– பானிக் சேம்பர்லின்
தமிழில் : அவை நாயகன்
எனது சின்னஞ்சிறு வயதில் இந்தக் கதையை வயதான ஒரு துறவி சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்கிருந்து வந்த கதை அது என்பது இன்னும் எனக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது. இதுவரை யாரும் அதை எனக்குச் சொல்லவும் இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, புகழ்பெற்ற ஓர் ஓவியர் தேவாலயச் சுவரில் ஓவியங்கள் வரைந்து தர வேண்டப் பட்டிருந்தார். அது ஏசு கிறிஸ்துவின் வாழ்வு பற்றியது. அவரும் வருடக் கணக்கில் அதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். இறுதியில் ஓவியங்கள் தயாராயின. ஆனால், அவற்றில் ஏசு பெருமானின் குழந்தைப் பருவம், அவரை வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்தின் உருவம் ஆகியன ஓவியங்களாக மாறவில்லை. ஏனென்றால் இருவரின் தோற்றத்திற்கான உருமாதிரிகள் அதுவரை அவருக்குக் கிட்டவில்லை. ஆயினும் அதற்காக அவர் நெடுநாட்கள் தேடி அலைந்து கொண்டேயிருந்தார்.
ஒருநாள், நகரத்தின் பழமையான பகுதியொன்றில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதில் 12 வயதுள்ள சிறுவன் ஒருவன் அவரது கலைமனத்தை ஈர்த்தான். அழுக்கான தோற்றம் கொண்டிருந்தாலும் அவருக்கு அவன் முகம் ஒரு தேவதையின் முகமாகத் தெரிந்தது.
அவனை அழைத்துக் கொண்டு வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவன் பொறுமையாக ஒத்துழைத்தான். குழந்தை ஏசுவின் முகம் தயாராகி விட்டது.
ஆயினும், யூதாஸின் உருவத்திற்கான மாதிரியாகி உதவிட யாரும் முன்வரவில்லை. தனது புகழின் உச்சம் என்று கருதிய ஓவியம் அரைகுறையாகி விடக் கூடாது என்பதால் அவரும் தனது தேடலை நிறுத்தவில்லை.
பாதியில் நிற்கும் ஓவியம் பற்றிய செய்தி பல ஊர்களுக்கும் பரவி விட்டது. எவரும் இந்தப் பணியில் தமது ஆர்வத்தைக் காட்டினார்களே ஒழிய, மனு உருவில் வந்த தேவனைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் உருமாதிரியாகி நிற்க யாரும் தயாராக இல்லை.
வயதாகி விட்ட அந்த ஓவியரும் தனது முயற்சிகள் வீணாகி விட்ட நிலையிலும், வாழ்வின் துன்பங்கள் வருத்தியதால் பேராசைக்கு அடிபணிந்து போன ஓர் அவலம் நிறைந்த மனிதனின் முகத்தைத் தேடிக் கொண்டேயிருந்தார்.
ஒரு மாலைநேரத்தில் தனக்குப் பழக்கமான மதுவிடுதியில் அமர்ந்திருந்த ஓவியர் ஒரு காட்சியைக் கண்டார். ஒட்டியுலர்ந்த, கந்தல் போர்த்த உடலுடன் ஒரு மனிதன் தடுமாறிக் கொண்டே விடுதியின் முகப்பில் வந்து வீழ்ந்தான்.
”எனக்கு மது வேண்டும். மது வேண்டும்..”
கெஞ்சிக் கொண்டிருந்தான். ஓவியர் ஓடிப்போய் அவனைத் தூக்கி எடுத்தபோது அந்த முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார். மனிதப் பாவங்கள் அனைத்தையும் அடையாளங்களாக்கிக் கொண்ட முகம்.
பெரும் ஆர்வத்துடன் அந்த ஒழுக்கக் கேடான மனிதனைத் தனது பாதங்களில் கிடத்தினார்.
“என்னோடு வா..” என்று அழைத்தார். “ நான் உனக்கு மதுவும், உணவும், உடையும் தருகிறேன்..”
கடைசியில் யூதாஸின் உருமாதிரி கிடைத்து விட்டான்.
இரவு பகலாக ஏங்கித் தவித்த தன் வாழ்நாள் சாதனைக்குரிய ஓவியத்தின் இறுதிப் பகுதியை இப்போது அவரால் முடித்துத் தர இயலும்.
ஓவியப் பணி தொடர்ந்தது. உருமாதிரியாக வந்தவனிடமும் ஒரு மாற்றம் தெரிந்தது. உன்மத்தங் கொண்ட அவனது உடல்திறம் மாறி விட்டது. குருதிச் சிவப்பான கண்களுடன் மிகுந்த வெறுப்புடன் ஓவியரைப் பார்க்கத் தொடங்கினான்.
அவனது மனப் போராட்டத்தை உணர்ந்து கொண்ட ஓவியர் தனது பணியை நிறுத்திக் கொண்டார்.
“மகனே.. நான் உனக்கு உதவுகிறேன். என்ன பிரச்சினை உனக்கு..?”
முகத்தைக் கைகளால் தாங்கிக் கொண்டே விம்மி அழுது கொண்டிருந்தவன் தலையுயர்த்தி, மன்றாடும் விதத்தில் அந்த முதிய ஓவியரைப் பார்த்தான்.
“என்னை உங்களுக்கு நினைவில்லையா..? நெடுநாட்களுக்கு முன் குழந்தை ஏசுவுக்கு உருமாதிரியாக வந்ததும் நானேதான்..”
++
அவைநாயகன்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.
சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.
அதி அற்புதமான உணர்வுள்ள கதை, மொழிபெயர்ப்பு, காட்டிக்கிடுத்த முகம்
சிறப்பு சார்