ராமநாதன் கவலையின் ரேகைகள் கூடிய முகத்துடன் வாசலில் அமர்ந்திருந்தார்.
‘இந்த ஆடு, மாடுகள வளக்குறது பெரிசில்ல… ஆனா அதுக நோய் நொடியில விழுந்து சாகுறப்ப, ஒரு மொடக்கி அத விக்கிறப்ப வீட்டுல ஒரு அல்ப சாவு நடந்ததுமாரி மனசு வலிக்குமப்பா… அப்பல்லாம் இனி ஆடு, மாடுகள வளக்கக் கூடாதுன்னு தோணும். ஆனா அடுத்த வாரமோ, அடுத்த மாசமோ புதுசா ஒரு உருப்படிய வாங்கியாந்து கசாலயில கட்டுனாத்தான் மனசு நிம்மதியாயிருக்கும். இந்தப் பெணப்பு தாத்தன் பாட்டன் காலத்துல இருந்தே இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்ன எனக்குத் தெரிய எங்கய்யா பட்டி நெறய ஆடு, மாடு வச்சிருந்தாரு. அதுவும் எரும மாடுக நெறய வச்சிருந்தாரு. எங்கப்பாரு பட்டியில அடக்கிறளவுக்கு வச்சிக்கலன்னாலும் அதுல பாதி வச்சிருந்தாரு. என்ன எங்கப்பாரு வரக்கிம் எங்க வீட்டுல செம்மறி ஆடுக இருந்துச்சு. ஆட்டுக்கார மாரி வீடுன்னுதான் சுத்து வட்டாரத்துல பேரு. இப்ப நானு வெள்ளாடு மட்டுந்தான் வளக்குறேன். பட்டி நெறஞ்சி மாடுக நின்ன வீட்டுல எங்காலத்துல அஞ்சாறு பசுவும் செல எருமயும் ஒரு ஜோடி காளமாடுகளும் நின்னுச்சு. இப்ப எம்மகனோட காலத்துல கசாலக்கிக் கூட மாடில்ல’ என ஐயா ராக்கப்பன் பெரும்பாலான சமயங்களில் தன் வயதொத்த பெருசுகளிடம் சொல்லிக் கொண்டிருப்பது ராமநாதனின் ஞாபகத்தில் எழுந்தது.
ராக்கப்பன் காலத்திலேயே நாற்றுப்பாவி, அதை பறித்து நடவு செய்து விவசாயம் பண்ணும் ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக விதைப்புக்கு மாறினார்கள். அதுவும் வானம் பார்த்த பூமி என்பதால் கண்மாய் தண்ணீர் கடைசி நேரத்தில் பத்தாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்திலும் கவலையிலும் குறைந்த நாட்களில் விளையும் விதைகள் விதைக்கப்பட்டன. ஐ.ஆர்.20, ஐ.ஆர்.8 எல்லாம் போய் கல்சர் பொன்னிகள் வலம் வர ஆரம்பித்தன. ஏர் உழவு என்பது கூட குறைந்து எல்லாரும் உழும் போது நாமளும் உழ வேண்டும் என்ற அவசரத்தில் கருவை, கொழுஞ்சி, பூண்டுச் செடிகள் எல்லாம் பிடுங்காமலே போட்டி போட்டு உழ ஆரம்பித்தார்கள். ஆழ ஏர் உழுத வயல்களில் எல்லாம் உழுதோம் என்ற பெயரில் டிராக்டர்கள் மேலாகக் கீறிக் கொண்டு போவதே உழவாகிப் போய், நடவு கூட விதைப்பாக மாறிப் போனது.
‘வய நனயிறாப்புல மழ பெஞ்சவுடனே முள்ளு, பூண்டுப் புடுங்கி குவிச்சி வச்சிக் காஞ்சதும் பத்த வச்சி விட்டுட்டு, புடுங்கின கொழுஞ்சியள ஓரே எடத்துல குமிச்சி வக்காம வயலெல்லாம் விரிச்சிப் போட்டு வச்சி, வயப் பதமாயிருக்கயில ஒரு ஓட்டு ஓட்டிப் போட்டு வச்சிட்டா, மறு மழ பேஞ்சி வயல்ல தண்ணி நிக்கிறப்ப, கொழுஞ்சியும் அழுகி அதோட ஒரம் மண்ணுல சேந்துரும். ரெண்டாவது ஒழவுக்கு முன்னால மேம்போக்காத் தெரியிற கொழுஞ்சிக் குச்சியள எடுத்து ஒரு ஓரமாப் போட்டு வச்சிட்டு ரெண்டாவது ஓட்ட ஓட்டி, அப்பறம் ரெண்டு மூணு நாளு விட்டுட்டு வயல்ல சிலுசிலுன்னு தண்ணியப் போட்டு அதுல தொழி அடிச்சா, மண்ணு சும்மா மாவுக்கணக்கா இருக்கும். அதுக்கப்பறம் மேடு பள்ளம் நெறவத் பரம்படிச்சிட்டு நாத்தோ, நடவோ எது செஞ்சாலும் சும்மா அப்புடித்தான் இருக்கும். இப்ப அதுமாரியா நடக்குது. இன்னக்கி ஒரே நாளுல தெக்கவடக்க, கெழக்கமேக்கன்னு ஓட்டிட்டு, ஆழவா உழுவுறாவ… ஏதோ வெவசாயம் பண்ணனுமேன்னு காசப்புடுச்ச கேடுதான்… ஏர் ஓட்ட ஆளுமில்ல; மாடும் இல்லேன்னு ஆயிப்போச்சுல்ல.. அதுவும் டிராக்டரு ஓட்டுற கட்டயில போறவன் கலப்பய மேலவுல தூக்கிக்கிட்டுல்ல ஓட்டுறான். அதுல வெதய வீசுனா பயிரு வருறதுக்கு முன்னால புல்லுதான் மொளக்கிது. இந்த வெவசாயம் எம்புட்டு நாளுப் போகும்ன்னு தெரியாது’ என ராமநாதனின் அப்பா மாரியப்பன் சொல்வதுண்டு.
உண்மைதான்… ராமநாதன் சின்னப்புள்ளையா இருக்கும் போது வீட்டுல உழவுக்குன்னே ரெண்டு ஜோடி காளமாடு கிடக்கும். அவரோட அப்பாவோ, ஐயாவோ அவுக வயலோட வரப்புல நிக்கிற வாகைமரத்துத் தழைகளை வெட்டி வந்து போடுவார்கள். அந்த மாடுகளுக்குத் தண்ணி காட்டுறதுக்குண்ணே வீட்டு வாசல்ல ரெண்டு கல்லுக்குலுதாழி இருக்கும். அதுல தண்ணிய ஊத்திப் போட்டு, கடலப் புண்ணாக்கை போட்டு வச்சிட்டா, காலையில மாட்டுக்குத் தண்ணி காட்டும் போது அதைக் கரைச்சிவிட்டு, பச்சரிச்சித் தவிடைப் போட்டுக் கலக்கி விட்டு மாட்டக் கொண்டாந்து கட்டுனா சும்மா முக்குழிச்சில குடிக்கும். இப்ப காளைமாடுகளும் இல்லை. குலுதாழிகளும் உபயோகமில்லாம ஒரு ஓரமாக் கெடக்குதுக. அது இப்ப யாருக்கும் தேவையில்லாத பொருளாகிப் போச்சு.
ராமநாதன் ஏதோ நினைப்புடன் தரையில் குச்சியால் கோலமிட்டுக் கொண்டிருந்தார். மனசு முழுவதும் வேதனை நிரம்பியிருப்பதை அவரின் செய்கையும் முகமும் காட்டிக் கொடுத்தன.
‘ஐயா இருக்கும் போது நாலஞ்சி எரும மாடுக இருந்துச்சு. அப்பல்லாம் ஊருல பசு மாடுகளவிட எருமமாடுகதான் அதிகம். இப்ப மருந்துக்கு ஒரு எரும இல்ல… பசு மாடுக கூட ரொம்பல்லாம் இல்ல. ஏதோ ஒரு சில வீடுகள்ல பால் மாடுகன்னு நிக்கிது அம்புட்டுத்தான். வெவசாயமும் போச்சு. காடு கரயெல்லாம் வெறும்பு காலமாறித்தான் மழக்காலத்துலயும் இருக்கு… அறுகம்புல்லு, கோரப்புல்லுன்னு இருந்ததெல்லாம் இப்பச் சுத்தமாக் காணும். ஐயா எறந்ததுக்கு அப்பறமா எரும மாடுகளப் பாக்க முடியாதுன்னு வித்தாச்சு. பசுவும், ஆடுகளுந்தான்… அதுகளோட மேச்சலுக்குக் கூட நல்ல புல்லுக் கெடயாதுங்கிறதுதான் நெசம். கூடு நெறஞ்சி நாட்டுக் கோழிகளும், ஆடு மாடு காவலுக்குன்னு ஏழெட்டு நாயிகளும் இருந்த வீட்டுல இப்ப ஆசக்கின்னு கொஞ்சம் சாதிக் கோழியளும் ஒரு நாயும் இருக்கு.. ஆமா ஒரு காலத்துல கூடு நெறஞ்சி இருந்த நாட்டுக்கோழி, இன்னக்கி ஒரு பஞ்சாரத்துக்குள்ள அடக்கிற அளவுலதான் இருக்கு. அன்னக்கி வீட்டுல நிக்கிற வெள்ளக்கோழிய, ஆட்டுத் தலய, பாவக்காய சம்மந்தப்பொறம் சாப்புடக் கூடாதுன்னாங்க. இன்னக்கி அவங்க வந்தாலும் பிராய்லருன்னு வெள்ளக்கோழியத்தான் வாங்காந்து போடுறோம்… எல்லாரும் திங்கிறோம்.’ என்னென்னமோ நினைத்தபடி வலப்பக்கம் திரும்பிப் பார்த்தார் ராமநாதன்.
அழகன் அவர் பார்வை பட்டதும் ‘ம்மே’ எனக் கத்தியது.
ராமநாதனுக்கு மாடுகளவிட ஆடுக மேலதான் பிரியம் ஜாஸ்தி. செம்மறி ஆடுக இருக்கும் போதும் சரி இப்ப வெள்ளாடு வளக்கும் போதும் சரி… தோள்ல துண்டப் போட்டு அதுமேல அருவாக் கம்பத் தூக்கி வச்சிக்கிட்டு முத்தையா தச்சிக் கொடுக்கிற தோல் செருப்பப் போட்டுக்கிட்டு சரட்டுச் சரட்டுன்னு அவரு நடந்தா வெள்ளாடெல்லாம் அவரு பின்னாலயே நடக்குங்க. வேம்பு, வாகையின்னு மரங்களோட தழையை அறுத்துப் போடுவாரு. கருவக்காய் சீசன்ல அத உழுப்பி விட்டுட்டு ஒரு ஓரமா உக்காந்துப்பாரு. அது நாட்டுக் கருவயோ சீமக்கருவோ ஆடுக நல்லாத் தின்னும்.
கிடாக்குட்டி போட்டதும் எதாவது ஒரு பேர் வச்சிருவாரு. அந்தப் பேரைச் சொல்லித்தான் கூப்பிடுவாரு. இந்த அழகன் கூட பொறக்கும் போது செவலயில ஆங்கங்க வெள்ளய அள்ளித் தெளிச்சமாரிக் கலரு. உடனே அழகன்னு வச்சிட்டாரு. அழகன்கிற பேரு அவரு வீட்டுல ஆட்டுக்கோ மாட்டுக்கோ மாறி மாறி வந்துக்கிட்டுத்தான் இருக்கும். இந்தப் பேருக்கும் அவருக்கும் ஒரு தொடர்பு இருக்குங்கிறது ஊர்ல அவரு வயதொத்த ஆளுகளுக்கு எல்லாம் தெரியும்.
அவரோட அயித்த மகன் அழகரும் அவரும் தோஸ்த்… எங்க போனாலும் ரெண்டு பேருந்தான். அப்பல்லாம் வெவசாய காலம் போக மத்த நேரத்துல செம்மறி ஆடுதான் மேய்ப்பாக. அப்படி ஒரு நாள் மேக்கிம்போது ஆட்டுக்குக் வாகங்கொல அறுக்குறேன்னு அருவாக்கம்ப வாதுல போட்டு இழுத்தப்ப, அருவா மட்டும் கழண்டுக்கிட்டு அண்ணாந்து பாத்துக்கிட்டு நின்னவரோட கழுத்துலயே விழுந்துருச்சு. ராமநாதனோட கண்ணுக்கு முன்னால நிகழ்ந்த சாவு. அதுக்கு அப்புறம் அவரு செம்மறி ஆடுக பக்கமே போகல. வீட்டுல வெள்ளாடு வளக்க ஆரம்பிச்சி குட்டி போட்டப்போ அழகருன்னு பேரு வக்க ஆரம்பிச்சவரு. இந்தா இதுக்கும் அழகன்னு வச்சிருக்காரு.
அழகன்கிட்ட ஒரு பழக்கம் உண்டு. ராமநாதனைப் பாக்கலைன்னா அவரு வந்ததும் அதுக்கிட்டப் போனாப் போதும் அவரையப் போட்டு உரசி, நாக்கால நக்கி, செல்லமா முட்டித் தள்ளி, முன்னங்காலைத் தூக்கி அவரு மேல போட்டு மூக்கோட மூக்கு வைக்கும். அப்பல்லாம் ‘எம்புட்டோ பயலுவள வளத்தேன்டா… எவனும் இம்புட்டு ஒட்டுனதில்ல. நீதான்டா அழகா இப்படிப் படுத்துறே’ எனச் செல்லமாய் அதன் முதுகில் தட்டுவார். முகத்தில் குத்துவார். அவர் உட்கார்ந்தால் பக்கத்தில் படுத்துத் தலையை மடியில் வைத்துக் கொள்ளும். அதேபோல் வேண்டுமென்றே அவர் அதன் மீது தலைவைத்துப் படுத்தால் அவர் எந்திரிக்கும் வரை அது அசையாது, எழாது.
நாலஞ்சி நாளு லீவுல ஊருக்கு வந்த மலையரசன், ‘அப்பா… அம்மா இறந்து நாலஞ்சி மாசமாச்சு… நானும் வர்றப்பல்லாம் சொல்றேன் நீங்க கேக்கல. உங்கள இங்க தனியா வீட்டுட்டு நாங்க அங்க… அதெல்லாம் சரி வராது. இனி நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம். மாடு, ஆடுகளக் கொடுத்துடலாம்.’
‘கொடுத்துட்டு….’
‘கொடுத்துட்டு எங்க கூட வந்திருங்க. இங்க உங்கள யாரு பாப்பா… அங்கன வந்து இருந்தியன்னா நாங்க பாத்துப்போம்’
‘இங்கனயே இருக்கதுதாம்ப்பா எனக்கு நல்லாயிருக்கும். டவுனுல வூட்டுக்குள்ளயே அடஞ்சி கிடக்கணும். வெளிய தெருவ கூட பிரியாப் போமுடியாது. என்னவுட்டோட டாயிலெட்டுன்னு சொல்லுவியளே… அதுல ஒக்காந்து போனா எனக்குப் பிரியாப் போவாதுப்பா… வயிறு உப்பிசமாரியே இருக்கும்’
‘அங்கயும் பக்கத்துல பார்க்கு இருக்கு… நடக்கலாம். பாத்ரூம் போறதெல்லாம் ஒரு பிரச்சனையா… போகப் போக பழகிரும். ஒரு நாலு நாளு கஷ்டமாத்தான் இருக்கும் அப்பறம் இதுதான் நமக்கான வாழ்க்கைன்னு மனசு நெனக்க ஆரம்பிச்சிட்டா எல்லாம் பழகிரும்’
பிடிச்ச பிடியில நிப்பாங்க… நாம பிடிய இறுக்க நமக்குன்னு எதுவுமில்ல. இருந்தவ பொயிட்டா எல்லாம் போனமாரித்தானே… இருக்க ஒத்தப் பசுவயும் சில ஆடுகளையும் கொடுத்துடலாமுன்னு மனசு கஷ்டத்தோட ஒத்துக்கிட்டாலும் அழகனயும் கொடுக்கணுமான்னு மனசு தவிச்சிச்சு.
தவிச்சி என்ன பண்ண… அவர் பேச்சை கேட்டு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. செக்கந்தி செல்வமும் மலையரசனும் கூட்டாளிங்க. அவனுக்கிட்டச் சொல்லி, யாவாரிய வரச் சொல்லி மாடுக, ஆடுகள எல்லாத்தயும் கொடுத்துட்டான்.
அழகனை மட்டும் செல்வம் நல்ல விலைக்கு வித்துத்தாறேன்னும் வேற ஆள நாளக்கிக் கூட்டியாறேன்னும் சொன்னாதால போட்டு வச்சிருக்கான்.
மீண்டும் அழகனைப் பார்த்தார்.
அது அவரையே பார்த்தது.
‘நாளக்கி விடியல்ல நீ போயிருவே… நாளானக்கி விடியும் போது நா உயிரோடு உயிரில்லாத ஒரு வீட்டுக்குள்ள கிடப்பேன். நீ உயிரோட இருப்பியா…?’ சத்தமாகச் சொன்னார். அவரின் வார்த்தைகள் சங்கடத்தில் தடுமாறி வந்தன.
‘ஆமா ஆட்டுக்கிட்டப் பேசுனா அது பதில் சொல்லுமாக்கும். உங்கப்பாவுக்கு கிறுக்குத்தான் புடிக்கப் போவுது… ஆடு, மாடுன்னு கத்தி, அதுகமாரி ஆயிருவாரோ என்னவோ… இவரக் கொண்டேயி நாம எப்படி வச்சிப் பாக்கப் போறோமோ தெரியல’ மருமகள் வீட்டுக்குள் சொல்வது வெளியில் கேட்டது.
அழகனையே பார்த்தார்.
அது அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தது.
அவரின் கண்ணில் இருந்து கண்ணீர் இறங்கியது.
அது ‘ம்மே’ எனக் கத்தியது…
அந்தக் குரல் எப்போதுமில்லாமல் வருத்தம் தோய்ந்ததாய் அவர் காதில் விழுந்தது.
000
நான் பரிவை சே,குமார், நித்யா குமார் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறேன்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.