1
ஊஞ்சலில் ஆடி
வளர்ந்தவன்
இப்போது
கால் நீட்டிப் படுத்துக்கொள்ள
இடம் தேடுகிறான்
கிடைத்தால் போதும்
ஊஞ்சல் கனவில்
தூங்கிவிடுவான்
சுகமாக.
2
இதுதான்
என் மீது எறியப்படும்
கடைசிக் கல் என்று
நான்
என்றுமே நினைத்ததில்லை
கற்கால மனிதர்களிடையே
கலந்து வாழும்போது
தொடர்ந்து
நிகழத்தானே செய்யும்.
3
கடந்தகாலத்தில்
உண்டுவிட்டு
நிகழ்காலத்தில்
கைகழுவுகிறார்கள்
தலைமுறை கடந்தும்
பழியுணர்வை
சுமந்து திரிகிறார்கள்
இல்லாத பெருமையை
இறந்த மனிதர்களுக்கு
சூட்டுகிறார்கள்
இருக்கும்போதே
இல்லாமல் போகிறார்கள்
நமக்கு இன்று
அவர்களுக்கு நாளை.
4
கொத்திக் கொத்தி தின்னும்
காக்கைக்கு தெரியாது
அதைவிடப் பெரிய கோழி
அதற்கு இரையானது என்று.
பலிகளின் தடம்
யார் அறிவார்?
5
குலுங்கும் போது
குடுவையிலிருந்து சிந்தும்
நீர் அல்ல நான்
நிலத்தடி வளம்
துளையிட்டுப் பார்
வரும்… வராது.
6
ஜன்னல் வழியாக
வீட்டுக்குள் வந்துவிழும்
வெயிலின் நிழல்
இன்று வரவில்லை
அன்றாட வழமையில்
ஒரு வெற்றிடத்தை
உணர்கிறது மனம்.
7
கடைந்தெடுத்த அயோக்கியன்
என்பது போல
கடைந்தெடுத்த நேர்மையாளன் என்று
சொல் வழக்கில் இல்லை
செயல் வழக்கில்
நேர்மையே
கிட்டத்தட்ட இல்லை.
8
நான்
நேருக்கு நேராய் பேசுகிறேன்
நீ
பின்னிருந்து பேசுகிறாய்
நான்
சமதளத்திலிருந்து பேசுகிறேன்
நீ
பள்ளத்திலிருந்து கேட்கிறாய்
நான்
உயரத்திலிருந்து பேசுகிறேன்
நீ
கீழிருந்து கேட்கிறாய்
நான்
பதற்றத்துடன் பேசுகிறேன்
நீ
பல்குத்திக்கொண்டே கேட்கிறாய்
நான்
உள்ளம் குமுறப் பேசுகிறேன்
நீ
உவகையில் தோய்ந்தவாறு கேட்கிறாய்
நான் பேசுகிறேன்
நீ கேட்கவே இல்லை
நான் கேட்கிறேன்
அப்போதும் பேசவில்லை
இப்போது
அமைதி நிலவுகிறது
அதுவே நீடிக்கும்.
9
அடுத்தவன் ஜன்னலுக்குள்
எட்டியும் முட்டியும் பார்ப்பது போல
அழுகிப்போன பழக்கம் வேறில்லை
சுற்றிலும் பெரும்பாலும் அப்படித்தான்
உங்கள் ஜன்னல்
கதவாக மாறக்கூடும்
மூச்சடைக்கலாம்
நீங்கள்
எப்படி வாழவேண்டுமென்று
அவர்கள் தீர்மானிக்கிறார்கள்
வெளியே வாருங்கள்
கதவுகளைத் தாண்டி.
10
சீறிய பாம்பைப் பார்த்து
மற்றவர்கள் பீதியில் குலுங்க
அவன் மட்டும் சிரித்தான்
அது பல்பிடுங்கப்பட்டது
என்ற ரகசியம்
அவனுக்கு மட்டுமே தெரியும்
ரகசியங்களை
அதிகம் கையாள்பவர்கள்
அதிகாரத்துக்கு நெருக்கம்
அன்றி
அதிகாரமாகவே இருக்கக்கூடும்.

சுகதேவ் –
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

