மூத்திரம் கடுகடுத்து
இறங்கியது
மனதின் அலட்சிய பாவம்
வலிகளின் ஆறுதலாய் இருக்க
தோல் சுருங்கிய வயோதிகன் ஒருவன்
என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்
முகத்திலிருந்த இரண்டு பொந்துகளுக்குள்
பழுத்த அவன் கண்கள்
நீர்கோர்த்திருக்கக் கண்டு
எனது குரலை
நெஞ்சுக்குழியில் சேமிக்கத் தொடங்கினேன்.
,
நான் தலையைக் குனிந்தபடி நடப்பதை
ஆச்சி பார்த்தால் திட்டுவாள்
நிமிர்ந்து நிற்பது போன்ற பாவம்
மனதுக்குள் மின்னலடித்துச் சென்றது
நான் குனிந்தே இருந்தேன்
அந்தக் கிழவன்
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்
எனது உடலில்
எனக்குத் தேவைப்படாத உறுப்புகள்
எவையெவையென சிந்திக்க வேண்டும்
,
இரவாக அவன் அமர்ந்திருந்தான்
நான் எனக்குள்ளேயே
அவமானப்படத் தொடங்கினேன்
இது ஒரு சடங்கு
அவ்வளவுதான்
நேற்று இரவுத் தூக்கத்துக்குள்
ஆறுதலைப் புதைத்து வைத்தது
ஞாபகத்துக்கு வந்தது
அவனின் வெளிரிய நரை
எனக்குள் தண்ணீருக்கான தாகத்தை
விழித்துக் கொள்ளச் செய்தது
அடுப்பு இடுக்குகளில்
எலி ஓடிய நாள் ஒன்றின்
நினைவாகவே இருக்கிறது
உச்சி வகிடு
இனி எனக்குப் பொருந்தாது
சத்தியமாக என்ற வார்த்தையை
இதுவரை நான் பயன்படுத்தியதே இல்லை
எப்படி இப்படி நடந்தது என
எண்ணியெண்ணி எனக்குள்
ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன்
நன்னீர் ஊற்று ஒன்றின்
வழி பிடித்து மலைகளைச்
சுற்றி வர வேண்டும் என்பது
எனது நிறைவேறாத ஆசைகளில்
ஒரு கோடியே இருபத்தியேழாவதாய் இருக்கிறது.
,
கிழவன் விழித்திருக்கிறானா தூங்குகிறானா
தெரியவில்லை
ஒரு வாக்கில் சாய்ந்து கொள்கிறான்
நிராசைகளை வண்ணத்தூரிகையிடம்
ஒப்படைத்துவிடுவதே நல்லது
சரித்திரப் புத்தகத்தில்
தூக்கில் தொங்கிய ஒருவனுக்கு
டிஸ்கோ பாடல்களின் போதையை
எடுத்துரைக்க முடியாத நிலை
துரதிர்ஷ்டவசமானது
எனது தற்கொலைக் கடிதத்தில்
எழுத்துப்பிழை இருக்கக்கூடாது என்பதில்
உறுதியாக இருக்கிறேன்
அரசாங்கப் பதிவேட்டில்
இறப்பிற்கான காரணம் என்ற இடத்தில்
கவிதை என்று நிரப்ப வேண்டும்
இதுவே என் கடைசி ஆசை
,
ஊசிக்குள் நூலைக் கோர்ப்பதிலுள்ள
சிக்கலின் சாராம்சம் பற்றி
இதுவரை யாரும் புத்தகம் எழுதாதது
வியப்பாக இருக்கிறது
தத்துவக் குழிக்குள் தவறி விழுந்து
செத்துப்போன
என் மூதாதையின் மடமையை
எனக்குள் சுவிகாரம் செய்த நாளிலிருந்து
கிழவன் என்னை உற்றுக் கொண்டிருக்கிறான்
காது குடையும் சுகத்தைப் பற்றி
அவன் சிந்தித்துக் கொண்டிக்கலாம்
தர்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு
நாய் அவதாரம் எடுத்த
கடவுளின் குரைப்பிலிருந்து
விடை கிடைக்கக்கூடும்
,
சடுதியில்
உனக்கொரு முத்தம் தரட்டுமா என்று கேட்பதற்கு
ஜனனி என்ற பெண்
அருகிலில்லாமல் போனது வருத்தமளிக்கிறது
கிழவனுக்கு கண் தெரியுமா? தெரியாதா?
யூகிக்க முடியவில்லை
சார்ட் பேப்பரின் நிறத்தை
முடிவு செய்யும் அதிகாரம்
அரசியலமைப்பு வரைவில் விடுபட்டுள்ளது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களென
ஒரு தோழியிடம் கேட்டதற்கு
அவள் வெடுக்கென
முகத்தைத் திருப்பிக்கொண்டாள்
தராசுகளின் மீதான நம்பகத்தன்மையை
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்துகொண்டிருக்கிறேன்
வீதி வெறிச்சோடிக் கிடப்பதை
நான் எதிர்பார்க்கவே இல்லை
அவனருகில் சென்று
ஒரு பீடி கடன் கேட்கலாம் தான்
வேற்றுமை உருபு மறைந்து வந்தால்
என்ன தொகை என்ற கேள்விக்கு
அஞ்சுபவனாய் இருக்கிறேன்
,
தனிப்பாடல்களின் சுவைப்பொருத்தங்களை
இசைக்கோர்வையில் வாசித்து
வெகு நாட்கள் ஆகிவிட்டது
கிழவனுக்கு பசி போலும்
ஆயாசத்தின் உச்சானிக்கொம்பிலிருந்து கிளம்பிய
பசி ஏப்பம் தெருவையே
விழுங்குவது போல் இருந்தது
தீர்க்தரிசனத்தின் குமைச்சல்
ஞாபகமறதியின் ஊளைக்காற்றில்
அற்றுப் போனது
சற்று நிம்மதியாக இருந்தது
புணர்ச்சியின் வாசனை
தூக்கத்தை வெட்டுகிறது
மறித்த உயிர்த்த எண்ணங்களை
ஞாபகச் சிறைக்குள் அடைத்து வைத்து
சித்திரவதை செய்கிறேன்
கிழவனுக்கு எச்சில் வளிகிறது
அதைத் துடைத்து விடும்
எண்ணத்தை அடித்துக் கொன்றேன்
,
எனது உள்ளுறுப்புகள்
சதைக்கூளங்களாய்ப் பட்டது
வெற்றுடம்பு என்பதன் அர்த்தம்
உறுப்புகளற்ற உடம்பாக இருக்கும் என்று
ஒரு கணம் தோன்றியது
உடம்பு அற்ற உடம்பு என்பதும்
வெற்றுடம்பின் அர்த்தமாக இருக்கலாம்
சற்று பொறுத்திருக்க வேண்டும் தான்
ஆனால் எதைப் பொறுத்திருக்க
,
சத்து வைத்திருந்த
கிழவனின் கைகள்
எனது உடம்பில் ஊறுவதுபோல் பட்டது
கீழிறங்கிய நினைவு உன்னிகளை
தூக்கமின்மையின் போலிக்கரங்களாய்
தர்க்கித்துக் கொண்டேன்
கண்களைப் பூலைகள் திண்பதான உணர்வை
எனக்கு விதித்துக் கொண்டேன்
நீந்தத் தெரியாத மீனின் உருவகத்தை
ஆழ்மனத்துக்கான வரைபடமாக ஏற்படுத்திக் கொண்டேன்
ஞாபக அடுக்குகள்
சீர்குலைந்து கிடப்பதில் ஏற்படும்
வெறியின்பத்தை நரம்புகளுக்குள்
கடத்துவதில் மும்முரமாகியுள்ளேன்
நாளம் தேடி ஊசியேற்றும் போதையனைத்தும்
தோற்றதென் முன்
தோல்களுக்குள் ஊறும்
உச்சி வெயிலின் சுரம்
உடலில் விழித்திருக்கும் சப்தநாடிகளோடு
குழைந்திறங்கி
மனதைத் தாண்டிய
சித்தத்தைத் தாண்டிய
இருட்டுக்குள் சேகரமாகிக் கொண்டிருப்பதான
பிரம்மை
எனது போதை
தனது குறி மேல் கையை வைத்துக்
கண்மூடிக்கிடந்தான் கிழவன்
சாவைத் தாண்டிய ஏதோ ஒன்று
அவனுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது
நெருப்புத் துண்டுகளால்
சுட்டுக்கொண்ட வடுக்கள்
அவனது உள்ளங்கால்களில் புள்ளிகளிட்டிருந்தது
மருந்துபோட வேண்டும் என்ற எண்ணம்
எழுந்த வேகத்தில் செத்துப்போனது
அவனது உருவத்துக்கு
முக்கியத்துவம் இல்லாததாகப்பட்டது
அவனது குரல்
இரக்கமற்ற குளிரின் பிடியில் சிக்குண்டு
ஒவ்வொரு இரவாக
மெல்ல மெல்ல உரைந்து
செத்திருக்க வேண்டும்
இப்போது சைகையும்
அவனுக்கு தேவைப்படாததாகிவிட்டது
அவன் கூச்சல்போட விருப்புகிறான்
பூமியிலுள்ள மனிதர்களின்
கேட்கும் சவ்வுகள் அறுந்து விடும்படி
கூச்சலிடும் ஜீவ இச்சை
அவனுக்குள் வேர்விட்டிருகிறது
அவன் எழுப்ப முயற்சிக்கும்
அத்தனை கூச்சலும்
இப்போது அவனுக்குள் சிறைப்பட்டிருக்கிறது
குரலற்றவனாய் இருப்பதை
அவன் நொந்து கொள்கிறான்
தனது கூச்சல்
வெளிப்பட வழியின்றி
தனக்குள் சிறைப்பட்டுத்
தன்னையே தின்றுகொண்டிருக்கும் அபத்தத்தை
அவனால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது
தனது ஜீவ இச்சை
தனது ஜீவனையே
மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருப்பதை
எதிர்த்து அவனால் செய்யமுடிந்ததெல்லாம்
தனது உடம்பில் அவன் ஏற்படுத்திக்கொண்ட
இந்த ஆறாத வடுக்களே
அதன் ரணத்தில்
அவனால் சற்று இளைப்பாறிக்கொள்ளமுடிகிறது
உயிரைத் தின்னும் பசியை
அவன் தியானிக்கிறான்
வெறுமனே அதை வெறித்தபடி அமர்ந்திருக்கிறான்
நொண்டுதல் அவனது நடை
கண்கள் அவனது குரல்
குறி அவன் உயிரோடு இருப்பதற்கான ஒரே சாட்சி
எப்போதும் அதை அவன்
இறுக்கமாகப் பற்றிக்கொள்வதற்கு
அதுவே காரணம்
அவன் அவனது குறியைப்
பற்றிக் கொள்கிறான்
அதன்மூலம் அவனது உயிரைப் பற்றிக்கொள்வதான
உறுதி அவனுக்குள் வேரிடுகிறது
அந்தக் கிழவன் என்னை தியானிக்கவில்லை
நானே அவனை தியானிக்கிறேன்
நான் அந்தக் கிழவனை தியானிக்கவில்லை
நான் என்னை தியானிக்கிறேன்
நானென்று அங்கு எவருமில்லை
நானென்று அங்கு நான் மட்டுமே உள்ளேன்
நானே அந்த கிழவன்
நானே அந்த கூச்சலையும்
இரைச்சலையும் தியானிக்கும் செவி
நானே அந்த
சாவை தியானிக்கும் செல்.
000
எனது பெயர் கி. தினேஷ் கண்ணன், இலக்கற்ற பயணங்களை விரும்புபவன். இலக்கியத்திலும் சினிமாவிலும் நாட்டம் உண்டு. கூதிர் இதழில் கண்ணிவெடிகளின் தேசம், ஐந்தாவது முத்திரை ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தீனன் என்ற பெயரில் இதுவே முதல் கவிதை. ஊர் இராஜபாளையம். தற்சமயம் இதழியல் துறையில் இயங்கி வருகிறேன்.