பறித்ததன் பொல்லாப்புகள்.
இரவைக் கொஞ்சம்
எடுத்து
எவருக்கும் தெரியாமல்தான்
வைத்திருந்தேன்.
தூக்கமாக வந்து
தொந்தரவு செய்கிறது
பகல் முழுவதும்
சோர்வாக.
***
துலாவி எடுக்காத வெளிச்சம்.
வீட்டிற்குள்
விழுந்த
விண்மீனை
விடிய விடிய
பிடிக்க முயன்றோம்.
களைப்பைக் கொடுத்து
காணாமல் போனது
பாரிய இன்பத்தில்
தள்ளி.
***
வேகாத சமையல்.
குளம் குட்டைகளில்
நிரம்பிய
வாக்குறுதிகளால்
குழாயில்
கொட்டுகிறது
வெறுமை
அள்ள முடியாத
துயரத்தில்.
***
வரவாகாத வார்த்தைகள்.
அறுவடை செய்த
வார்த்தைகளைக்
கொண்டு செல்ல
முடியாதென
தெரிந்துதான்
இயந்திரமாகிப் போனேன்
பணியினில்.
,
எப்பொழுதாவது
சொட்டிவிடும்
கருணையினால்
உரசிப் பார்க்கப்படும்
சொரணையினை
இயந்திரமாவதற்கான
பயிற்சியென
ஏற்றுக்கொள்கிறேன்
சூட்டைப் பொறுத்து
***
விலக்குவதன் வாஞ்சை.
சரியத் தொடங்கிய ஆரோக்கியத்தை
சீர் செய்யும் பொழுதுகளில்
நீட்டித்துக் கிடக்கிறது
ஆயுள் சொற்பத்தில்.
,
வன்ம நாக்குகள்
சுழற்றும்
அனலில்
உயிர்த்து நிற்கிறது
நம்பிக்கைகள்
தழைத்து.
,
உள் நுழைந்து
வெளியேறும்
காற்றின் குளுமை
இருப்பதன்
அடையாளம்
பிறருக்கு.
,
வலு கூட்டி இயங்க மருந்திற்காய்
யாசிக்கும்பொழுதானாலும்
இடறி இயங்கும்
இதயத்திற்குள்
நிறைந்திருக்கிறது
கரிசனம்
மேலதிக
வியப்பிலாழ்த்தி.
,
இதற்கு
முன்னும்
நம்மைப்போன்றவர்களால்
ஆனதுதான்
இவ்வுலகம்
உருவக் கூடுகளாக
ஒட்டாமல்.
,
இம்முறை
பிடறி பிடித்து
அன்பு புகட்டாமல்
அகலுவதாக இல்லை
நேச ருசி
மறந்த உலகிற்கு.
*********
உறவெனும் அந்நியம்.
உயிர்க் கால்கள்
உள் நுழையாத
வயல்களுக்கு
இரும்புப் பட்டைகள்
இதம் தரவில்லை
எப்பொழுதும்
அந்நியமாக.
,
மக்குமிலைகளுக்கும்
மற்றதன் கழிவுகளுக்குமான
மாற்று மருந்து
கரிக்கிறது
தாழாத சுவையில்
மண்ணிற்கு.
,
இயத்திரத் தொடர்பில்
இயங்கும்
வயல்கள்
அதட்டலின்
தளிர்ப்பில்
மகசூள்களைக்
கூட்டி விடுகிறது
பள பளப்பான
உச்ச
விளைச்சலில்.
,
ருசி மனிதர்கள்
செயற்கை அறிவில்
திழைக்கிறது
இயந்திரமாக
தன்னைச் சுற்றும்
பூமியை
தடம் மாற
தவிக்கவிட்டு.
****

