காவிரி ஆற்றின் கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகான சிற்றூர் அது…..
புழுதி மணற்படிந்த தெருக்களில் குழுக்குழுவாய் பிள்ளைகள் சாயுங்கால நேரத்தில் விளையாடும் அழகே தனிதான்…
வடக்கையொட்டிய மூலையில் பன்னெடுங்காலமாக நிலைகொண்டிருக்கும் ஆலமரத்தின் அருகாமையில் உள்ளது சிங்கப்பூர் சீமான் குலாம் தஸ்தகீர் வீடு.
தஸ்தகீருக்கு சிங்கப்பூரில் சொந்தமாக கடைகள் இரண்டு உள்ளன, பழகுவதற்கு எளிமையான மனிதர், செல்வபெருக்கு தலைமுறை தாண்டி இருந்தாலும், தலைக்கனம் இல்லாத எளிமைக்கு இலக்கணம் ஆனவர்.
ஊருக்கு வரும்போதெல்லாம், பள்ளிவாசலுக்கு ஏதேனும் வேலைகள் செய்து கொடுப்பார், அதோடு தன்னுடைய பால்யகால நண்பர்கள் அனைவரையும் அவர்களின் இல்லத்திற்கே சென்று சந்தித்து அவர்களோடு நட்பு பாராட்டக் கூடியவர்,
தமது பால்யகால சினேகிதர்களின் தேவைகளை ஊருக்கு வரும்முன்பே கேட்டுப் பெற்றுக்கொண்டு அதனை ஊருக்கு வந்த மறுநாளே அவர்களின் இல்லத்திற்கு சென்று கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்வார்.
அவர்வீட்டின் எதிர்முனையில்தான் அவரது பால்ய சிநேகிதர் காதர் சுல்தானின் வீடு,
காதர்சுல்தான் ஆரம்ப முதலே சற்று நொடிந்த குடும்ப பின்னனியைக் கொண்ட அறுவர் குடும்பத்தின் தலைப்பிரதிநிதி, சற்றே ஒற்றைக் கால் ஊனமானவர்,
குடும்ப வறுமையின் காரணமாக ஆளுக்கொருவராக பிரிந்து மற்றவர்கள் ஆளுக்கொரு நகர வாழ்வுக்கு இடம்பெயர்ந்தனர். ஏனோ! காதர் சுல்தானுக்கு மட்டும் தான் வாழ்ந்த பூமியை விட்டும் விலக மனம் இல்லை அப்படியாக இந்த ஊர் அவர் உள்ளத்தோடு பின்னிப் பினைந்துவிட்டது.
எனவேதான் தம்வீட்டின் திண்ணையில் சிறிய பெட்டிக்கடை வைத்துக் கொண்டு அதில் வரும் வாழ்வாதாரத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.
தஸ்தகீர் ஊருக்கு வந்ததும் முதலில் வருவது காதர் சுல்தானின் கடைக்குத் தான்…
நண்பனின் கடைக்கு வந்ததும் எப்பவும் தனக்கு பிடித்தமான கோலிசோடாவை தமது நண்பனின் கையால் உடைத்துக் குடிப்பது என்றால் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு…
ஒருவகையில் இந்த கடையை மீட்டெடுத்து வைத்துக் கொடுத்ததும் அவர்தான்.
முன்பொருநாள் தாம் ஊருக்கு வரும்போது கடை இல்லாததை கண்டு திடுக்குற்று காதர் சுல்தானின் வீட்டிற்குள் சென்று விசாரிக்க அப்போதுதான் தெரிந்தது,..
தமது மனைவியின் குடல்வால்வு அறுவை சிகிச்சைக்காக கடையிலுள்ள அனைத்து பொருட்களையும் விற்றுத்தான் ஏதோ கொஞ்சம் பணம் புரட்டி மருத்துவ சிகிச்சை செய்தார் என்பதே…
இதைக்கேட்டதும் தஸ்தகீர் காதரிடம் கடிந்துகொண்டார்…
“ஏம்பா! காதர்சுல்தான் நான்லாம் உனக்கு இல்லன்னு நெனச்சியா? எங்கிட்ட ஒருவார்த்தகூட சொல்லல!”…
காதர்சுல்தான் உடனே பதட்டமாகி…
“அப்டி இல்லப்பா! தஸ்தகீரு, ஏற்கனவே எனக்கு நீ நெறைய செஞ்சுக்கிட்டு வர்ற!, இதுவேற திடீர்னு இப்டி ஆயிடுச்சி அதான் நம்மளா எதாவது செய்வோமேன்னு, இதெல்லாம் வித்துட்டேன்பா!”
காதுகொடுத்து கேட்காதவராய் தஸ்தகீர் தொடர்ந்தார்….
”ஆமாமா!, மாசமாசம் நான் காசுபணம் தரேன் நீ சும்மா இருன்னு சொன்னாலும் நீ கேக்கமாட்டே, காலுதானே போச்சு, ஆளு நல்லா இருக்கேன்ல, நான் ஏதாவது கடகண்ணி வெச்சு பொழச்சுக்குறேன்னு சொல்லிட்டே”,
“இப்போ அதையும் வித்துட்டு குடும்பத்தோட என்ன பண்றதா உத்தேசம்”.
மென்மையாக கடிந்து கொண்டார் தஸ்தகீர்…
“நல்லவேளையா நான் ஊருக்கு வந்ததால விஷயம் தெரிஞ்சுபோச்சு இல்லன்னா நீ எங்கிட்ட சொல்லி இருக்க மாட்டேல்ல”…
எனக் கூறிக்கொண்டே வெளியில் சென்றவர்… கொஞ்ச நேரத்தில் ஒரு மஞ்சப் பையை சுற்றிக் கொண்டுவந்து காதர்சுல்தானின் கையில் திணித்தார் …
அட வேணாம்பா! தஸ்தகீரு, நான் பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்பா!…
“ இந்த பாரு காதரு வெறும் பணத்துல இல்லப்பா நம்ம நட்பு, இது நான் உனக்கு செய்ய வேண்டிய கடமை”…
“பேசாம வாங்கிக்கோ அல்லாஹ் இப்போ எனக்கு பரக்கத் செஞ்சுருக்கான் என்னோட நண்பனுக்கு கொடுக்குறேன், இன்ஷா அல்லாஹ் உனக்கு ஒருநாள் அல்லாஹ் கொடுப்பான் அப்போ திருப்பிகுடு”. என்றவர்…
அப்போது, அந்த பணத்தைக் கொண்டு நண்பனின் கடையை மீண்டும் மீட்டெடுத்துக் கொடுத்தார்.
……………………………………………………..
கோலிசோடாவை உறிஞ்சியவாறே! என்னப்பா! காதர்சுல்தான் நம்ம பொண்ணுங்களை இன்னும் காணலியே காலேஜு பஸ்சு வந்தாச்சா!
எனக்கேட்டார் தஸ்தகீர்…
“இப்போ கொஞ்ச நேரத்துல வந்துரும்பா! இப்போ எறங்கி வருங்கோ பாரு!
என சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹார்ன் சத்தத்தோடு வீட்டு வாசலில் வந்து நின்றது கல்லூரிவேன்.
“மாமா எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா?..
கேட்டவாறே வந்தாள் காதர்சுல்தான் மகள் ‘ரபியா’
பின்னாடியே தஸ்தகீர் மகள் ‘ஹலிமா’வும் அத்தாவை பார்த்ததும் விழிகள் விரிய நின்று கொண்டிருந்தாள்…
‘இப்போதான் வந்தேன் கண்ணுங்களா” காலேஜ் முடிஞ்சாச்சா! நல்லா இருக்கீங்களா?
“அல்ஹம்துலில்லாஹ்” என்றனர் இருவரும் ஒத்த குரலில்…
சிறுவயது முதலே, தஸ்தகீரையும், காதர்சுல்தானையும் போலவே அவர்களின் மகள்களான ரபியாவும், ஹலிமாவும் உற்ற தோழிகள்…
இருவரும் ஒருதாய் வயிற்றில் பிறவாத இரட்டையர்களாக எப்பவும் ஒன்றாகவே இருப்பார்கள்..
எல்லா வகுப்பிலும் இணை பிரியாது வந்தனர். பள்ளி முதல் கல்லூரி வரை இருவரும் அந்த நட்பை பேணி பாதுகாத்து வந்தனர்…
பள்ளி இறுதியாண்டில் இருவரும் ஒன்றாக தேர்ச்சியடையவே! காதர் சுல்தான் அதற்குமேல் படிக்க வைக்க சக்தி இல்லை என சொல்லிவிட்டார்,
ஆனால் தஸ்தகீர் விடாப்பிடியாக காதர் சுல்தானை சம்மதிக்க வைத்து, அவரின் சம்மதம் பெறாமலேயே இருவருக்கும் கல்லூரியில் அட்மிசன் போட்டு பணமும் கட்டிவிட்டார்….
இப்போது, இருவரும் அருகே உள்ள இஸ்லாமிய கல்லூரியில் இறுதியாண்டு படிக்கின்றனர்… இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் முடிந்துவிடும்…
வழக்கமான விசாரிப்புகள் எல்லாம் முடிந்தபின், கல்லூரி முடிந்த களைப்பில் ரபியாவும், ஹலிமாவும் விடை பெற்று வீட்டிற்குள் சென்றனர்….
தஸ்தகீர் நண்பர் காதர் சுல்தானிடம் சொன்னார்…
“என்ன காதர்சுல்தான் ‘அல்ஹம்துலில்லாஹ்’ அல்லாஹ் உதவியால ரெண்டு பேரும் நல்லவிதமா படிப்பை முடிக்கப் போறாங்க, இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே கல்யாணத்த முடிக்கனும்பா!”
தஸ்தகீர் சொல்லிவிட்டு கல்லூரி முடித்து வந்த மகளை காணச் சென்றுவிட்டார்.
அவர் சொல்லிவிட்டுப் போனதும் காதர் சுல்தானின் முகம் கவலையில் வாடியது…
“யா அல்லாஹ்!, பிள்ளை வளந்துட்டாலே!”
“இப்போ அவளுக்கு கல்யாணம் பண்ண காசுபணத்துக்கு எங்க போவேன்”…
“ரெண்டு பொண்ணுங்களும் ஒன்னாவே வளருறாங்க தஸ்தகீர் தன்னோட புள்ளைக்கு ஒடனே கல்யாணத்தை முடிக்கலாம், நான் என்ன பண்ணுவேன் எல்லாத்துக்கும் போயி தஸ்தகீர்ட்ட நிக்க கூடாது…”
இரவு முழுக்க தஸ்தகீர் சொன்னது காதில் விழுந்துகொண்டே இருந்தது காதர் சுல்தானுக்கு ….
……………………………………………………….
மாதங்கள் உருண்டோடின…
அன்று வெள்ளிக்கிழமை காலை …
கதவு தட்டும் ஓசை கேட்டது …
அப்போதுதான் முகம் கழுவி முடித்துவிட்டு கதவைத் திறந்தார் காதர்சுல்தான் …
எதிரே தஸ்தகீர் நின்று கொண்டிருந்தார்..
“என்னப்பா காதர்சுல்தான் கடைய தொறக்கலியா”
ஆச்சரியத்தில் மலர்ந்தது காதரின் மனம்,
“அட என்னப்பா! தஸ்தகீரு, திடீர்னு வந்து நிக்கிற, நீ வர்றத யாரும் சொல்லலையேப்பா”
“அட நீ வேற காதர்சுல்தான், நான் வர்றது எனக்கே தெரியாது”..,
“ரொம்ப முக்கியம் மவளோட கல்யாண வேல இல்லையா!…”
இதைக் கேட்டதும்….பரவசத்தில் ஆழ்ந்தார் காதர்சுல்தான்..
“மாஷா அல்லாஹ்”,
“புள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா எனக்கு கையும் ஓடல காலும் ஓடல தஸ்தகீரு, ரொம்ப நாளைக்கு அப்பறமா ரொம்ப சந்தோசமா இருக்கேன்…”
“பின்ன இருக்காதா… நீ என்னோட உசுருக்குசுரான நண்பனாச்சேப்பா”…
“அதான் வந்த உடனே உன்கிட்ட வந்து போட்டோவ காண்பிக்க வந்தேன் இந்தா பாரு புடிச்சிருக்கா”.
என ஒரு லெட்டர் கவரை காதர்சுல்தானின் கையில் திணித்தார்.
“அட உனக்கு புடிச்சா சரிதான்பா”!… என கவரை ஆர்வமாக பிரித்தார்…
பிரித்து பார்த்துவிட்டு ஒரு குழப்பத்தோடயே கேட்டார் தஸ்தகீரிடம் …
“என்னாப்பா தஸ்தகீரு ரெண்டு பையன்களோட போட்டோவ காண்பிக்கிறே, இதுல யாரு மாப்பிள”
காதர்சுல்தானின் தோள்மேல் கைபோட்டு சொன்னார் தஸ்தகீர்…
“அப்டிகேளு விவரமா சொல்றேன், ரெண்டாவதா பாத்தியே, அதான் என்னோட மறுமவன்…
“அப்போ முதல்ல பாத்தது” குழம்பிபோய் கேட்டார் காதர்சுல்தான்..
சற்று மெளனமாக காதர்சுல்தானின் கண்களை பார்த்துக் கொண்டே தொடர்ந்தார் தஸ்தகீர்.
“அதுதான்பா உன்னோட மறுமவன், எப்டி இருக்கார்”…
என்று சொல்லி முடிக்கவில்லை தஸ்தகீர்…
அப்படியே! ஆடி, கதிகலங்கிபோய் நின்றார் காதர்சுல்தான்…
மேலும் தொடர்ந்தார் தஸ்தகீர்…
“ரெண்டுபேரும் சிங்கப்பூர்ல உள்ள என்னோட தொழில் கூட்டாளியோட பையனுங்க…”
“நான் அங்க போறப்பல்லாம் உன்னைய பத்தி நெறைய பேசுவேன்..
“அதை கேட்டுட்டு நம்ம கூட்டாளிக்கு உன்னையும் உன் குடும்பத்தையும் புடிச்சுப் போச்சு குறிப்பா நம்ம பொண்ணுங்களை ரொம்ப புடிச்சுப் போச்சு…
“அதான் அவரோட ரெண்டாவது பையனுக்கு உன் பொண்ணையே பேசிடச் சொன்னாரு, நான் ஒன்னோட சம்மதம் இல்லாமலே சரின்னுட்டேன்…நீ மறுக்கமாட்டேல்ல!”
கைகள் நடுங்கின வார்த்தைகள் வரவில்லை காதர் சுல்தானுக்கு…
கண்கள் குளமாகி தஸ்தகீரின் கரங்களைப் பற்றியவாறே!
“அல்லாஹ் அக்பர்”
என வாய்முழுதும் உரைக்க திண்ணையில் அமர்ந்துவிட்டார்…
தஸ்தகீரின் இருகைகளையும் தன்னோட முகத்தில் ஒத்திக்கொண்டு.. கட்டிக்கொண்டு அழுதார்..
“உனக்கு நான் அப்டி என்ன பண்ணிட்டேன் தஸ்தகீரு ஏன் இப்டி எம்மேல அன்பை பொழியிற…”
“யாஅல்லாஹ் என்னோட தஸ்தகீருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ!”
தேம்பி அழுதார் காதர் சுல்தான்…
அமைதியாக அவர் அருகே அமர்ந்து தஸ்தகீர் சொன்னார்…
“சந்தோசமா இருக்கற நேரத்துல ஏன் கண் கலங்குற காதர்சுல்தான்”..,
“நீ வேற நான் வேறயா நான் எப்பவும் இருக்கறதுல்ல”..,
“எனக்கும் ஒன்னவிட்டா கூடப் பிறந்தவங்க யாருப்பா இருக்கா…”
“எப்போ! என்னைப்போல உனக்கும் பொம்பள புள்ள பொறந்துச்சோ!”..
“அப்பவே! தீர்மானம் பண்ணிட்டேன்பா”..,
“எம்பொண்ணு போலவே ஒம் பொண்ணையும் ஒன்னா வளக்கனும்னு!…”
“எம் பொண்ணோட ஒவ்வொரு சந்தோசமும் ஒம்பொண்ணுக்கும் கெடைக்கனும்னு அந்த அல்லாஹ்கிட்ட எப்பவும் துஆ கேட்பேன்.. “ “அல்ஹம்துலில்லாஹ்’ வல்ல ரஹ்மான் அதை நிறைவேத்தி கொடுத்துக் கிட்டே வர்றான்…”
தஸ்தகீரின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்க, கேட்க!…
காதர் சுல்தானின் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர்த்துளிகள்…
தஸ்தகீரின் கரங்களில் விழுந்து…
காதர்சுல்தானின் காணிக்கையானது…..
++
பாகை இறையடியான்
நிலத்தின் பல்வேறு சமூக கலப்புகளுக்குள் கலந்திருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாய், மானுட வம்சத்தின் பல்வேறு நிகழ் கலவைகளை ஒரு கலசத்திற்குள் கடைந்தெடுத்து அதில் என் மொழியாடலில் சொற்கூட்டி, சுவை கலந்து தங்கள் கண்ணுக்குள் பரிமாறி நெஞ்சுக்குள் செரிமானமின்றி நிறைந்து நிற்க படைப்புகளை பரிமாறுகிறேன்.
இயற்பெயர் அப்துல் ரஹ்மான் தந்தை பெயர் பஷீர் அஹமது (ஆசிரியர்) நாகை மாவட்டம் பாக்கம் கோட்டூர் எனும் சிற்றூரில் பிறந்தேன். தமிழ்மேலும், பிறந்த தலத்தின் மேலும் கொண்ட பிரியத்தினால் எனது பெயரை தமிழ்ப் படுத்தியும், எமது ஊரின் பெயரை சுருக்கியும் பாகை. இறையடியான் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களிலும், இதர மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
எனது சிறுகதைகள், குறுங்கதைகள், கட்டுரைகள் என விகடன் இணையத்தளம் சுமார் 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதிலிபி இணையத்தளம் எனது 100’க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளது. பிரபஞ்சம் முழுக்க பரவி நிற்கும் மானுட சமூகத்தின் படிநிலைகளுக்குள் கலந்து நிற்கும் உணர்வு நிலைகளையும், சங்கதிகளையும் சகல மனிதர்க்கும் கடத்துவதே எனது படைப்புகள். பாசாங்குகளற்ற இந்த தமிழ் பசும் நிலத்தின் பகடைகளான மானிட குலத்தில் உலவும் சங்கதிகளும், சங்கேதங்களும், சம்பவங்களென எனது படைப்பில் தழைத்து துளிர்த்து நின்று, இந்த பகடைகளும், அவர்தம் பகடிகளும், மகுடிகளாய் மாறி வாசக நெஞ்சை கட்டுறச் செய்வதோடு, வேரற்ற மற்றும் வேருற்று கிளை பரப்பி நின்றாடும் மானுட சமூக கூட்டுக்குள் அசைந்தாடும் பல்வேறு படிநிலைகளை பேனா முனைக்குள் கடத்த முயலும் சிறு முயற்சியே எனது படைப்புகள்