“இந்த காட்டில் பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன பூச்சிகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் அருவி இவை எல்லாம் ஆயிரம் கதைகளைச் சுமந்து கொண்டு தான் இருக்கின்றன” என்றார் கோவை சதாசிவம்.

அங்கிருந்த ஓடை தண்ணீரில் கால்களை வைத்து விளையாடிய படியே “அப்போ இதோ இந்த தண்ணிக்குக் கூட கதை இருக்கா தாத்தா” என்று கேட்டபடியே தண்ணீரை தனது இரண்டு உள்ளங்கையையும் இணைத்து வைத்து கைகூப்பி ஏந்தியபடி கேட்டாள் குட்டி ஆராதனா.

“ஆமாண்டா செல்லமே!  யாராவது இப்படிக் கேட்டீங்களா? அதுதான் குழந்தைகள்” என்று ஆராதனாவின் கன்னத்தைத் தட்டி தன் அன்பை வெளிப்படுத்தினார் கோவை சதாசிவம் .

ஐயா,  அவளை சாதாரணமா நினைச்சுடாதீங்க! கேள்வியால் தொழச்சி எடுத்துடுவா. இப்போ தான் காட்டுக்குள்ள வந்திருக்கோம். இந்த இரண்டு நாள் முடிஞ்சு போறப்ப ஆயிரம் கேள்விகளுக்கு மேல கேட்டிருப்பா. நீங்க நல்லா மாட்டுனீங்க” என்றார் ஆராதனாவின் அம்மா மாதவி.

“அம்மாடி மாதவி எந்தக் குழந்தையுமே நான் சாதாரணமா நினைச்சது இல்ல. பதில் சொல்லி சந்தேகத்தைத் தீர்க்கத் தானே உங்களை இங்கே அழைச்சிட்டு வந்து இருக்கேன்.

கேள்வி கேட்டதும் குழந்தைகளை அதிகப்பிரசங்கி என்றோ தொடர்ந்தோம்னு பேசாதே என்றோ அடக்கி வைக்கிறதுக்கு இது பள்ளிக்கூடமும் இல்லை. நான் வாத்தியாரும் இல்லை. இது வீடும் இல்லை.

 நான் உங்களை மாதிரி அம்மா அப்பாவும் இல்லை. கேள்விகள் கேட்கட்டும்” என்றார் கோவை சதாசிவம். 

“சரி சரி தாத்தா, இந்த தண்ணி எப்படி கதை சொல்லும்?

அதுக்கு வாயா இருக்கு?” என்று கைதட்டி சிரித்தபடி கேட்டாள் ஆராதனா.

“வாய் இருக்கே” என்றார் கோவை சதாசிவம் .

“இருக்கா! எங்க தாத்தா?”

“தண்ணீர் ஓடும் போது சத்தம் வருதா?”

“ஆமாம்” தாத்தா.

“அது சத்தம் இல்லை. கதை சொல்லிட்டு இருக்குது”

“அப்போ அந்த மரம் எப்படி கதை சொல்லும்? போங்க தாத்தா நீங்க. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” இன்று சிரித்தபடியே கேட்டாள் ஆராதனாவின் அருகில் அமர்ந்திருந்த வினோதா.

“அது காத்துல அசந்து அசைந்து  வளைந்து நெளியறப்போ சத்தம் வருதா?”

அங்கிருந்த மரங்களையே சுற்றி சுற்றி பார்த்த ஆராதனாவும் மற்ற குழந்தைகளும் “ஆமாம் தாத்தா” “அப்போ அதுவும் கதை சொல்லுதா?”

“அப்ப காடு முழுசும் கதை இருக்குதா தாத்தா?”

இப்படி கோவை சதாசிவத்தை கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள் குழந்தைகள். என்றார் கோவை சதாசிவம்.

“கதைகள் தினமும் காடுகளில் சொல்லப்பட்டுக்கிட்டே இருக்கின்றன”

“யாரு கேக்குறாங்க தாத்தா?” என்று ஆர்வமாகக் கேட்டான் வினய் 

“மரங்களோட கதைகளை ஆறுகள் கேட்கும். பறவைகள் கேட்கும். விலங்குகள் கேட்கும். பறவைகளோட கதைகளை செடிகள் கேட்கும். பூச்சிகள் கேட்கும். இப்படி யார் கதையை யார் வேணாலும் கேட்பாங்க. நமக்கு என்ன கண்ணு தெரியும். ஆனா எல்லா காதுகளும் திறந்து தான் கிடக்கும். காடு முழுவதும் கதையோட வாசம் எப்பவுமே வீசிக்கொண்டே இருக்கும்.

கொஞ்ச நாள் நாமலு இந்த காட்டுல வாழ்ந்தோம்னா அவைகளோட கதைகள் நம்ம காதுகளுக்கும் கேட்கும்.

நான் ஒவ்வொரு முறை வரும்போது ஆயிரம் கதைகளை இங்கிருந்து அள்ளிட்டுப் போவேன்” என்று கூறிவிட்டு ஆராதனாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கோவை சதாசிவம்.

“அப்போ நாங்க இங்கிருந்து போகும் போது கூட நிறைய கதைகள் கிடைக்குமா தாத்தா?”

இன்று ஆர்வமாக கேட்டாள் ஆராதனா.

கண்டிப்பாக,நான் எழுதின புத்தகம்ல எப்படி வந்தது நினைக்கிறீங்க? காடுகள் கொடுத்தது தான். நீங்க இந்த ரெண்டு நாள்ல எத்தனை எத்தனை கதைகளைக் கேட்க போறங்கன்னு பாருங்க” என்று கூறிவிட்டு வினோதாவின் தலையைத் தடவி “சரி வாருங்கள்! எல்லாரும் மேல போலாம். இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டி இருக்கு. அங்கே கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு மத்திய சாப்பாடு முடிச்சிட்டு அப்புறம் கிளம்பலாம்” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தார்   கோவை சதாசிவம்.

 அவரைச் சுற்றி அமர்ந்திருந்த 70க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் சதாசிவத்தைப் பின் தொடர்ந்தார்கள்.

  கோவை சதாசிவம் ஒரு சூழலியலாளர். எழுத்தாளர். மாதா மாதம் காடறதல் நிகழ்ச்சியின் மூலமாக காடுகளுக்கு ஏராளமான மக்களை குழுவாக அழைத்து வந்து காடுகளுக்குள் இருக்கும் பறவைகள், விலங்குகள், சிறு பூச்சிகளின் வாழ்க்கை முறைகள் காட்டின் அவசியம் மட்டுமின்றி அபூர்வமான தகவல்களையும் கூறுவார்.

 இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை காடறிதல் நிகழ்ச்சியில் காடுகளுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

சற்று தூரம் சென்றவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு மதிய உணவை சாப்பிட்டுவிட்டு கிளம்ப தயாரானார்கள். அந்த நேரத்துக்குள் ஆராதனாவும் மற்ற குழந்தைகளும் ஏராளமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். எந்தக் கேள்விக்கும் சளைக்காமல் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் கோவை சதாசிவம்.  அப்பொழுது “ஆராதனா ஆராதனா” என்ற சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ச்சியோடு சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தார்கள்.

“ஆராதனாவைகா காணவில்லை. எங்கே போய் இருப்பாள்?” என்று ஆராதனாவின் அம்மா மாதவி சத்தம் போட ஆரம்பித்தார். அங்கு இருந்தவர்களிடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது. தன்னுடைய ஒவ்வொருவரும் தன்னுடைய குழந்தைகளைத் தேடினார்கள்.  அனைத்து குழந்தைகளும் இருந்தார்கள். ஆராதனாவை மட்டும் காணவில்லை. எல்லோரும் காட்டுக்குள் தேட ஆரம்பித்தார்கள்.

“பயப்படாதீர்கள். குழந்தை ஏதாவது புதிதாக பார்த்திருக்கும். அதையே பார்த்து நின்றிருக்கும். இந்த இடத்தில் எந்தவித ஆபத்தான விலங்குகளோ பறவைகளோ பூச்சிகளோ இருக்க வாய்ப்பில்லை. எவ்வளவு முறை நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தைரியமாக இருங்கள் ஆராதனாவைக் கண்டுபிடித்து விடலாம்” என்று கூறினார்  கோவை சதாசிவம்.

அனைவரும் தேட ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் ஒரு பட்டாம்பூச்சியையைத் துரத்தியபடி அங்கு வந்து சேர்ந்தாள் ஆராதனா.

ஆராதனாவை பார்த்த மாதவி கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தார். கண்களில் வழிந்த கண்ணீர் ஆராதனாவின் தோள்பட்டையை நனைத்தது. “அம்மா ஏன் அழற?” என்று அம்மாவின் கண்களைத் துடைத்தபடி கேட்டாள் ஆராதனா. “நீ எங்க போனே? எங்கெல்லாம் தேடறது? நான் ரொம்ப பயந்து போயிட்டேன். ஏன் சொல்லாமல் போனே?” என்று கேட்டார் மாதவி. “அம்மா இந்தப் பட்டாம்பூச்சியை துரத்திட்டே போனேனா. எனக்கு எங்க போனனே தெரியல. அப்புறம் கொஞ்ச நேரத்துல பட்டாம்பூச்சி எனக்கு ரொம்ப ஃபிரண்டாயிடுச்சு.  என்னோட பேச ஆரம்பிச்சிருச்சு. வழி மறந்துடுச்சுனு சொன்னேன் .  சுத்திச் சுத்தி கொஞ்ச நேரம் பறந்த பட்டாம்பூச்சி வேகமாக பறக்க ஆரம்பிச்சிருச்சு. அதுக்குப் பின்னாடியே ஓடிவந்தேன்.  நீங்க இருக்கிற இடத்துக்கு வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு ஹா ஹா ஹா என்று சிரித்தாள்.

என்னது பட்டாம்பூச்சி வழிகாட்டுச்சா? என்று அங்கிருந்த சுட்டி வாண்டு வினோத் கேட்டான்.

“ஆமா வழி மட்டும் காட்டுல. வழியில வர்றப்ப எனக்கு போர் அடிக்கும்னு ஒரு கதை கூட சொல்லிச்சு தெரியுமா?” என்று வினோத்தை பார்த்துச் சொன்னாள் ஆராதனா.

எல்லோரும் ஆராதனை சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்ன நீயும் தாத்தா மாதிரி கதை சொல்லுச்சுனு சொல்றே?நிஜமாதான் சொல்றியா? சும்மா வுடாதே” என்று அவள் அருகில் வந்து தனது இடுப்பால் இடித்தாள் நிரஞ்சனா.

“பாருங்க தாத்தா நம்ப மாட்டேங்கறாங்க.  நீங்களே சொல்லுங்க?” என்று கோவை சதாசிவம் ஐயாவைப் பார்த்துக் கேட்டாள் ஆராதனா.

“சரி எல்லாரும் கொஞ்சம் இங்க உட்காருஙக பட்டாம்பூச்சி என்னதான் கதை சொல்லுச்சுன்னு ஆராதனா நமக்குச் சொல்லட்டும். அது கேட்டதுக்கு அப்புறம் நாம இங்கிருந்து கிளம்பலாம்” என்று கோவை சதாசிவம் கூறினார். அனைவரும் அந்த இடத்திலேயே அமர்ந்தார்கள்.

“கதையா… அதுவா…” என்று இழுத்து இழுத்து பேசிவிட்டு, ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “சரி சரி சொல்றேன்” என்று கூறி கதையைத் தொடங்கினாள் ஆராதனா.

”பட்டாம்பூச்சி கிட்ட உன்னோட நிறம் எப்படி வந்துச்சுன்னு நான் கேட்டேன். ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி   அவங்களுக்கு நிறமே கிடையாது. அப்போ வனதேவதை கிட்ட போயி நிறம் வேணும்னு அவங்க எல்லாரும் கேட்டாங்களாம்!.

அடடா!!  என்கிட்ட இருந்த நிறங்களை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மரச்செடி கொடிகளுக்கும் எல்லாருக்கும் கொடுத்துட்டேனே. இப்போ எந்த நிறமும் என்கிட்ட இல்லையே. நீங்க வேணும்னா யாராவது கிட்ட நிறத்தை வாங்கிட்டு வாங்க. நான் அதை உங்களுக்கு ஒட்டி விடுறேன். அப்படின்னு சொல்லுச்சாம் வனதேவதை. பட்டாம்பூச்சிகளும்  செடி கொடிகள், பூ காய்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் இப்படி எல்லாத்துக் கிட்டயும் போயி கேட்டாங்களாம். யாருமே கொடுக்க மாட்டேனுட்டாங்களாம்”

“அடடே! கதை ரொம்ப நல்லா இருக்கே. அப்புறம் என்ன ஆச்சு?” என்று ஆர்வமோடு கேட்டபடியே ஆராதனாவின் அருகில் அமர்ந்து ஆராதனாவையே பார்த்தபடி கேட்டாள் வினோதா.

அங்கு அமர்ந்திருந்த அனைவரும் ஆராதனாவின் கதையை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“பட்டாம்பூச்சிங்க ரொம்ப நாளு எல்லார்கிட்டயும் கேட்டு கேட்டு அலைஞ்சாங்களாம். ஒரு நாளு சாயந்திரம் நேரம் மழை வர மாதிரியே ஆயிடுச்சாமா. மேகம் ரொம்ப கருப்பா  ஆயிருச்சாமா. அந்த நேரம் பார்த்து வானவில் வந்துச்சாமா.  பட்டாம்பூச்சிங்களுக்கு ஒரு யோசனை தோணுச்சாம்.  ஏன் வானவில் கிட்ட நம்ம கேட்கக்கூடாது அப்படின்னு.

எல்லாரும் நீ சொல்ற யோசனை சரியா இருக்கே. மத்தவங்க கிட்டையாவது கொஞ்சமான நிறங்கள் தான் இருக்குது. வானவில் கிட்ட இவ்வளவு நிறங்கள் இருக்கே. சரி கேட்கலாம் அப்படின்னு எல்லா பட்டாம்பூச்சிகளும் முடிவு பண்ணிட்டு, வானவில் கிட்ட போயி எல்லா  பட்டாம்பூச்சிகளும் கேட்டாங்களாம். உடனே கண்டிப்பா தர்றேன் அப்படின்னு வானவில் சொல்லுச்சாம். நிறங்களையும் பட்டாம்பூச்சிகளுக்கு கொடுத்திருச்சாம்.  வானவில்லோட வண்ணங்களை வன தேவதை கிட்ட கொண்டு போய் கொடுத்தாங்களாம்.  தேவதை வானவில்லில் இருக்கிற வண்ணங்களைக் கலந்து கலந்து பட்டாம்பூச்சிகளுக்கு ஒட்டி விட்டாங்களாம். அப்பதான் பட்டாம்பூச்சிகளுக்கு நிறங்கள் வந்துச்சாம்” என்று கூறி, “என்ன தாத்தா நான் சொல்றது சரிதானே?” என்று  கோவை சதாசிவத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டாள்  ஆராதனா. அங்கிருந்த அத்தனை பேரும் கைதட்டி ஆமோதித்தார்கள். காட்டுக்கு ஒரு புதிய கதை கிடைத்தது. காட்டிற்கு இந்தக் கதையின் வாசனை பிடித்திருந்தது. லேசான மழைத் தூரலில் மண்வாசனையோடு கதை வாசனையும் கலந்து வீசியது.

000

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *