ரெட்டைக் கொக்கி.
1.
ஒரு சுத்தவீரனாக காட்டிக் கொள்ள
மேற்கொள்ளும் முயற்சியில் தான்
மேலே இருந்து ஒரு சக்தியாய் எதிரொலித்து
ஒரு தற்கொலையைத் தோல்வியுறச் செய்கிறது
சராசரியான கோழையின் முகம்
அப்பட்டமாக முகத்தில் பரவுகிற பொழுது
அகப்புற வாழ்வில் நகைக்கத்தக்க ஜோக்கரென
உணர்வு ரேகை மனத்தில் வேரோடுகிறது
அத்தனைத் துயரப்பாடுகளுக்கு மத்தியில்.
2.
மீந்து போயிருந்த பழையதை
வற்றலுக்காய் வெயிலில் காயவைக்கையில்
விருந்தாளியென வந்தமர்கிறது காக்கை
மேலும் இந்த சூரியன் இயல்பை விட சற்று அதிகமாக
இன்னும் பன்மடங்காக கொதிக்கட்டும் என
உச்சி வெயிலை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
3.
ஈரமணலைத் தோண்டி மண்புழுக்களை சேகரித்தவன்
ரெட்டைக் கொக்கியை தூண்டில் கம்பில் வலுவாகக் கட்டுகிறான்
இளம் புழுக்களை இரையாக வைத்து
சற்றுத் தள்ளி எட்டி தூண்டிலை வீசியவனின் அவதானிப்பு
தக்கையாக மாறுகிறது
வாயை அசைத்தபடி
பிடிபட்ட மீன்கள் நெகிழியினுள் சுவாசக்காற்றை உள்ளுக்கிழுக்கின்றன.
4.
சடலம் போல அடங்கியிருந்த தெரு
சட்டென விழித்துக் கொண்டது
ஊர்வன பறப்பன எல்லாம்
உயிர்த்தெழுந்தன
மொட்டுகள் மீது விழுந்து கொண்டிருந்தன பனித்துளிகள்
வடியாமல் தேங்கிய மழை நீரில்
வாய் வைத்துக் குடித்த பின்
தன் பொழுதை கழிக்கத் தெருவின் பாதையில் பயணிக்கத் தயாராகிறது
செந்நாய்.
தெரு தன் வேகமான இயக்கத்திற்கு சூரியனை துணைக்கழைக்கிறது.
வீடுகளில் முடங்கியிருந்த ஓசைகள் எழத்தொடங்கின
ஒவ்வொருவரின் காலடியிலும்.
00

இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

