என் வயசு இன்று காலை கதவைத் தட்டியது.
திறந்தவுடன் அது உள்ளே வரவில்லை.
வாசலில் நின்றபடியே, “நான் இன்னும் உனக்கு பொருந்தவில்லை” என்றது.
கண்ணாடி முன் நின்றேன். அதில் என் முகம் இல்லை. பாடசாலை நாற்காலியில் உட்கார்ந்திருந்த பத்து வயது நான்,
வெள்ளை சட்டையில் மை கறைகளுடன்
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ யார்?” என்று கேட்டேன்.
“நீ மறந்த வயசு,” என்றான்.
அடுப்பில் தேநீர் கொதித்துக்கொண்டிருந்தது.
அதன் வாசனை என் உம்மாவின் குரலாக மாறியது. “நேரம் ஆகுது,” என்றாள்.
அந்த நேரம் மட்டும் என் கையில் பிடிக்க முடியாத பறவையாய் பறந்தது.
மணிக்கடிகாரம் பின்புறம் ஓடத் தொடங்கியது. ஒவ்வொரு விநாடியும்
ஒரு முடி வெள்ளையாக விழுந்தது தரையில்.
தரையில் கிடந்த வயசுகளை எடுத்து பையில் போட்டேன். பை கனமாக இல்லை.
ஆனால் நடக்க முடியவில்லை. வாசலருகே
என் வயசு உட்கார்ந்து இருந்தது. முதுமையின் முகத்துடன் குழந்தையின் கண்கள்.
“என்னிடம் எத்தனை வயசு இருக்கு?”
என்று கேட்டேன்.
அது சிரித்தது.“நீ வாழ்ந்த நாட்களெல்லாம் அல்ல, நீ நினைத்த நாட்கள்தான் உன் வயசு,” என்றது. அப்போது என் உடல் அல்ல, என் நினைவுகள் தான் முதிர்ந்து கொண்டிருந்தன.
வயசு பேசித் தீர்ந்தபிறகு அது என் நாற்காலியில் உட்கார்ந்தது.நான் தரையில்.
நாற்காலி மெதுவாகச் சுருங்கியது. தரையோ விரிந்தது. வீடு தலைகீழாக சுவாசித்தது.
சுவரில் தொங்கியிருந்த பழைய சான்றிதழ்கள் தங்களின் தேதிகளை உதிர்த்தன. இப்போது அவை தேதி இல்லாத சாதனைகள்.
என் நிழல் மட்டும் என்னை விட வயதானது.
அது தடியுடன் நடந்தது. நான் ஓடினேன்
எந்த வயசுக்கும் சேராத வேகத்தில்.
“நீ எப்போ வளர்ந்த?”
என்று கேட்டேன் நிழலிடம்.
“நீ பயந்த நாளிலிருந்து,”
என்று அது சொன்னது.
ஜன்னல் வழியே மழை உள்ளே வந்தது.
அது தண்ணீர் அல்ல. கேள்விகள்.
ஒவ்வொரு துளியும் ஒரு வயசாக என் தோள்களில் விழுந்தது.
உம்மா,
வாப்பா,
சகோதரன்,
தோழன்….
அனைவரும் தனித்தனியான வயசுகளுடன்
ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் பேசவில்லை. என் மீது பார்த்தார்கள். நான் மட்டும் அவர்களைப் பார்த்துக்கொண்டே சிறியவனாகிக் கொண்டிருந்தேன்.
கடைசியில் வாசலில் கிடந்தது ஒரே ஒரு வயசு. அதற்கு எண் இல்லை. பெயர் மட்டும் இருந்தது. இப்போது. அதை எடுக்கக் குனிந்தபோது என் முதுகு வலித்தது.
அப்போதுதான் புரிந்தது. வயசு என்பது
உடலில் எழுதப்படும் ஒன்று அல்ல;
குனிய முடியாத அளவுக்கு கனமான நினைவுகளின் பெயர்.
நான் அந்த இப்போது என்பதைக்
எடுக்காமல் விட்டேன். அது எடுக்கப்பட வேண்டிய பொருள் அல்ல என்று அதே சொல்லி இருந்தது.
வாசல் தானாக மூடிக்கொண்டது. வீடு மறுபடியும் என் உடலுக்குள் மாறியது.
என் இதயத்தின் ஓசை பாடசாலை மணி போல அடித்தது. ஒவ்வொரு அடியும் ஒரு வகுப்பை முடித்தது.
நான்காம் வகுப்பு
முதன்முதலில் பொய் சொன்ன நாள்.
எட்டாம் வகுப்பு
மௌனம் கற்ற நாள்.
பன்னிரண்டாம் வகுப்பு
கனவுகள் தேர்வில் தோற்ற நாள்.
தேர்ச்சி, தோல்வி இரண்டுமே ஒரே சான்றிதழ் தாளில் ஒட்டிக்கொண்டிருந்தன. கண்ணாடி மீண்டும் தோன்றியது. இம்முறை அதில் பல முகங்கள். ஒன்றுக்கும் என்னுடன் முழுமையான ஒற்றுமை இல்லை.
“இதில் நீ எது?”
என்று கேட்டேன்.
கண்ணாடி உடைந்தது. ஒவ்வொரு துண்டிலும் நான் கொஞ்சம். அப்போது வயசு
என் அருகே நின்றது. இனி கதவைத் தட்டவில்லை. உள்ளேயே இருந்தது.
“நீ இனி என்னுடன் நடக்க வேண்டாம்,”
என்று நான் சொன்னேன். அது தலை ஆட்டியது. “நான் நடக்க மாட்டேன்,” என்றது.
“நான் உன் தோளில் உட்கார்ந்திருப்பேன்.”
நான் வெளியே சென்றேன். வெயில் இல்லை.
நிழலும் இல்லை. நேரம் மட்டும்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்த பார்வையில் ஒரு விஷயம் தெளிவாயிற்று.
வயசு என்பது எண்ணிக்கையல்ல, அது ஒரு பழக்கம். நினைவுகளை தூக்கிச் செல்லும்
ஒரு மௌன நடை. நான் நடந்தேன். வயசு பின்னால் வரவில்லை. அது என் நடையின்
ஒலியாக மாறியது. ஒலி மெதுவாக
எண்ணங்களாக மாறியது. எண்ணங்கள்
மணற்துகள்களாய் சிதறின.
ஒவ்வொரு துகளிலும் ஒரு வயசு உறங்கியது.
நான் கால்வைத்தால் சில வயசுகள் எழுந்தன,
சில மண்ணோடு கரைந்தன.
ஒரு குழந்தை என் முன்னால் நடந்து சென்றது. அதன் முகம் எனக்குப் பரிச்சயம்.
ஆனால் நினைவில்லை. “உனக்கு வயசு இருக்கா?” என்று கேட்டேன்.
அவன் சிரித்தான். “நான் இன்னும்
நாளை தொடங்கல,” என்றான்.
பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒன்றில்
கலண்டர்கள் மரங்களாக வளர்ந்திருந்தன.
மற்றொன்றில் எந்த தேதியும் இல்லை.
நான் தேதி இல்லாத பாதையை தேர்ந்தேன்.
அங்கு கடிகாரங்கள் மலர்களாக பூத்திருந்தன.
அவற்றை நுகர்ந்தால் ஒரு நினைவு மறந்தது.
நான் ஒரு மலரை நுகர்ந்தேன். என் முதல் தோல்வி என் பெயரை இழந்தது. அதே நேரம்
என் முதுகில் இருந்த வலி சற்றுக் குறைந்தது.
அப்போது புரிந்தது. வயசு வளர்வது
நினைவுகள் சேர்வதால் அல்ல; நினைவுகள் விடுபடுவதால்தான்.
வானம் என் தலைமீது குனிந்தது.
அதில் எழுதப்பட்டிருந்தது. “நீ இப்போது
எவ்வளவு வயசு?” நான் பதில் சொல்லவில்லை.பதில் சொன்னால்
ஒரு வயசு பிறந்து விடும்.
நான் நடப்பதைத் தொடர்ந்தேன். பாதை
என் இதயத்துக்குள் மடங்கியது. அங்கே
ஒரு சிறிய அறை. அறையின் நடுவில்
ஒரு நாற்காலி. அதில் என் வயசு குழந்தையாய் தூங்கிக் கொண்டிருந்தது.
நான் அதை எழுப்பவில்லை.
ஏனெனில், வயசு விழித்தால் நேரம் மறுபடியும்தொடங்கிவிடும். நேரம் தொடங்காதிருக்க நான் அந்த அறையில்
மூச்சை மெதுவாக்கினேன்.
சுவர்களில் நாட்காட்டி இலைகள் இல்லை.
அவை பாடப்புத்தகப் பக்கங்கள். எழுதப்படாத பாடங்கள். நாற்காலியின் அருகே ஒரு கண்ணாடிக் குடம். அதில்
நான் சொல்லாமல் விட்ட வயசுகள். ஒன்றை எடுத்தேன். அது எடை இல்லாதது.
ஆனால் கை நடுங்கியது.
அந்த வயசு என் காதில் கிசுகிசுத்தது.
“நான் உன்னை வலிக்கவில்லை, நீ என்னை
தூக்கிக் கொண்டதால்தான்.”
நாற்காலியில் தூங்கிய குழந்தை அசைந்தது.
அதன் சுவாசம் என் சுவாசத்தோடு ஒத்திசைந்தது. அறை மெதுவாக
பள்ளி மைதானமாக மாறியது. மணல்
என் கால்களுக்கு கீழ் நினைவுகளை மறைத்தது.
மரம் ஒன்று மையத்தில் நின்றது. அதன் இலைகள் வயசுகள். ஒவ்வொன்றும் விழும்போது ஒரு பெயர் மறந்தது.
ஒரு இலை என் மீது விழுந்தது.
அது “வாப்பா” என்ற சொல்லை
மண்ணில் புதைத்தது. என் கண்கள் நீராக மாறின. அந்த நீர் வயசுக்கு எதிரானது.
அப்போது குழந்தை முழுதாக விழித்தது.
அது என்னை பார்த்தது. நான் அதை பார்த்தேன். “நீ என்னை
இங்க விட்டுப் போகப் போறியா?” என்று கேட்டது. நான் பதில் சொன்னேன்.
“நான் உன்னை சுமக்காமல் நடக்க கற்றுக்கொள்ளப் போறேன்.”
அது சிரித்தது. அந்த சிரிப்பில் நேரம் நின்றது.
நான் வெளியே வந்தேன். வெளியே எந்த கடிகாரமும் இல்லை. ஆனல் நடைப்பாதையில்
என் காலடிகள் எண்ணாக மாறவில்லை.
அவை நிகழாவாவே இருந்தன. அந்த நிகழ்வு என்ன சொன்னது தெரியுமா?
வயசு முடிந்தது அல்ல. அது
விட்டுச் செல்லப்படுகிறது. நிகழ்வு மெதுவாக
அமைதியாகியது. அமைதி ஒரு வெள்ளைப் பக்கமாக என் முன் விரிந்தது. அதில் எந்தத் தலைப்பும் இல்லை. வயசு கூட இல்லை.
எழுத பெனாவை எடுக்க முயன்றேன். அது கையில் இல்லை. என் விரல்களே எழுத்துகளாக மாறின. முதல் வரி தானாக வந்தது. “இது என் வாழ்க்கையின்
முதல் நாள் அல்ல.”
இரண்டாவது வரி வரவில்லை. ஏனெனில்
தொடக்கம், முடிவு இரண்டுமே
வயசின் பழக்கம்.
பின்னால் பார்த்தேன். என் வயசு அங்கே இல்லை. ஒரு சின்ன காலணிதான். குழந்தை காலணிதான். அதற்குள் நேரம் அடங்கவில்லை. அதை எடுத்தேன்.
அணியவில்லை. கையில் வைத்துக்கொண்டேன்.
முன்னால் ஒரு கதவு. அதில் எழுதப்பட்டிருந்தது.
“நாளை”
நான் கதவைத் திறக்கவில்லை. கதவின் அருகில் உட்கார்ந்தேன். ஏனெனில் வயசு இல்லாத மனிதன் நாளைக்குள் போக வேண்டியதில்லை.
அந்த இடைவெளியில் நான் இருந்தேன்.
குழந்தையுமல்ல, முதியவருமல்ல.
நினைவுகளின் எடையற்ற நிழல்.
அங்கே ஒரு சுவாசம். அது என் சுவாசம் இல்லை. அது வாழ்க்கையின் சுவாசம்.
அது சொன்ன ஒரே வாக்கியம்
“இப்போதே போதும்.”
அவ்வளவுதான்.
வயசு
அங்கே
மௌனமாக
முடிந்தது.
00

டீன் கபூர்
ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.

