வெள்ளனவே வீட்டுல தின்னுட்டு வெளாட பள்ளிக்கொடத்துக்கு போவானுக. பள்ளிக்கொடம் ஆர்.சி தெருவுலருந்து மேற்க தேவமாருத் தெருவ தாண்டி போகும். பள்ளிக்கொடத்துக்கு பக்கத்துலதா கோயில் இருக்கு. கோயில்னா இந்து கோயில் இல்ல. கிறித்தவ கோயில். ஜான் மதி, பிரகாசு, எட்பட்டு பள்ளிக்கொடத்துல கிரிக்கெட் வெளாண்டானுக. எட்டுவரைக்கும் அந்த ஆர்.சி பள்ளிக்கொடம் இருக்கு. அந்தப் பள்ளிக்கொடத்துக்கு ரெண்டே கட்டிடம்தான். பள்ளிக்கொடத்த சுத்தி இப்பதான் செவர் கட்டி இருக்காங்க.
இவனுக மதியம் ரெண்டு மணிவரைக்கும் வெளாண்டு பசிக்கு ஏதாவது திங்க கோயிலுக்குள்ள வந்தானுக. பள்ளிக்கொடத்துக்கு வடக்கதா கோயில் இருக்கு. பாதர் திரிங்கல் இந்த எடத்துலதா தங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்னு பாதர் மார்க் ஸ்டீபன் திரிங்காலின் ஏறனூறாவது பெறந்தநா அன்னைக்கு இந்த கோயிலுக்கு வந்து சொன்னாரு.
கோயிலுக்கு முன்னாடி நல்ல வெட்ட வெளிச்சமா நெலம் இருக்கு. அதுக்கு கொஞ்சம் வடக்கு தள்ளி தென்னந்தோப்பு. மரங்க வானத்தத் தொடும் அளவுக்கு இருக்கு. தென்னந்தோப்புக்கு மேற்க்க பாதர் தங்குறதுக்கு பங்களா இருக்கு. பங்களாவுக்கு நேரா மாதா கேவி இருக்கு.
பசியில வெளாண்டுட்டு வந்தவனுக கோயிலுக்குள்ள ஏது இருக்காதுன்னு தெரியும். அதனால பிரகாசு காஞ்ச தேங்காய் ஏதாவது விழுந்து கெடந்தா அத எடுத்து திங்கலானு பாக்க போன. காஞ்ச தேங்காய்னா நெத்து. காக்கி நெறத்துல டவுசர். கிழிஞ்ச பனியன். தலை முடியிலிருந்து கால் வரைக்கும் கருத்த நெறம்தா. ஜான், மதி, எட்பட்டு கோயிலுக்கு முன்னாடி இருக்கிற மரத்து நெழல்ல ஒக்காந்திருந்தானுக. மதி தண்ணி தாகம் எடுத்ததுனால எந்துச்சு பங்களாக்குள்ள நொழஞ்சான். கருப்பு மஞ்சள் வெள்ளைல கட்டம் போட்ட சட்ட. நீல நெறத்துல டவுசர். தலை முடியை தவிர ஒடல்முழுக்க செவேர்னு தோலு. ஜானும் எட்பட்டும் பசிக்கு ஏதையாவது தின்னேயாகணும்னு பேசிகிட்டு இருந்தானுக.
வேகமா எந்துச்சு பங்களாக்குள் போய் கோயில் சாவியை எடுத்து கோயிலுக்குள்ள நொழஞ்சானுக. எந்தச் சத்தமும் இல்லாம அமைதியா இருந்துச்சு கோயில். இவனுக நடக்கிற சத்தம் மட்டும் வந்துகிட்டே இருக்கு. மூணு நாலு எட்டு வைக்கவும் கோயில் மொகட்டுல ஒரு புறா கெழக்கிருந்து பறந்து ஒரு கம்பியில ஒக்காந்துச்சு. மேல என்னடா சத்தம்னு மொகட்ட பாத்தானுக.
அத பத்தி எதுவும் யோசிக்காம உள்ளுக்க நடந்து போயி நன்மை பெட்டிய பாத்தானுக. வெள்ள கலர்ல ரெண்டு மூணு நன்மை சில்லு சில்லா ஒடஞ்சு கெடந்துச்சு. அத எடுத்து தின்னுட்டு வெளியே வந்தானுக. ஜானு ஏசுநாதர் சிலுவையில தொங்குகிறத பாத்தா. எதுவும் யோசிக்க தோணல. எட்பட்டு சர்கிஸ் கதவ பூட்டிட்டு ஜான் பக்கத்துல நின்னா. நல்லா ஏழு எட்டு அடி ஒசரத்துல சிலுவையில ஏசுநாதர தொங்கு போட்ட செல இருக்கு. ஏசுநாதர் ஒடம்புல ஒட்டு துணி இல்ல.
அந்த எடத்த தவிர.
தலயிலருந்து முடி கீழ தொங்குது. மொகமும் கீழ தொங்குது. மனுசனுகள பாக்க விரும்பல போல. தலயில முள் கிரீடம் இருக்கு. சிலுவைக்கு மேல மொகட்ட தொடுறாப்புல ஒரு சின்ன எடம் இருக்கு. அந்த எடத்துக்கு இந்த புறா பறந்து வந்து ஒக்காந்துச்சு. இவனுக கண்ணுல பட்டாலும் இந்த எடத்துக்கு இவனுகளால வர முடியாதுன்னு அதோட நெனப்பு. அந்தச் சின்ன எடத்துக்கு போன பெறகு தலையை மட்டும் வெளியே நீட்டி இவனுகள பாக்குது. எதுவும் செய்யப் போறானுகளானு.
இவனுகளும் அந்த புறாவ பாத்து சிரிச்சுக்கிட்டானுக. ஒடனே புறா தலையை வெடுக்குன்னு இங்கிட்ட எடுத்துருச்சு. கொஞ்ச நேரமா அது அங்கதா ஒக்காந்துகிட்டே இருக்கு. ஒருவித பயத்தோடு. ரெண்டு வெவ்வேறு உயிர்க நேருக்கு நேரா பாத்துக்கிட்டுச்சுனா பயம் தானா வரும்போல.
ஜான் எதுவும் சொல்லாம எட்பட்ட பாத்தான். எட்பட்டு ஜானு பாத்ததா புரிஞ்சுகிட்டு வேகமா மணி அடிக்கிற பக்கம் போனான். அந்த எடத்துக்கு பக்கத்துலதா கதவு தெறந்து இருக்கு. மணி அடிக்கிற மூலையில சின்ன சன்னல்க இருக்கு. அதுகளையும் மூடிட்டு வேகமா கம்பா அந்த மூலையில வச்சுட்டு கதவு வழியா வெளியே போய் மதியவும் பிரகாசையும் கூப்ட போன. பிரகாசு வெறுங்கையும் வீசின கையுமா மொகத்த சோகமா வச்சுக்கிட்டு டவுசர தூக்கிவிட்டுகிட்டு நடந்து வந்தான்.
மதியும் தண்ணிய வயிறார குடிச்சிட்டு பங்களாவுக்கு வெளியில வேப்பமரத்தடியில நின்னுகிட்டு இருந்தவகிட்ட “மதி அகர்கர் இங்க வாங்க. புறா ஒன்னு கோயிலுக்குள்ள சிக்கி இருக்கு”னு கூட்டுட்டு திரும்ப கதவு பக்கம் போய் நின்னுகிட்டா. பிரகாச எப்பையும் அகர்கர்னுதா கூப்டுவா. எனா கிரிக்கெட் வெளாடும் போது இந்திய பந்துவீச்சாளர் அகர்கர் போல பிரகாசு பந்து வீசுவா. “புறா வா”னு ஒடனே ரெண்டு பேரும் கோயிலுக்குள்ள நொழஞ்சானுக. கதவ எட்பட்டு மூடிட்டான்.
மதியும் பிரகாசும் சட்ட பனியன கழட்டிட்டு அத நல்லா உருண்டைய பண்ணிக்கிட்டானுக. ஜானு பிரகாசு “அந்த ஏணிய தூக்கிட்டு வாடா”னு சொன்னா. தலைய மேலே தூக்கி கிட்டு. மதியும் பிரகாசும் ஏணிய தூக்கிக்கிட்டு வந்து சிலுவைக்கு பக்கத்துல நிப்பாடி வச்சானுக. எட்பட்டு “அகர்க்கர் நீங்க ஏறுங்க”னு சொல்லி நிப்பாட்டி வைச்ச ஏணிய புடிச்சுக்கிட்டான். எனா தர பளிங்குக் கல்லுல செஞ்சது. ஏணில ஏறுறப்ப வழிக்கிறாம இருக்க, ஜானும் மதியும் சேந்துகிட்டு ஏணிய புடிச்சுட்டானுக.
ஏணி ஏசுநாதரோட நொட்டாங்கைக்கு கீழ இருக்கு. சிலுவ மேல ஏறித்தா அந்த புறா இருக்குற எடத்துக்கு போக முடியும். சிலுவைக்கான கட்ட நல்லா ஒரு அடி அகலத்துல கட்டி இருக்காங்க. ரெண்டு கையும் சிலுவையில அறஞ்சிருக்கு. பிரகாசு ஏணி வழியா ஏறி ஏணியோட மொகப்புக்கு போய் சிலுவ கட்டையா புடிச்சுக்கிட்டான்.
அப்பிடியே ஏசுநாதரோட நொட்டாங் கை சிலுவயில அறஞ்சத பாத்து ‘கைய அறஞ்சவனுக ஆணில அறஞ்சானுகள இல்ல மரக்கட்டையில அறஞ்சானுகளானு’ மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு சோத்து கால தூக்கும்போது புறா ப்ருச்சுனு அந்த எடத்துலருந்து பறந்து கெழக்கு பக்கமா வந்து மொகட்டு கம்பில ஒக்காந்துகிருச்சு. ஒக்காந்துகிட்டு தலைய அங்குட்டுயிங்குட்டும் திருப்பி திருப்பி பாக்குது. வெளிய போக வழி இருக்கான்னு. எல்லா வழியவு அடைச்சுக்கிட்டானுக. கம்பில ஒக்காந்துகிட்டு திருதிருன்னு முழிக்குது.
“ஏலே கீழ எறங்குடா”னு ஜான்னு சொன்னதும், பிரகாசு வேகமா சிலுவையிலருந்து கைய எடுத்து ஏணிய புடிச்சு எறங்குனா. ஏணிய அப்பிடியே தூக்கி நன்மை செவத்துல சாத்திட்டு புறாவ தேடி போனானுக. மதி புறாவ பாத்ததும் கையில இருந்த பனியன தூக்கி எறிஞ்சா. என்னமோ ஒன்னு நமக்கு நேரா வருதுனு திடுக்குனு பயந்திருச்சு. ஆனா பனிய பாதி தூரம்கூடபோகல. பனிய கீழ விழுந்துச்சு.
புறா திருதிருனு பாத்துக்கிட்டே இருக்கு. கீழ எறங்கி வந்த பிரகாசு அவெ சட்டய வந்தமானிக்கு ஓடி வந்து புறாவ பாத்து தூக்கி எறிஞ்சா. அந்தச் சட்ட பாதி தூரம்வரைக்கு வரவும் புறா பறந்து மேற்க்க வந்து நடு மொகட்டுல ஒக்காந்து வடக்கு பக்கமா மொகட்டுச் சன்னல பாத்துச்சு. அதுவும் மூடி இருந்ததால என்ன செய்றதுன்னு தெரியாம இவனுகள பாத்துச்சு.
ஜானு மதியோடு பனியன வாங்கி இவெ தூக்கி எறிஞ்சா. அது புறா பக்கம் வரைக்கும் போகவும் இவனுகளுக்கு சிரிப்பு. புறா தெகச்சு போச்சு. என்னமோ ஒன்னு வந்து நம்மள தாக்குதுனு. அந்த நிமிசமே எடத்த விட்டு இன்னும் கொஞ்சம் மேற்க்க பறந்துபோய் மொகட்டு கம்பில ஒக்காந்துருச்சு.
புறா ஒக்காந்திருப்பதையும் அதோட முழிப்பையும் பாத்தா ஏங்னயாவது ஒரு சின்ன எடம் கெடைக்காதா. வெளியில பறந்து போக. அப்பிடி எந்த எடமும் இல்லாததுனால இவனுகளுக்கு ஒரே குசி. புறா எங்கேயும் வெளியே போக முடியாதுன்னு.
கீழருந்து ஒவ்வொருத்தனும் மாத்தி மாத்தி சட்ட பனியன வைச்சு புறாவ பாத்து தூக்கி எறிஞ்சுகிட்டேயிருந்தானுக. புறா அதப் பாத்துட்டு அங்னயும் இங்னயும் பறந்து கிறந்து ஒரு வழியா எளப்பாருச்சு. இவனுக எண்ணமெல்லாம் புறா சுத்தியும் முத்தியும் பறந்து எளப்பாரி மறுபடியும் அந்த சிலுவ மொகட்டு மேலே இருக்குற எடத்துக்கு போகணும்கிறதா.
அதனால புறாவ ஒரு எடத்துல நிக்க விடாம தொரத்திக்கிட்டே இருந்தானுக. புறாவும் வெளியில போக வழி இல்லன்னு மறுவடியு சிலுவ மொகட்டுக்கு மேல இருக்கிற எடத்துக்குள்ள போய் நின்னுகிறுச்சு. கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் எவனு வரல. புறா நிம்மதியாச்சு. ஏன்ன இவனுக கெழக்கருந்து நடந்து வந்து ஏணி போட்டு ஏறனும்.
புறா அந்த எடத்துக்கு போனதுனால “இந்தாட்ட புடிச்சுரனுடா”னு அவனுகளுக்குள்ள சொல்லிக்கிட்டு சிரிச்சுகிட்டு வேகமா நடந்து வந்து ஏணிய எடுத்து சிலுவ ஓரத்துல போட்டானுக. பிரகாசுதா ஏறுனா. ஏணி மொகப்புக்கு வரவும் சிலுவைய புடிச்சு நொட்டங்கால தூக்கி ஏசுவோட நொட்டாங் கையில வச்சா. கால வச்சதும் செல கீழ விழுக பாத்துச்சு. அத சுதாரிச்சுகிட்டு பிரகாசு சிலுவ கட்டைய புடிச்சு கைய அழுத்தி ஒடம்ப மேலே எடுத்து கால தூக்கி ஏசுநாதர் தோள்பட்டைக்கு நேரா சிலுவ கட்டையில வச்சு சோத்து கையால மொகட்ட புடிச்சு சோத்தாங்காலையும் தூக்கி சிலுவ மேல வச்சா.
ரெண்டு கையால மொகட்டு செவர புடிச்சு மெதுவா எந்த சத்தமும் இல்லாம அரமத்தா வடக்கருந்து தெக்க வந்தான். அப்பிடி இவெ வாரத பாத்த நிமுசத்துல புறா றெக்கைய பறக்கும் போது “டேய் புடிடா”னு ஜானு கத்துனா. பிரகாசு சோத்துகையால விரிஞ்ச றெக்கைய புடிச்சா. ஒத்த றெக்கையால படபடன்னு செவுத்துல அடிச்சது. பறக்கத்தா முடியல. ஒத்த றெக்கைய புடிச்சவன் இன்னொரு கையால புறா காலு ரெண்டையும் புடிச்சுக்கிட்டான். மதி எட்பட்டு புறாவ புடிச்சதுல சிரிச்சானுக. பிரகாசு நெஞ்ச செவத்தோட ஒட்டி வச்சிக்கிட்டு ரெண்டு கால ஏசு நாதரோட சோத்தாங்கைய சிலுவையில அறஞ்ச எடத்துல நின்னுக்கிட்டான்.
புறா கால்கள நொட்டாங்கையில புடிச்சுகிட்டு மெதுவா அரமத்தா சிலுவ கட்டையில நடந்து வந்தான். மறுவடியும் செலய பாத்தான். இன்னு கொஞ்சம் அழுத்தி கால வெச்சிருந்தானா செல கீழ விழுந்துருக்கும். ஊர்க்கார பூரா இவனிகள அடிச்சே கொன்னுருப்பானுக. ஆனா ஏசுநாதர் மன்னிச்சு விட்டாருபோல. செலைக்குதா முக்கியத்துவம். மனுசனுகளுக்கு எங்க இருக்கு.
கீழருந்து ஜானு ஏணில ஏறி ஏணியோட மொகப்புக்கு போகவும் பிரகாசு புறாவ இவன்கிட்ட குடுத்தான். புறாவ வாங்கிட்டு ஜானு கமுக்கமா எறங்குனா. இந்தத் தடவ ஏசுநாதர் மேல கால வைக்காம எறங்கணும்னு பிரகாசு நெனச்சுக்கிட்டு ரெண்டு கையால சிலுவைய புடிச்சுகிட்டு ரெண்டு காலையும் ஏணிக்கு நேர தொங்க போட்டு ஏணியோட மொத படியில கால வச்சுக்கிட்டு அப்பிடியே கீழ எறங்குனா. நன்மை இருக்குற ரூம் கதவத் தெறந்து வெளியில போயி புறவா சுட்டு தின்னானுக.

அ. பிரகாஷ்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். “கிணத்து மேட்டு பனமரம்” சிறுகதை. தொகுப்பு முன்பாக வெளிவந்திருக்கிறது.