இந்திய சுதந்திர தினத்தன்று காலை சுபா அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள்… மன்னிக்கவும் சமைத்துக் கொண்டிருந்தாள்… இதுவும் தவறு, சமைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஆனால், அவளது மனம் அவள் வசம் இல்லை. அது பல கிலோமீட்டர் வேகத்தில் ஒரு இருபது விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. அவளது கைகள் எதை செய்வது என்று தெரியாமல் தடுமாறியது.
அவளது இரண்டு பெண் குழந்தைகள் சசி மற்றும் கலை கொடியேற்றத்தில் கலந்து கொள்ள பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். சுபாவின் கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் சுபாவிற்கு கடந்த ஓராண்டு காலமாக இரட்டை பொறுப்பு. குடும்பத்தை கவனித்து, நிதி மேலாண்மையும் செய்து, சாரதி வேலையும் பார்த்து, அவ்வப்போது வேலை பலுவின் காரணமாக அன்று காலை சோர்ந்தது போல சோர்ந்து விடுகிறாள். மேலாண்மையாம் ஆண்மை… தமிழ் மொழியில் தான் ஆண் பெண் பாகுபாடு கிடையாதே ? இந்த சொல்லில் மட்டும் ஆண்மை என்ன வேண்டிக்கெடக்கு? என்று சம்பந்தமில்லாத சிந்தனைகள் வேறு அவளை துன்புறுத்தியது.
“அம்மா நீ ஸ்கூலுக்கு வரலியா? ஃப்ளாக் ஹோயிஸ்டிங் இருக்கே,” என்றாள் சசி.
“நா வரல சசி, வீட்ல ஒரே வேலை, வேன்ல போயிட்டு வந்துடுங்க!” என்றாள் சுபா.
“அம்மா, நா சாக்கு ரேஸ் ஃபைனல்ல இருக்கேன், அக்கா கூட கராத்தே திறமை வெளிக்காட்டும் புரோகிராம்ல இருக்கா… எங்கள பார்க்கக்கூட வர மாட்டியா?” என்றாள் கெஞ்சலாக சிரியவள் கலை.
பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஐம்பதாவது சுதந்திர தினத்தன்று அவளது பள்ளியில் அவள் கலந்துகொண்ட நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தாள் சுபா. சாரணர் இயக்கத்தில் சுபா அப்போது இருந்ததால் அன்று வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கு ஒரு கமாண்டோ போல பாதுகாப்பு அளித்து பின்தொடர வேண்டிய பைலட் என்ற முக்கியமான பொறுப்பை சுபா அன்று ஏற்றிருந்தாள். சுமார் மூன்று மணி நேரம் நின்ற நிலையில், அநாவசிய பேச்சும் சிரிப்பும் இன்றி, விருந்தினரின் தேவைகளை கவனித்த சுபாவை பாராட்டி அன்றைய சிறப்பு விருந்தினர், இராணுவ அதிகாரி ஒருவர் அவளுக்கு ஒரு பேனாவை பரிசளித்தார். என்றெல்லாம் மனம் சோர்வாக இருந்ததோ, என்றெல்லாம் தன்னம்பிக்கை குறைவாக இருந்ததோ , அன்று சுபா அந்தப் பேனாவை எடுத்துப் பார்ப்பது வழக்கம். அன்றும் அந்த தங்க நிற பவுண்டைன் பேனாவை பார்த்த சுபா புத்துயிர் பெற்றாள். வீட்டு வேலைகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டு பள்ளிக்கு புறப்பட்டாள்.
அன்று இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம். பள்ளி மாணவர்கள் அட்டகாசமாக தங்கள் திறமைகளை வெளிகாட்டிக் கொண்டிருந்தனர். மார்ச் பாஸ்ட் துவங்கி, இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் வெளுத்து வாங்கினர். சுபாவிற்கு அவளையும் அறியாது ரோமாஞ்சனம் ஏற்பட்டது. அதுவும் கொடிகாத்த குமரனின் கதையை அந்த மாணவர்கள் ஆயிரம் பேர் முன்னிலையில் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது பின்னணி இசையில் “இது அன்னை பூமி, எங்கள் அன்பு பூமி,” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்க நடித்து காட்டியபோது சுபாவின் கண்கள் கலங்கின.
கராத்தே திறமை வெளிக்காட்டுதல் நிகழ்ச்சியில் சசியின் துணிவும், அதனைத் தொடர்ந்து நடந்த பிரமிட் அமைப்பில், இரண்டு அடுக்குகளில் அமைக்கப்பட்ட ஆண்கள், மற்றும் பெண்களின் தனித்தனி பிரமிடுகளின் உச்சியில் இந்திய மூவர்ண கொடியை அசைத்த அந்த சிறு குழந்தைகளை பார்க்கையில் சுபாவிற்கு பிரமிப்பு ஏற்பட்டது.
அவளது மனதில், இப்படி பல துறைகளில் திறமைசாலிகளாக, ஆண் பெண் பாகுபாடு அறியாமல், எதையும் செவ்வனே முடிக்கும் மாணவர்களான நாம் எங்கே மாறினோம்?என்ற கேள்வி எழுந்தது. யாருக்காக நம்மை மாற்றிக் கொண்டோம்? குடும்பமா? குழந்தைகளா? உறவுகளா? சமுதாயமா? என்று மீண்டும் சுபாவின் மனம் சஞ்சலமடைய துவங்கியது. அப்போது சற்றும் எதிர்பாராத வண்ணம் அவள் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.
“சுபா மேடம்களா? நான் வி.எச்.எஸ் இரத்த வங்கியிலிருந்து பேசறேன்…” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
“சொல்லுங்க! என்ன விஷயம்?”
“உங்களுக்கு B – ve இரத்த வகை தானே?”
“ஆமாம்…?”
“மேடம் நீங்க முன்ன ஒரு இரத்ததான முகாமுல இரத்த தானம் செய்து இருந்தீங்க… உங்களின் நம்பர் எங்க டேட்டா பேஸ்ல இருக்கு. எங்க வங்கில தலசீமியா (Thalassemia) நோயாளிகளுக்கு இரத்தம் அளிக்கிறோம். தலசீமியா ஒரு இரத்தம் சம்பந்தப்பட்ட மரபணு குறைப்பாடு நோய். உங்க இரத்த வகை உள்ள ஒரு குழந்தைக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது, உங்களால உடனடியா வந்து தர முடியுமா?”
“இப்போ ராத்திரி மணி எட்டு ஆகுது… இப்போ போய் எப்படி வர முடியும்? நாளை காலையில வரட்டுமா?” என்று தயங்கியபடி கேட்டாள் சுபா.
“நிலைமை ரொம்ப சீரியஸ் என்பதால தான் நாங்க உடனே கூப்பிடறோம். கொஞ்சம் தயவு பண்ணி வந்து குடுத்துட்டு போங்க மேடம்…” என்று மறுமுனையில் இருந்த பெண் சற்று கெஞ்சலாக கேட்டாள்.
சுபாவிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்தவுடன் டாக்ஸி ஒன்றை உடனடியாக புக் செய்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரத்த வங்கிக்கு கிளம்பினாள்.
இரத்ததானம் முடித்து அவள் வீட்டிற்கு வந்தபோது மணி பத்தை தாண்டியிருந்தது. உடம்பில் அவளுக்கு நல்ல அயர்ச்சி இருந்தது, ஆனால், மனதில் ஒரு சொல்லத்தெரியாத நிறைவு குடிகொண்டிருந்தது. அவள் தனது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள தன் கணவரை அலைபேசியில் அழைத்தாள்.
“கொஞ்ச நாளா எனக்கு மனசே சரியில்ல, எப்பப்பாரு வேலை செஞ்சுக்கிட்டு இருப்பது போல இருந்துச்சு. ஒரு விதமான கோபம், வெறுமை, தனிமை, ரொம்ப அதிகமா இருந்துச்சு. அதுவும் நீங்க ஊருக்கு போனதிலிருந்து ரொம்ப சிரமப்படறேன். ஒவ்வொரு சமயம் இவ்வளவு படிச்சிட்டு வேலைக்கு போக முடியலையேன்னு ஒரு ஆதங்கம், மற்றொரு சமயம் வெறும் வீட்டு வேலையையே ஒரு மெஷின் மாதிரி செய்துட்டிருக்கேனே இதுலேர்ந்து தப்பிக்கவே முடியாதான்னு ஒரு ஆத்திரம். எனக்கே என்ன பிடிக்கல.
வெளியில போய் சாப்பிடறது, ஷாப்பிங் போறது, சினிமாவுக்கு போறது, நண்பர்களை சந்திப்பது போன்றவற்றை செய்துட்டு தான் இருக்கேன், இருந்தும் அது ஒரு குறுகிய நேரத்திற்கு தான் அதெல்லாம் மனசை சந்தோஷப் படுத்துது. அதன் பிறகு மறுபடியும் மனதில் ஒரு சோர்வு ஏற்பட்டு போகுது. ஆனா, இன்னிக்கு நான் ரொம்ப நிறைவா உணரறேன். இந்த நிறைவு தற்காலிகமானதா எனக்கு தோணல… ஏன்?” என்று அன்றைய நாளின் நிகழ்வுகளை கூறி விளக்கம் கேட்டாள் சுபா.
அவள் சொன்னது அனைத்தையும் பொறுமையாக கேட்டவர் சற்று சிந்தித்து, “சுபா, உனக்குன்னு நீ செய்கிற காரியங்களை விட பிறருக்கு செய்யும் உதவி, பிறருடைய சதோஷத்திற்காக நீ செய்யும் விஷயங்கள் தான் உண்மையான சந்தோஷத்தை கொடுக்குது. அதானால தான் உனக்கு இன்னிக்கு அத்தனை நிறைவா இருக்கு. நான் கூடிய விரைவில் இந்தியா திரும்பிடறேன், அப்புறம் நீ வேலைக்கு போகமுடியலைன்னா கூட ஒரு தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலரா சேர்ந்து உன்னால் ஆன தொண்டுகள் செய், அது உனக்கு நிச்சயம் மன நிம்மதியை கொடுக்கும். இப்போ ரொம்ப மனச போட்டு குழப்பிக்காத நிம்மதியா தூங்கு,” என்று கூறினார்.
‘இன்று நான் ஒரு உயிரை காப்பாற்றிவிட்டேன்!’ என்ற நினைவு தந்த நிம்மதியோடு கண்ணயர்ந்தாள் சுபா.

மஞ்சுளா சுவாமிநாதன் சுயகுறிப்பு:
நான் முதலில் ஓர் வாசகர். எனக்கு சமூகக் கதைகள் மற்றும் கட்டுரைகள் படிப்பது மிகவும் இஷ்டம். மூன்று ஆண்டுகள் ‘அடையார் டைம்ஸ்’ என்ற ஆங்கில செய்தித் தாளில் துணையாசிரியராக பணி புரிந்தேன். மங்கையர் மலர் மின் இதழிலும் சில காலம் பணியாற்றினேன். கோவிட் ஊரடங்கு எனக்கு புத்தகங்கள் படிக்க ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது. வாஸந்தி, ஜெயகாந்தன், சிவசங்கரி, ரசவாதி, எஸ்.ரா ஆகியோரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இப்போது தமிழில் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறேன். மங்கையர் மலர், கல்கி, அமுத சுரபி , கலைமகள், குவிகம் மின்னிதழ், இலக்கியபீடம், வாரமலர், ராணி, ராணி முத்து ஆகிய இதழ்களில் எனது கதைகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரம் ஆகி உள்ளது. தொடர்ந்து தற்கால சமூகப் பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கதைகள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.