உலகின் கடைசி மனிதன். ஆம், அந்த மனிதன் நான்தான். இந்த உலகம் அழியப் போகிறதோ எனப் பீதி அடைய வேண்டாம். அப்படியே அழிவதாக வைத்துக் கொண்டாலும், கடைசி வரை நான் உயிரோடிப்பேன், கட்டக் கடைசியாகத்தான் செத்துப் போவேன் என எனக்கு எப்படித் தெரியும்? யார் ஆருடம் சொன்னது? இந்தக் கேள்விகளுக்கு விடையாக என் தந்தையே என் கண் முன் விரிகிறார். அப்பா இப்போது அருகில் இல்லை. முன்பனிக் காலைக் காற்று சிலுசிலுக்க என் அறையில் உட்கார்ந்து இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் போது, அவரின் அணுக்கம் எனக்கு தேவையாக இருந்தது.
மொட்டை மாடியில், எட்டுக்கு ஆறு அளவு கொண்ட அறை என்னுடையது. ஒரு பேக், ஒரு பாய் – இதைத் தவிர வேறு எதுவும் என் அறையில் இல்லை. இதைவிட கொஞ்சம் பெரிய இரண்டு வீடுகள் என் அறைக்கு எதிரில் உள்ளன. அதில் கணவன், மனைவி, ஒரு குழந்தை என இரு குடும்பங்கள் வசிக்கின்றன. நான் இருப்பதை அறை என்றும் அதை வீடுகள் என்றும் சொல்வதற்கு காரணம், சமையல் செய்வதற்கான திண்டு அங்கு இருக்கிறது, என் வசிப்பிடத்தில் அது இல்லை. பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், சிறுகுறு தொழில்கள் சென்னையில் பெருகிய போது, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் குவிந்தனர். இவர்கள் வேலைக்குப் போக வரவென பரபரப்பின் பிடியில்தான் இந்த மாநகரம் சூரியனுக்கு கீழே தகித்துக் கொண்டிருக்கும், விடுமுறை நாட்களைத் தவிர. கர்ப்பப்பையைப் போல விரிந்த சென்னை மாநகரில், இது போல சின்னச் சின்ன குருவிக் கூடுகளைக் கட்டி வாடகையாக்கி, வீட்டு உரிமையாளர்கள் உபரி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
“நீலவ்னாம்மா, ஒருத்தன் எப்ப சொர்க்கத்துக்குப் போக முடியும்?” படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விரிந்த நிலையில் மார்பில் வைத்து விட்டு, அப்படியே சாய்ந்து என்னிடம் கேட்பார். முதுகலை மாணவியான நான், ஆன்மிகம் தொடர்பாக எவ்வளவு அறிவை பெற்றிருக்கிறேன் என்பதை சோதிக்கத்தான் அப்பா இப்படிக் கேட்கிறார் என நினைத்துக் கொண்டு, எப்படி வாழ்ந்தால் சொர்க்கத்துப் போகலாம் என ஆழமாக யோசிப்பேன்.
அப்பாவை ‘புத்தக மனிதர்’ என்றுதான் சொல்ல வேண்டும். அதிதீவிர வாசிப்பாளர், அதுவும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களையே அதிகம் வாசிப்பார். கையில் புத்தகம் இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும், அவருடைய வாசிக்கும் ஆர்வத்தில் தளர்வு ஏற்படவில்லை. கோயில், ஆகமம், வழிபாட்டு முறைகள், நீதி நெறிகள் என மதம் தொடர்பான புத்தகங்களே வீட்டு அலமாரியில் சோம்பிக் கிடக்கும்.
தோய்ந்த ஆன்மிகவாதி போல புத்தக தேடலெல்லாம் இருந்தாலும், இதுவரை ஒரு முறைகூட அவர் கோயிலுக்குப் போய் நான் பார்த்ததில்லை. சைவப் பிரியர் ருசியாக அசைவம் சமைப்பது போல, மானசீகமாக அவர் ஒரு நாத்திகராகவே வாழ்ந்து வந்தார். சோசலிசம் பேசுபவரின் வீட்டில், அரசியல், இலக்கியம், தத்துவம் தொடர்பான புத்தகங்களுக்கு இடமில்லாமல் இருக்குமா? அந்தப் புத்தகங்களும் என்னையும் அம்மாவையும் பார்த்து முறைக்காத நாளில்லை. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்கியின் புகழ்பெற்ற தாய் நாவலில் வரும் கதாபாத்திரமான நீலவ்னா என்ற பெயரைத்தான் எனக்கு வைத்தார் அப்பா.
வீட்டுக்கு வரும் சங்க தோழர்கள் அப்பாவைப் பற்றி பேசும் போது, “நீலவ்னா, உங்கப்பாவுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 32 மணி நேரம் இருக்குதுமா. உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒரு நாளை எட்டு எட்டு மணி நேரமா பிரிச்சா, உங்கப்பா நாலாவதாக ஒரு எட்டு மணி நேரத்தை கண்டுபிடிச்சி புத்தகம் வாசிக்கிறார்மா…” என அங்கலாய்ப்பார்கள். ஆசிரியர் சங்க செயல்பாடுகளில் உழன்றாலும் வாசிப்பதற்கு அவருக்கு நேரம் இருந்து கொண்டே இருக்கும்.
“கடவுள் விரும்புற மாதிரி நாம வாழ்ந்தோம்னா, சொர்க்கத்துக்குப் போகலாம்ப்பா. அதாவது மத்தவங்களுக்கு உதவி செய்து, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் வாழ்ந்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், சரிதானப்பா…” என்னுடைய பதிலைக் கேட்டு, அப்பா கெக்கலி கொட்டி ஆர்ப்பரிப்பார். எனக்கு உற்சாகம் வடிந்து முகத்தை சோகமாக வைத்துக் கொள்வேன், அடம்பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்த பின்பும் விளையாட்டுப் பொருள் கிடைக்காத குழந்தை போல.
தனக்கே சொல்லிக் கொள்வது போல, “செத்துப் போனாத்தானேம்மா, சொர்க்கத்துக்குப் போக முடியும்…” சொல்லிவிட்டு, வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்துக்குள் மீண்டும் புதைந்து விடுவார். சாய்வு நாற்காலி அருகில் போய் அமர்ந்து விடுவேன். அப்படி அமர்ந்து விட்டால், கேட்ட கேள்விக்கும் சொன்ன பதிலுக்கும் உள்ள விளக்கத்தைச் சொல்லுங்கள் என்று அர்த்தம், அப்பாவுக்கும் எனக்குமான உடன்படிக்கை அது.
“ஒருவன் இறக்கிறான் என்றால், அவனுடைய உலகம் அவனோடு அழிந்து விடுகிறது. அவனுடைய உலகத்தில் அவன்தான் கடைசி மனிதன்” – அன்று அப்பா சொன்ன இந்தக் கூற்று என் மனதில் அனிச்சையாக தங்கி விட்டது. அந்த நாள் நினைவுக்கு வரவும், எழுதுவதை நிறுத்தி விட்டு, அப்படியே வெறித்துப் பார்த்தேன். பனிக்காற்றின் வாசம் மூக்கை உறுத்த, தும்முவதை அடக்க முயன்றேன், முடியவில்லை, தும்மி விட்டு, ‘நான் சாகும் போது, என்னுடைய உலகமும் என்னோடயே சேர்ந்து அழிந்து விடப் போகிறது’ ஒரு முறை மெதுவாக சொல்லிப் பார்த்துக் கொண்டேன். உயிரை வதைக்கும் கணங்கள் தினம் தினம் தொடரந்து, இன்னலும் இடரும் மூச்சோடு கலந்திருக்கும் போது, என்னுடைய உலகம் இருந்தால் என்ன, அழிந்தால் என்ன? அப்பாவின் இந்தக் கூற்றை, ஃபலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீசும் உறுதிப்படுத்துகிறார்.
குடியிருப்பவர்கள் வெளியேறிய பிறகு
வீடுகள் இறந்து விடுகின்றன
இரண்டு தினங்களுக்கு முன்பு நூலகத்தில் மஹ்மூத் தர்வீசின் கவிதைத் தொகுப்பில் இந்த வாசகங்களைப் படித்ததும், எனைத் தழுவ துள்ளிக் குதித்து வந்து கொண்டிருந்த மரணத்தைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அப்பாவை தொலைபேசியில் அழைத்தேன். “அப்பா, மரணம் பத்தி நீங்கள் சொல்ற மாதிரியே, ஃபலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீசின் கவிதையும் இருக்கு…” வியந்து அந்த வரிகளைச் சொல்லி அளவளாவிக் கொண்டிருந்தேன்.
“நீலவ்னா இப்ப புத்தகமெல்லாம் படிக்கிறீயா? ஆச்சரியமா இருக்கே. உடம்பு எப்டிம்மா இருக்கு? அங்க எந்த ஹாஸ்பிடல்ல காட்டுறேம்மா?” புத்தகம் வாசிக்கிறேன் எனச் சொன்னதும், அவர் குரலில் உற்சாக அலையடித்தது. இந்தந்த புத்தகங்களைப் படி, முக்கியமான பகுதிகளை பென்சில்ல கோடு போட்டுக்க, வேறு எதுனா சந்தேகம்னா உடனே அப்பாக்கு கால் பண்ணுமான்னு வாசிப்பு தொடர்பாக வகுப்பெடுக்க ஆரம்பித்துவிட்டார்.
“இங்க, ராஜீவ் காந்தி பெரிய ஹாஸ்பிடல்லதான் காட்டுறேன்ப்பா. மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க. வேலைதாம்ப்பா இன்னும் கெடச்சாபாடில்ல…” மனமறிந்து அப்பாவிடம் பொய் சொன்னேன். நான் வேலை தேடவே இல்லை. இடிச் சத்தத்தைக் கேட்கும்போது ஏற்படும் திடுக்கம் போல கணத்தில் மின்னி மறைந்தது குற்றவுணர்ச்சி.
“பணம் உன்ட்ட இருக்கா? அப்பா உனக்கு பணம் அனுப்பி வைக்கவா? இந்தா அம்மாட்ட தர்ரேன் பேசுமா…”
“பணம் வேணாம்ப்பா இருக்கு. அம்மாட்ட கொடுங்க” அம்மா போனை வாங்கியதும், “வேலைக்கு சேர்ந்திட்டியாம்மா. சாப்பாட்டுக்கு என்ன பண்ற, சமைக்கிறதுக்கு நீ இருக்குற ரூம்ல வசதி இருக்கா? பாத்திரம், அடுப்பு வாங்க அப்பாவ பணம் அனுப்பச் சொல்லவாம்மா…” அம்மா கேட்கக் கேட்க கண்களில் கண்ணீர் முட்டியது. அம்மாவுக்கு மகளும் நான்தான், மருமகளும் நான்தான், மாமியாரும் நான்தான். வீட்டில் படுத்தி எடுத்து விடுவேன். அவ்வளவு அழிச்சாட்டியங்களையும் சகித்துக் கொண்டு ஒரே பிள்ளையான என்னை இளவரசி போல வளர்த்தார். நான் திருடி சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தால் என்ன நினைப்பார்?
அப்பாவும் அம்மாவும் தினமும் காலையிலும் இரவிலும் என்னுடன் பேசுவது வழக்கம். நான் லைப்ரரிக்குப் போவது தெரிந்ததால், அப்பா புத்தகம் வாசிப்பு தொடர்பாக விசாரிப்பார். அப்பாவின் இன்மை இன்னும் இன்னும் அவருடன் நெருங்க வைத்தது. புத்தக வாசிப்பு, அறிவை விரிவு செய் என அப்பா என்னிடம் எதிர்பார்த்ததை, வாழும் கொஞ்ச நாட்களில் பரிபூரணமாக கடைப்பிடிப்போமே… அதனால்தான் இந்தக் கதையின் தலைப்புக்கு அப்பாவின் வாசகங்களைத் தேர்வு செய்தேன். இது வெறும் கதை மட்டும் அல்ல. என்னுடைய மரண வாக்குமூலமும்கூட.
மொட்டை மாடியில் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பின்ட்டோ, என் அருகில் வந்து கால்களை பிராண்டவும், மூச்சை இழுத்து விட்டு கதையைத் தொடர்ந்தேன், பிண்ட்டோவைப் பற்றிய குறிப்புகளோடு.
நான் சென்னைக்கு வந்து, மேற்கு தாம்பரம், ரெங்கநாதபுரத்தில் இந்த சின்ன அறையில் வசிக்கத் தொடங்கிய ஓரிரு நாட்களில் என்னுடைய படுக்கைத் துணையானவன் இவன். பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு நாள், பேருந்தில் லஞ்ச் பேக்கை களவாடி வரும்போது, தெருவில் கத்திக் கொண்டு கிடந்தான். செவலைத் தோல் உடலில், ஆங்காங்கே வெள்ளை நிறம் திட்டுக்களாக படர்ந்திருந்தது அவனைத் தூக்கத் தூண்டியது.
எதிர் வீட்டுக் குழந்தைகளுக்கு இவனை ரொம்பப் பிடித்து போயிற்று. திட்டுக்களைப் போல நிறம் கொண்ட குதிரைகளை Pinto என அழைப்பதாக எதிர் வீட்டு அக்கா கூகுளைப் பார்த்துக் கூறினார். அந்தப் பெயரையே இவனுக்குச் சூட்டினோம். குதிரையின் பெயரை நாய்க்குச் சூட்டினால் நாய் கோபித்துக் கொள்ளுமா என்ன? தெரு முனை வரை என்னை வழியனுப்பி விடுவது, கடைக்குப் போனால் கூடவே வருவது என என்னையே சுற்றிச் சுற்றி வந்ததால், தெருவில் ‘பின்ட்டோவின் அம்மா’ என்றே நான் அடையாளம் காணப்பட்டேன்.
வளர்ப்பு பிராணிகள் மீது எனக்கு ஓர் ஒவ்வாமை இருந்தது. ஐந்தாவது படிக்கும் போது, பூனை வளர்த்த என்னோடு படித்த பக்கத்து வீட்டுக்காரி, உன் வீட்டுல பெட் அனிமல் இல்லையா என கிண்டல் செய்து வெறுப்பேற்றினாள். அழுது புரளவும், பூனைக்குட்டி, நாய்க்குட்டிக்குப் பதிலாக அப்பா ஒரு மைனா வாங்கி வந்தார். கறுகறுத்த தலை, பிளிக் பிளிக்கென மினுங்கும் கண்கள், வெயிலின் மஞ்சள் நிறம் அப்பிய மூக்கு. கன்னத்தில், அதே மஞ்சள் நிறம் அப்பிய திட்டு. அந்த மைனாவுக்கு மதி என பெயர் வைத்தேன். அழகான கூண்டில் அடைத்து, பொட்டுக்கடலை நுணுக்கி உணவாக வைத்து கொஞ்சிக் கொஞ்சி விளையாடினேன். சில நாட்களிலேயே மதி பேசத் தொடங்கி விட்டாள். என்னை நீலவ்னா என பெயர் சொல்லி அழைப்பது தெரிந்து, எங்கள் தெருவில் மதியைப் பற்றித்தான் ஒரே பேச்சு. பூனை என்றால் மதிக்கு பயம். அதனால், பூனை எங்கள் வீட்டுப் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டோம். ஆனால், மியாவ் என கத்தி அவளை பயமுறுத்துவேன். அம்மா திட்டுவதைப் பார்த்து கற்றுக் கொண்டு, மூதேவி மூதேவி என பதிலுக்கு என்னை அரற்றுவாள்.
மதியோடு என் பால்யகால சிநேகிதம் இனித்தது. நான்கைந்து மாதங்கள் கழித்து, ஒரு நாள் காலை தூங்கிக் கொண்டிருந்த என்னை பதற்றமாக அம்மா எழுப்பினார். “சொன்னே கேட்டியா… அப்பாவும் மகளும் ஒரு சீவனக் கொன்னுட்டீங்க… அதுபாட்டுக்கு காட்டுக்குள்ள சுத்தி திரிஞ்சிக்கிட்டிருந்திருக்கும். போ… போய் மைனாவாப் பாரு கூண்டுல செத்துக் கெடக்கு…” அன்றைய காலை எனக்கு சோகமாக விடிந்தது. எப்படிச் செத்ததுன்னு தெரியல. பூனை வந்து பயங்காட்டியிருக்குமோ என்னவோ. அம்மா சொன்ன அந்த வார்த்தை – அப்பாவும் மகளும் ஒரு சீவனக் கொன்னுட்டீங்க… அதுபாட்டுக்கு காட்டுக்குள்ள சுத்தி திரிஞ்சிக்கிட்டிருந்திருக்கும் – கொலைகாரியைப் போல என்னை துன்புறுத்தியது. அதன் பிறகு செல்லப் பிராணி எதையும் வளர்க்கும் தைரியம் வரவில்லை.
மதியின் சிநேகிதம் போல, ஒரு அன்யோன்யம் என் அந்திமக் காலத்தில் தேவைப்பட்டதால், பழைய துன்பியல் நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அந்த நாய்க் குட்டியைத் தூக்கினேன். மோட்டார் பைக்கிலிருந்து விழுந்து வாரி எழுந்த பின்பு கவனமாக ஓட்டுவதுபோல, என் அன்பும் பின்ட்டோ மீது நிபந்தனைக்குட்பட்டே இருந்தது. மதியின் இறப்புக்குப் பின் என்னைப் போல பின்ட்டோவும் துயருற வேண்டாமே.
கடிகாரம் 7 மணியைத் தாண்டவும் குளித்து தயாராகி நூலகம் செல்வதற்காக, எழுதியதை அப்படியே வைத்து விட்டு எழுந்தேன். பின்ட்டோவை தூக்கி மூக்கோடு மூக்கு வைத்து கொஞ்சினேன். ஈன குரலில் முனங்கினான். ரகசிய சிநேகிதனின் கொஞ்சல் குரல் அது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விட்டு விட்டுப் போய் விடுவே என்ற குமைச்சல் குரலும் அதுதான். நாய்க்கு மைனா போல பேசத் தெரியாது என்பது ஒரு குறைதான் என்றாலும், பின்ட்டோவின் மொழியை நான் கற்றுக் கொண்டேன்.
சென்னைக்கு வந்ததிலிருந்து ஒரு விஷயத்தில் தீர்க்கமாக இருந்தேன். நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நான், வேலைக்குப் போய் வயிற்றை நிரப்ப வேண்டுமா? வயிற்றை நிரப்புவதற்காக வேலைக்குப் போக வேண்டுமா? தத்துவ விசாரணையின் முடிவில் வருவாய் ஈட்ட வேலைக்குப் போகக் கூடாது, வேறு உபாயத்தை தேடிக் கொள்ள வேண்டும்; செவிக்கு உணவு கிடைக்காத நேரங்களில் இரைப்பையைப் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானித்தேன்.
காலை 8 மணி வாக்கில், நூலகம் திறப்பதற்கு முன்பு, என்னை நீங்கள் அங்கு பார்க்கலாம். வேலைக்குப் போக வேண்டாம் என முடிவெடுத்த பின், நேரம் போக்குவதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுத்தேன். வளரிளம் பருவத்தில் படி படி என அப்பா அனத்திய போதெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்ட புத்தகங்கள், அந்திமக் காலத்தில் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டன. தாய் நாவலைத்தான் முதலில் வாசித்தேன். மாக்சிம் கார்கியோடு நெருக்கமானேன். நீலவ்னா பெயர் எனக்குப் பொருத்தமான பெயர்தான். போராட்டமே வாழ்க்கை என்பது எனக்கும் பொருந்தும்தானே. இந்தப் பீடிகையோடு என் முன் கதையைச் சொல்லி விடுகிறேன்.
கிராமத்தில் மேல்நிலைக் கல்வி வரை முடித்து விட்டு, பக்கத்து நகரத்தில் உள்ள கல்லூரியில் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றேன். நல்ல மதிப்பெண் பெற்றதால் சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக வேலை கிடைத்தது. திடீரென கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டேன். நன்றாக உடல் தேறி வந்த பின், ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அதே பிரச்சினை. திரும்பவும் மாத்திரை மருந்து என வீட்டிற்குள்ளேயே முடங்கினேன்.
சில மாதங்கள் கழித்து தாங்க முடியாத தலைவலி என்னைப் பாடாய் படுத்தியது. கடந்த முறை வயிற்று வலி வந்த போது, உலகத்திலேயே மோசமான வலி, வயிற்று வலிதான் என தீர்மானம் செய்தேன். இப்போது தலைவலி, உயிர் போகிறது. தலைவலிதான் உலகத்திலேயே மோசமான வலி என என் தீர்மானத்தை நானே மாற்றிக் கொண்டேன். அதற்கும் சிகிச்சை எடுத்தேன். இவ்வளவு உடல் உபாதைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் தொந்தரவு வேறு.
உதிரப் போக்கு அதிகம் என்பதால்தான் உனக்கு அடிக்கடி தலைவலி, வயிற்று வலி வருவதாக பயமுறுத்தி, சத்தான உணவுகளை தின்னச் சொல்லி அம்மா கட்டாயப்படுத்துவார். உணவு விஷயத்தில் எல்லா பெண் பிள்ளைகளையும் போல, நானும் கவனமில்லாமலே இருந்தேன். சத்தான உணவை உண்பது, வல்லு வதக்குனு சாப்பிடுவது – இதெல்லாம் எனக்கும் அம்மாவுக்கும் இடையில் மாமியார் மருமகள் சண்டையை கிளப்பி விட்டுவிடும்.
கல்லூரி நாட்களில் வனப்பான உடல்வாகுடன் சினிமா நடிகையைப் போல இருப்பதாக தோழிகள் பொறாமைப்படுவதுண்டு. இப்போ, தேடி வந்த கல்லூரிப் பேராசியர் வேலை பறிபோனது மட்டுமல்ல, உடல் நலிந்து, மெலிந்து குச்சியாகிப் போனேன். பெத்த மனம் துடித்தது. ஒத்தப் பிள்ளையைப் பெத்து, இப்படி பார்க்க சகிக்காமல் தேகம் செத்த பிள்ளையா பார்க்க வேண்டிக் கெடக்கே-ன்னு அம்மா அழுது புலம்புவாள். அம்மாவும் மகளும் கிடந்து புளுகிச் சாவதைச் சகிக்காமல், எல்லா அப்பாக்களையும் போல, என் அப்பாவும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். எனக்கும் சம்மதம்தான். என்னோடு படித்தவளெல்லாம் கல்யாணம் முடித்து புள்ள, குட்டினு செட்டிலாக்கிடுச்சுங்க.
படித்த படிப்புக்கு ஒரு வேலை பார்க்க வேண்டுமென்பது தீராத ஆசையாக இருந்தது. எங்கள் கிராமத்தில் பொம்பளப் புள்ளைங்கள படிக்க வைக்கிறதே பெரிய விஷயம். என்னோட அப்பா ஒரு வாத்தியார் என்பதால் படிக்க வைத்து விட்டார். அதுவும் ஒரே பிள்ளை என்பதால், முதுகலை வரை படித்துவிட்டேன். உறவுக்காரர்கள் வரும் போதும், போகும் போது, அப்பா அம்மா காதில் எதை ஓதினாலும், நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதில் மட்டும் அப்பா குறியாக இருந்தார்.
நான் சடங்கான சமயத்தில், நீலத்த இதோடு படிப்ப நிறுத்திடுங்கன்னு சொந்தக்காரர் ஒருவர் சொன்ன போது (நீலம் என்றுதான் ஊர்க்காரர்களும் உறவுக்காரர்களும் கூப்பிடுவார்கள்), அவருக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை வந்து, விஷேச வீட்டில் கைகலப்பாகிப் போனது. நான் படிப்பதை அப்பா விட்டுக் கொடுக்கவில்லை. அதற்காக உறவினர்களையும் நண்பர்களையும் உதாசீனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. அப்பாவின் இந்த உறுதி என்னை பொறுப்பான புள்ளையாக மாற்றிவிட்டது.
அதனால் எந்த சிற்றின்பங்களுக்கும் மயங்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன் ஒரு யோகியைப் போல. என் கிராமத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண் நான்தான். கல்லூரி நாட்களில் என் தோழிகள், ஆண் நண்பர்களோடு சுற்றும் போது, நான் தனியனாகவே கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதுவும் இளங்கலைப் படிக்கும் போது, என்னுடைய இந்தப் பிடிமானத்தைப் பார்த்து, நீயெல்லாம் காலேஜ் படிக்கிறதுக்கு லாயக்கில்லைன்னு சொன்னவளெல்லாம், வெவ்வெறு நபர்களுடன் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவர்களுடைய ஆண் நண்பர்களின் பெயரைச் சொல்லி கிண்டல் செய்வேன். வீட்டுக்காரருக்கு தெரிய வேண்டாமென கமுக்கமாக கண்ணசைப்பார்கள்.
இவ்வளையும் தாண்டியதால், வேலை இடத்திலும் பெண்களின் உலகத்தை அறிய கொள்ளை ஆசை. சென்னை போன்ற பிரமாண்ட நகரத்தில் தனியொருத்தியாக இருந்து, வேலைக்குப் போய் அதையும்தான் ஒரு கை பார்த்து விடுவோமே. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலியோடு போராடினாலும், உடல் நிலையைப் பற்றி கவலைப்படாமல் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது இந்த விருப்பம்தான். அப்பாவையும் அம்மாவையும் சம்மதிக்க வைத்து புத்தாண்டு அன்று புறப்பட்டு, நண்பர்களின் உதவியோடு தாம்பரம் நகருக்கு வந்து சேர்ந்தேன். பத்தாயிரம் ரூபாயை கையில் திணித்து, பெரும் மனப் பாரத்தோடு என்னை வழியனுப்பி வைத்தனர்.
வந்த மூன்று நாட்களில் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு, வேலை தேடும் வேலையில் இறங்கினேன். நான்காவது நாள் மறுபடியும் கடுமையான வயிற்று வலி. இந்த முறை செத்து விடுவோம் என எண்ணுமளவுக்கு வலி என்னைப் பாடாய்ப் படுத்தியது. பக்கத்து வீட்டு அக்காக்கள் இருவரும் அருகில் உள்ள கிளினிக்கில் சேர்த்தனர். வலியைப் போக்கும் ஊசி போட்டதும், கொஞ்சம் வலி குறைந்து நிம்மதியாக மூச்சு விட்டேன். இந்தச் சனியனிலிருந்து விடுதலை அடைய வேண்டும், இனி வயிற்று வலியே வரக்கூடாது, இல்லையென்றால் செத்துத் தொலைக்கலாம்.
இதுபோல அடிக்கடி வருவதகாச் சொன்னதும் பல்வேறு சோதனைகளை எடுக்க வேண்டும் என பெரிய லிஸ்ட்டைத் தந்தார் அந்த மருத்துவர். இவ்வளவு டெஸ்ட் செய்வதற்கு என்னிடம் பணம் கிடையாது, கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல பார்க்கலாமா?ன்னு கேட்டேன். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருக்கு பரிந்துரைக் கடிதம் தந்தார். அப்போதைக்கு அந்த கிளினிக் மருத்துவர் எழுதித் தந்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.
டவுன் பெரியாஸ்பத்திரியே எங்களுக்கு பிரம்மாண்டமானதாக தெரியும் போது, சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலைப் பற்றிச் சொல்ல வேண்டுமா. வாய் பிளந்து நின்றேன். பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மருத்துவரை, நான்கு கட்டடம் தாண்டி இருந்த நரம்பியல் துறை பிளாக்கின் ஏழாவது தளத்தில் பார்த்தேன். வெள்ளை கோர்ட்டையும் ஸ்டெதெஸ்கோப்பையும் எடுத்து விட்டால், ஆஸ்பத்திரி வாசலில் வேர்க்கடலை விற்பவரைப் போலத்தான் இருந்தார் அந்த டாக்டர்.
உடல் எடையைப் பார்த்து, ரத்த அழுத்தம் சோதித்து, மூச்சை இழுத்து விட்டு நெஞ்சிலும் முதுகிலும் ஸ்டெதஸ்கோப்பால் என் சுவாசத்தின் ஓசையை நுட்பமாக கவனித்து என ஒரு இலக்கிய வாசகன் புத்தகத்தின் அறிமுகக் குறிப்புகளை வாசிப்பது போல என் யாக்கையின் இயக்கத்தை நுட்பமாக அறிந்தார் அந்த டாக்டர். உடலின் ஒவ்வொரு பகுதியையும் கருவிகளுக்குள் உட்செலுத்தி வெளியே இழுத்து வெவ்வேறு அறைகளில் விதவிதமான சோதனைகளை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்னை வைத்துப் பழகினர்.
அதே மருந்து வாசனை, அடர்ந்த கிருமிநாசினி மணம். உலகின் அனைத்து வகை நோயாளிகளையும் சந்திக்க ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வந்தேன். உலகின் மிக மிக மோசமான நோயாளி நீதான் என அவர்கள் என்னைப் பார்த்து விரல் நீட்டும் வாய்ப்பை இன்னும் சற்று நேரத்தில் வழங்குவேன் என எனக்கு தெரியாது. ஆய்வறிக்கைகள் போன்ற தடித்த பரிசோதனைக் குறிப்புகளை வாங்கிக் கொண்டு, டாக்டரைச் சந்தித்தேன். கண்ணாடி வழியாக என்னை பச்சாதாபத்தோடு பார்த்தார். ஏன் இப்படி பார்க்கிறார் என ஒரு முடிவுக்கு வருவதற்குள், இரக்கம் தொனிக்க என் குடும்பம் பற்றி விசாரித்தார்.
ஒரே பிள்ளை, என் வருவாயை எதிர்பார்த்து அப்பா-அம்மா இல்லை என்றதும், பெருமூச்சை இழுத்து விட்டவர் இருக்கையிலிருந்து எழுந்து, “சைக்காலஜி படிச்சிருக்க. உன்ட்ட ஈஸியா சொல்லிடலாம். ஆனா, முடியல. உன் வயசுல எனக்கும் ஒரு மகள் இருக்கா…” சினிமா பட பாணியில் நோயின் தீவிரத்தைச் சொல்ல வரும் டாக்டர் போல, நீட்டி இழுக்கவும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. புன்னகைத்ததை டாக்டர் பார்த்து விட்டார்.
“நீ எப்பவவாவது மோசமான கஷ்டத்த அனுபவச்சிருக்கியா? ரொம்ப நெருக்கமானவங்க யாராவது இறந்து போயிருக்காங்களா?”
“ஆமா டாக்டர். பேரு மதி. நாலைஞ்சி மாசம் என்னோடு இருந்திச்சி. ஒரு நாள் காலையில கூண்டுலயே செத்தி கிடந்திச்சி. அன்னிக்கு ரொம்ப மனசுக்கு சங்கட்டமா போச்சி…”
“கூண்டுல செத்து கெடந்திச்சா?”
“ஆமா டாக்டர்… ஃபிஃப்த் படிக்கும் போது மைனா வளர்த்தேன். அந்த மைனா பேரு மதி…”
இருக்கையில் உட்கார்ந்த டாக்டர் குலுங்கி குலுங்கிச் சிரித்தார்.
“உங்க வீட்டுல யாராவது இறந்து போயிருக்காங்களான்னு கேட்டா, சீரியஸாவே நீ இருக்க மாட்டியா?”
“நானே சைக்காலஜி படிச்சவ. என்னையப் போய் சீரியஸா இருக்கச் சொன்னா எப்படி? எந்தக் கஷ்டம் வந்தாலும் என்னைய ஒண்ணும் செய்யாது. இந்த வயித்து வலிய விடவா டாக்டர். இந்த வலிக்கு வேற பிள்ளகளா இருந்தா, இன்னேரம் நாண்டுக்கிட்டு செத்துப் போயிருக்குங்க…” நான் சொல்வது சரிதானே எனக் கேட்பது போல, அவரைப் பார்த்தேன்.
“ஓகே… ரிப்போர்ட்ஸ் எல்லாம் டீட்டெய்லா படிச்சேன். உனக்கு வந்திருக்கிற டிசிஸ் ஒரு ரேர் டிசிஸ். உலகத்துலயே இதுவரை 150 கேஸ் வரைக்கும்தான் இந்த நோய் ரிப்போர்ட் ஆகியிருக்கு. எஸ்சிஎல்எஸ்-னு சுருக்கமா சொல்வோம். Systemic Capillary Leak Syndrome அதாவது ரத்த நரம்புகளில் கசிவு ஏற்படும் நோய் இது. ரத்தத்தில் கலந்திருக்கும் பிளட் பிளாஸ்மா அதாவது நீர்மச் சத்துக்கள், தனியாகப் பிரிந்து, தானாகவே ரந்த நாளங்கள்ள இருந்து வெளியேறும். ரத்தத்துல 55 சதவீதம் அளவுக்கு இந்த பிளாஸ்மாதான் இருக்கும். இப்படி வெளியேறுனா, ரத்தம் குறைஞ்சது போல நிலைமை மாறி தலைசுத்துறது, லோ பிபி, வயித்து வலி… இந்த மாதிரியான பிரச்சினைகல்லாம் வரும். நாளாக நாளாக ரத்தப் பற்றாக்குறை காரணமா இதயம், சிறுநீரகம், கல்லீரல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, இறப்புல கொண்டு போய் விட்டு விடும். தொடக்கத்துலயே கண்டு பிடிச்சா, ஊசி மருந்து மூலம், ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கலாம். உனக்கு ரொம்ப ரொம்ப தாமதமாத்தான் தெரிய வந்திருக்கு. உங்க ஊர்ல இதுக்கான வசதி இருந்திருக்காது. அதனால தலைசுற்றல், வயித்து வலின்னு ட்ரீட்மெண்ட் எடுத்திருப்ப…”
டாக்டர் சொல்லத் தயங்கியதைப் புரிந்து கொண்டதும், தலை கிறுகிறுத்தது. நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை அவர் உறுதிப்படுத்தி விட்டார். சொற்ப நாட்களுக்குள் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பதை அறிந்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இந்த வியாதி எனக்கு இனிமேல் என்ன செய்யும் என ஓரளவுக்கு யூகித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். மேற்கொண்டு எதுவும் கேட்க துணிவில்லை. கேட்டு அவர் எதையாவது சொல்லித் தொலைத்தால், அதைப் பற்றியே மூளை யோசித்துக் கொண்டிருக்கும்.
“சார், வயித்து வலி வரும் போது, ஏற்கனவே சாப்பிட்டிட்டு வரும் மாத்திரைகளையே கண்டினியூ பண்ணவா இல்ல புதுசா நீங்க எழுதித் தர்ரீங்களா?” இருவருக்குமிடையில் நீண்ட மௌனச் சுவரை உடைத்தேன்.
புது மருந்துச் சீட்டை நீட்டிய அவர், இதில் “என்னுடைய மொபைல் நம்பரை எழுதியிருக்கிறேன். ஏதாவது டவுட்டுன்னா எனக்கு கால் பண்ணு…” என்றார். அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் மொபைல் நம்பர் தருவதெல்லாம், சூரியன் இரவில் உதிப்பதற்குச் சமம். அப்படி எழுதித் தந்ததிலேயே ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என புரிந்து கொண்டேன்.
இணையத்தில் தேடி எனக்கு வந்திருக்கும் SCLS நோய் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். ஆனால் எத்தனை நாட்கள் நான் உயிரோடிருப்பேன் என்பதை துல்லியமாகச் சொல்லும் அளவுக்கு கூகுள் இன்னும் அப்டேட் ஆகவில்லை. இருந்தாலும் அதிக நாட்கள் வாழ்ந்து விட மாட்டோம் என்ற அசட்டுத் தைரியத்தில், அப்பா தந்த பணத்தை வைத்து வேலைக்குப் போகாமல் சமாளித்து விட வேண்டும் என முடிவெடுத்தேன். மூன்று மாத அட்வான்ஸ் 4500 ரூபாய் போக, மீதி 5500 ரூபாயில் காலத்தை தள்ள வேண்டும். வாடகைப் பணம் எதுவும் கொடுக்கக் கூடாது, நான் போன பின்னாடி, அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளட்டும் என நினைத்துக் கொண்டேன்.
வேலைக்குப் போகா விட்டால் என்ன செய்வது? அப்படி எனக்குள் நுழைந்ததுதான் புத்தகவாசிப்பு. தீராத புத்தக வாசிப்பு. அப்பா பிள்ளையாக மாறிப் போனேன். மாற்றி விட்டது எனக்கு வாய்த்த அரிதிலும் அரிதான நோய். நேரம் போக்க வாசிப்பு சரிதான். ஆனால் உணவுக்கு என்ன செய்வது, வயிறு பசிக்குமே. அதற்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழிதான் களவு.
குளித்து முடித்து, பின்ட்டோவுக்கு பிஸ்கட்டுகளை வைத்து விட்டு, வேலைக்கு கிளம்புவது போல, கிளம்பினேன். பக்கத்து வீட்டுகாரர்கள் நம்ப வேண்டுமல்லவா… என்ன வேலை செய்கிறேன், எங்கு தினமும் போகிறேன் எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. ஏதோ வேலைக்குப் போவதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். அதில் எந்த சந்தேகமும் வராத மாதிரி பார்த்துக் கொண்டேன். எனக்கு என்ன நோய் என்பது, என் பெற்றோர்களுக்கு எப்படி தெரியாதோ, அதேபோல, இவர்களுக்கும் எதுவும் தெரியாது. உளவியல் படித்தவள், மருத்துவமனை ஒன்றில் வேலைக்குப் போகிறாள், ஏதோ நர்ஸ் மாதிரி ஒரு வேலை… இப்படித்தான் அக்கம்பக்கத்தில் என்னைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். இதில் எந்தச் சந்தேகமும் வந்துவிடாதபடி நானும் நடித்தேன். நூலகத்திற்கு நடந்து போவதற்குள்ளாக, திருட்டுக் கதையையும் சொல்லி விடுகிறேன்.
ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலுக்கு முதல் நாள் போனேன்னு சொல்லியிருந்தேன்ல… அப்போ பஸ்லதான் போனேன். தாம்பரத்தில் இருந்து புறப்படும் பேருந்து என்பதால், உட்கார்ந்து செல்ல இருக்கை கிடைத்தது. கொஞ்ச நேரத்திலேயே நிற்கக்கூட இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழியவும், வேலைக்குப் போகக் கூடியவர்கள் கசகசத்தனர். கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பையை ஒரு பயணி என்னிடம் தந்தார். நான் வைத்துக் கொண்டேன்.
நான் இறங்கும் போது, தெரியாத்தனமாக அந்த சாப்பாட்டுப் பையையும் எடுத்துக் கொண்டு இறங்கி விட்டேன். ஹாஸ்பிடலுக்கு வந்த பின்னாடிதான் கையில் வேறொரு சுமை இருக்கும் உணர்வு தட்டுப்பட்டது. இனி அந்தப் பேருந்தைப் பிடித்து, உரியவரைத் தேடி அவரிடம் இந்தச் சாப்பாட்டை ஒப்படைப்பதற்குள் அந்தச் சாப்பாடே கெட்டுப் போய்விடும். திருடினால் பாவம், தின்றால் போச்சுன்னு, மருத்துவமனையிலேயே அதைச் சாப்பிட்டேன்.
அந்தச் சம்பவம்தான் திருடித் தின்னும் யோசனையையும் அதற்கான உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது. அடுத்த நாள் முதல் இந்த வேலையைச் செய்யத் தொடங்கினேன். முந்தின நாள்போல பிராட்வே வரை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். பெண்கள் வரிசையில் முன்பக்க வாசல் அருகே அமர்ந்து கொண்டேன், எளிதாக இறங்கி நழுவிச் செல்ல அதுதான் வசதியாக இருக்கும். சாப்பாட்டுப் பையை யாராவது தர வேண்டுமே.
நல்லவேளையாக பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து திட்டம் ஆபத்பாந்தவனாக எனக்கு உதவியது. பணம் கரையும் என்ற கவலை இல்லை. பேருந்து பல்லாவரத்தைத் தாண்டிய பின்பு, இனி யாரும் சாப்பாட்டுப் பையைத் தர வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எவ்வளவு தூரத்துக்கு போவது? இருந்தாலும் மதியச் சாப்பாட்டுக்கு ஏதாவது வேண்டுமே? அப்போதுதான், பேருந்தின் முன்பக்க வாசலுக்கும் இருக்கைக்கும் இடையில், ஒரு பயணி சாப்பாட்டைப் பையை வைத்து விட்டு, அதற்கு முந்தைய இருக்கையில் அமர்வதைப் பார்த்தேன். பெரிதாக யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தொங்கியது.
சுதாரித்துக் கொண்ட நான், மீனம்பாக்கம் நிறுத்தத்தில், அந்தச் சாப்பாட்டுப் பையோடு இறங்கினேன். அப்படியே விமான நிலையத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு, மீண்டும் தாம்பரம் வந்து சேர்ந்தேன். வெற்றிகரமாக திருட்டுச் சாப்பாட்டை முதன் முறையாக ரசித்துச் சாப்பிட்டேன். இரவில் பெரிதாக நான் அலட்டிக் கொள்வதில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு எனக்கும் பின்ட்டோவுக்கும் ஒரே உணவுதான். படுக்கையிலேயே இறந்து போக வாய்ப்பிருப்பதால், செத்துப் போறவளுக்கு எதுக்கு ராச்சாப்பாடு?
திருடிச் சாப்பிடும் சாகசம் மீது இருந்த பயம் என்னை விட்டும் விலகியது. வெவ்வெறு நுட்பங்களில் பேருந்தில் சாப்பாட்டுப் பையை களவாடுவதில் கைதேர்ந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது சாப்பாட்டுப் பையோடு வருவதை, எதிர்வீட்டு அக்காக்கள் வினோதமாகப் பார்க்கத் தொடங்கினர். இதனால், சாப்பாட்டுப் பையை திருடியதும், லைப்ரரி அருகில் உள்ள முத்துரங்கம் பூங்காவில் வைத்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே டிஃபன் பாக்ஸையும் பையையும் விட்டு விட்டு, அப்படியே லைப்ரரிக்குச் சென்று விடுவேன்.
ஆனால், பேருந்தில் சாப்பாட்டுப் பையை திருடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. ஒரு சில நாட்கள் எதுவுமே கிடைக்காமல் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். மாத்திரை போட வேண்டும் என்பதால் பிஸ்கட், வாழைப் பழத்தைச் சாப்பிட்டு பசி போக்கிக் கொள்வேன். அப்போதுதான், தாம்பரத்தில் இருந்து ஒரு பெருங்கூட்டம், பேருந்தை விட ரயிலை அதிகமாக பயன்படுத்துகிறது என்பதைக் கண்டு கொண்டேன்.
“என்ன நீலவ்னா, ரெண்டு பேரும் சரியான நேரத்துக்கு வந்திட்டோம் போல…” நூலகர் இன்று உற்சாகமாகக் காணப்பட்டார்.
“ஆமாம் சார்… இன்னிக்கு சிறுகதைத் தொகுப்பு ஏதாவது எடுத்துக் கொடுங்க…”
பூட்டைத் திறந்ததும், வாசலில் கிடந்த பேப்பர் கட்டுக்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றேன். அவர் நாளிதழ்களுக்கு சீல் வைக்கும் வேலையில் இறங்கினார். அதற்கு முன்பாகவே சிறுகதை புத்தகத்தை எடுத்து தரச் சொல்லி நச்சரித்தேன்.
“இந்தா இத வச்சி படி, வீட்டுக்குகூட எடுத்திட்டுப் போ. இது ரஷ்யன் ரைட்டர் ஆன்டன் செகாவ்வோட சிறுகதைத் தொகுப்பு. இவரோட கதைகள் அற்புதமா இருக்கும். கிளைமேக்சும் வித்தியாசமாக இருக்கும். முடியிற வரைக்கும் என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. என்னா…”
அவரை முறைத்துப் பார்த்து விட்டு வாகான இருக்கை ஒன்றில் அமர்ந்தேன். ஆன்டன் செகாவ். எங்கேயோ கேட்ட பேர் மாதிரி இருக்கே. மாக்சிம் கார்கி பத்தி அப்பா சொல்லும் போது, இவரைப் பற்றியும் சொல்லியிருக்காரு. கம்ப்யூட்டர்ல இவரோட படத்தையும் காட்டியிருக்காரு. ம்… நினைவுக்கு வந்துவிட்டது, அது ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அடர்த்தியான தாடி மீசையுடன், வட்டக் கண்ணாடி, கோர்ட் அணிந்து கழுத்தில் டையை தளர விட்டு, ஸ்டைலாக இருப்பார். ஆங்கிலப் படத்தில் வரும் ஹீரோ போல. அவருக்குப் பக்கத்தில் கார்கி இருப்பார்.
ஆள் யார் என பிடிபட்டவுடன், மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் எழுத்துப் போல புத்தகத்தை புரட்டினேன். இலக்கிய எழுத்துக்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரை அவ்வளவு ஏன் அந்த நூலாசிரியரின் முன்னுரையைக்கூட படிக்காதீங்க தோழர், அப்புறம் ஒரு முன் முடிவோடு கதைகளை படிக்கும்படி ஆயிடும். அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது… சங்கத் தோழர்களோடு அப்பா பேசிக் கொண்டிருந்த துணுக்கு என் நினைவுக்கு வந்ததும், நானும் நேரடியாக கதைக்குள் போனேன். முதல் கதையின் தலைப்பு, ‘சிகை அலங்காரக் கடையில்…’
கொஞ்சம் கற்பனை பண்ணுங்களேன். உங்களுக்கு ஒருத்தர் முடிவெட்டுகிறார். உங்கள் தலையின் வலது புறத்தில் முடியை ஒட்ட வெட்டிய பின்பு, ஏதோ ஒரு காரணத்தால் மறுபக்கத்தில் வெட்டா விட்டால் எப்படி இருக்கும்? நினைக்கவே வேடிக்கையாக இருக்குதுல்ல. இந்த விசித்திரத்தை செகாவ் ஒரு கதையாக்கியிருக்கிறார். வாடிக்கையாளரிடம், முடிதிருத்துபவர் பேச்சுக் கொடுக்கிறார். அப்போது, தன்னுடைய மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக வாடிக்கையாளர் கூறுகிறார். தலையில் கத்தியை வைத்த பின்பு திருமண விஷயத்தைச் சொன்னதும், அழுது அரற்றும் அந்த முடிதிருத்துபவர், இவ்வளவு காலமும் அவருடைய மகளை, தான் ஆழமாக நேசித்து வந்தததாகச் சொல்கிறார். இருவருக்குமிடையிலான உரையாடல் சுவாரஸ்யமாகச் செல்கிறது.
இறுதியில் பாதி மொட்டை அடித்த தலையோடு அப்படியே விட்டு விடுகிறார் முடி திருத்துபவர். வேறு என்ன செய்து அவரால் பழிவாங்க முடியும்? இந்தக் கதையை படித்து முடித்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. இப்படியும் பழி தீர்க்க முடியுமாவென்று. செகாவ்வின் எழுத்துக்கள் ஆர்வத்தைக் கிளறவும், அடுத்த கதைக்குள் நுழைந்தேன். அடுத்த கதையின் தலைப்பு ‘பந்தயம்’.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருந்தில் நடைபெற்ற சம்பாஷனைகளை வங்கியாளர் ஒருவர் நினைவுகூர்வதாக பந்தயம் கதை தொடங்குகிறது. அந்த விருந்தில் மெத்தப் படித்தவர்களும் பத்திரிகையாளர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு இடையிலான உரையாடல், மரண தண்டனை பற்றி திரும்புகிறது. உளவியல் படித்த மாணவியான எனக்கு இந்த இடம் நெருக்கமாக இருந்ததோடு, வங்கியாளரின் வாதம் ஆர்வத்தைத் தூண்டியது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் மரண தண்டனைக்கு எதிராக கருத்துச் சொல்லும் போது, அவர் மரண தண்டனையை ஆதரித்துப் பேசுகிறார்.
“மரண் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ பெற நான் யோசிக்க முயன்றதில்லை. ஆனால், பகுத்தறிந்து பார்த்தால், ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனையே நீதியானது, மனிதாபிமான மிக்கது என்பேன். மரண தண்டனை, குற்றவாளியை ஒருமுறைதான் கொல்கிறது, ஆனால் ஆயுள் தண்டனையோ, வாழ்நாளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று அவனை துன்புறுத்துகிறது. சில நிமிடங்களில் உயிரை எடுப்பவர் மனிதாபிமானமிக்கவரா? ஆண்டுக் கணக்கில் உங்கள் உயிரை எடுத்து வாட்டுபவரா?”
“இரண்டுமே அநீதியானதுதான்…” விருந்தினர்களில் ஒருவர் வங்கியாளரின் கூற்றை மறுத்துப் பேசினார். “இருவருமே ஒரே செயலைத்தான் – அதாவது உயிரை எடுக்கும் செயலைத்தான் செய்கின்றனர். அரசு ஒன்றும் கடவுள் கிடையாதே. அரசால் திருப்பியளிக்க முடியாத ஒன்றை எடுப்பதற்கு அதற்கு உரிமையில்லையே…”
விருந்தாளிகளில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் வழக்கறிஞரும் இருந்தார், இந்த விவாதம் பற்றி அவரின் கருத்து கேட்கப்பட்ட போது, “மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ – இரண்டுமே அநீதியானதுதான். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நான் ஆயுள் தண்டனையையே தேர்வு செய்வேன். செத்துப் போவதைவிட எப்படியாவது வாழ்வது சிறந்ததுதானே…” என வேறொரு கோணத்தில் பதிலளித்தார்.
என்னுடைய வாழ்க்கையும் இப்போது இப்படித்தானே இருக்கிறது. என்னைப் பற்றித்தான் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதான உணர்வு ஏற்பட்டு கதையில் ஒன்றினேன். உயிரோடு இருந்து வேதனையை அனுபவித்து மெல்ல மெல்லச் சாவதற்குப் பதிலாக, மரணத்தை தழுவிக் கொண்டு, ஒரேயடியாக வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவது நல்லதுதானே.
ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒரு விவாதம் மேலெழுந்தது. அந்தக் காலக்கட்டத்தில் இளமைத் துடிப்போடு இருந்த வங்கியாளர், பதற்றத்தோடு உணர்ச்சிவசப்பட்டவராக நாற்காலியை முஷ்டியால் குத்தி, “அப்படியில்ல… நான் பந்தயம் கட்டுகிறேன். இரண்டு மில்லியன் பந்தயம் கட்டுகிறேன், உங்களால் ஐந்தாண்டுகூட தனிமைச் சிறையில் இருக்க முடியாது…” என இளைஞனை குரலை உயர்த்தினார்.
“நீங்க, இதை விளையாட்டுக்காக இல்லாமல், உண்மையிலேயே சீரியஸாகத்தான் சொல்கிறீர்கள் என்றால், இந்தப் போட்டியை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஐந்து ஆண்டு அல்ல, பதினைந்து ஆண்டுகளுக்கு தனிமைச் சிறையில் இருந்து காட்டுகிறேன்…”
இளம் வழக்கறிஞரின் சவாலால் அந்த விவாதம் சூடுபிடித்தது. “பதினைந்து ஆண்டுகளா? அப்ப சரி!” வங்கியாளர் துள்ளிக் குதித்து கத்தினார். “கனவான்களே, நான் இரண்டு மில்லியன் பணத்தை பணயமாக வைக்கிறேன்…” விருந்தினர்களை நோக்கி சவாலுக்கு தயார் என்பது போல உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
“ஒப்புக் கொள்கிறேன்! நீங்கள் உங்கள் பணத்தை பணயம் வைக்கிறீர்கள், நான் என்னுடைய சுதந்திரத்தை பணயம் வைக்கிறேன்!” அந்த இளைஞர் சூடாக பதிலளித்தார்.
ஆகா… என்ன மாதிரியான கதை. இப்படி ஒரு பந்தயம் வைத்தால் எப்படி இருக்கும்? முந்தைய கதை ஒரு விதமான வியப்பைத் தந்தது என்றால், இந்தக் கதை வேறொரு சுவாரஸ்யத்தோடு எதிர்பார்ப்பை கூட்டியது. திடீரென ஒரு உதிப்பு வந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டு இருபதைத் தாண்டி விட்டது. புத்தகத்தை மூடி, திரும்பவும் எடுக்கும் வகையில் புத்தக அலமாரியில் ஒரு இடத்தில் பதுக்கினேன். அந்த இடத்தை நினைவு வைத்துக் கொண்டு, நூலகத்தை விட்டு கிளம்பினேன்.
செகாவ்வின் சிறுகதை மயக்கத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்வதை மறந்து போனேன். தாம்பரம் ரயில் நிலையத்தை நோக்கி நடையை துரிதப்படுத்தினேன். இப்போதெல்லாம் சாப்பாட்டுப் பையைத் திருட மாநகரப் பேருந்துகளில் காத்துக் கிடந்து ஏமாந்து போவதற்குப் பதிலாக, புறநகர் ரயிலையே முழுவதுமாகச் சார்ந்து விட்டேன். ரயிலில் லஞ்ச் பேக்கை களவாடுவது மிக மிக எளிது. பேருந்து மாதிரி கிடையாது, ரயிலின் அமைப்பு. ரயிலில் ஏறியதும், இருக்கையின் தலைக்கு மேலே உள்ள சுமைகளை வைக்கும் பலகையில் பேக், லஞ்ச் பாக்ஸ்களை பயணிகள் வைத்து விடுகின்றனர். இதில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்குவது நம்ம சமர்த்துதான்.
அதுவும் காலை நேரத்தில், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை வரை செல்ல, இரண்டு மகளிர் ஸ்பெஷல் ட்ரெயின் உள்ளது. காலை 8.25க்கு ஒன்றும், 8.40க்கு ஒன்றும். அதில் முதல் ட்ரெயினை இன்று தவற விட்டுவிட்டேன். எப்படியும் 8.40 ட்ரெயினை பிடித்து விடுவேன். 12 பெட்டிகளைக் கொண்ட ட்ரெயினில் முதல் ஆறு பெட்டிகளில் பெண்கள் மட்டும்தான் ஏற முடியும். மீதமுள்ள ஆறு பெட்டிகளிலும், இரண்டு பெட்டிகளும் மகளிருக்குத்தான். முதல் ஆறு பெட்டிகளிலும் வேலைக்குப் போகும் பெண்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதுதானே எனக்குத் தேவை. அவர்களைப் பார்க்கும் போது, என்னால வேலைக்குப் போக முடியலேன்னு ஏக்கமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெட்டி, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிறுத்தங்களில் இறங்கிக் கொள்வேன். பேருந்தில் எதையும் தவற விட்டுவிட்டால் ஓட்டுநர், நடத்துனரிடம் சொல்லி வண்டியை ஓரம் கட்டி தேடலாம். தேவையென்றால் காவல் நிலையத்துக்குக்கூட வண்டியை விடலாம். ஆனால் ரயிலில் அப்படியில்லை. புறநகர் ரயில், ஒரு நிறுத்தத்தில் இருபது வினாடிகள்தான் நிற்கும், அதற்குள் இறங்கியாக வேண்டும், தவற விட்ட எதையும் தேடிக் கொண்டிருந்தால், அடுத்த நிறுத்தம் வந்துவிடும். சோத்து மூட்டைக்காக அலுவலகத்துக்கு போகும் அவசரத்தில் பெட்டியில் சோதனை போட்டுக் கொண்டா இருப்பார்? எந்த பிக்கல் பிடுங்கலுமின்றி லஞ்ச் பாக்ஸை எடுத்து வந்து விடுவேன். மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
தாம்பரம் முதல் எழும்பூர் வரை, மாதாந்திர பயணச்சீட்டு 100 ரூபாய்தான். மாதாந்திர பாஸ் எடுத்து விட்டால், இந்த வழித்தடத்தில் எத்தனை தடவை வேண்டுமானாலும் போய் வரலாம். இந்த வழித்தடத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். பிறகென்ன புகுந்து விளையாடலாமே.
இன்றைய பொழுதும் வழக்கம் போலவே நகர்ந்தாலும் மூச்சுத் திணறல் வழக்கத்தை விட கடுமையாக அச்சுறுத்தியது. மருத்துவமனைக்குப் போகலாமென பக்கத்து வீட்டு அக்காக்கள் சொன்ன போதும், மாத்திரை போட்டு சமாளிப்பதாக அவர்களை அமர்த்தினேன். தூங்கி எழுந்ததும் சுவாசப் பிரச்சினை எதுவும் இல்லை. உடல்நிலை நன்றாக தேறிய மனநிலையில் படுக்கையில் இருந்து எழுந்தேன். பின்ட்டோ அரைத் தூக்கத்தில் கிடந்தான். சத்தம் போடாமல் எழுந்து கடைக்குப் போய் பிஸ்கட் வாங்கி வந்தேன். இவ்வளவு சுறுசுறுப்பாக நான் இருந்ததே இல்லை. பந்தயம் சிறுகதையில் அடுத்து என்ன, அந்த இளம் அட்வகேட் பதினைந்து ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருப்பதாக பந்தயம் கட்டினானே, என்ன ஆச்சி? புத்தகத்தை எடுத்துப் போகச் சொன்னார் லைப்ரரியன், ட்ரெயினைப் பிடிக்கும் அவசரத்தில் அங்கேயே வைத்து விட்டு கிளம்பினேன். எடுத்து வந்திருக்கலாம் போல தோன்றியது. லீவ் போட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, வீட்டிலேயே உட்கார்ந்து செகாவ்வின் மீதிக் கதைகளைப் படித்திருக்கலாம்.
உண்மையிலேயே பந்தயம் போட்டார்களா? பந்தயத்தில் யார் வெற்றி பெற்றது? எனக்கு இருப்பு கொள்ளவில்லை, சீக்கிரம் கிளம்பி லைப்ரரிக்குப் போனேன். எனக்கு என்ன அவசரமாக இருந்தாலும் 8 மணிக்குத்தானே லைப்ரரி திறக்கும். லைப்ரரியன் வந்தார், திறந்தார். நான் மடமடவென உள்ளே சென்று, புத்தகத்தை ரகசியமாக ஒளித்து வைத்த இடத்தில் கையை விட்டேன். அந்த இடத்தில் புத்தகம் இல்லை. அந்த அடுக்கு முழுவதும் தேடினேன், புத்தகங்களுக்கு இடையில் நன்றாகத் தேடினேன். ஆன்டன் செகாவ் சிறுகதை புத்தகம் கிடைக்கவில்லை.
ஒரு கதையை-விரும்பிய கதையை முழுமையாக வாசிக்கும் என் ஆசையைக்கூட இந்த வாழ்க்கை நிறைவேற்றித் தராதா? ஏமாற்றத்தில் லைப்ரரியன் எதிரில் உட்கார்ந்தேன். “என்ன நீலவ்னா? ஏன் சோகமா இருக்கே…” பதிலே சொல்லாமல் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நேத்து நீங்க ஆன்டன் செகாவ் சிறுகதை புக் கொடுத்தீங்கல்ல… அது இன்னொரு காப்பி இருக்குமா?” ஆதங்கமும் அதிகாரமும் ஒரு சேர கேட்டேன்.
“ஏன், நேத்து கொடுத்தது எங்க?”
“நான் வச்ச இடத்துல அந்த புக்க காணோம். அதான்…”
“என்ன பதிப்பகம் அது?” அவர் கேட்டதும்தான் தெரிந்தது, எந்தப் பதிப்பகம், எந்த ஆண்டு வெளியான புத்தகம் என எதையுமே தெரிந்து கொள்ளாமல் அதைப் படித்திருக்கிறேன்.
“தெரியலையே…”
“நான்கைந்து பதிப்பகங்கள் ஆன்டன் செகாவ் சிறுகதைகளை வெளியிட்டிருக்காங்க… எந்தப் பதிப்பகம்னு தெரியாம எப்படிச் சொல்றது… இரு நேத்து யாரும் புக் எடுத்திட்டுப் போயிருக்காங்களான்னு பார்ப்போம்…”
“பாருங்க… அதுக்கு முன்ன, செகாவ் கதைகள் கொண்ட வேற பதிப்பக புத்தகம் இருக்குன்னு சொன்னீங்கல்ல, அது எல்லாத்தையும் எடுத்தாங்க…”
என் ஏவலை அவர் உதாசீனப்படுத்தியதும் இல்லை. கோபப்பட்டதும் இல்லை. என் மீது அவருக்கு என்ன கரிசனமோ… மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை எடுத்துத் தந்தார். ஆனால் அதில் எதிலும் பந்தயம் சிறுகதை இல்லை.
“நீலவ்னா, செகாவ் சிறுகதைகள் இண்டெர்னெட்ல கெடைக்கும்பா… அதுல படிச்சிக்கேயேன்..” நான் அவரைப் பார்த்து முறைத்தேன். பதிவேட்டில் பார்த்த போது, நான் படித்த புத்தகத்தை வேறு ஒரு உறுப்பினர் எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் புத்தகம் திரும்பி வர குறைந்தது 15 நாட்களாவது ஆகும். அதுவரை நான் உயிரோடிருப்பேனா? சந்தேகம்தான்.
அந்தக் கதையை உடனே படிக்க வேண்டும் போல இருந்தது. இணையம் வந்த பின்பு தேடல் குறைந்து விட்டதாக என்றோ ஒருநாள் அப்பா புலம்பிய துணுக்கு நினைவுக்கு வந்தது. இணையத்தில் கிடைப்பதை எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம் என்ற சோம்பலே, அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளாமல் தள்ளிப் போட்டு, இப்ப உள்ள இளைய சமுதாயம் தேங்கிப் போய் கிடப்பதாக அவர் முணங்குவார். அப்பா நினைவுக்கு வரவும் எப்படியும் பந்தயம் கதையை புத்தகத்தில் வாசித்து விட வேண்டும் என ஒரு வெறி வந்தது.
ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, தொடர்ந்து 15 ஆண்டுகள் தனிமைச் சிறையில் தன்னைத்தானே, அடைத்துக் கொள்கிறான் ஒருவன், அதுவும் பணத்துக்காக தன்னுடைய சுதந்திரத்தை பகடையாக வைக்கிறான், இந்த அபாயகரமான முடிவுக்கு அவனை உந்தித் தள்ளியது எது? வெறும் பணம் என்றால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், பந்தயம் கட்டிய பணத்தின் மதிப்பு குறைந்து போய் விடுமே? இழந்த வாழ்க்கையை அதற்கு இணையாக்க முடியாதே. இளமைக்கு விலை நிர்ணயம் சரிதானா? ஏதேதோ மூளையில் தோன்றியது. எது எப்படி இருந்தாலும், கதையின் முடிவில் செகாவ் வெட்டிப் போடும் எளிய திருப்பங்களால் ஈர்ப்பு ஏற்பட்டு, பந்தயம் எப்படி நிறைவேறியிருக்கும் என்பதைத் தாண்டி, இந்தக் கதையை அவர் எப்படி முடித்திருப்பார் என்பதை அறிய விரும்பினேன். புத்தகம் கிடைக்காத சோகத்தில் சோர்வாக லைப்ரரியிலிருந்து வெளியேறினேன்.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தேன். லஞ்ச் பேக்கை இன்னிக்கும் திருடணுமா? ரயில் நிலையத்தில் விரக்தியில் அமர்ந்து விட்டேத்தியாக வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கதையின் முடிவை தெரிந்து கொள்ளாமல் செத்துப் போய் விடுவேனோ? அப்படிச் செத்துப் போனால், உலகிலேயே மிக மிக மோசமான துரதிருஷ்டம் பிடித்தவள் நான்தான். கேவலம் ஒரு கதையை முழுமையாக படிக்கக்கூட முடியாத துர்ப்பாக்கியவதி. 8.40 ரயிலில் ஏறினேன். சாப்பாட்டுப் பைகளையும் அதை வைத்தவர்களையும் வழக்கமாக நோட்டமிடுவது போல நோட்டமிட ஏனோ மனம் லயிக்கவில்லை.
ரயிலில் முதன்முறையாக இயல்பாக அமர்ந்தேன், இன்று திருட்டுத்தனம் செய்ய வேண்டாமென நினைத்து. அப்போதுதான் அங்கு நடக்கும் பெண் பயணிகளுக்கு இடையிலான உரையாடல்களைக் கவனித்தேன். என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை என்பது போல, காதுகளை அடைத்துக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டோ, போனில் இன்னொருவருடன் பேசிக் கொண்டோ வரும் மனிதிகள் ஒரு பக்கம். அன்றாட நாட்டு நடப்பு முதல் பொருளாதாரப் பிரச்சினை வரை தீர்வு எதுவும் எட்டாப்படாமலேயே அலசி ஆராயும் கூட்டம் இன்னொரு பக்கம். எத்தனை விதமான மனிதர்கள். பொதுப் போக்குவரத்து என்ற சொல்லின் நிறைவான பொருளைத் தரும் பயணம் இதுதான். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள்கூட, சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு அஞ்சி, ரயிலில் பயணம் செய்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தன் கரங்களுக்குள் பத்திரமாக அணைத்துக் கொண்டு செல்லும் இந்த ரயில்தான் எவ்வளவு பேரின் மர்மங்களை-ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளது.
ஒரு தொலைபேசி உரையாடல் என்னை மீண்டும் சுயநினைவிற்கு கொண்டு வந்தது. நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு மாலை வந்து விடுவதாக, யாரோ ஒருவரிடம் ஒரு பொண்ணு பேசிக் கொண்டிருந்ததையைக் கேட்டு எனக்கு உயிர் வந்தது போல இருந்தது. பந்தயம் சிறுகதை உள்ள செகாவ் புத்தகத்தை புத்தகக் காட்சியில் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை உதித்தது. அவளிடமே புத்தகக் காட்சிக்கு எப்படி போறது, எத்தனை மணிக்கு போகலாம் போன்ற விவரங்களைக் கேட்டேன். மீண்டும் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு பின்ட்டோவுடன் விளையாடி, இழந்த சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியோடு மாலை கிளம்பினேன். காலையில், ரயிலில் வந்தவள் சொன்னபடி கிண்டி ரயில் நிலையத்தில் இறங்கி, புத்தகக் காட்சிக்கு செல்ல நந்தனத்திற்கு போகும் பேருந்தில் ஏறினேன்.
பொங்கல் விடுமுறையை புத்தகங்களோடு கொண்டாட ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த மைதானத்திற்குள் நுழைந்து நீண்ட நடைக்குப் பின்பு, பார்த்து அப்படியே ஆச்சரியத்தில் மலைத்து நின்றேன். நீலமும் வெள்ளையும் கலந்து ஒளியைப் பாய்ச்சிய மின் விளக்குகளின் வெளிச்சத்தில் புகையைப் போல பனி கவ்வி, திடலில் அப்படியே கவிந்திருந்தது. உணவு, தேநீர், அப்பளம், கடலை, ஊறுகாய் என உணவுத் திருவிழா போல கூட்டம் கமகமத்தது. அதைத் தாண்டி வரிசை வரிசையாக நீண்ட பாதைகளோடு, இரு புறமும் இருந்த நூற்றுக் கணக்கான அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. இதனால்தான் சென்னைப் புத்தகக் காட்சிக்கு போகனும்னு அப்பா புலம்புவாரு போல… நுழைவுக் கட்டணம் செலுத்தி, உள்ளே சென்று திக்குமுக்காடிப் போனேன். எந்தப் பாதையில் எந்தக் கடையில் நான் தேடும் செகாவ்வின் சிறுகதைத் தொகுப்பை விற்கிறார்கள்? யாரிடம் கேட்பது? எந்தப் பதிப்பகம் என்பதை லைப்ரரியனிடம் கேட்டு வந்திருக்க வேண்டுமோ?
இது ஒருபுறம் மண்டையைக் குடைந்தாலும் திடீரென இன்னொரு சிந்தனை உதித்தது. நாம் தேடும் புத்தகத்தை ஏன் திருடக் கூடாது? திருட்டுப் புத்தி ஜாலியான விளையாட்டாய் போனது எனக்கு. இவ்வளவு கூட்டத்தில் திருடி மாட்டிக் கொண்டால் அசிங்கமாகிப் போகாதா? டெய்லி சாப்பாட்டையே திருடுறோம், இது என்ன பிரமாதம், அதெல்லாம் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் எனத் துணிந்து, திருடலாம் என திடசங்கல்பம் பூண்டேன். திருடுவதற்கு பொருள் கிட்ட வேண்டுமே? எந்தக் கடையில் அந்தப் புத்தகம் இருக்கிறதோ? எப்படி கண்டுபிடிப்பது?
அப்படியே ஒவ்வொரு வரிசையாக வந்து கொண்டிருந்தேன். தேசாந்திரி என்ற கடை வாசலில், ராஜா மாதிரி கம்பீர தோற்றம் தரும் வகையிலான இருக்கையில் ஒருத்தர் அமர்ந்திருந்தார். ஆனால், அவர் ராஜா மாதிரி இல்லை, ஒரு மந்திரி மாதிரிகூட இல்லை. வழுக்கைத் தலையும் பெரிய சட்டகம் போட்ட கண்ணாடியையும் பார்த்தால் ஒரு எழுத்தாளராகத்தான் அவர் இருப்பார் என ஊகித்தேன். அவரது நடவடிக்கை அதை சொல்லாமல் சொல்லியது. எழுத்தாளர் என யாரையும் உடையிலோ நடையிலோ அறுதியிட்டுச் சொல்ல முடியுமா என்ன? அவரிடம் புத்தகங்களை நீட்டுபவர்களிடம், பல்லே தெரியாமல் சாங்கியத்துக்காக சிரித்து வைத்து, புத்தகத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். நெருக்கமாக யாராவது பேசினால், அத்தனை பற்களும் தெரிவது போல ஆயத்தமாக வைத்திருந்த சிரிப்பை உதிர்த்தார்.
செகாவ் சிறுகதை புத்தகம் ஏதாவது இருக்கிறதா? அந்தக் கடைக்குள் துழாவித் தேடினேன். ‘செகாவ் மீது பனி பெய்கிறது’ என்ற புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்து வேகவேகமாகப் புரட்டினேன். டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, செகாவ் போன்ற செவ்வியல் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் புகழ்பெற்ற கதைகளைப் பற்றியும் அறிமுகம் செய்தது அந்தப் புத்தகம். ‘செகாவ் வாழ்கிறார்’ என்ற இன்னொரு புத்தகமும் இருந்தது. அந்தப் புத்தகத்தில் செகாவைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது, ஆனால் பந்தயம் கதை இல்லை. இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுபவரிடம், செகாவ் எழுதிய பந்தயம் கதை, எந்த புக்ல இருக்கும் என அப்பாவியாகக் கேட்டேன். அங்கிருந்தவர்கள், ராஜ இருக்கையைக் காட்டி, “அவர்தான் எழுத்தாளர் எஸ்.ரா. அவர் எழுதிய புத்தகம்தான் இது. அவரிடமே கேட்டுக்கோங்க…” என்றனர். கையில் வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் பார்த்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் என போட்டிருந்தது. அதைச் சுருக்கித்தான் எஸ்.ரா. என்கிறார்களோ.
அருகில் போக சங்கோஜமாக இருந்தது. அவரைச் சுற்றி நின்ற கூட்டம் குறையும் வரை காத்திருந்தேன். கலையவும் சட்டென்று அருகில் குனிந்து முகமன் சொன்னேன்.
“சார், என்னோட பேரு நீலவ்னா. தாய் நாவலில் வரும் கதாநாயகனின் தாயாருடைய பெயர்… அப்பா தீவிர மாக்ஸிம் கார்கி ரசிகர். அதனால, எனக்கு இந்தப் பேரை வச்சிருக்காரு…”
நான் தொடர்வதற்குள் இடைமறித்த அவர், “ஓஹோ… சொல்லுமா…”
“நான் உளவியலில் முதுகலை முடிச்சிருக்கேன். தாம்பரத்தில இருந்து வர்ரேன் சார், செகாவ் எழுதின பந்தயம் சிறுகதை எந்த பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளதுனு தெரிஞ்சிக்கிறனும்…”
“அந்தக் கதை, ரொம்ப சுவாரஸ்யமான கதைமா… நான்கூட என்னோட இணையதளப் பக்கத்துல எனக்குப் பிடித்த கதைகள் பகுதில செகாவோட பந்தயம் கதை பத்தி எழுதியிருக்கேன்…” சொல்லிவிட்டு அந்தக் கதையோடு செகாவ்வின் வேறு சில கதைகளையும் மொழிபெயர்த்து வெளியிட்ட பதிப்பகத்தின் பெயரையும், அந்தப் பதிப்பகம் எந்த வரிசையில் எத்தனையாவது கடை என்ற விவரத்தையும் சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்தக் கடையை நோக்கி நடையைக் கட்டினேன்.
நான் பிறவிப் பயனை அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் எட்டிப் பார்க்கவும் சிரிப்பு வந்தது. போகும் வழியிலேயே ஒரு சில கடைகளுக்குள் நுழைந்து சில புதக்கங்களை எடுத்து சும்மா புரட்டிப் பார்த்தேன். அப்போது கல்லாவில் இருப்பவர்கள் கவனிக்கிறார்களா என நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. அதனால், புத்தகத்தை எப்படி சாமர்த்தியமாக திருடலாம், பணம் கொடுக்காமல் கல்லாவில் நிற்பவரை ஏமாற்றிவிட்டு எப்படி அந்த அரங்கிலிருந்து வெளியே வரலாம் என ஒத்திகை பார்த்தேன். அதில் இரண்டு சிக்கல்கள் இருப்பது புலப்பட்டது.
1) நாம போகும் நேரத்துல கடையில கூட்டம் அலைமோதணும்…
2) ஏற்கனவே புத்தகங்கள் வாங்கி கையில் வைத்திருக்கணும்…
கூட்டம் கூட வைப்பது நம்ம கையில் இல்லை, ஆனால் புத்தகம், அதுவும் என் கையில் இல்லை. கையில் ஒன்றிரண்டு புத்தகங்கள் இருந்தால் அதோடு சேர்த்து திருடிய புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நழுவிவிடலாம். என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே எஸ்.ரா. சொன்ன கடையை நோக்கி நடந்தேன். இன்னும் இரண்டு கடைகள் தாண்டி அந்தக் கடை வந்துவிடும், என்ன செய்யலாம்?
எதிர்வரிசையில் ஒரு புத்தகக் கடையில் கூட்டம் அலைமோதியது, கூடவே எனக்கான யோகமும் அந்தக் கடை வாசலில் கட்டைப் பை உருவத்தில் கிடந்தது. அந்தப் பை என்னை இரு கரம் விரித்து அழைப்பது போலவே இருந்தது. யாரோ புத்தகம் வாங்கி அந்தப் பையில் முக்கால்வாசி அளவுக்கு நிரப்பி விட்டுருந்தார்கள். அந்தப் பைக்கு சொந்தக்காரர் அந்தக் கடைக்குள் இருக்க வேண்டும், கனம் தாளாமல் வெளியே விட்டுச் சென்றிருக்க வேண்டும் அல்லது யாரோ அந்தப் பையை தவற விட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இந்தப் புலன்விசாரணை எனக்கு எதுக்கு? கடைக்குள் நுழைந்து ஒரு உலாத்து உலாத்தி விட்டு, அந்தப் பையை எடுத்துக் கொண்டு மெதுவாக நடையைக் கட்டினேன். ஒரு கடையைத்தான் தாண்டியிருப்பேன், மேம்… மேம்… என பின்னால் இருந்து சத்தம் வந்தது. நான் சட்டை செய்யாமல் நடக்கவும் எதிரில் வந்தவர்கள், என்னை நிறுத்தி பின்னாடி உள்ள கடையில் இருந்து கூப்பிடுவதாகச் சொன்னார்கள். மாட்டிக் கொண்டுவிட்டோம் என ஒரு கணம் ஆடிப் போய் அப்படியே திடுக்கிட்டு நின்று திரும்பிப் பார்த்தேன். 80 வயதிருக்கும் அந்தக் கிழவருக்கு, அவர் பக்கத்தில் நின்றவர், “மேடம், சார்கூட வந்தீங்களா? சார் இங்கதான் இருக்காங்க…” எனச் சொல்லவும், அந்தக் கிழவர், கண்ணாடியை உயர்த்தி என்னைப் பார்த்தார். “நீங்க இங்கதான் இருக்கீங்களா தாத்தா…” அருகில் போய் அசடு வழிய அவருடன் ஒட்டிக் கொண்டு, கடைக்காரரைப் பார்த்து பல்லை இளித்து வழிந்தேன்.
“என்ன பாப்பா திருடிட்டு போகலாம்னு பார்த்தியா, இந்தக் கெழவன ஏமாத்த முடியுமா? என்கூடயே இந்தப் பைய தூக்கிட்டு வா, எல்லாம் பர்சேஸ் பண்ணி முடிச்சதும் என்னைய கார்ல ஏத்தி விட்டுடு, கார் வெளிலதான் நிக்கிது…” என்னைக் காட்டிக் கொடுக்காமல், எனக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகச் சொன்னார்.
“சரிங்க தாத்தா…” ஒரு புத்தகத்தைத் திருட, அதற்கு தேவையான கட்டைப் பையை வரமாக எனக்கு கடவுள் தந்தார். ஒரு காரியம் நிறைவேற நீ முயற்சி எடுத்தா, அதை நிறைவேத்தி வைக்க ஏதாவது ஒரு வகையில கடவுள் உனக்கு உதவுவார்னு அம்மா எப்பவும் சொல்லும். அது சரிதான் போல என மனதிற்குள் நினைத்து கொண்டேன். தாத்தா கூட வரும் தைரியத்தில் நான் போக வேண்டிய கடைக்கு அவரோடு நுழைந்தேன்.
ஆன்டன் செகாவ் படம் போட்ட புத்தகம் ஒன்று அங்கிருந்தது, நான் தேடிய பந்தயம் சிறுகதை அந்தத் தொகுப்பில் இருந்தது. யாரும் கவனிக்காத தருணத்தில், எந்தச் சிரமும் இல்லாமல் அந்தப் புத்தகத்தை, கையில் வைத்திருந்த பையில் போட்டேன். அப்படியே சுற்றிப் பார்த்து விட்டு, தாத்தா எடுத்த புத்தகங்களுக்கு மட்டும் பணத்தை செலுத்திவிட்டு, எந்தப் பயமும் பதற்றமும் இல்லாமல் கடையை விட்டு வெளியே வந்தோம். தாத்தாவோடு கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு அவரைக் காரில் ஏற்றி விட்டேன். விடும் போது, என்னுடைய புத்தகத்தை எடுத்தேன். “திருடினதா…” தாத்தா கேட்ட போது, அவரைப் பார்த்து கண்ணடித்துச் சிணுங்கி நகைத்தேன். கைகளை அசைத்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு, திடலிலிருந்து வெளியே வந்து, பேருந்தில் ஏறி கிண்டியில் இறங்கினேன்.
ரயில் பயணம் முதன்முறையாக குழந்தையின் குதூகலத்தை எனக்குத் தந்தது. எப்போதும் பரபரப்பாக கூட்ட நெரிசலில் பயணித்துப் பழகியதால், காலியான இருக்கைகள் கொண்ட பெட்டி கடகடவென நகரும் பூங்காவின் இருக்கைகளைப் போல சிரித்தன. சிலுசிலுவென பனிக்காற்று முகத்தில் அடிக்க, தலைமுடியை ஒதுக்கி விட்டு மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசமானேன். என்னுடைய கவலையைப் போக்கி நிம்மதியையும் ஆறுதலையும் தந்தார் செகாவ். அங்கிருந்து தாம்பரம் வருவதற்குள் பந்தயம் சிறுகதையின் மீதிப் பகுதியை படித்து முடித்தேன். அறைக்கு வந்ததும், உலகின் கடைசி மனிதன் கதையின் மீதிப் பகுதியை எழுதி முடித்தேன். ஆழ்ந்த உறக்கம் தழுவும் என நிம்மதியாகப் படுத்தேன், கதை எழுதிய தாள்கள் தலைமாட்டில் இருக்கின்றன என்ற நம்பிக்கையோடு!

மால்கம்
இயற்பெயர் குதுப். சுருக்கமாக காஜா குதுப்தீன்.
இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை என்ற கரற்கரை கிராமம் சொந்த ஊர். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, பதிப்பகம், ஊடகம் என எழுத்து துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் senior Deputy Editor aaka paNipuriwthu varukiRaar.
‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்ற சிறுகதைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
‘என் புரட்சி – Bio Fiction’ அமெரிக்க கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் X- ன் வரலாற்றை இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மால்கம் X அறிமுகமும் அரசியலும் நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது.