கான்ஸ்டேபிள் காத்த முத்து, ஓட்டுநர் இருக்கையிலிருந்து எழுந்து சுற்றிவந்து ஜீப்பின் கதவைத் திறந்தான் ” ஐயா! கடை வந்தாச்சு. நானும் கூட வரணும்னா சொல்லுங்க” என்றான் ” இல்லை! நான் பார்த்துக்கறேன்,” என்ற இன்ஸ்பெக்டர் செண்பக நாதன், பின்னிருக்கையில் இருந்த தன் மகன் செந்திலைப் பார்த்து,”வாடா! வேண்டியதை வாங்கிக்கோ” என்றார்.
அலைபேசியில் மேய்ந்து கொண்டிருந்த செந்தில்,மெல்லிய சீழ்க்கை ஒலியுடன் உற்சாகமாக இறங்கி வந்தான். அந்தப் பெரிய ஆயத்த ஆடைகளின் அங்காடியின் முதலாளி விரைவாக முன் வந்து முகமன் கூறி அவர்களை தனது தனியறைக்கு அழைத்துச் சென்று காஃபி வரவழைத்து உபசாரம் செய்தார். ஒரு பொத்தானை அழுத்தி கடை மேலாளரை வரவழைத்து. “இவர்களை அழைத்துச் சென்று நீங்களே தனிப்பட்ட முறையில் இவர்கள் விருப்பப்படி ஆடைகளை எடுக்க உதவும்படி பணித்தார். மிக்க மரியாதையுடன் அவர்களை அழைத்துச் சென்று வித விதமான உயர்ந்த விலையுள்ள ஆயத்த உடுப்புகளை காண்பிக்கவும், செந்தில் ஆர்வ மிகுதியால் ஐந்தாறு ஜோடி உடுப்புகளை தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவன் அப்பா அவைகளின் விலையைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இருந்தது அவனுக்கு சற்றே வியப்பாக இருந்தது. எப்போதும் அவன் தன் சங்கம்மாவுடன்தான் வருவான். ஒரு ஜோடி உடுப்பு எடுப்பதற்கே இரண்டு மணிநேரம் ஆகிவிடும். விற்பனையாளர்
நொந்து நூலாகி விடுவார். ஒரு உடுப்பை இவன் கையால் சுட்ட விற்பனையாளர் எடுத்துப் போட்ட அடுத்த நிமிஷம், சங்கம்மா ஒரு விரல் துழாவலில் அதன் விற்பனைச் சீட்டை வெளியே எடுத்து ” ஆத்தாடி! இம்புட்டு வெலெயா? கொஞ்சம் சல்லிசா எடுத்துப் போடு; தம்பி” என்று சொல்ல,அவனை அவமானம் பிடுங்கித் தின்னும். விற்பனையாளரின் கிண்டல் பேச்சு அவனுக்கு மேலும் வேதனையை அளிக்கும். நக்கல் பார்வையில் தெரியும் இளக்காரத்தில் அவன் முகம் சிவக்கும். எவரிடம் கோபம் கொள்வது என்று புரியாமல் அவன் பேரிலேயே அவனுக்குக் கோபமும் சங்கம்மாவிடம் எரிச்சலும் ஏற்படும். இப்படி, அப்படி என்று பார்த்து இரண்டு உடுப்பு வாங்க இருபது கடை ஏறி இறங்குவார்கள். இறுதியில் அவன் விருப்பப்படி விலையிலும், ஸ்டைலிலும் உடுப்பு வாங்காத வருத்தம் மேலிடாத நாளே இல்லை. சங்கம்மாவும் மெல்லிய குரலில் முணுமுணுப்பாள். ‘ இந்த தரமும் ஐநூறு ரூபாய் கூடிடுச்சு’ என்று குறைப் பட்டுக் கொள்வாள். அவள் புடவை ஒரு நாளும் எழுநூறு; எண்ணூறு ரூபாய்க்கு மேல் இருக்கவே இருக்காது, என்ற உண்மை உரைக்க; செந்தில் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்வான்.தனக்காக வாழாமல் அவனுக் கென்றே வாழும் தன் அம்மாவைப் பார்த்து, மிகவும் பச்சாதாபம் கொள்வான். தான் படித்து வேலை பார்த்து வரும் சம்பளத்தில் அம்மாவுக்கு விலைச் சீட்டை பார்க்காமலேயே உயர்ந்த விலையில் புடவைகள் வாங்கித் தரணும், என்ற நினைப்பு வர, சங்கம்மா மேலிருந்த கோபம் மாயமாய் மறைந்து விடும் அவனுக்கு.
அப்பா இந்த பெரு நகரில் போலிஸ் இன்ஸ்பெக்டராக இருந்தும், அம்மாவின் பாதுகாப்பில் தான் அவன் இருக்கிறான்.அரசு உயர் நிலைப் பள்ளியில் கணக்கும், ஆங்கிலமும் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சின்னஞ் சிறிய வயதில், ஏதோ ஒரு கோபத்தில்,உரத்த குரலில் அப்பா ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க அம்மா,’ஆம்! நிச்சயமாகத் தான் நான் போகிறேன்’ என்றபடி கண்ணில் நீர் வழிய ,உறுதியாக காலடி எடுத்து வைத்து, போலிஸ் குடியிருப்பு வளாகத்தில் இருந்த லயன் வீட்டிலிருந்து வெளியேறியது; நிழல் போல் நினைவில் இருந்தது. அப்பா அம்மாவிடம் அந்த நாளுக்கு முன் கோபம் கொண்டதே இல்லை. உயர்ந்த குரலில் கூட பேசமாட்டார். நேரத்திற்கு வீட்டுக்கு வரமாட்டார். அவர் வேலை அப்படித்தான் இருந்தது. அம்மா அதில் குறைப்பட்டுக் கொள்ள மாட்டாள். எல்லா நாளும் அவர் வரும்வரை காத்திருப்பாள். இரவு சாப்பாடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். செந்தில் அவர்கள் பேச்சுக் குரல் கேட்டு விழித்துப் பார்த்தால் அம்மாவின் முகம் மகிழ்ச்சியில் விரிந்திருக்கும். அப்பா அம்மாவிடம் தணிந்த குரலில் பேசிக்கொண்டே ‘ நீ என்ன சொல்றே” என்பது மட்டும்தான் அவனுக்குக் கேட்கும்.தூக்கம் கண்ணைச் சுழற்ற மீண்டும் உறங்கி விடுவான். காலை அவன் விழிக்கும் போது அவர் சீருடையில் தன் வேலைக்குத் தயாராகி காலை உணவு அருந்தி கொண்டு இருப்பார். அவனைக் கட்டி முத்தமிட்டு. அம்மாவிடம் தலையசைப்பில் விடை பெறுவார். அமைதியாகவும் இன்பமாகவும் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் சுழல் காற்றும் சர மழையும், சுழன்று அடித்து, அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.அவன் காரணம் புரியாமல் அவன் அம்மாவோடு கூட அவள் விரல் பிடித்து வெளியேறி தன் அம்மாச்சி வீட்டுக்கு வந்ததுதான் தெரியும். அதற்கு அப்புறமாக ஒரு நாள் கூட அப்பா அவர்களுடன் வந்து தங்கினதாக அவனுக்கு ஞாபகமே இல்லை. வாரம் ஒரு முறை., அல்லது ஏதாவது விடுமுறை நாட்களில் அப்பா அவர்கள் வீட்டு வாசலுக்கு தன் மோட்டார் பைக்கில் வருவார்.” அம்மா அவனிடம், ராத்திரி ரொம்ப நேரம் ஆக்காமல் நேரத்துக்கு வீடு வந்து சேர். எதுவும் வாங்காதே. வாங்கினாலும் அந்த வீட்டிலேயே வைத்துவிட்டு வரணும். போனோமா; அப்பா கூட இருந்தோமா; ஜாலியாக இருந்தோமா; என்று சமர்த்தா போயிட்டு சமர்த்தா வரணும். சொல் பேச்சு கேட்டு நடந்துக்க” என்று அவனுக்கு சொல்லிவிட்டு எங்கோ பார்த்தபடி ஆறு மணிக்கெல்லாம் செந்திலை கொண்டுவந்து விட்டுருங்க. தேடும்படி வெச்சுக்காதீங்க. அப்புறம்.. வேண்டாம்; உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் ” என்று ஒரே நாள் சொன்னதுதான். அப்பாவும் ‘ சரி’ என்ற ஒற்றைச் சொல்லுடன், நிறுத்திக் கொண்டார். சில சமயங்களில் அம்மா வேறு ஏதும் சொல்வாளோ; என்று காத்திருப்பார். அம்மா வெற்றுப் பார்வையுடன் வீட்டினுள்ளே போய் விடுவாள். ஒரு நாளும் அந்த ஆறு மணிக்குப் பின் வீடு திரும்பியதே இல்லை. அம்மா வாசலிலேயே காத்திருந்து உள்ளே கூட்டிப் போவாள். விவரம் தெரியாத வயதில் ‘அப்பா! உள்ளார வாங்கப்பா! என்று விரல் பிடித்து கூப்பிடுவான். சிலசமயம் அழுது முரண்டு பிடித்து அழுவான். அப்பா எதற்கோ காத்திருந்த மாதிரி இருக்கும். அம்மாவின் ஒரு அனுமதி சொல்லுக்கோ; தலையசைப்புக்கோ?
அம்மா அவனை அமைதியாய் வீட்டினுள் அழைத்துக் கொண்டுபோய் சாமர்த்தியமாக அவனை சமாதானப் படுத்துவாள் ஒரு நாளும் அவள், அப்பாவைப் பற்றியோ, அப்பாவின் வீட்டைப் பற்றியோ,அவன் நாளை எவ்வாறு கழித்தான், என்பதையோ கேட்டுக் கொள்ள மாட்டாள். அவன் ஆர்வ மிகுதியால் ஏதாவது சொன்னால் மலர்ந்த முகத்துடன் கேட்டுக் கொள்வாள். சில நாட்கள் ‘நீயும் வாம்மா! நாமெல்லாம் ஜாலியாக இருக்கலாம் என்று கூப்பிடுவான். அம்மா ஒரு தலையசைப்பில் தன் பதிலைச் சொல்லி விடுவாள். அப்பாவும் அம்மாவிடம் ஒன்றும் பேசிக் கொள்ளமாட்டார். அப்பா வீட்டுக்குப் போவது செந்திலுக்கு மிகவும் பிடிக்கும். அவனுக்குத் தனியாக ஒரு அறை; நடுவில் கட்டில்; கடல் நுரை என மெத்தை;விளக்கை அணைக்க, அண்ணாந்து பார்க்க முழுநிலவு நட்சத்திரங்களின் மினுங்கு என்று அட்டகாசமாக இருக்கும். சன்னல் கதவுகளையும், அறைக்கதவையும் அழுந்த சார்த்தி; அந்த இருட்டில் மெத்தையில் படுத்த வண்ணம்,அந்த மாய ஆகாச வெளியில் நடப்பது போல் கற்பனையில் மிதப்பான். ஒரு நாள் இரவாவது அதில் படுத்துத் தூங்க வேண்டும் என்ற ஆசை மேலிடும். ஆனால், எங்கே; சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா ”செந்தில் ! கெட் ரெடி டு கோ ஹோம்” என்று குரல் கொடுத்து விடுவார். ‘இதுவும் என் வீடுதான்’ என்று உள் மனது கூவும். ஆனால் புத்திக்குத் தெரியும்; அம்மாவின் வீடுதான்,அவன் வீடு என்பது.
அப்பா வெளியே சினிமா ஐஸ்க்ரீம் பார்லர், கடற்கரை சொகுசான சலூன், தீம் பார்க் என்று எல்லா இடத்திற்கும் கூட்டிப் போவார். அப்பா வீட்டுப் பக்கத்தில், அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் . சில பையன்கள் அவன் வகுப்புத் தோழர்களாயும் இருந்நனர். அவர்களும் தன் பெற்றோருடன் சில சமயம் வருவார்கள். அவர்களில் பலரும் அவன் அம்மாவின் நலம் பற்றி விசாரிப்பார்கள்.
அவனுக்குத் தனியாக துணி அலமாரி. அது வித விதமான உடுப்புகளால் நிரம்பி வழிந்தது. ஆனால் ஒரு நாளும் இவற்றில் ஒன்றுகூட அவன் அம்மா வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது.அவன் அப்பா அவனுக்கு பாடப்புத்தகங்கள் இன்னுமொரு செட் வாங்கி வைத்திருந்தார். சனியும் ஞாயிறும் அவனுக்கு கணக்குக்கும் ஆங்கிலத்திற்கும் ஸ்பெஷல் ட்யூஷன் ஏற்பாடு செய்திருந்தார். எந்த விதத்திலும் அம்மா, சங்கம்மாவின் விதிமுறைகளை மீறாமல் இருந்தார். இவர்கள் சேர்ந்து இருந்து தானும் அவர்களோடு வாழ்ந்தால் எவ்வளவு இன்பமாய் இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வான்.
செந்தில் ஏழாவது படிக்கும் போதுதான் அவனுக்குத் தெரிந்தது; அவன் அம்மாவும் அப்பாவும் தனித்தனியாக வாழும் தம்பதியினர்;என்று. அது நாள் வரை அவன், “அவர்களைப் பற்றி , என்ன நினைத்திருந்தான்” என்று எவரேனும் கேட்டால், அவனிடம் அதற்கு பதில் ஒன்றும் இல்லை. அவர், செண்பக ராமன், அவனுடைய அப்பா. சங்கம்மா, அவனுடைய அம்மா… அவ்வளவுதான் அவனுக்கு தன் தெரியும். இவ்வளவுதான்!
அப்பாவின் நண்பர் ஞானமுத்து தான் சொன்னார்; “அது பற்றி. இரண்டு பேருக்கு இடையில் பெரிய மனஸ்தாபம் ஒன்றும் இல்லை. சந்தோஷமாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரிந்து விட்டார்கள். யார் கண் பட்டதோ;இன்றுவரை இருவரும் ஒற்றைப் பனையாக வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் ஒருபோதும் விவாகரத்துக்கு முயலவில்லை. தங்களது இன்பமான நினைவுகளின் நிறைவில் வாழ்ந்து வருகிறார்கள். அவன் ஒரு நாளும் உன் அம்மாவைப் பற்றி குறைவாகவோ கோபமாகவோ பேசியதே இல்லை. என்னமோ; இப்படி ஒரு தலையெழுத்து இருவருக்கும்.” அப்போது அவன் நினைத்துக் கொண்டான் ” அவன் அம்மாவும் அப்பாவைப் பற்றி ஒரு குறையும் சொன்னதில்லை. இருவரும் இந்த “தனி” வாழ்க்கையை ஏற்றுக்கொண்டது; ஒருவர் பால் ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை, மற்றும் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே என்று புரிந்தது.இதைக்கூட அவர்கள் இருவரும் தன்னிடம் சொல்லவில்லை, என்பதில் அவர்கள் மீது இருக்கும் மரியாதையை அதிகரிக்கவே செய்தது.
அதன்பின் செந்தில் இருவரிடமும் தேவையற்ற கேள்விகளை எழுப்பாமல் இருக்கக் கற்றுக் கொண்டான். அம்மாவின் வீட்டில் மத்தியதர குடும்ப வாழ்வு: அப்பாவின் வீட்டில் அரசிளங் குமரன் போன்ற வாழ்வு. பழகிக் கொண்டான்… இருவரிடமும் சேர்ந்து வாழ. ரொம்பவும் கடினமில்லை. இருவருக்கும் உயர்ந்த எண்ணங்கள்; உயர்ந்த நிலைப்பாடு, கட்டுப்பாடான வாழ்க்கை முறை. இருவரும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார்கள்.
அம்மா அரசின் கடன் உதவியுடன் ஒற்றைப் படுக்கையறையுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கி புதுமனை புகு விழாவுக்கு அப்பாவின் நண்பர்கள் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடந்த அந்த நிகழ்வுக்கு தன் அப்பா வரவில்லை என்பதில் செந்திலுக்கு வருத்தம்தான். என்ன செய்வது ? இது இரு சுய மதிப்பு மிக்க இரு பெரியவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ,’சிறு பையன் நான் சொல்ல என்ன இருக்கிறது;’ என்று நினைத்து வாளாவிருந்தான். அப்பாவும் மனை வாங்கி தனிவீடு கட்டினார் .செந்திலை வந்து அழைத்துப் போனார். அன்று மட்டும் இரவு புது வீட்டில் தங்க அனுமதியுடன். வீடு சிறு தோட்டத்தின் நடுவில் ” சங்கம்- மித்ரா” என்ற பெயர் பலகை,காலை வெயிலில் தங்கம் போல் ஜொலித்தது. “அம்மாவின் பெயர் தான்… மித்ரா என்றால் என்னப்பா அர்த்தம்?” என்று செந்தில் கேட்க முதன் முறையாக அப்பாவின் கண்ணில் கண்ணீர்.” மித்ரா என்றால் தோழி என்று அர்த்தம்” என்று கூறி வேகமாக அவனை விட்டு நகர்ந்துவிட்டார். செந்தில் நினைத்துக் கொண்டான்… அப்பா பாவம்! அம்மாவும் பாவம்! நானும் தான்”
நேற்று செந்திலுக்கு சென்னை அண்ணா யுனிவர்சிட்டியிலிருந்து சேர்க்கை கடிதம் வந்ததும் தொலை பேசியில் அப்பாவுடன் பேசியில் இதைப் பகிர்ந்ததும், அப்பா ஃபோனை ஒலி பெருக்கியில் மாற்றச் சொல்லி,அவன் அம்மாவும் கேட்டுக் கொள்ளட்டும் என்றே, பேசினார்.உன் அம்மாவுக்கு என் நன்றிகள். உன்னை அருமையாக வளர்த்திருக்கிறாள். கல்லூரி வாசல் கூட மிதிக்காத என்னை, என் குண நலனுக்காக மட்டிலும் திருமணம் செய்ய இசைந்திருந்தாள். ஆரம்ப காலங்களில் அவள் என்னை விட அதிகம் படித்திருந்தும் , அதிக சம்பாத்தியம் பண்ணிக் கொண்டிருந்தும்; அவை எதுவும் எங்கள் அன்புக்கு இடையே வர வில்லை. அவளை நான் எங்கோ ஒரு இடத்தில்… ஏதோ ஒரு நிலையில் தவற விட்டு விட்டேன். நீ கட்டுக்கோப்புடன் படித்து,வளர அவளே காரணம் நீ இந்த புகழ் வாய்ந்த கல்லூரியில் சேரும்சமயம் நானும் உடன் வர விரும்புகிறேன். இனியாவது உன் படிப்பு செலவுகளை நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். என் நியாயமான கோரிக்கைக்கு இனியாவது மனம் கனிவாளா ; தெரியவில்லை. என் மனம் அமைதியின்றி தவிக்கிறது.
அவளுடைய அந்த பட்டுப் புடவை பெட்டியும் , ஜிமிக்கி அடங்கின வகைப் பெட்டியும் தான் இவ்வளவு நாளாக என்னை வழி நடத்திக் கொண்டு இருக்கிறன. நான் ஒரு நாளும் நாணயமற்ற முறையில் சம்பாதிக்கவில்லை. எந்த முறைகேடான விஷயங்களுக்கும் நான் துணை போகவில்லை. நான் நேர்மையுடன் சம்பாதித்த பணத்தை என் மகன் உயர் படிப்புக்காக செலவழிக்க அனுமதி அளிக்க வேண்டும். நான் கல்லூரியில் படித்திருந்தால், என்றோ நான் நான் காவல் துறையில் உதவி கண்காணிப்பாளர் ஆகியிருக்கலாம். இவ்வளவு நாட்கள் கழித்து பணிமூப்பு முதன்மை முறையில் சென்னையில் எனக்கு இந்தப் பதவி அடுத்த வாரம் முதல் கிடைக்க இருக்கிறது. நீ விடுதியில் இருந்தாலும் அங்கு இருக்கும் அப்பாவின் வீட்டிற்கு வார இறுதியில் வந்து தங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக உனக்கு நான் உள்ளூர் காப்பாளராக பதிவாக வேண்டும்; உன் அப்பாவாக… செந்திலின் அப்பாவாக. இந்த அங்கிகாரம் இனியும் எனக்கு மறுதலிக்கப் படக்கூடாது.” என்று பேசும் போதே அவருடைய குரல் உடைந்து விம்மும் ஒலி செந்திலை வாட்டி வதைக்க, ” அப்பா! அழாதீங்க! நீங்கள்..தான் சென்னையில் எனது காப்பாளர்.என் அப்பாவாக. நான் அம்மாவிடம் பேசுகிறேன்” என்று சொல்லி ஃபோனை துண்டித்த நிமிடம் , அம்மா சங்கம்மாவை நிமிர்ந்து பார்க்க; அவள் கண்ணீரிலும் நீர் ததும்பி நின்றிருந்ததைக் கண்டான்.”என்னம்மா சொல்கிறாய் என்பதற்கு தலையசைப்பில் ஒப்புதல் அளித்தாள்.” தம்பி! செந்தில்! கல்லூரியில் வந்து முறைப்படி அவரே உன்னை சேர்த்து விடட்டும். நீ வளர்ந்து விட்டாய். நல்லது, பொல்லாதது இரண்டும் அறியும் படி நான் உன்னை வளர்த்திருக்கிறேன். இனி உன் வாழ்க்கை உன் விருப்பம். உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யும் மனத் துணிவு உனக்கு வேண்டும். எந்த ஆணையும் உனக்கு உன்னிடத்தில் இருந்தே வரவேண்டும். வெளியுலக மாசுக்கள் உன் மனதில் புகலா வண்ணம் பார்த்துக் கொள்ள, நீ என்னிடத்தில் பார்த்து அறிந்த வாழ்வின் கோட்பாடுகள் உனக்கு உதவும். நாளை உன் அப்பா உனக்கு உடுப்புகள் வாங்க அழைத்துப் போவார்.
அப்போது என் சம்மதத்தைச் சொல்லலாம். வா!இப்போது சாப்பிட்டு உறங்கலாம்” என்றாள் செந்திலுக்கு எங்கேயிருந்து அந்த துணிவு வந்ததோ; அவனே அறியாமல் அம்மாவின் கை பிடித்து நிற்க வைத்தான்.
“அம்மா! அப்பா உன் பட்டுப்புடவையையும்
ஜிமிக்கியையும் பற்றிப் பேசினாரே; என்ன விஷயம்” என்று கேட்க; ” சரி! இன்றில்லா விட்டாலும் ஒரு நாள் உனக்கு தெரியத்தான் போகிறது. இன்று நானே அதை உனக்குச் சொன்னதாக இருக்கட்டும். பதினைந்து வருடங்களாக, நான் அவரை விட்டு வந்த. அதன் காரணம்’ அந்த பட்டுப்புடவையும் ஜிமிக்கியும்தான்” அந்த தீபாவளிக்கு இருபது நாட்களுக்கு முன் உன் அப்பா, அவற்றை வாங்கி வந்து எனக்குக் கொடுத்தார். அவ்வளவு பெரிய தொகை கொடுத்து பட்டுப்புடவையும் ஜிமிக்கியும் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியோ, வளமையோ, இல்லை. ‘எப்படி வாங்கி வந்தீர்கள்’ எனக் கேட்டதற்கு அவருடைய உயர் அதிகாரி,கடைகளில் தனது பதவியை தவறாக பயன் படுத்தி வாங்கும் போது உன் அப்பாவுக்கும் இதை வாங்கிக் கொடுத்துள்ளார்; முற்றிலும் இலவசமாக. நான் இதைக் கண்டித்தும் கேட்க வார்த்தைகள் தடித்தன. அந்த உயர் அதிகாரி பணமாக கையூட்டு வாங்காமல், பொருட்களாக வாங்க, உன் அப்பா வெளியே இதை சொல்லாமல் இருக்க; அவருக்கு இவைகளை பரிசாக; ஒரு வித இலஞ்சமாக, கொடுத்துள்ளார். நான் அவற்றை உடனே அவரிடமே கொடுத்து விடக் கோரினேன். அதிகாரி மேல் உள்ள அச்சத்தில் அதை செய்ய மறுத்தார்.கடைக்காரரிடம் திருப்பச் சொன்னேன். அதையும் செய்ய மறுத்து விட்டார். அதிகாரிக்கு எப்படியும் தெரிந்துவிடும்; என்ற பயத்தில். நான் இறுதியாக ஒன்றை செய்யச் சொன்னேன். எப்போதும் அச்சத்தில் அவரை நிறுத்தி அவரை தீய வழிக்கு இட்டுச்செல்லும் வேலையே வேண்டாம். என் அரசு வேலை உள்ளது. நாம் நியாயமாக பிழைத்துக் கொள்ளலாம்; அவரும் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் ;என்று. அப்போதுதான் தெரிந்தது” அவர் அந்த வேலையை கையூட்டு கொடுத்து வாங்கியிருந்தார்; என்பது. இந்த வேலை மேலும் மேலும் அவர் நாணயத்தை கீழே இழுக்கும் என்பதாக எனக்கு பயம் வந்தது. மேலும் தீவிரமாக இந்த வேலையை விடச் சொல்ல; அவருக்கு தனது போலிஸ் வேலையை, அதுவும் செலவு பண்ணி வாங்கிய வேலையை விட மனதில்லை.எனது முயற்சியில் நான் தோற்க;இந்த பாவக் குற்றம் உள்ள வாழ்வு எனக்கு வேண்டாம்; என்று நான் அவர் வீட்டை விட்டும் ,அவரை விட்டும், வெளியேறி வந்துவிட்டேன்.இத்தனை நாளும் நாங்கள் பிரிந்திருப்பதின் காரணம்; இதுதான். இதை எவரிடமும் நாங்கள் பகிர்ந்ததில்லை. அத்தனை அன்னியோன்னியமாக இருந்த இளம் தம்பதியினர் பிரிவதற்கு இருந்த காரணம் இதுதான்; என்பதை எவராலும் நம்பமுடியாது; யூகிக்கவும் முடியாது. அதற்கு அப்புறம்,அவர் எந்த தவறான விஷயத்திற்கும் உடன் போகவில்லை என்பதை அறிந்தே உள்ளேன்.எங்கள் பிரிவு, அவருடைய வாழ்க்கையின் நெறியை செம்மைப் படுத்தியது மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் கூட்டியது.அதுமட்டுமல்ல; நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள விஸ்வாசத்தையும் கூட்டியது.
ஆயினும் அவர் ஒரு நாளும் வந்து என்னை ” வா” என்று அழைத்துப் போக இன்று வரை வரவில்லை. என் சுய கௌரவம்; நானே அவருடன் சென்று வாழ இடம் கொடுக்கவும் இல்லை. அவர் நெறியுடன் வாழ்ந்த திற்கான பரிசு உன் வரவில் அவருக்குக் கிட்டியது. உன்மேல் அவர் காட்டிய அன்பு, கரிசனம்,என்மேல் அவருக்கு இருக்கும் ஃப்ரேமையின் ஒரு திவலைதான்.
இப்போது நீ தெளிவடைந்திருப்பாய்; அல்லவா? எங்கள் பிரிவு அவரை நெறிப் படுத்தியுள்ளது. அது போதும் எனக்கு. நாங்கள் பிரிந்தே இருந்தாலும் சேர்ந்தே தான் வாழுகிறேம். இது எங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதாதா? ஆம்! சிலசமயம் தனிமை வாட்டும். உன் அருகாமை எனக்கு மருந்தாய் அமையும்; அவருக்கும் அப்படியேதான் இருக்கும் என நான் உணருகிறேன். அதனால்தான் உன்னை அவரிடம் செல்ல தடையேதும் என்றும் நான் சொன்னதில்லை” என்றாள்; சங்கம்மா.
“அவர் வாங்கிக் கொடுக்கும் சாமான்களை,ஏன் ஒருநாளும் இந்த வீட்டிற்குக் கொண்டுவர நீங்கள் அனுமதிக்கவில்லை?” என்று செந்திலின் அடுத்த கேள்வி.” ஆமாண்டா! அவர் வாங்கிக் கொடுக்கும் விலையுயர்ந்த பொருட்கள், எனது வாழ்க்கைத் தரத்திற்கு ஒவ்வாதது. அதற்கு உன் மனது பழக்கபட்டுவிடுமானால், உனக்கு இந்த சாதாரண வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விடும். இருக்கிறதை அனுபவிக்காமல் , பறப்பதற்கு ஆவலாதி அதிகமாகும். மேலும் ஒரு விஷயத்தை “விடுதல்” என்பது விடுதலை.எதையும் எப்போதும் விடக் கற்றுக் கொள்வது நல்லது. அன்பு, பாசம், பொருள், சுகம், துக்கம், பதவி, ஆணவம் பெருமை, சிறுமை. … எல்லாவற்றையும்தான். அனுபவிப்பது மனிதர் இயற்கையே. விடுதலையையும் கற்க வேண்டும் “கிட்டாதாயின் வெட்டென மற” நல்ல சித்தாந்தம் தான். அதைவிட “விரும்பியதை விரும்பி விடல்” இன்னும் சிறப்பு. துய்ப்பதில் தவறில்லை; அதனுடன் நீ உன்னை விலங்கிடாமல் விலகுவது இன்னும் ஒரு படி மேல். எல்லோருக்கும் உன் போல் இந்த அரிய வாய்ப்பு கிட்டாது. உனக்கு ஐம்பதிலும் இருக்கத் தெரியும்; ஐந்திலும் வாழத் தெரியும். எதை நீ விரும்புகிறாயோ; அதை விடவும் தெரியும். பேராசை என்று பேய் உன்னை என்றும் அண்டாது” என்று சங்கம்மா பேசப்பேச செந்தில் பிரமித்து சமைத்து விட்டான்
இத்துணை சீரிய மனிதர்களை நான் பெற்றோராய் அடைய அத்துணை தவம் செய்திருக்கேனா, என்று” அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
“செந்தில்! இங்கே வா! நீ வாங்கின உடுப்புகள் எல்லாம் சரியாக இருக்கிறதா; என்று பார்” என்றவர், சாதாரண உடுப்பு ஜோடியையும் ஒன்று எடுத்து வந்து ” இதற்கும் பில் போடுங்கள்” என்றார். தனது சீருடை பேண்ட் பையிலிருந்து தன் ஃபோன் மூலம் பில்லுக்கு பணம் செலுத்தியவர் ஃபோனில் தன் ஒட்டுநர் காத்த முத்துவை அழைத்தவர்;அவரிடம் தனியாக வாங்கின உடுப்பைக் கொடுத்து” தம்பிக்கு நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது. அவனை வாழ்த்தி, இதை வாங்கிக் கொள்,” என்றார். பணிவுடன் வாங்கியவர் செந்திலுக்கு ஆசி கூற;அவர்கள் கடையை விட்டு வெளியே வந்தனர்.
வீட்டு வாசலில் அவன் இறங்க சங்கம்மா வாயிலிலேயே காத்திருந்தாள். வியாழன் அன்று மூன்று பேருக்கும் ரயில் டிக்கெட் போட்டாகி விட்டது. வெள்ளியன்று நான் உயர்பதவியில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். சனியும் ஞாயிறும் தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளேன். இவனுக்கு ஏதும் சாமான்கள் வாங்க வேண்டியிருந்தால், அதை சனியன்று வாங்கிடலாம். ஞாயிறு அன்று மயிலை கபாலி கோவில் சென்று வந்து திங்கள் கிழமை செந்திலை கல்லூரியில் சேர்த்து விட்டு திங்கள் இரவு உன் அம்மா திரும்ப டிக்கெட் போட்டாச்சு செவ்வாய் ஒரு நாள் ஓய்வெடுத்து புதன் அன்று பள்ளிக்கு செல்லலாம்” என்று சொல்ல, சங்கம்மாவால் வெறுமனே தலையசைக்க மட்டும் முடிந்தது. தலையை லேசாக பக்கவாட்டில் திருப்பினபடியே. .. கண்ணீரை மறைப்பதற்காக இருக்குமோ?
00

சசிகலா விஸ்வநாதன்
தடய அறிவியல் துறையில் துணை இயக்குனராக இருந்து பணி முதிர்வு பெற்றவரான சசிகலா விஸ்வநாதன் அவர்கள் சிறுகதைகளும் குறுங்கதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறார். திண்ணை, தமிழ் நெஞ்சம், லேடீஸ் ஸ்பெஷல், கல்கி, பூபாளம், சிறகு, சங்கு இதழ்களில் படைப்புகள் வெளியாகியுள்ளது.

