வேலை உறுதியாகிவிட்ட அந்த மகிழ்ச்சியானச் செய்தியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். கம்பெனியின் பெயர்தான் அனைவரின் மத்தியில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. ‘மாமிஸ் மசாலா’ என்பது பிராண்ட் பெயர் என்றாலும், நிறுவனத்திற்கென்று வணிக ரீதியாக ‘சந்தன் லால் அன் சன்ஸ்’ என்கிற மற்றொரு முத்திரைப் பலகையும் பொறிக்கப்பட்டிருந்ததை அங்கே நுழையும்போது கவனித்தேன். அதையும் கொஞ்சம் மாற்றி, யார்கேட்டாலும் ‘சந்தன் ஸ்பைசஸ்’ என்று ஸ்டைலாக சொல்லிக் கொள்ள ஆரம்பித்தேன். இருப்பினும் ஸ்பைசஸ் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டால் போச்சு!. “ஓஹ்…! மசாலா கம்பெனியா…?” என்று பல்ப் எரிவது போல பல் வரிசைகளைக் காட்டத் தொடங்குவார்கள்.

இப்போது கும்மிடிப்பூண்டியருகே தண்ணீர் உள்ள காட்டில் அமைந்திருக்கும் அந்த வாட்டர் பிளாண்ட்டிலிருந்து எப்படியாவது தப்பித்து வெளியேற வேண்டும்; அதற்கான வழிகளை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். நேரடியாக விசயத்தை சொன்னால் நிச்சயம் என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் வந்த மூன்று மாதங்களிலேயே பணி சார்ந்த எனது அணுகுமுறைகளைப் பார்த்துவிட்டு சம்பளம் மூவாயிரத்திலிருந்து நாலாயிரமென ஏற்றி வேறுக் கொடுத்திருந்தார்கள்.

இந்த தருணத்தில் குண்டூர் செல்லவிருக்கும் விசயத்தை சொன்னால் மேலும் கூட ஐநூறோ ஆயிரமோ உயர்த்தித் தருகிறோமெனவும் என்னை தடுத்து நிறுத்தப் பார்க்கலாம். எதுவுமே அந்த தேவயானியின் கணவருக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆனால் அங்கிருக்க எனக்கு மனசில்லை. வில்லிலிருந்துப் புறப்படக் காத்திருக்கும் கணையைப் போலல்லவா தீவிரமாய் எனக்கான திசையை நோக்கி ஒவ்வொரு நொடியையும் அதுவரை கடத்திக் கொண்டிருந்தேன்!

இங்கே இன்னொரு சம்பவத்தையும் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். இடையில் ஒருநாள் அறைக்குள் எங்கிருந்தோ பாம்புக்குட்டியொன்று நுழைந்துவிட்டது! அதுவும் கட்டுவிரியன்! நல்லவேளை அப்போது அருகில் சுப்பா ராவ் இருந்தான். அவன்தான் தக்க சமயத்தில் அதை கவனித்து அதன் கதையை கச்சிதமாய் முடித்து வைத்ததும் கூட!

அன்றிலிருந்து நானும் கொஞ்சம் கலவரத்தோடுதான் தினமும் புழங்க வேண்டியிருந்தது. எனக்காக தங்க ஒதுக்கப்பட்டிருந்த அந்த சிறிய ஓட்டுக் கட்டிடத்தைச் சுற்றி என்றோ கதிரறுக்கப்பட்ட வயல்காடுகள்தான். அதனால் அதுபோன்று இன்னொரு நாளும் நடந்துவிட்டால் என்ன செய்வது?

வேறு வழியில்லை என்றால் கூட பரவாயில்லை. உயிரைப் பிடித்துக் கொண்டாவது சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் அதுபோன்ற இடங்களில் இருந்து வேலைப் பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அங்கிருந்து தப்பிக்க ஒரு நல்ல வாய்ப்பு வந்தபிறகும் கூட அதிகம் யோசித்துக் கொண்டிருந்தால் அது நம் புத்தி போதாமைதானே?

சுப்பா ராவ் உதவியில்லாமல் அங்கிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். வெளியில் அவனோடு சேர்ந்துச் செல்லும் பட்சத்தில் யாரிடமிருந்தும் கேள்விகள் வர, சந்தேகங்கள் எழ வாய்ப்பில்லை. முக்கியமாக அந்த முரட்டு தாத்தாவிடமிருந்து!

அதனால் அவனை ‘கரெக்ட்’ பண்ண மெதுவாக அவனது கைகளைப் பற்ற தொடங்கினேன். நளினமாய் சிரித்துக் கொண்டே “என்ன சார்..” என்றபடி களிமண் கைகளோடு குயவன், சக்கரத்தில் பிடித்து வார்க்கும் ஈரப்பானையைப் போல் நாணத்தால் சுழன்று நெளிந்தான். அவனுடைய உதடுகள் வழியே வாநீர் எப்போது வேண்டுமானாலும் வழிந்து விழும் நிலையில் சற்று சிணுங்குவது போலமுகபாவனைகள் காட்டினான்.

இதுதான் சமயமென்று மெதுவாக விசயத்தை ஆரம்பித்து, அவன் எனது திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வண்ணம், “ஆகையால் இங்கிருந்து நான் தப்பித்துச் செல்ல நீதான் உதவ வேண்டும்! நீ என் ஃப்ரெண்டுதானே? ப்ளீ்ஸ், ஹெல்ப் பண்ணு சுப்பு..!” என சிநேகம் பொங்க மீண்டும் அவனது கைகளைப் பற்ற, பாவம் அவனும்தான் என்ன செய்வான்?

ஆள் வழிக்கு வந்துவிட்டான். பகரமாக நான் வைத்திருந்த பாத்திரங்கள், ஸ்டவ் மற்றும் அறையிலிருந்த அத்தனைப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம் என இன்னொரு ஆசைத் தூண்டிலை விட்டுப்பார்த்தேன். அவனுக்கும் காசு மற்றும் பொருட்கள் மீது அளவதிக ஈர்ப்புண்டு.

“அதெல்லாம் இருக்கட்டும் சார்! எங்கிட்ட ஓனர் கேட்டா என்ன பதில் சொல்றது? அதைச் சொல்லுங்க!” என்றபடி தனது இடுப்பை வளைத்து தனது வலது கையை அறுபது டிகிரியில் ஊன்றிக்கொண்டான். ‘அவரு ஃப்ரெண்ட்ஸ்களைப் பார்க்கபோறேன்னுதான் சொல்லிட்டு போனார் பின்னர் என்னாச்சுன்னு தெரியல என்று சமாளித்து ஏதும் தெரியாத மாதிரி நீயும் நடந்து கொள் சுப்பு’ என்றேன்.

“அப்ப உண்மையிலேயே போகத்தான் போறீங்களா சார்!” என்றான் சற்று ஏக்கத்துடன். ‘ஆமாம் தங்கம்!’ என்றதும் வெட்கம் பூத்து, சரி சரி என்றான்.

ஆனாலும் ஓனரிடம் சொல்லாமல் கொள்ளாமல் போவது என்னவோ போலிருந்தது. கல்யாண மேடைக்கு வர வேண்டிய மாப்பிள்ளை ஒரு திடீர் கடிதம் எழுதி வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ராத்திரியோடு ராத்திரியாய் எங்கோ ஓடுவது போல நானும் ஒரு நன்றி மடலை, அவர் உள்ளம் அமைதி கொள்ளும் விதத்தில் வடித்து, அவருடைய மேசை டிராயருக்குள் தள்ளிவிட்டு, ஒரு கலவையான மனநிலையுடன் அங்கிருந்து பரபரப்புடன் கிளம்பினேன். சுப்பா ராவ்தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப்போனான். போனதும் அவசியம் கடிதம் போடுகிறேன் என்றுதான் அவனிடம் கடைசியாக டாட்டாக் காட்டினேன். ஆனால் அந்த பாசம் அந்த டாட்டவோடே முடிவுற்றுப் போனது!

***

குண்டூரு செல்வதற்கு முன்பு, ட்ரைனிங்க்காக அண்ணா நகர் பிளாண்ட்டிலேயே ஒரு மாதம் வரை கழிக்க வேண்டியதாயிற்று. அங்கே எங்குப் பார்த்தாலும் ஏதாவது பொடியின் நெடி எந்நேரமும் வீசிக்கொண்டிருக்கும். காலை, மாலை என இரண்டு நேரம் கொடுக்கப்பட்ட டீயில் கூட மிளகாய் பொடியும் கலக்கப்பட்டது போல, அருந்தும் போது நாவும், உதடுகளும் சுள்ளென ஒரு காரத்தை உணரும். அது சூட்டைத் தாண்டிய எனது மனப்பிரம்மையாகக் கூட இருந்திருக்கலாம்.

பிரதானமாக ஹீட் ட்ரீட்மெண்ட் பிளாண்ட்டில்தான் எனக்கு வேலையிருக்கும் என்றாலும் ஒரு இடத்தில் நிலை கொள்ளாது அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருக்கும் எனது மனமும் கால்களும். அங்கே புதியப் புதிய நண்பர்கள் கிடைத்ததால் அவர்களோடு சின்னச் சின்னதாய் அரட்டையடிக்க அவ்வப்போது மில்லிங் பக்கமும், லேப் பக்கமும் சதாச் சுற்றிக்கொண்டிருப்பேன். அங்கிருந்த மூத்த ஊழியர்கள் இவன் வேலைக்கு வந்தானா அல்லது பொழுதுபோக்கவா என்று யாரும் என்னைத் தொடர்ந்து கண்காணித்திருந்தால் நிச்சயம் புகார் கூட அளித்திருக்கக் கூடும்!

அதற்கேற்பதான் கொஞ்சம் வேலை நிறைய ஜாலி என்று ஒவ்வொருநாளையும் ஒப்பேற்றுவோம். அதில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, நான் சேர்ந்த நேரம் அங்கே கெமிஸ்ட்ரி லேபில் பணி புரிந்து வந்த ரமேஷிற்கும் குண்டூரில் வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலைக் கிடைத்திருந்தது. நோட்டீஸ் பிரீயட் முடிந்து, எனக்கு சற்று பின்னாடிதான் அங்கே வந்து சேர்வான் என்றாலும், பாஷை தெரியாத புதிய ஊரில் போய் எப்படி சமாளிக்க போகிறோம் என்று கொஞ்சம் திருதிருவென விழித்தவனுக்கு அவனது குண்டூரு வருகை வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது.

வேலைக் கிடைத்ததற்காக நண்பர்கள் ட்ரீட் கேட்டார்கள். ஞாயிற்று கிழமைகளிலேயே நாங்கள் சந்தித்துக்கொள்ளும் வழக்கமிருந்ததால், திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரில் ‘7G ரெயின்போ காலனி’ படத்திற்கு போவதென்று ஏக மனதாய் முடிவாயிற்று. அந்த படத்தைப் பற்றிப் பேசவும் சில சங்கதிகள் உள்ளன. அந்த படம் வருமுன்னரே அதிலுள்ள ‘வாக்கிங் த்ரூ த ரெயின்போ’ என்ற தீம் மியூசிக் என்னளவில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு இனம் புரியாத சோகமும் வாதையும் அந்த இசைக்கோர்வையைக் கேட்கும்போதெல்லாம் என்னை வாட்டத் துவங்கும். புல்லாக்குழலுக்குள் பயணித்து வெளிவரும் உயிர்க்காற்றின் அழுகுரலாய் பனிக்கால பூனையைப் போல் ஒரு ஈன ஸ்வரத்தில் அந்த இசையின் பிரதியை ஹம் பண்ணுவேன். கம்பெனி கேசட் வேறு வாங்கியிருந்தால் வாக் மேன் துணையோடு அதிலிருந்த என்றும் மங்காத நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் அனைத்தும் எனக்கு அத்துப்பிடியாகியிருந்தன.

அப்போது யாரேனும் எனக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் செல்வராகவன் என்று பட்டென சொல்லிவிடுவேன். அதற்கு காரணம் அந்த குறிப்பிட்ட படம்தான். 7/G ரெயின்போ காலனி! அதைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து சில தினங்கள் வரை கதிரும் அனிதாவும் அணுஅணுவாக மனதை ஆக்கிரமித்திருந்தார்கள். ஏன் கதிரின் அப்பா, அனிதாவின் அம்மா என அந்த படத்தில் வந்த அத்தனை சின்ன, பெரியப் பாத்திரங்களும் சில தினங்கள் என்னுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பது போன்றதொரு மாயை ஏற்படுத்தியிருந்தது அப்படம்!                           

அந்த படம்…! அந்த படம், வரும் நாட்களின் முன்னோட்டமென்று சத்தியமாக அன்று எனக்குத் தெரியாது. யாரையும் காதலிக்காமலே, காயங்கள் ஏதுமில்லாமலே அடிக்கடி அழுதேன். அந்த அழுகை எனக்கு போதை போல் ஆனது. புகைப் பிடிக்கும் பழக்கம் மட்டும் அப்போது இருந்திருந்தால் ஆட்டோ கிராப் சேரனைப் போல் சிகரெட்டால் என் மார்பை சுட்டுக் கொண்டு அந்த வலியின் சுகத்தையாவது அனுபவித்திருப்பேன். அனிதா போலவோ, லத்திகா போலவோ அதுவரை என் வாழ்க்கையில் யாரும் வரலாமலே காதலால் கைவிடப்பட்டவன் போல அலைந்துக் கொண்டிருந்தேன்… அலைந்துக் கொண்டிருந்தேன்!     

முன்பு குறிப்பிட்டிருந்த மாதிரி, டைரக்டர் ஆகும் ஆசையை மனதிற்குள்ளேயே ரகசியமாய் புதைத்து வைத்திருந்தேன். அது காதல் வரிசைப்படங்கள் தமிழ் சினிமாவை ஏகத்திற்கும் அடக்கி ஆண்டுகொண்டிருந்த காலக்கட்டம். அதன் பாதிப்பில் எனது பதினாறு வயதிலேயே ஒரு கதையை எழுதினேன்.  

அந்த பருவத்தில் எனது கற்பனையிலும் எழுத்துகளிலும் அவ்வளவு எதார்த்தம் இருந்ததா என தெரியவில்லை. ஆனால் அது போன்ற கதை ஒன்றைதான் பின்னாளில் ஆட்டோகிராப், எம்டன் மகன், வாரணமாயிரம் போன்ற படங்களாக எடுத்திருந்தார்கள். நான் ஏதோ பிதற்றுவது போல் உங்களுக்குத் தோன்றினாலும் கூட இதையெல்லாம் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஒருவேளை நானும் சினிமா பக்கம் சென்றிருக்கலாமோ, எனது கதை வெற்றிப் பெற்றிருக்குமோ என நினைக்கத் தோன்றினாலும் ஏட்டுச் சுரைக்காயைப் போல, எனது முயற்சிகளில்லாத வெறும் ஆசைகள் எந்த மாயங்களையும் செய்துவிடவில்லை.

நான் படம் எடுக்கவில்லை என்றால் தமிழ் சினிமா என்ன அவ்வளவு நட்டப்பட்டுவிடுமா என்ன? இதோ அதான் இந்த செல்வராகவன், சேரன் போன்ற ஆட்கள் இருக்கிறார்களே! எல்லாவற்றையும் அவர்களைப் போன்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என பிழைப்பைப் பார்க்க குண்டூரு செல்வதற்கு ஆயத்தமானேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு சராசரி மனிதனால் முடிந்த சராசரி காரியமது.

ஏர் பஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணித் தந்திருந்தார்கள். கூடவே கம்பெனி சார்பில் பிரசாத்தும் வந்தார். பிரசாத் கிட்டத்தட்ட குண்டூரு பிளாண்ட்க்கு உரிமையாளர் மாதிரி. அவருக்கு பூர்வீகம் தெனாலி என்பதால் தாய்மொழி தெலுங்கு, ஆகையால் எல்லாவற்றிற்கும் அவர்தான் என்னை அங்கே வழி நடத்த வேண்டும்.

மழை நனைத்திடாதப் பொழுதென்றாலும் விதவிதமான வெளிச்சங்களோடு வாகனங்களின் ஒளிவீச்சுகள் கண்கூசுவது போல் பாதைகளை மறைத்துக் கொண்டிருந்தன. பேருந்துகளின் இரைச்சலான ஒலிகளுக்கும் நெரிசல்களுக்குமிடையில் வெள்ளை மற்றும் நீலம் இணைந்த குடையை போல நண்பர்கள் என்னுடன் நின்றது, பவுர்ணமியின் வானத்தின் அழகைப் போன்றது.

கல்லூரிக்குப் பின்னான வாழ்க்கையிலும் அதே நண்பர்கள் அதே கலகலப்போடு மேலும் சில காலம் நம்மோடு பயணிக்க நேரிடுவது எதார்த்தம் என்றாலும், அது ஒரு வரம்! வாழ்க்கையை வண்ணமயமாக்க நண்பர்கள் அவசியம் தேவை. அன்றைய காலக்கணக்கில் ஆண்டவர் அறிமுகப்படுத்தியிருந்த கட்டிப்பிடி வைத்தியத்துடன் இரவு பத்து மணியளவில் அனைவரிடத்திலிருந்தும் நான் சந்தோசமாக விடைப்பெற்றுக்கொள்ள, சென்னை என்னை செல் செல் என்றது.

இத்தனை ரகளைகளுக்கு இடையில் அப்பாவிற்கு ஒரு முறை கூட போன் செய்துப் பேச முடியவில்லை. எனக்கு என் கொண்டாட்டங்களும், கற்பனைகளுமே வாழ்க்கையாய் போய்விட்டதில் சட்டென வருந்த ஆரம்பித்தேன். கண்கள் கலங்கின. சாலைகளிருந்த வண்ண விளக்குகளெல்லாம் என் கண்ணீரால் ஒளிப்பிசிறித் தள்ளாடத் துவங்கின. அருகிலிருந்தவர் என்னை கவனித்திட கூடாதென ஜன்னல் பக்கம் எனது முகத்தை திருப்பிக்கொண்டு மற்றுமொரு தெரு விளக்கு போல சற்று தூரம் வரை பார்வையை வழிகளில் பாய்ச்சினேன்.

முன்பு சொல்லி திளைத்துக் கொண்டிருந்தவை யாவும் வெறும் மாயைகளும் மயக்கங்களும் போலவும் இந்த துக்கம் மட்டுமே எனக்கானது போலவும், நிலையானது போலவும் தோன்றியது. தொண்டைக் காய்ந்து, இடையில் ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது. ஏன் இந்த கண்ணீர்? ஏன் எல்லாவற்றிலும் முரண்பட்டு இந்த வாழ்க்கை செல்கிறது? எதற்காக இத்தனை வருத்தங்கள்? வேதனைகள்? சொல்லொண்ணாத் துயரங்கள்..!

சற்று முன்பு வரை சினிமாவுக்கே கதை சொல்லிக் கொண்டிருந்தாயே உனக்கு உன் மகிழ்ச்சியெல்லாம் ஒரு பொய் போல் தோன்றவில்லையா? என கொஞ்சம் தளர்ந்தவுடன், மனசாட்சியார்  வழக்கமான தனது குரூரக் கேள்விகளைக் கேட்க தொடங்கியிருந்தார். எனக்குத் தோன்றுவதை நான் செய்வது மட்டும் என் மனசாட்சிக்கு பிடிக்கவில்லையோ என்ற தன்னிரக்கம்தான் மிகுந்துக் கொண்டு வந்தது.

ஒரு கணம் மனதின் இந்த பேய் ஊஞ்சலாட்டத்தை நிறுத்த முயன்றவனாக, இங்கே யாருக்குத்தான் பிரச்சினை இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை உண்டு. எனக்கு வந்திருப்பது விதிவிலக்கானது அல்ல. ஆனால் பொது விதிகளுக்கு அப்பாற்பட்டது. அவ்வளவே! இது எந்த நிலைக்குச் சென்றாலும் அதை வெற்றிக்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் சக்தி என்னிடமுண்டு என்று எனக்கு நானே தைரியம் கூறிக்கொண்டேன். சீட்டில் ஒருகணித்து தலை சாய்த்த போது அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டதுப் போலிருந்தது.

வீட்டு நினைவுகளில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கிப்போனேன் என்றுத் தெரியவில்லை. அதிகாலை மணி நான்கு அல்லது ஐந்து இருக்கலாம். பிரசாத் என் இருக்கை பக்கம் வந்து, “சார்.. சார்!” என்று சன்னமானக் குரலில் தட்டி எழுப்பினார். இன்னும் அரைமணி நேரத்தில் குண்டூரு வந்துவிடும் தயாராக இருக்கும்படிச் சொல்லிவிட்டு தனது இருக்கைக்குச் சென்றுவிட்டார். சட்டென விழித்ததில் அந்த பேருந்து, மனிதர்களை ஏற்றிச் செல்லும் வினோதக் கூண்டு போலக் காட்சியளித்தது.

பிரசாத் என்னை விட நிச்சயம் ஒரு பதினைந்து வயதாவது மூத்தவராக இருப்பார். என்னை வார்த்தைக்கு வார்த்தை சார் சார் என்று அழைப்பது ஒரு நெளிவை ஏற்படுத்தினாலும், அவர் தரும் மரியாதையை அனுபவித்துப் பார்க்கவும் நன்றாகத்தான் இருந்தது. அவர்தான் சம்பளம் கொடுக்க போகும் முதலாளி என்று கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. அதனால் நானும் அவரை சார் என்று அழைக்க ஆரம்பித்தேன். அதுதானே நியாயமானது.

கண்ணாடி ஜன்னலைத் தள்ளினேன், சில்லெனக் காற்று அடித்தது. ஆந்திரம் என்னை உச்சி முகர்ந்து வரவேற்பது போல் உணர்ந்து, நல்ல செய்கைதான் ஆனால் ரொம்பக் குளிர்கிறது என்று குறும்புப் புன்னகை வீசினேன். பதிலுக்கு ஒளிக்கற்றையொன்று கன்னத்தை செல்லமாய் தட்டிச் சென்றது. அது எதிரில் கடந்துச் சென்ற ஒரு சென்னைப் பேருந்தின் நட்பு மொழியாக இருந்திருக்கலாம்.

“பை பாஸ்! பை பாஸ்!” பஸ் கிளீனர் குரல் கொடுக்க, பிரசாத் விறுவிறுவென சற்று எனை நோக்கி நெருங்கி வந்து குண்டூரூ இதான் சார்! இறங்குங்க! என்று சொன்னபோது அவரின் முகத்தில் இரவுப் பார்த்ததற்கு பிரகாசம் இரண்டுப் படி கூடியிருந்தது. லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ஒரு வழியாக கீழே இறங்கினோம். அதாவது குண்டூரு மண்ணில் கால் வைத்துவிட்டோம்.

மிதமான இளங்காற்றோடு அந்த அனல் நகரம் எங்களை வரவேற்றது. முற்றிலும் புதியச் சூழலை எதிர்கொள்ளத் தயாரானேன். உடல் முழுக்க புதுத்தெம்பும் உற்சாகமும் குடிக் கொண்டது போல் தேனுண்டவனாய் ஒரு பீடு நடைப்போட்டேன். பழக்கப்படாத முகங்களும், குரல்களும், எனக்குப் பிடித்த சினிமா சுவரொட்டிகளும், அருகிலிருந்த சாய்பாபா கோயிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த பஜனை பாடலும் மேற்கொண்டு வரும் புதிய அனுபவங்களுக்கும் தயாராகிக் கொள் என்பது போல் சிரித்தன.

சுற்றி பால் கலரில் மணலும், தரையுமாய் ரோட்டை விஸ்தரித்ததுப் போன்று ஒன்றோடு ஒன்றுத் தொட்டுக்கொண்டு அந்த இடத்தை பிரம்மாண்ட வெளிச்சத்தோடு கண்களுக்கு எடுத்துக் காட்டியது. அங்கிருந்து எங்கோச் செல்லும் அகன்றப் பாதை கூட ஒரு பெரிய திடல் போல்தான் காட்சியளித்தது. அப்போது அவ்வளவு சன நடமாட்டம் இல்லை என்றாலும் நிறைய பேர் வசிக்கும் பகுதியாகவே உணர்ந்தேன். சுற்றி முற்றிலும் ஒவ்வொன்றாக  வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, உறவினர் வீட்டிற்குச் செல்லும் சிறுபிள்ளை போல் பிரசாத்தை பின்தொடர்ந்தேன். அதிக தூரம் நடக்காமலேயே ஒரு முப்பதடி தூரத்தில் சிறிய காம்ப்ளெக்ஸ் மாதிரி இருந்த அந்த கட்டிடத்தை அடைந்தோம்.

பிரசாத் பொறுமையிழந்தவராக அவ்வப்போது கைக் கடிகாரத்தை உற்று நோக்கியபடி குறிப்பிட்ட திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.  என் முக ரேகைகளைப் படித்தவராக, “நம்மள பிக் அப் பண்ண பசங்களை வரச் சொல்லியிருந்தேன்… அதான் வர்றாங்களானுப் பார்த்துக்கிட்டு இருக்கேன் சார்! கொஞ்சம் பொறுத்துக்குங்க!” என்றார்

நான் எதுவும் கேட்கவில்லை என்றாலும் அவருடைய அந்த பண்பானப் பேச்சுப் பிடித்திருந்தது. மேலும் ஒரு ஒரு பத்து நிமிடங்கள் சென்றிருக்கும்… நானும் யார்தான் வரப்போகிறார்கள் என்று அதே திசை பக்கம் முகத்தைத் திருப்ப, என் கன்ன மேட்டில் சூரிய ஒளிப்பட்டு, கண்களையும் சுருக்கிக் கொண்டேன். அவ்வேளையில் கால்களைத் தழுவிய காற்று அருகில் கிடந்த குட்கா தாள்களை தன் இழுப்பிற்கு எங்கோ உருட்டிக் கொண்டுச் சென்றது.

பின்னால் பெண்களின் குரல் கேட்க, திரும்பினேன். கூலி வேலைக்குச் செல்பவர்கள் போல. முகம் மலர்ந்தும், கனிந்தும், ஒடுங்கியும், என்னை எதிர் கொண்டபடி கடந்துச் சென்றார்கள். ஏதோ ஒரு ஓவியத்தில் கண்ட காட்சி போல உணர்ந்தேன். வழியிலிருந்து மறையும் வரை சுவாரசியம் குறையாமல், அவர்களையேக் கூர்ந்து கவனித்தேன். அடித்தட்டு பெண்கள்பாடு எல்லா ஊர்களிலும் ஒன்றுபோல்தான் இருக்கும் போல. அவர்கள்தான் அங்கே நான் கண்ட முதற் பெண்கள் கூட்டம். மற்றப்படி அவர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.   

“அண்ணா..!” ஆரவாரமான குரலொன்று எங்கிருந்தோ வரவே, சிறிது நேரம் தனது செல்போனில் மூழ்க்கிடந்த பிரசாத் அண்ணாந்தார். ஆஜாகுபாவான ஒரு ஆளொருவன் டி வி எஸ் 50யில் எங்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தான். கருப்பு பாலகிருஷ்ணா என்று அவனைக் கைக்காட்டலாம். தோற்றத்தில் அத்தனை ஒத்திருந்தான்.

அவனைத் தொடர்ந்து பின்னாடி மேலும் இருவர் ஸ்ப்ளெண்டரில் வந்தனர். டிவிஎஸ் ஃபிப்டி எங்கள் முன் நின்றதும், பிரசாத் அந்த தடியனை தெலுங்கில் ஏதோ சொல்லி சத்தம் போட்டார். ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறாய் என அதட்டியது போல் என் யூகிப்பில் அதை மொழிபெயர்த்துக் கொண்டேன். அவன் “ஸாரி அண்ணா.. ஸாரி அண்ணா..!” பவ்யமாக அவரையும் என்னையும் பார்த்துச் சிரித்தான். அவன் சிரிப்பிலிருந்த குழந்தைத்தனம் என்னை ஈர்த்தது. நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். பிரசாத்தும் முக இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

மற்ற இருவரும் அதே உடல் மொழியில், பைக்கை நிறுத்தி விட்டு பிரசாத்திற்கு ஒரு வணக்கம் வைத்தனர். அவருக்கும் அவர்களை நொந்துக் கொண்டு அலுத்துப் போயிருக்க வேண்டும். சகஜமாக ‘டீ குடிப்போமா?’ எனக் கேட்டதும், அங்கிருந்த ஒரு கடைக்குள் எல்லோருமாக நுழைந்தோம். ஒரே வெண்ணெய் வாசம்! எங்களின் வருகை சந்தோசம் அளித்தது போல அந்த தடியனோடு வந்த மற்ற இருவரின் முகங்களும் மின்னின. பிரசாத்தோடு தெலுங்கில் பேசிக்கொண்டாலும் என்னிடமும் உறவு பாராட்டும் விதமாக அவ்வப்போதுப் பார்த்து முறுவலிக்கவும் அவர்கள் தவறவில்லை. அந்த ‘திரி மூர்த்துலு’வை அறிமுகப்படுத்த மறந்து விட்டேனே… டிவிஎஸ் ஃபிப்டியில் வந்தவனின் பெயர் ஜலபதி ராவ், மற்ற இருவரின் பெயர்கள் சுமந்த் மற்றும் நரேஷ்.

இதில் நரேஷ் ஒரு லோக்கல் தாதாக்குரிய தோரணைக்ளோடுக் காணப்பட்டான் அல்லது படங்களில் தாதாவுக்கு பக்கம் பலம் போல் சிலரை கைக்கட்டலோடுக் காட்டுவார்களே அது போல சுமந்த் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சுமந்த் அப்படியல்ல. மிகவும் பணிவுடன் காணப்பட்டான்.. மன்னிக்கவும், காணப்பட்டார்! அந்த பணிவுதான் மற்றவர்கள் அவருக்கும் பல மடங்கு மரியாதையை திருப்பி செலுத்தும் அளவிற்கு உயர்த்திக் காட்டியது.

ஜலபதி ராவ் பாசக்காரன். அங்கிருந்த அந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு அண்ணன் போல என்னைப் பார்த்துக் கொண்டவன். அவனுடைய குழந்தைத்தனமான இயல்புகளும், பழக்க வழக்கங்களும் மிகவும் சுவாரசியமானவை. இரண்டு பொண்டாட்டிக்காரன். தோற்றத்திற்கு நியாயம் செய்வது போல் பால கிருஷ்ணாவின் தீவிர ரசிகன் வேறு, பிறகு சொல்ல வேண்டுமா? இருந்தாலும் அவன் செய்த அத்தனை சேட்டைகளையும் நேரம் வரும்போது ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

பிரசாத் தனது சாம்பல் நிற மிலிட்டரி டைப் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிறிய மூக்குப்பொடி டப்பி ஒன்றை எடுத்தார். விரல் நுனியில் ஒரு பொட்டு அளவு அதை மெல்ல வாரி, ஒவ்வொரு துவாரங்களிலும் அப்பி ‘ம்..!’ என்று இழுத்து தண்ணீர் பட்ட கோழி போல தலையை உதறிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, டீ குடித்த கையோடு குட்கா பாக்கெட் ஒன்றும் வாய்க்குள் சென்றது. இப்போது பிரசாத்தும் கூட பேண்ட் அணிந்த ரவுடி போலதான் தெரிந்தார். முகவாட்டமும் கொஞ்சம் சுரேஷ் கோபியை ஞாபகப்படுத்தும்.

சுமந்த் அங்கேயே நின்றுக்கொள்ள, நரேஷ் வண்டியில் பிரசாத் ஏறினார். நான் ஜலபதி வண்டியில் அமர்ந்துக்கொண்டேன். ரோட்டையடுத்து கொஞ்சம் தூரம் வரை வெறும் புழுதிக்காடுகளாகவேத் தென்பட்டு, ‘மீண்டும் பொட்டல் காடா!’ என்று சிறிது நேரம் எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு ஐந்து, ஆறு நிமிடங்களுக்கு பிறகுதான் ஆங்காங்கே நெல் போன்ற தானிய சேமிப்பு கிடங்குகளும், கருவேல மரங்களும், சிறியச் சிறிய கோயில்களும், சிறிதும் பெரிதுமாய் குடிசை மற்றும் கான்க்ரீட் வீடுகளும் வழி நெடுக எங்களைக் கடந்துச் செல்ல ஆரம்பித்தன.                   

தொடரும்…

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *