(கொரிய நாட்டுப்புறக் கதை)

ஒரு காலத்தில் வசதியான குடும்பம் ஒன்றில், கதைகளை மிகவும் விரும்புகிற ஒரு பையன் இருந்தான். எனக்கு இக் கதையைச் சொன்னவர் அவனுக்குப் பெயர் சொல்லவில்லை. நாம் அவனது பெயர் பயாங் ஹோ என்று வைத்துக்கொள்வோம். அவன் தனது தாத்தா – பாட்டி, பெற்றோர், வீட்டு வேலைக்காரர்கள் ஆகியோரிடம் எப்போதும் கதை சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்துகொண்டிருப்பான். புதிய நபர்கள் யாரைப் பார்த்தாலும், “எனக்குப் புதிய, வித்தியாசமான ஒரு கதையைச் சொல்லுங்கள்!” என்று கேட்பான்.

     ஒவ்வொருவரும் சொல்கிற கதைகளை அவன் ஒரு சிறிய பையில் சேகரித்து வந்தான். எப்போதும் அந்தப் பையைத் தன்னுடனே வைத்திருப்பான். ஏராளமான கதைகளை அவன் கேட்டிருந்ததால் அந்தப் பை விரைவிலேயே நிறைந்துவிட்டது. இனிமேல் அதில் கதைகளைப் போடுவதற்கு இடமே இல்லை. அவன் அந்தக் கதைகள் எதுவும் பைக்குள் இருந்து தப்பித்துவிடாதபடி, அந்தப் பையின் வாயை ஒரு கயிறால் இறுக்கமாகக் கட்டி வைத்துக்கொண்டான்.

பயாங் ஹோ வளர்ந்து இளைஞனாக ஆனான். அவனுக்குத் திருமண ஏற்பாடாயிற்று. திருமணத்துக்கு முதல் நாள் உற்றார் உறவினர்கள் கூடியிருந்தனர். குடும்பத்தினர் அவர்களை வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தனர். 

அந்த வீட்டில் விசுவாசமான ஒரு முதிய வேலைக்காரர் இருந்தார். பயாங் ஹோ சிறுவனாக இருந்தபோதிலிருந்தே அங்கு வேலை செய்துகொண்டிருப்பவர் அவர். வீட்டில் உள்ள அனைவரும் இளம் எஜமானனின் திருமணத்திற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த முதிய வேலைக்காரர் சமையற்கட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது யாரோ முணுமுணுக்கும் சத்தம் அவரது காதில் விழுந்தது. அதை கவனமாகக் கேட்டார். அந்தக் குரல் சுவரில் பழைய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பழைய பையில் இருந்து வருவது தெரிந்தது. பயாங் ஹோ சிறு வயதில் சேர்த்து வைத்திருந்த கதைப் பைதான் அது. அவன் பெரியவனாக ஆன பிறகு அதை மறந்திருந்தான். ஆகவே, அது வருடக் கணக்காக இந்த சமையற்கட்டின் சுவரில்தான் தொங்கிக்கொண்டிருந்தது.

அதிலிருந்து வரும் முணுமுணுப்பு வேலைக்காரர் காதில் தெளிவாக விழுந்தது.

“கவனமாக கேளுங்கள்!” என்றது குரல். “பயாங் ஹோவின் திருமணம் நாளை நடக்க இருக்கிறது. அவன் நீண்ட காலமாக நம்மை இந்தப் பைபில், அடைத்து வைத்திருக்கிறான். பத்து வருடங்களாக நாம் இதற்குள் சிறைப்பட்டு, மூச்சு முட்டத் துன்புற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவன் வெளியே உல்லாசமாக சுற்றித் திரிந்து, சுகமாக வாழ்ந்துவந்தான். இப்போது திருமணமும் செய்யப்போகிறான். அவனை நாம் சும்மா விடக் கூடாது. எப்படியாவது பழி வாங்கியே ஆக வேண்டும்!”

“ஆமாம். நானும் இதையேதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றது இன்னொரு குரல். “நாளைக்கு பயாங் ஹோ திருமணத்துக்காகக் குதிரையில் செல்வான். நான் அப்போது சிகப்பு பெர்ரிப் பழங்களாக மாறி, சாலையோரத்தில அவனுக்காகக் காத்துக்கொண்டிருப்பேன். நான் விஷக் கனி என்பது அவனுக்குத் தெரியாது. எனது அழகைக் கண்டு அவன் என்னைச் சாப்பிட ஆசைப்படுவான். அப்படி அவன் என்னைச் சாப்பிட்டதும் விஷத்தால் இறந்துவிடுவான்!”

“அப்படி அவன் பெர்ரிப் பழங்களைச் சாப்பிட்டும் சாகவில்லை என்றால் நான் அவனைக் கொல்வேன்!” என்றது மூன்றாவது குரல். “அவன் வரும் வழியில் நான் ஒரு தெளிந்த நீரூற்றாகப் பொங்கி ஓடிக்கொண்டிருப்பேன். அவன் என்னைப் பார்த்ததும் தாகம் எடுத்து, பருக வருவான். அப்போது அவனை எனக்குள் இழுத்து மூழ்கடித்துக் கொன்றுவிடுவேன்!”

நான்காவது குரல் சொன்னது: ‘உங்கள் இருவரின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டால் நான் அவனுக்கு முடிவு கட்டுவேன். நான் உரு மாறப் போவதில்லை. குதிரையின் உடலுக்குள் புகுந்து, அதை சண்டித்தனம் செய்யவைத்து, வழி மாற்றி, மலை உச்சிக்கு அவனைக் கொண்டு சென்று, அங்கிருந்து அதல பாதாளத்தில் தள்ளி விடுவேன். நிச்சயமாக அவனால் உயிர்பிழைக்க இயலாது! அவனது சடலம் கூட கிடைக்காது!”

அடுத்ததாக ஐந்தாவது குரல் முணுமுணுத்தது: “உங்களது முயற்சிகள் எதுவுமே நிறைவேறவில்லை என்றால், நான் நூறு விஷப் பாம்புகளாக மாறி, மணமகனின் கட்டிலில் மெத்தையடியே ஒளிந்து காத்திருப்பேன். மணமகனும் மணமகளும் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர்கள் இருவரையுமே கடித்து, மரணலோகத்துக்கு அனுப்பிவிடுவேன்!”

வேலைக்காரர் அதைக் கேட்டுப் பதறினார். தனது இளம் எஜமானருக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என விரும்பினார். அதனால் மறு நாள் காலையில் மணமகனின் குதிரையைத் தானே ஓட்டிச் செல்வது என முடிவு செய்துகொண்டார்.

மறு நாள் அதிகாலையிலிருந்தே திருமண வைபவங்கள் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தன. மணமகள் வீட்டிற்கு மணமகன் செல்வதற்கான ஆயத்தம் நடந்தது. பகட்டான திருமண ஆடை உடுத்தி மணமகன் வீட்டை விட்டு வெளியே வந்து குதிரையில் ஏறச் சென்றான். அப்போது அந்த வேலைக்காரர் ஓடிவந்து குதிரையில் தொற்றி ஏறிக்கொண்டார். தானே குதிரை ஓட்டிச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மணமகனின் தந்தையான முதிய எஜமானர், “உனக்கு வேறு வேலை இருக்கிறது. நீ அவற்றைச் செய்!” என்றார்.

“இன்று ஒரு நாள் மட்டும் எனது அந்த வேலையிலிருந்து ஓய்வு கொடுங்கள். இளம் எஜமானருக்குக் குதிரையோட்டியாக நானே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு அனுமதி தாருங்கள்!” என்றார் அவர்.

விசுவாசம் மிக்கவரும், நீண்ட கால வேலைக்காரருமான அவரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் முதிய எஜமானர் சம்மதித்தார்.

அவ்வாறு வேலைக்காரர் குதிரை ஓட்ட, அவருக்குப் பின்னே மணமகன் அமர்ந்திருக்க, மணமகள் வீட்டை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

செல்லும் வழியில் சாலையோரத்தில் பிரகாசமான சிவந்த பெர்ரிப் பழங்கள் இருப்பதைக் கண்டு மணமகன், “குதிரையை நிறுத்துங்கள். அந்த பெர்ரிப் பழங்களில் சாறு நிரம்பியதாக உள்ள பெரிய பழங்கள் சிலவற்றை எனக்காகப் பறித்து வாருங்கள்!” என்றான்.

வேலைக்காரர் குதிரையை நிறுத்தாததோடு, “பெர்ரிப் பழங்கள்தானே! அவை எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். சற்றுப் பொறுமையாக இருங்கள். உங்களுக்கு இதைவிடவும் சிறந்த பெர்ரிப் பழங்களை வழியில் பறித்துத் தருகிறேன்” என்றபடியே குதிரையைத் தூண்டி வேகமாக ஓடவிட்டார்.

சற்று நேரத்தில் குமுளி பொங்கும் நீரூற்று தென்பட்டது. அதன் தெளித்த நீரைக் கண்ட பயாங் ஹோ, “குதிரையை நிறுத்துங்கள். எனக்கு தாகமாக இருக்கிறது. நீர் பருகிவிட்டுச் செல்லலாம்” என்றான்.

ஆனால் வேலைக்காரர் அதையும் செவிமடுக்கவில்லை. “நல்ல மர நிழலில் நின்றால் உங்களுடைய தாகம் தணிந்துவிடும்” என்றபடி குதிரையை உதைத்து இன்னும் வேகமாக ஓட்டிச் சென்றார்.

அவர் தனது சொல்லைக் கேளாமல் தட்டியது மணமகனுக்கு அதிருப்தி உண்டாக்கியது. வேலைக்காரர் அதைக் கண்டு கொள்ளவில்லை அவர் குதிரையை விரட்டிச் செல்வதிலேயே கவனமாக இருந்தார்.

குதிரை சண்டித்தனம் செய்து வழி மாறவும், மலை உச்சிக்குக் கொண்டு செல்லவும் முற்பட்டது. அவர் தன்னிடமிருந்த சாட்டையால் அதை அடித்தும், கூரிய தார் முள்ளால் குத்தியும், தன் வழிக்குக் கொண்டுவந்தார்.

விரைவில் அவர்கள் மணமகள் இல்லத்தை அடைந்தனர். அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. திருமணம் இனிதே நடந்து பயாங் ஹோ பத்திரமாக வீடு திரும்பினான்.

இரவில் மணமக்கள் படுக்கைக்குச் சென்றனர். அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் அறைக்குள் சென்று அவர்களைக் காப்பது எப்படி என்று பரிதவித்தபடி வேலைக்காரர் காத்திருந்தார். மணமக்கள் உறங்கியது தெரிந்ததும் அவர் துணிந்து கதவைத் திறந்து உள்ளே பிரவேசித்தார். அதைக் கண்டு விழிப்புற்ற மணமக்கள் இருவரும் திகைத்தனர்.

“என்ன இது? இப்போது எதற்காக எங்கள் படுக்கையறைக்குள் வந்திருக்கிறீர்கள்?” என்று கோபத்தோடு கேட்டான் பயாங் ஹோ.

“தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உடனடியாக இப்போது இருவரும் எழுந்து வெளியே செல்லுங்கள். உங்கள் படுக்கையடியே ஆபத்து!” என்று அவர் அவசரப்படுத்தினார்.

அவர்களும் துரிதமாக அங்கிருந்து வெளியேறினர். வேலைக்காரர் படுக்கை மீது இருந்த மெத்தையை விலக்கியதும் அதன் அடியேயிருந்து விஷப் பாம்புகள் வெளிப்பட்டன. தன்னிடம் இருந்த வாளால் அவர் அவற்றை வெட்டினார். நூறு பாம்புகள் இருந்ததால் உடனடியாக அவரால் அவற்றைக் கொல்ல இயலவில்லை. அவை அங்குமிங்கும் ஊர்ந்து செல்லவும், அவர் மீது பாய்ந்து கொத்தவும் முற்பட்டன. அவர் ஆவேசத்துடன் பைத்தியம் போலக் கத்தியபடி வெறி கொண்டு சுழன்று சுழன்று அவற்றை வெட்டினார். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் சத்தம் கேட்டு விழிப்புற்று அங்கு வந்து, நடப்பதைக் கண்டு மிரண்டனர். சற்று நேரத்தில் அந்தப் பாம்புகள் அனைத்தும் வேலைக்காரரின் வாளுக்கு இரையாகி மடிந்தன.

“இத்தனை பாம்புகள் இங்கே எப்படி வந்தன?” முதிய எஜமானர் வினவினார்.

வேலைக்காரர் கதைகளின் மூட்டையை எடுத்து வந்து காண்பித்து, “இதுதான் அவ்வளவுக்கும் காரணம்” என்று கூறி, நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார்.

அதன் பிறகு பயாங் ஹோ தனது தவறை உணர்ந்து, கதை மூட்டையை அவிழ்த்துவிட்டான். விடுபட்ட கதைகள் யாவும் அங்கிருந்து எட்டுத் திக்கிலும் பரவிச் சென்றன.

கேட்கும் கதைகளை ஒருவர் தனக்குள்ளேயே வைத்திருந்தால் இத்தகைய ஆபத்துகள் வரும். எனவேதான் அவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதன் மூலம் கதைகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிப் பரவி சென்றுகொண்டே இருக்கும். அதனால் கதைகள் எங்கும் சிறைப்படாது. அவற்றுக்கு நம்மைப் பழி வாங்க வேண்டும் என்கிற வஞ்சமும் ஏற்படாது. நாமும் புதுப் புதுக் கதைகள் கேட்டும் சொல்லியும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

00

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *