கருப்பி அப்படி தான் அவள எல்லாரும் கூப்பிடுவாங்க. பெத்தவங்க வச்ச பேரவிட சிலசமயம் பட்டபேருதான் தங்கிப்போகும் சிலருக்கு. அந்த வகைல முத்தரசி பேரு போய் கருப்பி தான் தங்குச்சு அவளுக்கு.
வாட்டசாட்டமான ஆளு தொட்டு பொட்டு வைக்குற அளவுக்கு கண்ணங்கரு கருப்புனாலும் முகத்துல ஒரு லட்சணம் இருக்கும் அவளுக்கு. அந்த வட்டமான முகத்துல கண்ணு காது மூக்குலாம் அதுஅது இடத்துல அம்சமா பொருந்திருக்கும். இந்த மனசபயலுங்களுக்கு அடுத்தவன் குறைய குத்தி காட்டி குனியவைக்கிறதுல அப்படி ஒரு ஆனந்தம். அதனால தான் அம்புட்டு லட்சணமா இருந்தாலும் அவள கருப்பினு தான் கூப்புடுவாக. அவ பேர அவள விட அழகா அரசினு சொல்லி வாய்நிறைய கூப்பிடுவது அவ மாமன் மூக்கையன் ஒருத்தன் தான்.
சொந்த தாய்மனுக்கு தான் வாக்கப்பட்டா கருப்பி. அஞ்சு பொம்பள பிள்ளைங்கூட பொறந்த மூக்கையனுக்கு அவுகள கரைசேத்து தனக்கொரு கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள வயசு கூடிபோச்சு. வயச காரணம் காட்டி கல்யாணத்துக்கு பெண்ணு அமையாம போகவும் கருப்பியோட ஆத்தா தான் எம்பெண்ணு இருக்கையில நீ எதுக்குல இப்படி அலையுறனு சொல்லி கருப்பிய கட்டி வச்சா. கருப்பிய கட்டிக்கைல மூக்கனுக்கு முப்பத்தஞ்சு ஆகிடுச்சு. கருப்பிக்கோ பதினேழு வயசுதான். வயசு மட்டும் தான் கூடகொறைய இருந்துச்சே தவிர அன்புக்கும் பாசத்துக்கும் குறைவில்லாம குடும்பம் நடுத்துனாக.
நல்லவனத்தான் ஆண்டவன் சோதிப்பாங்குற மாதிரி கருப்பியதான் ஆண்டவன் சோதிச்சான். ஆசை ஆசையா கட்டுன மாமனாலா புத்தரபாக்கியம் குடுக்க முடியல. பாக்குற ஆளெல்லாம் விசேஷம் உண்டானு கேக்கைல ஆரம்பத்துல அழுதவ போகப்போக பழகிட்டா.
கருப்பியோட ஊரவிட்டு பல மைலுக்கு அப்பால இருந்த அந்த பட்டவராயன் கோவிலுல திருவிழா வந்துச்சு. கோவிலுனு கூட சொல்ல முடியாது ஒரே ஒரு பூடம் மட்டும் தான் இருக்கும். சாமின்னு காட்டிக்கிறதுக்காக அந்த பூடத்து இடுப்புல ஒரு வேஷ்டி இருக்கும். பூடத்த சுத்தி நாளுபக்கமும் இடுப்பளவு மதில் சுவர கட்டி மழை வந்தா மக்கள் ஒதுங்க அதுக்கு மேல ஒரு கூரை போட்டுருப்பாக அம்புட்டு தான். திருவிழாவுக்கு மட்டும் தான் ஊரு சனம் அங்க கூடும். மத்த நேரம் பட்டவராயனுக்கு துணை சுத்தி இருக்குற இலந்த மரந்தான்.
வெள்ளவேஷ்டியும் சட்டையுமா மூக்கையனும், தீப்பட்டி கலர் சேலையும், பட்டு ரவிக்கையுமா கருப்பியும் அம்சமா கிளம்பி திருவிழாக்கு வந்தனர்.
’என்ன கருப்பி இப்பதான் வாரியாக்கும்’ என்று கேட்டபடியே கருப்பியை தாண்டி சென்றாள் மாரி.
’ஆமாக்கா இப்ப தான் வாரேன் மாடுகண்ண தொழுவுல அடச்சி தண்ணி வச்சுட்டு வர நேரமாச்சு’ சொல்லிய படியே கோவிலை நோக்கி சென்றாள்.
”அரசி நீ உள்ள போ நா இதோ வந்துடுறேன்”.
”எங்க போற மாமா”
”நீ போ புள்ள நா வாரேன்”
”நீ எங்க போறேனு எனக்கு தெரியும் சாமியே கும்படல அதுக்குள்ள உனக்கு சாராயம் கேக்குதோ”.
”அட எவடி இவ நா ஒதுங்கலான்னு போன நீ என்னமோ. சாராயங்குடிக்க போறேனு சொல்லுறவ. சாமி கும்பிடதான் வந்துருக்கோம்னு எனக்கும் தெரியும். நீ அப்படி ஒரு அஞ்சு நிமிசம் நில்லு. நா ஒதுக்கிட்டு வாறேன் பஸ்சுல ஏறுனதுல இருந்து அடக்கிட்டு இருக்கேன் இவ வேற”.
”சரி சரி சீக்கிரம் வா மாமா நா அங்கிட்டு நிக்கேன்”.
மண்டைய பொழக்குற வெயிலுக்கு இதமா இலந்த மர பழ வாசம் காத்துல வீச, சப்பாத்திகல்லி பூ கண்ணுக்கு குளிரூட்ட வேடிக்க பாத்தப்படியே நின்னுகிட்டு இருந்தா கருப்பி.
மூக்கையன் இயற்கை அழைப்ப முடிச்சி வரவும். ’நல்லா கை கால அலம்புனிய மாமா’.
”ஆமா இந்த பொட்டக்காட்டுல உங்கப்ப தான தண்ணிதொட்டி கட்டிவச்சிருக்கான். நா போய் கழுவ”.
”ஏன் என்னைய உனக்கு கட்டிவச்சது காணாதாக்கும்.. இதுல இதுவேற கட்டிவைக்கனுமோ”.
”நல்லா பேச படிச்சிட்ட புள்ள. கண்ணாலம் ஆன புதுசுல பேசவே காசு கேட்டவளுக்கு இப்ப பேச்ச நிப்பாட்ட காசில்ல குடுக்கவேண்டி இருக்கு:.
”ஆமா ஆமா இவரு அப்படியே குடுத்துட்டாலும் பேசாம வா மாமா”.
மூக்கையன் சொன்ன மாதிரி கருப்பி கல்யாணத்தப்ப இப்படி பேசுறவ கிடையாது. மூக்கையன பாத்தாலே சொவத்துல ஒட்டுன பல்லியாட்டம் ஒட்டிக்கிட்டு நிப்பா சேந்தாப்புல நாளு வார்த்த பேச சொன்ன தந்தியடிப்பா.
ஊரெல்லாம் பெண்னு தேடியும் கிடைக்கலனதும் அக்காமாருலாம் சேந்து தம்பிக்கு கருப்பிய கட்டிவைக்க முடிவு பண்ணுனாங்க. ஆனா மூக்கையனுக்கோ கொஞ்சம் தயக்கம் தான் ஏனா நாலாங்கிளாசு வர படிச்சவ கருப்பி. மூக்கையனுக்கு பள்ளிக்கூட வாசமே கிடையாது. வயசு வித்தியசமோ மலபோல இருந்துச்சு.
நம்ம கருப்பிக்கு வேற நல்ல மாப்பிள பாக்கலானு அக்காங்ககிட்ட சொல்லி பாத்தான். ஆனா அவுக அதுக்கு ஒத்துவரல.
எதுக்கும் ஒரு வார்த்த கருப்பிக்கிட்ட கேளுனு சொன்னதுக்கும் அந்த கழுதைக்கு என்னத்தெரியும்னு சொல்லி வாய அடச்சுபுட்டாங்க அக்காளுங்கலாம் சேந்து.
மூக்கையனுக்கு மனசு கேக்கல. யாருக்கும் தெரியாம கருப்பிக்கிட்ட சம்மதமானு கேக்க நினச்சான். அதுக்கு ஏத்தாப்புல அன்னைக்கு அவளும் தனியா பம்புசெட்டுக்கு வரவும் வழிமறிச்சான். என்ன ஏதுன்னு விவரம் சொல்லுறதுக்குள்ள அழுது ஆர்பாட்டம் பண்ணிபுட்டா புண்ணியவதி. அவன பாத்தாலே பயந்து அப்படி அழுவா. அவள சொல்லியும் குத்தமில்ல பாக்க நல்ல ஐய்யனார் சிலையாட்டம் உயரமா, வாட்ட சாட்டமான தேகத்தோட, வெட்டருவா மாதிரி பெரிய மீசையுமா இருக்குறவன கருவப்பிள்ள செடி ஒசரமே வளந்த நம்ம கருப்பி பயப்படாமா பாத்தா அதுவே அதிசயம் தான்.
”ஏ புள்ள அழுகாத! நா இப்ப அப்டி என்ன கேட்டுபுட்டேன்.. என்னக்கட்டிக்க சம்மதமானு தான கேட்டேன். அதுக்கு எதுக்கு அழுகுறவ” அப்படினு கட்டக்குரல்ல மூக்கையன் கேக்கவும் இன்னம் அழுகைய கூட்டுனா. இது சரிப்பட்டு வராது ஆத்தா நீ போனு வழி காட்டிட்டு தேமேனு பம்புசெட்டு சுவத்துல உட்காந்தான் மூக்கையன்.
கல்யாணம் நெருங்கி வந்துச்சு ரோஸ்கலர் பட்டு அதுக்கு அடர் பச்ச கலர் பார்டரு, பச்சகலர் ரவிக்கையும், ஆத்தாவோட தாலி மவனுக்கு தான் சொந்தம்னு அக்காமாரு கட்டாயப்படுத்தி குடுத்த மாங்கல்யத்யையும் போட்டு நாலுகிராம்ல தாலினு ஒன்னொன்னும் பாத்து பாத்து செஞ்சான் மூக்கையன். நாளும் பொழுதும் போச்சே தவிர கருப்பி மட்டும் பேசுறமாதிரி இல்ல. தேதி நெருங்க நெருங்க மூக்கையனுக்கு கல்யாண ஆசையும் கருப்பிக்கு பிடிக்கலையோனு பயம் கூட. அதுக்கு ஒரு முடிவு கட்டுறாப்புல வந்தது அந்த சம்பவம்.
அன்னைக்கு வழக்கம்போல பம்புசெட்டுக்கு போனவன் வழுக்கி விழுந்துட்டான். நல்ல அடி காலு பிசகுனதுல இனி பழையமாதிரி சேருறது கஷ்டம்னு வைத்தியர் சொல்ல மொத்த குடும்பத்துக்கும் இடி உழுந்தாப்புல போச்சு.
”என்ன வைத்தியரே இப்படி சொல்லுறீங்க.. இன்னும் அஞ்சு நாளுல கல்யாணம் வேற இருக்கு”.
”நா உள்ளத தான் சொன்னேம்மா. காலு பழைய மாதிர ஒன்னு சேரலனா நடக்குறதே கஷ்டமாயிடும் பாத்துக்கோங்க”.
”கல்யாணமே வேண்டானு சொன்னேன். கேக்காம நீங்க தான் ஏற்பாடு பண்ணுனீங்க. இப்ப பாருங்க இதுக்கு மேல எல்லாத்தையும் நிறுத்திடுக்கா. காலு மட்டும் பழையமாதரி சேரலனா பாவம் அரசி வாழ்க்க என்னால நாசமாக்கூடாது”னு பிடிவாதமாக சொன்னான் மூக்கையன்.
அக்காக்களுக்கும் தம்பி சொல்வது சரினு தோன. என்ன பண்ணனு முழிச்சிட்டு நின்னாங்க.
அப்ப மூக்கு வெடைக்க அங்க வந்து நின்னா கருப்பி.
’ஏ மாமா என்ன கட்ட மாட்டேனு சொன்ன’னு அருள்வாக்கு சொல்லுறவள போல கேக்க ஆடித்தான் போனா மூக்கையன்.
அவனுக்கு பேசவே இடங்குடுக்காம அவளே பேசுனா. ’சொல்லு மாமா ஏ கல்யாணத்த நிறுத்த சொன்ன, என்ன பிடிக்கலையா’னு கேக்கைல உன்னதாண்டி பிடிக்கும்னு சொல்லனும் போல இருந்தது மூக்கையனுக்கு. ஆனாலும் அவனோட நிலைமைய நெனச்சுக்கிட்டு அவகிட்ட சொன்னான், ’காலில்லாதவனுக்கு வாக்கப்பட்டு என்ன சொகத்த காணமுடியும் அரசி. நீ வேற யாரயாது கட்டிக்கோனு’
அம்புட்டு தான் பத்தரகாளியாட்டம் கட்டுனா உன்னதான் கட்டுவேன் இல்ல கட்டைல போகுற வர நா இப்படியே இருக்குறேனு தீர்க்கமா சொன்னவள பாத்து ஒரு நிமிசம் ஆடித்தான் போனா ஆம்பள.
கருப்பி சொல்லக்கேட்ட அவ ஆத்தாளும், சித்திக்களுக்கும் சந்தோஷம் தாங்கல. தம்பிக்கு ஒரு வழியா கல்யாணத்த முடிச்சு வச்சாங்க.
மூக்கையனுக்கு சொந்தமா நாலு பசுமாடு கிடந்தது. அதுகள பாத்துக்குறதுல தொடங்கி அவனுக்கு எல்லா விதத்துலயும் ஒத்தாசையா இருந்தா கருப்பி. மூக்கையனோட காலும் கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு பழயமாதிரி. அவனும் வேலைக்கு போக ஆரம்பிச்சான். ரெண்டுபேரு பொழப்பும் நல்லாதான் போச்சு குழந்த இல்லைங்கிறத தவிர. அந்த வருத்தம் அவங்களுக்கும் இருந்துச்சு.
இராத்திரில கோரப்பாய விரிச்சி படுக்கைல படுத்தா கருப்பி பக்கத்துல படுத்த மூக்கையன் கிட்ட அவதான் பேச்சுக்கொடுத்தா..
”மாமா நம்ம பேச்சியக்கா மவ வளருக்கு நாளான்னைக்கு வளைகாப்பு வச்சிருக்கு. நீ ஒரு எட்டு போயிட்டு வந்துடுறியா மாமா”.
”ஏ புள்ள அது பொம்பளைங்க விசேசம். அதுல நான் போயி என்ன பண்ண போறேன். நீயே போய்யிடு வா புள்ள”.
”மாமா நா போனா ஆளாளுக்கு கேள்வி கேட்பாங்க. பதில் சொல்லி மாளாது நீயே போ மாமா”.
”எங்கிட்ட மட்டும் கேக்க மாட்டாங்களா என்ன. அதுக்கு என்ன பண்ண முடியும் சொல்லு. எல்லாம் நடக்கும் போது தானா நடக்கும். ஆண்டவன் நமக்கு எப்பனு விதிச்சிருக்கானோ அப்ப கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகனும். நீ எதையும் யோசிக்காம போயிட்டு வா புள்ள”
மூக்கையன் இப்படி சொல்லவும் பெருமூச்சுவிட்டபடி மாமனுக்கு முதுகாட்டி படுத்தா கருப்பி. அவ அப்படி படுத்தா கோவமா இருக்கானு அர்த்தம். ஆறுவருச மணவாழ்க்கைல மூக்கையன் கண்டுபிடிப்பு இது.
கல்யாணமான புதுசுல கட்டுலு வாங்கவானு கேட்ட மூக்கையன்கிட்ட ’வேணா மாமா பாயில படுக்குறது தான் உடம்புக்கு நல்லது. அது மட்டுமில்ல ஒத்த பாயில இப்படி உன்ன இடிச்சுக்கிட்டு படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும். பகல்ல என்ன சண்ட சச்சரவு இருந்தாலும் இராத்திரி இப்படி ஒத்த பாயில ஒரசிக்கிட்டு படுத்த எப்பேர்பட்ட கோவமும் காணாம போயிடும் மாமா. அதனால கட்டில்லாம் வேணாம்’னு சொல்லுவா.
என்னக்கோவம் வந்தாளும் திரும்பி படுப்பாளே தவிர தள்ளி போனதில்ல கருப்பி.
தாம்பத்தியம்னா உறவு வச்சிக்கிடுறதுனு தான் இங்க நிறைய பேரு நினைக்காக. கல்யாணம் ஆனா புதுசுல ஒட்டிகிட்டு படுக்குறவங்க அப்பறம் குழந்தைகளுக்காக தள்ளிப்படுக்கவும் விரிசல் விழ ஆரம்பிக்குது அந்த உறவுல. அப்பறம் வயசுபோயிட்டுனு சொல்லி ஒரேடியா தள்ளி படுப்பாக. ஆனா இப்பவும் சில பெரிசுங்கள பாருங்க ரொம்ப அந்நியேனியமா இருப்பாக. யார பத்தியும் எத பத்தியும் கவலபடாம. அது தான் உண்மையான தாம்பத்திய வாழ்க்கை. வெறும் உடம்புசுகம் மட்டுமில்ல. உரசுனாப்புல படுத்துக்கிட்டு அன்னைய கதைய பேசிக்கிட்டே கண் அசருற வாழ்க்கைய இங்க எத்தன பேரு வாழுறாக சொல்லுங்க. அந்த வகைல கருப்பி அத நல்ல புரிஞ்சி வச்சிக்கிட்ட அவ திரும்பி படுத்த அவள தன் பக்கம் திருப்ப மூக்கையன் வெற்றிக்கொடிக்கட்டு படத்துல வர்ர கருப்பு தான் எனக்கு புடிச்சகலரு பாட்ட பாட ஆரம்பிச்சிடுவான். பாட்ட கேட்ட கருப்பியும் சிரிச்சிக்கிட்டே மாமன கட்டிபுடிச்சிக்கிடுவா. அம்புட்டு தான் அவ கோவத்துக்கும் ஆயுசு.
ஐஸ் வண்டிக்காரன் அடிக்கிற மணி சத்தத்த கேட்டதும் கருப்பி மாமன பாக்க அந்த பார்வைல என்ன புரிஞ்சதோ ஐஸ்காரன் கிட்ட பால் ஐச வாங்கியாந்து கருப்பிக்கிட்ட கொடுத்தான். மணி பன்னிரெண்ட தொடவும் உச்சிக்கால பூஜைய தொடங்கினாங்க கோவில்ல.
மேள சத்தத்துக்கும் நாயனத்துக்கும் நண்டுசிண்டுலாம் ஒருபக்கம் ஆட. சாமி வந்து ஆடுனவுக மறுபக்கம் ஆட, பட்டவராயன் கோவில் திருவிழா கலகட்ட ஆரம்பிச்சது.
ஐச சப்பிக்கிட்டே வேடிக்க பாத்துட்டு இருந்தவள கைக்காட்டி கூப்பிட்டாரு சாமியாடுன மாடசாமி தாத்தா.
தன்னத்தான் கூப்பிடுறாங்கனதும் குச்சிய தூரப்போட்டுட்டு முந்தானயாள வாய தொடச்சபடியே ஓடினா கருப்பி.
அம்மாக்கிட்ட பிடிச்ச பொருளுக்காக மன்றாடுற பிள்ளைக கண்ணுல இருக்குமே ஒரு ஏக்கம். அப்படி ஒரு ஏக்கத்தோட கருப்பி அவர பாக்க சொதப்புனு அவ மூஞ்சில தீர்த்த தண்ணிய தெளிச்சு திண்ணுறு பூசுச்சுசாமி.
’உங்க கவலையெல்லாம் தீரப்போகுது இன்னையோட. நீ கேட்டத நா கொடுத்தா எனக்கு நீ என்ன செய்வ?’னு கேட்டுது சாமி.
கருப்பியும் புரிஞ்சவளாட்டம் ’வருசம் தவறாம வந்து சுருட்ட , எள்ளு புண்ணாக்கு,சாராயம்,அவல்பொரியோட உனக்கு நான் படையல் போடுறேன்’னு சொன்னா.
’நல்லது நீ கேட்டது கிடைக்கும் கவலபடமா போ’னு சொல்லவும் சாமி மலையேறிடுச்சு மாடசாமி தாத்தா உடம்புல இருந்து.
இப்பவே உண்டான மாதிரி சந்தோஷத்தோட மாமன பாக்க அவனும் கண்ணத்தொடச்சபடியே சிரிச்சான்.
00
ரா.சண்முகவள்ளி
கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.
இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம், வானவில், நான் போன்ற மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.