வா.மு.கோமு

ஒன்று

சின்னத்தம்பிக்கு ஏனோ பைத்தியமே பிடித்துவிடும் போலத்தான் இருந்தது. கையில் போனில்லை இரண்டு நாட்களாகவே. சாப்பிட அமர்ந்தால் சோறு இறக்கம் கொள்வதில்லை. பசியில்லாமலேயே அம்மா கூப்பிடுகிறதேயென சாப்பாட்டு மேஜைக்குச் சென்றான். வட்டிலில் இருக்கும் சாப்பாட்டை பிசைந்துகொண்டே இருந்தான். அம்மா அவனது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். அம்மாவுக்கு சின்னத்தம்பியின் நிலை புரிகிறதுதான் என்றாலும் அவளால் என்ன செய்ய இயலும்?

கொரனாகாலம் முடிந்து கொண்டிருந்த நேரத்தில் ஆன்லைன் கிளாஸ் என்று பிள்ளைகளுக்கு ஆரம்பித்து நடத்தினார்கள் பள்ளிகளில். அதற்காக ஐந்தாம் வகுப்பிலிருந்த சின்னத்தம்பியும் அப்பாவிடம் அடம்பிடித்து அவரது டச் ஸ்கிரீன் போனை கையில் ஒருமணி நேரம் வாங்கிக்கொண்டான். முன்பாக கேம்ஸ் விளையாடுவதற்கு மட்டுமே எப்போதும் பிடுங்கிக்கொண்டு தன் அறைக்குள் ஓடிச்சென்று கதவை உள்பக்கமாக தாழ்பாளிட்டுக்கொண்டு அமர்ந்துவிடுவான். அவனுக்கு புதிய புதிய கேம்ஸ்களை தரவிறக்கி புதிது புதிதாக விளையாடுவதே பிடிக்கும்.

அப்படி தரவிறக்கி இவன் விளையாடுவதால் அப்பாவின் பாடும் திண்டாட்டமாகிவிடுகிறது. அவருக்கு முகநூலில் ஓய்வான நேரங்களில் சில பதிவுகளைப் போட்டு அதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வருகிறதாவென பார்க்கவேண்டும். போக யூடியூப்பில் பலவித வீடியோக்களையும் பார்க்க வேண்டும். சின்னத்தம்பி ஒருமணிநேரத்தில் அன்றைய நெட்டை முழுதும் காலிசெய்துவிடுவான். என்னதான் சொல்லிச் சொல்லி, அடம்பிடிக்கிறானே என்று கொடுத்தாலும் முதல்வேளையாக சின்னத்தம்பி கேம்ஸ் இறக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அவனுக்கு நெட்டு தீர்ந்துவிடுவதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.

இப்படித்தான் நடந்துகொண்டே இருந்தது வீட்டில். ஆன்லைன் வகுப்பு என்றதும் அப்பா இவனுக்காக ஐபோன் ஒன்றை வாங்கிக்கொடுத்துவிட்டார். இதெல்லாம் காலத்தின் மாற்றம் என்று மனதை தேற்றிக்கொண்டார். அவர் காலத்தில் இப்படியெல்லாம் கேட்டதும் எந்தப்பொருளும் அவர் கைக்கு கிடைத்ததேயில்லை. காலிற்கு அணியும் செருப்பைக்கூட அவரது அப்பா வாங்கித்தருவதில் காலதாமதப்படுத்துவார். இப்படியிருக்க பொழுதுபோக்கு கருவிகளை வாங்கித்தருவாரா அவர்?

முன்பெல்லாம் பள்ளியில் இவர் படிக்கையில் ஒவ்வொரு வகுப்பாசிரியரும் அறைக்குள் வருகையில் அப்படி பயமாய் இருக்கும். எல்லா ஆசிரியர்களுமே கையில் தடி வைத்திருப்பார்கள். கேள்விகளுக்கு தவறான பதில் சொல்லிவிட்டால் அவர் முன்பாகச்சென்று சென்று கையை நீட்ட வேண்டும். சின்னத்தம்பியின் அப்பாவிற்கு கணக்குப்பாடம் சரியாக வராது. தினமும் கணக்கு ஆசிரியரிடம் தவாறாகச்செய்து கையை நீட்டி அடிவாங்குவார்.

சிலசமயம் அடிவிழப்போகும் நேரத்தில் கையை பின்னுக்கு இழுத்துவிடுவார். பின்பாக ஆசிரியர் மற்றொருவனை வரவைத்து இவரது கையை பிடித்துக்கொள்ளச்சொல்லி ஓங்கி அடிப்பார். இவரது உள்ளங்கைகள் இரண்டுமே சிவந்துவிடும். ரொம்பநேரம் தீயாய் எரியும்.

இன்று வகுப்பறையில் பிள்ளைகளை எந்த ஆசிரியரும் அடிப்பதில்லை. கல்விமுறையே மாறிவிட்டது. எல்லாப்பிள்ளைகளும் மகிழ்வாகவே விடுமுறை நாட்களில் இருக்கிறார்கள். பரீட்சை வருகிறதே என அவர்களுக்கு எந்தவித பயமுமே இல்லை. ஆனாலும் நல்ல மதிப்பெண் பெற்று தேறிவிடுகிறார்கள். இதெல்லாம் இவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிள்ளைகள் இப்போதெல்லாம் அடிக்கடி பள்ளியிலிருந்து டூர் போகிறார்கள். தாங்கள் பார்த்துவந்த ஊர்கள் பற்றியோ, கடல் பற்றியோ மகிழ்வாய் வீட்டிற்கு வந்தபின் அவர்கள் சொல்வதில்லை. சின்னத்தம்பி பள்ளியின் வாகனத்திலேயே தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சுற்றுலா என்று இந்த வயதிலேயே போய்வந்துவிட்டான். ஆனால் சின்னத்தம்பியின் அப்பா அந்த ஊர்களையும் ஊரின் சிறப்புகளையும் யூடியூப் வாயிலாக மட்டுமே காண்கிறார்.

அவர் காலத்தில் வருடம் ஒருமுறை சுற்றுலா செல்வார்கள். சின்னத்தம்பியின் அப்பா தன் தந்தையாரிடம் அதுபற்றி சொல்வார். ’பெரிய பையனாகி காலேஜ் போகிறப்ப இதைவிட பெரிய டூர் போயிக்கலாம்’ என்று ஒரே சொல்லில் முடித்துவிடுவார். அவர் என்றுமே சுற்றுலா என்று பள்ளியிலிருந்து போகவேயில்லை.

இப்படித்தான் நேற்று சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு பள்ளியிலிருந்து சின்னத்தம்பி மற்ற மாணவர்களோடும் வகுப்பு ஆசிரியர்களோடும் சென்று வந்திருந்தான். வந்தவன் தயங்கிக்கொண்டே அந்த விசயத்தை அம்மாவிடம் முதலாகக்கூறினான். அவனது ஐபோனை எங்கோ தவறவிட்டுவிட்டு வந்துவிட்டான். விசயத்தை அம்மா வாயிலாக அறிந்து கொண்ட சின்னத்தம்பியின் அப்பா அதிர்ந்து போனார்.

ஆறாவது வாசிக்கும் சின்னத்தம்பி ஏற்கனவே இரவு நேரங்களில் நேரமே படுத்து தூங்காமல் இரவு பதினொருமணிவரை கேம்ஸ் ஆடிக்கொண்டே இருந்துவிட்டு தூங்குகிறான். அதைப்பற்றி பேசினாலே அவன் முகம் உம்மென்று ஆகிவிடுகிறது. பையனுக்கு அம்மா ஏகப்பட்ட சப்போர்ட் வேறு. ‘உங்களுக்குத்தான் போன்ல கேம்ஸ் ஆடத்தெரியாது. அவனுக்குத் தெரியுது. வெளியவா போயி பையன்களோட ஆட்டம் ஆடீட்டு வர்றான்? வீட்டுல தானே படுத்துட்டு விளையாடிட்டு இருக்கான். அவனை திட்டுறதே உங்க வேலையாப்போச்சு எந்த நேரமும்!’ என்று சொல்லிவிடுவாள்.

சின்னத்தம்பியின் அப்பா அதற்குப்பிறகு பையனை கண்டிப்பதை விட்டுவிட்டார். ஆனால் ஐபோனையே விட்டுவிட்டு வீடு வந்தவனை கொஞ்சவா முடியும்? ’பணத்தின் அருமை உங்க ரெண்டு பேருக்கும் எப்போத்தான் புரியும்னே தெரியல. இன்னைக்கி போனை தொலைச்சுட்டு வீடு வந்தவன் நாளைக்கிம் இப்படித்தானே எல்லாவிசயத்திலயும் கவனமில்லாமல் இருப்பான்!’ என்று சின்னத்தம்பியை முதலாக திட்டி முடித்தவர் தன் மனைவிக்கும் சேர்த்து கடைசியாய் அர்ச்சனையை போட்டார்.

சின்னத்தம்பிக்கு அன்றைய இரவு முழுதுமே தூக்கம் வரவில்லை. தன் கையையே இழந்தது போல ஆகிவிட்டது. வகுப்பாசிரியை எல்லோருடைய பையையும் சுத்தமாக பரிசோதித்துப்பார்த்தார் இவனது போனை காணவில்லை என்றதுமே! பள்ளிக்கு யாரும் போனை எடுத்துவரக்கூடாது தான். ஆனால் இப்படி சுற்றுலா என்று செல்கையில் அவர்கள் தங்கள் அலைபேசிகளில் படங்களை எடுத்துக்கொள்ளட்டுமே, என்று அதற்கு அனுமதி அளித்திருந்தார்.

அதனால்தான் சின்னத்தம்பியின் ஐபோன் திருடுபோய்விட்டதோ? என்று அவர் கவலைப்பட்டார். ஆனால் யாரும் அந்தப்போனை திருடவுமில்லை. அவனது எண்ணுக்கு வேறு போனிலிருந்து அழைத்தால் ரிங் ஆகியது. ஆனால் அதை எடுத்துப்பேசுவார் யாருமில்லை. இறுதியாக அவனது போனை சத்தியமங்கலம் வனத்திலேயே அவன் தவறவிட்டுவிட்டு வந்துவிட்டான் என்று ஆசிரியை முடிவுக்கு வந்துவிட்டார். இதற்காக இன்னொருமுறை திரும்பவும் செல்லமுடியுமா என்ன? அப்படிச்சென்றாலும் அது எங்கே கிடக்கிறதோ!

இவனது காரியத்தினால் இனிமேல் சுற்றுலா என்றால் யாரும் அலைபேசியை எடுத்துவரவே கூடாது என்ற உத்தரவையும் அவர் அங்கேயே போட்டுவிட்டார். பையன்களுக்கு சின்னத்தம்பிமீது கோபம். ‘எல்லாமும் இவனால் தான். சோம்பேறிப்பயல் இவன்’ ‘தினமும் சாப்பாட்டு கேரியரை மட்டும் எவ்ளோ கரைக்ட்டா தூக்கிட்டு வீடு போறான். அதை மறக்க மாட்டேங்கிறானே. ஐபோன் விலைகூட தெரியாத பயலுக்கு வாங்கிக்குடுத்திருக்காங்க பாரு இவன் வீட்டில். இவனுக்கெல்லாம் இவங்க வீட்டுல தைய தையா தைய தையான்னு ஒரே பாட்டை அழுத்துனா படிக்குமே.. அந்த ஐம்பதுரூவா போனை இவங்க அப்பா இவனுக்கு பேன்ஸி கடையில வாங்கி குடுத்து விளையாடுடா மகனேன்னு குடுத்திருக்கலாம்! அவரு பணம் போச்சு பாவம்!’ என்று ஆளாளுக்கு கருத்து சொன்னார்கள்.

சின்னத்தம்பிக்கோ மண்டையை பிய்த்துக்கொள்ளலாம் போன்றே இருந்தது. தனக்கு மந்திரம் தெரிந்தால் ‘ஜீம்பூம்பா!’ சொல்லி அந்தப்போனை இப்போதே கைக்கு வரவைத்து விடலாமே! என்றெல்லாம் யோசித்து குழம்பிப்போனான்.

இன்னும் இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை. வீட்டில் எப்படி இருப்பது? நினைத்தாலே பயமாயும், வேதனையாயும் இருந்தது. அம்மாவிடம் சொல்லி வேறொரு ஐபோன் வாங்கித்தரச்சொல்லி விடலாம். அம்மா சரி என்றுதான் சொல்லும். அவனுக்கு நம்பிக்கையாய் இருந்தது. ஆனால் அம்மா அதை காதுகொடுத்து கேட்கவேயில்லை. மீண்டும் மீண்டும் கேட்டான்.

”என் கையில என்ன இருக்குது சாமி? நானா பணம் வெச்சிருக்கேன்? நானா வேலைக்கிப்போயி சம்பாதிக்கிறேன்? அப்படி நான் வேலைக்கிப்போயிட்டு வந்தால் கூட மளார்னு உனக்கு வாங்கிக்குடுத்துடுவேன்! அப்பா கிட்டயும் ஏது சாமி அவ்ளோ பணம்? உன்னை படிக்க வைக்கிற செலவு, நீ ஸ்கூலுக்கு போற வேனுக்கு மாசாமாசம் பணம் அப்படின்னு எத்தனை செலவிருக்குது. நீ கவனமில்லாம எங்கயோ காட்டுல போட்டுட்டு வந்துட்டு இன்னொரு போனு வாங்கிக்குடுன்னு சொல்லிட்டு இருக்குறே?” என்று சொல்லிவிட்டது.

சின்னத்தம்பி பக்கத்துவீட்டு நல்லசாமியிடம் ஓடிச்சென்று, அவனது போனை ஒரு மணி நேரம் கேம்ஸ் விளையாடிவிட்டு தருவதாய் கேட்டான். அவனோ, ‘இதையும் வாங்கீட்டு போயி ஒருமணி நேரத்துல தொலைச்சிட்டு வந்து காணாமப்போயிடுச்சு நல்சு! அப்படின்னு சொல்லுவேடா நீயி. எங்கப்பா உங்கப்பாவாட்டம் வாயில மிரட்ட மாட்டாரு. தடியெடுத்து சாத்து சாத்துன்னு சாத்தீருவாரு தெரிஞ்சுக்கோ! அதனால நான் தரமாட்டேன்.’ என்று சொல்லிவிட்டான்.

முகத்தை தொங்க வைத்துக்கொண்டு சாலைக்கு வந்தவன், ‘எனக்கு இப்ப போனு வேணும்!’ என்று நடுத்தெருவில் நின்று கத்தலாமா? என்று கூட நினைத்தான். அவன் மனசு முழுக்க போனு போனு போனு என்றே சொல்லிக்கொண்டிருந்தது. வேறு யாரிடம் போய் ஒரு மணிநேரம் கேம்ஸ் விளையாட கேட்கலாம்? யாராவது வாடகைக்கு போன் தருவார்களா? ச்சே! இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கிறேனே! ச்சே!

யாரிடம் போய் இந்த வீதியில் கேட்டாலும் போனை தரமாட்டார்கள். நேற்று இரவே இந்த வீதி முழுக்க இவன் சத்தியமங்கலத்தில் ஐபோனை தொலைத்துவிட்டு வந்த விசயம் பரவிவிட்டது. ரெண்டு தெரு தள்ளிப்போனால் முருகேசன் வீடு இருக்கிறது. அவனும் இந்த நேரம் அவன் அம்மா அப்பாவிடம் என் விசயத்தை சொல்லியிருப்பான்.

எங்கும் யாரையும் போய் போன் கேட்க முடியாது. ஐய்யோ! இப்ப என்னதான் செய்வது?

அப்பா போனை திருடி அறையில் ஒளித்து வைத்துக்கொள்ளலாமா! விடுமுறை நாட்களில் பூங்கா பக்கமாகச் சென்று பகலில் அமர்ந்து கேம்ஸ் விளையாடலாம். பின்பாக இரவு நேரத்தில் சப்தம் வெளிவராமல் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பத்துமணிக்கும்மேல் விளையாடலாம். அப்பா போனை திருடிவிட்டால் அப்பா வேறு போன் வாங்கிக்கொள்வார்.

அப்படி இல்லையென்றால் மாமனுக்கு ஒரு போன் போடலாமா? மாமனிடம் விசயத்தை சொன்னால் அவர் வாங்கிக்கொண்டு வீடு வந்தே கொடுத்துவிட்டுச் செல்வாரே! மாமன் தங்கமான மாமனாயிற்றே! எதற்கும் அம்மாவிடம் கேட்டுப்பார்க்கலாமென வீடு வந்தான்.

அம்மாவிடம் அந்த விசயத்தைச் சொன்னான்.

”ஏன்டா, உன்னோட மாமன்காரன் அந்தக்காலத்து பட்டன் போனை வச்சுட்டு சுத்துறது உனக்குத்தெரியாதா? ரெண்டு பிள்ளையை பெத்து அதுங்களை படிக்க வைக்கவே சிரமப்பட்டுட்டு இருக்கான். நீயி இனி போனு போனுன்னுட்டு என்கிட்ட வந்து பேசாதே சின்னத்தம்பி. ஐம்பதாயிரம் ரூபா போனை கொண்டுபோய் சத்தியமங்கல காட்டுக்குள்ள விதைச்சுட்டு வந்திருக்கே தெரியுமா? நான்கூட எதோ பத்தாயிரம் ரூவா போனுன்னு நெனச்சுட்டு இருந்தேன் இத்தனை நாளா! ஆளையும் மண்டையையும் பாரு.’ என்று திட்டவும், சின்னத்தம்பி நேராய் தன் அறைக்குள் வந்து படுக்கையில் சாய்ந்தான்.

அவனால் நிம்மதியாய் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து சென்று அம்மாவின் பட்டன் போனை கேட்டான். ‘அது எதுக்கு?’ என்று கோபமாய் அம்மா கேட்டது.

“அம்மா, என்னோட நெம்பருக்கு போனு போடும்மா.. யாராச்சிம் எடுத்திருந்தா பேசுவாங்கம்மா!’ என்றான். அம்மா தனக்குள் முனகிக்கொண்டே போய் தன் போனை எடுத்துவந்து அவனிடம் கொடுத்தது. சின்னத்தம்பி அதிலிருந்து தன் போனுக்கு கூப்பிட்டான். அது ரிங் ஆகியது. ‘யாராச்சிம் எடுங்க.. எடுங்க.. எடுத்து பதில் சொல்லுங்க’ என்று தவித்தான் சின்னத்தம்பி. எதிர்பார்த்த மாதிரியே போனை எதிர்முனை எடுத்துவிட்டது.

“ஏனுங்க, நான் சின்னத்தம்பிங்க.. உங்க கையில இருக்குற போனு என்னுடையதுங்க! பேசுங்க!” என்றான்.

“கீக்க்கீக்க்கீக்! கீக்கீக்!” என்றது எதிர்முனை. சின்னத்தம்பிக்கு அந்தக்குரல் யாருடையதென தெரியவில்லை. மீண்டும் பேசச்சொன்னான். ‘கீக்க்கீக்க்கீக்’ என்றே பதிலளித்தது எதிர்முனை மீண்டும். சின்னத்தம்பிக்கு அந்தக்குரல் பிடிபட்டுவிட்டது.

“அம்மா! என் போனை ஒரு கொரங்கு எடுத்து வச்சிருக்குதும்மா!” என்றான் சப்தமாய்.

“கொரங்கு கையில பூமாலை கெடச்சா என்னாகும்னு பழமொழியே இருக்குடா! மொத போன்காலை கட் பண்ணுடா.. அதுல பத்துரூவாயோ என்னமோதான் இருந்துச்சு!” என்றாள் அம்மா.

“நான் போலீஸ் ஸ்டேசன் போயி கம்ப்ளெய்ண்ட் எழுதிக்குடுக்கப்போறேன்மா!”

“என்ன கொரங்கு திருடிட்டு போயிடுச்சுன்னா?”

“ஆமாம்மா! அப்படித்தானே எழுதிக்குடுக்கணும் நானு. அவங்க ரொம்ப ஈஸியா கொரங்கைப்பிடிச்சு அதுகிட்ட இருந்து என் போனை வாங்கிக்குடுத்துடுவாங்கம்மா”

“ஆமாம்டா.. அதுக்கு ஐம்பதாயிரம் செலவாகுமே..”

“அதுக்கு எதுக்குமா செலவாகுது?”

“உனக்குச் சொன்னப்புரியாதுடா.. போயி கம்முன்னு படு. அம்மா உனக்கு நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் இப்ப!”

“எனக்கு நூடுல்ஸும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு என் போனுத்தான் வேணும்!”

“நீ பொறந்ததுல இருந்து நானும், உன் அப்பாவும் ஒரு அடி அடிச்சதில்லடா.. அடி வாங்கிக்காதே!”

“நான் என்னம்மா தப்பு பண்ணினேன்? என் போனைத்தானே கேக்குறேன்”

“சாமி சாமியா இருப்பேடா சின்னத்தம்பி. உங்கப்பா சாயந்தரம் வந்தா இப்படி வீட்டுக்குள்ள நீயி அவருகிட்ட போனு நாயம் பேசிக்கோ. ரெண்டுபேரும் போயி போலீஸ்ல எழுதிக்குடுங்க. நான் வேண்டாங்கல. நீ போனு போனுன்னு பேசினா எனக்கு பைத்தியம் பிடிச்சுக்கும் இந்த வீட்டுல!” என்று அம்மா சொல்லவும் மீண்டும் தன் அறைக்கே திரும்பினான் சின்னத்தம்பி.

சின்னத்தம்பிக்கு முகநூலிலும் கணக்கிருக்கிறது. அதில் ஆயிரத்தி இருநூறு நண்பர்கள் இருக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் எடுத்த போட்டோக்களையெல்லாம் நண்பர்கள் இந்த நேரம் முகநூலில் போட்டு லைக்குகள் வாங்கி மகிழ்ந்துகொண்டிருப்பார்கள். எல்லாம் போயிற்று!

இவன் போன் தொலைந்துபோனது பற்றிக்கூட யாரேனும் போட்டிருப்பார்கள். அழுத சிம்பள் குத்தியிருப்பார்கள். சிலர் சிரிப்பு சிம்பள் குத்தியிருப்பார்கள். எல்லாம் போயிற்று. ‘போனு இப்ப வேணும்!’ என்று தலையணையை குத்தினான் கைகளால். பின்பாக அப்படியே மல்லாக்க சாய்ந்தான்.

போன் இல்லாமல் இனி இந்த உலகத்தில் இருக்கமுடியாது. போன் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அப்பாவை மிரட்டினால் பயந்து வேறு புது போனை வாங்கி கொடுத்துவிடுவார். அப்பாவை எந்தெந்த வழிகளில் மிரட்டலாம்? ஐயோ! போன் எனக்கு இப்ப வேணும்!

சந்திரிகா டீச்சரிடம் சென்று போலீஸ் ஸ்டேசன் செல்வதைப்பற்றி பேசலாமா? டீச்சரும் கம்ளெய்ண்ட் குடுக்க கூடவே வருவாரா? போலீஸ் இதற்கும் முன்பாக திருட்டுக்குரங்கை கைது செய்திருக்கிறார்களா? இப்படி ஏகத்துக்கும் குழம்பிக்கிடந்தான் சின்னத்தம்பி. இங்கே இப்படியிருக்க நாம் சத்தியமங்கலம் வனத்துக்குள் செல்வோமா? செல்வோம்!

000

இரண்டு

சத்தியமங்கலம் வனத்தில் குரங்குக்கூட்டமொன்று மிக்க மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தது. அதில் மருதன் என்கிற குரங்கு துடுக்குத்தனமும் குறும்பு மிக்கதாயும் இருந்தது. அது தன் கூட்டத்தாரின் பேச்சுக்களையும், தாய் தந்தையரின் பேச்சுக்களையும் அப்போதைக்கு ‘சரி’ என்று சொல்லி ஏற்றுக்கொள்ளும். அன்றைய பொழுது சாய்வதற்குள்ளாகவே அதை மறந்துவிடும் குணம் பெற்றிருந்தது. அதனால் அதற்கு புத்திமதி என்று யாரும் எதையும் சொல்வதுமில்லை.

அதை மிக தாமதமாக உணர்ந்த மருதன் குரங்கானது தன் நண்பர்களான மீனா முயலிடமும், கானா காக்காவிடமும், ‘எனக்கு புத்திமதிகளை வழங்குவதற்கு யாருமில்லை!’ என்று வருத்தப்பட்டு அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டது. மருதன் குரங்கிற்கு இருந்த வருத்தம் போன்றே கானா காக்காவுக்கும் வருத்தங்கள் பல இருந்தது.

அதில் தன் கானா பாடல்களை இந்த வனத்தில் கேட்டு ரசிக்க ஒருவருமில்லையே என்கிற கவலைதான். கானா காக்கா தன்னை ஒரு கானா பாடகனாக நினைத்துக்கொண்டிருந்தது. வனத்தில் வருடம் ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் எப்போதுமே பாடல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும். வருடா வருடம் குமுதா குயில் பாடல் போட்டியில் பரிசை தட்டிச்சென்றுவிடும். அது கானா காக்காவிற்கு பெருத்த துன்பத்தை தந்துகொண்டிருந்தது.

தன் குரல்வளத்தை மேம்படுத்த குளத்தில் பாதியளவு கழுத்தை மட்டுமே மேலே வைத்துக்கொண்டெல்லாம் பாடல் பாடி பிராக்டீஸ் எடுத்துக்கொள்ளும். இறுதியாக கானகத்தில் பாடல் போட்டிக்கு நடுவர்களாக வரும் நரியாருக்கு போதிய இசை ஞானமில்லை என்று வனம் முழுவதும் தகவலைச்சொல்லி பரப்பிவிட்டு விட்டது.

இதனால் இந்த வருடம் நடைபெறும் பாடல் போட்டியில் நடுவராக நரியாரை நியமிக்க மாட்டார்கள் என்ற பேச்சும் அங்கே நிலவிவந்தது. அதனால் புதிதாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு கானா பாடல்களின் மகிமை தெரியும் என்றும், நிச்சயம் பரிசு எனக்குத்தான் என்றும் அது தகவலை வனம் முழுக்க கசியவிட்டுக்கொண்டிருந்தது.

மீனா முயலால் வேகமாக ஓட முடியாது. அதற்கு குண்டான உடல்வாகு இருந்தது. யாகவா யானை சொல்லக்கேட்டு தன் காலை உணவை நிறுத்தியும் உடல் இளைக்காமல் போனதுபற்றி வருத்தப்பட்டு அது பேசிக்கொண்டிருக்கும்.

மீனா முயல் தன் உடல் எடையால் தன் வளைக்கும் அருகாமையிலேயே தான் சுற்றிக்கொண்டிருக்கும். வனத்தில் நடைபெறும் விருந்து விஷேசங்களுக்கெல்லாம் செல்லாது. வனத்தில் தன்னை கொன்று உண்ணும் விலங்கினங்கள் நிறைய இருக்கின்றன என்று அது சொல்லிக்கொண்டேயிருக்கும்.

மருதன் குரங்கு அன்று மாலையில் குளத்தங்கரை பக்கமாக தண்ணீர் அருந்துவதற்காக தனியாக வந்துகொண்டிருந்தது. அதற்கு இந்தக்குளத்தில் வாழும் முதலையை பிடிக்காது. குளத்தின் நடுவில் முதலை தென்பட்டது என்றால் தண்ணீர் அருந்திவிட்டு அதனைப்பார்த்து பற்களைக் காட்டி சிரிக்கும். முதலையை கோபப்படுத்திப்பார்ப்பது அதற்கு வேடிக்கையாக இருக்கும்.

“வாடா முதலை வா வா! வா ஒருகை பார்த்துடறேன் இன்னிக்கி உன்னை!” என்று கைகளை உயர்த்திகொண்டு அழைக்கும்.

“போடா பொடிப்பயலே!” என்று சொல்லிவிட்டு முதலையும் மருதன் குரங்கை கண்டுகொள்ளாமல் இருக்கும். மருதன் குரங்குக்கு இது தொக்காகிவிடும். ‘பேடிப்பயல்! ஆளு ஆறடி இருந்து என்ன பிரயோசனம்? வேஸ்ட்டு. பேடிப்பயல்!’ என்று சொல்லிவிட்டு தான் ஜெயித்துவிட்டதாக தன் கூட்டத்தாரிடம் சென்று சொல்லி பெருமைப்படும். கூட்டத்தாரோ மருதன் குரங்கிற்குத்தான் புத்திமதிகளை சொல்ல மாட்டார்களே! பட்டால்தான் தெரியும் என்று ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

அன்று முதலை எங்கேனும் கரையோரத்தில் இருக்கிறதா?வென உன்னிப்பாய் பார்த்துவிட்டு தண்ணீரை நோக்கிச் சென்றது மருதன் குரங்கு. குளத்தங்கரையில் ஒரு காக்கா குருவி இல்லை. அமைதியாக காட்சியளித்தது குளம். தண்ணீர் அருந்திவிட்டு திரும்புகையில் முதலை இதன் நேர் எதிர்க்கே முறைத்துப்பார்த்தபடி தரையில் நின்றிருந்தது.

“நீயி எப்பயும் தண்ணிக்குள்ள தானே இருப்பே முதலை.. இப்ப என்னடான்னா தரையில இருக்கே? ஆச்சரியமா இருக்கே!” என்று பயப்பட்டதை காட்டிக்கொள்ளாமல் பேசிற்று மருதன் குரங்கு.

“இன்னிக்கி உன்னை சாப்பிடலாம்னு கரைக்கு வந்து அந்த மரத்தடியில காத்திருந்தேன். மாட்டினியா இன்னிக்கி!”

“நானெங்கே மாட்டினேன்? நீ தான் மாட்டிக்கிட்டே! உன் பின்னாடி திரும்பிப்பாரு.. என்னோட யானை நண்பனை கையோட என் பாதுகாப்புக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்!” என்று மருதன் குரங்கு சொல்லவும், முதலை ‘எங்கே?’ என்று தன் உடலை வளைத்து திரும்பிய சமயத்தில் ஒரே தாவாக குளத்தை விட்டு மேலேறிய மருதன் குரங்கு அங்கிருந்த நாவல்பழ மரத்தில் ஏறிவிட்டது.

யானை என்றதுமே பயந்துபோன முதலை திரும்பிப்பார்த்து அங்கு யாருமில்லை என்றதும் நிம்மதியாய் திரும்ப, எதிரே குரங்கை காணவில்லை. ‘எங்கடா ஏமாத்திட்டு ஓடினே குரங்குப்பயலே!’ என்று கோபத்தில் கத்தியது முதலை.

“நான் இங்க இருக்கேன் முதலையாரே! இதா!” என்று வாலால் கிளையைப்பற்றி தலைகீழாக தொங்கிய மருதன் குரங்கு முதலைக்கு கையை அசைத்தது.

“இதெல்லாம் போங்காட்டம். நீதானே என்னை சண்டைக்கி கூப்பிட்டுட்டே இருப்பே எப்போதுமே. இப்ப ஏன் ஓடிப்போயிட்டே? வா மோதிப்பார்க்கலாம்!”

“இன்னிக்கி எனக்கு மூடு இல்லை முதலையாரே. இன்னொரு நாள் நாம் மோதிக்கலாம்” என்றது மருதன்.

“அது எந்த நாள்னு ஒரு தேதியை நீ பிக்ஸ் பண்ணு. அன்னிக்கே நாம சண்டையை வச்சிக்குவோம்” என்றது முதலை.

“இந்தக்குளத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நீ ஒருத்தன் தான் இருக்கே முதலையாரே. நீயும் என் கையால போயிட்டீன்னா உன் இனமே அழிஞ்சுடும் தெரியுமா? ஆனா நான் போயிட்டாலும் எங்க இனத்துல கூட்டம் கூட்டமா இருக்கோம் தெரிஞ்சுக்க!”

“ஆமா! நீ சொல்றதும் நாயம் தான். இந்தக்குளத்துக்கு நான் ஒருத்தன் தான் இருக்கேன். நானும் ஒருகாலத்துல கூட்டத்தோட கூட்டமாத்தான் இருந்தேன். அப்ப நான் துக்களியூண்டு சைசுல இருந்தேன். ஒருநாளு இந்தக்காட்டுல நல்ல மழை. வெள்ளம் வந்துடுச்சு. அது எங்க கூட்டத்தையே அடிச்சுட்டு வந்துச்சு. அப்படி வந்ததுல நான் ஒருத்தன் தான் நீ உட்கார்ந்துட்டு இருக்குற மரத்தோட கிளையில மாட்டிட்டேன். வெள்ளம் வடிய வடிய அதோட வேகம் மட்டுப்பட்டுச்சு. நீ இருக்குற இடம் வரைக்கும் இந்தக்குளம் பெருசா இருந்துச்சு அப்ப. நான் ஒருத்தன் மட்டுமே அப்போயிருந்து இங்கே தனியா இருக்கேன். உனக்குத்தெரியுமா.. எனக்கு நண்பன்னு சொல்லிக்கறதுக்குகூட ஒருத்தருமில்ல இந்த வனத்துல! நீ என்னடான்னா தினமும் வந்து பேசாம தாகத்துக்கு தண்ணியை குடிச்சுட்டு போறதை விட்டுட்டு வம்புச்சண்டைக்கி இழுக்குறே!”

“உன் கதையை கேக்குறப்ப எனக்கு கண்ணீர் வருது முதலையாரே! என்னைய மன்னிச்சுக்கோ! நான் சும்மா வெளையாட்டுக்கு உன்னை உசுப்பேத்தி சண்டைக்கி கூப்பிட்டேன். நீயும் இனி என்னோட நண்பன் தான். எனக்கு மீனா முயலும், கானா காக்காவும் நண்பர்களா இருக்காங்க!”

“அப்படியா?”

“என்ன வாயை நீ அப்படி திறந்து, அப்படியா?ங்கறே! அவங்க ரொம்ப நல்ல நண்பர்கள். அவங்களை நாளைக்கி நான் இங்க உனக்கு கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்துறேன் சரியா!”

“காக்காவெல்லாம் உனக்கு நண்பனா?”

“ஏன் இருக்கக்கூடாதுங்கறியா? அவன் பாட ஆரம்பிச்சான்னு வச்சுக்கோ.. யாரா இருந்தாலும் அப்பவே தூங்கியாகணும். அவ்ளோ பவர் இருக்கு அவன் பாட்டுல!”

“அதான் எனக்கும் தெரியுமே! இந்தக்கொளத்துல தானே அந்தக்காக்கா தினமும் காலையில வந்து முங்கீட்டு பாடிட்டு இருக்கும். நான் அப்போத்தான் தூங்கி விழிப்பேன். ஆனா அது பாட ஆரம்பிச்சதுமே மறுபடியும் எனக்கு தூக்கம் வந்துடும்”

“அப்படியா? அப்ப அவனை உனக்கு முன்னமே தெரியும்னு சொல்லு! அவன் நல்லா பாடுவானே!”

“நல்லா பாடுறானான்னு தெரியாது எனக்கு.. ஆனா தூங்கிடுவேன் நல்லா!” என்றபோது அருகில் ‘டிரிங் டிரிங் டிரிங்!’ என்ற சப்தம் கேட்டது இருவருக்குமே. அது என்ன சத்தம்? என்று இரண்டுமே சத்தம் வந்த திசையைப்பார்த்தன. அங்கே ஒரு செல்போன் தான் கிடந்தது. மருதன் மளாரென மரத்திலிருந்து இறங்கினான். அந்த செல்போனை நோக்கிச் சென்றான். முதலை பயந்து பின்வாங்கியது.

“அடக்குரங்கே! உனக்கு பயம்னு ஒன்னு இருக்கா இல்லையா? அது வெடிகுண்டா இருந்துடப்போவுது.. வா சீக்கிரம் இந்த குளத்துக்குள்ள நாம் ஒளிஞ்சுக்கலாம்” என்று கத்தியது. மருதன் குரங்கு செல்போனின் அருகில் சென்றதுமே அது தன் ஒலியை நிப்பாட்டிவிட்டது.

மருதன் செல்போனின் அருகில் அமர்ந்து ஆராய்ச்சியாளன் போல அதை உன்னிப்பாய் பார்த்தது. ‘இது என்னவாயிருக்கும்?’ என்று தலையை சொறிந்து யோசித்தது. இதற்கும் முன்பாக இப்படியொரு பொருளை அது பார்த்ததேயில்லையே! அப்போது மீண்டும் அந்த போன் ‘டிரிங் டிரிங் டிரிங்’ என்று ஒலியெழுப்பவே துள்ளிக்குதித்தது மருதன் குரங்கு.

“அது நிச்சயாம வெடிகுண்டாத்தான் இருக்கணும். இன்னிக்கி நீ செத்தே” என்று முதலை தண்ணீருக்குள் பாய்ந்தது. சீக்கிரமாய் குளத்தின் நடுப்பகுதிக்கு போய்விடவேண்டுமென வேகமாய் கத்தி மாதிரி சென்றது. குளத்தின் நடுமையத்திற்கு வந்த முதலை குரங்கு என்ன செய்கிறதென திரும்பிப்பார்த்தது. மருதன் குரங்கு அந்த செல்போனை கையில் எடுத்துப்பிடித்து பார்த்துக்கொண்டிருந்தது.

அப்போது மீண்டும் ‘டிரிங் டிரிங் டிரிங்’ என்று ஒலி எழும்பவும் அதை புல்தரையில் கீழே விட்டுவிட்டது பயத்தில். மருதன் குரங்கிற்கு அது என்ன பொருளென தெரியாவிட்டாலும் அதை இங்கேயே போட்டுவிட்டுச் செல்வதில் விருப்பமில்லை. பார்க்க அழகாய் இருக்கும் அதை தூக்கிச்செல்ல ஆசைப்பட்டது. தனக்கு இதைப்பற்றி தெரியாவிட்டாலும் தன் நண்பர்கள் யாருக்கேனும் தெரிந்திருக்கலாமல்லவா! என்று நினைத்த மருதன் குரங்கு செல்போனை கையில் எடுத்துக்கொண்டு முதலையைப் பார்த்தது.

“அதை கீழ போட்டுட்டு ஓடீரு குரங்கே! அது ஆபத்தான பொருள்” என்றது.

“நீ சொல்றாப்ல அது ஆபத்தான பொருள்னா அப்பவே வெடிச்சிருக்கும் முதலையாரே.. இன்னிக்கி இங்க என்ன நடந்துச்சு?”

“இன்னிக்கா? இன்னிக்கி நிறைய பசங்க பிள்ளைங்க இங்க மதியமா வந்தாங்க! எல்லோரும் இந்தக்குளத்துல கொஞ்சம் நேரம் குளிச்சுட்டு போனாங்க”

“அப்ப அவங்க பொருளாத்தான் இருக்கும். எனக்கு இதைப்பத்தி தெரியல. ஆனா யாருக்காச்சிம் இது என்னான்னு தெரிஞ்சிருக்கும். இதை நான் எடுத்துட்டு போறேன்.”

“இதை என்னான்னு தெரிஞ்சிட்டா எனக்கும் வந்து சொல்லு குரங்கே! ஆனாலும் நீ ரொம்ப தைரியசாலி தான். அது பாக்குறதுக்கு அழகா இருக்குது” என்று முதலையார் சொல்லவும் மருதன் குரங்கு ‘பை பை’ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றது.

000

அடுத்த நாள் காலை மருதன் குரங்கு தான் பார்ப்போரிடமெல்லாம் செல்போனைக்காட்டி ‘இது என்ன?’ என்று கேட்டபடி காடெங்கிலும் அலைந்தது. அதில் ‘டிரிங் டிரிங்’ சப்தம் வந்தாலும் அது மிரண்டு கீழே போடுவதில்லை. பழக்கமாகிவிட்டது. இது ஏன் அடிக்கடி அப்படி ஒலி கொடுக்கிறது? என்ற கேள்வியும் அதற்கிருந்தது.

இறுதியாக மருதன் குரங்கு தன் தோழன் கானா காக்கையை தேடிச்சென்றது. அது இந்த நேரம் மீனா முயலிடம் கூட சென்றிருக்கலாமென அங்கு சென்று பார்க்கையில் மீனா முயலை அமரவைத்து அதன் முன்பாக கானா பாடலை பாடியபடி அமர்ந்திருந்தது காகம். பாடல் முடியட்டும் எனக்காத்திருந்த மருதன் பின்பாக அவர்களிடம் சென்று தன் கையிலிருந்த செல்போனை காட்டியது.

அப்போது ‘டிரிங் டிரிங்’ சப்தம் வரவே மீனா முயல் தலைதெறிக்க ஓடி தன் வளையினுள் புகுந்து கொண்டது. கானா காக்கா மிரண்டுபோய் பறந்து அருகிலிருந்த மரத்திற்கு சென்று அமர்ந்து கொண்டது. மருதன் குரங்கிற்கு சிரிப்பாணியாய் இருந்தது. ‘பயப்படாதீங்க! பயப்படாதீங்க!’ என்று குரலிட்டது.

அந்த அமளி அடங்க சிறிது நேரமாயிற்று அங்கு. பின்பாக மீனா முயல் ஆபத்தில்லையென்று உணர்ந்து மருதன் அருகில் வந்த சமயம் கானா காக்காவும் மருதனருகில்தான் அமர்ந்திருந்தது.

“இது உனக்கு எங்கே கிடைச்சுது நண்பா?” என்றது கானா காக்கா.

“இது குளத்தங்கரைக்கிட்ட நேத்து மாலை கிடைச்சுது. அங்க இருக்குற முதலை தான் சொல்லுச்சு அங்க மதியமா நிறைய பசங்க வந்து குளிச்சுட்டு போனாங்களாம். அதனால இது மனுசப்பயலோட பொருளா இருக்கணும். இது என்னான்னு எல்லாரு கிட்டயும் கேட்டேன். தெரியலன்னுட்டு போயிட்டாங்க!”

“இதைப்பத்தி கலா கிளியக்காவுக்குத்தான் தெரிஞ்சிருக்கும்” என்றது கானா காக்கா.

“அதுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிருக்கும்?”

“ஏன்னா அது மனுசங்களோட அவங்க வளர்ப்பு கிளியா வாழ்ந்திருக்கு சிலகாலம். அப்புறம் அவங்களோட இருக்கப்பிடிக்காம ஒரு நாள் தப்பிச்சு வந்துச்சு இந்தக்காட்டுக்கு.”

“அப்படியா? அப்ப நாம அந்தக்கிளியை இப்போ எங்கேன்னு போயி தேடுறது?”

“எனக்கு அதோட வீடு தெரியும் மருதா! நீங்க இங்கயே இருங்க ரெண்டு பேரும். நான் போய் கலா கிளியக்காவை கூட்டிட்டு வர்றேன்” என்ற கானா காக்கா அங்கிருந்து கிழக்கு திசையில் சிறகடித்து உயரே கிளம்பி பறந்தது.

“நீயேன் மீனா தீயா ஓடிப்போய் உன்னோட வளையில நுழைஞ்சிட்டே? ஆனா நீ அவ்ளோ ஸ்பீடா ஓடி நான் பார்த்ததேயில்ல தெரியுமா!”

“உனக்கென்னப்பா.. எதாச்சியும் பொறுக்கீட்டு வந்துட்டு சவுண்டு உட்டு மிரட்டுறே! எனக்கு உசுரு போயி உசுரு வந்துடுச்சு தெரியுமா? ஆனாலும் நான் இன்னிக்கி அதிகமா பயந்துட்டேன்”

“சரி விடு, இந்த கானா அந்த கிளியக்காவை கூட்டிட்டு வந்துடுவானா?”

“நான் ஒன்னு சொல்லட்டா.. இதை கொண்டுபோயி அந்த கொளத்துலயே வீசி எறிஞ்சுடு. மனுசங்க வச்சிருக்கிறதை நாம எதுக்கு வச்சிக்கணும்?”

“அதுசரி! அவங்க இங்க ஏன் காட்டுக்குள்ள வரணும்? இங்க தான் நாம எல்லாம் இருக்கோம்னு தெரியுமில்ல அவங்களுக்கு!”

கொஞ்சம் நேரத்திலேயே கிளியக்காவை கூட்டிக்கொண்டு கானா காக்கா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்கள் ஒரு மிகப்பெரிய மரத்தினடியில் நிழலில் அமர்ந்திருந்தார்கள். கலா கிளியக்கா மருதன் கையிலிருந்த பொருளை உற்றுப்பார்த்தது. முதலாக அதன் பெயர் அதன் ஞாபகத்தில் இல்லை.

அதன்பெயரை சொல்லிவிட ரொம்பவும் யோசித்தது. அப்போது ‘டிரிங் டிரிங்’ ஒலி வரவுமே அதை நிலத்தில் வைக்கச்சொன்னது மருதனை. மருதன் போனை நிலத்தில் வைத்தான். ‘நீ திருப்பிப்பேசு மருதா!’ என்று சொன்ன கலா கிளியக்கா டச் ஸ்கிரீனில் பச்சை வர்ணத்தில் தெரிந்த உருண்டை வடிவத்தை தன் காலால் மேலே இழுத்தது.

“ஹலோ, யார் பேசுறது? உங்க கையில இருக்கிற போனு என்னுடையது!” என்று சிறுவன் குரல் கேட்டது. ‘நீயும் பேசு!’ என்று கிளியக்கா சைகை செய்தது மருதனுக்கு. மருதனும்,’நானு காட்டுல இருந்து மருதன் பேசுறேன்.. ஓவர்! ஓவர்! நீ யாரு?’ என்றது.

’’இதா பாரு, இந்த சிவப்புகலர் ரவுண்டை தூக்கி உட்டுட்டீன்னா ஆப் ஆயிடும் இது’” என்று மருதனுக்கு சொல்லிக்கொடுத்தது கலா கிளியக்கா.

“ஆமா இதோட பேரு என்ன கிளியக்கா?” என்றது மீனா முயல்.

“இதான் செல்போனு. மனுசங்க இதை எந்த நேரமும் கையில பிடிச்சுட்டு நோண்டிக்கிட்டே இருப்பாங்க! இதுல தான் பேசிக்குவாங்க! நான் இருந்த வீட்டுலயும் ஒரு பொடியான் இருந்தான். ‘சூட் பண்றா அவனை.. சூட் பண்றா!’ அப்படின்னு கத்தீட்டு இதை விரலால தள்ளீட்டே இருப்பான். இதுல பல விசயங்கள் இருக்குது தெரியுமா!”

“எனக்குச் சொல்லிக்குடேன் கிளியக்கா!” என்று மருதன் குரங்கு கேட்டது.

“நான் என்ன சொல்லிக்குடுத்துடப்போறேன்? நீயா எல்லாத்தையும் கண்டு புடிச்சுக்க வேண்டியது தான். ஆனா இது எந்த நேரமும் பேசனும்னா மின்சாரம் வேணுமே இங்கே!”

“என்னது மின்சாரமா?” என்றது கானா காகம்.

“ஆமா மின்சாரம் இல்லன்னா இது செத்துப்போயிருமே.. சரி போயிட்டுப்போவுது. எங்கே அதை உன் கை விரலால கிழக்கையும், மேக்கையும் தடவிப்பாரு..” என்றது கலா கிளியக்கா. மருதன் அதை கிழக்கே பெருவிரலால் தடவிவிட செல்போன் ஓப்பன் ஆகியது.

நன்றாக குனிந்து உற்றுப்பார்த்த கிளியக்கா தன் கால் விரல் நகத்தால் யூடியூப் சிம்பளை ஒரு அழுத்து அழுத்தியது. யூடியூப் திறந்தது போனில். மேலே மேலே தள்ளியது. பொம்மை கார்ட்டூன் படங்கள் வரிசை வந்தது. அதன்மீது ஒரு அழுத்து அழுத்தவும் அந்த கார்ட்டூன்படம் ஓடத்துவங்கியது.

“முன்னொரு காலத்துல முதலையும் குரங்கும் நண்பர்களா இருந்தாங்களாம்..” என்று கதையை பெண் சொல்ல காட்சிகளை திரையில் கண்டனர் நால்வரும். நால்வரும் அதிலேயே ஆழ்ந்து போயினர் தங்களை மறந்து. பின்பாக இந்த விசயம் போர் அடிப்பதையுணர்ந்த மீனா முயல், ‘இதையே பார்த்துட்டு இப்பிடியே உட்கார்ந்துட்டா நம்ம பசியை யாரு வந்து போக்குவா? இது பொழப்பை கெடுக்குற வேலையப்போ!’ என்றது. ‘இவ்ளோ தான் இது!’ என்று சொல்லிவிட்டு கிளியக்கா பறந்து போயிற்று.

கானா காகத்திற்கு ஒரு பாடலை அதில் கேட்கணுமென்ற ஆசை வந்தது. அதை மருதன் குரங்கிடம் சொல்லிற்று. மருதன் குரங்கு அறிவாளி மாதிரி ஸ்கிரீனை மேலே கிளியக்கா தடவி இழுத்தது போலவே இழுத்தது. ஒரு படத்தில் நிறைய விலங்குகள் குஷியாய் குதிப்பது போலிருக்கவே அதன் மீது விரலை வைத்தது. சரியாய் அது பாட்டே தான் என்றதும் இரண்டுமே மகிழ்ந்தன!

“வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே.. வாரணாசி கோட்டை தாண்டி மெயிலு வண்டியிலே!” என்று பாடல் ஆரம்பித்ததுமே ‘அருமையாயிருக்கு இது!’ என்று மருதன் குரங்கு கானா காகத்திடம் சொல்லிற்று. கானா காகம் அதே போல பாடவும் முயற்சித்தது.

“க கா ககா.. காக்காகாஆஆ.. க க க க காக்காகாஆஆ!”

அவ்வளவுதான். நண்பனிடம் விடைபெற்றுக்கொண்டு மருதன் குரங்கு செல்போனோடு பாடலைக்கேட்டபடியே தன் குடும்பத்தார் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

எல்லா குரங்குகளுமே செல்போன் பாட்டு படிப்பதை ஆச்சரியமாய் பார்த்துவிட்டு ‘கிழக்கால மாமரத்துல மாம்பழங்கள் பழுத்து தொங்கீட்டு இருக்கு நிறைய.. வர்றியா சாப்டுட்டு வரலாம்!’ என்றன. ‘நான் வரலை.. நான் இதை பார்த்துட்டே காலை ஆட்டிட்டு மரத்துல படுத்திருப்பேனே! இதை பார்க்கப்பார்க்க ஆசையா இருக்குது எனக்கு!’ என்று மரத்திலேயே படுத்தபடி செல்போனை கையில் பிடித்துக்கொண்டே பார்த்தபடியிருந்தது மருதன் குரங்கு.

அதற்கு நேரம் போய்க்கொண்டிருப்பதே தெரியவில்லை. மதியத்திற்கும் மேல் திரும்பிய குரங்குக்கூட்டம், ‘குளத்தங்கரைக்குப்போய் குளிச்சுட்டு விளையாடிட்டு வருவோம் வர்றியா மருதா?’ என்று கேட்டன. மருதனோ யூடியூப் சேனலிலேயே ஆழ்ந்திருந்தது. அதற்கு பசியில்லை. அதற்கு தன் கூட்டத்தாரோடு சென்று குளத்தில் குளிக்க ஆசையில்லை.

ஒருகட்டத்தில் இரவு நெருங்குவதை உணர்ந்த போதுதான் அதற்கு நிலவரமே தெரிந்தது. வயிறு பசிக்கத்துவங்கியது. இனி எங்கே போய் உணவை தேடுவது? அம்மா ஏதேனும் கையில் பழங்கள் வைத்திருந்தால் கொடுக்குமே? என்று அம்மாவைத்தேடி ஓடியது. செல்போனை அந்த மரத்தின் பொந்தினுள் திணித்து மரைத்துவிட்டுத்தான் சென்றது.

அம்மாவோ தன்னிடமிருந்த ஒரு வாழைப்பழத்தை மருதனுக்கு கொடுத்தது. இருக்கும் பசிக்கு இந்த ஒருபழம் எந்த மூலைக்கு? அம்மாவிடம் வேறு பழம் ஏதேனும் இருக்கா? என்றது மருதன். அம்மா கைவிரித்துவிடவே, நொந்துபோய் தன் இடத்திற்கே வந்து சேர்ந்து படுத்துக்கொண்டது.

எல்லாம் இந்த செல்போனால் வந்த வினைதான். இதை இப்படி மாங்கு மாங்கென பார்த்து நமக்கு என்ன வந்துவிட்டது? நண்பர்களை மாலை நேரத்தில் போய் சந்திக்கவில்லை. என்னை எதிர்பார்த்து காத்திருந்து ஏமார்ந்து போயிருப்பார்கள். குளத்தங்கரைக்கு சென்றிருந்தால் முதலை நண்பனிடம் இந்தப்பொருள் ஒரு செல்போன் என்று சொல்லியிருந்திருக்கலாம். தண்ணீர் தாகம் கூட இன்று முழுதுமே எடுக்கவிலையே! இப்படித்தான் மனிதர்களும் இந்த போனை வைத்துக்கொண்டு நோண்டிக்கொண்டே இருப்பதாக கிளியக்கா சொல்லிற்றே!

பசியோடு தூங்கிய மருதன் குரங்கு காலையில் நேரமே எழுந்து செல்போனை தூக்கிக்கொண்டு குளத்தங்கரைக்கு ஓடியது. அங்கே மருதனுக்காக நேற்றிலிருந்தே முதலை காத்திருந்தது. மருதனைக்கண்டதுமே உற்சாகமாய் தண்ணீரில் தன் வாலை உயர்த்தி சடீரென ஒரு அறை அறைந்தது.

“நேற்று ஏன் குரங்கே நீ இங்கே வரவில்லை? அது என்ன பொருள் என்று தெரிந்து கொண்டாயா?” என்றது. மருதன் மீண்டும் யூடியூப்பில் பொம்மை கார்ட்டூன் ஒன்றை அழுத்தி ஓடவிட்டு விட்டு அதை தரையில் வைத்தது.

பின் ஓடிப்போய் குளத்தில் குதித்தது. வேண்டியமட்டும் வயிற்றுக்கு தண்ணீர் குடித்தது. முதலை அந்த செல்போன் அருகில் வந்து அதில் தெரியும் பொம்மைகளை ஆச்சரியமாய் பார்த்தபடி இருந்தது. ஆடிக்களைத்து குரங்கு கரைக்கு ஏறியது. முதலையின் அருகில் சென்ற மருதன் செல்போன் அணைந்து கிடப்பதை கண்டது. கிளியக்கா சொன்ன மின்சார ஞாபகம் அதற்கு வந்தது. இது உயிர்பெற வேண்டுமானால் இனி மின்சாரம் வேண்டும்.

“என்ன குரங்கே.. இதுல பொம்மைகள் ஓடுச்சு ஒடியாந்துச்சு.. அப்புறம் ஒரே இருட்டா ஆயிட்டுது! மொதல்ல இதென்ன சொல்லு!” என்று கேட்டது முதலை.

“முதலையாரே, இது மனுசங்க வச்சிருக்கிற செல்போனு. இதுல தான் பேசிக்குவாங்களாம் அவங்க!”

“இதை யாரு உனக்குச் சொன்னா?”

“கலா கிளியக்கா சொல்லுச்சு. ஆனா இது நம்மை பைத்தியம் புடிக்க வச்சிரும். நேத்து இதால நான் வயித்துக்கு ஆகாரமே போடலை. பசியே எடுக்கலை முதலையாரே! இதை பார்த்துட்டே மரத்துல படுத்துட்டேன். பார்க்கப்பார்க்க அவ்ளோ ஆசையா இருந்துச்சு. அதனால நேரம் போனதே எனக்குத்தெரியல”

“அதனால தான் என்னைப்பார்க்க வரலியா?”

“ஆமா முதலையாரே! இது என் கையில இருந்தா சரிப்படாது. உனக்கு காட்டீட்டு உடைச்சி வீசிடலாம்னுதான் இங்க வந்தேன் காலையிலயே!”

“என்னது இதை உடைக்கப்போறியா? இது பாவமப்பா!”

“இது இப்ப செத்துப்போச்சு!”

“என்னது செத்துப்போச்சா? அப்ப இதை நான் சாப்டுக்கவா?”

“இதையெல்லாம் நீ சாப்பிடக்கூடாது.. இதுக்கு ரத்தமும் சதையுமே இல்லை. ஆனா இருக்குறாப்ல நடிக்கும்” என்று செல்போனை தூக்கிய மருதன் குரங்கு தலையை சுற்றி குளத்தின் நடுமையத்தை நோக்கி எறிந்தது.

“ஏப்பா அங்க ஒரே சேரும் சகதியுமா இருக்குமேப்பா.. நாளைக்கி வேணும்னு கேட்டீன்னா உள்ளார போயி என்னாலயே எடுத்துட்டு வந்து  உனக்கு குடுக்க முடியாதேப்பா!”

“அது அங்கே புதைஞ்சு போகட்டும் விடு முதலையாரே! எனக்கு பசியா இருக்குது. எனக்கு இந்த குளத்துல ரெண்டு பெரிய மீனு பிடிச்சுத்தர்றியா?”

“உனக்கு இல்லாத மீனா?” என்று தண்ணீரினுள் தாவிய முதலையை கொஞ்சம் நேரம் தண்ணிரின் மேல்பரப்பிலேயே காணவில்லை. மருதன் குரங்கு முதலையாரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது குளத்தங்கரையில். கொஞ்சம் நேரம் கழித்து வெளியே தலைகாட்டிய முதலையின் வாயில் இரண்டு பெரிய மீன்களிருந்தன. முதலை மருதன் குரங்கை நோக்கி வந்தது.

000

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்..ஆட்டக்காவடி, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர். சிறார் புத்தகங்கள் பாரதி புத்தகாலயம் வாயிலாக வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *