அரிகரசின்னா

ஊர்ப் பெரியவர்கள் நான்கு பேரும் காவல் நிலையத்து நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள்.

“இங்க பாருங்க, உங்களுக்கு பர்மிஷன் குடுத்துட்டு இதுவரைக்கும் நாங்க பட்டதெல்லாம் போதும். இந்த மொற நான் அப்டி ஏமாற மாட்டேன்.” என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு கோபமாகச் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

“சார், பாதுகாப்புக்கு ஒரே ஒரு போலீஸ மட்டும் அனுப்பி வைங்க சார். பசங்க எந்தப் பிரச்சினையும் பண்ணாம பயந்துக்கிட்டு இருப்பானுக.” என்று அடக்கமாகச் சொன்னார் ஊர் பெரியவர் உத்தம ராசு.

“ம்… உங்கப் பயலுகளோட பயத்ததான் போன வருசமே பாத்தோமே. இப்டி நீங்க கேட்டதாலதான் போன மொற ஏட்டு எட்டப்பர அனுப்பி வச்சோம்…”

“அதான் போன வருசம் எந்தப் பிரச்னையும் வல்லயே சார்” என்று அழுத்தித் சொன்னது இன்னொரு பெருசு.

“ஆமா ஆமா… ஒங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லதான், ஆனா கூட்டத்துக்குள்ள நாலாப் பக்கத்துலேருந்தும் கல்ல கொண்டு ஏட்டு மேலயேல எறிஞ்சிக்கிட்டு வந்துருக்கானுங்க உங்க ஊரானுங்க… நாலு வீதிய நீங்க சுத்தி முடிக்கிறதுக்குள்ள நாய் படாத பாடு பட்டுருக்காருயா எட்டப்பரு. சார்…பர்மிஷன்லாம் குடுக்காதீங்க சார்.” எங்க இந்த வருசம் பந்தோபஸ்த்துக்கு நம்மள அனுப்பிடுவாங்களோ…! என்ற அச்சத்தில் முந்திக்கொண்டு உணர்ச்சி வசப்பட்டார் இன்னோர் ஏட்டு.

“சார், அது ஏதோ எங்க கவனத்துல இல்லாம நடந்திருக்கும் சார். தெரிஞ்சிருந்தா விட்டிருக்க மாட்டோம். ஏட்டய்யாவாவது எங்கள்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்ல சார்.” என்றார் உத்தம ராசு.

“ஆமாயா, பள்ளிக்கூடத்துப் பயலுக மாதிரி உங்கள்ட வந்து அய்யா… அய்யா… இவுங்க என்ன அடிக்கிறாங்க! என்னானு கேளுங்கனு கம்ப்ளைண்ட் பண்ணிட்டுருப்பாரா ஏட்டு… இங்காருங்க கட்ட கடைசியா சொல்றேன், என்ன நடந்தாலும் நீங்கதான் பொறுப்புன்னு எழுதி குடுத்துட்டுப் போய் தாராளமா ஊர்வலத்த நடத்திக்கங்க. ஸ்டேஷன்லேருந்துலாம் யாரையும் அனுப்ப முடியாது. ஆனா ஏதாவது பிரச்சன ஆச்சின்னா உங்களதான் புடிப்பேன்… பாத்துக்கோங்க” என்றார் இன்சு.

ஊர்க்காரர்களை நம்பி வாக்குக் கொடுக்க மனமில்லாமலும் வேறு வழி இல்லாமலும் எழுதிக் கொடுத்து அனுமதிப் பெற்று, வெளிரிய முகத்தோடு வெளியேறினர் நால்வரும். இரண்டு இருச்சக்கர வாகனங்களிலும் ஏறி, தங்கள் ஊர் நோக்கிச் செல்லும் வழியில் வயலோரம் இருந்த ஓர் அரச மரத்தடித் தேநீர்க் கடையில் நின்றனர்.

“எப்பா நாளு டீ போடுப்பா… என்னய்யா எழுதிக் குடுத்துப்புட்டோம் சரியா வருமா…?” தயக்கத்தோடு கேட்டார் ஊர்ப் பெரியவர் உத்தம ராசு.

“ஏன்ணே… அதல்லாம் நம்ம ஊர்ப் பயளுகளால எந்தப் பிரச்னையும் வராதுண்ணே. இந்தப் பூஞ்சோலப் பயளுகதான் பிரச்சனக்கிக் காரணொம். வந்தாங்கன்னா சும்மா இருக்க மாட்றானுங்க. சும்மா இருக்குற நம்ம பயளுகளயும் உசுப்பேத்தி விட்டுறானுங்க” மீசையில் ஒட்டிய தேநீரைத் துண்டால் துடைத்துக்கொண்டே சொன்னார் ஒரு பெரியவர்.

“ஆமா…! இல்லனா மட்டும் நம்ம பயளுக அப்டியே அமைதியா இருந்துடுவாங்களாக்கொம். சும்மா அவய்ங்களுக்கு வக்காலத்து வாங்காதயா…” என்றது இன்னொரு பெருசு.

“சரி சரி, அதப் பேசி இனி ப்ரயோசனமில்ல அடுத்து ஆக வேண்டியதப் பாப்போம். எதும் பிரச்சன வராம பாத்துக்கறது நம்ம பொறுப்புதான். சரி இந்த சாமி பொறப்பாடுக்கு என்னலாம் வெக்கலாம், என்னலாம் வேண்டாம்னு முடிவு பண்ணுங்க.” என்றார் உத்தம ராசு.

“இந்த தடவ இந்த தப்பு, மோளம், பீப்பியெல்லாம் சொல்ல வேண்டாம்யா… ஆடிக் குமிக்கிறானுக பயலுக… கொம்பு மட்டும் ஊதுனாலே போதும்”

“யோவ் என்னயா பேசுற… பயலுக வாரதே அந்தச் சத்தத்துக்குதான். லுங்கிய வரிஞ்சிக்கிட்டு கிருகிருத்து ஆடுறதே ஒரு போதய்யா… அதுவே வேண்டாம்னா அப்பறம் நாம நாலு பேரு மட்டுந்தான் ஊர்வலமா போவனும். சாமிய தூக்கி எறக்கக் கூட ஆளு இருக்காது.”

“அதுவுஞ் சரிதான். அப்போ அதுக்கு சொல்லிப்புடு. ஆனா கொம்பு கட்டாயமா ஊதனுமப்பா… அது இருந்தாதான் ஊர்வலத்துக்கு ஒரு கம்பீரமே வரும்… சொல்லிப்புட்டேன்”

“சரி சரி சொல்லிடலாம், அப்றோம் இந்த வான வேடிக்க, லைட் செட்டு, ஜென்ரேட்டர்லாமும் சொல்லிப்புடுங்க” என்றார் உத்தம ராசு.

“அப்டியே இந்தப் பயலுகள சரக்கடிக்காம வரச் சொல்லனுமப்பா. சாமிய நாலு வீதி சுத்தி கோயில்ல கொண்டு எறக்குனதுக்கப்பறொம் சரக்கு அடிச்சிக்கிட்டும், நாசமத்துப் போயிக்கிடட்டும். என்ன நான் சொல்றது.”

“அப்படின்னா ஒரு பய வரமாட்டான் பரவால்லயா? அதெல்லாம் பயலுகளுக்குக் கட்டுப்பாடல்லாம் போட முடியாது. பிரச்சன எதும் வராம நாமதான்யா பாத்துக்கனும்.” என்றார் உத்தம ராசு.

இப்படியே பேசிக் கொண்டு பெருசுகள் நால்வரும் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

                        *

சாமி ஊர்வலம் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்கள் ஒன்று கூடினார்கள்.

“டேய் பரமு நீ உண்டியல கைல எடுத்துக்கோ, டேய் ஒலக்க நீ தீவட்டிய புடி, எப்பா டேய் மத்தவங்கலாம் ஆளும் பேருமா சேந்து வடத்த புடிச்சி இழுங்கப்பா” எல்லோருக்கும் பணியைப் பிரித்துக் கொடுத்தார் உத்தமம்.

கொம்பு ஊதப்பட்டது. யானை பிளிருவது போல ஊரெங்கும் ஒலித்த அந்தச் சத்தம் சாமி ஊர்வலம் புறப்பட்டுவிட்டதை ஊருக்கே அறிவித்தது. மேளம் வாசிப்பவர்கள் தேருக்கு முன்னே வாசித்தபடி சென்றுகொண்டிருக்க அவர்களுக்கு முன்னே பெரும் இளைஞர் கூட்டம் லுங்கிகளை வரிந்து கட்டிக்கொண்டும் வாயில் கடித்துக் கொண்டும் ஆடியபடி சென்றார்கள்.

வாணக்காரர், தன் இடக்கையில், ஒரு முனையில் நெருப்போடிருந்த கயிற்றை, வலக்கையில் இருந்த வாண வெடியோடு சேர்த்து ஊதிப் பற்ற வைத்து வானில் வீசிக் கொண்டிருந்தார்.

ஊர்வலத்திற்கு முன்னே குலுக்கி செல்லப்படும் உண்டியலின் சில்லறைச் சத்தம், மேளத்திற்கும் நாயணத்திற்கும் சுதி சேர்த்துக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தேர் நிற்க, பூசாரி அந்த வீட்டின் அர்ச்சனைத் தட்டை வாங்கி, தன் கையிலிருந்த அரிவாளால் தேங்காயை உடைத்து ஒரு மூடியைத் தேரிலிருந்த சாக்கில் போட்டுக்கொண்டு இன்னொரு மூடியைத் தட்டில் வைத்து சூடம் ஏற்றி, சாமிக்கு தீபாராதனை காண்பித்து விட்டு, எரியும் சூடத்தோடு தட்டை வீட்டுக்காரர்களிடம் கொடுத்தபடி இருந்தார்.

ஊருக்குப் பெரிய குடும்பத்திலும் கோயிலுக்கு ஊழியம் செய்யும் குடும்பத்திலும் மட்டும் தேங்காய் மூடிகளை எடுக்கக் கூடாது என்பது விதி. இந்தப் பாகுபாட்டை அந்தக் குடும்பத்துக்காரர்கள் தனி கௌரவமாகவே கருதினார்கள்.

முக்கியச் சாலை வழியாகத் தேர் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில், தேருக்குப் பின் புறமாக இரண்டு இளைஞர்கள் இருச்சக்கர வாகனத்தில் வந்தார்கள். அவர்கள், வேறு ஊர்க்காரர்கள். இந்த ஊர்வலம் சாலையை முழுவதுமாக அடைத்திருந்ததால் அவர்களால் அதைக் கடந்து செல்ல முடியவில்லை. அவர்களும் வழி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஊர்வலத்தைப் பின் தொடர்ந்து தரையைக் கால்களால் உந்தியபடியே ஊர்ந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள். ஆனால் ஆடும் இளைஞர்கள் வழி விடுவதாய்த் தெரியவில்லை. பொறுமை இழந்த அவர்கள் அடித்து விட்டார்கள் ஹாரனை.

உடனே, ஆடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் அவர்கள் பக்கம் திரும்பி, “ஏய் என்னா சவுண்ட குடுக்குற சாமி போறது தெர்ல… மூடிக் கிட்டு வா!” என்றான்.

ஊர்வலத்திற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த உத்தமர் இதைப் பார்த்துப் பதறி ஓடிவந்தார். “டேய்… டேய்… டேய்… ஏன்டா இந்த அளும்புப் பண்றீங்க! வழிய விடுங்கடா. தம்பீ… நீங்க இப்டி போங்கப்பா.” என்று கூட்டத்தை ஒதுக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

தேர் ஒவ்வொரு வீடாய் மெதுவாகக் கடந்து போய்க்கொண்டே இருந்தது. முன்னால் பல இளைஞர்கள் ஆடிக்கொண்டே வந்தார்கள். ஒரு வீட்டு வாசலில் ஒரு இளம் பெண் நைட்டியோடு நின்றபடி ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆடிக்கொண்டிருந்தவர்களில் ஓர் இளைஞன் தன் லுங்கியை வரிந்து கட்டிக்கொண்டு அந்தப் பெண்ணை நோக்கி நடந்தான். அவளோடே அந்தப் பெண்ணின் அப்பாவும் அம்மாவும் நின்று சாமியைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா கையில் தீபாராதனை தட்டோடு நின்றார். தேர் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்ததும், தட்டை எடுத்துக்கொண்டு தேரை நோக்கி நகர்ந்தார் அப்பா. அதே நேரம் அந்த இளைஞன் அந்தப் பெண்ணின் எதிரில் வந்து நின்றான். கைக்கூப்பி சாமியைக் கும்பிட்டுக்கொண்டிருந்த பெண் பயந்தபடி அவனைப் பார்த்தாள். உடனே அப்பெண்ணின் அம்மா “தம்பி என்னப்பா வேணும்?” என்றாள்.

“ம்… குடிக்க கொஞ்சம் தண்ணி குடுங்க…” என்றான் அவன்.

அவள் அம்மா தண்ணீரை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அதே நேரத்தில் தேருக்கு முன்னால் வீராவேசமாக ஆடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு இளைஞனின் முகத்தினருகே சென்று இன்னொரு இளைஞன் ஆடினான். அடிக்கடி அவனை இடித்தான். ஆடும் ஆர்வத்தில் அவன் முகத்தைப் பார்க்காத இவன், இம்சை அதிகமானதால் “யார்ரா இவன்…?” என்று நிமிர்ந்து பார்க்க… அப்போதுதான் தெரிகிறது, நாக்கைத் துருத்திக்கொண்டு தன் எதிரே தன்னைக் கேலி செய்யும் தோரணையில் ஆடுவது பூஞ்சோலையைச் சேர்ந்த ஒருவன் என்று.

அதே நேரத்தில், அப்பெண்ணின் அம்மா தண்ணீர் எடுக்கப் போன இடைவெளியில், தனியாக நிற்கும் அந்தப் பெண்ணிடம் “நீங்க நைட்டிக்குப் பதிலா சுடிதார் போட்டு வந்துருந்தீங்கன்னா செம்மையா இருந்துருக்கும்!” என்றான் அந்த தண்ணீர் கேட்ட இளைஞன். இதைக் கேட்ட அந்தப் பெண் முகத்தைச் சுளித்துக்கொண்டு வீட்டிற்குள் நடந்தாள். உடனே அவன் “உன்னய ஒன்னும் போடாமலா வரச்சொன்னேன். சுடிதார்தான போடச்சொன்னேன் என்னமோ சிளுத்துக்கிட்டுப் போற!” என்று அந்த மேளச்சத்தம் தாண்டி வீட்டிற்குள் கேட்குமளவுக்கு அலறினான். இந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க உள்ளே போன அம்மாவும் தீபாராதனை கொடுக்க தேரின் அருகே போன அப்பாவும் ஒன்றாகத் திரும்பி வர… இந்த வக்கிர வார்த்தைகளைக் கேட்டுவிட்டார்கள்.

“என்னடா சொன்ன எம்பொண்ண…!” என்று இருவரும் தண்ணீர் சொம்பையும் தீபாராதனைத் தட்டையும் கீழே போட்டுவிட்டு அவன் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினார்கள்.

அதே வேளையில், தேரின் முன் ஆடிக்கொண்டிருந்த இளைஞன் “ஏன்டா… எந்த ஊருக்காரப் பய, யார் மூஞ்சி மேல வந்து ஆடுற?” என்று கேட்டுக்கொண்டே பூஞ்சோலை இளைஞனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். இதைப் பார்த்த மற்றவர்களும் அவன் மீது பாய… பூஞ்சோலைக் காரர்களும் பதிலுக்குத் தாக்க… அம்மாவும் அப்பாவும் இந்த இளைஞனை ஓரமாய் போட்டுப் புரட்ட… இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வாணக்காரர் வாணவெடியைப் பற்றவைத்து மேலே வீசப்போனார். அச்சமயம், கூட்டத்தில் இருவர் மல்லுக்கட்டிக்கொண்டே போய் வாணக்காரரை இடித்துவிட்டனர். அந்த இடிபாட்டில், மேலே போக வேண்டிய வெடி, ரோட்டோராமாய் இருந்த கூரைக்குள் நுழைந்து வீடே பற்றி எறிந்தது. கொஞ்ச நேரத்தில் ஊர்வலம் போர்க்களமானது. சாமி கேட்பாரற்று நடு வீதியில் நின்றது.

                     *

மறுநாள் காலை ஊர்ப் பெரியவர்கள் நான்கு பேரும் காவல் நிலையத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள். தரையில்.

00

அரிகரசின்னா

யூ டியூபர். ஆக்கூர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *