கவிதை :1

இருள் படர்ந்து

ஒளித் திமிரிய

அந்தத் தருணத்தில் தான்

அந்த வாய்ப்பு

கிட்டியது எனக்கு..!

எந்தத் தருணம்

எனத் துளியும் யோசித்து விடாதே..!

அதற்கு முன் !

என யோசிக்கையில்

மேகம் தழுவிய

நிலவினைக் காணாத

வாய்ப் பென்றுதான்

உன்னிடம் ஒவ்வொரு முறையும்

நானே சொல்லியிருக்கிறேன்..!

ஒன்றை மற்றும்

இறுதியாகத் தெரிந்துகொள்

நான் எங்கே விழுந்தேன்

எப்படி எழுந்தேன் என்பதை

இனியும் உன்னிடம் சொல்லப் போவதில்லை..!

முடிந்தவரை

என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு

என் பின்னே வா

நான் விழுந்தாலும்

மண் ஒட்டாதது போல காட்டிக்கொள்கிறேன்…

கவிதை:2

இந்தக் கவிதையே உனக்காகத்தான்

என்ற போதும்

உனக்குள்ளே ஏகப்பட்ட சந்தேகம் என்பதை

நான் அறிவேன்…

உன் சந்தேகங்களையெல்லாம் நீக்கி

சந்தோசப் பட்டுக்கொள்…

மீண்டும் சொல்கிறேன்

இந்த கவிதை உனக்காக மட்டும்தான்…

அப்படியென்ன

கவிதையில் வடித்துவிடப்  போகிறாய்

எனும் ஆவலை இந்நேரம்

கூட்டியிருப்பாய் என நம்புகிறேன்…

உன் அழகை வியக்கவோ

அன்பை விவரிக்கவோ

இனியும் தேவையில்லை

என்றுதான் நினைக்கிறேன்..!

உரையாடலின் அவசியத்தையும்

அதன் ஆக்கத்தையும்

உன்னிடம் முன்பே

வலியுறுத்தியும் சொல்லியிருக்கிறேன்..!

நான் உன்னோடு சில முரண்பாடுகளை

கலைய வேண்டும்

அதை கவிதையாக்க வேண்டும்

அதை வாசித்துவிட்டு

நீ என்னோடு உரையாட வேண்டும்

அவ்வளவுதான்..!

உன் பெண்மையை தூக்கியெறி

நான் ஆண்மை என்பதை கழட்டியெறிந்து

நாட்கள் பல ஆகிவிட்டது..!

இப்போது மனிதமாகிவிட்ட நம்மில்

ஏதாவது மாற்று அடையாளம் இருந்தால் காண்பி..!

ஆண்குறியையும்

பெண்குறியையும் 

வேற்றுமை படுத்தித்தானே

ஆணுக்கும் பெண்ணுக்கும் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்..!

இத்தனை கட்டுக்கதைகள்..!

இத்தனை கொடுமைகள்..!

இத்தனை அசம்பாவிதங்கள்..!

அம்மணமாகிவிட்ட  உடல்களில்

நீ எதை மானம் என்கிறாய்?

எந்தவுறுப்பில் கற்பு இருப்பதாக நம்புகிறாய்?

நீ உன் விருப்பம் போல இரு…

நான் என் விருப்பத்தில் தொடர்கிறேன்…

இப்போது உன்னிடம்

ஒரு முத்தம் வேண்டும் என்கிறேன்..!

உனக்கும் வேண்டுமெனத் தோன்றினால்

மிச்சம் வைக்காது கொட்டி விட்டுப் போ..!

ஒன்றல்ல சில முத்தங்களை…


எஸ்.உதயபாலா (1992)

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள கீரனூரில் சுப்பிரமணி கண்டியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாய் பிறந்தவர். கணிதவியலில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு தற்போது தென்னக ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்பு பணியாளராக பணிசெய்துவருகிறார்.

பள்ளிக் கல்லூரி காலம் தொட்டே கவிதைகள் எழுதிவரும் இவர் நிலாச்சோறு,  லப் டப், முற்றுப்புள்ளி,  கீரனூர் சீமை, கருத்தீ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

குறும் படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதி வரும் இவர் வெள்ளித் திரையிலும் தனது பயணத்தைத் துவங்கியிருக்கிறார். இவர்  எழுதிய முதல் பாடல் “யாமன்” என்ற திரைப்படத்தில்  விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *