தமிழில் :  கனியமுது அமுதமொழி

அவன் கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருக்கிறான், தன்னுடைய  வருடாந்திர விடுமுறையை அனுபவித்தபடி. மகிழ்ச்சியில் மணலை காலால் எத்தியும், கடலின் வெகு தூரத்தில் சூரிய ஒளியின் கீழ் மின்னும்  அலைகளின் மடிப்பில் புதைந்திருக்கும் பொன் நிற முத்துக்கள் பற்றி தியானித்தபடி, பரவசமான மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறான்.

ஏதோ ஒரு கடினமான பொருள் மீது அவன் கால் இடி படுகிறது. அவன் குனிந்து அதை வெகு சுலபமாக மணலில் இருந்து வெளியே இழுக்கிறான். அது ஒரு மிகப்பெரிய சங்கு.

சங்கினை தன் காதில் வைத்து அதன் மனதை மயக்கும் கடலலைகளின் எதிரொலியை கேட்பதற்காக அவன் நடப்பதை உடனடியாக நிறுத்தி விடுகிறான். பிரமிக்க வைக்கும் அந்த உலகின் ஒரு பகுதியாக தான் இருக்க மாட்டோமா என்று அப்பொழுது அவன் விரும்பினான்.

அவன் ஏதோ அந்தக் கடலில் மூழ்குவது போல் உணர்ந்தான், அதன் அற்புதமான உயிரினங்களின் இசையால் செலுத்தப்பட்டது போல் உணர்ந்தான்.

ஆனால் அந்த கடல் சங்கை பொருத்தவரை அது வலியில் துடித்தது. தன் விருப்பத்திற்கு எதிராக மனித ஆத்மா அடைந்த துன்பங்களையும் போராட்டங்களையும் கவனிக்க நேர்ந்தது, துன்புறுத்தப்பட்டவர்களின் புலம்பலை, தங்கள் குழந்தைகளை இழந்த தாய்மார்களின் அழுகுரலை, ரத்த ஆறுகளை, மனித இதயங்கள் பல லட்சம் ஈட்டிகளால் குத்தி துன்புறுத்தப்பட்டதை, எல்லா இடங்களிலும் ஏற்பட்ட அழிவை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தது.

அந்த மனிதன் மட்டும் அந்த சங்கை மகிழ்ச்சியான அந்தத்தருணத்தில் கையில் உயர தூக்கி அதை கடலில் எரியாமல் இருந்திருந்தால் அந்த சங்கு அவன் காதில் வெடித்து சிதறி இருக்கும்.

நிகரற்ற மகிழ்ச்சியை உணர்ந்த சங்கவள் நிம்மதியில் ஆழ்ந்தாள். அவள் உற்சாகத்துடன் கடலின் ஆழத்தில் புதைந்தாள்…… அவள்  மீண்டும் கடலுக்குத் திரும்பினாள்.

(

ஒசாமா அலோமர் 1968 இல் டமாஸ்கஸில் பிறந்தார். அரேபிய “மிகச் சிறுகதை” (அல்-கிசா அல்-காசிரா ஜிடான்) எழுதுவதில் ஒரு நிபுணர், அவர் எகிப்தில் நஜ்லா முஹரம் சிறுகதைப் போட்டியின்  வெற்றியாளராவார்.  மேலும்  சிரியா மற்றும் லெபனானில்  அவரது மூன்று  படைப்புகளின் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது .

பிபிசி அரபு சேவையிலும் அவரது பணி தொடர்ந்து கேட்கப்படுகிறது. அலோமர் தற்போது சிகாகோவில் வசிக்கிறார்.)

++

கனியமுது அமுத மொழி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் பிறந்தவர் கனியமுது அமுதமொழி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி 2014ல் பணி ஓய்வு பெற்றவர் இவர். தமிழக அரசின் பாடநூல் நிறுவனத்திற்கு மூன்றாம் வகுப்பிற்கான ஆங்கில புத்தகத்தை எழுதியவர். முன்பருவ மழலையர் கல்வி குறித்து இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை  DTERT க்கு சமர்ப்பித்துள்ளார். 1990 இல் இவரது சிறுகதைகள் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சிறு வயது முதலே புத்தக வாசிப்பினை பழக்கப்படுத்திக் கொண்டவர். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். கதைகள் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *