குழந்தைகளுக்கு எந்தக் கவலையும் இல்லை ஆம் கடவுள் பற்றியும்தான்.

நானும் மகளும் ஒருவரைச் சந்திக்க இரயில்வே நிலையம் செல்கிறோம். வழியில் தேவாலயத்தைப் பார்த்தவள் “அப்பா திரும்பிப் போகும் போது இந்தச் சர்ஜ்க்குப் போயிட்டுப் போகலாம்பா”

“சரி செம்மொழி போகலாம்” இது என் பதில்.

இன்னும் இரயில்வே நிலையம் சென்று அடையவில்லை. பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.

“அப்பா” என்று அழைத்தாள்

“என்னம்மா” என்றேன்

“கடவுள் எப்போப்பா தோன்றுனாங்க” எனக்கேட்டாள்.

என்னிடம் இதற்கும் பதில் இருக்கிறது.

 “உலகம் தோன்றதுக்கு முன்னயே தோன்றிட்டாங்கமா”

என்பதுதான் அது. ஆனாலும் வாய்த்திறந்து சொல்லவில்லை. இப்படிச் சொல்லியிருந்தால் அவள் நிச்சயம் இப்படிக் கேட்டிருப்பாள்.

“உலகம் தோன்றதுக்கு முன்னனா, அப்போ அவுங்க எங்க இருந்தாங்க” என்பதாகத்தான் அது இருந்திருக்கும் என்பது என்  சிந்தனை. இல்லை இதற்கு மேலான வினாவைக்கூட நான் பதில் சொல்லியிருந்தால் அவள் கேட்டிருக்கக் கூடும்.

குழந்தைகள் உலகம் கேள்வியால் நிறைந்த ஞானத்தைக் கொண்டதாக எப்போதுமே இருக்கிறது.

குழந்தைகளின் கேள்விக்கும் விடைதேடலுக்கும் கடவுளும் தப்பிக்க முடியாதவராகவே இருக்கிறார்.

சாலை ஓரத்தில் காடுகளைப் பார்த்தவள்

“அப்பா இந்தக் காட்ல பாம்பு இருக்குமா ” என்றாள்.

“இருக்கும் பாப்பா”

“அந்தப் பாம்பு விஷப்பாம்பா அப்பா”

“இல்ல பாப்பா எல்லா பாம்பும் விஷப்பாம்பு இல்ல. சில பாம்புதான் விஷப்பாம்பா இருக்கும் பாப்பா” என்றேன்.

“சிவனோட கழுத்துல இருக்குறது என்ன பாம்பு அப்பா”

“அது நல்ல பாம்பு பாப்பா”

“அது கடிச்சா விஷமா அப்பா”

“ஆமாம் பாப்பா நல்ல பாம்பு கடிச்சா விஷம்தான் பாப்பா” என்றேன்.

“அதை ஏன் நல்ல பாம்புனு சொல்றீங்க அப்பா” என்ற கேள்வியை என் முகத்தைப் பார்த்துக் கேட்கிறாள்.

கிராமத்தில் வாழ்ந்ததால் எத்தனையோ முறை நல்ல பாம்பு பார்த்திருக்கிறேன். வீடுகளுக்குள் வந்த போது அடித்துக் கொன்று  ஊரே வேடிக்கை பார்த்துக் குழி தோண்டி பால் ஊற்றிப் புதைத்த கதைகளும் உண்டு. அப்போதுகூட இந்த விஷப்பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று சொல்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததே இல்லை.

செம்மொழியின் இந்தக் கேள்விக்குப் பெரும் புன்னகையைத் தவிர வேறு பதில் என்னிடம் அப்போதைக்கு இல்லை.

கடவுள் குறித்து நாம் முன் வைக்கின்ற பெரும்பான்மையான கேள்விகளுக்குப் பதில் இருப்பதில்லை. அது நம்பிக்கை சார்ந்தது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்குள் அடக்குபவரோ அடங்குபரே கடவுள் இல்லை என்பதைத் தான் இந்த உலகம் கடவுள் குறித்த புரிதலாகச் சொல்லி வைத்திருக்கிறது.

மௌனமாகி இருக்கிறேன். முன் எப்போதும் இல்லாத அளவிற்குச் சிந்தனைக்குள் கடவுள் இறங்கி அமர்ந்திருக்கிறார்.

கம்பர் வருகிறார்.

“இருப்பிலும் இல்லாதவனாகவும் இல்லாதவற்றிலும் இருப்பவனாகவும் இறைவன் இருக்கிறான்.” என்கிறார்.

இறைவனின் இருத்தலையோ இறைவன் இல்லை என்பதையோ எந்த மொழி கொண்டு குழந்தைக்குப் புரியும்படி சொல்ல முடியும் என்ற பெருங்குழப்பம் இப்போதைய சிந்தனையாக நிலைத்து இருக்கிறது.

வீட்டிற்குத் திரும்பியிருக்கிறோம். அவள் போகவேண்டும் என்று சொன்ன தேவ ஆலையம் வந்துவிட்டது.

உள்ளே நுழைகிறோம்.

எங்களுக்கு எதிரே இயேசு தன் இனிய உயிரை உலக மக்களின் பாவத்தைப் போக்க நீக்கிக் கொண்ட பெரிய சிலுவை பெரும் அமைதியோடு எங்களை வரவேற்கிறது.

செம்மொழி சிலுவை இருக்கும் திசையில் மண்டியிட்டுத் தொழுகை நடத்தும் போது கைகளை எப்படி வைத்திருப்பார்களோ அப்படிக் கையை வைத்துக் கொண்டு கண்களை மூடி ஏதோ முணுமுணுக்கிறாள்.

நான் அவளின் செயலை வியந்து பார்த்துக்கொண்டு அவள் அருகில் நிற்கிறேன். இப்படி இறைவனை வணங்க எங்கே கற்றிருப்பாள் என்பதுதான் என் வியப்பிற்குக் காரணம்.

வேண்டி முடித்து எழுகிறாள்.

“என்ன செம்மொழி வேண்டிகிட்டிங்க”

“அதெல்லாம் சொல்லக்கூடாதுப்பா.

அச்சச்சோ இன்னொன்னு வேண்ட மறந்துட்டேனே , இருப்பா”

மீண்டும் மண்டியிட்டுப் பழைய நிலைக்குச் சென்று மீண்டும் வேண்டுகிறாள்.

வேண்டுதல் முடிந்ததும் மண்டியிட்ட நிலையிலேயே கண்விழித்து என்னைப் பார்க்கிறாள்

“என்னம்மா வேண்டுதல் முடிஞ்சுட்டா? இல்லையா? போகலாமா?”என்றேன்.

“இருப்பா இன்னும் ஒன்னே ஒன்னு வேண்டனும்பா ” என்றவள் வேண்டுதல் நிலைக்குத் திரும்பிவிட்டாள். முடித்துக் கண் விழித்து எழுகிறாள்

“என்ன வேண்டிக்கிட்ட அம்மா?” என்றேன்

“அதெல்லாம் சொல்லக்கூடாதுப்பா”

“அப்பாதானே சொல்லலாம் சொல்லுங்க” என்றேன்

மனதிற்குள் சிந்தித்துக்கொண்டே கைவிரல்களை மடக்கி வேண்டுதலின் எண்ணிக்கைக்கான விடுவிப்பாக மூன்று விரல்களை நீட்டியிருக்கிறாள். “என்னென்ன வேண்டுதல் பாப்பா?” என்றேன்.

மீண்டும் கைகளுக்குள் விரலை மடக்கி சுண்டுவிரலை விடுவித்து

“அம்மா எக்ஸாம் பாஸ் ஆகனும்”

செம்மொழியின் அம்மா பதவி உயர்வுக்காக எழுதியிருக்கிற தேர்வு அது.

இரண்டாம் விரலை விடுவித்து

“பாப்பாவுக்கு உடம்பு நல்லாகனும்”

மூன்றாம்  விரலை விடுத்து

“நான் நல்லா படிக்கனும்னு வேண்டிக்கிட்டேன் அப்பா” என்கிறாள்.

கோவிலுக்குச் சென்று வரும் செம்மொழிக்குத் தேவாலய வேண்டுதல் முறை எப்படி வசப்பட்டிருக்க முடியும்.

தேவாலத்தின் வாசலில் நிற்கிறோம். என் சிந்தனை கோவிலுக்குள் நுழைந்திருக்கிறது.

ஒரு முறை கோவில் கூட்டத்தில் கடவுளை வணங்க முயற்சி செய்த போது என்னைத் தொட்டிழுத்த குழந்தையைப் பார்த்து இப்படி எழுதினேன்

“கடவுளைத் தரிசிக்க கூட்டத்தில்

இடிபட்ட பொழுது

என் முதுகில்

யாரோ தட்டி அழைத்தார்கள்

திரும்பிப் பார்த்தேன்

அது ஒரு தாய்

தூக்கி வைத்திருந்த குழந்தை

தரிசித்துவிட்டேன்

இரண்டும் ஒன்றுதானே” என்பதுதான் அது.

இருசக்கர வண்டியில் ஏறி தேவாலய வாசல் கடக்கிறோம்.

தேவாலய வாசலின் நடைமேடையில் ஓர்இசுலாமியத் தாய் கார்த்திகை அகல் விளக்கு விற்றுக் கொண்டிருக்கிறாள்.

000

மகா.இராஜராஜசோழன்

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி. பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம். வட்டம் – சீர்காழி. மாவட்டம் – மயிலாடுதுறை.

இணைய இதழ்களிலும், அச்சிதழ்களிலும் எழுதி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *