ஆறுகள்
எந்தப் பதட்டமும் இல்லாமல்
ஆற்றை அழைத்துச் செல்ல வேண்டும்
கல்லெறியாமல்
கழுத்தறுக்காமல்
ரத்தத்தைச் சிந்தி கொலைவெறி மேற்கொள்ளாமல்
ஆட்டுக்குட்டியின் துள்ளல் போல்
ஆற்றை அழைத்துச் செல்ல வேண்டும்
அங்கே கூழாங்கல் நிறமுடைய கருத்த முகங்கள்
வெண் சங்குகளின் பாசிமணிகளைக் கையில் வைத்திருப்பவனிடம்
உள்ளங்கையின் தவிப்பைக் கொண்டு சேர்க்கிறது
அன்றைய நாளில்
நீதி தவறிய ஒருவனைப் போல்
ஆறு ஒருபோதும் நடந்து கொள்ளாது
பசித்த மானுடத்திற்காக அவை என்றும் உயிர்ச்சுனை ஊட்டுகிறது
என் தோட்டத்துக் கண்மாய்
என் தோட்டத்துக் கண்மாய்க்குப்
புதிய முகம் கிடைத்திருக்கிறது
அது ஒவ்வொரு நாளும்
புதினா இலையின் வாசத்தைப்
பத்திரிகையின் ஜனநாயகப் பண்பைத் தருகின்றது
அங்கே மீன் குஞ்சுகள் தன் எழுத்தை
நேர்கோட்டில் பொறித்து வைத்திருக்கிறது
நட்சத்திரங்கள் நிலா வெளிச்சத்தை விதைத்துக்
கருங்கல் பாசியைக் கண் முன் விரிக்கிறது
மான் கூட்டங்கள் புல் மேயும் இடத்தை
அங்குதான் தெரிவு செய்து வைத்திருக்கின்றது
ஆறுதலற்ற மனிதர்கள் அவ்விடம் வரும்போது
அக் கண்மாய்ப் புத்தம் புதிய பொலிவு பெற்று
வாஞ்சையின் திருக்கரத்தால் இறுக அணைத்துக் கொள்கிறது
நீர் அருந்தும் பறவைகளும் விலங்கினங்களும்
கடல் தாண்டும் தொலைவைக்
கால்களினால் அளந்து மகிழ்ச்சியைக் கொண்டாடிக் களிக்கிறது
நான் உயர்திணைப் பறவையிடம் இருந்து
அதன் ஒலிக்குறிப்பைச்
செவிநுகர் கனிகள் வழியாகக் கண்களில் வாங்கி
இதயத்தில் சேமித்துக் கொண்டிருக்கிறேன்
கண்ணாடிக் கல்வெட்டு
மீன்கள் தன் எழுத்தை
காலை மதியம் மாலையென
நீரில் எழுதிப் பார்க்கிறது
அவ்வெழுத்து கண்ணாடி கல்வெட்டாய்ப்
பார்க்க விழிகளுக்குத் தெரிய
உச்சி வெயிலில் அலைகிறது
நான் இந்தப் பொழுதைத் தவிர விட
எல்லாத் தடைகளும் வந்து கொண்டிருக்கின்றன
என்ன செய்வது
தடைகளைத் தாண்டி முன்னேறி செல்கையில்
அங்கே வறல் மணலில்
மீன் எழுத்துக்கள் நைந்து கொண்டிருக்கிறது
நீலமலர்
காட்டில் நீலமலரை நீ உருவாக்கிய போது
காடு தாய்மையின் கருவை
மேகத்திடம் கொடுத்துக் கொண்டிருந்தது
பாறை உருகிச் சொட்டுச் சொட்டான நீரை
வேர்களுக்குள் அனுப்பி கொண்டிருந்தது
குறுகிய பாதையில்
வளைந்த பட்டாம்பூச்சியும் வளைந்த தானியக்கதிர்களும்
ஒன்றோடு ஒன்று எதிர் படும்போது
குருவிகளின் சத்தம் மட்டுமே
காதில் விழுந்து கொண்டே இருந்தது
கவனித்தாயா நண்பா
உன் சாம்பல் நிற முகத்திற்கு நேரான முகம்
அதுதானே என்ற போது
முதலில் மகிழ்ந்தது அந்த நீல நிறப் பூதானே
நூதன வலைப் பின்னல்
இந்த மரநிழல் தன் கைகளில் எப்பொழுதும்
தண்ணீர்த் தொட்டியை வைத்திருக்கிறது
ஒவ்வொரு அசைவிலும் பறவையின் கூடு
காற்றில் உயர்கிறது தாழ்கிறது
அங்கே அதன் உடலில் இருந்து ஓர் இலை
இன்னொரு இதயமாக மாறி மண்ணில் விழுந்து துடிக்கிறது
அப்போது அது
பூமியின் தீயை அணைக்கிறது
மேலும் அது
ஆண் பெண் உதட்டில் வெப்பசலனத்தை வலுப்படுத்தித்
தீயை வான்மீது உயர்த்துகிறது
கண்முன் ஓர் அகண்ட வெளி தென்பட்டாலும்
பூவின் நறுமணம்
பூமியின் பெண்மணம் மாறாமல்
அங்குல அங்குலமாக விரிவடைந்து தூரத்தில் காடு தென்படுகிறது
அந்தக் காட்டில் பறவைகளின் ஓயாத இரைச்சல்
இரவு பகலாக மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்கிறது
ஒரு நூதமான நட்பு
எல்லையற்ற வலைப் பின்னலை
எல்லா உயிர்களிடத்திலும் பின்னுகிறது
அந்த வலைப்பின்னல்
காதலாக மாறிக் கண்ணீர் மல்கச் செல்கிறது
நேசிப்பின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்
எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்ட போதும்
கள்ளிச்செடியின் இடம் தேடி வெறித்துப் பார்ப்பேன்
அதன் பச்சையும்
நடுமுள்ளின் கூரிய தாகம் மற்றுமதன் சதை அணுக்களோடு
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
வலையில் சிக்கிய மணிப்புறாக்கள் அங்கே அவதியுறுவதைக் கண்டேன்
வாஞ்சையின் எல்லா சொற்களும் ஒரேயொரு நிமிடம்
துருப்பிடித்துச் செயல் இழந்திருந்தது
அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில்
மலையடிவாரத்தில்
நேசிப்பின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் கொலையுண்டு கிடந்தார்கள்
பட்டாம்பூச்சி
பழகிய பட்டாம்பூச்சி
இன்று என்னை
ஒரு மலரிடம் அழைத்துச் சென்றது
நான் பனியிலும் குளிரிலும்
நுரை ததும்பிய ஈரத்தோடு நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
இருவேறு நெருப்பு
நம் நினைவு அடுக்குகளில்
ஒருநாள் குச்சிக் கிழங்கின் தோல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்
அங்குக் கொய்யா மரத்தை இழந்த புழுதிக் குருவிகள்
கீச்சுக் குரலை எழுப்பிக் கொண்டே இருந்தன
என் செல்லமே நாளை எதை இழக்கப் போகிறாய் என்றேன்
கடுகு தாளிக்கும் வாசனை என்றது
செடியில் கூம்பி இருந்த மலர்கள்
ஒரு பொழுதில் கருகிச் சாம்பலானது
திடீரென அந்தி
மஞ்சளும் சிவப்புமும் கலந்த இயல்பு வாழ்வைப்
படமாக்கிக் கொண்டுவந்தது
வீட்டுக்குள் தூரமான தினத்தில் ஒருத்தி
தீ மூட்டிக் கொண்டிருந்தாள்
அவள் உடம்பு பழுப்பு நிறத் தீயைத்
துகள் துகளாக எரித்துக் கொண்டிருந்தது
அங்கே சலவைத் தொழிலாளி ரத்தக் கறையுடன் கூடிய
அனைத்து கறைகளையும்
சவுக்கார மண்ணால் புதிதாக்கிக் கொண்டிருந்தான்
வானம் ஒரு திசையிலும்
பெண் மறு திசையிலும்
ஒரே விதமான நெருப்பைக் கொளுத்திக் கொண்டிருந்தாலும்
தீயின் தகிப்பும் பெண்ணின் தகிப்பும் வேறு வேறாக இருக்கின்றன.
—
அ.ஈஸ்டர் ராஜ்
இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி – 17.
சமீப காலத்தில் தொடர்ந்து நவீன கவிதைகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் உரை நிகழ்த்தி வருகின்றார்.