் வேறுவேறு விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் மெல்ல மெல்ல பேச வேண்டிய விசயத்துக்கு வந்தார்கள்.
என்னதான் பேசி முடிவெடுக்கிறார்கள் என்பதைக் காண பெண்கள் கோவிலைச் சுற்றியிருக்கும் வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்திருந்தார்கள். கண்ணகி வீட்டு வாசலிலும் சிலர் அமர்ந்திருந்தார்கள்.
பேச்சு சூடு பிடிக்காமல் போய்க் கொண்டிருந்த போது, கண்ணகி சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னே கசாலைப் பக்கமாய் போனாள்.
“வேணான்டி அந்தப் பாலகன ஒண்ணும் பண்ணிறாதடி” மாரியப்பனின் கெஞ்சல் குரல் கேட்கவும், ‘ஆத்தி என்னமோ பண்ணுறாளே… இந்த பொண்ணுப்புள்ள’ என மனசுக்குள் ஓட, பதைபதைப்புடன் அவளின் வீட்டு ஓரமாக் கிடந்த வழித்தடத்தில் மெல்லக் காலடி வைத்து நகர்ந்தாள்.
“ஊரே கோயில்ல கூடியிருக்கும்போது இப்புடிப் பண்றியேடி. இதுக்குத்தான் இங்க கூட்டியாந்தியா… இதுக்கு ஒங்கண்ணனும் ஒடந்தயா..? ரெண்டு வருசமா அதுக பாட்டுக்கத்தானே இருந்துச்சுக. இப்ப வாழ வக்கிறேன்னு கூட்டியாந்து இந்த வேல பாக்கலாமாடி… பாவம்டி. இந்தப் பாவத்தயும் நாம சொமக்கணுமா..? அது பாட்டுக்கு கண்காணாத எடத்துல கண்ணக் கசக்கிக்கிட்டு வாழ்ந்தாலும் சந்தோசமாயிருந்திருக்குமே. அத விட்டுடிடி. அது அங்கயே போயி வாழட்டும்” அழுகையோடு மாரியப்பன் பேசியதைக் கேட்டதும் கண்ணகிக்கு சூழல் விளங்க, “ஆத்தி… கொலகாரச் சிறுக்கி… என்னடி பண்ணுறே… குடும்பத்தக் கவுத்திட்டியாடி” எனக் கத்தியபடி பொண்ணுப்புள்ள வீட்டு வாசலில் போய் நின்றாள் கண்ணகி.
அவளைப் பார்த்ததும் “”வாத்தா… எம்புள்ளக்கி என்ன செய்யணுமின்னு எனக்குத் தெரியும்ன்னு வூராரு முன்னால சொன்னப்போ எனக்குப் புரியல. இப்ப இவ செஞ்சிருக்கதப் பாருத்தா. மவளுக்கு சாப்பாட்டுல மருந்தக் கலந்து கொடுத்து, அது மயக்கமா கட்டில்ல கெடக்கு. இப்ப இந்தப் பாலகனுக்கு…” பேச முடியாமல் விம்மினார்.
அவளின் கையில் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு வலுக்கட்டாயமாக பால் பாட்டிலில் இருந்த பாலைக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த பொண்ணுப்புள்ள, “நீ எங்கடி இங்க வந்தே… மரியாதையாப் போயிரு. எம்புள்ளக்கி என்ன செய்யணுமின்னு எனக்குத் தெரியும்” எனக் கத்தினாள்.
“ஏன்டி என்ன வேல பாக்குறே. ஓடிப்போனவள அப்புடியே விட வேண்டியதுதானே. அவதான் ஆத்தா அப்பன் ஊரு ஒறவு எதுவும் வேணான்னுதானே போனா. பின்ன இங்க இழுத்தாந்து வூரானுக சேந்து கொன்னுபுட்டானுகன்னு பலியச் சொமக்க வக்கப் பாக்குறியா..?” எனக் கத்தியபடி அவள் கன்னத்தில் அறைந்து, பாட்டிலைத் தட்டிவிட்டு, குழந்தையைப் பறித்து வேகமாய் வாய்க்குள் சேலைத்தலைப்பை விட்டுத் துடைத்தாள்.
“இந்த நாயக் கொல்லணும்டி… இவ பெத்த வயித்த எரிய வச்சிட்டு ஊரு சிரிக்க கேவலப்படுத்திட்டுப் போனவ” ஆங்காரமாய்ச் சொன்னாள் பொண்ணுப்புள்ள.
“அடச்சீ… அவள இங்க கூட்டியாந்ததுதான் தப்புன்னு வூரு சொல்லுதே ஒழிய, கொல்லச் சொல்லல… அதுகள வாழ விடுடி” என்றபடி குழந்தையின் வாய்க்குள் விரல் விட்டு ஓமட்ட வைத்தாள்.
“அண்ணே புள்ளயக் காப்பாத்தனும்… எல்லாரும் கோவில்ல இருக்காக. நீங்க ஓடிப்போயி காளியக்காக்கிட்ட வெபரஞ் சொல்லி, அது பச்செல மருந்து வச்சிருக்கும், அத எடுத்துக்கிட்டு வெரசா வரச் சொல்லிட்டு கோவிலுக்கு ஓடி ஆளுங்களக் கூட்டியாங்கண்ணே… ” எனக் கத்திவிட்டு, குழந்தையை இடுப்பில் அணைத்தபடி கட்டிலில் கிடந்த பாரதியை தட்டி எழுப்பினாள். அவள் எழவில்லை.
மாரியப்பன் காளியம்மா வீட்டுக்கு ஓடிய அதே நேரம், அவனைக் கூட்டத்துக்கு அழைத்து வர ஊரார் அனுப்பிய பாஸ்கரன் வந்து சேர்ந்தான்.
அவனிடம் கண்ணகி விபரம் சொன்னதும், “ஆத்தி… பெத்த புள்ளயவும், பாலகனயும் கொன்னுபுட்டாளே… கொலயறுத்துட்டாளே பாதகத்தி” என ஊரே அதிரும்படி கத்தினான்.
பாஸ்கரனின் குரல் இரவைக் கிழித்துக் கொண்டு பனங்காட்டுக்குள் எதிரொலித்து, கோவில் அன்னதான மண்டபத்தில் கூடியிருந்தவர்களை மட்டுமல்லாமல், ஆங்காங்கே உட்கார்ந்திருந்த பெண்களையும் உலுக்கி, ஓடிவர வைத்தது.

பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.

