முருகேசன் சொன்னதால்
மூன்றாம் நாளாக ஐந்து ரோட்டுக்கு வருகிறான் முருகன்
இன்றும் வேலையெதுவும் இல்லையென
ஏஜென்ட் கைவிரிக்க
சக ஊர்க்காரர்கள் மினி லாரியில் போவதை
கையாலாகமல் பார்த்தபடி
இன்று என்ன சொல்வதென யோசித்துக் களைத்துப் போய்
ஒயர்ப்பையிலிருந்த பழைய சாதத்தை
மூன்று நாள் நண்பனான நாய்க்கு ஊற்றி விட்டு
தலைக்குக் கைவைத்து
நகரின் பிரதான அடையாளமான
பாலத்தினடியில்
படுத்துறங்கி விட்டான்
+++
பிள்ளைகள் விளையாட
அம்மா திட்டினார்:
‘கோவிலுக்கு வர்றது சிற்பங்களப் பாக்க, வெளயாட இல்ல’
கண்ணாமூச்சி ஆட்டத்தைப்
பாதியுடன் நிறுத்தி
கணேசன் மீண்டும்
கல்லாகிப் போனார்
+++
‘பள்ளி ஆரம்பிக்குது’
‘பாப்பாவுக்கு
பேக்
லஞ்ச் பாக்ஸ்
லஞ்ச் டவல்
கர்ச்சீப்
எல்லாமே வாங்கனும்’
மனைவி சொன்னார்:
‘நான் பாத்துக்கறன், நான் அம்மாவா, நீங்களா?’
பாப்பா பிறந்த போது
பார்க்க வராமல் இருந்தப்
பாவத்தை
வேறு எப்படிக் கழுவுவேன்?
+++
காலிடறி என் கால் மிதித்து
கால் தொட்டு
கண்ணொற்றிக்கொண்ட
எதிர்சீட்டுச் சிறுவனின் கைகளுக்கு
கடவுளின் சாயல்
+++

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.