திண்டுக்கல் மதுரையோடு இருந்த காலந்தொட்டு திண்டுக்கல்லான இன்று வரை பாதயாத்திரை சென்றுகொண்டிருப்பவர் செவத்தி. அண்ணா, காயிதே மில்லத், திருமலை என மாவட்டத்தின் பெயர் மாறினாலும் தொடர்ந்து மாறாமல் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்பவர் என்பதால் புதிதாக பாதயாத்திரை செல்பவர்கள் அனைவருக்கும் அவர் மீது மரியாதை இருந்தது.

அம்மாபட்டி ஆலயத்தின் முன்பாக நின்று தான் கட்டியிருந்த கோல்ட் வாட்ச் மேலும் கீழும் ஆட கை ஆட, எங்கு எங்கு பாதயாத்திரை செல்பவர்களுக்காக இலவசமாக தங்குமிடம் சாப்பாடு போடுவார்கள்! ஒரு ரூபாய் கூட செலவில்லாது எப்படி செல்லவேண்டும் என எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார்.

நான்கு வருடமாக பாத்யாத்திரை வரும் அவர் மாமன் மகன் கஸ்பார் மெல்ல புதிதாக வரவிருக்கும் ஆரோக்கியத்திடம் ‘மாப்ள செவத்தி நீடாமங்கலத்தோட நின்றுவாப்டி பாரு’ என்றான். அவன் சொன்னபடியே நீடாமங்கலம் வரை சொன்ன செவத்தி அப்படியே பேச்சை மாற்றினார். கஸ்பார் ஆரோக்கியத்தை நோக்கியவாறு ஒரு வெற்றிப் புன்னகையைத் தந்தான். செவத்தி ஐவர் ஐவராக அணியைப் பிரித்தார். ‘எல்லாம் ஒன்னா தான் போவோம்’ சிலருக்கு மொத ட்ரிப்னால கால்வலி வந்து செத்த அப்படியே நின்னு நின்னு வருவிக. அப்படி வரவுகளுக்கு அந்த டீம்காரவுகளும் நின்னு கூட்டியாரணும். எங்க லேட்டானலும் நைட் தங்குற இடத்துல எல்லாரையும் பாத்துக்கலாம். பொறுமையாவே போலாம். எல்லா டீம்லையும் புதுசா வந்தவனும் எல்லா ட்ரிப் போறவனும் இருப்பான். அதுனால கரெக்டா போயிரலாம். அப்பறம் இன்னோரு முக்கியமான விசயம் இது புதுசா வரவிங்களுக்கில்ல. எல்லா ட்ரிப்பும் வரவங்களுக்கு. ஒக்காளி எவனாவது ரயில்ரோட்ல கூட்டிட்டு போனிங்க மனுசனாவே இருக்க மாட்டேன். போன ட்ரிப் கஸ்பார் லாஸ்ட்டா அவன் ஆளுகள சீக்கிரம் கூட்டிட்டு போறேனு ரயில்பாலத்துல கூட்டிட்டு போயி அந்த நேரம் ரயில் வர பூரா பயலும் ஆத்துல குதிச்சுட்டாங்க. நல்லவேளை ஆத்துல கொஞ்சூண்டு தண்ணிபோகவும் எல்லாம் வந்துட்டாய்ங்க. இந்த வாட்டி அப்படி எதாவது ஆச்சு… எலே கஸ்பாரு கேக்குதாடா!  என கத்தி சொல்ல அதற்கு பதில்மொழியாக கேக்குது மாமோய் என சத்தமாக கத்தினான் கஸ்பார்.

அந்த வருடம் தன் மகளுக்கு திருமணம் நடந்ததால் வேண்டுதலுக்காக சுப்பிரமணியும் பாதயாத்திரை வந்தார். சுப்பிரமணியும் செவத்தியும் மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். மூனாவதில் வெள்ளைய வாத்தியார் வாய்ப்பாட்டிற்காக கொடுத்த கொடுப்பில் சுப்பிரமணி நின்றுவிட்டார். மூனாவதில் வெள்ளைய வாத்தியாரைத் தாண்டிய செவத்தி ஐந்தாவதிலும் வெள்ளையவாத்தியாரே வரவே சொல்லாமல் கொள்ளாமல் நின்றுகொண்டார்.

செவத்திக்கு எரியோட்டிலுள்ள மாரிமுத்து ஹோட்டலில் சப்ளையர் வேலை.  சுப்பிரமணி விவசாயம் செய்து வருகிறார். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத மகளுக்காக மேல்மருவத்தூர், பழனி என எல்லா கோயிலுக்கும் சென்றுகொண்டிருந்தவரை செவத்திதான் சுப்பிரமணியை மாதாவுக்கு வேண்டுதல் வைக்க சொன்னார். ‘லேய் மாரியம்மா மாதிரிதான் மேரியம்மாவும். நம்பி நடந்து வந்து மொட்டை அடிக்கிறேனு வேண்டிக்க மாதா நல்ல வரனா கொடுக்கும்’.

செவத்தி சொன்னது போலவே சுப்பிரமணி வேண்டிக்கொண்டார். அத்தனை காலம் வேண்டிய எல்லா கடவுளின் செயலும் கைகொடுத்து நல்ல வரன் அமைந்தது. இப்போது சந்தோசமாக அயராதநல்லூரில் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறாள். அந்த வேண்டுதலை நிறைவேற்றவே சுப்பிரமணியும் வந்தார். சுப்பிரமணியை தன் அணியிலேயே வைத்துக்கொண்டார் செவத்தி.

செவத்தி மேற்படி சொல்லிக்கொண்டிருந்ததை சுப்பிரமணி பவ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார். 

கஸ்பாருக்கு மட்டும் அவர் மீது சில சந்தேகங்கள் இருந்தன.  நீடாமங்கலத்தை தாண்டும் போது அவரைப் பார்த்தவர் ஒருவர் கூட இல்லை. எங்கோ சென்றுவிட்டு சில மணிநேரங்களில் இடையில் வந்து சேர்ந்து கொள்கிறார் என்பதே அவன் எண்ணம். நீங்க முன்ன போங்க வயித்தக் கலக்குது வாரேன், நீங்க போயிட்டிருங்க வந்தறேன் வயசாயிடுச்சல வெரசாவர முடியல!  என சொன்னவரை சில சமயம் அடியக்காமங்கலத்தில் கிளம்பும் போதோ சில சமயம் நாகப்பட்டிணத்திலோ தான் பார்க்க முடியும்.

அவர்கள் கிளம்புவதை வேடிக்கை பார்க்க வந்த பெண்களில் ஒருத்தி கத்தினாள். ‘என்ன சுப்பிரமணி மாமா அம்புட்டு தூரம் நடந்துருவிங்களா! குரலைக் கேட்டதும் தன் தங்கச்சி மகள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். ‘மாமன என்ன நினைச்ச, போயிட்டு வரப்ப கூட நடந்து வருவேன்டி’என சுப்பிரமணி சொல்ல அதற்கு கஸ்பார்,‘அதெல்லாம் வேணா சுப்பிரமணி மாமா! ‘செவத்தி சித்தப்பாகூட போங்க, வரப்ப என்ன போறப்பே நைசா பஸ்லே கூட்டிபோவாரு’ என கஸ்பாரு சொன்னான்.

’நீடாமங்கலத்து வர சித்தப்பன பாக்கலாம். அப்பறம் அவ்ளோதேன்’ என நான்கு வருடமாக வரும் அமிர்தசாமியும் சிரிக்க‘டேய் நீங்க எந்திருச்சு கூட நிக்கமுடியாத வயசுப்பலருந்து  நான்  வேளாங்கண்ணி போறவன்’ என பதிலுக்கு செவத்தி சொல்ல’அப்போ பஸ் கிடையாது போனிங்க. இப்போ அப்படியில்லல’ என கஸ்பார் சொன்னான்.

’இந்த அகராதி புடிச்ச பயலுககிட்ட பேசுனது நம்ம தப்புத்தான். எங்க கோயில்புள்ளை இருக்கியான்’ செவத்தி தேடுவதுபோல் தலையைச் சுற்றிப்பார்க்க இங்கதேன் இருக்கேன் மாமா என கையில் ஜெப புக்கோடு கையை உயர்த்திக் காட்டினார் சம்மனசு.

’வாப்பா வந்து சட்டுனு செபத்தை சொல்லிவிடு. சிலுவைத்திண்ணையில போய் வேடசந்தூர்லருந்து வரவுகளுக்காக நிக்கலாம். இங்கருந்தா இவனுவ இப்படிதான் பேசிட்டிருப்பாங்க’ கோயில்பிள்ளை சம்மனசு செபத்தை சொல்லி பிதா சுதன் போட்டு முடிக்க செவத்தியின் மனைவி எல்லாரையும் குடத்தில் தண்ணீர் வைத்து தயாராக இருக்க சொன்னாள். கிளம்பும்பொழுது வழியில் குடத்தை ஊற்றி அனுப்பி வைத்தனர்.

சுப்பிரமணி தன் மனைவியைப் பார்த்து தலையாட்டிவிட்டு நடக்கத் தொடங்கினார். சுப்பிரமணி மனைவி கண்ணீரைத் துடைக்க செவத்தி அவளிடம், “தங்கச்சி, மாப்ளைய பத்திரமா கூட்டியாந்துருவேன். ஒன்னும் பதறாத” என சொன்னார். தோளில் பையை மாட்டிக்கொண்டு முன்னோக்கி செவத்தி செல்ல அவரைத் தொடர்ந்து அவர் பிரித்த வண்ணம் ஒவ்வொரு குழுவாக வந்தனர். கோவிலிலிருந்து நடக்க ஆரம்பித்தவர்களுக்கு இந்து கிறிஸ்டியன் என வேறுபாடின்றி குடத்தில் தண்ணீரை வழிநெடுக மக்கள் ஊற்றினர். மண் மணத்தோடும் ஈரக்கால்களோடும் செவத்தி முன்செல்ல அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் சிலுவைத்திண்ணையை அடைந்தனர். 

சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் குதிரையில் வந்த ஒரு சாமியார் அந்த சிலுவைத்திண்ணை இருக்கும் இடத்தில் வந்து நின்று தினமும் பிரசங்கம் செய்வார். முதலில் அவரை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு கட்டத்தில் அவரால் ஈர்க்கப்பட்ட சிலர் அந்த இடத்திலே தான் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினர். அங்கே ஒரு குடிசை போட்டு அதன் மேலே சிலுவை ஊன்றி பிரார்த்தனை செய்து வந்தனர். சில வருடங்களுக்குப் பின் ஆலயத்திற்கான இடத்தை ஊருக்குள்ளே மக்கள் தேர்வு செய்து கட்டியதால் இந்த இடமானது அதன் முக்கியத்துவத்தை இழந்தது.

செவத்தியும், சந்தியாகுவும் கள்ளுக்கடை வைத்திருந்த காலத்தில் அவர்கள் கையில் காசு புரண்டது. செவத்தி வேளாங்கண்ணிக்கு மட்டுந்தான் நடந்து செல்வார். மற்ற நேரங்களிளெல்லாம் புல்லட் தான்.  அந்த நாட்களில் செவத்தியும் சந்தியாகுவும் மட்டுமே காசு போட்டு அந்த பாழடைந்த மேடான இடத்தில் திண்ணையும் ஓடும் போட்டு அதன் மேலே சிலுவை வைத்துக் கொடுத்தனர். கள்ளுக்கடையை அரசாங்கமே மூடிய பின் இருவர் குடும்பம் சம்பாதித்த பணமும் எங்கே சென்றது என அறியா வண்ணம் ஒன்றுமில்லமால் போனது. அதுபோனாலும் பரவாயில்லை. உயிருக்கு உயிராக இருந்த சந்தியாகுவும் பிரிந்து போய்விட்டான். கள்ளுக்கடை மூடி அதில் சம்பாதித்த ஒவ்வொன்றையும் இழக்க இருவருக்கும் பயம் ஏற்பட்டது. சந்தியாகு அந்த நேரத்தில் பக்தியாக மாறி செவன்த்டேயில் இணைந்து கொண்டான். செவத்தியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையென்றாலும் நண்பன் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருந்தார். ஒரு நாள் வேளாங்கண்ணி பாதாயாத்திரை போவது மற்றும் மாதாவை கும்பிடுவதை முட்டாள்தனம் என்று கிண்டலாக சொல்லி வேதத்தில் கடவுள் ஒருவரே என பிரசங்கம் செய்ய செவத்தி நெஞ்சிலேயே மிதித்து விட்டார். அன்றுமுதல் இன்றுவரை இருவரும் பேசிக்கொள்வதில்லை.

எல்லாம் பாவக்கணக்கு என மக்கள் பேசிக்கொண்டனர். செவத்திக்கும் கள்ளுக்கடையில் சம்பாதித்ததில் மிச்சமிருப்பது கையில் அணிந்திருக்கும் அந்த கோல்ட் வாட்ச்சும் அந்த சிலுவைத் திண்ணையும் மட்டுந்தான். அந்த சிலுவைத்திண்ணையில் உபயம் செபஸ்தியார், சந்தியாகு என எழுதியிருக்கும் அந்த கல்வெட்டைப் பார்க்கும்போதெல்லாம் அழகான அந்த நாட்கள் கண்முன்வந்து போகும். அதை பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

*****

சிலுவைத்திண்ணை கோயில்பிள்ளையால் அன்று சுத்தமாக கூட்டி பெருக்கி வைக்கப்பட்டிருந்தது. மற்ற நாளாய் இருந்தால் வயதானவர்கள் வேலை கிடைக்காத இளைஞர்கள் படுத்துக்கொண்டு வெட்டிக்கதைகளை பேசிக்கொண்டும் கிரிக்கெட் நடக்கும் நாளாக இருந்தால் ரேடியோவில் கிரிக்கெட்டைக் கேட்டுக்கொண்டுமிருப்பார்கள்.

இன்று பாதயாத்திரை கிளம்பும் வரை யாரும் உட்காரக்கூடாது என போன வாரம் கோயிலில் பூசை முடியும் போதே சாமியாரை வைத்தே சொல்லிவிட்டார் செவத்தி. அதனால் யாரும் அமரவில்லை. ஒருவேளை சந்தியாகுவின் மகன் அருளப்பன் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு செவத்தி அவனோடு வம்புக்கு நின்றிருக்க வேண்டியிருக்கும். நல்லவேளையாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டான்.

கடந்தவருடம் இப்படி போகும் போது ’உன் இடமா பொது இடம்யா அப்படித்தான் படுத்திருப்பேன்!’ என எகத்தாளமாக பேசிய அருளானந்தம் தற்போது எத்தனை ஒட்டகம் மேய்த்துக்கொண்டிருக்கிறானோ பாவம்! என அவன் மீதான இரக்கத்தோட சிலுவைத்திண்ணையில் அமர்ந்தார். அவர் அமர்ந்த இடத்தில்தான் சிலுவைத்திண்ணையை பார்க்கும் பொழுதெல்லாம் அமர்ந்திருப்பான்.

’ஏன்டா படிச்சிட்டு வேலை கிடைக்கலனு இப்படி வெட்டியா உக்காந்துருக்கறதுக்கு நம்ம எவரெடி மில்லுக்கோ இல்ல தோலப்பன் துணிக்கடைக்கோ வேலைக்கு போனாலாது கொஞ்சம் காசு கிடைக்கும். சின்ன அக்காவ நீதான்டா கட்டிக்கொடுக்கணும். உங்கப்பன் சந்தியாகு செய்வானு நினைக்காதடா.  அவன பத்தி உங்களவிட எனக்கு நல்லாத் தெரியும். அவன நம்புனா லாஸ்ட் வர உங்கக்காளுக்கு கல்யாணம் நடக்காதுடா!’ என சிலுவைத்திண்ணையில் அமர்ந்தவனிடம் சொன்னபொழுது எவரெடி மில்லுக்காரன்ட்ட இப்படி ஆள் சேக்க எம்புட்டு கமிஷன் வாங்குற யா என கேட்க அதிலிருந்து அவனுடன் பேசுவதையே  நிறுத்திக் கொண்டார்.

மெதுவாக சாமிப் பாட்டுச்சத்தம் கேட்க பழைய நினைவுகளிலிருந்து மீண்டவர் பாட்டுச் சத்தம் கேட்ட திசைப் பக்கம் பார்த்தார். வேடசந்தூர் பாதயாத்திரைக் குழு வருவது தெரிந்தது. குண்டுங் குழியுமான சாலையில் ஆடி அசைந்து மாதா சப்பரம் வந்தது. மாதா சப்பரத்தை தள்ளிக்கொண்டு வேடசந்தூர் பாதயாத்திரை மக்கள் ஜெபம் சொல்லிக்கொண்டே வந்தனர். அருகில் வந்ததும் பல வருடமாக பாதயாத்திரை போய்க்கொண்டிருக்கும்   செவத்தியைக் கையெடுத்துக் கும்பிட்டு ஸ்தோத்திரம் சொன்னார். அவரும் பதிலுக்கு சொல்லிவிட்டு ஒரு சின்ன ஜெபத்தை பேருக்காக சிலுவைத்திண்ணையில் சொல்லி அங்கிருந்து கிளம்பினர்.

முதல் முறை வந்தவர்கள் உற்சாகமாகவும் வேகமாகவும் நடந்தனர். முதல் நாள் வையம்பட்டி ரயில்வே ஸ்டேசனில் படுத்துக்கொண்டனர். சுப்பிரமணிக்கு நல்ல இடமாக செவத்தி பிடித்துக் கொடுத்து படுக்க வைத்தார். செவத்தி கட்டியிருந்த காவி வேட்டியை அவிழ்த்து விரித்துக்கொண்டு பட்டாப்பட்டி டிராயரோடு படுத்துக் கொண்டார். வேடசந்தூர் குழுவோடு சேர்ந்து சிலர் 153 மணி ஜெபம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

சுப்பிரமணி கால் வலியில் படுத்திருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை. கஸ்பார் அவரருகில் வந்து என்ன சுப்பு மாமா கால் வலிக்குதா ரெண்டு நாளுதேன் பொறுத்துக்க நீடாமங்கலம் வந்ததும் நம்ம செவத்தி பஸ்ல கூட்டினு போய்ரும் என சொல்ல மாலை போட்டிருந்ததை மறந்து ‘டேய் மயிராண்டி, என்ன அங்க புளுத்திட்டு இருக்க போடா அங்குட்டு!’ என சொல்ல மாலை போட்டுட்டு அசிங்கமா பேசாதிங்க செவத்தி என வேடசந்தூர்காரர் சொல்ல ‘நானும் எவ்ளோ தான் பொறுமையா இருக்கறது! நானும் பாத்துட்டே இருக்கேன். ஒரு ட்ரிப் ரெண்டு ட்ரிப் னா சரிங்களாம். ஓயாம சொல்லிட்டே இருந்தா…. ஏன்டா நீடாமங்கலத்துல நான் காணாமாப் போறேன்றியே பெரிய மனுசன் வயித்தக் கலக்குது மூச்சு வாங்குதுனு நிக்குறானே நாமளும் நிப்போம்னு எவனாவது நின்றுக்கிங்களாடா!

’நீ சொல்லிருக்கியாயா இருன்னு!’

டேய் நான் பெரிய மனுசன் டா. நடக்க முடியல மூச்சு வாங்குது இளந்தாரி பயலுகள நிக்க வைக்க கூடாதுனு நீ போனு சொல்லுவேன் எவனாவது ஒருத்தன் ஒருத்தன்… சித்தப்பன காணோம்.. மாமன காணோம்னு நின்னுருக்கிங்களாடா! அமிர்தசாமி உன்னையும் சேத்துதான்டா சொல்றேன். என்ன இருந்தாலும் மாமன் சித்தப்பன் தானடா அப்பன் இல்லலடா என கண்ணீரைத் துடைத்தார்.

செவத்திக்கு திருமணமாகி நான்கு வருடம் குழந்தை இல்லாததால் வேளாங்கண்ணி மாதாவுக்கு வருடந்தவறாமல் நடந்து வருவதாக வேண்டிக்கொள்ள அதற்கு பிறகு பிறந்தவன் தான் அருள். சொந்த மாமன் மகளையே கட்டியதால் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறந்த அருளையும் பாசமாகவே வளர்த்தனர். பத்து வயதில் கேணியில் தவறி விழுந்து இறந்து போனான். கொடுத்த கடவுளே அவனை எடுத்துக் கொண்டாலும் தனக்காக மகனைக் கொடுத்ததற்காகவும் தன் மனைவி மலடியில்லை என்பதை ஊர் அறியச் செய்ததற்காகவும் தன் வேண்டுதலை இருபது வருடங்களுக்கு மேலாக வருடம் தவறாமல் நிறைவேற்றிக்கொண்டு வருகிறார் செவத்தி.

அருளைப் போல யாரையாவது பார்த்தாலே இன்றும் கூட செவத்தி தன் சோப்பில் இருந்து காசை எடுத்துக் கொடுத்துவிடுவார். அவர் அப்படி அழுக கஸ்பாருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அருளுக்கும் கஸ்பாருக்கும் ஒரே வயதுதான். கஸ்பார் அருள் கேணியில் விழுந்த அன்று அருகில் இருந்திருக்கிறான்.

சுற்றி வேடசந்தூர் குரூப் மாரம்பாடி குரூப் எல்லாம் வந்து நிற்க, சுப்பிரமணி மெல்ல அவர் தோளைத் தட்டி, ’செவத்தி விடுயா! ஏதோ சின்னப்பய பேசிப்புட்டான்’ என்றார். கஸ்பாரும் ‘மாமா சும்மானாச்சுக்கும் தான சொன்னேன். என்ன நீ இப்டி பேசற! உன்கிட்ட அப்பிடியா பழகிருக்கோம்’ என வந்து இடுப்போடு பிடித்து அணைத்துக் கொண்டான். விடுறா ங்கொப்பனோலி என கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கையை உருவப் போக, அப்படியெல்லாம் விடமுடியாது. உன்கிட்ட இப்பிடி விளையாடாம வேற யாருகிட்ட விளையாடுறது என சொல்ல, ‘போய் ங்கொப்பன்ட்ட ஆடுறா’ என்றார். யாரு போஸ்கோட்டயா அந்தாளுக்கு ஊர்ச்சந்தைக்கே நடந்து வர தெம்பு கிடையாது. எல்லாரும் உன்னைய மாதிரி ஆயிட முடியுமா என இடுப்போடு அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்க ‘லேய் கூசுதுடா விடுறா என கண்ணீரோடு சிரித்தார்’ அன்று இரவு அனைவரும் செவத்தியைப் பற்றி நினைத்துக் கொண்டே உறங்கினர்.

இரண்டாம் நாள் காலை எழுந்து குளித்து ரெடியாகி அனைவரும் ஒன்றாகவே நடக்க ஆரம்பித்தனர். சுப்பிரமணிக்கு கால் வலி வர ஆரம்பித்துவிட மொள்ள நடக்க ஆரம்பித்தார். கஸ்பார் அணி விறுவிறுவென நடந்து எல்லோருக்கும் முன்பாக சென்று கொண்டிருந்தது. பாதயாத்திரை செல்பவர்களுக்காகவே அங்கங்கே இலவச மோர்பந்தல், கலர் பாட்டில், தண்ணீர் என எல்லாமே வைத்திருப்பார்கள். அவன் தான் டீக்குடிக்க கலர்குடிக்க முதல் ஆளாக சென்று நின்று மற்றவர்களையும் நிற்க வைப்பான்.

கஸ்பார் முதலில் சென்றாலும் அவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்தது செவத்தி தான். எந்தூரு ஆளுக என கேட்கும்போது வேடசந்தூர் அம்மாபட்டி என சொன்னால் அட நம்ம செவத்தி ஊரா! அவரு வரலியா என்று தான் கேட்பார்கள். அவர் பின்னால் வருவதைப் பார்த்ததும் “அடடே வாங்க வாங்க! என பேச ஆரம்பித்துவிடுவார்கள். செவத்தியும், ’என்ன வியாபாரம் எப்படி போது அம்மா நல்லாருக்காகளா?’ என பேச ஆரம்பித்துவிடுவார். ’கஸ்பாரு நம்ம ஆளுகள புடிச்சு நிப்பாட்டி எல்லாரையும் கலரு குடிக்க சொல்லுப்பா!’ என சொல்லி அவர்களோடு பேச ஆரம்பித்துவிடுவார். ’போன ட்ரிப் போனப்ப எங்கூட வந்தாரே அவருக்கு நினைச்ச மாறி வேண்டுதல் நிறைவேறிருச்சு.’ ’பின்ன மேரிமாதா கைவிட்ருமா!’ என்பார் அவர்.

கஸ்பாரும் இனி அவரோடு விளையாட்டுக்கு கூட அப்படி பேசக்கூடாது என முடிவுக்கு வந்தவனாய் அவர் சொன்னதை பவ்யமாக செய்தான். முன்னால் திருச்சியை அடைந்தாலும் இரவு செவத்தி குரூப் வரும்வரை சாப்பிடாமலே காத்திருந்தான். அவரோடு சேர்ந்து அமர்ந்தே இரவுணவையும் சாப்பிட்டான்.

சுப்பிரமணிக்கு கால் வலிக்க தான் கொண்டு வந்திருந்த களிம்பை எடுத்து இத பூசிக்கப்பா வலி இருக்காது என சொல்லி காலைப் பிடிக்க சுப்பிரமணி பதறி எழுந்து ‘யய்யா செவத்தி கொண்டா யா! நான் தேச்சுக்கறேன்!’ என சொல்ல ’நீ படுப்பா நான் தேச்சு வுடறேன்’ என சுப்பிரமணி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் படுக்க வைத்து தேய்த்து விட்டார். மூன்றாம் நாள் எழுந்து ஆற்றங்கரையில் குளித்துவிட்டு மெல்ல நடக்கத் தொடங்கினர். சுப்பிரமணிக்கு கால் கொப்பளித்துவிட்டது. செருப்பு போட்டு காலும் புண்ணாகவே செருப்பைக் கழட்டி நடக்கப் பார்த்தவரை, ’சுப்பிரமணி, செருப்போட வந்தாலும் மேரியம்மா ஒன்னும் நெனச்சுக்காது. செருப்பு போடாம வந்து முள்ளு ஆணி எதும் குத்துச்சுன்னா போச்சுயா. கொஞ்சம் பொறுத்துக்கயா!’ என செவத்தி சொல்ல சுப்பிரமணி பல்லைக் கடித்துக் கொண்டு ’மேரியம்மா மேரியம்மா’ என முனகியபடியே நடந்தார்.

கஸ்பாரு தன்னோடு முதல் ட்ரிப் வந்தவர்கள் சோர்வானால் ‘முடியலனைா ஏன்டா வரிங்க! பஸ் ஏறிகூட போங்கடா! தயவுசெஞ்சு புலம்பாம வாங்கடா .. புலம்புனா வேண்டுதலே வேஸ்ட்டுடா என திட்டினான். அவன் திட்டுக்கு பயந்து அவன் குரூப்பில் வந்த எட்வின் செவத்தியோடு சேர்ந்து கொண்டான்.  ‘நல்ல குரூப்ல தான்டா சேந்துருக்க எட்டான்டி! வலிக்காம பொறுத்தே மாமன் கூட்டி வருவாரு. அவரோடவே வா என்றான். செவத்தி எதுவும் பேசவில்லை.

மூன்றாம் நாள் இரவு தஞ்சாவூரில் ஒரு தோப்பில் தங்கினர். அந்த தோப்புக்காரர் பல வருடமாக பாதயாத்திரை வருபவர்கள் இலவசமாக தங்க ஏற்பாடு செய்து வைத்திருப்பார். காலையில் இவர்களுக்காகவே பம்பு செட்டையும் போட்டுவிடுவார். அங்கே வருவோருக்கு மூன்று வேளையும் உணவு தயாராகிக் கொண்டே இருக்கும். வருபவர்கள் அங்கே சாப்பிட்டு தோப்பில் இளைப்பாரி பொறுமையாக நடக்கலாம். கஸ்பார் இதற்காகவே முதல் ஆளாக அந்த தோப்பையடைந்து முதல் முறை வந்தவர்களிடம் பெருமையாக அந்த தோப்புக்காரர் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். அங்கு வருபவர்களுக்கு தோப்புக்காரர் இளநீர் வெட்டித் தரச் சொல்லி ஒரு ஆளை நியமித்திருந்தார். அவரிடம் இளநீர் வாங்கி ஒரு இளநீயைக் குடிங்க என பின்னால் வந்த ஊர்க்காரர்களுக்கு உபசரித்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்தான் கஸ்பார். செவத்தி அதைப் பொருட்படுத்தாது சுப்பிரமணியோடும் எட்வினோடும் பேசிக்கொண்டே தனியாக அமர்ந்து கொண்டார்.

அங்கே தோப்பில் மூளை வளர்ச்சி குறைவான ஒருவன் வேலையாளாக இருந்தான். அவன் தோப்பிலேயே ஒரு குடிசை போட்டு தங்கி பராமரித்து வருபவன். எட்வின் மற்றும் சுப்பிரமணியோடு சென்ற செவத்தி நேராக அந்த குடிசையருகில் சென்று ‘ஓய்’ என குரல் கொடுத்தார். மெல்ல குடிசையிலிருந்து வந்து வெளியே எட்டிப் பார்த்தவன் இவரைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே வாங்க வாங்க என்றான். அவனுக்கு அன்னப்பிளவு இருந்ததால் அவன் பேசுவது புரியாமல் இருந்தது. அவனுக்கு அருளைப் போலே மூளை வளர்ச்சிக் குறைவு என சுப்பிரமணி அறிந்து கொண்டார். ’சாப்பிட்டியா?’ என செவத்தி கேட்க ’ம்ம் சாப்பிட்டேன்! மீங்க சாப்பிங்களா!’ என கேட்க, ’இந்தா இனிமே தான். உன்னைய பாத்துட்டு அப்பறமா போயி சாப்புடலானுமுட்டுதான் வந்தேன்’ என சொல்ல கையை இங்க இருங்க என சைகை காண்பித்து சாப்பாடு வாங்கியார ஓடினான். அவனால் இயல்பாக ஓட முடியவில்லை. சற்று கால்கள் பின்னி பின்னி தடுமாறியபடியே ஓடினான்.

கையில் மூன்று தட்டுகளையும் பிடித்து சாப்பாட்டை கொண்டு வரவும் ‘டேய், நாங்க போய் வாங்கிக்க மாட்டோமா இதுக்குதான் ஓடுனியா!’ என செவத்தி கோவமாய் சொல்ல ஈறு தெரிய சிரித்தவன் தட்டை நீட்டியவாறே சாப்புடுங்க என்றான். சுப்பிரமணிக்கு அதைப் பார்க்கவே செவத்தி மீது பரிதாபமாக இருந்தது. அருளை செவத்திக்கு நினைவுபடுத்தும்படி தெரிய சுப்பிரமணி செவத்தியையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க சுப்பிரமணிக்கு கண் கலங்கிவிட்டது. யாரும் பார்க்காமல் கண்ணீரைத் துடைக்க முனைந்தார். அதைக் கண்ட செவத்தி என்ன சுப்பிரமணி, கால் வலிக்குதா, நான் சாப்ட்டு புடிச்சு வுடறேன்ப்பா’ என்றார். சுப்பிரமணி எதுவும் பேசாமல் தன் இடதுகையை செவத்தி தோளில் தட்டி இல்லையன தலையை மட்டும் ஆட்டினார்.

இரவு சாப்பிட்டு முடித்ததும் தன் ஜமுக்காளத்தை எடுத்து செவத்தியிடம் விரித்துக் கொள்ள குடுத்தான். நீ போத்திக்கோ நமக்கு பழகிருச்சு என தன் காவி வேஷ்டியை விரித்து படுத்துக்கொண்டார். அவன் செவத்தி தூங்கும் வரை முழித்து அவரைப் பார்த்துக் கொண்டான்.

காலை அங்கே பம்புசெட்டில் குளித்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும் போது அவன் சோப்பில் காசை வைத்தார். அவன் மறுக்காமல் வாங்கிக்கொண்டு டாடா காட்ட அவன் வாயில் வழிந்த எச்சிலை கையால் துடைத்துவிட்டு அவர் குழுவோடு கிளம்பினார்.

கிளம்பி நீண்ட நேரத்திற்கு செவத்தி எதுவும் பேசாமலே நடந்து வந்தார். அவர்களுக்குள்ளாக பேசுவதிலும் செவத்தி பங்கெடுக்கவில்லை. மதியம் நீடாமங்கலத்தைக் கடந்தவர்கள் அதற்கு பின் வேகத்தை அதிகரித்து இரவு அம்மையப்பனை அடைந்தனர். சுப்பிரமணிக்கு வலி தாங்கவில்லை. கால் கொப்புளம் வந்து அடியெடுத்து வைக்கவே முடியாதளவு இருந்தது. கொஞ்சம் பொறுத்துக்க சுப்பிரமணி இன்னும் ரெண்டு நாள்ள போயிரலாம் என மருந்தை தடவிக்கொண்டே செவத்தி பேசினார். எட்வின் ஏன்டா வந்தோம் என நினைக்கும் அளவு வந்து பஸ் பிடித்து திரும்ப ஊருக்கே செல்ல முடிவு செய்தான்.

டேய் எட்டுவினு, இப்ப போனியன்னா பூரா பயலுகளும் உன்னைய ரேக்குவாங்கடா… இன்னும் ரெண்டு நாளு பொறுத்துக்க .. இல்லைனா காலம்பூராவும் ஏன்டா திரும்ப வந்தோம்னு வருத்தப்படுவ.. ஏன்டா இம்புட்டு வயசுல நானே நடக்குறேன். இளந்தாரிப் பய உனக்கு என்னடா வந்துச்சு என அவனுக்கு மருந்து தடவி விட்டவாறே கூறினார்.

காலையில் எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு அவர்களோடு பொறுமையாகவே கிளம்பினர். கஸ்பாரும் அவர்கள் கிளம்பும் வரை காத்திருந்து அதன் பிறகு வேகமெடுப்பான். அதேபோல தங்குமிடத்திலும் அவர்கள் வரும் வரை காத்திருப்பான். அவன் குழுதான் அத்தனை பேரையும் மிந்தி முதல் ஆளாக போய்க்கொண்டிருந்தது.

எட்வினுக்காகவும் சுப்பிரமணிக்காவும் பொறுத்து பொறுத்தே செவத்தி அவர்கள் சொல்லுமிடத்திளெல்லாம் நின்று நின்று வந்தார். அப்படி நிற்கும் சமயத்திலும் தங்குமிடத்தை மனதில் கணக்கிட்டவாறே யப்பா அடுத்து அந்த ஊர்ல போய் கொஞ்சம் உக்காரலாம். அடிக்கடி உக்காந்த திரும்ப நடக்க முடியாது என சொல்லி முன்னேற்றிக் கொண்டுமிருந்தார். அடியக்காமங்களம் வரட்டும் என அவர்களை அமரவிடாது கூட்டி வந்து பாதயாத்திரை வருபவர்களுக்காக போட்டிருந்த பந்தலில் நிப்பாட்டினார். எட்வினும் சுப்பிரமணியும் அங்கே சென்றதும் படுத்துவிட்டனர்.

யய்யா படுத்தா நடக்க முடியாது.கொஞ்ச நேரம் உக்காருங்க. பொறுத்து போலாம். யய்யா இவங்களுக்கு கலர கொடுங்க என அங்கே இலவசமாக பாதயாத்திரை வருபவர்களுக்கு கலர் கொடுத்துக்கொண்டிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே நின்றிருந்தார்.

அருகிலிருந்த சைக்கிள் கடையில் இருந்தவர் ‘ஏன் வெளிய வந்து பாக்கமாட்டியா வாடா?’ என கத்த ஒருவன் கடைக்குள்ளாகவே நின்று கொண்டிருந்தது தெரிந்தது. முகமெல்லாம் கரியோடு அவன் வந்து நின்றாலும் ‘அதை வெளிய வந்து சொல்லமாட்டியா!’ என கத்த சரிங்க என அவன் கெஞ்சிக் கொண்டிருந்தது தெரிந்தது. கெஞ்சிக்கொண்டிருந்தவன் ஒரு கணம் இவரைப் பார்த்து அவசரமாக பார்வையை அவர் பக்கம் திருப்பியதும் செவத்திக்கு என்னவோ உறுத்தியது. பைய கடையை நோக்கி செவத்தி நடக்க அவனின் உடல்மொழியில் பயங்கர மாற்றம் ஏற்பட்டது.

அவன் அவசரமாக காற்றடிக்கப் பார்க்க பம்ப் கீழே விழ பதட்டத்தில் எடுக்கப்போக சைக்கிள் வைத்திருந்தவன் காத்து கூட அடிக்க தெரியல என்னத்த வேலை பாக்குறியோ என்றான். அடித்து முடித்ததும் காச வந்து தரேன் என சொல்லி எடுத்து நகர செவத்தி அங்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து கடைக்குள்ளே போக முற்பட்டவனை ‘சந்தியாகு மவந்தான நீயி! அருளு’ என சொல்ல அவன் கடைக்குள்ளேயிருந்தே அழ ஆரம்பித்துவிட்டான்.

வேகமாக கடைக்குள்ளே சென்றவர் ‘டேய் அருளு! என்னப்பா ஆச்சு? நீ வெளிநாட்டுல இருக்கன்ல நெனச்சிட்டுருக்கோம். இங்க என்னயா பண்ற!’

யார் பார்க்கக்கூடாது என மறைந்தானோ அவரே கண்டுவிட மறைக்காமல் ஓடிப்போய் பெரியப்பா என கட்டியணைத்து அழ ஆரம்பித்தான். இத்தனை ஆண்டுகளில் அவன் அவரை அப்படி அழைத்ததேயில்லை. வாயா போயா என்று தான் கூப்பிடுவான். அவன் பிறந்தபோது அருளப்பன் என ஞானஸ்தானத்தில் ஞானத்தகப்பனாக தலை தொட்டது செவத்தி தான். அன்று சாமியார் தலையில் எண்ணெய் பூசியதும் அழுதபோது கையில் வைத்து தாங்கியவர் இன்றும் அவனைத் தாங்கிக்கொண்டு விடுய்யா அழாதயா, என சமாதானம் செய்தாலும் அவன் அழுகை நின்றபாடில்லை.

நம்மாளுக என்னனு வந்து பாப்பானுக வா அங்குட்டு போயிருவோம் என கடையிலிருந்து அவனை தனியாக ஊர்க்காரர்கள் பார்க்காத பக்கம் அழைத்துச் சென்றார். அருள் எதுவும் பேசாமலே அமைதியாக இருந்தான். ‘என்னய்யா காச வாங்கிட்டு ஏமாத்திப்புட்டாய்ங்களா!’

ஆமா பெரியப்பா என தலையைக் குனிந்தபடி சொன்னான். மெட்ராஸூலயும் இருக்க பணத்த வாங்கிட்டு காலையில ப்ளைட்னு சொன்னாய்ங்க. ஆனா காலையில அவனுங்க ஆளையே காணோம். விசாரிச்சு பாத்தா எங்கள மாதிரி இன்னும் நிறையப் பேர இப்பிடி ஏமாத்தியிருக்காய்ங்க.

செவத்தி விரக்தியில் சிரித்தபடி ‘நானும் உங்கொப்பனும் பண்ண பாவந்தாயா உன் வரைக்கும் வருது.  உங்கப்பன்கிட்ட கள்ளு வித்ததுல அந்த நிலம் மட்டும் இருந்துச்சு. அத வித்துதான் உன்ன ஃபாரின் அனுப்ப காசு வாங்குனான். அப்பவே எனக்கு உறுத்துச்சுயா. எல்லாம் கள்ளு வித்த பாவம்யா. இப்ப மிச்சமிருக்கறது அந்த சிலுவைத்திண்ணை. கோயில் காரியம்ன்றனால அது மட்டும் இருக்கு.

ம்ம்ச்.. அது சரியா நீ ஏன் இங்கருக்க! காசு போனா மயிரா போச்சுனு ஊருக்கு வந்துருக்க வேண்டிதான! உன் அப்பனுக்கு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவான்!

’அப்பாவுக்கு தெரியும் பெரியப்பா!’ என சொல்லி அழுதான். ’தெரியுமா!’ என அதிர்ச்சியில் கேட்க ஆமா பெரியப்பா ஏமாந்த அன்னைக்கே நம்ம பிரசிடென்ட் வீட்டுக்கு போன் பண்ணி அப்பாட்ட பேசுனேன்.

ஓடும் ரயில், ஒரு முழக்கயிறு, ஒரு பாட்டில் விஷமிருக்கு.. இங்க வந்துராதனு சொன்னாரு பெரியப்பா என அழுதான். ‘மயிராண்டி, அப்படியா சொன்னான். புள்ள அருமை தெரியாத நாயி!’ என அழுதவனைக் கட்டிப்பிடித்து அவரும் அழுதுவிட்டார். அழுதவர் கண்ணீரைத் துடைத்தபடியே ’அப்பன் இல்லனா என்னடா பெரியப்பன் இருக்கேன்டா!’ என தன் நெஞ்சில் கோல்ட் வாட்ச் உரசும்படி வேகமாக தட்டிப் பேசிவிட்டு ’வாடா போலாம் இனிமே இங்க இருக்காத! என்றார்.

இல்ல பெரியப்பா! ஒன்னுக்கும் இல்லாம ஊருக்கு வந்தா ஊரு அசிங்கமா பேசும். நான் கொஞ்சம் சம்பாரிச்சுட்டு வரேன்.

சைக்கிளுக்கு காத்தடிச்சு எப்படா சம்பாரிக்கப்போற கூறுகெட்டவனே! என்றவர் என்ன செய்வதெனத் தெரியாமல் தலையைச் சொறிந்தார்.

சரி ஊருக்கு போவேணாம். இங்கேயே இரு. பெரியப்பன் வந்தரேன் என சொல்லி தன் குழுவை நோக்கி செல்லத் தயாரானார். அப்போது பெரியப்பா என மெதுவாக கூப்பிட்டான்.

’என்னா அருளு!’ அப்பா அம்மா அக்கா லாம் நல்லாருக்குறாங்களா என்றான். அவன் கேட்கும் போதே கண் கலங்கியது.  ‘அவங்களுக்கென்ன நல்லாருக்காய்ங்க!’ என சொல்ல அருளு அழுதான். அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் குழுவை நோக்கி விறுவிறுவென நடந்து சென்றார் செவத்தி.

மெல்ல சுப்பிரமணியிடம் சென்று ‘மணி,வயித்தக் கலக்குது.. நீங்க முன்னாடி போங்க நான் பொறுத்து வாரேன்’ என சொல்ல சுப்பிரமணி ‘நீ பொறுமையா போய்ட்டு வாப்பா! எவ்ளோ நேரம்னாலும் நிக்குறோம்’ என்றார்.

“ம்ம்ச்ச்.. போன்னா போங்கய்யா.. என் பின்னாடியே தான் வருவிங்களா.. நீங்க போங்க நான் வரேன்” என கோவமாக சொல்ல சுப்பிரமணிக்கு முகமே சுருங்கிவிட்டது. சுப்பிரமணி வேண்டுதல் வைத்ததே செவத்தி சொன்னதால் தான். செவத்தி இருக்கும் தைரியத்தில் தான் கூடவே வந்தது. இப்போது செவத்தி பாதி வழியில் இப்படி சொல்ல என்னவோ போல் ஆகிவிட்டது.

’சரி நாங்க போறோம். நீ வா!’ என மறுப்பேதும் சொல்லாமல் கூறினார். அவர்கள் எல்லோரும் கிளம்பி சென்றதும் செவத்தி மீண்டும் அருளப்பன் இருந்த சைக்கிள் கடைக்குச் சென்றார். கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தவன் அருகில் வந்தவர் ‘அருளு, அருளு வா கௌம்பலாம்’ என்றார். அருகில் ஸ்டூலில் அமர்ந்திருந்த ஓனர் அருளைப் பார்க்க அருளும் செவத்தியைப் பார்த்துவிட்டு ஓனரைத் தான் பார்த்தான்.

செவத்தி அவரருகில் சென்று எங்க புள்ளதான் கோவிச்சுகிட்டு வந்துட்டான், கூட்டிட்டு போறோம் என சொல்ல அவரும் அவரிடத்தில் இருந்து எழுந்து உக்காருங்க என்றார். அவர் கைகளில் இருந்த கோல்ட் வாட்ச்சும் உடுத்தியிருந்து காவி வேஷ்டியும் செவத்தியை பெரிய ஆள் என தோன்ற வைத்தது. இருக்கட்டுங்க. பையனை இத்தன நாள் பாத்துகிட்டதுக்கு நன்றிங்க! நாங்க கூட்டிட்டு போறோம் என்றவர் அவர் பதிலை எதிர்பாராமல் அருள் பக்கம் திரும்பி வா போலாம் என சைகை செய்தார்.

ஓனரும் தம்பி எதுவும் சொல்லாம வேலை வேணும்னு வந்து நின்னப்பவே இப்படிதான் இருக்கும்னு நினைச்சேன் என்றவர் அருளு இனிமே வீட்ல இருக்கவங்க பேச்ச கேட்டு நல்லாருப்பா.. என்றார்.

அருள் தன் பையைத் தூக்கிக் கொண்டு வந்து ஓனருக்கு நன்றி சொல்லிவிட்டு செவத்தியோடு நடக்க ஆரம்பித்தான்.

பெரியப்பா ஊருக்கு வரல பெரியப்பா என தயங்கி சொன்னவனிடம் திரும்பி, வாடா என சொல்லி நடக்க ஆரம்பித்தார். முன்னால் சென்றவர் ரிக்ஷா பிடித்து போங்க நான் வழி சொல்றேன் என ரிக்ஷாகாரரிடம் சொல்லி சந்து சந்தாக சென்றவர் ஒரு வீட்டின் முன்பு இங்க தான் என நிறுத்தினார். இறங்குப்பா என சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு அவனது ஒரு பெட்டியைத் தூக்கியபடி அந்த வீட்டை நோக்கி நடந்து கதவைத் தட்டினார். தனம், தனம் என தட்ட ஒரு அம்மா வந்து கதவைத் திறந்தார். வாங்க முன்னுக்கவே வருவிங்கனு நினைச்சேன் என்றவள் அருளைப் பார்த்து தயங்கி நிற்கவும் நம்ம சந்தியாகு மவந்தான், வாப்பா என அழைத்தார். தனமும் ஒரு விதத் தயக்கத்தோட வாப்பா என உள்ளே அழைத்தார்.

அவன் வருவதற்குள் செருப்பைக் கழட்டி சாதாரணமாக அவர் வீட்டைப் போல் உள்ளே நுழைந்தவர் பெட்டியை மூலையில் வைத்துவிட்டு நிலையில் சட்டையைக் கழட்டி வைத்தார். அருள் செருப்பைக் கழட்டி வருவதற்குள் தனம் முனகும் சத்தம் அருளுக்கு கேட்டது.

’அவன எதுக்கு கூட்டிட்டு வந்தீக?’ என தனம் சற்றே முசுடாக கேட்க, அருளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.  ‘ஏய் மெதுவா பேசுடி கேட்டுறப் போகுது, பாவம்டி பணத்த இழந்துட்டு சைக்கிள் கடையில இருந்தான் மனசு கேக்கலடி!’ என கமுக்கட்டை சொறிந்துகொண்டே சொன்னவர், ’அவன் நான் வேளாங்கண்ணி போய்ட்டு வாரவரைக்கும் இங்க இருக்கட்டும்’ என தனத்திடம் சொல்லிவிட்டு இன்னும் உள்ளே வராமல் தயங்கி நின்றுகொண்டிருந்த அருள் அருகில் சென்று, ’நம்ம வீடு அருளு சங்கட்டப்படாம உள்ள வாய்யா!’ என பெட்டியை வாங்கி அவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, ’தனம், இத உள்ள வைம்மா’ என பெட்டியைக் கொடுத்தார்.

அருளின் பெரியக்கா சிறுவயதில் கள்ளுக்கடையில் ஒரு பொம்பளைக்கு செவத்தியார் சோறு ஊட்டி விட்டதைப் பார்த்ததாய் சொல்லியிருக்கிறார். அப்பறம் செவத்தி மனைவியோடு சக்காளத்திச் சண்டை வந்து அந்த பெண் ஊரை விட்டே சென்றுவிட்டதாய் கேள்விப்பட்டிருக்கிறான். அவன் அப்பா செவத்தியை எதற்கெடுத்தாலும் திட்டினாலும் இந்த விஷயத்தில் மட்டும் அதெல்லாம் டூப்பு சும்மா அக்கா ரீலு விடுறா என சொல்லுவார். அவன் அக்கா சொன்ன அந்தப் பெண்ணை தனமாக பொருத்தி பார்த்தான்.

உள்ளே வந்ததும் வா கைய கழுவிட்டு வந்து சாப்புடுவோம் என்றார். இருவரும் புழக்கடைக்குச் சென்று கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தனர். தனம் இருவருக்கும் இலை விரித்து வைத்தார். நடந்து வந்த களைப்பில் சேசுவே என சொல்லி பல்லைக் கடித்தபடி அமர்ந்தார் செவத்தி. தனம் அருளையும் சிரித்த முகத்தோடு வாப்பா உக்காரு என்றார்.

இருவருக்கும் தனம் சோற்றைப் பரிமாறினாள். அது இவுரு வேளாங்கண்ணி போறனால சைவமா வச்சேன். நீயும் வருவனு தெரிஞ்சிருந்தா கறி எடுத்துருக்கலாம் என்றாள்..

அருள் மெலிதாக சிரித்தபடி சோற்றை வாயில் எடுத்து வைக்க ‘நல்லா அள்ளி சாப்புடுயா. வெளியாளு வீட்ல சாப்புடுற மாறி தயங்கி சாப்புடுற. நானும் உனக்கு சொந்தம்தாய்யா என்றாள் தனம்.

இருவரும் சாப்பிட தனம் அருகிலமர்ந்து பரிமாறிக் கொண்டு ஆசையாக சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருவருக்கும் விசிறிக் கொண்டிருந்தார்.

செவத்தி இறுதி வாய் சாப்பிட்டுவிட்டு , ’எங்க உந்தம்பி மைனர ஆளக்காணோம்’ என தனத்திடம் கேட்க, தனம் அவருக்கு அன்னக்கரண்டியில் சாப்பாடை எடுத்துக்கொண்டே , ’எதோ ராமராசன் படம் பாக்கபோறேன்னுட்டு போனான். ஏதோ பேர சொன்னான்.’ மறந்துட்டேன் என்றாள்.

அவன் ஒரு ஆள்றியான்னு இவனும் பாக்க போறியான். இலையை மூடிவிட்டு மெதுவாக காலை நீட்டியபடியே சேசுவே என எழுந்தவரிடம் ஏன் எழுந்துட்டிங்க சாப்புடுங்க, ‘இல்ல தனம், போதும்’ என கூறி ‘பழைய படத்துல படம் முச்சூடும் செம்பக் காணோம் செம்பக் காணோம்னு கையில செம்ப வச்சுகிட்டே பாடிகிட்டு இருப்பியான் தனம். அவன் படத்த பாக்க போயிருக்கியான் பாரு என்றார்.

’ஐய்ய…!’ என்றாள் தனம்..

’ச்சீ…பால் சொம்புடி தனம்..!’ என கொஞ்சுவது போல சொன்னவர் அருளப்பனிடம் திரும்பி தனத்துக்கு படம் பாக்கவே புடிக்காது. அவளுக்கு யாரையுமே தெரியாது என சொல்லிச் சிரித்தபடியே கைகழுவப் போனார்.

’ம்ம்க்கும்… இந்தாளுக்கு ராமராசன புடிக்காது. அதான் இப்படி வயிரெறிஞ்சிட்டு போறாரு.’ என அருளப்பனிடம் சிரித்து மெதுவாகச் சொல்லிவிட்டு சாப்பாட்டு பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு வேகமாக எழுந்து செவத்தி கைகழுவ செம்பை எடுத்துக் கொடுக்க ஓடினாள்.

அருளப்பனுக்கு இங்கு வந்தது முதல் வேறொரு செவத்தியைப் பார்ப்பதை உணர முடிந்தது. கைகழுவிவிட்டு வந்தவர் மீண்டும் அருள் அருகிலேயே அமர்ந்து அந்த சோத்த இவனுக்கு போடு என்றார். 

’இல்ல வேணாம்!’

டேய் நம்ம வீடுறா. சாப்பிடுறா என அதட்டினார். அருள் சாப்பிட்டு முடித்து வந்ததும் சட்டையை மாட்டிக் கொண்டு தயாராக நின்றார். அருளு, நம்ம வீடுதான் இது. சரியா! நான் வேளாங்கண்ணி போய்ட்டு வர்ரவரைக்கும் மூனு நாள் இங்கேயே இரு. தனம் ஒன்னும் சொல்லாது. புள்ளை மாறி பாத்துக்கும். பாவம் அதுக்கும் புள்ள கிடையாது. அது தம்பி ஒருத்தன் இப்ப அந்த செம்பக் கண்டுபிடிச்சிட்டு வருவியான். அவனோட படத்துக்கு கிடத்துக்கு போய்ட்டு இரு.’

செவத்தி சொன்னதற்கு மெதுவாக தலையாட்டினான். போகும் போது செலவுக்கு காசை அவன் பையில் மறுக்க மறுக்க வைத்துவிட்டு இவ்ளோதான்டா இருக்கு. போய்ட்டு வந்து தாரேன் என கூறி வெளியே சென்று சுவற்றைப் பிடித்து செருப்பை மாட்டியவர் தன் கையைப் பார்த்து ஒரு கணம் யோசித்து தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் கழட்டி இந்தரா இத மாட்டிக்க.. காசில்லாட்டி வித்துக்க!’ என்றார்.

’ஐயோ! இத வச்சுக்கங்க வேணாம் என பதறிப் போய் சொல்ல அறைஞ்சேன்னு வைய்யி… ங்கொப்பனும் நானும் கள்ளுக்கடையில ஊம்புனது உன்னைய இப்படி பாக்கவாடா. கட்றா கையில. எதாவது அவசரம்னா வித்துக்க சரியா..தனம் வரேம்மா…’ என பொறுமையாக வீங்கிய கால்களோடு தாங்கி நடந்தபடியே  கிளம்பினார்.

******

இரவு வரை சுப்பிரமணியும் எட்வினும் அவர்கள் குழுவும் செவத்தி தனியாக வருவதை சொல்லவில்லை. கஸ்பார் இவர்கள் வருவதைப் பார்த்ததும் ‘என்ன நீங்க மட்டும் வரீங்க அவரு எங்க’ என கேட்க இந்தா வந்துருவாப்டி வயித்தக் கலக்குதுனு போயிருக்காரு என்றார்.

முதலில் கஸ்பார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நேரம் செல்ல செல்ல செவத்தியைக் காணவில்லை என்றதும் கஸ்பார் வந்து என்ன இன்னும் ஆளக் காணோம்! போய் பாத்துட்டு வருவோமா என கேட்க சமாளித்தவர் பின்பு மதியமே போய்விட்டார் என்பதை சொன்னதும் கஸ்பார் அவர் வெளிய போகல வேளாங்கண்ணிக்கே போய்ட்டாரு என சொல்லி சிரித்தான்.

‘கஸ்பாரு மெதுவா பேசு கத்தாத!’ என சுப்பிரமணி சொல்ல ’அந்தாளு பஸ் ஏறிட்டாரு இது ஒன்னும் புதுசில்ல மாமோவ்.. ஏய் நம்ம செவத்தி அன்னைக்கு என்ன பேச்சு பேசுனாரு. ஆளு மதியானத்துலருந்தே ஆளக் காணோம்.’ என சத்தமாக சொல்ல அவன் ஊர்க்காரர்களோடு செவத்தியை அறிந்தவர்களும் சூழ்ந்து கொண்டனர்.

பல வருடமாக வரும் ஞானம் ‘ஏய் செவத்தி, அப்படி ஆள் இல்லப்பா! இல்லாத புள்ளைக்காக வரவரு! எத்தனை வருசமா பாத்துருக்கேன். எங்கேயாவது தேங்குவாரே தவிர பஸ் ஏறிட மாட்டாரு. வந்துருவாரு என சொல்ல லாஸ்ட் டைம் எங்க போனாரு என கேட்டான்.

’கஸ்பாரு! அவரு மொல்ல வரதுக்குள்ள நம்மதான் வேகமா போய்ட்டோம். அப்படி பஸ்ல வரவரு எதுக்கு வேண்டுதல் வைக்கணும். தேவையில்லாம ஒரு ஆள தப்பா பேசாத!’ என எச்சரித்தார்.

எட்வினும் ஆமா இவன் அன்னைக்கே இப்பிடி பேசி அவர அழ வைச்சிட்டான் என சொல்ல ஞானம் கஸ்பாரை நோக்கி, “நீயா ஒரு ஆள தப்பா பேசாதப்பா! திரும்ப வந்துட்டா பேசுன வார்த்த இல்லனு ஆயிடுமா. மாலை வேற போட்ருக்கோம். நம்ம தப்பா பேசுறதென்ன நினைக்கவே கூடாது” என்றார். ஞானம் நாள்தவறாது குடிப்பவர். இந்த நாற்பது நாட்கள் தான் குடிக்காமல் அமைதியாக இருப்பார். அதற்காக அவர் மனைவியே மாலை போட சொல்லி வற்புறுத்தி அனுப்பிவிடும்.

கஸ்பாரை எல்லோரும் முறைப்பதை அறிந்து கொண்டு ‘சரிங்க நான் சொன்னது தப்பு பொது மன்னிப்பே கேக்குறேன்.

ஏய் எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற என சொன்ன ஞானத்தை இருங்க சொல்லி முடிச்சுக்கறேன்! நான் சொன்னது தப்புங்க ஒத்துக்கறேன். காலம்பற நம்ம கௌம்பற வர பாப்போம் அவரு வந்துட்டா நீங்க சொன்னத ஒத்துக்கறேன். ஆனா வரலைனா…

அதெல்லாம் வந்துருவாரு என முந்திக்கொண்டு சொன்னான் எட்வின். கஸ்பார் எட்வினை முறைக்க வந்துருவாரு மிச்சத்த காலைல பாத்துக்கலாம் போய் படுங்க என கலைந்து சென்றனர். சுப்பிரமணியால் செவத்தியை கஸ்பார் அசிங்கப்படுத்தியதை தாங்கவே முடியவில்லை. மாலையை கழட்டிய பிறகு கஸ்பாரை நாலு குடுப்பு குடுக்க வேண்டுமென மனத்தில் நினைத்துக் கொண்டார். செவத்தி நீ மட்டும் எங்க கூடயே வந்திருந்தா இந்த நாயெல்லாம் பேசுமா! எங்க செவத்தி இருக்க நினைத்துக் கொண்டே உறங்கிப் போனார்.

காலை அவர்கள் விழித்த போது அவர்கள் அருகில் செவத்தி படுத்திருந்தார். கஸ்பாரை எழுப்பி கூட்டியாந்து செவத்தி படுத்திருப்பதைக் காண்பித்தான். கஸ்பார் செவத்தியைப் பார்த்து, ’என்ன மாமா பஸ் பயணம்லாம் நல்லாருந்துச்சா!’ என கேட்க அதைச் சட்டை செய்யாமல் சுப்பிரமணியைப் பார்த்து ’வயித்தால புடுங்க ஆரம்பிச்சிருச்சு. சரி உங்க வேண்டுதல் என்னால பாழாயிடக்கூடாதுனதான் முன்னுக்க போக சொன்னேன். நீங்க போனப்பறம் ஆஸ்பத்திரி போய் ஊசி போட்டேன். அங்கனக்குள்ள எங்கனயோ இந்தா வாட்சை திருடிட்டாய்ங்க என வெறுங்கையைக் காட்டினார். எட்வின் பதறி ‘அய்யய்யோ, விலை அதிகம்ல அது’ என கேட்க ஆமா என்ன பண்றது, தொலைஞ்சிருச்சு. போன எல்லா இடத்துலயும் தேடிப்பாத்தேன் அகப்படல என்றார். சுப்பிரமணி கள்ளுவித்த காசு என மனதிற்குள் நினைத்து, விடு செவத்தி என தோளைத் தட்டி கூறிவிட்டு, சொல்லியிருந்தா நாங்களும் ஆஸ்பத்திரி வந்துருப்போம்லப்பா! என சொல்ல, இல்லப்பா! முத ட்ரிப் வர! எங்கயும் திரும்பாம கரெக்டா போகணும்னு தான் சொல்லல! அதான் வந்துட்டேன்ல என சொல்லவும் எட்வின் கஸ்பாரைப் பார்த்து நேத்து சவடாலா பேசுனேல இப்ப பேசுடா என கத்த ஞானம் எட்வினைப் பார்த்து, எட்வினு மாலை போட்ருக்க! உன்ன விட பெரியவன மரியாத இல்லாம பேசாத, என்றார்.

கஸ்பார் ஞானத்திடம் விடுங்க! மொத ட்ரிப் தான வரய்யான். அதான் அப்டி பேசறான். எட்டாண்டி நானும் முதல்ல அப்டிதாண்டா நினைச்சேன். அவரு எல்லா ட்ரிப்பும் இப்டி ஒரு காரணம் சொல்லிட்டு தாண்டா இருக்காரு. என சொல்ல கோவமான சுப்பிரமணி ’ஏண்டா அம்புட்டு காசுல்ல வாட்ச தொலச்சிட்டு வந்துருக்கான்! இன்னும் நீ நம்பாம பேசிட்டுருக்கியா! கஸ்பாரு மாலை போட்ருக்கேன்னு பாக்கறேன். இல்லைன்னு வைய்யி!’ என மிரட்ட ஞானம் வந்து, சுப்பிரமணி விடுங்க! கஸ்பாரு இததான் நேத்தே சொன்னேன். வந்துட்டாருன்னா வார்த்தைய திரும்ப வாங்கமுடியாதுன்னு! நேத்து நீ பேசுன பேச்சுக்கு தான் எல்லாம் பேசறாங்க! என சொல்ல, செவத்தி, ‘விடுங்கப்பா! மாமனத் தான சொல்றயான். சொல்ட்டு போகட்டும்! நான் குளிச்சிட்டு வந்தறேன் கெளம்பலாம் என அமைதியாக்கிவிட்டு நகர்ந்தார். 

மதியத்திற்கெல்லாம் வேளாங்கண்ணியை அடைந்தவர்கள் நுழையும் போதே ஜெபம் செய்துகொண்டே சென்றனர். வேளாங்கண்ணியே மக்கள் கடலால் சூழ்ந்திருந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள்.

எல்லாரும் பக்தியோடு வேண்டுதலை முடித்துவிட்டு வீட்டுக்கு தேவையான பொறி, கல்கண்டு, சாமி எண்ணெய், தீர்த்தம் எல்லாம் வாங்கிக்கொண்டனர். செவத்தி எதையுமே வாங்கவில்லை. மாதாவிடம் அருளுக்காக மனதார வேண்டினார். சுப்பிரமணி மொட்டை அடித்து கண்ணீர் வழிய மாதாவின் முன்னால் அழுது நன்றியைத் தெரிவித்தார்.

சுப்பிரமணியை குழந்தை முகம் பதித்த வெள்ளித் தகடு வாங்கி மகளுக்கு குழந்தை பிறப்பதற்காக காணிக்கையிடச் சொன்னார் செவத்தி. சுப்பிரமணியும் மனதார வேண்டிக்கொண்டு செய்தார்.

சுப்பிரமணிக்கு செவத்தி பாதியில் விட்டு சென்றது வருத்தமாக இருந்தாலும் திரும்ப வந்துவிட்டதால் நிம்மதி இருந்தது. இருப்பினும் செவத்தி முகம் சோகமாக இருப்பதை உணர்ந்தாலும் அது வாட்ச் களவு போன சோகமாகயிருக்கும் என நினைத்துக்கொண்டார். லூசாக மாட்டியிருக்கும் அந்த வாட்ச் செவத்தி கையை ஆட்டினாலே மேலும் கீழும் ஒரு வித ஒலியோடு ஆடும். அது இல்லாமல் செவத்தியைப் பார்க்க சுப்பிரமணிக்கே கஷ்டமாக இருந்தது. வாட்ச் இருந்த கையைப் பார்த்த சுப்பிரமணியை ’நீ இவிங்களோட போப்பா! எனக்கொரு வேலையிருக்கு நான் முடிச்சுட்டு வந்தரேன் என செவத்தி கூற, சுப்பிரமணிக்கு செவத்தியோடு இருக்க தோன்றினாலும் செவத்தி பேச்சை மறுக்க முடியவில்லை. சரிப்பா என சொல்லிவிட்டு ஊர்க்காரர்களோடு சேர்ந்து கிளம்பினார்.

வேளாங்கண்ணியிலிருந்து கிளம்பியவர் தனத்து வீட்டை அடைந்து அங்கே இன்னும் ஒரு சில நாட்கள் அருளைத் தங்கும்படி கேட்டுக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அவருக்கு யாரிடம் இதைச் சொல்லி சரிப்படுத்த என தெரியவில்லை. அதே யோசனையாக சிலுவைத்திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த யாகப்பன், ’என்ன செவத்தி உன் கோல்ட் வாட்ச் காணாமாப் போச்சாம்ல என கேட்டார். அதில் துளியளவு கூட அக்கறையில்லை என்பதை அறிந்தாலும் ஆமா யாக்கோப்பு போச்சு என சொல்ல கள்ளுக்கடை காசுல வாங்குனதுதான அதாம் போச்சு என்றான். செவத்திக்கு கோவம் வந்துவிட்டது. சிலுவைத் திண்ணை என்று கூடப் பாராமல் ஒரு பெரிய கெட்ட வார்த்தையைச் சொல்லித் திட்டி அதுனால தான் என் காசு போச்சுன்னா இந்த கவர்மென்ட் தானடா இப்ப நடத்திட்டு இருக்கு. இது என்ன நாசமாவப் போச்சு! போடா ஏன்ச்சு முதல்ல… என கத்த சிலுவைத் திண்னையில் இருந்த மற்றவர்கள் வந்து செவத்தி கோவப்படாத வுடுப்பா என சொல்ல, பின்ன என்னயா! என்னமோ நான் மட்டும் பாவம் பண்ணமாறி பேசுறியான். நானாடா ஒவ்வொருத்தன் வாயிலயும் ஊத்திவுட்டேன். 77 வெள்ளத்தப்ப குடகனாத்துல போன பொணத்து நகையை பொறுக்கி தின்ன நாயி! நீ என்னைய பேசுறியா! என கேட்க வியர்த்துப் போன யாக்கோபு என்ன செய்வதென தெரியாமல் எழுந்து போய்விட்டார்.

கோவத்தில் எழுந்தவர் யாக்கோபு மறையும் வரை திட்டிக்கொண்டிருந்தார். திட்டிவிட்டு திரும்பியவர் கல்வெட்டில் உபயத்திற்கு கீழே ஆசிர்வதித்து திறந்து வைத்த ஆயர் தாமஸ் குப்புசாமி பெயர் பார்த்ததும் ஒரு வழி கிடைத்ததாய் நினைத்து பஸ்ஸேறி அவரைப் பார்க்கச் சென்றார்.

தாமஸ் குப்புசாமி அம்மாபட்டி அருகிலுள்ள மாரம்பாடியைச் சேர்ந்தவர். மூன்றாம் வகுப்பில் வெள்ளைய வாத்தியாரிடம் ஒன்றாகப் படித்தவர்கள். ஆயரான பிறகு அம்மாபட்டி பிள்ளைகளுக்கு புதுநன்மை உறுதிபூசல் கொடுக்க எப்போது ஊருக்கு வந்தாலும் செவத்தி வீட்டிற்கு வந்துவிட்டுத்தான் போவார். சிறுவயதில் வாடா போடாவென அழைத்தாலும் சாமியாரான பிறகு செவத்தி சாமி என்று தான் அழைப்பார். ஆயரைப் பார்த்ததும் காலில் விழப்போன செவத்தியைத் தடுத்த ஆயர், ‘என்ன செபஸ்தி இது! எத்தன தடவ சொல்லிருக்கேன் இந்த மாதிரி பண்ணாதன்னு! முதல்ல உக்காரு’ என அமரச் சொன்னவரிடம் ‘இல்ல சாமி, எனக்கு உதவி செய்றேன்னு சொல்லாம உக்காரமாட்டேங்க’ என நின்றவரை எதுன்னாலும் செய்றேன்ப்பா உக்காரு என சிரித்துக் கொண்டே சொன்னார். ஆயருக்கு தெரியும் செவத்தி எப்போதும் தனக்கு உதவி என்று வந்து நிற்க கூடியவரில்லை என்பது. அதுபோக செவத்திக்கு யார் இருக்கிறார், உதவி என கேட்க? உட்கார்ந்த செவத்தியை பார்த்தவர் டீ குடிக்கிறியா என கேட்க இல்ல சாமி வேணாம் என சொல்ல சரி வந்த விஷயம் என்ன சொல்லு என்றார்.

அருளைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி அவனை வரக்கூடாது என சொன்ன சந்தியாகுவைக் கெட்ட வார்த்தையில் திட்ட ஆயர், ’செபஸ்தி இப்படியெல்லாம் பேசக்கூடாது’ என சொல்ல மன்னிச்சுக்க சாமி பெத்த புள்ளைய எவனாவது இப்படி சொல்லுவானா! பாவம் என்ன கஷ்டப்பட்டுருப்பான் அவன். அவனுக்கு எதாவது வேலை போட்டுக் குடுங்க சாமி’

’என்ன படிச்சிருக்கான்?’

’பன்னென்டாம்ப்பு சாமி. அவன இந்தா இங்கனக்குள்ளார உங்க கூடவே கூட வச்சுக்கங்க புண்ணியமாப் போகும்’

சிறிது நேரம் யோசித்த ஆயர் ஒன்னு பண்றேன் செபஸ்தி கருமாத்தூர்ல டீச்சர் ட்ரெய்னிங் காலேஜ்ல பேசி சீட்டு தர சொல்றேன். ரெண்டு வருசம் அங்கே ஹாஸ்டல்ல தங்கி படிக்கட்டும். படிச்சு பாஸ் பண்ணா நம்ம ஆர்சி ஸ்கூல்ல எங்கயாவது போட்டுக்கலாம். என்ன!

சாமி என கையெடுத்து கும்பிட்டவரின் உள்ளங்கைகளைப் பற்றி அடுத்தவன் சந்தோஷத்துல தான் ஆண்டவர் இருக்காரு. உனக்கு நல்ல மனசு. உனக்காக மட்டும் இத செய்றேன் செபஸ்தி. ஆனா ஃபீஸ் எவ்ளோ கேக்குறாங்களோ அதை கட்டிரு என்றார். அதை நான் பாத்துக்கறேன். சாமி இத பண்ணாலே போதும் என சொல்லி எழுந்து சென்றார்.

ஆயர் கடிதம் எழுதிக் கொடுக்க அந்தக் கல்வி ஆண்டிலேயே லேட் அட்மிசனாக அவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டனர். அதுவரை தனம் வீட்டிலேயே தங்கி பக்கத்திலிருந்த மில்லிற்கு வேலைக்குப் போனான் அருள்.

செவத்தி அடிக்கடி வந்து பார்த்துப் போனார். கல்லூரிக்கான பணத்தை சந்தியாகுவிடம் கேட்க முடியாது. தான் பேசப் போனாலே சாத்தான் என காதைப் பொத்திக் கொண்டு ஓடிவிடுவிடுவான். அவனிடம் இதைச் சொன்னால் வீம்புக்கென்றே தன் மகனை படிக்கவிடாமல் இழுத்து வந்துவிடுவான். எனவே, தன் பூர்விக நிலத்தை அடகு வைத்து காசைக் கட்டினார். கல்லூரியில் சேர்த்ததற்கு பிறகு சந்தியாகுவின் மனைவியடமும் மகளிடமும் மட்டும் அவன் கருமாத்தூரில் படிக்க சேர்த்துவிட்டதைக் கூறினார். முத்தழகுபட்டியை பூர்வீகமாகக் கொண்ட அவள் அதைக் கேட்டதும் “ஐயா எஞ் செபஸ்தியாரே! எங் குடும்பத்த காப்பாத்திட்ட சாமி!” என நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியபடி அழுதார். அவளுக்கு செவத்திதான் கடவுள்.

சுப்பிரமணியின் மகள் வளைகாப்பிற்காக தற்போது வீட்டிற்கு வந்திருக்கிறாள். நல்ல படியாக ஆண் குழந்தை பிறந்தால் வேளாங்கண்ணி வருவதற்கு வேண்டுதல் வைத்துக் கொண்டதாக சுப்பிரமணி செவத்தியிடம் சொல்ல, ’ஏய்! எந்த புள்ளையா இருந்தா என்ன! நல்லபடியா பொறந்தாலே போதும் வரேன்னு வை’ என செவத்தி சொல்ல சிரித்த சுப்பிரமணி, ’சரிப்பா அப்படியே வேண்டுதல் வைச்சுக்கறேன்’ என்றார்.

அருள் தற்போது நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறான். சந்தியாகுவிற்குத் தெரியாமல் ஒரு முறை சந்தியாகுவின் மனைவியையும் மகளையும் கருமாத்தூர் அழைத்துச் சென்று அருளைக் காட்டினார். அருள் தற்போது பக்தியாக மாறிப்போனதில் அவள் அம்மாவிற்கு பரமசந்தோசம்.

அவன் கையில் செவத்தியின் வாட்சைப் பார்த்து அதிர்ச்சியானவள் இது எப்படி வந்தது என கேட்க பெரியப்பா தான் கொடுத்தார். திருப்பி குடுத்தாலும் வாங்கமாட்றாரு’ என்றான். அவள் செவத்தி காலில் விழுந்து ’அண்ணே! உன்னைய எப்ப நினைச்சாலும் கையில ஆடுற அந்த வாட்சும் சேந்து தான்னே வரும். அது தொலைஞ்சிருச்சுனு நினைச்சேன். தயவுசெஞ்சு நீ போட்டுக்கணே! என எவ்வளவோ கெஞ்சியும் ’எனக்கெதும்மா வாட்ச்சு! படிக்கிறப்பய அவன்கிட்ட இருக்கட்டும்!’ என சொல்லிவிட்டார்.

தினமும் வாட்சிற்கு சாவி கொடுக்கும் போதெல்லாம் பயபக்தியாய் செவத்தியை நினைத்துக்கொள்கிறான் அருள். அருளிடம் அவர் செய்த இத்தனை நல்லதிற்கும் அவர் கேட்ட ஒரே பதிலுதவி தனத்தைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்பதுதான். அதை சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான்.

அந்த வருடம் வேளாங்கண்ணிக்கு வழக்கம்போல பாதயாத்திரை வருபவர்களிடம் விலாவாரியாக பாதயாத்திரை பற்றி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் செவத்தி. முதல் முறை வருபவர்கள் பயபக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதை வளைகாப்பிற்கு வந்த தன் மகளோடு நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சுப்பிரமணி. அப்போது கஸ்பார், முழுசா போறவக யாராவது சொல்லுங்கப்பா! நீடாமங்கலத்துட்ட நீட்டா கட் ஆகுறவங்களாம் ஏன் சொல்ல சொல்றிக! என சத்தமாக சொல்ல, டேய் கஸ்பாரு போன ட்ரிப்பே இப்பிடி பேசுனதுக்கு நாலு குடு குடுக்கணும்ண்டு இருந்தேன். செவத்தி சொன்னனால தான் வுட்டேன். இப்பிடி பேசிட்டு திரிஞ்சின்னு வைய்யிடா! உங்கப்பன மாதிரி நடக்கமுடியாம பண்ணிவுட்ருவேன்!’ என சுப்பிரமணி சொல்ல, கோவமான செவத்தி, ‘ஏய் சுப்பிரமணி மால போட்டுருக்கவன பேசாதப்பா! என அமைதியாக இருக்கச் சொன்னார். உனக்காக பாக்குறேன் செவத்தி என சொல்லிவிட்டு அமைதியானார்.

‘இந்த தடவ என்னா காரணம் சொல்லி காணாமாப் போறாருன்னு பாக்கறேன்! உங் கூடவே தான் மாமா வருவேன்’ என செவத்தியைப் பார்த்துச் சொல்ல, அதைக் கண்டுகொள்ளாத மாதிரி செவத்தி சம்மனசைக் கூட்டத்தில் தேடி, ’எங்க கோயில்புள்ளை இருக்கியான்! ஏய் சம்மனசு வாப்பா வந்து சட்டுனு செபத்தை சொல்லிவிடு. சிலுவைத்திண்ணையில போய் வேடசந்தூர்காரங்களுக்காக நிக்கலாம். இங்கருந்தா இவனுவ இப்படிதான் பேசிட்டிருப்பாங்க’ என்றார். கோயில்பிள்ளை சம்மனசு செபத்தை சொல்லி பிதா சுதன் போட்டு முடிக்க செவத்தியின் மனைவி எல்லாரையும் குடத்தில் தண்ணீர் வைத்து தயாராக இருக்க சொன்னாள். கிளம்பும்பொழுது வழியில் குடத்தை ஊற்றி அனுப்பி வைத்தனர். செவத்தி தன் மனைவியைப் பார்த்து தலையாட்டிவிட்டு நடந்து சிலுவைத் திண்ணையை அடைந்தார். காலியாக இருந்த திண்ணையும் வாட்சில்லாத தன் கைகளையும் பார்த்து லேசாக புன்னகைத்துக் கொண்டார்.

இரா.சேவியர் ராஜதுரை

திண்டுக்கல் மாவட்டம். இளங்கலை இயற்பியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளேன். தற்போது திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக (மலை திரைப்படம்- இன்னும் வெளியாகவில்லை) உள்ளேன். தற்போது ஒரு குறும்படம் எடுத்துள்ளேன்(இன்னும் வெளியாகவில்லை). இதுவரை ஆறு சிறுகதைகள் வாசகசாலை, சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளியாகிவுள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

One thought on “சிலுவைத்திண்ணை

  1. ஊர் பாஷையில் அசத்தலான மொழிநடை..

    வாழ்த்துகள் சேவியர் ராஜதுரை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *