ரா.சண்முகவள்ளிஸ்ரீனிவாசன்
“என்ன அண்ணாச்சி வரவர உங்க கடையில சாமான் வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. பட்டாணி பருப்பக் கேட்டா கடலைபருப்பை போட்டுருக்கிங்க” என்ற படியே வந்தார் சோமசுந்தரம்.
“தெரியாம போட்டுருப்பான் பய புதுசுடே. நீ கொண்டா நான் மாத்தித்தாறேன்” என்றார் மணியண்ணாச்சி.
“இதோட இன்னைக்கு நாளாவது ஆளு இப்படி வர்ரது. இந்த பயலுக்கு ஒரு மண்ணும் தெரியல போன மட்டும் நல்லா நோண்டு தான் . கேட்டா எல்லாந்தெரியுங்கிறான். எனக்குன்னு வந்து சேந்துருக்கு பாரு”புலம்பியவாரு கடலை பருப்பை மாற்றிவிட்டு பட்டாணிபருப்பை கொடுத்தனுப்பினார்.
“என்ன அண்ணாச்சி காலைலேயே கடுகடுன்னு இருக்கிய. இப்படி இருந்தா வியாபாரம் எப்படி நடக்கும்” கேட்டவாறு சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்குள் வந்தான் கருணாகரன்.
“அட நீ வேற ஏம்பா என் நிலைமை தெரியாம காலைலயே கடுப்படிக்க. நானே வேலைக்கு ஆளுமில்லாம சரக்கும் வெளியபோக மாட்டாம கெடக்கேனு இருக்கேன் “.
“என்ன அண்ணாச்சி சொல்லுதீய அதான் எனக்கு தெரிஞ்ச பயல வேலைக்கு சேத்துக்க சொன்னேன்ல நீங்க கூட அனுப்ப சொன்னீயலே அப்பறம் என்ன?”.
“நீ கேட்டதும் நான் அனுப்ப சொன்னதும் வாஸ்தவம் தான் ஆனா அந்த பய வேலை வேண்டானு வந்த ரெண்டு நாளுலயே போயிட்டான்.”
“ரெண்டுநாளுக்குள்ள அவனுக்கு என்ன கேடுவந்ததுனு வேலை வேண்டானு போயிட்டான்.”
“என்னத்த சொல்ல ஒரு எழவும் தெரியமாட்டுக்கு இப்ப உள்ள பையலுவளுக்கு. குனிஞ்சி நிமிந்து வேலை பாக்கனும்னா கஷ்டமா இருக்கு. சாப்பாட்டு அரிசிக்கும் இட்லி அரிசிக்கும்மே வித்யாசம் தெரியல. இதுல எங்க இருந்து பருப்பு வகைகளை கண்டுபிடிக்க. சாமான் வாங்க வர்ரவங்க எதக்கேட்டாலும் பேய்முழி முழிக்கானுவோ. அளக்க எடுத்த சாமான்ல மிச்சத்த திரும்ப அதே பையில போடமாட்டுக்கானுங்க. கால்குலேட்டர் இல்லாம கூட்டத்தெரியல. ஒத்தருவா சாமானுக்கும் கால்குலேட்டர எடுத்த வெளங்குமாடே”.
“அண்ணாச்சி இப்ப உள்ள பயலுக அப்படி தான் இருப்பானுங்க நீங்க தான் கொஞ்சம் அனுசரிச்சு போகனும்.”
“என்னத்தடே அனுசரிக்க. தினமும் பத்துபேரு தான் கடைக்கு பொருள்வாங்க வாராங்க பொருள் எடை சரியில்லை,மாத்தி போட்டுருக்கிங்கனு சொல்லி அதுல ஒரு நாளுபேராவது திரும்ப வாரனுங்க . இப்படியே போச்சுனா எங்கடைய நான் இழுத்து மூடவேண்டிதான்”.
“என்ன அண்ணாச்சி இப்படிச் சொல்லுறீய?”.
“இந்த சூப்பர் மார்கெட்டு வந்துல இருந்து எந்த பயலுவலுக்கும் வேலை பாக்கத்தெரியலடே. ஸ்டிக்கர்ல ஒட்டுன எழுத்த பாத்து எடுத்துபோடுதானுவ. கண்ணால பொருளைபாத்து தொட்டு எடுத்து போட்டா தானா பொருளு எப்படி இருக்கு. கெட்டுபோயிட்டா, நல்லாருக்கனு தெரியும். காத்தடைச்ச பாக்கெட்டுல என்னத்த பாத்துவாங்கிட முடியும் சொல்லு. சனம் பூர அங்க தான் குமியுது இங்கன ஒருத்தனும் வரமாட்டுக்கானுவோ. அப்படியே வந்தாலும் இந்த வேலை தெரியாத பயலுக பாக்குற வேலைல வந்தவனும் திரும்ப போயிடுறான்.”
“அதும் சரிதான் அண்ணாச்சி இப்ப உள்ள பயலுக பேருக்கு ஒரு வேலை பாத்த போதும்னு நினைக்கானுங்களே தவிர ஒரு தொழில கத்துக்கனும்னு நினைப்பே இல்லை. ஏதோ கடமைக்கு ஒரு வேலை பாக்கனுங்க அம்புட்டுதான்.”
“அங்கன பாரு கடையே தொறக்கல அதுக்குள்ள வந்து காத்துக்கிடக்கானுங்க. விடிய முன்ன வந்துட்டு பொழுது அடைய போறானுங்க. கரும்பு மிசினுல மாட்டுன சக்கையாட்டம் புழிஞ்சி எடுத்துட்டு தான் அனுப்புறானுங்க. இதுல என்னத்த இந்த பயலுவல கத்துப்பானுங்க. ஒரு பலசரக்கு கடைல நின்னா மூட்டத்தூக்குறதுல தொடங்கி . பொருள எடைபோடுறது, காச கணக்குபாத்து வாங்குறதுனு பல விஷயங்கள காத்துக்கலாம். கொஞ்ச நாள் போச்சுனா சொந்தமா ஒரு கடையே போடலாம். ஏன் நானே அப்படி தான சுப்பையா அண்ணன் கடைல வேலைய கத்துக்கிட்டு சொந்தமா ஒரு கடை போட்டேன். இந்த பயலுவலால இப்படி ஒரு கடை போட முடியுமா?. கடைசிவரை எடுபுடியா வேலைபாத்துட்டு நாப்பதுவயசுல நிக்கக்கூட தெம்பு இல்லாமா இருப்பானுங்க.”
“அதுவுஞ்சரி தான். கருப்பட்டி கால் கிலோ போடுங்க வந்து நேரமாச்சு அப்பறம் சாமா வங்க போன இடத்துல கதை பேசியே பொழுத போக்கிடுவீயலேனு எம்பொஞ்சாதி கத்துவா.”
“என்னடே பண்ண ஊருக்கே ராசானலும் வீட்டுக்குள்ள அடங்கித்தானே போகனும். சுந்தரு கருப்பட்டி ஒரு கால் போடு”
“சேரியண்ணாச்சி…”
கருப்பட்டியை எடைபோட்டு தாளில் பொதியவும் தாள் கிழிந்து கொண்டது.
“கவரும்,லப்பர் பேண்டும் வாங்குங்க அண்ணாச்சி. நியூஸ் பேப்பர்ல பொட்டலம் போட்டா கிழியுது. இதுல சணல் வேற அருக்குறதுக்குள்ள நகமெல்லாம் வலிக்குதாக்கும்”
“எலேய் உனக்கு போடத்தெரியலேனு சொல்லு” என்றபடி கல்லாவில் இருந்து எழுந்தவர் சுந்தர் கையில் இருந்த கருப்பட்டியை வேறெரு செய்தித்தாளில் லாவகமாக மடித்து சணல் கொண்டு முடிச்சிட்டு அருகில் இருந்த சுவரின் முனையில் சணலைவைத்து மேலும் கீழுமாக இழுக்க சணல் அறுபட்டது.ஆடத்தெரியதவன் தெரு கோணலா இருக்குன்னானாம். அந்த கதையா இருக்கு உங்கதை. ஒழுங்க பொட்டலம் போடப்படிலே.
“அடப்போங்க அண்ணாச்சி இன்னும் எந்த காலத்துல இருக்கிய. அங்கன சூப்பர் மார்கெட்டுல போயி பாருங்க எல்லாமே பாக்கெட்டு தான். நீங்க தான் இன்னும் இப்படி நியூஸ் பேப்பரையும் சணலையும் புடிச்சிக்கிட்டு தொங்குதீய”.
“எலேய் நான் குடுக்குற தாளு மக்கும், அவன்கொடுக்குற தாளு மக்குமாடே. உங்களுக்குலாம் சொன்னாப்புரியாது போ போயி பொட்டலம் போடு”.
சுந்தர் மீண்டும் அந்த செய்தித்தாளில் தனக்கு ஆட்டம் காட்டும் பொட்டலத்தை போட்டுப்பார்க்கத் தொடங்கினான்.
000

ரா.சண்முகவள்ளி
கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன். இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம், வானவில், நான் போன்ற மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.

