மழையை வீட்டுக்கு

அழைத்து வந்த சிறுவன்

____________________________

,

விளையாடச் சென்ற சிறுவன்

திரும்பி வரும் போது

எதையாவது அழைத்து வருவான்

,

இன்றும் அவ்வாறு

வகுப்பு நண்பனைப்போல் மழையை

வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்

,

வளமைபோல் பட்டாம் பூச்சி

அல்லது பூனைக் குட்டியோடு

வந்திருந்தால் சமாளித்திருக்கலாம்

,

வெளியில் மழையை

விட்டு வரச் சொன்னால்

அவனும் கூடச் செல்ல

எப்படியும் புறப்படுவான்

,

மழையை அமர வைக்க

வீட்டில் தோதான இடமில்லை

,

உடன் ஒரு பாத்திரத்தில்

உட்காரச் செல்கிறேன்

,

இறங்கி வர அடம் பிடித்து

சிறுவனின் புயங்களில்

சொட்டுச் சொட்டாக

வடிந்து கொண்டிருந்தது மழை

,

மாரி காலங்களில்

தனியே செல்லும் சிறுவர்கள்

மழையின் விரல் பற்றியபடிதான்

அனேகமாக வீடு திரும்புகின்றனர்

உதவாச்  சொற்கள்

______________________

,

பாடலொன்றை எழுதுகையில்

சில உதவாத சொற்கள்

அவ்வப்போது உறுத்தின

,

தேவையற்ற  அச் சொற்களை

இடைக்கிடை நீக்கி விடுகிறேன்

,

கைபிடியளவு சொற்கள்

ஈற்றில் சேகரமாகின

,

எஞ்சிய சொற்களை

என்ன செய்வதென்று புரியவில்லை

,

இனி எதற்கும் உதவாதென்று

அதனை குப்பை கூடைக்குள்

உடன் வீசி விடுகிறேன்

,

இப்போது கூடைககுள்ளிருந்து

ஒலிக்கத் துவங்கியது

ஒரு இனிமையான பாடல்

கைபிடியளவு அன்பு

__________________________

,

கைபிடியளவு அன்புதான்

என் வசம் இருக்கிறது

,

எத்தனை இதயங்களுக்கு

அதனை கிள்ளிக் கொடுப்பதென்று

எனக்குப் புரியவில்லை

,

அன்பை அள்ளிச் சொரியாமல்

இவ் வாழ்வை வாழ்வதில்

அர்த்தங்கள் எதுவுமில்லை

,

ஆதி தொட்டு மிக ஐக்கியமாக

என்னோடு பயணித்தவர்கள்

இடை நடுவில் வந்து

சேர்ந்து கொண்டவர்களென

ஒவ்வொருத்தருக்குமாக அன்பு காட்டி

ஆத்மாவை ஆற்றுப் படுத்துறேன்

,

சில சமயங்களில் அளவற்ற அன்பை

எப்படி வழங்குவதென்ற

கடும் குழப்பங்களிடை

பைத்தியம் பிடிப்பதுமுண்டு

,

இருந்தும் காலத்தின் கோடுகளில்

அன்பை குழைத்து தீட்டாது

நமது அற்ப ஆயூளை

எங்கணம் வரைந்து தீர்த்தல் தகும்

,

இத்தனைக்கும் என்னை நான்

இன்னும் நேசிக்கத் துவங்கவில்லை

00

இயற் பெயர் அப்துல் ஜமீல்

கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட கல்முனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மருதமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஜமீல் என்ற பெயரில் 90 களிலிருந்து கவிதைகள் சிறுகதைகளென எழுதி வருகிறார்.

இதுவரை 11 கவிதைப் பிரதிகளை வெளியிட்டுள்ள இவர்  கவிதைக்கான உயரிய விருதுகளான இலங்கை அரசின் சாஹித்ய மண்டல விருது கிழக்கு மாகாண சாஹித்ய விருது கொடகே சாஹித்ய மண்டல விருது அத்தோடு வைரமுத்து அறக்கட்டளையால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் கவிஞர்கள் திருநாள் விருதையும் 2017  ம் ஆண்டு பெற்றுள்ளார்

இவரது படைப்புகளை பல்களைக் கழக மாணவர்கள் தங்களது விசேட கற்கைக்காக ஆய்வுக்குட்படுத்தி பட்டப் படிப்புகளை பூர்த்தியும் செய்துள்ளார்கள் என்பதும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய விசேட அம்சமாகும்

அத்துடன் சிங்களம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிமாற்று செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *