“அப்பா முன்போல  இல்லையடா பரத். நீ உடனே புறப்பட்டுவா”

போனில்  அம்மாவின் அழுகை கலந்தகுரல் என்னை அமெரிக்காவிலிருந்து உடனே ஃப்ளைட் பிடித்து இந்தியாவிற்கு வரவழைத்துவிட்டது.

இரண்டுமாதங்களாகவே அப்பா  வாட்ஸ் அப்பிலோ போனிலோ என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை.. அதற்கு அம்மா  சொன்னகாரணம்  அப்பாவுக்கு போனை அதிக நேரம்  கையில்  வைக்கமுடிவதில்லை லேசாக நரம்புத்தளர்ச்சி  என்றதில்  நான்,” உடனே  அப்பாவை நல்ல டாக்டர்கிட்ட காட்டும்மா” என்றேன்.அம்மாவும்  நரம்புதளர்ச்சிக்கு  டாக்டர் மருந்து எழுதிக்கொடுத்து அப்பா சாப்பிட்டுவருவதாக  சொல்லவும் படிப்பு மும்முரத்தில்  அதைப்பற்றிப்பிறகு அதிகம் விசாரிக்கவில்லை.

இப்போது அம்மா போனில் சற்று  கலங்கிய குரலில் சொல்லவும்  ஏதோ  சரியில்லை எனப்படுகிறது.

 நேராய் வீட்டிற்குள் நுழைந்தவன்  வாசல் திண்ணையிலேயே  அப்பா அமர்ந்திருக்கவும்  மகிழ்ச்சிஉடன்,” அப்பா!”என ஓடிவந்து அவர் கரங்களைப்  பிடிக்கிறேன்.

அப்பாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை .வழக்கமாய் என்னைக்கண்டதும்’வாடா போலீஸ்காரன் மகனே’ என்று பெரிய குரலில் கூவி  என்னை  வாரி அணைக்கும் அந்த முரட்டுக்கரங்கள் தொய்ந்து கிடந்தன. பார்வை எங்கோ போய்க்கொண்டிருந்தது.,

“அப்பாக்கு   ஞாபக மறதி  வந்து ரெண்டுமாசமாச்சுப்பா…  மேல்படிப்பு படிக்கபோயிருக்கிற உனக்கு இதை தெரியபடுத்தி  கவலைப்பட  வைக்க வேண்டாம்னு  இருந்தேன்.. ஆனா நிலைமை மோசமாகவும் என் அண்ணா-உன் மாமாவை- திருச்சிலிருந்து  வர வழைச்சேன். மாமாதான்  உடனே உனக்கு  விஷயத்தை சொல்லச்சொன்னார்ப்பா ” என்று அம்மா கண்கலங்கினாள்.

“என்னம்மா நீ.. அப்பா உடம்பை விட என்னோட  எம் எஸ்  படிப்பு முக்கியமா என்ன?  முதலிலேயே  தெரியப்படுத்தி இருக்கணும்”

போலீஸ்காரராக இருந்த அப்பாவுக்கு பார்க்கின்ஸன்  எனப்படும் பக்கவாதத்தின் விளைவாக அல்சைமர் என்னும் மறதி நோய் பீடித்து  விட்டதாகவும் அதனால்  குடும்ப உறுப்பினர்களையே  மறந்து. யாரோ போலப் பேசுகிறாராம். திடீரென்று நினைவு நல்லதாகி நார்மலாகப் பேசுவாராம்.அது அபூர்வமாம்.

மாமா  வருத்தமுடன் விவரித்தார்.

அப்பாவா .. ?அப்பாவா இப்படி ஆகிவிட்டார்!.. நம்பமுடியாமல்  அவரையே பார்த்தேன்..

எனக்கு அவர் அப்பா மட்டுமா  எப்படி வாழவேண்டுமென்று அத்தனையையும் சொல்லித் தந்த பேராசான். அவர் பேசாமல் இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

டாக்டரைப்பார்த்து விஜாரித்தேன்,”  ஏற்கனவே  அவருக்கு  ரத்தத்தில் சக்கரை அதிகம்.  மேலும்  பல வருஷங்கள் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் இப்படி அவரை உருக்குலைத்திருக்கிறது” என்று அவர் சொல்லியதும்  அதிர்ச்சியானது .அப்பாவிற்கு  சிகரெட் பிடிக்கும் பழக்கம்  உண்டு அது  உண்மைதான் என்றாலும் இந்த  அளவு மோசமாகும் என  எதிர்பார்க்கவில்லை.

,போலீஸ்பணியில் ஒருமுறை அவருக்கு அவர் செய்யாத தவறுக்கு நெருக்கடி ஏற்பட்டது பிறகு  அவர் நேர்மையானவர் என்றும் நிரூபணமானது அந்த இடைப்பட்ட நாட்களில்  மன உளைச்சலில் இருந்தார். அப்போது ஆரம்பித்த சிகரெட்பழக்கத்தினை அவர் விடமுடியாமல் தவித்தார்.

அம்மாவும் நானும் பலமுறை கெஞ்சிப்பார்த்தோம் , அம்மா ஒருநாள்கோபத்துடன்” நமக்குக்  கல்யாணமாகி பத்துவருஷம் கழிச்சிப்பிறந்த தவப்புதல்வன் பரத். . காலேஜ் போகிறவனுக்கு உங்ககெட்ட பழக்கம்  வந்திடப்போகுதுன்னு பயமா இருக்கு  அதுக்காகவாவது  அந்த சிகரெட்டை தூக்கிப்போடுங்களேன்” என்றபோது அப்பா” அவன்  நல்ல பையண்டி..  போலீஸ்காரன் மகன்” என்றார் பெருமைபொங்கும் குரலில்..

 Chain Smoker என்ற பதம் அவருக்குத்தான் கச்சிதமாகப் பொருந்தும். . ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்போது மோதிர விரலுக்கும் சுண்டுவிரலுக்கும் நடுவில் இன்னொரு சிகரெட் தான் புகையப் போகும் தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும். அந்த முதல் சிகரெட் மடியும் தறுவாயில் அதன் முகப்புக் கங்கு அப்படியே இரண்டாவது சிகரெட்டைப் பற்ற வைக்கும்.

 “டாக்டர்… என் அப்பாவை எப்படிகுணப்படுத்துவது? ” கவலையுடன் கேட்டேன்..

 “நம்பிக்கையோடு இருங்கள்… தொடர்ந்து முயற்சிப்போம்” என்று பல ஆலோசனைகள் தந்தார். அவற்றுள் ஒன்று பழைய நிகழ்வுகளை அவருக்கு நினைவுபடுத்துவது.

என்னென்னவோ முயற்சி செய்து பார்க்கிறோம். அவரவர்க்கு தெரிந்த வழியில் ஆனால். அப்பா கொஞ்சம் கூட அசையவில்லை.

என் பாட்டி, அதாவது அவரது அம்மா அப்பாவை ‘ முட்டாப்பயலே’ என்றுதான்  செல்லமாக அழைப்பார். அதே போல ‘முட்டாப்பயலே’ என்று  சற்று தயக்கமானாலும் முயற்சிக்கு பலன் கிடைத்தால் சரி என்ற எண்ணத்தில்  பாட்டியைப்போலவேஅழைத்துப் பார்த்தேன்.

 விட்டத்தைப் பார்த்து முகவாய்க் கட்டையைச் சொறிந்தாரே தவிர, பேச்சைக் காணோம்.

 என் அத்தை  அதாவது அவரது அக்கா  உயிரோடு இருந்தவரை  தம்பியை  ‘அம்பி தங்கக் கம்பீ ‘ என்றெல்லாம் அழைத்துப் பேசுவதை மிமிக்ரி டிரெயினிங் எடுத்து   நானும் மாமவுமாகப் பேசிப்பார்த்தோம். கண்களை இடுக்கிக்கொண்டு கறாராகப் பார்த்தாரே தவிர வாயைத் திறக்கவில்லை.

நான் சின்னவயசில் அப்பாவை ‘ அப்புக்குட்டி ‘என்பேன். அதேபோல மழலைக்குரலில் கூப்பிட்டுப்பார்த்தேன். ஊஹூம்  எதற்கும் அசைவில்லை.

அப்பா போலீஸ் பணியில் இருக்கும்போது பல தடவை பார்த்திருக்கிறேன். போன் வருகையில் எடுக்கும் அப்பா’ நல்லம்பாடி போலீஸ் ஸ்டேசன், 1144 , ஹெட்கான்ஸ்டபிள் பேசுறேன்…’ என்பார். ஒரு நாளும் ஒரு பொழுதும் தன்பெயரைச் சொன்னதில்லை. ரோல் கால்  எனப்படும் வாராந்திர ஆயுதப்படை பயிற்சியின்போது நம்பர் அழைக்கப்பட்டவுடன் துப்பாக்கியை பின்நகர்த்தி நெஞ்சை முன்நகர்த்தி அட்டண்டன்ஸ் தருவார். அப்படி ஒர் கடமை உணர்வுமிக்க  போலீஸ்காரராக  இருந்து அண்மையில் பணி ஓய்வு பெற்றவர். போலீஸ்  காக்கி உடையில் வித்மவிதமாக  போட்டோ எடுத்துக்கொண்டு அதை ஃ ப்ரேமிட்டு சுவற்றில்  மாட்டிவிடுவார்.

ஆயிற்று ஒருவாரம் .. அவரிடம் பழைய நினைவுகளை எடுத்து சொல்லியும் அவரை குணப்படுத்த முடியவே இல்லை.

 வெறிக்க வெறிக்க எங்காவது பாப்பதும் சில நேரம்  சிரிப்பதுமாக இருந்தார். இடது  கைவேறு லேசாக நடுக்கம் காட்டியது.

அம்மாவும்  வருத்தமுடன்,”பரத்…  நாங்க  பாத்துக்கறோம் ..படிப்பு முக்கியம்ப்பா.. நீ  ஊருக்குபோப்பா இன்னும் மூணுமாசம் படிப்பு  முடிய இருக்கே  ?”என்றாள் கவலையுடன்.

மாமா,” நான் இங்கயே இருந்து  பாத்துக்கறேன்  பரத் “என்று சொன்னாலும்

எனக்கு  அப்பாவை இப்படி விட்டுப்போக மனமே இல்லை.

அப்போதுதான் ஒரு நாள் யாரோ தந்த திருமணப் பத்திரிகையில் அப்பா, ‘சிம்மக்கல் பீட் காலை 8 மணி,

யானைக்கல் பீட் காலை 11 மணி,

ரங்கய்யா பொதுக்கூட்டம் காந்தி பொட்டல்’ என்று கிறுக்கலாக எழுதி வைத்திருந்ததைப் பார்த்தேன். பொறி தட்டியது.

எத்தனை நோய் பற்றியிருந்தாலும் அதிகாலையில் எழுந்துவிடுவதை மட்டும் அப்பா நிறுத்தவே இல்லை… .

‘அதிகாலை எழும் பறவை இரையோடுதான் திரும்பும்’ என்பது வழக்குமொழி. `சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழித்தெழுவதுதான் ஒருவனை ஆரோக்கியமாகவும், திறமையானவனாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் வைத்திருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அதாவது, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக்கொண்டால் நம் குறிக்கோளை எளிதாக அடைய முடியும் என்பதே உண்மை. வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் இந்த வழக்கத்தைக்கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.அதிகாலையில் எழுந்துவிட்டால் அந்த நாள் இரண்டு நாள்’ என்பார் அப்பா.எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள், என்னை  வளர்த்துவிட்ட வார்த்தைகள்.

. அப்பாவுக்கு அம்மா  பீங்கான்  கோப்பையில் டீ புகட்டிக் கொண்டிருந்தார். நான் கதவுக்கு பின்னால் நின்று காத்துக்கொண்டிருந்தேன்,

அந்த நொடிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

 இரண்டு மூன்று மடக்கு டீ நெஞ்சில் பரவியதும் ஆசுவாசமாக நிமிர்ந்து உட்கார்ந்தார்… நான் ஓங்கிய குரலில் அழைத்தேன்…

“(Roll Call 1144) ( Eleven Forty-four )…ரோல் கால் 1144 .லெவன் ஃபார்ட்டிஃபோர்  ” என்று ஆங்கிலத்தில் அழைத்தேன்.

  அடுத்தகணம்  நான் நினைத்தபடி  அப்பா   எழுந்தார். அம்மாவின் கையிலிருந்த  டீ கோப்பையைத்தட்டிவிட்டவர்,சட்டென  துப்பாக்கியை பின்னகர்த்தும் பாவனை செய்து நெஞ்சை முன்னகர்த்தி ‘1144 யெஸ்ஸார் ‘என்றார்.

பணியின் நினைவு  அப்பாவை  மீட்டெடுத்துவிட்டது.

கண்ணில் நீர் வழிய அவரைக்கட்டிக் கொண்டேன்.

 அவர் பிடியும் இறுகியது.

 காதோரம்,” வாடா போலீஸ்காரன் மகனே!”   என்றார்.

00

ஷைலஜா.

இயற்பெயர் மைதிலிநாராயணன். ஸ்ரீரங்கத்து மண். கணவர், மற்றும் இரண்டு மகள்கள். தற்போது வசிப்பது கோவையில். இதுவரை 400 சிறுகதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன். 12  நாவல்கள் வந்துள்ளன.

கல்கி அமுதசுரபி தினமலர் கலைமகள் இலக்கியபீடம்  குவிகம் மாத இதழ் பெங்களூர் தமிழ்ச்சங்கம் இணையப்பத்திரிகைகள், அமெரிக்கதென்றல் இதழ் முதலியன நடத்திய  நாவல், குறுநாவல்,சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *