மற்றவர்களால் திரு என்று அழைக்கப்படும் திருக்குமரன் வேலாயுதம், ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்து, சென்னைக்கு வந்து ஒண்ணரை வருடம்தான் ஆகிறது.
வங்கி இருக்கும் பகுதியிலிருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, வேலை பார்க்கும் இளைஞர்கள் மட்டுமின்றி முதியோர்கள் வரை தங்கியிருக்கும் பகுதியில் அறை எடுத்திருக்கிறான். வேலை முடிந்து வங்கியிலிருந்து திரும்புகையில், வெவ்வேறு வழிகளில் தனது அறைக்குத் திரும்புவது வழக்கம். தென்மாவட்டத்திலிருந்து வந்தவன். தான் வாசித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் வழியாகக் கண்ட சென்னை மாநகரம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை நேரடி அனுபவம் வாயிலாகத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். “எக்ஸ்புளோர்” என்று சொல்கிறார்களல்லவா, அதுதான்.
வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம், வங்கிக்குச் செல்வது, அதே வழியில் திரும்புவது என்று பத்திரமான உணர்வுடன்தான் இருந்தான். மாநகரம் பழக்கமாகி, வசப்பட்டவுடன் இப்படியான சோதனை முயற்சிகளில் இறங்கியிருக்கிறான்.
அடிக்கடி காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளவன் திரு. ஊரில் வேலையில்லாமல் சுற்றியபோது நண்பர்களுடன் ஆங்காங்கே டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிப்பது பழக்கம். இங்கே வந்தவுடன் சிகரெட் குறைந்துவிட்டது. நினைத்த இடங்களில் பற்ற வைக்கமுடியவில்லை. போகிறவர்கள் “ஒரு மாதிரி” பார்க்கிறார்கள் என்ற உணர்வு இவனுக்கு. மேலும், ஊரில் இருப்பது போல நடமாட்டம் குறைந்த இடங்களைக் கண்டறிவது கடினம். என்றாலும், இவன் வந்த புதிதில் இருந்தது போல இல்லை. நகரின் புதுப்புது பகுதிகள் வழியாகச் செல்லும்போது, ஷுவுடன் பேண்ட், முழுக்கைச் சட்டை அணிந்து கழுத்தில் அடையாள அட்டை தொங்க, இளைஞர்கள் சத்தமாகச் சிரித்துக்கொண்டு சிகரெட் பிடிப்பதையும் கூடவே சில இளைஞிகள் “கம்பெனி” கொடுப்பதையும் பார்த்திருக்கிறான். ஊரில் இப்படியான காட்சியைக் காண முடியாது. முதலில் சற்றே அதிர்வுடன் பார்த்தவனுக்கு, பிறகு, ஆண் செய்யும் போது, பெண் செய்வதை மட்டும் தவறாகப் பார்ப்பது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் என்று பிரபல ஆண் எழுத்தாளர் பேட்டியில் ஆவேசமாக் கூறியிருந்தது நினைவுக்கு வர, குற்ற உணர்வுடன் பின்வாங்கிக் கொண்டான் அந்த எண்ணத்திலிருந்து.
மாநகரின் மாலை நேர பரபரப்பில் நடந்து செல்வதே பெரும்பாடாக இருந்ததால், சரியான காபி கடையை இனங்காண்பது கடினமாக இருந்தது. முடிந்தவரை, ஏற்கெனவே காபி, டீ குடித்த கடைகளைத் தவிர்த்துவிட்டு புதிய கடைகளை நாடுவது திருவின் தேடல்களில் ஒன்று. அவ்வாறே அன்று கடை தேடிக் கொண்டிருந்தான். அந்தப் பகுதியில் அதுதான் பிரபல ஹோட்டல் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஒரு “சேஞ்சு”க்கு அங்கே குடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து உள்ளே நுழைந்தான்.
சர்வர்கள் போல அன்றி, வேறு கலரில் யூனிபார்ம் போட்டு தலையில் மெல்லிய பிளாஸ்டிக் கவசம் அணிந்திருந்த ஒருவன் வரவேற்றான். அவன் தலையிலிருந்து பெரிதாக முடி கொட்டுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், முக்கால் வழுக்கை. ஆனால் அதை அணிய வேண்டும் என்பது ஹோட்டலின் “தலை”யாய விதி.
திரு மட்டும் தனியாக வருவது தெரிந்தும் “வாங்க சார்… எத்தனை பேர்?” என்று கேட்டான்.
பக்கத்தில், பின்னால் வந்தவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு, ஆட்காட்டி விரலை மட்டும் உயர்த்தி, ஒன்று எனக் காட்டினான், திரு. உடன் அந்த ஹோட்டல் ஊழியனின் அங்கமொழி மாறிவிட்டது. அதற்கு முந்தை நொடியில் காட்டிய மரியாதையின் சுவடே தெரியாமல், இடதுகையை நீட்டி எதிரெதிரே ஒற்றை நாற்காலி போட்டிருக்கும் ஓரத்து இருக்கையைக் காட்டினான்.
“வாங்கம்மா… நாலு பேரா?” என்று அவன் பின்னால் வந்தவர்களிடம் கேட்பதைக் காதில் கேட்டவாறே தனக்கு சுட்டிக்காட்டப்பட்ட நாற்காலியை நோக்கி நகர்ந்தான் திரு.
மேஜையில், ஏற்கெனவே சாப்பிட்டவர்கள் சிந்திய சாம்பார், கூடவே காபி பிசுபிசுப்பு. வேகமாக வந்த சர்வர், “என்ன வேணும்?” – படபடப்பாகக் கேட்டான்.
வேலை முடிந்து, நிம்மதியாக ஒரு நல்ல காபியைக் குடித்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறான் திரு. தேவையற்ற இந்த படபடப்பே எரிச்சலாக வந்தது.
சர்வருக்கு பதில் சொல்லாமல், மேஜையை சுத்தம் செய்யுமாறு கையைக் காட்டினான். தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு சாப்பிடுபவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு இளைஞனை சத்தமாகப் பெயர் சொல்லி, இந்த மேஜையை கைகாட்டினான். மறுபடியும் இவன் பக்கம் திரும்பி, “என்ன வேணும்?” என்று முன்னைக் காட்டிலும் அவசரமாகக் கேட்டான்.
“ஒரு ஃபில்டர் காபி, மீடியமா…” – திரு, அமைதியாகச் சொன்னான்.
சர்வர் திரும்பி வேகமாக நடந்தான்.
பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். கைபேசியைப் பார்த்துக்கொண்டே ஓரிரு முறை திரு, பின்னால் திரும்பி, திரும்பி பார்த்தான்.
கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம் கழித்து, “சார்….” என்ற அழைப்புக் குரல் கேட்டது.
அவன் அமர்ந்திருந்ததற்கு மறு கோடியில், பார்சல்கள் டெலிவரி செய்யும் இடத்துக்கு பக்கத்தில் காபி, டீ ஏரியா. அங்கே நின்று கொண்டிருந்தவன் கைகாட்டி அழைத்தான். சற்றே கடுப்புடன் எழுந்து சென்றான்.
“புதுப் பால் சார், கொதிக்கறதுக்கு லேட்டாயிடுச்சு… உங்க டேபிள் சர்வர் ஆர்டர் எடுக்கறதுக்கு உள்ளே போயிருக்கார்… ஆறிடுமேன்னு கூப்பிட்டேன். நீங்களே எடுத்துக்குங்க சார்…” என்று ஏதோ திருவுக்கு சகாயம் செய்வது போல பேசினான், அந்த காபி மாஸ்டர்.
வேறு வழியின்றி திரு காபி குவளையை எடுத்தான். அது எவர்சில்வர் டபாரா செட். டம்ளரில் ததும்பி வழியும் அளவுக்கு காபி. கூடவே, டபாராவில் பாதி வரை. பயங்கர சூடு. எடுத்துக்கொண்டு மெல்ல தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான்.
அடியில் நெளிந்த டம்ளர் போல. நடக்கும் போது, டம்ளர் நடுங்க, இவன் கைகளிலும் நடுக்கம். சூடும் தாங்க முடியவில்லை. கீழே கொட்டிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்னொரு கையாலும் சேர்த்துப் பிடித்தவாறே ஒரு சாகஸக்காரனின் உத்தியுடன் மேலும் நகர்ந்தான். டபாரா செட்டிலிருந்த சூடு, மின்காந்த அலைகளின் வேகத்தைவிட, திருவின் விரல்களில் பாய்ந்து படர்ந்தது. இதோ, நெருங்கியாச்சு…. தொட்டுவிடும் தூரம்தான்…. தனது திட உணர்வின் திரட்சியில் நம்பிக்கை கொண்டவாறு சற்றே வேகமாக நடந்தான். அந்தப் பொழுதில் பற்களை இறுக்கமாகச் சேர்த்துக் கடித்துக்கொண்டான். அது, அனிச்சை செயல்.
தொடர்ச்சியாகப் போடப்பட்டிருந்த பெரிய மேஜைகளிலிருந்து, நடந்து போக இடைவெளிவிட்டு, சுவற்றை ஒட்டிய வரிசையில் திருவின் இருக்கை. நடைபாதை வழியில் சற்றே திரும்பி எதிரே செல்ல வேண்டும். திருவின் கவனம் முற்றிலும் டபாரா செட் மீது இருந்ததால், பக்கவாட்டிலிருந்து ஓர் உருவம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல, கைகழுவும் பகுதியை நோக்கி, காதில் ஒற்றைக் கையால் இறுக்கிய தொலைபேசியுடன் உரையாடியவாறே வேகமாக வரும் பெண்மணி, குறுக்கே ஒருவன் வருவான் என்று எண்ணவில்லை.
ராக்கட் தளத்தில் நிலவும் கவுண்ட்டவுனை விட துல்லியமாக இருந்தது அந்தக் கணம். திரு, திரும்பவும் அந்தப் பெண்மணியும் அதே புள்ளியில் வர, எதிர்பாராத மோதல் பிசகின்றி நடந்தது. மோதலின் அதிர்வும் எல்லை மீறிய கை சூடும் சேர, கொதிக்கும் காபி அந்தப் பெண்மணியின் மீது தெறித்து, கீழே பெரும் சப்தத்துடன் விழுந்தது டபாரா செட். டம்ளர் இரண்டு முறை பல்டியடித்து ஒரு நாற்காலியின் காலில் முட்டி அசைவை இழந்தது. டபாரா அதே இடத்தில் காபியில் நனைந்து கிடந்தது. சற்றே அழகாகத் தோற்றமளித்த, பின்-முப்பதுகளில் இருக்கக்கூடிய அந்தப் பெண்மணி, ஏதோ நிகழ்ச்சிக்கு செல்கிறாள் போல. கவனமாக உடுத்தப்பட்ட புதிய உடை, அலங்காரத்துடன் காணப்பட்டாள். சராசரியைவிட உயரம். மிதமான உடற்கட்டு. இடுப்பு இடைவெளியில் கொதிக்கும் காபி சிதறியதில், தாளமுடியாமல் கத்திவிட்டாள். ஹோட்டலிலிருந்த எல்லாக் கண்களும் இவர்களை அதிர்வுடன் நோக்க, சர்வர் பெண் ஒருவள் ஓடிவந்து, அந்தப் பெண்மணியைக் கையைப் பிடித்து பக்கத்தில் அமர வைக்க முயற்சி செய்தாள். அவள் கையைத் தட்டிவிட்டவாறு, பெண்மணி திருவை நோக்கி கோபத்தை கொப்பளிக்கத் தொடங்கினாள்.
செய்வதறியாது, அதிர்ந்துபோய் நின்றிருந்தான் திரு. சற்றே மீண்டெழுந்து, “ஸாரி, ஸாரி மேடம்….” என்றான். மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
“நான் ஒரு ஈவன்ட்டுக்கு போறதுக்காக வந்தேன். என் புடவை இப்படி கரையாயிடுச்சு… இடுப்பிலும் காபி கொட்டி எரிகிறது…. நான் எப்படி போறது….? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்…. கண் இருக்கா… அவிஞ்சு போச்சா… நீயெல்லாம் எதுக்கு இங்க காபி குடிக்க வார….” – வெடித்துத் தீர்த்தாள். இடையிடையே ஆங்கிலம் வேறு.
ஹோட்டலில், பில் கொடுக்கும் மேஜையை ஒட்டி பின்னால் வைக்கப்படிருந்த நிறுவனரின் படத்துக்கு மாலையை போட்டு சரி பண்ணிக் கொண்டிருந்த, மேனேஜர் போன்ற நடுத்தர வயதுக்காரர், பின்னால் திரும்பி பார்த்துவிட்டு, பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அந்த வேலையை முடித்துவிட்டு மெல்ல இறங்கிவந்தார். இதற்கு முன்பு, இவ்வாறான பல சம்பவங்களை எதிர்கொண்ட அனுபவம் உண்டு போலும்.
மோதல் நடந்த இடத்திற்கு பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், “சரி, சரி. விடுங்க. அவரும் பார்க்கல…. நீங்களும் பார்க்கல…” என்று அந்தப் பெண்மணியைப் பார்த்து சொன்னார்.
அந்தப் பெண்மணிக்கு இன்னும் சூடேறிவிட்டது. “நீங்க பார்த்தீங்களா… பொத்துங்க…” என்று ஆங்கிலத்தில் சொன்னாள். சமாதானம் சொன்னவர், சர்வர் பக்கம் தலை திருப்பி, “ஆனியன் ரவா சொல்லி எவ்வளவு நேரமாச்சுப்பா…” என்று கேட்டு அந்தக் கடுப்பின் உக்கிரத்தைக் குறைத்துக் கொண்டார்.
மேனேஜர் நெருங்கி வந்தார். “ஸாரி மேடம்…. சம் டைம்ஸ்….” என்று ஆரம்பித்தார். தணியாத கோபத்துடன், அந்தப் பெண்மணி “நான் உங்க ஹோட்டலுக்கு வந்தது என் பேட் டைம்….” என்று அவரை பேசவிடாமல் மடக்கினார்.
“என்ன சார்… நீங்க கொஞ்சம் பார்த்து வந்திருக்ககூடாதா…?” – மேனேஜர் திருவைப் பார்த்து கேட்டார்.
“இவர மாதிரி ஆள உங்க ஹோட்டலுக்கு உள்ளவிட்டதே தப்பு….” என்று தொடர்ந்து மேனேஜரை கடுப்பேத்த, “சரி மேடம்… நடந்து போச்சு. அதுக்கு இப்போ என்ன பண்ணனும்கிறீங்க…” என்று கேட்டுவிட்டு, தனது அதிகார வரம்பின் நுனியைக் காட்டினார். “வேணும்னா பில்ல கேன்சல் பண்ண சொல்றேன்…” என்றார்.
“நான் என்ன ஓசில சாப்பிட வந்தவள்னு நினைக்கிறீங்களா…. வாட்எவர் தி அமவுண்ட்… ஐ வில் த்ரோ த மணி…” – காட்டம் குறையாமல் சொன்னாள்.
“சரி மேடம், கொடுத்துட்டு போங்க…” என்று முடித்துக்கொண்டார் மேனேஜர்.
மேற்கொண்டு ஏதும் பேச முடியாமல், அதற்கு மேலும் கத்துவது சரியில்லை என்று தோன்றியதோ என்னவோ, மேனேஜரையும் திருவையும் முறைத்துக் கொண்டே வேகமாக நகர்ந்தாள் அந்தப் பெண்மணி.
தன் உடைகள் மீது சிதறியிருந்த காபியை துடைத்தவாறே கையைக் கழுவ முற்பட்டான் திரு. அங்கே அந்தப் பெண்மணி போயிருப்பதால், சற்றே காய்ந்துபோன கை பிசுபிசுப்பை பார்த்தவாறு காத்திருந்தான்.
“உங்கள யார் சார் அங்க போய் காபிய எடுத்துட்டு வரச் சொன்னது…. சர்வர்கிட்ட கேட்க வேண்டியதுதானே…” – மேனேஜர் திருவை பார்த்து கேட்டார்.
செய்யாத தவறுக்காக ஏற்கெனவே அவமானப்பட்டிருந்த திருவுக்கு சுர்ரென்று ஏறிவிட்டது.
“பதினைஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுனனே… உங்க காபி மாஸ்டர்தான் கூப்பிட்டு எடுத்துட்டு போக சொன்னாரு…. காபி டம்ளரே அடில நெளிஞ்சு ஆடுது…. இதுல கைல பிடிக்க முடியாத மாதிரி வழிய, வழிய ஊத்திக் கொடுக்கறாரு… பயந்து, பயந்து, சூடு தாங்காம நான் எடுத்துட்டு வந்தேன்… என்னையே கேள்வி கேக்குறீங்களே…. நல்லா இருக்கு…” – திரு குமுறினான்.
மேனேஜர், அந்த இடத்தில் நின்றவாறே காபி மாஸ்டரை பார்வையால் எரித்தார்.
“சர்வர் உள்ளே போயிருந்தான். ரொம்ப நேரம் வெயிட் பண்ணிகிட்டிருந்தாரு… காபி ஆறிடுமேன்னுதான் சொன்னேன்….” – மாஸ்டர் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு உரக்கச் சொன்னார்.
மேனேஜர் அந்தப் பார்வையின் தன்மை குறையாமல் சர்வர்கள், இதர பணியாளர்களை நோக்கியவாறே தனது இருக்கைக்கு திரும்பினார். அப்படியெனில் “அப்புறம் இருக்கு, மவனே…” என்று பொருள்.
அந்தப் பெண்மணி பில்லுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக வெளியேறினாள்.
திரு கைகளை கழுவிவிட்டு, உடைகளில் காபி சிதறிய இடத்தையும் சரி செய்துவிட்டு வந்தான்.
அவனுக்கு இப்போது ஒரு குழப்பம். குடிக்காத காபிக்கு பில் வருமா, வராதா…?
சர்வர் மெல்ல இவனருகே வந்து, “ஸாரி சார், உட்காருங்க… வேற காபி கொண்டு வரேன்…” என்றான்.
எதுவும் பேசாமல் உட்கார்ந்தான். காபி வந்தது. ஆடாத டம்ளரில் சரியான அளவில் வந்தது. குடித்துவிட்டு, சர்வரை அழைத்து பில் கேட்டான். “நீங்க கொடுக்க வேண்டாம், சார்…” என்று சொல்லியவாறே அவன் தயக்கத்துடன் நின்றான். மேனேஜர் அவ்வாறே ஆணையிட்டிருந்தார்.
“பில் கொண்டாங்க…” உறுதியான குரலில் திரு சொல்லவும் சர்வர் விரைந்தான். வந்த பில்லுக்கு பணத்தை கொடுத்துவிட்டு எழுந்துகொண்டான்.
வெளியேறும் போது “ஹோட்டல்ல இதுமாதிரி நடக்கறது சகஜம்தான் சார். நிறைய பார்த்துட்டேன். இன்னிக்கு அந்தம்மா ஓவரா பேசிடுச்சு…. சில கேரக்டரையெல்லாம் ஒண்ணும் செய்யமுடியாது…. நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க…” – மேனேஜர் சொல்லிவிட்டு, இவனது பதிலை எதிர்பாராமல் நோட்டுகளை பண்டல் செய்யும் முனைப்பிலிருந்தார்.
கொட்டிய காபி கொதிப்பைவிட இது இன்னும் கொதிப்பை ஏற்றியது திருவுக்கு.
யாரோ பொறுப்பின்றி நடந்துகொள்வார்கள். யாரோ பாதிக்கப்படுவார்கள். யாராவது பூசிமெழுகுவார்கள். எல்லோரும் கடந்து போவார்கள் அல்லது போக வேண்டும். அதுதானே இங்கே சிஸ்டம்.
“என்ன சார்… இன்னைக்கு விளக்கு வைக்கிற நேரத்துல பஞ்சாயத்து போல…” – காபி மோதல் சம்பவத்தை இரு கண்களாலும் பார்த்தவாறு “மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்” சாப்பிட்டு முடித்த ஒருவர், பில்லுக்கான பணத்தை எண்ணிக்கொண்டே மேனேஜரிடம் கேட்டார். ஹோட்டலுக்கு அடிக்கடி வரும், மேனேஜருக்கு பரிச்சயமான வாடிக்கையாளர் அவர்.
“ஆமா சார்… இன்னிக்கு என் ராசிக்கு சந்திராஷ்டம்னு போட்டிருந்தான். சரியாத்தான் இருக்கு….” என்று சற்றே குரலைத் தாழ்த்தி சொன்னார், மேனேஜர்.
அதை ஆமோதிக்கும் வகையில் பலத்த சிரிப்பை கொட்டிவிட்டு வெளியேறினார் அந்த வாடிக்கையாளர்.
இந்த உரையாடலை காதில் வாங்கிக்கொண்டே ஹோட்டல் வாசலைக் கடந்த திரு, கலவை மிகுந்த குமுறல்களை அடக்கிக்கொண்டு, பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“சார், காபி ஆறுது….” – கைகளை உயர்த்தியவாறு மாஸ்டர் குரல் கொடுக்கிறார்.
***
சுகதேவ்.
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. 2019-ல் வெளியான கவிதைத் தொகுப்பு “ஒவ்வொரு கணமும்”