சானடோரியம்- நாவலிலிருந்து சிறுபகுதி

வா.மு.கோமு

தனித்திருக்கிறேன். சுற்றிலும் யாருமில்லை என்கிற உணர்வு நான் மதியம் சாப்பிட்டு முடித்து இரண்டு மாத்திரைகளைப் போட்டதுமே வந்துவிட்டது. இந்த வியாதிக்காக இந்த மருத்துவமனையில் இப்படி தனித்தனி அறைகளை எதற்காக ஆரம்பகாலத்தில் கட்டினார்கள்? இதுதான் சரியான முறையா? கொரனாவின் போது மாஸ்க் அணியச்சொன்னார்கள். அதற்கும் முன்பாக மருத்துவர்கள் மட்டுமே அணிந்து வைத்தியம் பார்த்த பொருள் அது. முகக்கவசமானது வியாதி பரவுவதை தடுப்பதாக நம்பினார்கள். இங்கே படுத்திருக்கும் வியாதியஸ்தர்கள் ஐந்து நிமிடங்கள் கூட அந்த மாஸ்க்கை அணிந்திருக்க முடியாது. மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் வாங்கிக்கொண்டிருக்கும் கொஞ்சம் மூச்சிற்கும் பங்கம் வந்துவிடும். மாஸ்க் ஆரோக்கியமான மனிதர்கள் அணிவது. ஆனால் இங்கே நோயாளிகளைத்தான் அணியச் சொல்கிறார்கள்.

போட்டிருந்த மதிய நேர மாத்திரைகள் இரண்டும் என்ன வேலையைச் செய்வதற்காக போட்டிருக்கிறேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் தனிமையை நான் உணர்ந்திருக்கையில் உடலில் அது என்னவோ செய்வதை லேசாக உணர்ந்தேன். கொஞ்சம் திருக்கலா அது? என்றும் தெரியவில்லை. இதனால் தான் என்னால் என் அலைபேசியை சரியான முறையில் உபயோகித்து எந்த வீடியோக்களையும் தொடர்ந்து மகிழ்வாக பார்க்க முடியவில்லை.

சமீபத்தில் ஏஐ குரல் என்று பேசுபவரின் குரலை மாற்றி கேட்பதற்கு வித்தியாசமாய் வேடிக்கை விசயங்கள் வருகிறது. பூனைகள், நாய்கள், குரங்குகள் அனைத்தும் தமிழில் பேசுகின்றன. திட்டுகின்றன என்பது போன்ற வீடியோக்கள் அவைகள். இப்படியான சமயத்தில் அந்த வீடியோக்கள் வரிசையாக வருகையில் பார்க்க வேடிக்கையாகவும், குரலும் கூட வேறு தொனியில் இருப்பதால் ரசிக்க முடிகிறது. ஆனால் என்னதான் மகிழ்வு மனதுக்கு வந்தாலும் ஒருகட்டத்தில் சலிப்பே மிஞ்சுகிறது. ஐபில் கிரிக்கெட் மேட்ச் ஆடுகிறார்கள். இரண்டு மாதங்கள் ஆடினவர்களே திரும்பத்திரும்ப ஆடுகிறார்கள் என்கிறபோது பார்க்க விருப்பமில்லாமல் போவது போலத்தான்.

திடீரென என் அறைக்குள் ஏகப்பட்ட நடமாட்டம் இருப்பது போன்ற உணர்வு எனக்கு தோனிற்று. நிச்சயமாக என் அறைக்குள் ஏகப்பட்ட நபர்கள் நுழைந்திருக்கிறார்கள். இன்னமும் அறைக்கதவின் வழியே திமுதிமுவென நெரிசலாக உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். எனக்கு இது எரிச்சலைக் கொடுத்தது. எதற்காக இந்த மதிய நேரத்தில் என் அறைக்குள் இத்தனை நபர்கள் நுழைந்திருக்கிறார்கள்?

இவர்களுக்கு என் அறைக்குள் என்ன வேலை? அடுத்தவரின் அறைக்குள் இத்தனைபேர் அத்துமீறி நுழைவதற்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். என்னவோ நடக்கப்போகிறது. அண்ணன் நேற்றிரவு இவர்களைத்தான் ‘வெளிய போங்கடா!’ என்று சப்தமிட்டாரா? எனக்குள் திடீரென பய உணர்வும் பீதியும் வந்துவிட்டது. முழுதாய் ஒரு தேரைத்தவளை என் தொண்டைக்குழிக்குள் சிக்கிவிட்டது போலத்தான். உள்ளே முழுங்கவும் முடியவில்லை. வெளியே வாந்தியெடுத்து துப்பவும் வழியில்லை.

பின்னால் பாத்ரும் அறையைப் பார்த்தேன். அங்கேயும் நெரிசலாக நின்று படுக்கையில் கிடக்கும் என்னை பார்த்தவாறு இருந்தார்கள். நான் என்ன செய்ய வேண்டும் இப்போது? எழுந்து இவர்களை வழிவிடச்சொல்லி வெளியேறி சாலைக்கு சென்றுவிட வேண்டும். அங்கே போனால் மட்டும் இவர்கள் என்னை பின் தொடர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? ஆனால் அண்ணனைப்போல ‘வெளியே போங்கடா!’ என்று நான் கத்தப்போவதில்லை.

இங்கே என்ன வேண்டுமானாலும் நடந்துவிட்டுப்போகட்டும். நான் ஆரோக்கியமானவன். நான் எதாவது செய்தாக வேண்டும் உடனடியாக. எழுந்து பயத்தில் வெளியே ஓடிவிடக்கூடாது. என் அறைக்குள் நுழைந்தவர்களுக்கெல்லாம் தொக்காகிப் போய்விடும். கெக்கலி போட்டு சிரிப்பார்கள். நான் பயப்பட்டாற்போல என் முகத்தை வைத்துக்கொள்ளக்கூடாது.

நான் யாரையேனும் ஒருவரை உற்றுப்பார்த்து அவரை யாரென விசாரிக்க வேண்டும். இப்போதைக்கு அவர்கள் அனைவரும் என் அறைக்குள் ஏதாவது உதவி கேட்டு வந்தவர்களாகக்கூட இருக்கலாம். டீக்காரன் நாலு மணிக்குமேல் வரும்வரையில் இந்த வீதியில் யாரும் வரப்போவதில்லை. என் தனிமையைத் தெரிந்துகொண்டு கூட்டமாய் ஈக்கள் மொய்ப்பது போல வந்து சேர்ந்திருக்கிறார்கள். நான் என் படுக்கையை கவனித்தேன். படுக்கையைச் சுற்றிலும் தான் அவர்கள் அறைமுழுக்க நின்றிருந்தார்களேயொழிய படுக்கை மீது யாரும் அமரவில்லை. அனைவருமே என்னை ஒரு அதிசயப் பொருளைப்பார்ப்பது போல பார்த்தபடி நின்றிருந்தார்கள். இங்கே நானென்ன அவுத்துப்போட்டு அம்மணமாகவா கிடக்கிறேன்?

நான் நிதானமாக எழுந்து படுக்கையில் சம்மணங்கால் போட்டு அமர்ந்தேன். என் எதிரில் இருக்கும் முகங்களில் ஒன்றை நான் உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன். வெண்மையாய் கன்னக்குழிகளின் மேலே கண்கள் இருக்குமிடத்தில் இரண்டு ஓட்டையான துவாரங்களை பார்த்தேன். மீண்டும் கண்களைத் தேய்த்து விட்டுக்கொண்டு பாத்ரூம் பக்கமாய் நின்றிருப்பவர்களில் ஒருவரின் முகத்தை உற்று நோக்கினேன். ‘என்னையும் நன்றாகப்பார்.. உன் கண்களுக்கு நான் தெரிகிறேனா?’ என்பது மாதிரி அந்த உருவம் எனக்கு நன்றாக தெரியும்படி தன் முகத்தை என் முகம் அருகே கொண்டு வந்து காட்டிவிட்டு பின்னால் முகத்தை ’விசுக்’கென இழுத்துக்கொண்டது.

அவர்கள் ஏதாவது என்னிடம் பேசுவார்கள் என்று நான் காத்திருந்தேன். போக நானாக அவர்களிடம் விசாரிக்க இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. வந்தவர்கள் சீக்கிரமாய் போய்விட்டால் மீண்டும் தனிமையை உணர்வேன் நான் . இவர்களெல்லாம் டம்மி பீஸ்கள். வேஸ்டேஜ் குடோனில் கிடந்தவைகள். என் தனிமையை போக்கவே இவர்கள் கூட்டமாய் வந்திருக்கிறார்கள். எனக்கு முற்றிலுமாக இப்போது பயம் போய்விட்டது. என்னைப்பார்க்க மதிய நேரத்தில் இத்தனை உறவினர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

நான் என் காதுகளை உன்னிப்பாய் வைத்துக்கொள்ள முயற்சித்தேன். கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல என் காதுகள் மூலமாக ஏதாவது ஒலிகள் கேட்கின்றனவா என்று கூர்ந்து கவனித்தேன். மேலே சுழலும் மின்விசிறி எனக்கு இப்போதைக்கு இடைஞ்சலாக இருந்தது. சுற்றுக்கு ஒருமுறை ‘டொர்க்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது. அவர்கள் நிச்சயமாக ஏதாவது என்னிடம் பேச முயற்சிப்பார்கள் என்று உறுதியாக நம்பினேன். பின்னே எதற்காக என்னைத்தேடி இத்தனைபேர் என் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்? நான் நிதானமாகவும் அமைதியாகவும்தான் இருக்கிறேன் என்று நம்பினேன். என் செயல் எனக்கே ஆச்சரியத்தையும் கொடுத்தது.

கண்களை மூடியபடியே இருந்த எனக்கு நேரம் போகப்போகத்தான் அறைக்குள் குரல்களின் ஓசை கேட்பது மெலிதாய் கேட்கத் துவங்கிற்று. போகப்போக அவற்றின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாவதை உணர்ந்தேன். கூட்டமாய் வந்திருந்த அனைவருமே ஆளுக்கு ஒரு கருத்தை பேசிக்கொண்டே நிற்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். மின்விசிறியின் ’டொர்ரக்’ ஒலி இப்போது என் காதுக்குள் சுத்தமாய் கேட்கவில்லை.

”இந்தத்தம்பி எந்தூருன்னு தெரியலை எனக்கு! உனக்கு பார்த்த முகமா இருக்கான்னு இப்பிடி முன்னால வந்து பார்த்துச்சொல்லு!”

”மொட்டை போட்டிருக்கறதால இவனை சுத்தமா அடையாளம் தெரியில எனக்கு!”

”உன்னோட குருட்டுக்கண்ணை வெச்சுட்டு முன்னாடி வந்துட்டியா? தள்ளிப்போ கிழவா! நான் பாக்குறேன் இவன் யாருன்னு? ஓ இவனா? இவனை நான் வெசீமங்கலம் டாஸ்மார்க் பக்கமா பலவாட்டி பாத்துருக்கேன். ஆரஞ்சி கலர் எலக்ட்ரிக் பைக்குல சொய்ங்குனு மேட்டுப்புதூரு கடைக்கி வருவான். தனிக்குடிகாரன் இவன். சரக்கு கடையில பாட்டலை வாங்கீட்டு இவன் பாட்டுக்கு எதாச்சிம் வேப்பை மரத்தடிக்கி போயி நின்னுக்குவான். வண்டி சீட்டை தூக்கி உள்ளார இருக்குற அட்டகாசமான கண்ணாடி டம்ளரை எடுத்து சரக்கை ஊத்துவான். அந்த கண்ணாடி டம்ளரைப் பார்த்துக்கூட நான் ஒருவிசுக்கா பொறாமைப்பட்டிருக்கேன். அது வளைவா அழகா இருக்கும். தண்ணிக்கேனும் வீட்டுல இருந்தே கொண்டாந்திருப்பான். சாக்னா கடையில ஒரு மிச்சரு கூட வாங்க மாட்டான். திங்கறதுக்கும் ஊட்டுல இருந்தே கருவாடு, கொய்யாக்கான்னு கொண்டாந்து திம்பான். ஒரு கோட்டரை நாலு ரவுண்டு வீசுவான்.”

“நாலு சொட்டு குடிக்கிறதுக்கு முன்னால நமக்கு ஊத்துவானா?”

“அதெல்லாம் நாலு சொட்டென்ன.. எச்சாவே தெளிப்பான். நாலு வாட்டி குடிச்சாலும் டம்ளர்ல மிச்சம் வெச்சு கீழ துளி ஊத்தீருவான்”

“அப்படின்னா இவன் நல்ல மொட்டையன். இவன் பேரு தெரியுமா?”

“இவன் தான் தனிக்குடிகாரனாச்சே.. குடிச்சு முடிச்சதீம் சொய்ங்குனு வண்டியை எடுத்துட்டு போயிருவான்! யாருகிட்டயும் பேச்சே குடுக்க மாட்டான்.”

“அப்ப போதையில தான் வண்டிய எடுத்துட்டு போவானா?”

“ஒரு கோட்டரு இவனை என்ன செஞ்சு போடும்.. நான் காரவேலைக்கி போயிட்டு நாலு பேர்த்தோட ஒட்டுக்கா மரத்தடியில உட்கார்ந்துட்டு குடிச்சிட்டு இருப்பேன். அப்ப பார்த்திருக்கேன்.”

“நல்லவனா கெட்டவனா இவன்? அதச்சொல்லு!”

“குடிகாரனுக அத்தனெ பேரும் நல்லவனுங்கதாண்டா மடப்பயலே!.. புதுசா கேக்குறான்! கெட்டவனா இருந்தா மட்டிலும் நீ இவனை நொட்டித்தள்ளீருவியா? கெஜட்டாடா நீயி?”

“கொஞ்சம் தள்ளிக்க.. நானும் அவன் மூஞ்சியை பார்க்கணும். இவனை நான் எங்கீமே பார்த்ததில்லீப்பா.. நானோ சங்ககிரிக்காரன். வாங்க வாங்க சட்டு புட்டுனு.. அடுத்தாளு இவனை வந்து பாருங்க!”

எனக்கு குரல்கள் மெலிதாக முதலில் கேட்கத்துவங்கி இப்போது என்னைப்பற்றி இவர்களெல்லாம் என்ன பேசுகிறார்களென கவனப்படுத்தி கேட்க வேண்டிய அவசியமில்லாமல் சாதாரணமாகவே கேட்டது.

“எங்கே.. நான் பாக்குறேன். நெசமாலுமே இவன் அதிசயப்பிறவி தானப்போவ். இத்தனி பேரு இருக்கோம். எல்லாம் தெரியுது இவனுக்கு. எல்லாரும் பாருங்கடான்னு எந்திரிச்சு பெட்டுல சாமியாரு கணக்கா உட்கார்ந்துட்டான் பாரு. ஏண்டா குப்பா.. இந்த ரூமுல நீதாண்டா கடேசியா செத்தே? எங்களை பார்த்ததும் ‘பே பேஏ.. ஓடுங்கடா எல்லாரும்’னு கத்தினியே! இந்த மொட்டையனைப்பாரு. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசமாட்டீங்கறான். பயப்பட மாட்டீங்கறான். இவன் நல்லவண்டா! நம்மளையெல்லாம் பார்த்தா ஏண்டா இவனுங்க பேயை கண்டாப்புல கத்துறானுங்க?”

“நீயே கத்துப்புடிச்சு செத்தவன் தாண்டா சண்முகா.. இப்ப என்னமோ வீர நாயம் பேசுறே! மொட்டையன் தைரியத்தை பாராட்டு மொதல்ல!’

“எல்லாரும் பார்த்தாச்சா? போலாமா? இவன் உட்கார்ந்திருக்குறதப் பார்த்தா எனக்கு பயமா இருக்குதுப்பா.. மந்திரம்கீது சொல்லிட்டு இருக்கானான்னு கேளு காது குடுத்து.. பச்சுன்னு நம்மளை இந்த எடத்துலயே இல்லாம ஆக்குனாலும் ஆக்கீருவான் மொட்டயன். மேலோகத்துகே நம்மளை அனுப்ப மந்திரம் கத்துட்டு வந்தவனாட்டம் உட்கார்ந்திருக்கான்!”

எனக்கு மெதுவாய் நிலவரம் புரிய ஆரம்பித்தது. எல்லோரும் இந்த மருத்துவமனையில் முன்னெப்போதோ இறந்தவர்களின் ஆத்மாக்கள். புகை வடிவில் மருத்துவமனையை விட்டு எங்கும் செல்லாமல் ஒருவருக்கொருவர் பயத்தில் இங்கேயே குட்டானாய் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் கைப்பிடித்தபடிதான் இருக்கிறார்கள். அப்படியானால் சின்னச்சாமியண்ணனும் இந்தக்கூட்டத்தில் இருக்கணுமே.. இருக்கட்டும்! ஆனால் பயத்தில் அவசரமாய் போய்விடுவார்கள் போலிருக்கிறதே.

இவர்களிடம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டும். நல்லவேளை நான் குருட்டுத் தைரியத்தில் எழுந்து ஓடாமல் அமர்ந்துவிட்டேன். அனைவரும் ஒன்றாக கூட்டமாய்… என்ன அழகான ஆத்மாக்கள். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு பற்றுதலாய் சுற்றுகிறார்கள். இவர்களுக்காகவேனும் ஒருமுறை மரணித்தால் அழகாய்த்தான் இருக்கும்.

இங்கே வாழும் உலகில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பங்கும் பங்காளிகளாக இருந்தாலும் அவர்களெல்லாம் நிம்மதியாய் ஒருவனை வாழ விட்டு விடுவார்களா? ஒருவன் நிறைய சம்பாதிக்கிறான் என்றால் ’இவன் இவ்வளவு நிம்மதியா வாழக்கூடாதே!’ என்றுதான் நினைக்கிறார்கள். இவன் நிம்மதியை எப்படியேனும் கெடுக்கனுமே! என்று அதற்கான வழிவகைகளில் இறங்குவார்கள்.

மது அருந்தாதவனால் அரசாங்கத்துக்கு என்ன பயன்? நல்லவன் மது அருந்த மாட்டான். பான்பராக் போட மாட்டான். ஹாண்ஸ் போட மாட்டான். பீடி சிகரெட் குடிக்க மாட்டான். அவனால் அரசுக்கு ஒரு பிரயோசனமும் இல்லையே. துக்கத்தில் இருப்பவனுக்குத்தான் மதுபானம் தேவை. ஆனால் மகிழ்ச்சியில் இருப்பவர்கள் தான் அதை அருந்துகிறார்கள். எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

துக்கமாக இருப்பவனை திரையரங்கத்தில் நாம் பார்த்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. மகிழ்ச்சியானவர்கள் தான் அங்கே கூடுகிறார்கள். இன்னைக்கு வரை மனிதனே மனிதனை வாழவிடாத சம்பவங்களைத் தான் பார்க்கிறோம். சுயநலமாய் வாழ்பவர்களுக்கு குடிகாரர்களும், போக்கிரிகளும், திருடர்களும் தான் தேவை. நல்லவர்கள் அவர்களுக்கு தேவையில்லை. ஆனாலும் நல்லவனை வாழவிடாமல் செய்வதில் தான் அவர்களுக்கு திருப்தி கிடைக்கும்.

என்னை எதற்காக எல்லோரும் உற்றுப்பார்த்துவிட்டு ஏதோவொரு கருத்தை சொல்லிக்கொண்டு ஒதுங்கிச் செல்கிறார்கள். அடுத்தவர் வந்து என்னைப் பார்க்கிறார். இந்தக்கூட்டத்தில் பெண்களின் ஆத்மாக்கள் ஏன் இல்லை. அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள். பெண்கள் பகுதியில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் பெண்கள் பகுதியிலேயே சுற்றிக்கொண்டு இருக்குமா? சும்மா அமர்ந்திருக்கும் என்னைக்கண்டும் பயப்படுகிறார்கள். மந்திரம் போட்டு மேலோகத்திற்கு அனுப்பிவிடுவேன் என்று பயக்கிறார்கள். பேடி ஆத்மாக்கள்.

அப்படியானால் யாருடைய ஆத்மாவும் மேலோகம் செல்வதில்லையா? டேய் முட்டாள்! மேலோகம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? என்னையே நான் கடிந்து கொண்டேன். என் எதிர்க்கே வந்து போகும் ஆத்மாக்களிடம் எந்தவித வித்தியாசங்களுமில்லை. புகை வடிவங்கள். எல்லாமே ஒன்றே போல தோற்றமளிக்கும் புகைவடிவங்கள். இரவிலும் இவைகள் இந்த மருத்துவமனையையே சுற்றிக்கொண்டிருக்கின்றனவா? இத்தனை நாட்களாக என் அறைக்குள் வராதவர்கள் இன்றுமட்டும் ஏன் இப்படி அனைவரும் நெருக்கியடித்து பிதுங்கிக்கொண்டு வந்து என்னைப் பார்க்கவேண்டும்?

சாலையில் செல்கையில் நாம் கவனித்திருக்கலாம். அதிகமாய் விபத்துகள் நடக்கும் பகுதிகளில் போர்டில் எழுதி வைத்திருப்பார்கள். ’விபத்துப்பகுதி மெதுவாகச் செல்லவும்’ என்று. விபத்துகள் ஏன் குறிப்பிட்ட அந்த ஒரு இடத்தில் மட்டும் அதிகம் நடக்கிறது? அங்கேயிருந்து செல்ல முடியாத ஆத்மாக்கள் வழிமறித்து யாரிடமேனும் உதவிகள் கேட்க முயற்சிக்கின்றனவா? மேலும் பார்த்திருக்கலாம் நாம்.. ‘எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை!’ என்றும் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பலகையை. நிச்சயமாக வேண்டுமென்றே யாரும் அப்படியொரு வாசகத்தை எழுதி வைத்திருக்க மாட்டார்கள். அப்படி அவசியமுமில்லை. அது சாலையில் செல்வோரை வீணான பதற்றத்திற்குத்தான் உள்ளாக்கும். ஆனால் அங்கும் விபத்துகள் நடந்து பலரும் சொன்ன வார்த்தையாகத்தான் அது இருக்க வேண்டும்.

“இவன் பழனிவேலு.. என்னை ரூமுல தனியா தூங்க வச்சிட்டு பயந்தடிச்சுட்டு எந்திரிச்சி ஓடி வந்துட்டான்! கிணத்துப்பாளையம்னு ஒரு ஊரைச் சொன்னான். இவன் இங்க சாவுறதுக்காக வரலைம்பான். ரெம்ப தைரியமானவன். இப்பத்திக்கி இவனுக்கு சாவே இல்லையாட்டம்!” நிச்சயம் சின்னச்சாமியாகத்தான் இருக்கணும். நான் கண்களை படக்கென திறந்தேன். எதிர்க்கே இருக்கும் புகைவடிவத்தை பார்த்தேன்.

“பயந்தடிச்சுட்டு நான் வரலடா! நீயி தான் தூக்கத்துல ‘போங்கடா.. போங்கடா எல்லாரும்’ அப்படின்னு கத்திட்டு கிடந்தே. உனக்கு அதெல்லாம் தெரியாது. இவனுங்கதான் கூட்டமா உன்னோட ரூமுக்குள்ள வந்து மெரட்டுனாங்களாடா சின்னா? இவனுங்க எங்கடா மெரட்டுனாங்க உன்னை? நீயா பயந்துட்டு என்னையும் தூங்க உடாம அந்தக்கத்து கத்துனே! பேடிப்பயலே! இவனைப்போயி அண்ணன்னு கூப்பிட்டேன் பாரு.. தள்ளிப்போடா.. அடுத்த ஆத்மா வந்து பார்க்கட்டும்.. நின்னீன்னா செருப்பை எடுத்தாந்து சாத்துவேன் பார்த்துக்க!” என்று நிதானமாய் சொன்னேன். கோபமெல்லாம் இல்லை. நான் சொல்வது வெளித்திண்ணையில் யாரேனும் அமர்ந்திருந்தால் கூட நான் முனகுவது போலத்தான் கேட்டிருக்கும். அந்த ஆத்மாவை பின்னுக்கு இழுத்து மற்றொன்று முன்னுக்கு வந்தது.

“தம்பி! செருப்புன்னு சொன்னா நாங்க எல்லாருமே பயந்துக்குவோம். செருப்புல எங்கள்ல யாரையும் அடிச்சிடாதீங்க.. மறுக்காவும் ஒருக்கா செத்தாலும் செத்துடுவோம். அப்புறம் மறுக்கா செத்து எங்கே போவோம்னு ஒன்னும் இன்னிக்கி வரைக்கும் தெரியல எங்களுக்கே! தம்பி நாங்க பேசுறது உங்களுக்கு கேட்குதா? நெசமாலுமா? இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!”

“மயிறு! மெடிக்கல் மிராக்கிள்னு எதாச்சிம் இங்கிலீஸ்ல ஒலறிகிட்டு இருந்தீன்னா வெளிய என்னோட தோலுச் செருப்புத்தான் கிடக்குது.. எடுத்தாந்து படறப்புடிச்சிடுவன் பாத்துக்க.. யார்றா நீயி என்கிட்ட இங்கிலீஸ்ல பேசுறே? நீ இங்கிலீஸ்காரன் இங்க வந்து ஆஸ்பத்திரி கட்டுறப்போ கொத்தனாரா லண்டன்ல இருந்து வந்தியாடா? இல்ல லார்ட்ஸ் மைதானத்துல இருந்து வந்தியா? நீயும் சளி நோவுல இங்க செத்தவனாடா?”

“தம்பி கோபப்படாதீங்க தம்பி.. நாங்கெல்லாம் ஒருத்தரை ஒருத்தரு கையை புடிச்சிட்டு பயந்துட்டே செத்தாப்புல இருந்து இங்கயே கிடக்கோம். எங்களைப்போயி இப்பிடி சத்தம் போட்டு மெரட்டுனா நாங்க இனி எங்க தான் போவோம்?”

”ஓ! போக்கிடமில்லாத அனாதப்பயலுங்களாடா நீங்கெல்லாம்? போயி தெக்கெ பிணவறை பெருசாத்தான கிடக்கும்.. அங்க போயி ஒட்டுக்கா படுத்துக்கங்கடா.. படுத்துக்கிட்டு அரசாங்கத்துக்கிட்ட நிவாரண நிதி கேளுங்கடா! இங்க எல்லாருக்கும் என் ரூம்ல என்னடா வேலை? மொத அதைச்சொல்றா கெழட்டு கபோதி.. இங்க யாரை புடுங்க வந்தே? என்னை மிரட்டி ஈஸியா சாவடிச்சிடலாம்னு திட்டம் போட்டு மட்ட மத்தியானத்துல வந்தீங்களாடா? உங்களுக்கு ஐடியா குடுத்தவன் அந்த சின்னச்சாமி கபோதிப்பயலாடா?” எனக்கு நிஜமாகவே கோபம் ஏறிக்கொண்டு இருந்தது. என்னோட அனுமதி இல்லாமல் ஏதோ நான்கைந்து ஆத்மாக்கள் வந்திருந்தால் பரவாயில்லை. இங்கே ஒரு கூட்டமே நிற்கிறதே!

“இல்ல! நான் போய் உங்க தொந்தரவைப்பத்தி பெரிய டாக்டர்கிட்ட ரிப்போர்ட் பண்ணப்போறேன். அவரு பார்த்து உங்களுக்கு ஒரு வழியை பண்ணிடுவாரு!”

“ஐயோ! தம்பி.. அப்படியெல்லாம் நீங்க போய் பெரிய டாக்டர்கிட்ட ரிப்போர்ட் பண்ணிடாதீங்க தம்பி. உங்களுக்கு புண்ணியமாப் போகும். அவரு இங்கிருந்து எங்களை முடுக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டாருன்னா ரோட்டுக்குத்தான் நாங்க போகணும். உங்க கையில விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கறோம் தம்பி.. நாங்க உங்களை தொந்தரவு பண்ணுறதுக்காக வரலை.. பக்கத்து ரூமுல தான் இருந்தோம். அந்த ரூமு ஒன்னுலதான் இத்தனை காலத்துல ஒரு பிணம் கூட விழலை. அது எங்களுக்கு நல்லாத் தெரியும். அதனால பிணம் விழாத அறையில் கூட்டமா எப்பவும் சேர்ந்து நின்னுக்குவோம். நீங்க என்னடான்னா குடோன்லயே போயி படுத்துக்கச் சொல்றீங்க.. உசுரே போயிரும் தம்பி எங்க எல்லாருக்கும்!”

“சரிடா கெழட்டு கபோதி.. அப்ப அந்த பக்கத்து ரூமுலயே போயி நின்னுக்க வேண்டீது தானே.. இங்க என்னத்துக்குடா வந்தீங்க?”

“அதுக்கு நாங்க காரணமில்லங்க தம்பி.. நேத்து செத்தானே சின்னச்சாமி.. அவன் தான் நீங்க வெளிய போயிட்டு கையில கவரை வச்சிட்டு நடந்து வர்றதை பார்த்தான். நேரா உங்க ரூமு கதவை நீக்கி படுத்தீங்க. சின்னச்சாமி தான் சொன்னான். ‘இந்த மொட்டையன் என்னை தனியா படுக்கப்போட்டுட்டு எந்திரிச்சி ஒடியாந்துட்டான். பயமே இல்லாத பெரிய கழட்டியாட்டம் பேசுவான். அப்புறம் என்னத்துக்கு என்னை தனியா படுக்கப்போட்டுட்டு எந்திரிச்சு ஓடியாந்தான்? அவன் ரூமுக்கு எல்லாரும் போலாம் வாங்கன்னு கூப்பிட்டான்.”

“அந்த ஈத்தறெ கூப்பிட்டா எல்லாரும் வந்தீருவீங்களாடா.. “

“எங்க தலைவரு வேண்டாம்னு தான் சொன்னாருங்க தம்பி..”

“என்னது? உங்களுக்கு மேல புடுங்கி ஒருத்தன் இருக்கானா? அவனெங்க? அவனை மொத இங்க வரச்சொல்லு என் முன்னாடி!”

“தலைவரு அந்த ரூம்ல பெட்ல படுத்துட்டு இருக்காருங்க தம்பி.. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் அவரு வரமாட்டாரு!”

“எதுடா சின்ன விசயம்? என்னை மிரட்டி கொன்னுபோட்டு உங்களோட நானும் கை கோர்த்துட்டு இந்த கரட்டுக்குள்ள சுத்துறதா? செருப்பை எடுத்தன்னு வச்சிக்க..”

“ஐயோ! நீங்க பெரிய கோவக்காரரா இருக்கீங்க தம்பி.. கோவத்தை மொதல்ல கொறச்சிக்கங்க நீங்க!”

“கோவம் வர்றாப்டியே பேசுனா பின்ன என்னடா அர்த்தம்! சரி நேத்து செத்துப்போன அந்தக் கழட்டி வேற என்ன சொன்னான்? செல்போனுல எந்த நேரமும் சோகப்பாட்டு வச்சிக் கேக்காதடா கேக்காதடான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன்!”

“போலாம் வாங்க, போலாம் வாங்கன்னு எங்களை இழுத்தான் அவன். நாங்க தான் ‘அட சித்தங்கூரியத்துல சோறு வருமாடா அங்க.. மனுசனாப் பொறந்தவன் மத்தியானச்சோறு தின்னு முடிக்கட்டும்.. அப்புறமா போலாமடா’ன்னு சொன்னோம்!”

“ஓஹோ! வெறும் வயித்துல நான் சாகக்கூடாதுன்னு திட்டம் போட்டீங்களாடா..”

“என்ன தம்பி நீங்க சாவு சாவுன்னு சாவைப்பத்தியே பேசுறீங்க.. எங்களுக்கு பயமா இருக்குதுல்ல! நாங்க எல்லோரும் இங்க சாவு பயத்துல தான் சுத்திட்டு இருக்கோம். இப்ப நீங்க என்ன செத்தா போயிட்டீங்க? நான்கூட வடக்கெ நாலு ரூம் தள்ளி ஒரு ரூம்லதான் இருவது வருசத்திக்கிம் முன்னால வந்து படுத்தவன். அப்பெல்லாம் பவுடர் ஊசி போடுவாங்க! மாத்திரையே இந்த நோவுக்கு கிடையாது!”

“டேய் கெழ்டு.. இந்த பழைய நாயமெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்க வேண்டாம். அதைக்கேட்டு நான் என்னடா பண்டப்போறேன்? அந்த ரூம்ல இருவது வருசம் முன்ன செத்தவன் நீயி.. அவ்ளோதானே உடு! அதான் நான் சாப்டுட்டு படுத்தப்ப வரிசையா மொய்யி மொய்யின்னு உள்ளார வந்தீங்களாடா? வந்து என்னை புடுங்கிப்போட்டீங்களாடா? எங்க அந்த சின்னான்.. அவனை நான் செருப்புல அடிக்காம உடமாட்டண்டா கெழவா! என்ன ஒரு ஏத்தம் இருக்கும் அவனுக்கு..”

“ஏப்பா.. சின்னச்சாமி.. தம்பி உன்மேல தான் கோவத்துல இருக்குது. வந்து கையைப்புடிச்சி மன்னிப்பு கேட்டுக்கோ.. தம்பி தங்கமான தம்பி. உன்னைய மன்னிச்சு செருப்புல அடிக்காம உட்டுரும்!”

“என்னடா நீங்களே பேசிக்கறீங்க.. அப்புறம் நானெதுக்குடா இங்க மனுசன்னு சொல்லி பெட்டுல உட்கார்ந்திருக்கேன். போயி மொதல்ல இழுத்தாங்கடா உங்க பெரிய புடுங்கியெ.. அவனை நான் பார்க்கணும். இந்த சின்ன விசயத்துக்கு அவரு வரமாட்டாரா? அங்கென்ன பெட்டுல படுக்கை அவனுக்கு.. அவனென்ன பெரிய கெஜட்டாடா?”

“போயி யாராச்சிம் இழுத்தாங்கடா தலைவரெ.. இல்லீன்னா தம்பிக்கி இருக்குற கோவத்துல செருப்பை தூக்கி நம்மளை படறப்புடிச்சிடும்.. ஒரு பத்துப்பாஞ்சி பேரு பிரிஞ்சி கையை புடிச்சிட்டு பத்திரமாப்போயி தலைவரை கையைப்புடிச்சி கூட்டியாங்கடா.. பார்த்துப்போங்க பக்கத்து ரூமுக்கு! தம்பி.. தலைவரை இப்ப கூட்டியாந்துடுவாங்க.. நீங்க சித்த நேரம் பெட்டுல படுத்து ரெஸ்ட் எடுங்க தம்பி.. நாங்க வந்ததுல இருந்து உட்கார்ந்துட்டே இருக்கீங்க!”

கிழவனின் ஆத்மா சொல்லிய பிறகுதான் கால்களை விலக்கி நீட்டிப் படுத்துக்கொண்டேன். ஒரு காலை உயர்த்தி மற்றொரு காலை தூக்கி அதன் முட்டியில் வைத்து அட்டணங்கால் போட்டுக்கொண்டேன். ‘யாராச்சிம் அந்த ஃபேனை இன்னும் கொஞ்சம் வெசையா ஓடுறாப்ல திருக்கி உடுங்கடா’ என்றேன். பின்னே அவர்களால் முடியுமா என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா நான். சொன்னதுபோலவே மின்விசிறி வேகமாக ஓடத்துவங்கிற்று. ஏழுபேர் சேர்ந்து திருகினார்களா? என்று கவனிக்கவில்லை. ஒரே கூட்டமாய் இருந்தது அறை.

000

(சென்னை 2026 கண்காட்சியில் ‘சானடோரியம்’ நாவல் நாதன் பதிப்பகம் 528, 529 ஸ்டாலில் கிடைக்கும். மேலும் எனது மூன்றாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுதி ‘அம்சவேணியின் ஞாயிற்றுக்கிழமை’ நாதன் பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும்)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *