உங்கள் பார்வையில் இருப்பது நடுகல் மூன்றாவது மாத இதழ். சென்ற மாதம் பெருமாள்முருகனின் ’ஆளண்டாப்பட்சி’ நாவல் பற்றி உங்களோடு பகுதியில் பேசியிருந்தேன். அந்த நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு விருது பெறும் பெருமாள்முருகன் அவர்களை வாழ்த்துகிறேன்.

சமீபமாக பல புத்தகங்கள் நடுகல் முகவரிக்கு வந்தடைகின்றன. கவிதைத்தொகுப்புகள் அனுப்புவோர் கையோடு நண்பர் யாரேனும் எழுதிய பார்வையை அனுப்பி உதவினால் நன்று. புத்தகங்கள் பற்றிய பார்வையை அதிகப்படுத்தவேண்டும். தமிழில் நிறைய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அந்தப்புத்தகங்கள் பலவற்றைப்பற்றி எனக்கே தெரியாது. தொடர்ந்து எழுதுங்கள்! ஒரு படைப்பாளி ஒரு படைப்பு தான் தரவேண்டுமோ? என்றெல்லாம் யோசிக்காதீர்கள். யார் எழுதினாலும் தாங்கள் வாசித்த ஒரு புத்தகத்தைப்பற்றி 300, 400 வார்த்தைகளிலேனும் எழுதி அனுப்புங்கள்.

சிறார் இலக்கியத்தை பாரதி புத்தகாலயம் முன்னெடுத்து வருடங்கள் கடந்து போயிற்று. இங்கே நடுகல் சிறார்களுக்கான பக்கத்தை ஒதுக்கியிருக்கிறது. தொடராகவோ, சிறுகதைகளாகவோ எழுதுங்கள்.

சென்ற வாரம் நண்பர் சிவபிராத் தொகுத்து காலச்சுவடு-வில் வெளிவந்த ‘காற்றின் நிழல்’ தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. 2022-ல் வெளிவந்த புத்தகம் இது. நஞ்சுண்டன் அவர்கள் ஆங்காங்கே எழுதிய சில சிறுகதைகளையும், கட்டுரைகளையும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நஞ்சுண்டன் சிறுகதைகள் எழுதுவதில் சுமார் பத்து வருட காலமாகவே ஆர்வம் காட்டவில்லை. அவர் சுந்தரராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலை தன் கல்லூரிக்காலத்தில் கிரியாவில் வாங்கி வாசித்திருக்கும் தகவலை அவரே இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

ஜே ஜே நாவலானது இவரை அமைதியாய் இருக்க விடவில்லை. இவரது ஆரம்பகால கதைகள் சில அந்த நாவலை வாசித்த பாதிப்பில் எழுதியிருக்கிறார். அதனால் கூட அவர் முன்பாக தொகுக்காமல் விட்டிருந்திருக்கலாம். ஜே ஜேவை நாம் வாசிக்கையில் எவ்வளவு நிதானம் நமக்குத் தேவையோ.. அதே நிதானம் இவரது சிறுகதைகளை வாசிக்கையிலும் நமக்குத் தேவைப்படுகிறது.

கே.எஸ் சரவணன் ; ஓர் அணுகல் சிறுகதையானது தொகுப்பின் முதல் கதையாக இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து ‘ராக்கம்மா அல்லது ஜோர்ஸ் லூயி போர்ஹேஸ்ஸின் காணாமல் போன சிறுகதைகளும்…’ என்கிற கதை வருகிறது. அந்த காலகட்டங்களில் இப்படியாக எழுதும் எழுத்தெல்லாம் நவீனத்துவத்தை சார்ந்தவை என்கிற மாய பிம்பம் ஒன்று கட்டமைக்கப்பட்டிருந்தது. யார் யாரோ பல கதைகள் எழுதினர். அவைகள் அனைத்தும் சிற்றிதழ்களில் வெளிவந்தன. அவர்கள் எல்லோரையும் விட இவரது எழுத்தில் நிதானம் சொல்லல் முறையில் கவனமாய் வந்திருக்கிறது. இவர் ஆரம்பகாலத்தில் எழுதிய கதைகள் அனைத்துமே புனைவுகள் வகையைச் சார்ந்தவையாக உள்ளன.

‘துணைவி’ சிறுகதையை பிந்தைய காலங்களில் இவர் எழுதியிருக்கக்கூடும். நல்லவொரு கான்செப்ட்டை இலக்கிய வாசிப்பாக மாற்றி எழுதியிருக்கிறார். துணைவியைத்தவிர்த்து கதையோட்டம் எங்கும் தாவி நடக்கவேயில்லை. ‘உருவம்’ கதை இந்தத்தொகுப்பில் மிகச்சிறந்த படைப்பு.

அடுத்ததாக புத்தகம் கட்டுரைகள் பகுதிக்கு தாவுகிறது. ஞானக்கூத்தன், தேவதச்சன், பசுவய்யா, ஆத்மாநாம், பிரம்மராஜன், சுகுமாரன் ஆகியோரின் ஒவ்வொரு கவிதைகளை (தனக்கு பிடித்ததை) எடுத்துக்கொண்டு சரளமாய் அந்தக்கவிதையைப்பற்றி உரையாடுகிறார். இன்னும் பல கவிஞர்கள் இவற்றை வாசித்தால், ‘அட நம்ம கவிதையைப்பற்றிக்கூட இவர் பேசியிருக்கலாமேப்பா!’ என்று நினைக்குமளவு கட்டுரையை எழுதி இறுதி முடிவுக்கும் வருகிறார். யவனிகா ஸ்ரீராமின் ‘இந்த வருடம் மழை குறைவு’ கவிதை பற்றி மிக ஆழமாகப்பேசுகிறார்.

இறுதியாக செம்மை நிகழ்வுகளின் ஞாபகங்களை கட்டுரை வடிவில் சொல்கையில் அவரது ஆசையான, ஒரு புத்தகத்தை செம்மைப்படுத்துவது’ பற்றிச் சொல்கிறார். முன்பாக என் ‘எட்றா வண்டியெ’ நாவலை திரு நஞ்சுண்டன் செம்மைப்படுத்திக்கொடுத்தார். இதற்காக என் கையெழுத்துப்பிரதியை பெங்களூருவில் நான்கு பேருக்கு பிரித்துக்கொடுத்து டைப்செட் செய்து, பின்பாக இவர் செம்மைப்படுத்திய.. தாள்களை எனக்கு கொரியர் செய்வார். அந்தத்தாள்கள் அடர்வண்ண மஞ்சள், பச்சை நிறத்தில் இருக்கும். ‘இது கிடைக்குதுங்ளா?’ என்று அவரிடம் கேட்பேன். ‘அழகா இருக்கில்ல கோமு! இங்க கிடைக்கு’ என்றே கூறுவார். முக்கியமாக போன்கால் பேச்சுக்கள் ஒரு அத்தியாயத்தில் முழுக்க இருந்தது. அவரே என்னிடம், ‘நீயே குறைச்சு அனுப்பு கோமு’ என்று எனக்கே அந்தப்பணியை கொடுத்தார். நான் ஒரிஜனல் போன் காலை அப்படியே கேட்டுக்கேட்டு எழுதியிருந்தேன். பின்பாக பலவற்றை நீக்கி அனுப்புகையில், ‘இப்ப எப்டி நீட்டா இருக்குது பார்’ என்று மகிழ்வாய் அலைபேசில் கூறுவார்.

அனைவரிடமும் அன்பொழுக அலைபேசியிலேனும் பேசுகையில் ஒரு தந்தைக்குரிய பாசமுடன் பேசும் திரு. நஞ்சுண்டனின் இறப்புக்குப்பிற்பாடு நண்பர் சிவபிரசாத் தொகுத்த இந்த புத்தகம் தமிழில் மிக முக்கியமான இலக்கியப்பிரதி தான்.

அன்போடே என்றும்

வா.மு.கோமு

2-12 – 2023

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *