நிஜந்தன் தோழன்
இந்த புத்தக கண்காட்சியில் வெளியான மிக முக்கியான தொகுப்பு நூலை இங்கு அறிமுகம் செய்கிறேன்.
அது தி.பரமேசுவரி மற்றும் க.அஸ்வினிகுமாரி தொகுத்த பெண்ணெழுத்து (1947க்கு முன்).
நிச்சயம் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். பதிப்பிக்கப்பட்ட பெண்ணெழுத்துக்களை தேடியும், பின்னர் அவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பது பெரும்பாடு என்றால், முன்னுரையில் எழுதியிருப்பது நூலை தொகுப்பும் போது இருக்கும் பெயர் குழப்பம் அதிகமாக இருப்பதை கூறலாம், முன்னுரையில் கூறியிருப்பது போல் பொதுவான பெயரில் வெளியான பலர் இருக்க யார் இந்த கட்டுரை எழுதியது, இருவரும் ஒருவரா என்ற தேடல், பாலம்மாள் பெயரிலையே இருவர் இருந்திருக்கிறார், பதிப்பிக்கும்போது குறிப்பிடும் போது வரும் முன் எழுத்து என அந்த சிக்கல் இருப்பது மிகவும் தேடி கண்டுபிடிக்கும் வேலை.
பின்னர் அவர்கள் எழுதியதில் கிடைத்த ஒரு கட்டுரையை மற்றும் பதிப்பிக்கவில்லை, தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார்கள்.
23 கட்டுரைகளில் நான் இந்த நூலுக்கு முன் அறிந்தது மூவரின் பெயர் மட்டுமே, அதிலும் அவர்களின் எழுத்துக்களை வாசித்ததேயில்லை.
அனைத்து கட்டுரைகளும் ‘பெண் விடுதலை’ என்ற குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைக்க முடியாது ஒவ்வொன்றும் நுணுக்கி நாம் அறியாத சிக்கல்களை பேசுகிறது, அறிவியலை பேசுகிறது, பயண அனுபங்களை பேசுகிறது, பக்தியை பேசுகிறது என பெரிதாக அடுக்கலாம்.
லக்ஷ்மி (1921 – 1987) இரவல் ரத்தம் என்ற கட்டுரை, இரத்த தானம் குறித்த வரலாற்றை பேசுகிறது, இரத்தம் சேகரிப்பது, பின்னர் அதனை பிரிக்கும் பிரிவுகளை கண்டறிந்த வரலாற்றை ஒவ்வொன்றாக அடுக்கிகொண்டுள்ளது. ஆதிகாலம் தொட்டே அதற்குரிய முக்கியத்துவத்தை சொல்வதை மஹாபாரதத்தில் கர்ணன் தனது தர்மத்தின் பலனை தனது வழியும் ரத்தத்தை தொட்டு கிருஷ்ணனுக்கு கொடுப்பதை உவமையாக எடுத்துகாட்டுகிறது.
“காதலில்லாமல் கதை முடியுமா?” என்ற கட்டுரையில் வெறுமன காதல் உணர்ச்சியை மட்டுமல்லாமல் வேறு தளங்களிலும் எழுதலாம் என கி. சாவித்ரி அம்மாள் எழுதியிருக்கிறார். இவர் 7 மொழிப்பெயர்ப்புகளை செய்திருக்கிறார். அதிலொன்று தாகூரின் ‘வீடும் வெளியும்’. ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேல் எழுதியிருக்கிறார்.
பெண்கள் சுதந்திரம் பண்பாட்டு தளத்தில் மட்டும் பேசிக்கொண்ட காலத்தில் பொருளாதார ரீதியாக விடுதலையை ஸ்ரீமதி வி.பாலாம்பாள் கூட்டுறவுச்சங்கம் மூலம் கைம்பெண்கள், வயதானவர்கள் குடும்பத்தை சார்ந்திருக்கும்பொழுது இழக்கும் சுதந்திரத்தை கோடு இட்டிருக்கிறார்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கதின் பங்கும் பெண்ணெழுத்திற்கு அதிகம் பங்களித்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆனாலும் எழுத்தில் அந்த பிரச்சாரத்தன்மை மட்டுமே பெரிதாக இருக்கவில்லை என்பதை கவனித்து நோக்க வேண்டும். முதல் சுயமரியாதை திருமணம், முதல் விதவை திருமணம் செய்து கொண்டவர்களின் எழுத்தும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
சமூக வலைதளங்களில் எழுதும் பயண அனுபவத்தை இப்போதிருப்பதை காட்டிலும் மிக நேர்த்தியாக குமுதினி “ஸேவா கிராமத்தில் ஒரு தினம்” கட்டுரை, இந்த கட்டுரைதான் இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கட்டுரை. காந்தி அவர்களை சந்திக்கும் ஆர்வம் ஸ்டேஷனிலிருந்தே நேரே ஸேவாக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம், காந்திஜி தன்னை நினைவு வைத்திருப்பதில் இருக்கும் ஆச்சர்யம், காந்தியின் சிறு சிறு செயல்களை கூட தெளிவாக பதிவு செய்வது நம்மையும் ஸேவாவிற்கு அழைத்து செல்வது போல் உள்ளது கடைசி பத்தியில் காந்தி கணவனுக்கு அடிமையா? என்று கேட்கும் பொழுது நீங்கள் தான் சென்ற முறை கணவனுக்கு கீழ்படிய வேண்டும் என்று கூறியதை நினைவூட்ட, காந்தி அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறார்.
எத்தனை முக்கியமான மாற்றம் இது. இதை பதிவை செய்யும் குமிதினியை நாம் இதற்கு முன்பு தெரியுமா? என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களிடம், இல்லை என்ற பதில் தான் வரும்.
ஜகன்மோகுனி அச்சகத்தை சொந்தமாக நடத்திய வை.மு.கோதை நாயகி, குகப்ரியை என்ற பெயரில் எது செல்வம்? என்ற கேள்வியில் பஞ்சகால்த்தில் தோன்றும் உணவு தான் செல்வமா, இல்லை குழந்தையா இல்லை பக்திதான் செல்வம் என முடிக்கிறார். இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியாதா எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஆனால் அதை விவாதிக்கும் தன்மையும், அதற்கான உதாரணங்களை கலை தான் செல்வமென்றால் அது ரோம் நகரம் எரியும் போது பிடில் வாசிப்பது, குழந்தை தான் செல்வம் என்பதற்கு திருக்குறள், பக்திதான் செல்வம் என்பதற்கு சிவநேசச்செப்வரின் எழுத்தை மேற்கோள் காட்டி நிறுவுகிறார்.
முதல் கட்டுரை இன்றைய அரசியல் சூழலுக்கு பொறுத்தமானது.
ஒரு மொழி, பிறமொழிச்சொற்களை சேர்த்துக்கொண்ட தேவைப்பட்டால் அது ஏழை மொழி. ஆங்கில மொழியில் இருந்து லத்தீன், கீர்க் பிரித்தெடுத்தால் அதனை தனியாக எழுத முடியாத ஏழை மொழி. ஆனால் தமிழ் அவ்வாறல்ல என்பதை விரிவாக ஆய்வு செய்கிறது, நீலாம்பிகை அம்மையாரின் தனித்தமிழ் பாதுகாப்பு என்ற கட்டுரை. இந்த கட்டுரையில் உள்ள தரவுகளை கொண்டு நாம் தமிழ் மொழியின் சிறப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புள்ளது.
முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் காலம் காலமாக பண்பாட்டை உருவாக்கிறான், அதை காப்பவளாக மாற்றி அதன் வழியாக ஆண் பயன்கொள்கிறான். என்ற நிலை மாற பெண் பார்வையில் சமூகம் என்னவாக இருக்கிறது, என்பதை 1947களிலிருந்தே அவர்கள் எழுத ஆரம்பித்துள்ளார்கள், நாம் ஒற்றைத்தனமையில் அணுகாமல் அவர்களின் எழுத்துகளை பொதுவில் வைக்க வேண்டும். இப்போது பெண் விடுதலை குறித்த முன்வைக்கப்படும் எழுத்துக்களை விட கூராக இருந்திருக்கிறது. அவர்களின் மொழி வசீகரிக்கிறது.
குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு, ருதுவான பின்னர் அவர்களை பூட்டி வைப்பதில் முடிகிறது என்பதை குஞ்சிதம் குருசாமி எழுதிய இறுதி பத்தியோடு முடிக்கிறேன்.
“அந்தோ ! சகோதரிகளே!. மலர்ந்த பூவை இருட்டறையில் மூடிவைத்திருப்பது போல் உங்கள் இளந்தளிரன்ன தேகம் வீட்டில் கிடந்து குன்றுகிறதே ! உங்கள் அழகிய கால் ஓடியாடித்திரியும் காலத்தில் ஆணின் கொடுமையான அரசாங்கத்தின் கீழ் விலங்கிடப்படுக்கிடக்கின்றனவே! உங்கள் அருமைக் கண்கள் நல்ல காட்சிகளைப் பார்க்க வேண்டிய காலத்தில் உங்கள் வீட்டு அடுப்பங்கரைச் சாமான்களையே சதாகாலம் பார்த்து ஒளிமழுங்குகின்றனவே ! உங்களை ஆண் கொடுமையினின்றும் என்று மீட்பேனோ ! என்று என்னோடு வந்து நீங்களும் உல்லாசமாய் ஓடியாடித் திரிவீர்களோ ! பயப்படாதீர்கள் ! காற்று என்றும் ஒரே முகமாய் அடிப்பதில்லை.”
பெண்ணெழுத்து
தி.பரமேசுவரி – க. அஸ்வினிகுமாரி
பரிசல் வெளியீடு.

‘பிறழ்’ என்பது மனச்சிதைவு (Schizophrenia) குறித்த ஒரு தமிழ் நாவலாகும். மனச்சிதைவை ஒரு உள்நோக்கிய மற்றும் பின்நோக்கிய பயணமாக விவரிக்கும் இந்த நூல், இழந்ததை மீண்டும் பெற மனம் மேற்கொள்ளும் முயற்சியை சித்தரிக்கிறது. 2026 ஆம் ஆண்டு, எதிர் வெளியீடு மூலம் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் மனநலம் சார்ந்த தேடலை மையமாகக் கொண்டது.

