1.
எப்பொழுது மித்ரா வெளியே வருவாள் எனத் தன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள் வாணி. மித்ராவின் தலை தெரிந்ததும் உற்சாகமாய் சிரித்தாள். சவுராஷ்டிராப் பிள்ளைகள் பொதுவாய் வெள்ளை வெளேர் என இருப்பார்கள் ஆனால் மித்ரா மாநிறமும், நீண்ட நேர்கூந்தலும், நீள்விழிகளுமாய் தனி அழகாய் இருப்பாள். அவள் பின்னால் சுற்றும் பையன்களும் அதிகம். அதனாலேயே வெளியே வருவதற்கு பல தடைகள். திம்மராஜபுரத்தில் சவுராஷ்டிராக்கள் அதிகம் அந்த தெருவில்தான். குஜராத்தில் இருந்து வந்ததாய் நம்பப்பட்டாலும் மதுரையைத்தான் பூர்வீகமாகச் சொல்வார்கள். பட்டுநூல்காரர்கள் என்ற பெயரும் உண்டு. பட்டுச்சேலை, நூல்பட்டு நெய்வது தான் பிரதான தொழில். மித்ரா புதிதாக தறி நெய்வதால் முன்னர் போல வெளியே வருவதில்லை. பெரியமனுஷியான பின் பள்ளிபடிப்பு நிறுத்தப்பட, அதன்பின் தறி நெய்யக் கற்றுக் கொண்டாள். ஆரம்பத்தில் சந்தோஷமாய் உணர்ந்த மித்ரா, தான் கூட்டிற்குள் அடைபட்டுள்ளோம் என உணரவே நாளானது. வாணிதான் மித்ராவின் வெளியுலகிற்கான கண்கள்.
வாணி மித்ராவை விட கலராக இருப்பாள், சுருள் முடியும், மையிட்ட கண்களுமாய் மிக அழகாய் இருப்பாள். இருவரும் குளத்துக்கு நடந்தார்களானால் வேண்டுமென்றே எதிர் வருவார்கள் இளவட்டங்கள். இருவரும் சிறுவயதிலிருந்தே உற்ற தோழிகள். தினமும் மாலையில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்து, மித்ரா எப்பொழுது வருவாள் எனக் காத்திருப்பாள். சமயத்தில் பொறுமை இல்லாமல் சென்று அழைப்பாள். பின்னர் இருவரும் மித்ரா வீட்டுத் திண்ணையிலோ, வாணி வீட்டு மரத்தடியிலோ, ஆளற்ற கடைசி வீட்டுத் தொண்டிலோ நின்று பேசித் தீர்ப்பார்கள். குளத்துக்கும் சேர்ந்தே தான் போவார்கள். பெருமழையில் மட்டுமே முழுக்குளமும் நிரம்பும். மற்றபடிக்கு குளத்துக்குள் சிறு சிறு குளங்களாக தண்ணீர் தேக்கங்கள் இருக்கும். அவர்களின் கதை முடியவே முடியாது. பெரும்பாலும் வாணி தன் பள்ளிக் கதைகள், பள்ளியில் கண்ட காதல் கதைகள் எனச் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு இருப்பாள் மித்ரா. பத்து நிமிடத்தில் அவள் அம்மா குரல் கேட்கும்..
“மித்ரா…. கெண்டா இக்கோ? அங்குன் காய் வத்தக்கர்ளேசேத்தே (மணி என்ன? இன்னும் என்ன பேச்சு)” என்பாள்.
“அம்பா யெலெளடி (அம்மா இதோ வரேன்)” என்று பேசிக்கொண்டே நிற்பாள். அம்மாவின் தலை திண்ணையில் தெரியும் போது ஓடுவாள். மித்ராவின் வாழ்க்கை மாறியதைக் கண்ட வாணிக்கு பெரியவளானால் பள்ளிக்குப் போக முடியாதோ என்ற பயம் அவள் சடங்காகி பதினாறு நாட்களில் எப்பொழுதும் போல பள்ளிக்கு கிளம்பியதில் நிம்மதியானது. ஒருமுறை அம்மாவிடம்,
“அம்மா சடங்கானா ஸ்கூல் போகவேண்டாமா?” என்று கேட்டதற்கு,
“ஸ்கூலுக்குப் போகாம?. வீட்ல இருந்து என்ன செய்யப்போறே? படிச்சா தான் வேலைக்கு போக முடியும், நாலுகாசு சம்பாதிக்க முடியும், அடுத்தாளு கைய எதிர்பார்க்காம வாழமுடியும் மனசுல வைச்சிக்க” என்றாள் அம்மா.
“அப்போ மித்ரா மட்டும்..“ என்று இழுத்தவளிடம்…
“அது.. சவுராஷ்டிரா ஆட்கள்ள சிலபேரு பொண்ணுக தறி பழகனும், சீக்கிரமா கெட்டிக் கொடுக்கனும்னு நினைப்பாங்க, நம்மள்ள அப்படி இல்ல” என்றாள்.
2.
“என்னப்ள இன்னைக்கு இவ்வளவு நேரம்” என்று கேட்ட வாணி, மித்ராவின் முகம் களையிழந்து இருப்பதைப் பார்த்து “என்னடே ஒரு மாதிரி இருக்கே” எனக் கேட்டாள்.
“ஒன்னுமில்லையே நல்லா தானே இருக்கேன், நூல் சுத்தி முடிச்சிட்டு வர லேட்டாயிட்டுடே. அம்மா வேலையா இருந்தா அதனால அக்கா தறிக்கும் சேர்த்துச் சுத்தினேன்” என்றாள் மித்ரா.
திரும்பத் திரும்ப கேட்டும் மித்ரா ஒன்றும் இல்லை என்று சமாளித்தாள். வேறு ஏதோ சொல்ல ஆரம்பித்த வாணி மித்ரா கவனிக்காமல் அமைதியாய் இருப்பதைக் கண்டு “நீ இப்படி உம்முனு இருந்தா நான் வீட்டுக்குப் போறேன்” என்று எழுந்தாள்.
அதே நேரத்தில் மித்ரா வீட்டுக்குப் பக்கத்து மாடிவீட்டு சிவா சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அவனைப் பார்த்ததும் கடுப்பான மித்ரா, “ஜாரா கேசு”(போடா மயிரே) என்றாள். அதை கவனித்த வாணி “என்னாச்சுப்ள அவன் என்ன சொன்னான்?” எனக் கேட்டாள்.
“அவனைப் பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது” என்றாள் மித்ரா.
மித்ராவின் அப்பா பாளையங்கோட்டையில் நூல்பட்டு விற்கும் கடையில் வேலை பார்த்தார். தினமும் காலையில் போறவர் அடைந்துதான் வீடு திரும்புவார். வீட்டில் மித்ரா, அம்மா, அக்கா, தம்பி. தம்பி பள்ளிக்குப் போய்விட மற்ற மூவரும் வீட்டில் தான் இருப்பார்கள். மித்ராவின் வீடு ஒரு பெரிய அறையும், அடுக்களையும், குளிப்பதற்கான பின்கட்டும் மட்டுமே. பெரிய அறையில் தான் இரண்டு தறிகள் எதிர் எதிராய் போடப்பட்டிருந்தது. மித்ராவின் அக்கா ஒரு பக்கமும், மித்ரா ஒரு பக்கமுமாக நெய்வார்கள். இரண்டு தறிக்குப் பக்கத்திலும் ஜன்னல் இருக்கும். மித்ராவின் ஜன்னல் வழியே கொஞ்சம் எட்டிப் பார்த்தால் தெருவில் நடமாடுபவர்கள் எல்லோரும் தெரிவார்கள். ஜன்னலுக்கு நேரே பக்கவாட்டில் இருக்கும் மாடி வீட்டில் தான் சிவா வசிக்கிறான். ஜன்னல் வழியே பார்த்தால் அவர்கள் வீட்டின் பின்வாசல் தெரியும். காதலிப்பதாய் சொல்லியிருப்பானோ சேச்சே இருக்காது.. அவன் ரொம்ப பெரியவன் வயசு யோசிக்காம இவகிட்ட அப்படி சொல்லிருக்க மாட்டான் என்று தோன்ற
“என்னன்னு தான் சொல்லி தொலையேன்ப்ள அந்த அண்ணன் என்னமும் சொன்னானா?” என்றாள் வாணி.
“என்ன நொண்ணன்.. சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு” என்றவள் தயங்கி தயங்கிக் கூற ஆரம்பித்தாள்.
“ஒருநா லைட்டெல்லாம் அணைச்சப்புறம் என் தறி பக்கத்து அலமாரில என்னமோ எடுக்க போனேன்டே… எங்க சுத்துசுவர் சின்னது தானே, பின்னாடி கொடில துணி காய போட்டு இருந்தோம்லா, எங்க அக்காவோட பிராவை அவன் எடுத்துட்டு போறத பாத்தேன். செனி (சனி) எதுக்கு கொண்டு போனானோ.. காலைல பார்க்கும் போது பிரா கெடக்கு, எப்போ திரும்ப கொண்டு வந்து போட்டான்னு தெரியல. எனக்கு என்ன பண்ணனு தெரில. யார்ட்டயும் சொல்லல. ஒரு வாட்டி பிராவக் காணோம்னு அவ ஏசிட்டு கிடந்தா. நான் எப்படி சொல்லன்னு விட்டுட்டேன். சண்டை வந்திருமேன்னு நினைச்சேன்… ஆனா இன்னைக்கு ரொம்ப ஓவரா போய்ட்டான்” என்றாள். அவள் சொல்வதை எல்லாம் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்த வாணி
“எனக்கு தல சுத்துதுப்ள. அமைதியா இருக்கான்… இவனா இப்படிச் செய்தான்? ஏன்? சைக் கருமம், இன்னைக்கு என்ன பண்ணினான்” எனக் கேட்டாள்.
“இன்னைக்குத் மத்தியானமா தறியடிச்சிட்டு இருந்தேனா.. ரோட்லயும் ஒருத்தரும் இல்ல. அக்கா தறில இல்ல. சாப்ட்டு படுத்துட்டா. நான் இந்த சேலைய முடிச்சிட்டா இந்த சனிக்கிழமை படத்துக்கு போலாம்னு பாட்டுக் கேட்டுகிட்டு நெய்திட்டு இருந்தேன்டே. என்னடா யாரோ பார்க்காப்ல இருக்கேன்னு திரும்பினா இந்த செனி நின்னான். டக்குன்னு சாரத்த தூக்கிட்டான்ப்ள.. உள்ள ஒன்னும் போடாம சைக் கண்றாவி, படபடன்னு வந்துட்டு, தறிய விட்டு இறங்கிட்டேன். இப்ப வரை மனசுல ஒரே அருவருப்பா இருக்கு” என்று கண்ணீர் வடித்தாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வாணி
“அழாதப்ள… எனக்கு நம்பவே முடில போ. உங்க அம்மாட்ட இல்லனா அக்காட்ட சொன்னியா?”
“இல்ல வாணி. இருக்கிற கொஞ்சநஞ்ச சுதந்திரமும் போயிரும், எங்க அம்மா என்ன தான் ஏசுவா”
“இல்ல மித்ரா நீ வீட்ல சொல்லிரு. உங்க அப்பா அவன பாத்துக்கிடுவாங்க” என்றாள் வாணி.
“அய்யோ அப்பாக்குத் தெரிஞ்சா அந்த ஜன்னலை அடைச்சுடுவாரு. அந்த ஜன்னல் ஒன்னுதான் எனக்கு ஆசுவாசம்.. அதையும் மூடிட்டாங்கன்னா மூச்சுமுட்டிப் போயிரும் போ. என்னைக்காது சினிமா, மத்தப்படி உங்கிட்ட பேசுறது ஒன்னுதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. இதச் சொல்லி என்ன வெளில போக்கூடாதுனு சொல்லிட்டா என்ன செய்ய? அதான்…” என இழுத்தாள். மித்ரா கூறியதைக் கேட்ட வாணிக்கு வேதனையாகவும், வருத்தமாகவும் இருந்தது.
“அதுக்காக வீட்ல சொல்லாம இப்படியே விடப்போறியா? அவன் மறுபடியும் வந்து இப்படி காட்டினான்னா?… எத்தன நாளைக்கு தான் பொறுத்துக்கிட்டு இருப்பே? வெக்கங்கெட்ட மூதி அவன்… அசிங்கமா இல்லையா இப்படிக் காமிக்க..” என்ற வாணியிடம்,
“அதான் பாரேன் மானங்கெட்டப்பய. என்ன பாத்தா இவனுக்கு எப்படி தெரியுது. இப்படி அசிங்கமா பண்ணிட்டானேப்ள, எனக்கு பயமாவும் இருக்கு” என்றாள்.
“ஒன்னு பண்ணுவோம். அவன் அம்மாவ கூப்பிட்டு சொல்லிடுவோம்” என்றாள் வாணி.
“அய்யய்யோ வேண்டாம்ப்ள. அவன் இல்லன்னு தான் சொல்வான். நான் தான் அசிங்கப்படுவேன். அவன் அம்மாக்காரி எங்க வீட்ல சொல்லிட்டா பிரச்சனை ஆகிடும். அந்த சனியன் எப்படியோ போட்டும். இனிமே நான் அவன் வீட்டு பக்கமே திரும்ப மாட்டேன்” என்றாள் மித்ரா.
வருத்தமும், கோபமும் இருந்தும் அஞ்சு காசுக்கு பிரயோசனம் இல்லாமல் அவள் மனதுக்குள்ளேயே அனாதையாய் தவிக்க… அவனைப் பார்க்கும் போதெல்லாம் திகுதிகுவென எரிந்தது வாணிக்கு. அவனுடைய அம்மா இதை பார்த்திருக்க மாட்டாளா, கண்டிக்க மாட்டாளா என்று மித்ராவிடம் சொல்லி சொல்லி மாய்ந்தாள். மித்ரா விடுடே என்றாள். தன் அம்மாவிடம் கூற நினைத்து மித்ரா தடுத்தபடியால் சொல்லாமல் விட்டாள். இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டது. சிவா இப்படி நான்கைந்து முறை செய்துவிட்டான். மித்ரா இவன் செத்தொழியட்டும் என்று சபித்தாள்.
3.
அன்று விடிகாலையில் திடீரென்று தெருவிற்குள் கூச்சலும், சண்டையுமாய் இருந்தது. வாசலில் நின்று வேடிக்கை பார்க்கும் அம்மாவிடம் என்னம்மா என்றாள் வாணி.
“அந்த மச்சி வீட்டு சிவா என்ன வேலைப் பார்த்திருக்கான் பாரு காமக்கோட்டி புடிச்ச பய” என்று ஏசினாள்.
தெருவே வேடிக்கைப் பார்க்க கடைக்காரக்கா நடுத்தெருவில் நின்று கிழித்துக் கொண்டிருந்தாள். ஒருகணம் மித்ரா விஷயமோ என குழம்பியவள் மித்ராவும் அவள் வீட்டுத்திண்ணையில் நிற்பதைப் பார்த்தாள். வாணியைக் கண்டதும் மித்ராவிற்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டு வந்தது. அவளருகே சென்ற வாணி,
“என்னடே என்ன நடந்துச்சு ஏன் கடக்காரக்கா அவ்வோ மவனுவ எல்லாம் கத்துதாவோ” எனக் கேட்டாள்.
“வசமா மாட்டுனாம் இன்னைக்கு. கடவுள் கண்ண திறந்துட்டாரு”
“அந்த சிவா சனியனையா திட்டுறாங்க. அங்கயும் என்னமும் பண்ணிட்டானா?”
“ஆமா… காலங்காத்தால முடுக்குகுள்ள நின்னு அவ்வோ வீட்டு ஜன்னல் வழியா மஞ்சுளாக்கா ரூம்குள்ள பார்த்துட்டு இருந்திருக்கான். திடீருனு அந்தக்கா முழிச்சி இவன் நிக்கறதப் பார்த்துட்டாங்க. அவங்க வீட்டுக்காரர எழுப்பதுக்குள்ள பாய்ஞ்சி ஓடிருக்கான். மஞ்சுளாக்கா வாசலுக்கு ஓடியாந்து இவன் அவ்வோ வீட்டுக்குள்ள ஓடுறத பார்த்துட்டாங்க. மருமவ போட்ட சத்தத்துல கடக்காரக்கா எல்லாரும் எந்திரிச்சிட்டாங்க. அப்ப இருந்து சண்ட நடக்கு. அவ்வோ அம்மா அவன் வெளில போகலனு சொல்றாங்களாம். அப்ப நாங்க பார்த்தது பொய்யான்னு ஏசுதா இந்தக்கா.”
“அவன் என்ன சொல்லுதான்?”
“அவன் வீட்டுக்குள்ள பதுங்கி கெடக்கான். கடக்காரக்கா மகனுங்க வெளில வந்தா அடிக்க ரெடியா இருக்காங்க”.
“எங்க அம்மா அவனுக்கு காமக்கோட்டினு சொன்னா.. அப்படினா அந்த மாதிரி நினைப்பிலயே அலைவாங்க போல”
“என்னமோ… ஆனா அவன் வசமா மாட்டிட்டான். அடுத்த வீட்டு லதாக்காவும் அவங்க வீட்ல சொல்லிட்டா அவனப்பத்தி…”
“அப்படியாப்ள? அந்தாக்காட்ட என்ன பண்ணினான்?” என்று கேட்டாள்.
“அவங்களோட பிரா ஜட்டியெல்லாம் திருடிருக்கான். அவங்க முடுக்கு வழியா போகையில முத்தம் கொடுக்க வந்திருக்கான். அந்தக்கா தள்ளிட்டு ஓடிட்டாங்களாம். இத்தன நாளா சொல்லல. இன்னைக்கு சொல்லிட்டாங்க”
“அடப்பாவி.. நீயும் உங்க அம்மாட்ட சொல்லிருக்கலாம்” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும்போதே மித்ராவின் அம்மா பத்ரகாளி போல வாரியலோடு சிவா வீட்டு முன்னால் நின்றாள். தங்கள் மொழியில் மிக மோசமாக திட்டினாள். என்னவென்று புரியாமல் இருவரும் நிற்க… மித்ராவின் அக்கா செனி என்று பின்னால் நின்று திட்டியதும் இருவருக்கும் விளங்கியது, மித்ரா அக்காளிடம் என்னமோ செய்திருக்கிறான் என்று!
“அம்பா காயா? ஆவோ“ என்றாள் மித்ரா.. அவள் அம்மா ஒரு படி மேலேறி வீட்டிற்குள் சென்று அவனை விளக்குமாத்தால் விளாசி விட்டு தான் வெளியே வந்தாள். மித்ரா தன் அம்மா இப்படி போய் அடிப்பாள் என்று நினைத்தே பார்க்கவில்லை. அவளை தொடர்ந்து லதா அப்பாவும், கடக்காரக்கா மகனும் உள்ளே நுழைந்து அடிவெளுக்க, கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. அவனைக் காப்பாற்றி இரண்டு தரப்பினரையும் ஸ்டேஷனுக்கு வரச்சொல்ல மித்ரா அம்மா பயத்தில் வீட்டிற்குள் சென்று ஒளிந்துக் கொண்டாள். மித்ராவுக்கு சிரிப்பாய் இருந்தது.
அவன் அம்மா அழுதுகொண்டே அவன் அப்பாவோடு போலீஸ் ஸ்டேசனுக்கு நடந்தாள். ’யாராவது முன்னாடியே சொல்லிருக்க கூடாதா கண்டிச்சிருப்பேனே!’ என்றாள். போலீஸ் போனபின் எல்லோரும் அவன் லீலைகள் குறித்த தங்கள் அதிர்ச்சியை சொல்லி சொல்லி மாய்ந்தார்கள். காமக்கோட்டி புடிச்சவன்… காலாகாலாத்துல கட்டி வைச்சிருந்தா இப்படி ஊர் மேய்ஞ்சிருக்க மாட்டான் என்று கடைசி வீட்டு வண்டிக்காரத்தாத்தாவும் தன்பங்குக்குக் கூறினார். கல்யாணமான பெண்களிடமும் அசிங்கமாய் அந்தரங்க உறுப்பை அவன் காமித்த கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. நமக்கிடையில் சாதாரணமாய் வலம் வந்தவன் இவ்வளவு மோசமானவனாக இருந்திருக்கிறானே என்று மற்ற பெண்கள் பயத்துடன் கதை பேசினார்கள்..
“அவனுக்கு மனோ வியாதி… இப்படி சில கோட்டிங்க இருக்குவோ. அம்மங்கோயில் தெருல இப்படித்தான் ஒரு பெண்பிள்ள இருந்தாக்குல துணிய உருவிப் போட்டுருமாம். பாவம் அவிய வீட்டாளுக வழி இல்லாம சங்கிலியப் போட்டு கெட்டிப் போட்ருந்தாவோ” என்றாள் மரகதம் அக்காள்.
“இவன மெண்டல் ஆஸ்பத்திரில தான் போடனும்” என்றாள் வெளியே வந்த மித்ராம்மாள்.
“அட இது காமக்கோட்டி.. அதான் அடுத்தவுக படுக்கையறைய எட்டிப்பாக்கறது, பொம்பள பிள்ளைக கிட்ட இப்படி காமிக்கறதுனு இருந்திருக்கான். தெரு பயலுவ யார்கூடயும் அண்ட மாட்டான். படிச்சிட்டு வேலைக்கு போவாம சும்மா இருக்கான். வேற யோசிக்க ஒன்னுமில்லாம சதா இத நினைச்சிட்டு இருந்திருக்கான். இந்த நோயெல்லாம் கல்யாணம் முடிஞ்சி ஒருத்தி வந்தா சரியா போவும். காலங்காத்தால இவன் கதைய அள்ளி முடியாம, போய் வேலையப் பாருங்களா” என்று முற்றுப்புள்ளி வைத்தாள் வைகுண்டத்தம்மாள்.
“இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை வம்பாக்குறதுக்கு ஐடியா கொடுக்கு பாரு இந்த கிழவி. ஹிந்தோ மி ஜிக்கு சந்தோஷ்கசே..(இன்று நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்)“ என்றாள் மித்ரா.
“மஞ்சுளாக்கா பாவம்டே இவன் எத்தன நாளா இப்படி எட்டிப்பார்த்துகிட்டு இருக்கானோ… அவங்களுக்கு எப்படி இருக்கும்ன… நல்லா போலீஸ் ஸ்டேசன்ல போய் வாங்கட்டும். பாத்தேல்லா அந்த பொம்பிளப்போலீஸ் கதைய கேட்டுட்டு செவிள்ளயே ஒன்னு கொடுத்து கூட்டிப் போனத… அப்படி ஒன்னு யாராது கொடுத்திருந்தா அவன் இம்புட்டு தூரம் போயிருக்க மாட்டான்” என்றாள் வாணி.
“மாடு மாதிரி இருக்கான் அவன அடிச்சு வம்ப வெலைகொடுத்து வாங்கச் சொல்ற”
“அப்படிச் சொல்லல்ல. ஒரு தப்ப கண்டு அமைதியா இருக்கறது அதுக்கு துணைபோனாப்ல தானே?!. உங்க அம்மாவ பாத்தல்லா இன்னைக்கு.” எனச் சிரித்தாள் வாணி.
“ம்ம்ம்… நீ சொல்றது சரிதான் வாணி நானும் உன்ன மாதிரி யோசிக்கனும்னு ஆசப்படறேன்.. இனிமே இவன் தொல்லை இல்லங்கறதே சந்தோஷமா இருக்கு… சாயந்திரம் பெருமாள் கோயிலுக்கு போவோமா?”
“என்ன வேண்டுதலா” என நக்கலாக சிரித்தாள் வாணி.
தம்பியிடம் டீ வாங்க தூக்குவாளியைக் கொடுத்த மித்ரா நிம்மதியாக தறியில் ஏறினாள். சாவகாசமாய் ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்தாள். சிவா வீட்டின் பின்வாசல் கதவு பூட்டப்பட்டு இருந்தது. “அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா” என்ற பாட்டு ரேடியோவில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை மீறிய சந்தோஷத்தில் உற்சாகமாய் பாடிக்கொண்டே தறி அடித்தாள் மித்ரா.
4.
பாளையங்கோட்டையில் அந்த சிறு கல்யாண மண்டபத்தில் பெண் தோழியாக வாணி பட்டுப்புடவைக் கட்டிக்கொண்டு மித்ரா அருகில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
“உங்க வீட்ல பாளையங்கோட்டைல யாரையாவது பாத்து கெட்டி குடுத்திருக்க கூடாதா பிள்ள? கிருஷ்ணாபுரம் எங்க இருக்குன்னு கூட தெரில எனக்கு. அவ்ளோ காடு தள்ளி குடுக்கனுமாக்கும்? இனிமே எப்ப பாப்பேனோ உன்ன” என ஏக்க பெருமூச்சு விட்டாள்.
உற்சாகமாய் மாப்பிள்ளையோடு மணமேடையில் நின்ற மித்ரா காதோரமாய் வாணி கிசுகிசுத்த வார்த்தைகளில் மீண்டும் சோர்ந்தாள்.
“நான் என்னடே செய்ய முடியும்? உன்ன மாதிரி கல்யாணம் வேணாம்னுட்டு காலேஜ் படிப்பெல்லாம் படிக்க முடியுமா? உங்க வீட்ல நீ வெச்சதுதான் சட்டம். எங்க வீட்ல அப்படியா? உனக்கே தெரியும்லா” என வாணியிடம் திரும்பி பேசிக்கொண்டிருக்க,
“மித்ரா…“ என புகைப்படம் எடுக்க கணவன் விளித்தான். மித்ரா திரும்பி நின்று கணவனின் தோழர்களோடு புகைப்படம் எடுத்து முடிக்கவும், விலகி நின்ற வாணியை பக்கத்தில் வா என சைகை செய்தவள், மாலையை சரிசெய்துக்கொண்டே முன்பக்கமாய் திரும்பினாள். அங்கே அடுத்ததாக புகைப்படமெடுக்க மேடையேறிக் கொண்டிருந்தான் சிவா, கையில் தன் இரண்டு வயது குழந்தையோடு மனைவி பின்தொடர. சிரித்த முகமாய் வந்த விமலாவிடம்,
“எப்படி இருக்கீங்கக்கா?” என வாணி கேட்டு வைத்தாள்.
விமலாவுக்கு பழைய கதைகள் எதுவுமே தெரியாது. அக்கம்பக்கத்தினர் யாருமே மெனக்கிட்டு அவளிடம் எதையும் இதுவரை சொன்னார்களில்லை. சிவாவைப் போல கணவன் கிடைக்க தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பாள்.
சிவா தனது பரிசை மித்ராவிடம் நீட்டினான்.
“வாழ்த்துக்கள்” என்று கூறி புன்னகைத்தான்.
“தாங்க்ஸ் சிவாண்ணா” என்று சிரித்தமுகமாய் வாங்கிக் கொண்டாள் மித்ரா. அவள் கைகளில் இருந்து அதே புன்னகையையோடு பரிசை வாங்கி பக்கத்தில் வைத்தாள் வாணி. ஒரு கையில் மனைவியை அணைத்தவாறு அவன் படியிறங்கி போவதை கண்களால் ஜாடைக்காட்டி சிரித்தாள் மித்ரா. “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணுந்தான் பேரு விளங்க நல்லா வாழனும்” என்ற பாட்டு ஓடிக்கொண்டிருந்தது மண்டபத்தில்.
000
ராணி கணேஷ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.
தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும் உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,
நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.
நல்ல நடையுடன் எழுதப்பட்ட கதை. தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கு எட்டி நடை போடுகிறது. இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்வது உண்மை. அதை இரு வாலிபப்பெண்களின் பார்வையில் கூறிய விதம் அருமை. காட்சிகள் கண்முன் விரிகின்றன. வாழத்துகள்.