“செல்வம், நீ எடுத்தியா?” என அப்பா கதிர் கடுமையான குரலில் கேட்டார்.

“இல்லப்பா, நா எடுக்கல!”

“செல்லம், எடுத்திருந்தா சொல்லிடு கண்ணா!” என அம்மா, கெஞ்சலாகக் கேட்டாள்.

“இல்லம்மா ! சத்தியமா நா எடுக்கல்ல!” என்றான் செல்வம்.

“ஜோதி, இவன் பேச்சை நீ தான் நம்பணும். நேத்தி தான் இவன் ஒரு ரேஸ் கார் விளையாடறது கேட்டான். ஆயிரம் ரூவா ஆகும் அது., நா வாங்க முடியாதுன்னு சொன்னவுடன், பக்கத்து ஊட்டுல கையை வச்சுருக்கான், இந்தப்பய!”

கோபத்துடன் கதிர் செல்வத்தை அடிக்கக் கையை ஓங்கினார்.

ஜோதி இடையில் புகுந்து தடுத்தாள்.

“உன் மேல சத்தியமா நா எடுக்கலம்மா?” அழுதான் செல்வம்.

”செல்வம் ! செல்வம்!”  ராஜூ வின் குரல்.

”என்னாச்சு, மாமா  ஏன் செல்வம் அழுவுறான்?”

“பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போனான், இப்ப அவங்க வீட்டுல ரூவாயக் காணோம்.”

ராஜூவும் செல்வத்தின் வயது சிறுவன் தான். அடுத்த தெருவில் வசிக்கிறான்.

“செல்வம், கவலைப்படாத. பணம் எங்க போச்சு, யார் எடுத்தாங்கன்னு கண்டுபிடிச்சிடலாம்” எனச் சொன்னான் ராஜு.

“ராஜு, சேகரோட அப்பா தேடியே கிடைக்கல. யார் எடுத்தான்னு தெரியல்ல. நீ கண்டுபிடிடிச்சிடுவியா?” என்றார் ஜோதி.

“பெரியவங்க ஏதாவது கவலையில பதட்டத்துல இருப்பாங்க, அத்தை. அப்ப சில விஷயங்களை கவனிக்கமாட்டாங்க”

“ஆமாம், சேகரோட பாட்டிக்கு உடம்பு சரியில்ல. அதனால அவங்க வீட்டில கவலையில இருக்காங்க” என்றார் கதிர்.

“செல்வம், அங்க என்ன நடந்திச்சு ? நீயும் சேகரும் என்ன விளையாட்டு விளையாடினீங்க?” ராஜு.

“கண்ணாமூச்சி”

“வீட்டுக்குள்ளயா ? அறிவிருக்கா உனக்கு? இன்னோருத்தர் வீட்டுக்குப் போனா …” கதிர் கண்டிப்பான குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“மாமா, செல்வத்தைப் பேச விடுங்க, செல்வம் ! நீ என்ன நடந்ததுன்னு சொல்லு !” ராஜு.

ராஜுவின் குரலில் இருந்த தெளிவு செல்வத்தின்  கதிரை அமைதிப்படுத்தியது.

“நான், சேகர், அவன் தங்கச்சி திவ்யா மூணு பேரும் கண்ணாமூச்சி விளையாடிகிட்டு இருந்தோம். அவங்க வீட்டு வண்டி பின்னால, கண்ணப் பொத்திகிட்டு இருந்தேன்.  திவ்யா, சேகர் ரெண்டு பேரும் ஓளிஞ்சுகிட்டு. ‘ஜூட்’ விட்டதும் நா எல்லா இடத்துலயும் தேட ஆரம்பிச்சேன்.

“ரூவா காணாமப் போனதப் பத்தி சொல்லுடான்னா, இவன் கண்ணாமூச்சி விளையாட்டு பத்தி கிளாஸ் எடுக்கறான்” சிடுசிடுத்தார் கதிர்.

“நீ சேகர் அப்பா ஜோபில இருந்து ரூவாய எடுத்தியா?” ஜோதி.

“செல்வம், நீ அவங்க வீட்டுள்ள அந்த அறைகுள்ள போனயா? எனக் கேட்டான் ராஜு.

“ஆமா, போனேன், ஆனா நா சேகரத் தேடிப் போனேன். எதையுமே எடுக்கல்ல”

“சரி, நீ அங்க இருக்கும் போது வேற யாராவது அங்க வந்தாங்களா ?”

“யாரும் வரல்ல”

“யோசிச்சு சொல்லு ! வெளிலேர்ந்து யாருன்னா வந்தாங்களா?”

“இல்ல”

“சேகர்  அப்பா  எங்க இருந்தாங்க ? என்ன செய்துகிட்டு இருந்தாங்க ? பாட்டி எப்படி இருந்தாங்க?”  என ராஜு கேட்டான்.

ராஜுவின் கேள்விகள் கதிரையும் ஜோதியையும் சிந்திக்க வைத்தன.

“முக்கியமா, சேகர், திவ்யா ரெண்டு பேரையும் நீ பிடிச்சியா?”

“ஆங் ! ரெண்டு  பேரையும் பிடிச்சிட்டேன்”, பெருமையாகச் சொன்னான் செல்வம்.

“சூப்பர், சூப்பர், எங்க பிடிச்ச?” ராஜு.

“திவ்யா, வீட்டு வாசக் கதவு பின்னால ஒளிஞ்சு இருந்தா. அவள முதல்ல பிடிச்சேன்.”

“சேகரை எங்கக் கண்டு பிடிச்ச ?”

“அவன் அடுத்த வீடு இருக்குல்ல, அங்க குப்பைத் தொட்டி இருக்குல்ல , அங்க ஒளிஞ்சு இருந்தான்.”

“எப்ப அந்த அறைக்குள்ள நீ போன ?”

”திவ்யா தான், அந்த ரூம்ல ஒளிஞ்சு இருக்கான்னா. அதனால அங்க பாத்தேன்”

“அந்த அறையில எந்த எந்த இடத்தில சேகர் இருக்கான்னு பாத்த?” கதிர்.

“ம்ம், கதவுக்குப் பின்னால, கட்டிலுக்குக் கீழ”

”கதவுக்குப் பின்னால தான் சேகர் அப்பா, கொக்கில சட்டையைத் தொங்க விட்டு இருப்பாரு.”என்றார் ஜோதி.

“பிறத்தியார் வீட்டுக்குள்ள போகலாமா? இப்ப அவங்க ரூவா கேட்டா நா கொடுக்க வேணாமா?” கதிர் மீண்டும் சிடுசிடுத்தார்.

“இருங்க, மாமா, செல்வம், சேகர் அப்பா என்ன செஞ்சுகிட்டு இருந்தார்?”

“பாட்டிய  சிகிச்சை மையத்துக்கு அழைச்சு கிட்டு போகணும். அதுக்காக குளிக்கப் போனாரு. ஆனா, பாட்டிய சீனு மாமா அழைச்சிகிட்டுப் போயிட்டாரு”

சீனு, சேகரின் சித்தப்பா.

“சீனு மாமா  கூப்பிட்டதும், பாட்டி அவங்களோட போனாங்க” என்ற செல்வம், “ஆங், பாட்டி சீனு மாமாவோட போகறதுக்கு முன்னாடி அந்த ரூமுக்குப் போனாங்க”

“அடேய், அது அவங்க வீடு ! எங்க வேணாலும் போவாங்க” ஜோதி.

“இல்ல, அத்தை, ஒரு வேளை பாட்டி, சேகர் அப்பா சட்டையில் இருந்து பணத்தை எடுத்துகிட்டுப் போயிருக்கலாம்” என்றான் ராஜு.  

ஆமாம், அப்படித்தான் நடந்து இருக்கிறது.

சேகரின் அப்பா, குளித்து விட்டு வந்து இருக்கிறார். சட்டையில் பணத்தைக் காணவில்லை. விளையாடிய குழந்தைகளை விசாரித்து இருக்கிறார். சேகர் அவரது அறைக்குள் போகவே இல்லை. வெளியில் தான் ஒளிந்து இருந்தான். அதனால் தான் செல்வம் எடுத்து இருப்பான் என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

செல்வத்தைக் கண்டித்து கேட்டதோடு இல்லாமல், ஜோதியையும் கதிரையும் கூப்பிட்டு சொல்லி விட்டார் சேகர் அப்பா.

“கதிரு, நா போயி, எங்க அம்மாவப் பாத்திட்டு வரேன், நீங்க விசாரிச்சு, பணத்தைக் கண்டுபிடிங்க” என சேகரின் அப்பா சொல்லிவிட்டார்.

செல்வத்தைக் கடுமையாகக் கடிந்து கொண்டு இருந்தார் கதிர்.

ராஜு வராவிட்டால், அவன் நிலைமை மோசமாக ஆகியிருக்கும்.

வாசலில் வண்டி சத்தம் கேட்டது.

சேகர் அப்பா தான்.

“அம்மா எப்படி இருக்காங்க ?” ஜோதி.

“நல்லா இருக்காங்க அக்கா. ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க.”

“மாமா ! நா பணத்தை எடுக்கல மாமா…” தயங்கி தயங்கிச் சொன்னான் செல்வம்.

“ஆமாண்டா தங்கம் ! மாமா தெரியாம உன்னச் சொல்லிட்டேன். மன்னிசிருடா !” கண்கலங்கச் சொன்னார் செகர் அப்பா.

தன் சின்ன மகன் கூப்பிட்டதும், பணத்தை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார் பாட்டி. சேகர் அப்பாவிடம் அவர் சொல்லி இருக்கிறார். குளித்துக் கொண்டு இருந்த அவருக்கு அது சரிவரக் காதில் விழவில்லை.

“பிள்ளைங்க சொல்றதையும் நம்புங்க, மாமா” என்றான் ராஜு.

“புரிஞ்சுதுடா” என ஓரே நேரத்தில் சொன்னார்கள் ஜோதியும் கதிரும்.

00

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *