சூன்யப் புள்ளியில் பெண்

– நவல் எல் சாதவி – மொ. பெ. சசிகலா பாபு

விமர்சனம் – முனவர் கான்

000

எகிப்து நாட்டை சேர்ந்த நவல் எல் சாதவி , அரபு இலக்கிய , சமூக மற்றும் அரசியல் உலகின் முக்கிய ஆளுமை.தொழில் முறையில் மனநல மருத்துவரான சாதவி,அரபு உலகில் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் “female genital mutilation” யை கடுமையாக எதிர்த்து போராடியவர் . அவருடைய முதல் புனைவற்ற படைப்பே பிறப்புறுப்பு விருத்தசேதனத்தை கடுமையாக சாடிய  “women and sex” ஆகும்.

சாதவி சிறையில் சந்தித்த பெண் கைதியின் வாழ்வில் நடந்த உண்மைச்  சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந் நாவல். கொலைகுற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ”ப்ர்தவ்ஸ்”” தன்னை விடாமுயற்சி மேற்கொண்டு சந்திக்க வரும் நவல் எல் சாதவியிடம் தன் வாழ்வின் நிகழ்வுகளை விவரிக்கும் தற்கூற்றே இந்நாவல்.

ப்ர்தவ்ஸ் விவரிக்கும் விதமாகவே இந் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கும் ஆசிரியர் எட்டிப் பார்ப்பதேயில்லை.

சிறு வயதிலேயே தன் சிறுவயது நண்பனிடமும், சொந்த மாமாவிடமும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண் ப்ர்தவ்ஸ். வாழ்நாள் முழுவதும் இது வெவ்வேறு நபர்களால் தொடர்ந்து அவள் மீது நிகழ்த்தப்படுகிறது.

 சிறுவயதில் தாயை இழக்கும் ப்ர்தவ்ஸ் பார்க்க கிடைப்பது பெண் குழந்தைகள் இறந்தால் சந்தோஷப்படும் அன்பற்ற சுயநலமிக்க அப்பா , பட்டினி போடும் சிற்றன்னை. பாலியல் சீண்டலில் ஈடுபடும் மாமாவிடம் தான் கல்வி கற்பதற்காக அடைக்கலமாகிறாள். படிப்பின் மீது அவளுக்கு மிகுந்த ஆர்வம்   நன்றாகவும் படிக்க கூடியவள். மாமாவும் அதற்கு தடை செய்வதில்லை. அவர் மீது மீச்சிறு ஈடுபாடும் அவளுக்கு இருக்கிறது. அதை மாமா பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார் . ஆனால் மாமா பணக்காரப் பெண்ணை மணம் முடித்ததும் இவள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அருகில் உள்ள நகரில் விடுதியுடன் கூடிய பெண்கள் பள்ளியில் மாமாவால் சேர்க்கப்படுகிறாள்.

பள்ளியில் பாடங்களை ஊன்றி படிப்பதிலும் , விடுதி ஒழுங்குமுறைகளை சரியாக கடைபிடிக்கும் மாணவியாக இருக்கும் அவளுக்கு எப்போதும் கிடைப்பது தனிமை தனிமை. தனித்தேயிருக்கும் அவளுக்கு ஒரே போக்கிடம் விடுதி நூலகம். மகிழ்ச்சியாக அவளிருக்கும் இடமும் அதுதான். பள்ளி இறுதியாண்டில் ஓர் நாள் நூலக நேரம் தாண்டியும் நூலகத்தின் தனித்த இருளில் அமர்ந்திருக்கும் அவளருகில் அவளது ஆசிரியை ”மிஸ். இக்பால்” வருகிறார். மிஸ். இக்பாலுக்கு இவள் மீது கனிவும் நல்லபிப்பிராயமும் உண்டு. தனித்து இருக்கும் இருவருக்கிடையே இனம்புரியா நேசமும் அன்பும் துக்கமும் அழுகையும் பொங்குகிறது. ப்ர்தவஸின் மனநிலை கிட்டத்தட்ட “மிஸ் இக்பாலிடம்” காதலாக இறுகுகிறது. ப்ர்தவ்ஸின் மன தத்தளிப்பை மிக அழகாகவும் ஆழமாகவும் விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளது  .

இதே போல் பின்னாளில் இவள்மீது அன்பு பாராட்டும் இப்ராகிம் உடன் தனியாக இருட்டில் அமர்ந்து இருக்கும்போதும் இதே மனநிலையை அடைகிறாள். இவ்விரு நிகழ்வுகளிலும் ப்ர்தவ்ஸின் மனநிலையை விவரிக்கும் பகுதி ஒரு வார்த்தைகூட மாறாமல் அப்படியே சொல்லப்படுகிறது. அவர்கள் விலகிச் செல்வதும் ஒரே மாதிரியாக, அதன்பின் வரும் சொல்லாடல்களும் அவ்வாறே உள்ளது .

இந்நிகழ்வுகளை  “ இது நாள் வரையிலும் என் நினைவில் இருக்கும் என் வாழ்வையும் விட தொலைதூரத்திலும் இதுகாறும் நான் அமர்ந்து திரியும் என் ஆழ்மன உணர்வுகளைவிடவும் ஆழமானதாகவும் விளங்கும் தொலைதூர ஆழ் அகமொன்றுக்கு அவ்வுணர்வு இட்டுச் சென்று, என் உடலை நடுநடுங்கச் செய்தது” என நினைவு கூறுகிறார் ப்ர்தவ்ஸ்.

பள்ளிபடிப்பு முடித்து சான்றிதழ் மற்றும் பதக்கமுடன் மாமன் வீடு திரும்பும் அவள் மேற்படிப்பு படிக்க விரும்புகிறாள். மாமியின் சூழ்ச்சி மற்றும் வற்புறுத்தலால் ஓய்வுதியம் பெற்று கஞ்சனாக வாழும் கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவன் வீட்டில் அவள் அடைவது பாலியல் வனமுறையும் உடல்ரீதியான துன்புறுத்தலும் பசியும் பட்டினியும்  தான்  . அங்கிருந்து தப்பிச் செல்லும் அவள் வேலை வாங்கி தருவதாக கூறும் கடைக்கார பயோமியிடம் அடைக்கலமாகிறாள்.

அவள் வாழ்வில் நான்கு முறை வீட்டைவிட்டு தப்பிச் செல்கிறாள்   முதலில் திருமணத்திற்கு முன்பாக மாமன் வீட்டிலிருந்து, பின் கிழக்கணவனிடமிருந்து, மூன்றாம்முறை தன் நண்பர்களுக்கு தன்னை தின்னக் கொடுத்த நயவஞ்சக பயோமியிடமிருந்து  ,நான்காம் முறை இவளை விபச்சாரத்தில் தள்ளிவிடும் விபச்சார விடுதி தலைவி ஷரீபாவிடமிருந்து என தப்பி வெளியேறும் அவள் ஒவ்வொரு முறையும் நிர்கதியாக நிற்கும் அவலம் , அவளை மீண்டும் மீண்டும் படுகுழியிலேயே தள்ளி விடுகிறது.

நல்ல உணவிற்காக , பிறர் கண்பார்வையிலிருந்து விலகி வயிரார சாப்பிட ஏங்கும் அவள் தனியாக விபச்சாரம் செய்து சம்பாதித்த பத்து  பியாஸ்தரில் (எகிப்து நாணயம்) தான் உண்ண முடிகிறது.

தனியாக விபச்சாரத்தில் ஈடுபடும் சிறிய காலம் மட்டுமே நல்ல உடைகளை உடுத்தவும்,விரும்பிய உணவை உண்ணவும் முடிகிறது. அவளது வீட்டீல் ஓர் நூலகத்தை கூட அமைக்கிறாள் . அப்போது மட்டுமே தான் சுதந்திரமாக இருப்பதாகவும் தன் உடல் தனக்கே சொந்தமானது அதைக் கொண்டு அவள் விரும்பும் எதையும் செய்யமுடியும் என உணர்கிறாள் . அதற்காக அவள் தரும் விலையும் காலமும் அதிகம்.

அதற்கும் ஒருநாள் முடிவு வருகிறது. அவளது உதவியாளனாகவும் நண்பனாகவும் இருக்கும் தியா கூறும் “நீ மாரியாதைக்குரியவள் அல்ல”எனும் ஓர் வார்த்தை அவள் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போடுகிறது. அவ்வார்த்தை அவள் வாழ்க்கை முழுவதையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தச் செய்கிறது. உறங்க விடாமல் துரத்தும் அவ்வார்த்தை அவள் நிம்மதியை குலைக்கிறது சிதைக்கிறது. அவளை ஏதுமற்றவளாக மாற்றுகிறது. நாவலின் உச்சம் இப்பகுதி. இதனால் விபச்சாரத்தை விட்டு தன் படிப்பைக் கொண்டு ஒரு அலுவலக பணிக்கு செல்கிறாள்.

மூன்றாண்டுகளுக்கு மேலாக அங்கு பணிபுரியும் காலத்தில் ஒரு விபச்சாரி தன் வாழ்வை இழக்க அஞ்சுவதை விடவும் ,ஒரு பெண் ஊழியர் தன் வேலையை இழக்க அதிகம் அஞ்சுகிறாள், தான் வேலையை இழந்து விட்டால் தானொரு விபச்சாரி ஆகிவிடுவோமோ என அஞ்சுகிறாள், அவள் தனது வாழ்வை, உடல்நலத்தை,உடலை, மனதை தனது கற்பனையான பயத்திற்கு விலையாகத் தருகிறாள் என்றும், வெவ்வேறு விலைகளுக்கு தம்மை தாமே விற்கும் விபச்சாரிகள், விலைமதிப்புள்ள ஒரு விபச்சாரி மலிவானதொரு விபச்சாரியை விடவும் மேலானவள் என்பதையும் ப்ர்தவ்ஸ் உணர்கிறாள்.

அங்குதான் உயரதிகாரியான இப்ராகிடம் காதலில் வீழ்கிறாள் தன்னை இழக்கிறாள் எப்போதும் போல் ஏமாற்றப்படுகிறாள். விபச்சாரத்தில் ஈடுபட்டபோது உடலைமட்டும் தின்னக் கொடுத்து ஆன்மாவை பாதுகாத்துக் கொண்டவள், காதலில் வீழ்ந்த போது தன்னிடமிருக்கும் அனைத்தையும் தருகிறாள். வெறுப்போடும் இழிவோடும் பார்க்கப்படும் ஒரு மனிதப்பிறவியாக இல்லாது காதலின் மதிப்பும் நேசமும் நிறைந்து முழுமையடைய விரும்புகிறாள். கடைசித் துணுக்கு ஒழுக்கத்தையும் இறுதிச் சொட்டு புனிதத்தையும் காதலுக்காக இழக்கும் அவளுக்கு கிடைப்பது வலிமிகுந்த ஆணாதிக்க துரோகம்.  அதுதரும் வலியில் திருமணம் குடும்ப உறவு எதற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை என அவற்றை உதறி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறாள். பணம் பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தை, கட்டுப்பாட்டினை நிலை நிறுத்தவும், ஆணை எல்லாவகையிலும் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளுகிறது என உணரும் ப்ர்தவ்ஸ் தன் உடல் தன் உரிமை என தான் ஏற்கும் ஆணிற்கு மட்டுமே அளிக்கும் வகையில் தன்னை தகவமைத்துக் கொள்கிறாள். பணத்தின் மீதான அவளது கோபம் அதிகாரமிக்க இளவரசன் அளிக்கும் பணக்கட்டை கிழித்தெரிவது மூலம் தீர்த்துக் கொள்கிறாள்.

இறுதியில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை மிரட்டி  பணம் பறிக்கும் விபச்சாரத் தரகன் மர்சோக்கை கொலை செய்ய நேரிட்டு கொலை குற்றவாளியாக மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்காக காத்திருக்கிறாள்.

நாவல் முழுவதும் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள். அன்பு செலுத்துவது போல் பயனபடுத்தியபின் கசக்கி  எறியப்படுகிறாள். தொடர்ந்து ஆண்களால் வஞ்சிக்கப்படுகிறாள். பாலியல் இச்சைக்கு உட்படுத்தப் படுகிறாள். ஆனால் ஓரிடத்திலும் அவள் அவர்கள் மீது குற்றம் சாட்டுவதேயில்லை. இவ்வுலகம் அதிகாரமிக்கவர்களுக்கும், வசதிபடைத்தவர்களுக்கானது அங்கு அபலைகளுக்கு நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்தேயிருக்குறாள்.  தன் கல்வியும், பெற்ற பள்ளிச் சான்றிதழும் தன்னை எப்படியும் வாழ வைத்திடும் என நம்புகிறாள். எப்போதும் வாழ்வின் மீது நம்பிக்கை இழப்பதில்லை எக்கணத்திலும் தற்கொலை எண்ணத்திற்கு செல்வதில்லை.

துளி தூய எளிய அன்பிற்காக ஏங்கும் அவளுக்கு கிடைப்பது ரத்தமும் வலியும் ரணமும் பசியும் வஞ்சிப்பும் மட்டும்தான்.

“எதன் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை

எதன் மீதும் எனக்கு விருப்பமில்லை

எதைக் கண்டும் எனக்கு அச்சமில்லை

நான் சுதந்திரமானவள்”

இதுவே அவளின் இறுதிக் கூற்று.

இப்படைப்பு மூலம் அரபு பெண்களின் மீதான அச்சமூகத்தின் அடக்குமுறைக்கும், பாலியல் சுரண்டலுக்கும் , உடல்ரீதியான வன்முறைக்கும் கேள்விக்கு உட்படுத்துகிறார். ஒரு பக்கம் ஆண்கள் பாலியலை பயன்படுத்தி பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகையில். ப்ர்தவ்ஸ் போன்றோர் அதே பாலியல்/விபாச்சாரத்தை அதை எதிர்க்கும் கருவியாக பயன்படுத்தி அதிகாரமிக்க ஆணாதிக்க சமூகத்தின் மீது காறி உமிழ்வதையும் கவனப்படுத்துகிறார்.

தொடர்ந்து அரபு பெண்களின் நிலையை முன்னிறுத்துவதன் மூலம் உலகெங்கும் கையறுநிலையில் உள்ள பெண்களுக்கான குரலாகவும் சாதவி இருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்தும் அதையே களமாக கொண்டவை

Women and sex

Women is the origin

The naked face of Arab women

Women and neurosis

The hidden face of Eve: women in the Arab world

A new battle in Arab women liberation.

என அவரது ஒவ்வொரு படைப்பும் அரபு பெண்களின் நிலையை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தவை.  சமூக போராட்ங்களுக்காக சிறைபடுத்தப்பட்டவர். நபல் எல் சாதவி பல சர்வதேச விருதுகளை பெற்றவர் .

அரபுலகின் “சிமோன் டி பொவார்” என போற்றப்படுபவர் நவல் எல் சாதவி.

பெயர்களையும் களத்தையும் மட்டும் மாற்றிவிட்டால் உலகம் முழுவதும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு நிராதரவாக நிற்கும் ஒவ்வொரு பெண்ணின்   கதையும் கூட. மனதை கலங்கடிக்கும் படைப்பு.

இப்படைப்பை மொழிபெயர்த்த கவிஞர். சசிகலா பாபுவிற்கும்,  பதிப்பித்த எதிர் பதிப்பகத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

000

அ.முனவர் கான்

முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *