1) சோதனை
———————-
நிஜமாகவே நீ
எனக்காக இருக்க வேண்டாம்
சும்மா இருப்பது போல் இரேன்
என் சுயம் முளைத்துப் போகாமல்
குறைந்தபட்சம் இருந்த இடத்திலேயே
எழுந்து ஓடிக் கொண்டிருப்பேன்
ஆமாம் மணிச்சத்தம் கேட்டால்
வாயில் உமிழ்நீர் ஊற்றும்
பாவ்லோவின் பரிசோதனை நாய்
நானே தான்.
0
2) ஈதல்
—————–
உயிர் பிழைக்கக் கைசேரும்
ஒரு குவளைத் தண்ணீரின்
சில மிடறுகளையும்
வைகாசி மாத வெயிலில்
வதங்கிப் போயிருக்கும்
என் வேரடித் தூரில்
வார்த்துவிடுவாள் அம்மா.
0
3) சலவை
———————-
ஒட்டுமொத்த இருளுக்குமாக
ஒற்றை அகல் அசைகிறது
,
1850 அடியின்
எத்தனையாவது யுகத்தில்
உழன்று கொண்டிருக்கும்
அந்த அர்ஜூனின் மூச்சுக்காற்று?
,
ஊரடங்கிய மூன்றாம் யாமம்
ஒருவருக்கும் தெரியாமல்
அடிவாரம் வந்து
வஸ்திரம் அலசிச் செல்கிறாராம்
அந்த மல்லிகேசுவரன்
,
“ஆமாம் எனக்கும் கூட
மூத்திரத்திற்கு விழிக்கையில்
யாரோ துணி தப்பும் ஓசை கேட்டது”
,
ஊர்ஜிதம் செய்தாள்
பொன்னாத்தா கிழவி
,
கருத்த பழம்போர்வை ஒன்றை
உதறி மடிக்கிறார்
கண் விழிக்கிறது
கொண்டரங்கி கீரனூர்.
0
4) வயிற்றுப்பாடு
————————————
பராமரிக்க முடியாத நாய்களை
மாம்பாறை முனியப்பன் கோயிலில்
கொண்டு விட்டுவிடுவார்களாம்
தினசரியோ அல்லது ஒருநாள் விட்டோ
மீந்த சோற்றுடன் எலும்புத்துண்டுகள்
அவற்றின் வயிற்றுக்கு உத்தரவாதம்
இப்படி இல்லாமல் பொழுதுக்குள்
செரித்துவிடும் சோற்றுக்கு
பசியில் அலறும் குடலொரு பக்கம்
படியளக்கும் கரங்கள் மறுபக்கம் வைத்து
இதற்கிடையில் சதுரங்கம் ஆடும் கடவுள்
மிக மோசமான சூதாடியாக இருப்பானோ?
0
5) நிதானம்
————————–
இரவல் பெற்ற நெஞ்சில்
தன்னிலை மறந்து துயிலாதே
பல நேரங்களில் இருதயம்
மிக மோசமான சூதாடி
இருபக்கம் கூர்மை கொண்ட
கத்தியினுடையதான கவனத்தை
அன்பில் கையாளப் பழகு.
0

சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும் அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன.