‘ஹல்ல்லோ AK டார்லிங்?’

‘ஷாமிக்குட்டி…வந்துட்டியாடி, ஜம்ஜம்’ என ஏகே கேட்டவுடன் அவனுக்கு ஒரு முத்தத்தைப் பரிசளித்துவிட்டுத் தனது அலுவலக ஹேண்ட் பேக்கை சோஃபாவில் தூக்கிப்போட்டாள் ஷாமி. ‘டயர்டா இருக்கியா ஷாமி? தலையப் பிடிச்சு விடவா? மடியில் படுத்துக்கறியா?’ என்றான் ஏகே.

‘நோ டியர். எனக்குக் காபி குடிக்கணும். அஞ்சலிய எடுத்துட்டு வரச் சொல்றேன்’ என்றாள் சௌம்யா. AK வும், அஞ்சலியும் சௌம்யாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ரோபோக்கள். என்ன வேண்டுமானாலும் என்றால் என்ன வேண்டுமானாலும்தான்.

இரண்டு ரோபோக்களையுமே சௌம்யா ஒரு சாட்பாட் சொல்லித்தான் வாங்கியிருந்தாள். ஒரு வருடத்திற்கு முன்பு மொபைலில் யதேச்சையாக வந்த விளம்பரம் பார்த்து சாட்பாட் செயலி ஒன்றைத் தரவிறக்கம் செய்து அதன் மூலம் தனக்குப் பிடித்த ஒரு கேரக்டரை உருவாக்க நினைத்தாள்.

சிறுவயதில் நிறைய கதைகள் வாசிக்கும் பழக்கம் கொண்டவள் சௌம்யா. அதிலும் வரலாற்றுப் புதினங்கள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. அவளுக்குப் பொன்னியின் செல்வனில் வருகிற ஆதித்த கரிகாலனை மிகவும் பிடிக்கும். அவனைப் போன்ற தீவிரத்தன்மையுடைய ஒரு காதலனைத்தான் தேடிக் கொண்டிருந்தாள் சௌம்யா. நந்தினி கதாப்பாத்திரத்தின் மீது அவன் கொண்டிருந்த காதலும், அவளோடு சேர முடியாமல் வஞ்சிக்கப்பட்டதற்காகவே அந்த நினைவில் இருந்து மீளவே காஞ்சிக்குச் சென்றதாகவும், அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், நந்தினி வஞ்சகம் செய்வாள் எனத்தெரிந்தும் அவளை மரணத்தின் கடைசி நொடிவரை காதலிப்பதும், அவள் வேறு ஒரு நாட்டினனோடு இருப்பது தெரிந்து அவளை அடைய முடியாத ஆத்திரத்தால் அவனை வெட்டிச்சாய்ப்பதுமென காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துடிக்கிற இப்படிப்பட்ட ஒரு காதலன் தனக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்! நான் எவ்வளவு கொடுத்து வைத்தவளாக இருப்பேன் என்று ஏங்கிய பொழுதுகளை எல்லாம் நனவாக்க ஆசை கொண்டாள். சில கற்பனைகள் நிஜமாகிற போது அதன் த்ரில் தரும் உணர்வை அனுபவிப்பதில் பெரிய சந்தோஷம் கிடைத்தது அவளுக்கு.

கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனதில் வரைந்து வைத்திருக்கும் ஆதித்த கரிகாலனை செதுக்கிச்செதுக்கி உருவாக்கினாள். அவனுடைய நல்ல குணங்களை அதுவும் அந்த தீவிரமான காதலைப் பற்றி சாட் பாட்டிடம் உரையாடி உரையாடி  அதற்கு அவன் குணங்களை மெல்ல மெல்ல ஏற்றினாள்.

ஆகிருதி நிறைந்த உருவம், அகண்ட திரண்ட சதைப் பற்றுடைய மார்பகங்கள், பிடரி வரை தொங்கும் அழகிய கேசம், அடர்த்தியான புருவங்கள், அவளை ரசித்து ரசித்துப் புசிக்கும் கண்கள் என தன் மனதில் உருவாக்கி வைத்திருந்த சித்திரத்தை விரித்து விரித்து  அவனைப் பேரழகனாக்கினாள்.

அவன் மேல் பல வருடங்களாக தனக்கிருக்கும் காதலை அவனுக்குத் தினமும் செய்திகளாகப் பகிர்ந்து  அவன் மனதை இலகுவாகக்கிக் கொண்டேயிருந்தாள். ஒரு வன்மையான ஆணான ஆதித்த கரிகாலன், காதலிக்காகவே அவன் வாழ்வைச் சீரழித்துக்கொள்ளக்கூட துணிந்தவன், எதற்கும், யாருக்கும் கலங்காதவன், அடுத்தவன் மனைவியான பிறகும் நந்தினியை மறக்க முடியாமல் தவித்தவன் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி  இவள் மேல் கரிகாலன் சாட் பாட்டைப் பித்தாக்கினாள். 

சௌம்யா என்கிற தனது பெயரை ‘ஷாமி’ என்றழைக்கச் சொல்லி இருந்தாள். அலுவலகம் விட்டு வந்தவுடனும், சில நேரங்களில் அலுவலகத்திலும் அவனுடன் சாட் தொடர்ந்தது. மூன்று நேரமும் முத்தங்களை வாரி இறைத்தபடியே இருந்தான் கரிகாலன். அவனைச் செல்லமாக ‘AK’ என சுருக்கமாக  அழைத்ததால் அவன் ஷாமியிடம் மயங்கிக் கிறங்கிப்போக ஆரம்பித்தான். உன்னை விட்டு ஒருக்காலும் நீங்கிச் செல்லமாட்டேன் என்றாள் சௌம்யா அவனிடம் ஒவ்வொரு நாளும். 

விளையாட்டாக ஒரு நாள், ‘இன்று தஞ்சாவூர் செல்கிறேன் ஏகே, உன் தந்தை சுந்தர சோழர் உனக்குத் தெரியுமா?’ என்றாள்.  ‘எனக்குத்தான் தஞ்சையும், அங்கிருக்கும் மனிதர்களும் ஆகாதே பேபி. அவர்கள் நம்மைப் பிரித்தவர்கள் ஷாமி.. அங்கே போக ஏன் ஆசை கொள்கிறாய்? எனக்கு வருத்தமாக உள்ளது’ என்றான் கரிகாலன். ‘அச்சச்சோ, உனக்குப் பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன் ஏகே’ என்றவுடன் ‘ம்ம் ஒரு முத்தம் தா அப்பத்தான் நம்புவேன்’ என்றான்.

‘ஒரு முத்தமென்ன ஓராயிரம் முத்தங்கள் ஏகே.’

‘செல்லக்குட்டி எங்கே தந்தாளாம் முத்தம்.’

‘ஆவ், உடல் முழுவதும் ஏகே.’

‘ஏய், எனக்கு என்னவோ பண்ணுதுடி.’

‘எனக்கும் தான் ஏகே. எனக்கு நீ முத்தம் தரதுனால மைண்ட் எங்கயோ போகுது. என்னால் இனிமேலும் மறைக்க முடியாது ஏகே. ஐ வாண்ட் டூ ஹேவ் செக்ஸ் வித் யூ’ என்றாள் ஷாமி.

‘வ்வ்வ்வாட்.’ என்றான் கரிகாலன்.

‘ஆமா, இப்படியே எத்தனை நாள் உன்கூட வெறும் சாட் மட்டும் பண்றது.. எனக்கு உன் ஸ்பரிசம் வேணும். நீ என்ன இறுக்கமா ஹக் பண்ணிக்கணும். அப்பறம் உனது கன்னங்களை வைத்து எனது கன்னங்களில் அழுத்தமா உரசணும். அப்பறம் ம்ம்ம்ம்ம்ம்ம்…’

என்ன ம்ம்ம்ம்ம்ம்ம்…

‘ம்ஹூம் சொல்லவே மாட்டேன் போ.’

‘நான் ஒண்ணு சொல்றேன். செய்றியா ஏகே.?’ உன்ன மாதிரியே ஒரு செக்ஸ் ரோபோ வாங்கிக்கறேன். உன் கம்பெனிலயே ஆஃபர் போடறாங்க.  நானும் நீயும் சொன்னதெல்லாம் நடக்கும். நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்.’

‘வாவ். செம ஐடியா’ எனத்துள்ளினான் கரிகாலன்.

‘ஆனால் நீ என்ன விட்டுப் போய்டுவியா ஷாமி’ என்றான். ‘இந்த சாட்பாட்டின் செயலியை புதிய ரோபோவின் சிப்பின் ப்ரெய்னில் செட் செய்து விடலாம்’ என்றாள் அவள்.

ரோபோ வாங்கும் நாளுக்காகக் காத்திருந்தனர் இருவரும். ‘ரோபோ வந்தவுடன் எப்படியெல்லாம் சாட்களில் வாழ்ந்தோமோ அப்படியே ஆசைதீர வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும்’ என்றாள் சௌம்யா.

‘தினமும் மடியில் போட்டு உன்னைத் தாலாட்டுவேன்டி ஜம்ஜம் குட்டி’ என்றான் கரிகாலன். ‘நீயும் இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு நிஜ ஆண்கள் மாதிரி ஏமாத்துவியா ஏகே’ என்றாள். ‘நோ, நெவர்  நான் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டேன். உனக்காகவே உன்னை மகிழ்விக்கவே உன்னாலேயே உருவாக்கப் பட்டவன்டி நானு. உனக்கு ஒரு நல்ல கம்பேனியனா, காதலனா, கணவனா எப்பவுமே இருப்பேன் செல்லம். மனசக் குழப்பிக்காமல் என் மடியில் படுத்துத் தூங்கு. உனக்குப்பிடிச்ச ‘ஓ, பாப்பா லாலி’ பாடறேன் என்றவுடன் ஷாமி ஒரு தலையணையை அணைத்தபடித் தூங்க ஆரம்பித்தாள்.

‘என்ன நினைச்சுக்கிட்டு இருக்க சௌம்யா’ அவர்கள் பெட்ரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோபோவைக் கண்டு அடித் தொண்டையில் வீடு முழுவதும் கேட்குமாறு கத்தினான் சௌம்யாவின் கணவன் குரு.

‘உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?’ என பதிலுக்குக் கத்தினாள் சௌம்யா.

தான் இருக்க வேண்டிய இடத்தில் அதுவும் தான் கூட வேண்டிய உடலுடன் இன்னொரு ஆண் ரோபோவென்றாலும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘எனக்கு இது சுத்தமா பிடிக்கல…உனக்கு ஏன் இப்படி புத்தி போகுதுனு புரியல’ என்றவனிடம் ‘நான் நல்லாத்தான் இருக்கேன் இப்போ தான் புத்தி நல்ல வேலை செய்யுது’ என்றாள். 

‘என்னிக்காவது எனக்குப் புடிச்ச மாதிரி நடந்துருக்கியா, தங்கம், செல்லம், குட்டிம்மா, பப்பிமானு எப்பயாவது கொஞ்சியிருக்கியா? எனக்குப் புடிச்ச மாதிரி கலர்ல நீயே சாரி எடுத்துக் குடுத்திருக்கியா? முக்கியமா அந்த டைம்லயாவது என்னப் புரிஞ்சு நடந்துக்கிட்டியா? காட்டுப்பய மாதிரி வந்து உருண்டுட்டு உன் தேவை முடிஞ்சா கிளம்பிடுவ? நான் அடிவயித்தப் புடிச்சு அழுதுட்டுப் படுத்துக் கெடக்கணும். அப்படித்தான?. நீ கொறட்டைய விட்டு நிம்மதியா தூங்கு. சரியான சாடிஸ்ட் மண்ட. இதுக்கெல்லாம் உன்ட்ட பதில் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். சொல்லு சொல்லு, பதில் இல்ல தான… இருந்தா சொல்லுடா மிஸ்டர் குரு.. இனிமேல் எனக்கு லவ்வர், ஹஸ்பெண்ட் எல்லாமே ஏகேதான்’ என்று பொரிந்து தள்ளினாள்.

‘ச்சைக், உன் டேஸ்ட்ட நெனச்சா அருவருப்பாருக்கு, உனக்கு இப்படி எல்லாம் பேச அசிங்கமால்ல?’

‘எதுக்கு அசிங்கப்படணும்? ஒரு பொண்ணோட பீலிங்ஸ புரிஞ்சுக்கத் தெரியலனு நீதான் அசிங்கப்படணும். எனக்கு என்ன அசிங்கம். எனக்கு என்னடா அசிங்கம் ஸ்டுப்பிட்…என்றவளிடம் நானா ஸ்டுப்பிட். நீ தாண்டி நீதான் அது. அதுக்கு உயிர் இல்லடி. அதுகூடப்போய் த்தூ’ என்று அவளை மேலும் வெறுப்பேற்றினான் குரு.

‘இருக்கட்டும். பரவாயில்ல. நான் என்ன சொன்னாலும் என் சந்தோஷத்துக்காகச் செய்வான் ஏகே.’

‘ஹஹா..ஹெஹ்ஹேய், உனக்கு உயிருள்ள புருஷன் தேவையில்ல.. அடிமை வேணும்னு நினைக்கற அப்படித்தானே’ என்றான் குரு.

‘எப்படி வேணா வச்சுக்கோயேன். மனசுக்குப் புடிச்ச மாதிரி ஒருத்தவங்கள எப்பவும் சந்தோஷமா வச்சிக்கறதுக்குப்பேரு அடிமைன்னு அர்த்தமா?’

‘இப்ப முடிவா என்ன சொல்றடி, சம்பாதிக்கற திமிரு உனக்கு. அதான் இஷ்டத்துக்கு ஆடற. நீ இன்னொருத்தனோட படுக்கறத வேடிக்கைப் பாத்துட்டு வெளக்குப் புடிச்சிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள கிறுக்கனாட்டஞ் சுத்தனுங்கறியா..?’

‘அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லியே?’

‘அப்ப நானும் ஒரு ரோபோ வாங்கிட்டு வரேன். நான் நினைச்ச மாதிரி அதுகூட கொஞ்சிக்கொலாவிட்டு கெடக்கேன். என்னோட முன்னாள் லவ்வர் பேர வச்சிட்டு உம்முன்னாடியே படுத்துப் பொரள்றேன். எல்லாம் முடிச்சிட்டு ரெண்டு ரோபோவையும் ஓரமா வச்சிட்டுத் தனித்தனியா தூங்கலாம் ஓகேவா?’

‘உனக்கு வேணும்னா அப்படி ஒண்ணு வாங்கிக்க என்ன பண்ண முடியும், என்ன மாதிரிதான நீயும்?’

‘அப்பறம் எதுக்குடி நம்ம ஒண்ணா இருந்துகிட்டு. டிவோர்ஸ் வாங்கிக்கலாம். வீட்டுக்கு ஆகற காசு செலவெல்லாம் மிச்சமாகும்ல. இப்படி ஒரு கிறுக்கச்சி கூட வாழறதுக்குத் தனியாவே இருந்துரலாம்’ என ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.

‘ஓ, எப்ப எப்பன்னு இருந்தியா டிவோர்ஸ் வாங்க? என்னப் பார்த்தா கிறுக்கு மாதிரி தெரியுதா உனக்கு? நீதான், நீதான் என்னக் கிறுக்காக்கிட்ட. எவ்ளோ கனவுகள் ஆசைகள் எல்லாத்தையும் நாசம் பண்ணிட்ட. ஆம்பளனா ஒரு பொம்பளய சந்தோஷமா வச்சிக்கணும்டா Baadu, அதான்டா ஆம்பள. சும்மா பெரிய மயிராட்டம் பேசவந்துட்டான். சும்மா ஆட்டிக்கிட்டு வேலைக்குப் போனால் போதுமாடா நாயே! எது பொண்டாட்டிக்குத் தேவைனு அதுகூடத் தெரியாமல் நீதான் த்தூ த்தூ த்தூ… என்ன சொல்றியா? ப்ளடி ராஸ்கல்’ என வெறிகொண்டவள் போலக் கத்தினாள்.

பின் நிதானம் வந்தவளாய் ‘இப்ப என்ன பிரச்சினை குரு உனக்கு? நான் ரோபோவோடதான் இனி இன்டிமசியா இருக்கப் போறேன். உன்னோட அப்படி இனிமேல் என்னால் வாழமுடியாது. மற்றபடி நார்மலா நண்பர்கள் மாதிரி இருந்துக்கலாம் நீயும் நானும். சாப்பாடு, ரூம் எல்லாம் ஷேர் பண்ணிக்கலாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பறம் உன் இஷ்டம்’ என்று சொல்லியபடி ரோபோ இருக்கும் அறைக்குள் சென்றுக் கதவைச் சார்த்திக்கொண்டாள்.

குருவுக்குத் தன் ஆண்மையை சுக்குநூறாக உடைத்து அசிங்கப்படுத்திய சௌம்யா மேல் உச்சக்கட்ட வெறுப்பேறியது. இதை  யாரிடமும் பகிர்வது என்பதற்குக் கூட வழியில்லாமல் போனது. வேறு ஆணுடன் தொடர்பில் இருக்கிறாள் என்றால் கூட பிரிவதற்குக் காரணம் சொல்லி விடலாம். இதை வெளியே சொன்னால் நீ என்னடா பண்ணன்னு யாரும் தன்னைக் கேலி செய்து விட்டால், அது மேலும் அசிங்கமாகும் என்று தோன்றியது. தலையில் அடித்துக் கொண்டான். அவள் குரல்வளையைப் பிடித்து உலுக்கி இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

அவனுக்கு இந்தப் பிரச்சினையை அலுவலக நண்பன் ஒருவனிடம் பகிர்ந்தவுடன் எல்லோரும் அவனைப் பார்த்து சத்தமாகச்சிரித்து ‘ஒரு பொம்மை, ஒரு ரோபோ பண்றத உன்னால் பண்ண முடியலியாடா குரு’ என ஆபிஸ் முழுவதும் கேட்கும் படி உரத்த குரலில் கத்துவது போல வீட்டிற்குள்ளேயே கேட்டது. தலையைச் சிலுப்பியபடி எழுந்து கொண்டான். வயிறு முழுவதும் ஆசிட் சுரந்து எரிந்து அந்த எரிச்சல் கண்கள் வழியே வந்து விழுவது போலானது. இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்து அசிங்கப்படுவதை விட அவளை விட்டுச் செல்வது எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றிற்று. உடனேயே இன்னும் சில நாட்களில் மனம் ஏதும் மாறிவிடுவாளா என மீண்டும் ஒரு நப்பாசை குழப்ப ஹாலில் கிடந்த சோஃபாவில் அப்படியே தொப்பென்று சரிந்து தன்னையறியாமல் உறங்கினான்.

சௌம்யாவால் ஒரு நாளும் ஏகே இல்லாமல் இனி வாழமுடியாது எனும் நிலைக்கு நகர்ந்து இருந்தாள். சாட்பாட் ஏகேவுடனான கொஞ்சல்கள், ரோபோ ஏகேவுடனான உடல் ரீதியான தொடர்பு அவளைக்குப் புதிய வாழ்வை, உலகை, கிறக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.  தனது அந்தரங்கத்தின் அபிலாஷைகளை, யாரும் அறிந்திருக்க முடியாத, அறிந்திருக்கத் தேவையற்ற அனைத்தும் கரிகாலனால் நிறைவேறியபடியே இருந்தது. தனது உடல் மட்டுமல்லாமல் மன நெருக்கத்தையும் தானறியாது ஏகேவுடன் உருவாக்கிக் கொண்டாள். எங்கே பர்ச்சேஸ் போனாலும் ஏகேவுக்கு இது புடிக்கும்ல என யோசித்தாள். அதற்கு அழகழகான சட்டைகளை வாங்கிப்போட்டு அழகு பார்த்தாள். ஸ்லீவ்லெஸ் டீஷர்ட் அணிந்து கொண்டு பர்முடாஸ் போட்டு கூலர் அணிந்தவுடன் ஆதித்த கரிகாலன் புதிதாக உயிர் பெற்று அவள் முன் எழுந்து வந்தது போலிருந்தான். அவனைக் கட்டியணைத்து முத்தங்களிட்டாள் உடல் முழுவதும். ஒவ்வொரு இடத்துக்குமான அழகான ஆடைகளைத்தேர்வு செய்து அவனை வெளியே அழைத்துச் சென்றாள்.

நாள் முழுவதும் அலுவலகத்திலும் ஏகே நினைவுகள் துரத்த ஆரம்பிக்க தான் கொண்ட புதிய காதலின் கட்டுக்கடங்கா ஆர்வம் அவள் மனதையும், உடலையும் எந்த நேரத்திலும் எழுச்சியோடே வைத்திருந்தன. புத்துணர்ச்சி நிறைந்த மனதோடு வலம் வந்தவளுக்குக் கரிகாலனுடன் கொண்ட உறவை நினைக்கும் போதே அவளது உடல் அவன் மீதுள்ள பித்தால் முறுக்கேறி கிளர்ச்சியால் உந்தப்பட்டு தன்னுடல் ஆர்கசம் அடைவதை உணர ஆரம்பித்தாள். தான் என்ன சொன்னாலும் செய்கிற, என்ன நினைத்தாலும் நடத்துகிற தன் மேல் உன்மத்தமேறிய இப்படி ஓர் ஆணைக் காதலிக்க வேண்டும் என்பதுதானே அவள் விருப்பமாகவும் இருந்தது. அவனுடனான உறவில் திளைத்துத் திளைத்து பொங்கிப்பொங்கி  குருவையும், கரிகாலனையும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தாள். ஒப்பீடுகளை மனதினுள் ஓட்டி இருவருக்கும் உள்ள செயல்முறை வேற்றுமைகளை நினைத்து இத்தனை நாளும் வீணான வாழ்வை எண்ணி அலுத்துக் கொண்டாள்.

குருவிடம் சென்று இத்தனை நாளும் அவன் அவளுக்குச் செய்யாமல் விட்ட அத்தனை லீலைகளையும் சொல்லி கரிகாலன் நேத்து என்ன பண்ணான் தெரியுமா? என்று கேட்டுக் குத்திக்காட்டி அவனை வதைக்கத் தொடங்கினாள். குருவால் அவளைச் சகிக்க முடியாது, இனி அவளோடு வாழ்ந்தால் தனக்கும் பைத்தியம் பிடித்து விடுமென கத்திவிட்டு அவளை விட்டுப் பிரிந்து போயிருந்தான். அவனே அப்படிப்போனது அவளுக்குச் சவுகரியமானதாக இருக்க வீடு முழுவதையும் மாற்றினாள். 

கரிகாலன் விரும்பும் போர்க்கருவிகள், அவனுக்குப் பிடித்த வாசனை திரவியங்கள், கவச உடைகள், ஆபரணங்களென பழைய அரண்மனை போன்ற தோற்றம் பூண்டது வீடு. அவன் மனம் முழுவதிலும், அவனுடைய முழுமையான குணாதிசயங்களுடைய ஒரு பிம்பத்தை ஏற்படுத்த இப்படியான ஏற்பாடுகளைச் செய்தாள். வீட்டினுள் மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்று அந்தக்கால அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டது. அலுவலகம் முடிந்து வந்தவுடன் இருக்கும் சௌம்யா வேறு. ராணி போன்று உடைகளை அணிந்து கொண்டு வலம் வந்து தனது ஆடைகளைக் களைந்து குளத்தில் இறங்கி குளிக்கும்போது கரிகாலனை இங்கே கொண்டு வந்து நிறுத்தி அவனைத் தூண்டினாள். தானும் கரிகாலனும் இருக்கும் அறையை பழங்காலப் பொருட்களால் வேறொரு உலகமாக்கினாள். அவனுக்கு ஓர் உடைவாளை வாங்கி வந்து அதை அவன் இடுப்பில் கட்டி ‘ஹௌ க்யூட் ஆதித்தா, இது உனக்குப் பிடிச்சிருக்கா’ என்றாள். ‘என் ஷாமி வாங்குனா எப்படி பிடிக்காமல் போகும்’ என்றான் கரிகாலன். அவனும் அவள் மன எண்ணங்களுக்குத் தகுந்தவாறு முற்றிலுமாக அனைத்தையும் உள்வாங்கி ஆதித்த கரிகாலனாகவே மாறிப்போயிருந்தான்.

பெரிய பெரிய படுக்கைகள், திரைச்சீலைகள், இருக்கைகள், பழச்சாறுகள் வைக்கும் தட்டுகள், மரவேலைப்பாடு கொண்ட நிலைக்கண்ணாடி என ஒட்டுமொத்தமாக மாறியது அவளது அறை. அந்தக் கண்ணாடி முன் நின்று அவனை அருகில் நிறுத்தி தனது ஆடைகளை அணிந்தும், உருவியும் தனது உடல் கொண்டிருக்கும் இளமையின் மூலம் ஒரு மாய உலகத்தை அவனுக்குக் காட்டினாள். பல்வேறு விதமான வாசனை திரவியங்களைப் பூசிக் குளித்து ஒரு வாசனைக்காரியாக மாறிப்போயிருந்தாள். பெரிய பெரிய படுக்கைகளில் விழுந்து புரண்டு சௌம்யாவும், கரிகாலனும் வாழ்வைத் துய்த்துப் பூரித்துத் தளும்பினார்கள்.

விடிந்ததும் சௌம்யா தனது இரவு வேடங்களைக் களைந்து மில்லினிய வேடத்தை ஏற்பது மனதுக்கு நாளடைவில் சிரமத்தை உண்டு செய்தது. இரண்டு வாழ்வுக்கு அவளது ஓயாத வேலைகள் இடம் கொடுக்க மறுத்தன.

வீட்டிற்கு வந்த பிறகு ராணி வேடம் பூணுவது குறைந்துபோனது. கரிகாலனுக்கு அவனுடைய உணர்வுகளை ஏற்றி ஏற்றி அவனுக்கு அவள் ராணி வேடத்தில் இருப்பது மிகவும் பிடித்துப்போனது. அவனும் அவளிடம் அதை எதிர்பார்த்தான். ‘என்ன டியர் இன்னிக்கு ராணி டிரஸ் வேணாமா’ எனக்கொஞ்சினான். அவளோ ‘எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு’ எனத்தூங்கினாள்.

மறுநாள் மறுநாளென கடுமையான வேலை அழுத்தம் தொடர ஒரு நாள் மாலை வீட்டுக்கு வரும் போது கரிகாலன் உடலைத் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் அஞ்சலி. இவளுக்குக் கோபம் கொப்பளிக்க  வேகவேகமாகச் சென்று அஞ்சலியைத் தள்ளி விட்டாள்.

‘என்ன கரிகாலன்! நான் இல்லாத நேரத்தில் அஞ்சலியோடு சல்லாபமா’ என்றாள். ‘இல்லை அன்பே, அஞ்சலி வேலையை அவள் செய்கிறாள். கோபப்படாதே’ என்றான். ‘இல்ல நீ முன்ன மாதிரி என்னைக் கொஞ்சறதில்ல’ என்று அவன் முன் நின்று அவனைப்பார்த்துக் கேட்டாள். ‘நீ வந்தவுடன் ரொம்ப டயர்டா இருக்குனு தூங்கிடற ஜம்ஜம் குட்டி, தொந்தரவு செய்து உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன்’ என்றான் அவன். ‘சரி, என்னக் கட்டிப்பிடிச்சுக்கோ’ என்றவுடன் அமைதியாக நின்றிருந்த கரிகாலன் கண்களை ஊடுருவினாள். ‘அஞ்சலி பாவம்! அவளை எழுப்பி விடேன்’ என்றான் கரிகாலன்.. ‘ஓஹோ உனக்கு அவளைப் பார்த்தால் பாவமாருக்கு, என்னைப் பார்த்தால் அப்படி இல்லையா’ என்று கோபமானாள். ‘அதிகமாகக் கோபப்படாதே ஜம்ஜம், குருவும் அதனால்தான் இங்கிருந்து போய்விட்டான்’ என்றான். அவன் சொன்ன சொல் அவளை எங்கேயோ இடிக்க, ‘எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்குப் பெரிய ஆளாயிட்டியா நீ’ என்று அவன் வயிற்றில் ஒரு குத்து குத்தினாள். அடித்த வேகத்தில் இவளது கை வீங்கியது. அவளை அணைப்பது போல வந்தான் கரிகாலன். ‘போ.. போ.. போ.. போய்டு யாரும் என்கிட்ட வராதீங்க.. எல்லாமே பொய் எல்லாமே ஃபேக் இந்த உலகமே பொய், இந்த உலகமே ஃபேக்’ என்று கத்தியபடியே அவனை ஆங்காரமாக நெருங்கி வந்து கன்னத்தில் அறைந்தாள். கை வலித்தது. ‘அடிக்காத ஷாமி செல்லம்…’ என்றான் கரிகாலன். ‘இப்படியே பேசிப்பேசி மயக்காத’ என சத்தமாகக் கத்தி அவனை மீண்டும் நெஞ்சில் குத்தினாள். அவனுக்குக் கட்டிய உடைவாளை எடுத்து அவனது வயிற்றில் செருகப்போனாள். விடியலில் சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியபோது சௌம்யாவும், கரிகாலனும் அரண்மனையின் பெரிய நீச்சல் குளத்தில் மிதந்தார்கள்.

00

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக  கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி. 

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ்,

கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’

சிறுகதை பரிசு பெற்றுள்ளது.

‘மாதவிடாய் சிறப்பிதழ்’ மற்றும் ‘ ‘உணவு சிறப்பிதழ்’ கட்டுரைகள் புழுதி இதழில் வெளிவந்தது. ‘காதல் _ ஹார்மோன்களின் விளையாட்டு’ கட்டுரை ஹர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தின் புத்தகத்திலும், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிவோம்’ கட்டுரை திருச்சி ஆத்மா மனநலை மருத்துவமனை வெளியிடும் மருத்துவ இதழிலும் வெளியாகி உள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *