ஒரு வினையின்
முடிவுக்கான காத்திருப்பில்
இரு தீர்வுகளே சாத்தியம்
அவைகளில்
ஒன்று மட்டுமே
ஒருவருக்கானது
,
ஒன்றில்
மகிழ்ச்சி துளிர்க்கலாம்
ஒன்றில்
அழுகை அரும்பலாம்
,
எல்லா நிலைகளிலும்
மகிழ்ச்சியை ருசிப்பதற்கே
பொல்லாத மனம்
பேராசை கொள்கிறது
,
ஒரு பொழுதும்
அழுகையை ரசிப்பதில்
ஆர்வம் கொள்வதில்லை
வருவது வரட்டும் என
தனக்குத்தானே பேசிக் கொள்வது
பயம் கலந்த பலம்
,
இயல்பை மாற்றுவது
இயலாத காரியம்
என தெளிந்தும்
சாதகத்திற்காக ஓடி ஓடியே
சாய்ந்து போகிறது
பலவீன மனம்
,
பயந்த நிமிடங்கள்
பரிதாபமாக கரைந்து போயின
எதிர் கொள்ள
நிமிர்ந்த நிமிடத்திலிருந்து
அதிசயமாய்
அமைதியாக இருக்கிறது
ஆழ்மனம்.
++
ஐ.தர்மசிங்
“இலையளவு நிழல்”. “புன்னகையின் நிறங்கள்” என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
வார மாத இதழ்களிலும் படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.